Blog Archives

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

-பெ.சு.மணி

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயுடு

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு

(பிறப்பு: 1887, ஜூன் 4-  மறைவு: 1957 ஜூலை 23)

 

தென்​னாட்​டுத் தில​க​ரா​கப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934-இல்  ‘தேசிய சங்​க​நா​தம்’ எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​

இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச்
சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​ ‘டாக்​டர்’  எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்  பெரும்​பு​கழ் பெற்​ற​தால் அமைந்​தது.​ ​

சே​லம் மாவட்​டம்,  ராசி​பு​ரத்​தில் 1887-ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி வர​த​ரா​ஜுலு நாயுடு பிறந்​தார்.​ தந்தை பெயர் பெரு​மாள் நாயுடு, தாயார் பெயர் குப்​பம்​மாள் உயர் ​நி​லைக் கல்வி கற்​கும்​பொ​ழுதே நாடெங்​கும் பர​விய வந்​தே​மா​த​ரம் இயக்​கம் இவ​ரைக் கவர்ந்​தது.​ இளை​ஞ​ரான  வர​தரா​ஜுலு   ‘முற்​போக்​கா​ளர் சங்​கம்’ எனும் ஓர் அமைப்பை மாண​வர்​க​ளி​டையே அமைத்​தார்.​

அன்​னி​யத் துணி விலக்கு,​​ சுதே​சி​யம் எனும் தேசிய லட்​சி​யங்​களை முழங்​கி​ய​தால் பள்​ளி​யில் இருந்து விலக வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்​டது.​ ​பத்தொன்​பது வய​தி​லேயே தேசிய அர​சிய​லில் ஈடு​பட்​ட​தைப் பற்றி பிற்​கா​லத்​தில் 1936 செப்​டம்​பர் 26-ஆம்  தேதி​யிட்ட தமது ‘தமிழ்​நாடு’ இத​ழின் தலை​யங்​கத்​தில் பின் வரு​மாறு கூறி​யுள்​ளார்:​

 “1906ஆம் ஆண்​டில் எனது 19 வய​தில் இந்​திய தேசிய இயக்​கத்​தில் நான் ஈடு​பட்​டேன்.​ 1908ஆம் வரு​ஷம் புதுச்​சே​ரிக்​குச் சென்று,​​ சுப்​பி​ர​ம​ணிய பார​தி​யா​ரின் ஆசீர்​வா​தத்​தைப் பெற்​றேன்.

“1916இல் தேசிய அர​சிய​லில் தீவி​ர​மா​கப் பங்​கேற்​றேன்.​ இந்த வர​லாற்​றுச் சிறப்​பை,  ‘தமிழ்த்​தென்​றல்’ திரு.வி.க.​ தமது வாழ்க்​கைக் குறிப்​பு​க​ளில் பின்​வ​ரு​மாறு  குறிப்​பிட்​டுள்​ளார்:​-

”பால்- ​பால்-​லால் என்று பார​த​நாடு முழங்​கிய கால​முண்டு.​  நாயக்​கர்,​​  நாயுடு,​​ முத​லி​யார் என்று தமிழ்​நாடு முழங்​கிய கால​முண்டுமேலே,

 •  ‘பால்’ என்​பது பால​கங்​கா​தர தில​க​ரை​யும்
 •  ‘பால்’ என்​பது விபின் சந்​திர பாலை​யும்
 •  ‘லால்’ என்​பது லாலா லஜ​ப​தி​ரா​யை​யும்

குறிப்​பி​டு​வ​ன​வா​கும்.​

இவ்​வாறே,​​

 • நாயக்​கர் என்​பது,​​ ஈ.வெ.இராம​சாமி நாயக்​க​ரை​யும்
 • நாயுடு என்​பது​​ டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வை​யும்
 • முத​லி​யார் என்​பது திரு.வி.கல்​யா​ண​சுந்​தர முத​லி​யா​ரை​யும்

குறிப்​பி​டு​வ​ன​வா​கும்”.​

இவரது முதல் சிறை​வா​சம்,​​ 1918-இல் மதுரை ஹார்வி மில் தொழி​லா​ளர் வேலை நிறுத்​தத்தை ஊக்​கு​வித்து ஆற்​றிய பேச்​சுக்​காக விதிக்​கப்​பட்​டது.​ சொற்​பொ​ழி​வில் அரசு நிந்​த​னைக்​கு​ரிய குற்​றம் இருப்​ப​தா​கக் குறிப்​பி​டப்​பட்டு,​​ பதி​னெட்டு மாத கடுங்​கா​வல் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ விசா​ர​ணை​யில்,​​ நாயு​டு​வின் சார்​பில் சேலம் சி.ரா​ஜ​கோ​பாலா​ச்​சாரி (ராஜாஜி) வாதா​டி​னார்.​

இவ​ருக்​குத் துணை​யாக,

 • சேலம் ஆதி நாரா​யண செட்​டி​யார்
 • மதுரை ஜார்ஜ் ஜோசப்
 • எம்.கே.சுந்​த​ர​ராஜ ஐயங்​கார்
 • ஆர்.எஸ்.​ வர​த​ரா​ஜுலு நாயுடு

ஆகிய வழக்​க​றி​ஞர்​கள் உத​வி​னர்.​

உயர் நீதி​மன்ற மேல் முறை​யீட்​டில் ராஜாஜி எழுப்​பிய சட்ட நுணுக்​க​ வா​தத்​தால்,​​ நாயுடு விடு​தலை பெற்​றார்.​

அ​வர் சேலத்​தில் வாரப் பதிப்​பாக 1919-ஆம் ஆண்​டின் இறு​தி​யில் ஆரம்​பித்த  ‘தமிழ் நாடு’  இத​ழில்  அவர் எழு​திய இரு கட்​டு​ரை​கள்,​​  ராஜ​து​ரோ​க​மா​னவை என்று குற்​றம் சாட்​டப்​பட்டு விதிக்​கப்​பட்ட ஒன்​பது மாதக் கடுங்​கா​வல் தண்​ட​னை​யால் இரண்​டாம் சிறை வாசத்தை ஏற்​றார்.​

1923-இல் பெரி​ய​கு​ளம் தாலுகா மாநாட்​டில் தடை உத்​த​ரவை மீறிப் பேசி​ய​தற்​காக ஆறு​மா​தம் கடுங்​கா​வல் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.​ இது மூன்​றா​வது சிறைத்​தண்​ட​னை​யா​கும்.​

24-ஆம் வய​தில் அவர் ருக்​மணி எனும் பெண்​ம​ணியை திரு​ம​ணம் செய்​து​கொண்​டார்.​ ​1920 ஆகஸ்​டில் காந்​தி​ய​டி​கள் திருப்​பூர் வந்​த​பொ​ழுது,​​ டாக்​டர் வர​த​ரா​ஜுலு நாயுடு வீட்​டில் தங்​கி​னார்.​ 1921-இல் மீண்​டும் சேலம் வந்​த​பொ​ழுது டாக்​டர் வர​த​ரா​ஜுலு நாயுடு வீட்​டில் தங்​கி​னார்.​  காந்​தி​ய​டி​கள் அப்​பொ​ழுது நடை​பெற்ற மக​ளிர் கூட்​ட​மொன்​றில் நாயு​டு​வின் மனைவி ருக்​மணி,​​  தாம் அணிந்​தி​ருந்த நகை​கள் அனைத்​தை​யும்,​​ காந்​தி​ய​டி​க​ளி​டம் கொடுத்​து​விட்​டார்.​

1922-இல் காந்​தி​ய​டி​கள் சிறைப்​ப​டுத்​தப்​பட்​ட​பொ​ழுது,​​ அதற்கு எதிர்ப்​புத் தெரி​விக்க புது​மை​யைக் கையாண்​டார்,​​ டாக்​டர் நாயுடு.​ அர​சாங்​கத்​துக்​கு​ரிய  வரு​மான வரி​யைக் கட்ட மறுத்​தார்.​ காந்​தி​ய​டி​கள் விடு​தலை செய்​யப்​பட்ட பிற​கு​ தான் வரி​கட்ட முடி​யும் என அறி​வித்​துப் புது​மையை  நிகழ்த்​தி​னார்.​

வரி மறுப்​பைக் குறிப்​பிட்டு டாக்​டர் நாயுடு அர​சாங்​கத்​திற்கு எழு​திய கடி​தம்,​​ காந்​தி​ய​டி​க​ளின்  ‘யங் இந்​தியா’வில் வெளி​வந்​தது.​ 1925-இல் தமிழ்​நாடு மாகாண காங்​கி​ரஸ் கமிட்​டி​யில் தலை​வ​ரா​க​வும் பணி​யாற்​றி​னார்.​ 1929-இல்  காங்​கி​ர​ஸோடு கருத்து வேற்​றுமை கொண்டு காங்​கி​ரஸை விட்டு வெளி​யே​றி​னார்.​ பின்​னர் ஆர்ய சமா​ஜத்​தில் இணைந்​தார்.​

‘ஜஸ்​டிஸ்’ கட்​சியை எதிர்த்​த​தில் டாக்​டர் நாயு​டு​வின் பங்​க​ளிப்​பைப் பின்​வ​ரு​மாறு திரு.வி.க.​ பாராட்​டி​யுள்​ளார்:

 “ஜஸ்டிஸ் கட்சி முளை​விட்​ட​போது,​​ அதைக் கிள்​ளி​யெ​றி​வ​தற்​கென்று புறப்​பட்​ட​வர் டாக்​டர் வர​த​ரா​ஜுலு.​  வர​த​ரா​ஜு​லு​வின் பிர​சா​ரம் தமிழ்​நாட்​டில் நாலா பக்​க​மும் பர​வா​வி​டின்,  ‘ஜஸ்​டிஸ்’ கொடி நாடு முழு​வ​தும்  பர​வி, காங்​கி​ரஸ் உணர்ச்​சிக்​கேடு சூழ்ந்​தி​ருக்​கும்.​ தென்​னாட்​டில் காங்​கி​ரஸ் பக்​தியை வளர்த்த பெருமை  நாயு​டு​வுக்கு உண்டு”

-என்று திரு.வி.க.​ எழு​தி​யுள்​ளார்.​

ஜி.சுப்​பி​ர​மணிய ஐயர்,​​ பார​தி​யார்,​​ திரு.வி.க.வைத் தொடர்ந்து,​​ தேசி​யத் தமிழ் இத​ழி​யல் துறையை மேலும் வளர்த்​த​வர் டாக்​டர் நாயுடு.​

இவ​ரு​டைய இத​ழி​யல் பணி,​​  ‘பிர​பஞ்ச மித்​தி​ரன்’ எனும் வார இதழ் மூலம் தொடங்​கி​யது.​ மங்​க​லம் ஷண்​முக முத​லி​யார் உரி​மை​யா​ள​ரா​க​வும்,​​ சுப்​பி​ர​ம​ணிய சிவா ஆசி​ரி​ய​ரா​க​வும் நடத்​தப்​பட்ட   ‘பிர​பஞ்சமித்​தி​ரன்’ மிகுந்த பொருள் இழப்​பில் தத்​த​ளித்​த​பொ​ழுது,​​ டாக்​டர் நாயுடு 1916-இல் அந்த இதழை  வாங்​கி​னார்.​ அவர் ஆசி​ரி​ய​ரா​னார்.​ இது இரண்​டாண்​டு​கள் வெளி​வந்​தது. ​1918ஆம் ஆண்டு டாக்​டர் நாயுடு  சிறைப்​பட்​ட​பொ​ழுது,​​ ஆயி​ரம் ரூபாய் ஈடு​கா​ணம் அர​சால் கேட்​கப்​பட்டு,​​ பத்​தி​ரிகை முடக்​கப்​பட்​டது.​ பி​ர​பஞ்சமித்​தி​ர​னுக்​குப் பிறகு தமிழ்​நாடு இத​ழைத் தொடங்கி ஆசி​ரி​ய​ராக இருந்து ஆற்​றிய நாயு​டு​வின்  பணி  ஒரு வர​லாற்​றுச் சாத​னை​யா​கும்.​

அவ​ருக்கு இவ்​வ​கை​யில் பெரி​தும் துணை நின்​ற​வர்  ‘பேனா மன்​னன்’ என்று பிற்​கா​லத்​தில் புக​ழப்​பட்ட டி.எஸ்.சொக்க​லிங்​கம் ஆவார்.​

1919-இன் இறு​தி​யில் சேலத்​தில் வாரப் பதிப்​பாக வெளி​வ​ரத் தொடங்​கிய தமிழ்​நாடு இத​ழில்,​​ 21 வய​தான இளை​ஞர் டி.எஸ்.சொக்க​லிங்​கம் 1923-இல் துணை ஆசி​ரி​ய​ரா​னார்.​1926 ஏப்​ரல் 14-இல் வாரப் பதிப்​பு​டன் நாளி​த​ழை​யும் தொடங்​கி​னார்.​ பா​ர​தி​யார் பாடல்​க​ளைச் சித்​திர விளக்​கங்​க​ளாக வெளி​யிட்ட முதல் இதழ் தமிழ்​நாடு எனும் பெருமை பெற்​றது.

“காலஞ்சென்ற ஜி.சுப்​பி​ர​ம​ணிய ஐ​ய​ரைப் போல டாக்​டர் நாயு​டு​வும் பத்​தி​ரிகை உல​கில் ஒரு தனிச் சுட​ராக விளங்​கி​னார்.​ தேசிய ஆதர்​சங்​க​ளு​டன் வெற்​றி​க​ர​மாக ஒரு தேச பாஷை பத்​தி​ரிகை நடத்​திய வீரர்​க​ளில் டாக்​டர் நாயு​டு​வைக் காலஞ்​சென்ற ஜி.சுப்​பி​ர​ம​ணிய ஐ​ய​ருக்கு இணை​யா​கச் சொல்​ல​லாம்”

-என்று வ.உ.சி.​  ‘தேசிய சங்க நாதம்’ எனும் வெளி​யீட்​டில் சுட்​டிக்​காட்​டி​யுள்​ளார்.​

‘இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்’ இத​ழும் டாக்​டர் நாயு​டு​வின் முயற்​சியே.​ 1916-லேயே ஆங்​கில இதழ் ஒன்​றைத் தொடங்க வேண்​டும் என விரும்​பிய டாக்​டர் நாயுடு, 1932-இல் தமிழ்​நாடு நாளி​த​ழுக்கு சகோ​த​ரப் பத்​தி​ரி​கை​யாக  ‘இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்’ எனும் பெய​ரில் ஓர் ஆங்​கில நாளேட்​டைத் தொடங்​கி​னார்.​ ஆனா​லும், சில மாதங்​க​ளி​லேயே  ‘ப்ரீ பிரஸ் ஆப் இந்​தி​யன்’ எனும் சுதேச செய்தி நிறு​வ​னத்தை நிறு​விய தேசிய வீரர் எஸ்.சதா​னந்​தம் வச​மா​யிற்று  ‘இந்​தி​யன் எக்ஸ்​பி​ரஸ்’.

1930-32களில் காந்​தி​ய​டி​கள் நடத்​திய உப்பு சத்​தி​யா​கி​ர​கத்​தை​யும்,​​ சட்​ட​ம​றுப்பு இயக்​கம் முத​லி​ய​வற்றையும் டாக்​டர் நாயுடு எதிர்த்​தது இவ​ரு​டைய அர​சி​யல் வீழ்ச்​சிக்​கும்,​​ தமிழ்​நாடு இத​ழின் நலி​விற்​கும் கார​ண​மா​யிற்று.​

வி​டு​தலை பெற்ற இந்​தி​யா​வில் டாக்​டர் நாயுடு 1951-இல் சென்னை மாநி​லச் சட்​ட​மன்ற மேலவை உறுப்​பி​ன​ராக சேலத்​தில் இருந்து காங்​கி​ரஸ் சார்​பில் போட்​டி​யின்​றித் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​டார்.​ 1952-இல் நடை​பெற்ற பொதுத்​தேர்த​லில்,​​ சேலம் நக​ரத்​தில் போட்​டி​யிட்டு கம்​யூ​னிஸ்ட் வேட்​பா​ள​ரான மோகன் குமா​ர​மங்​க​லத்​தைத் தோற்​க​டித்து சட்ட மன்ற உறுப்​பி​ன​ரா​னார்.​

சிற்​சில சந்​தர்ப்​பங்​க​ளில் பெரி​யா​ருக்​கும்,​​ காம​ரா​ச​ருக்​கும் இடையே பால​மா​க​வும் திகழ்ந்​தார்.​ 23.7.1957-இல் அவர் இறந்​த​பொ​ழுது அவ​ரு​டைய இறு​திச் சடங்​கு​கள் ஆரிய சமா​ஜ சடங்​கு​கள் வழியே எரி​யூட்​டப்​பட்​டது. இ​வ​ரைப் பற்​றிய விரி​வான வாழ்க்கை வர​லாறு வெளி​வ​ரு​தல் இன்​றி​ய​மை​யா​த​தா​கும்.

.

குறிப்பு:

திரு.பெ.சு.மணி, தமிழின் முக்கியமான பாரதி ஆய்வாளர்; எழுத்தாