Blog Archives

மனைவியையும் தானமளித்த அடியார்

-முத்துவிஜயன்

இயற்பகை நாயனார்

இயற்பகை நாயனார்

(திரு நட்சத்திரம்: மார்கழி – உத்திரம்)
(ஜன. 12)

காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் உதித்தவர் இயற்பகையார். சிவனடியார் எது விரும்பினாலும் இல்லை என மறுக்காமல் தந்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இல்லறத்தின் நற்பயன் சிவனடியாரைக் காப்பதே என்பது அவரது வாழ்வின் தெளிவாக இருந்தது.

அவரைச் சோதிக்க விரும்பிய ஈசன், வேதியர் வேடம் தாங்கி அவரது வீட்டிற்கு வந்தார். தான் என்ன கேட்டாலும் தர வேண்டும் என்று கோரி, இயற்கையாரின் மனைவியை தம்முடன் அனுப்புமாறு கேட்டார்.

இதுகேட்டு சிறிதும் தயங்கவில்லை, இயற்பகையார். அதன் படியே தம் மனைவியை சிவனடியார் வடிவில் வந்த ஈசனுடன் அனுப்பி வைத்தார். அவரது மனையாளும் கணவனின் சிவ கைங்கர்யத்திற்கு எதிர்ப்பேச்சு பேசாமல் சிவனடியாருடன் சென்றார்.

அவர்களுக்கு மற்றவர்களால் இடையூறு நேரா வண்ணம் தாமே காவலாக வாளேந்தியும் வந்தார். இதுகண்டு சீற்றமடைந்து தன்னை எதிர்த்த சுற்றத்தாருடன் போரிட்டு அவர்களை விரட்டினார்.

இதன்மூலம் இயற்பகையாரின் சிவபக்தியை உலகிற்கு உணர்த்திய ஈசன், நாடகத்தின் இறுதியில் அவருக்கு காட்சி தந்து ”பல்லாண்டு காலம் இல்லறத்தை நல்லறமாக நடத்தி இறுதியில் எம்மை வந்தடைவாய்” என வரமளித்து மறைந்தார். இயற்பகையார் அவ்வண்ணமே வாழ்ந்து இறுதியில் ஈசன் கழலினை அடைந்தார்.

ஈசனின் அடியாருக்கு சேவை செய்ய தனது மனைவியையே தானம் அளித்த இயற்பகையார், பக்தியின் உச்சநிலைக்கு உதாரணமாகத் திகழ்கிறார். இதன்மூலம், நாயன்மார்களில் ஒருவராக இயற்பகையார் உயர்வு பெற்றார்.

பக்தர்களுக்கு இறைவன் அளிக்கும் சோதனைகள் அவர்களது வைராக்கிய உள்ளத்தைப் பரிசோதிக்கவே என்பதையே இயற்பகையாரின் வாழ்க்கை காட்டுகிறது.

.

காண்க: தேசமே தெய்வம் (பிளாகர்)

Advertisements

இலக்கிய ஆய்வின் வழிகாட்டி

-முனைவர் மு.வள்ளியம்மை

தெ.பொ.மீனாட்சிசுந்தரனார்

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

(பிறப்பு: 1901, ஜன. 8- மறைவு:  1980, ஆக. 27)

.

1901, ஜனவரி 8-ம் நாள் தமிழுலகம் ஒரு தவப்புதல்வனைக் கண்டெடுத்தது. ஆம்! அந்த நாள்தான் தெ.பொ.மீ. உலகைக் கண்திறந்து பார்த்த நாள்.

சென்னை- சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்ப்பற்றும், இறைப்பற்றும் ஒருங்கே பெற்ற பொன்னுசாமி கிராமணியார் இவரை மகவாகப் பெற்ற நாள். தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் தெ.பொ.மீ.யின் இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியாது என்பது முற்றிலும் உண்மை.

பொன்னுசாமி கிராமணியாருக்கு தமிழின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் இருந்த காதலால் தான், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் பெயரைத் தன் மகவுக்கு இட்டார்.
 .
இவர் தெ.பொ.மீ. எனத் தமிழுலகில் அழைக்கப்பெற்றவர். இவரது தமையனார் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர், நாடகத்தின் வாயிலாக நாட்டிற்கு உழைத்த தொண்டர். தெ.பொ.மீ.யும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுப் புகழ் பெற்றவர்.
 .
சென்னை மாநகராட்சியிலும், பல்வேறு துறைகளில் தலைவராகவும், மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மகரிஷி மகேஷ்யோகியின் அமைப்பைத் தென்னாட்டில் பரப்பும் பணிக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றித் தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர்.
 .
தமிழக அரசால் ‘கலைமாமணி’ விருதையும் மத்திய அரசால்  ‘பத்மபூஷண்’ விருதையும் பெற்ற பேராசிரியர் தெ.பொ.மீ.  வரலாறு, அரசியல், சட்டம் முதலிய துறைகளில் பட்டம் பெற்றவர். தமது இடையறாத முயற்சியால் தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், சமயம், தத்துவம், ஒப்பிலக்கியம், காந்தியியல்  முதலிய பல்வேறு துறைகளில் கற்றுத்தேர்ந்து அனைவரும் வியக்கும் வகையில் இணையற்ற அறிஞர் ஆனார்.
 .
அதோடன்றி பல்வேறு பரிணாமங்களால் துறைதோறும் தலைவர் ஆனார். எதைக் கற்றாலும் கசடறக் கற்றமையால் எல்லாத் துறையும் தலைமைத் தன்மை கொடுத்து அவரைப் போற்றியது. பதினெட்டு மொழிகளைக் கற்றிருந்தாலும், ஈராயிரம் ஆண்டு தமிழ் மொழியிலும் இலக்கியங்களிலும் அவர் பெற்ற புலமைக்கு ஈடில்லை. மொழியின் மீது அவர் கொண்ட நேசிப்பும் வாசிப்புமே இதற்குக் காரணம்.
 .
1920-ல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, 1922-ல் பி.எல். பட்டமும் பெற்றார். பெரும்பாலும் சட்டம் பயின்ற வல்லுநர்கள் தமிழார்வலர்களாக இருந்தமையை தமிழ் வரலாறு காட்டும். அவர்களுள் தெ.பொ.மீ.யும் ஒருவர்.
 .
1923-ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். வரலாறு, பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1923-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். எனினும் தமிழ் கற்பிக்கும் பேராசிரியராகவே இவர் பணி பின்னாளில் தொடர்ந்தது.
 .
1924-ல் சென்னை நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றினார். 1925-ல் அலுமினியத் தொழிலாளர் சங்கத் தலைவராய் இருந்து தொண்டு புரிந்தார். தமிழ் இலக்கிய இலக்கண ஆர்வத்தால் 1934-க்குள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். பட்டங்களும் பெற்றார். 1941-ல் நாட்டு உரிமைக்காக மறியல் செய்து சிறை சென்றார்.
 .
இவரது தமிழ்ப் புலமையைக் கண்ட அண்ணாமலை அரசர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இவரைப் பேராசிரியராக நியமித்தார். 1944-ல் பேராசிரியராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ.,  1946-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றினார்.
 .
மீண்டும் 1958-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல், இலக்கியத் துறைகளின் தலைமைப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். இவரது தமிழ்ப் புலமையை உலகுக்கு அடையாளம் காட்டிய பெருமை, அண்ணாமலை அரசரையே சாரும். மொழிப்புலமை இவரை அயல்நாட்டுப் பல்கலைக்கழகமான சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1961-ல் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்க வைத்தது.
 .
1973,74-ஆம் ஆண்டுகளில் திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியல் கழகச் சிறப்பாய்வாளராக பொறுப்பேற்றார். 1974 முதல் ஆழ்நிலைத் தியானத் தேசியக் குழுவில் உறுப்பினராக இருந்து தொண்டு செய்துள்ளார். தருமபுர ஆதீனம்  ‘பல்கலைச் செல்வர்’ என்றும், குன்றக்குடி ஆதீனம்  ‘பன்மொழிப் புலவர்’  என்றும் விருதுகள் அளித்துச் சிறப்பித்தன.
 .
அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று தமிழின் புகழ் பரப்பிய பெருமகனார் தெ.பொ.மீ.  யுனெஸ்கோவின்  ‘கூரியர்’ என்னும் இதழ்க் குழுவின் தலைவராக விளங்கிய இவர், ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் எனில் மிகையில்லை.
 .
தமிழ் படித்தவர்கள் தமிழ்மொழியை மட்டுமே கற்க முடியும், பிற மொழிகள் அவர்களுக்கு வராது என்பதை மாற்றி, மொழியியல் என்ற புதிய துறையின் புதுமையைத் தமிழுக்குக் கொண்டுவந்து அதை வளரச்செய்த முதல் முன்னோடி பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ.தான்.
 .
தமிழ்மொழியின் மரபு சிதையாமல், மாண்பு குறையாமல், மாசுநேராமல் நவீனப்படுத்தி உலகை ஏற்றுக் கொள்ளச் செய்த தமிழ்த்தொண்டர் தெ.பொ.மீ.  உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் மதிக்கப்பட்டு, பட்டங்களையும் பாராட்டுகளையும் பெற்ற பெருந்தகை.
 .
 “தமிழின் முக்கியத்துவம், அது பழமைச் சிறப்பு வாய்ந்த ஒரு செவ்வியல் மொழியாக இருப்பதுடன் அதே வேளையில் வளர்ந்து வரும் நவீன மொழியாகவும் ஒருங்கே விளங்குவதில் தான் சிறப்புப் பெறுகிறது”  என்பது பன்மொழிப் புலவரான தெ.பொ.மீ.யின் கருத்து.
 .
செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணி குறித்து தெ.பொ.மீ, “ஏராளமாகத் தமிழில் படைக்கப்பட்டுள்ள படைப்புகள் பிற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படாமையால் பரவலாக அறிஞருலக ஆய்வுக்குக் கிடைக்காமல் இருக்கின்றன”  என்று செவ்வியல் மொழியான தமிழுக்கு நாம் செய்திருக்க வேண்டிய பணியை நினைவூட்டியுள்ளார்.
 .
இவர் மிகச் சிறந்த இலக்கியத் திறனாய்வாளராகவும் விளங்கியவர். தமிழுக்குப் பல புதிய சிந்தனைகளைத் தன் ஆய்வின் மூலம் தந்தவர். ஆராய்ச்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்தம் நூல்கள் காட்டுகின்றன. இதனால் அவர் ‘மின்வெட்டுப் பேராசிரியர்’ என்றே பிறரால் அழைக்கப்பட்டார்.
 .
இலக்கியத் துறையில் இருட்டாக இருந்த இடங்களைத் தன்னுடைய பேரறிவால், திறனாய்வுப் பார்வையில் விளங்கச் செய்தவர் தெ.பொ.மீ. திறனாய்வுத் துறையில் பல புதிய தடங்களைப் பதித்தவர்.
 .
 “ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால், பிறமொழி இலக்கியங்களைப் பற்றிய அறிவும், சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும். பிறவற்றை அறியாமலோ, தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது”  என்று கூறியுள்ளார் தெ.பொ.மீ.
 .
உலகக் காப்பியங்களோடும், உலக நாடகங்களோடும் சிலப்பதிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, அதை ‘நாடகக் காப்பியம்’ என்றும்  ‘குடிமக்கள் காப்பியம்’ என்றும் ஒரு வரியில் கூறியவர். சிலப்பதிகாரத்துக்கு இவரைப் போன்று வேறு யாரும் திறனாய்வு எழுதியதில்லை.
.
“தமிழ்மொழி உயர வேண்டுமானால் தமிழன் உயரவேண்டும்” எனச் சங்கநாதமிட்ட முதல் சான்றோர் தெ.பொ.மீ.  தன்னலம் கருதாத மாமனிதர் தெ.பொ.மீ.இவரது எழுத்துகள் தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமையும் புகழும் சேர்ப்பன.
.
குறிப்பு:

முனைவர் மு.வள்ளியம்மை கல்வியாளர்; தமிழ் ஆர்வலர்.  இக்கட்டுரை,  ‘தினமணி – தமிழ்மணி’  பகுதியில் வெளியானது; இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்

-பருத்தியூர் கே.சந்தானராமன்

ரமண மகரிஷி

பகவான் ரமண மகரிஷி

(திருநட்சத்திரம்: மார்கழி- திருவாதிரை)
(பிறப்பு: 1879-, டிசம்பர் 30- மறைவு: 1950, ஏப். 14)

.

தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது.

செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் சுந்தரமய்யர் திருச்சுழியில் குடியேறினார். அங்கு மணியம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். சுந்தரமய்யர் தொடர்ந்து படித்து, பதிவு பெறாத வழக்கறிஞராகத் திகழ்ந்தார். நல்ல வருமானம் கிடைத்து வந்தது. மனைவி அழகம்மையுடன் வளமான வாழ்க்கை நடத்தி வந்தார்.

நடராஜப் பெருமான் ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் கொள்கிறார். அவற்றுள் முதன்மை பெற்றது மார்கழி மாத ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம். அத்தகு பெருமை வாய்ந்த மார்கழித் திருவாதிரை நாளில், இப்பெற்றோருக்கு மகவாக,  பகவான் ஸ்ரீரமணர் திருவவதாரம் செய்தார்.

மார்கழி மாதம் பதினாறாராம் நாள், 1879-ஆம் ஆண்டு டிசம்பர் முப்பதாம் நாள் பகவான் அவதாரம் செய்தார். அழகம்மைக்குப் பிரசவம் பார்க்க வந்த வயதான கிழவி ஒருத்தி பகவான் அவதார நேரத்தில் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றாள்! தான் உலகிற்கு ஒளி கொடுக்க வந்தவர் என்பதை இந்த நிகழ்ச்சியே உணர்த்தியது.

குழந்தைக்கு வேங்கடராமன் என்று பெயர் சூட்டினர். அழகம்மை- சுந்தரமய்யர் தம்பதிக்கு முன்னரே ஒரு மகன் உண்டு. அவன் பெயர் நாகசாமி என்பதாகும். வேங்கடராமனை திருச்சுழி தொடக்கப் பள்ளியிலும், பிறகு திண்டுக்கல் பள்ளியிலும் கல்வி பயில அனுப்பி வைத்தனர். சிறுவன் வேங்கடராமனுக்குப் பள்ளிப் படிப்பில் நாட்டம் இல்லை. நீச்சல், பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் இருந்தது.

வேங்கடராமனின் அண்ணன் நாகசாமி நன்றாகப் படித்து வந்தார். வேங்கடராமன் பள்ளிக் கல்வியில் நாட்டம் இல்லாமல் இருந்ததைக் கண்டு பெற்றோர் வருந்தினர். அந்த நிலையில் சுந்தரமய்யர் காலமானார்.

தந்தையின் மரணம் வேங்கடராமனைப் பெரிதும் பாதித்தது. வருத்தத்தை விட மரணம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தான் சிறுவன் வேங்கடராமன். அழகம்மை, நாகசாமி, வேங்கடராமன் ஆகியோர் மதுரையில் இருந்த, சுந்தரமய்யரின் தம்பி சுப்பையரின் இல்லத்திற்கு வந்தனர். கூட்டுக் குடும்பங்கள் நிறைந்திருந்த அக் காலகட்டத்தில் சுப்பையர் தன் அண்ணனின் குடும்பத்திற்கு உதவியாக இருந்தார். ஆகவே, அழகம்மையும் மகன்களும் மதுரைக்கு வந்தனர். வேங்கடராமன் பதினாறாவது வயதை அடைந்தான்.

சேக்கிழார் இயற்றிய ‘பெரியபுராணம்’ திருச்சுழியில் பிறந்த வேங்கடராமன் என்ற சிறுவனின் மனத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது! மகரிஷி ரமணரை மாநிலத்திற்கு அளித்தது!

இறைவனுக்காக எதனையும் தியாகம் செய்யத் துணிந்த சிவனடியார்களின் தொண்டு வாழ்க்கை, சிறுவன் வேங்கடராமனின் மனத்தில் ஆழப் பதிந்தது. பள்ளிக் கல்வியில் நாட்டமில்லாத வேங்கடராமனை திருமுறை நூல் ஒன்று கவர்ந்தது விந்தை தான்!

தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவ்வப்பொழுது வேங்கடராமன் மரணத்தைக் குறித்துச் சிந்திக்கலானான். ஒரு நாள் மூர்ச்சையாகி மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பினான். அது முதல் மரண பயம் நீங்கியது.

திருச்சுழியைச் சேர்ந்த சொக்குப் பட்டர் என்பவர் தீபத் திருநாளைக் காண திருவண்ணாமலைக்குச் சென்று திரும்புகையில், மதுரையில் வேங்கடராமனின் சிற்றப்பா சுப்பையரின் இல்லத்திற்குச் சென்றார். பெரியவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரிடம் வேங்கடராமன், “எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான். சொக்குப் பட்டர், “நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன்” என்றார். முன்னரே அண்ணாமலை குறித்து, பெரிய புராணத்தில் படித்திருந்த வேங்கடராமன் அப்பெயரைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்தான்!

1896-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தொன்பதாம் நாள் வீட்டை விட்டு வெளியேறத் தீர்மானம் செய்தான் வேங்கடராமன். அன்று ‘ஸ்பெஷல் கிளாஸ்’ இருப்பதாக அண்ணன் நாகசாமியிடம் கூறினான். அண்ணாமலைக்குச் செல்லப் பணம் வேண்டுமே? அண்ணாமலையார் அதற்கும் வழி காட்டினார்! அன்று அண்ணன் நாகசாமிக்குக் கல்லூரிச் சம்பளம் கட்ட வேண்டியிருந்தது. பெட்டியிலிருந்து ஐந்து ரூபாய் எடுத்துச் சென்று கட்டிவிட்டு ஸ்பெஷல் கிளாசிற்குச் செல்லும்படி அண்ணன் கூறினார்.

தான் தகப்பனாரைத் தேடிச் செல்வதாகவும், மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு, இரண்டு ரூபாயை வைத்து விட்டதாகவும் கடிதம் எழுதிவைத்த வேங்கடராமன், மதுரையிலிருந்து திண்டிவனத்திற்கு இரண்டு ரூபாய் பன்னிரண்டு அணா கொடுத்துச் சீட்டு வாங்கி, ரயிலில் ஏறி அமர்ந்தான். விழுப்புரத்தில் இறங்கி, காட்பாடி செல்லும் வண்டியில் திருவண்ணமாலைக்குச் செல்லலாம் என்று சக பயணி ஒருவர் கூறினார்.

அதன்படியே வேங்கடராமன் விழுப்புரத்தில் இறங்கினான். அப்போது இரவு மூன்று மணி. திருவண்ணாமலைக்குச் செல்லும் வண்டி வரும் நேரம் குறித்து விசாரிக்க ஓர் உணவு விடுதியில் நுழைந்தான். அப்போது நன்றாகப் பசியெடுத்தது. உணவுக்காகச் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. உணவு உண்ட பிறகு, வேங்கடராமனின் முகத்தைக் கண்ட உணவு விடுதி முதலாளி பணம் வாங்க மறுத்து விட்டார்.

மீதமிருந்த சில்லறை அறையணிநல்லூர் வரை செல்லும் அளவிற்கே இருந்தது. அங்கே இறங்கி நடந்தே திருவண்ணாமலைக்குச் செல்லத் தீர்மானித்தான். மாலை நேரத்தில் அறையணிநல்லூரில் இறங்கி மலைக்கோயில் ஈசனைத் தரிசிக்கச் சென்றான் வேங்கடராமன். அங்கு ஒரு ஜோதி தோன்றியது! சந்நிதியிலிருந்த திருமேனியில் அந்த ஜோதி ஐக்கியமானது!

மலைக்கோயிலிலிருந்து கீழே இறங்கி வந்த வேங்கடராமன் அர்ச்சகரிடம் பிரசாதம் கேட்டான். அவர் கண்டிப்பாக மறுத்தார். ஆனால், கோயில் நாதசுவர வித்துவான் தனக்குரிய பிரசாதப் பட்டையை வேங்கடராமனிடம் கொடுத்து உதவினார். பிரசாதத்தைச் சாப்பிட்ட பிறகு ஒரு சாஸ்திரிகளின் வீட்டில் தண்ணீர் வாங்கிப் பருகினான். அப்போது வேங்கடராமன் திடீரென உணர்விழந்து விழுந்தான். அதனைக் கண்டு முத்துகிருஷ்ண பாகவதர் என்பவர் வேங்கடராமனைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பாகவதரின் மனைவியும் வேங்கடராமனை உபசரித்தாள். அன்று கோகுலாஷ்டமி நாள். பாகவதரின் மனைவி வேங்கடராமனை தன் இல்லத்திற்கு எழுந்தருளிய கண்ணனாகக் கருதி இனிப்புகள் வழங்கினார்.

பாகவதரிடம் வேங்கடராமன் தனது கடுக்கனை அடகு வைத்து நான்கு ரூபாய் வாங்கிக் கொண்டான். அடுத்த நாள் காலையில் திருக்கோவிலூரிலிருந்து ரயில் ஏறித் திருவண்ணாமலைக்குப் பயணமானான். அண்ணாமலையை நெருங்கிய உடனே வேங்கடராமன் ஆனந்தக் கண்ணீர் உகுத்தான். உடல் சிலிர்த்தது!

“அருணாசல சிவ! அருணாசல சிவ!” என்ற மந்திரத்தை உள்ளம் உருகி ஜபித்தபடி, 1886-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் வேங்கடராமன் பாலரமணராக அண்ணாமலையில் அடியெடுத்து வைத்தார். ஈசனும் பால ரமணரைப் பாசத்துடன் வரவேற்றார்! ஆனால், பாலரமணர் பாசங்கள் அனைத்தையும் துறந்தார்.

தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வேட்டியைக் கிழித்து, கோவணமாகக் கட்டிக் கொண்டார். ஜாதிச் சின்னமாகிய பூணூலை அறுத்து எறிந்தார். அனைத்தையும் துறந்த சுத்த புருஷனாக ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார்.

பால் வடியும் முகம் கொண்ட பாலரமணரின் தவத்தைக் கண்டு பலரும் வியந்தனர். எனினும், விஷமிகள் சிலர் அவர் மீது கற்களை வீசித் தொந்தரவு செய்தனர்.

இருள் நிறைந்த பாதாளலிங்கக் குகையைப் பாலரமணர் தவத்திற்கு ஏற்ற தனிமையான இடம் எனத் தேர்ந்தெடுத்தார். அங்கு சென்று தவத்தில் அமர்ந்தார். ஊண், உறக்கம் இன்றிக் கடுந்தவம் இயற்றினார். உடல் மெலிந்தது. குகைக்குள் இருந்த புழுக்களும், பூச்சிகளும் பாலரமணரின் உடலைத் துளைத்தன. பாலயோகியின் தொடைப் பகுதி அரிக்கப்பட்டது! ஆனாலும் அவருடைய தவம் கலையவில்லை!

சேஷாத்ரி சுவாமிகள் அக்குகையில் நுழைந்து வெளியே வந்து, உள்ளே தவமியற்றிய உத்தமத் துறவியை உலகிற்கு அறிமுகம் செய்தார்.

அண்ணாமலைத் தம்பிரான் என்ற சுவாமிகள் பாலரமணர், ‘குருமூர்த்தம்’ என்ற இடத்தில் அமர்ந்து தவம் இயற்ற உதவினார். அங்கு, பாலரமணர் பதினெட்டு மாதங்கள் கடுந்தவம் இயற்றினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவர் பாலரமணரிடம் பக்தி கொண்டார். அவர் பால ரமணரைப் பற்றி அறிந்துகொள்ள முயன்றார். பால ரமணரின் முன் உண்ணாவிரதமே மேற்கொண்டார்.

மௌனத்தில் இருந்த யோகி, “வேங்கடராமன், திருச்சுழி” என்று எழுதிக் காட்டினார். திருச்சுழி ஒரு தேவாரத் திருத்தலம் என்று உணர்த்த ரமணர், தன்னுடன் வைத்திருந்த பெரியபுராணப் புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.

தமக்குப் பந்த பாசங்கள் அறுந்துவிட்டன என்று பகவான் தாய் அழகம்மைக்கு எழுதிக் காட்டினார். அப்போது மானாமதுரை திரும்பிய அழகம்மை தன் ஞானக்குழந்தையைக் காண அவ்வப்பொழுது வந்தார். ஆசிரமத்தில் தங்கி, பக்தர்களுக்கு உணவு சமைக்கும் பணியை மேற்கொண்டார். மகரிஷியும் அதனை அனுமதித்தார். எனினும், தனிப்பட்ட முறையில் தாய்க்கு எந்தச் சலுகையும் அளிக்கவில்லை. சில சமயங்களில் பக்தர்களுடன் பேசிய ரமணர் தாயுடன் பேசுவதில்லை.

1914-ஆம் ஆண்டு அழகம்மை நோயுற்று இருபது நாள்களுக்கு மேல் படுத்த படுக்கையாக இருந்தார். ரமணர் அப்போது தாய்க்கு மிகவும் அன்புடன் பணிவிடைகள் செய்தார். உடல்நலம் தேறியவுடன் அழகம்மை மானாமதுரைக்குச் சென்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அன்னை அண்ணாமலைக்கு வந்தார். ஆசிரமச் சமையல் பணிகளை மேற்கொண்டார். 1922-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் அழகம்மை வீடுபேறு எய்தினார். ‘பாலி தீர்த்தம்’ என்ற இடத்தில் அன்னையின் சமாதிக் கோயில் உள்ளது.

ரமணரின் மேலைநாட்டு பக்தர் எஃப்.எச். ஹம்ப்ரீஸ் என்பவர் காவல்துறையில் பணியாற்றியவர். இவர் கணபதி முனிவர் வழியே பகவானுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். ஹம்ப்ரீஸ் தனது கட்டுரைகளின் வழியே இங்கிலாந்தில் பகவானின் புகழைப் பரவச் செய்தார்.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் முன்னுரையுடன் மகரிஷியின் வாழ்க்கை வரலாற்று நூலை ஆர்தர் ஆஸ்போர்ன் என்பவர் எழுதினார்.

லண்டனில் பிறந்த பால் பிரண்டன் ஸ்வீடிஷ் பிரஜை. சிறந்த பத்திரிகையாளர், நூலாசிரியர். ரமணர் இவருடைய ஐயங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் அளித்தார். இன்றும் பகவானின் புகழை அறிந்துகொள்ள விரும்புவோர் இவருடைய நூல்களையே நாடுகின்றனர்.

1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் பகவான் பரிபூணம் எய்தினார். சற்றே கண்களை விரித்து, புன்னகை மலர்ந்து, விழியோரத்தில் பேரானந்தக் கண்ணீர் மல்கக் காட்சியளித்த நிலையில் சித்தியடைந்தார். அதே நேரத்தில் ஓர் எரி நட்சத்திரம் வானவெளியில் மெல்ல நகர்ந்து அண்ணாமலைச் சிகரத்தில் ஐக்கியமானதை நகரவாசிகள் கண்டனர்! “அருணாசல சிவ” என்று பக்தர்கள் முழங்கினர்.

நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்த கவியோகி சுத்தானந்த பாரதியாரை அனைவரும் அறிவர். அவர் ரமணாசிரமத்தில் தங்கியிருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை, ‘ரமண விஜயம்’ என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளார். அதுவே, பகவான் குறித்து எழுதுவோர் அனைவருக்கும் அடிப்படை நூலாகத் திகழ்கிறது.

ரமணாசிரமம், சேஷாத்ரி சுவாமிகளின் அதிஷ்டானம் உள்ள அதே சாலையில் வலப்புறத்தில் அமைந்துள்ளது. ரமணாசிரமத்தில் முதலில் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு நடைபெறும். பிறகு தான் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் உணவு அருந்துவார்கள். இது ரமண மகரிஷி தோற்றுவித்த புதிய மரபு. மக்கள் நலனில் மகரிஷி கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு இதுவே எடுத்துக்காட்டு.

 

குறிப்பு:

திரு. பருத்தியூர் கே.சந்தானராமன், ஆன்மிக எழுத்தாளர்.

இக்கட்டுரை ‘அம்மன் தரிசனம்’ ஆன்மிக மாத இதழில்  வெளியானது;  இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

-முத்துவிஜயன்   

சடையனார் நாயனார்

சடையனார் நாயனார்

(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை)
(ஜனவரி 5) 

திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார்.  இவரது இல்லறத் துணைவி இசைஞானியார்.  மழலை பாக்கியம் இல்லாத சடையனார்,  பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார்.

அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு உபநயனம் செய்வித்து, தக்க வயதில் திருமணமும் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஈசன் சுந்தரரை தடுத்தாட் கொண்டார். அவ்வளவு மகிமை மிக்கவரை தாம் மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி மிஞ்சிய தம் வாழ்நாள் முழுதும் சிவத்தொண்டாற்றி இறுதியில் முக்தியும் பெற்றார்,  சடையானார்.

.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்

 .

-என்ற திருக்குறளுக்கு (குறள்- 70) சடையானார் வாழ்வு உதாரணம்.

 .

சிவனுக்கு பணிவிடை செய்ய உகந்த மகான் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த  காரணத்தால்  தந்தை சடையனாரும் தாய் இசைஞானியாரும்   நாயனார்கள்  ஆனது,  நமக்கெலாம் வழிகாட்டி.

.

..

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

-தஞ்சை வெ.கோபாலன் 

வீரபாண்டிய கட்டபொம்மன்

 வீரபாண்டிய கட்டபொம்மன்

(பிறப்பு: 1760, ஜன. 3 –  பலிதானம்:  1799, அக். 16)

.

பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள்.  அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள்

இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலைநாட்டப்பட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக் கழகம்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப் பரப்ப தமிழரசுக் கழகமும் அதன் தலைவர்  ம.பொ.சிவஞானம் அவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இன்று கட்டபொம்மன் இந்தியாவின் விடுதலைப் போருக்கு வித்திட்டவீரனே என்ற உண்மையை உலகமே ஒப்புக் கொண்டு விட்டது.

அந்த வீரன் புகழ் பரவிய வரலாறு கீழ்வருமாறு.:

முதல் நூல்:

1949 ஜூலைத் திங்களில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பெயரில் திரு.ம.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.அதன் பின்னரும் ‘சுதந்திரவீரன் கட்டபொம்மன்’,  ‘கயத்தாற்றில் கட்டபொம்மன்’, ‘பொம்மன் புகழிலும் போட்டியா?’ என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்.

தமது ‘தமிழ்முரசு’, ‘தமிழன் குரல்’, ‘செங்கோல்’ ஆகிய ஏடுகளிலும்; இன்னும் புகழ் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் கட்டபொம்மனைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் ம.பொ.சி எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்தன.

முதன்முதலில் கட்டபொம்மன் விழா:

முதன் முதலாக, 1949, அக்டோபர் 16-ல் சென்னை ராஜாஜி மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள பூங்காவில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.

டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை, பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோரும் தமிழரசுக் கழகத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டு பேசினர். இதன் பின்னர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் அக்டோபர் 16-ல் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வீரபாண்டியன் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

திரைப்படங்கள்:

முதன்முதலில் திரு. எம்.ஏ. வேணு அவர்களின் எம்.ஏ.வி. பிக்சர்சாரால் தயாரிக்கப்பட்ட கலைஞர் ஏ.பி. நாகராசனால் கதை வசனம் எழுதி இயக்கப்பட்ட ‘நாவலர்’ என்னும் திரைப்படத்திலே கட்டபொம்மன் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்படும் நிகழ்ச்சி ஒரு காட்சியாகப் பட்டது. திரு. ஏ.பி. நாகராசனே கட்டபொம்மனாகத் தோன்றி அற்புதமாக நடித்தார்.

பின்னர் திரு. பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்னும் பெயருடைய முழு நீள வண்ணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றியுலா வந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக அற்புதமாக நடித்தார். இந்தப் படம் தெலுங்கு மொழியில் ‘டப்’ செய்யபட்டு ஆந்திர நாட்டிலும் பவனி வந்தது.

நாடகங்கள்:

தமிழரசுக் கழகத்தின் பிரசார பலத்தால் நாடக உலகிலும், வீரபாண்டியன் செல்வாக்குப் பெற்றான். டி.கே.எஸ். சகோதரர்கள். நாடகக் குழுவினர் மதுரை ரா. வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பட்ட ‘முதல் முழக்கம்’ என்னும் பெயருடைய கட்டபொம்மன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தினர். இதனை தில்லியில் பிரதமர் நேருஜி முன்பும், குடியாசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் முன்பும் நடித்துக் காட்டினர்.

நடிகர் திலகம் சிவாஜிக ணேசன் அவர்களும் தமது நாடகக் குழுவின் சார்பில் ‘கட்டபொம்மன்’ நாடகத்தை தமிழ்நாடெங்கிலும் வெற்றிகரமாக நடத்தினார்; பிரதமர் நேருஜியும் கண்டு களித்தார். ஏ.பி.நாகராசன் அவர்கள்,  ‘நாவலர்’ படத்தில் கட்டபொம்மன் வேடந்தாங்கி நடித்த பகுதியை தமிழரசுக் கழக மாநாடுகளிலும் 1954-ல் ஆவடியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலும் நடித்து கட்டபொம்மன் புகழைப் பரப்புவதிலே பெரும் பங்கு கொண்டார்.

பிற மொழிகளிலே கட்டபொம்மன்:

ம.பொ.சி.

ம.பொ.சி.

வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வரலாற்றை ம.பொ.சி. தமிழில் எழுதி வெளியிட்ட பின்னர், அதனை முதல் நூலாகக் கொண்டு வேறு பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் வழி நூல்கள் வெளி வந்தன.

சென்னை இந்தி பிரசார சபையாரால் கட்டபொம்மன் நாடகம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, அந்த சபையின் மாணவர்களால் நடத்தப்பட்டது. தில்லி உள்ளிட்ட வடபுலத்திலும் நடத்தப்பட்டு வேற்று மொழிப் பிரதேசங்களிலும் வீரபாண்டியன் புகழ் பரப்பப்பட்டது.

‘டாக்டர் கமில் சுவலபில்’ என்னும் செக்கோஸ் லோவேகிய தமிழறிஞர் ம.பொ.சி. எழுதிய நூலை வழிகாட்டியாகக் கொண்டு ‘செக்’ மொழியிலே வீரபாண்டியன் வரலாற்றை எழுதி வெளியிட்டு செக்கோஸ்லோவேகிய நாட்டிலும் கட்டபொம்மன் புகழைப் பரப்பினார்.

சோவியத் ருஷ்ய நாட்டிலேயும் ருஷ்ய மொழியிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரை வடிவில் வெளிவந்தது.

திரு. தாமோதரன் என்னும் ஐ.சி. எஸ்.  அதிகாரி ‘இந்து’ தினசரி பத்திரிகையிலே வீரபாண்டியன் வரலாற்றைஆங்கிலத்தில் எழுதி வெளிவரச் செய்தார்.சென்னை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ ஆங்கில நாளிதழிலேயும் ‘முட்செடி‘ என்னும் தலைப்பில் ராஜாஜி கட்டுரை எழுதி பிரிட்டிஷாருக்கு கட்டபொம்மன் ஒரு முட்செடியாக விளங்கினார் என்றார்.

அரங்கநாதன் என்பவர் எழுதிய விரிவான கட்டுரை ‘எக்ஸ்பிரசில்’  வெளி வந்து,  வங்கத்திலிருந்து வெளிவரும் ‘யுகாந்தர்’ என்ற புகழ் மிக்க ஏட்டிலும் கட்டபொம்மன் புகழ்பாடும் கட்டுரை வெளியானது.

‘பிளிட்ஸ்’ என்னும் புகழ் மிக்க ஆங்கில வார எட்டிலும் வீரபாண்டியன் வரலாறு வெளியிடப்பட்டது. வடபுலத்தில் பாட்னாவிலிருந்து வெளிவரும் ‘டிரிப்யூன்’ என்னும் ஆங்கில நாளிதழிலேயும் வீரபாண்டியன் வரலாறு தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அயல் நாடுகளிலே…

சென்னையில் பத்மினி பிக்சர்சார் தயாரித்த வீர பாண்டியகட்டபொம்மன் என்னும் தமிழ்த் திரைப்படமானது லண்டனிலே அங்குள்ள பத்திரிகைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சியாக வெளிப்பட்டது.

இந்திய அரசு தயாரித்த ‘இந்தியாவின் விடுதலைப் போர்’ என்னும் ஆங்கில டாக்குமெண்டரி திரைப்படத்திலே வீர பாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சாலங்குறிச்சிப் போரும் இணைக்கப்பட்டு உலகமெங்கும் காட்டப்பட்டு வருகிறது.

கிராமியக் கலைஞர்கள்:

இன்னும் வில்லுப்பாட்டுக் கலைக் குழுவினர் பலர் தமிழ்நாட்டிலே கட்டபொம்மன் கதையே நடத்தி வருகின்றனர். கிராமப்புற நாடகக் கலைஞர்களும் கட்டபொம்மன் கதையை ‘தெருக்கூத்து’ பாணியிலே நடத்தி வருகின்றனர்.

நினைவுச் சின்னங்கள்:

நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையிலே நகரமன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச் சிலை பிரதான இடத்தில் நிறுத்தப்பட்டது. மதுரை நகரிலும் நகர மன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச் சிலை மக்கள் கூட்டம் அதிகமாக நடமாடும் முச்சந்தி ஒன்றிலே நிறுத்தப்பட்டுள்ளது.

‘கயத்தாறு’ என்னும் சிற்றூரையடுத்துள்ள கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலே மிகப் பெரிய நினைவுத்தூண் ஒன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்விக் கூடங்களிலே…

‘கட்டபொம்மன் வீர வரலாறு’ என்ற திரு. ம.பொ.சி. எழுதிய நூல் முதன்முதலில் பெங்களூர் பல்கலைக் கழகத்தாரால் இண்டர்மீடியட் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டிலும் உயர்நிலைப் பள்ளிகளிலே 10-ஆம் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது.

சென்னை, இந்திப் பிரசார சபையிலும் இந்தியில் எழுதப்பட்ட கட்டபொம்மன் வரலாறு பாடமாக வைக்கப்பட்டது. எண்ணற்ற கல்லூரிகளில் மாணவர்களே டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்திய ‘முதல் முழக்கம்’ என்னும் நாடகத்தை தாங்களே முயற்சி எடுத்துக் கொண்டு பயின்று நடிப்பது வழக்கமாகி விட்டது.

வானொலிகளிலே…

கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு, ஆகிய அயல்நாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் ம.பொ.சி. அவர்கள் கட்டபொம்மனைப் பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள். பதிவு செய்யப்பட்டு வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.

அரசுகளின் ஆதரவு:

தி.மு.க. ஆட்சி காலத்திலே முதல்வர் கருணாநிதியின் ஆர்வத்தால் பாஞ்சாலங்குறிஞ்சியிலே பல லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவில் கட்டபொம்மன் நினைவாலயம் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே முதல்வர் காமராசர் ஆதரவோடு பாஞ்சாலங்குறிஞ்சியில் பரங்கியரால் அழிக்கப்பட்டுப் போன – வீரபாண்டியன் வழிபட்டு வந்த வீர ஜக்கம்மாள் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

இன்னும் தமிழக அரசின் ஆதரவோடு தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் சாலைகளுக்கும், பூங்காக்களுக்கும், குடியிருப்புகளுக்கும்,வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திர வீரனா?’ என்னும் வினா தமிழக சட்டமன்றத்தில் சிலரால் எழுப்பப்பட்டபோது ஐயத்திற்கிடமின்றி, அவன் தேச சுதந்திரத்திற்குப் போராடிய வீரனே என்று அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் நுழைவாயிலிலே கட்டபொம்மன் உருவச் சிலை நிறுத்தப்படவேண்டுமென்று தமிழரசு கழகம் அரசுக்கு கோரிக்கை அனுப்பிய போது கட்டபொம்மன் வரலாறு சம்பந்தப்பட்ட இடங்களிலே ஏதேனும் ஒன்றில் நினைவுச் சின்னம் அமைக்க தனியார்களோ அமைப்புகளோ முன்வந்தால் அவர்களுக்கு அரசு முன்வந்து உதவியளிக்கும் என்று கடிதம் மூலம் உறுதியளிக்கப்பட்டது.

சட்டமன்றத்திலும் இந்த உறுதிமொழி ஒரு முறை கேள்விக்கு பதிலாகப் பதிவு செய்யப்பட்டது. பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைப் படமாக்கியபோது மத்திய அரசு பலவகையிலும் உதவி புரிந்தது.

தொல்பொருள் துறை:

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்த பாஞ்சாலக்குறிச்சி என்னும் ஊர் பரங்கியர் ஆட்சியால் அழிக்கப்பட்டு பூகோளப் படத்திலிருந்தே அப்பெயர் அகற்றப்பட்டது. அந்த இடமானது அழிக்கப்பட்ட மாளிகைகளின் அடித்தளங்களோடு கூடிய புதைபொருள் பிரதேசமாக இருந்து வந்தது.

மூதறிஞர் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது திரு. ம.பொ.சி.யின் வேண்டுகோளுக்கிணங்க அந்த இடத்தைப் பார்வையிட்டு மத்திய அரசின் தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார். இப்போது தமிழக அரசின் தொல்பொருள் துறைக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

கவிஞர் – அறிஞர் புகழ் மாலை:

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை ஆகிய கவிஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து செய்யுள் பலவற்றைக் கொண்ட கவிதைகளைப் பாடியுள்ளனர்.

ராஜாஜி, அண்ணா ஆகிய அறிஞர் பெருமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து பேசியுள்ளனர்.

1957 சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் தமிழரசு கழகத்தினர் நடத்திய கட்ட பொம்மன் விழாவிலே ராஜாஜி தாமதமாகவே திடீரெனத் தோன்றி பொம்மனுடைய புகழை விவரித்துப் பேசினார்.

.

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர்.

காண்க:

இத்தளத்தில் அன்னாரது இடுகைகள்

வெள்ளையரை மிரட்டிய வீரச்சிங்கம்

நன்றி:

இக்கட்டுரை, வீ ரபாண்டிய கட்டபொம்மன்.COM என்ற தளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

%d bloggers like this: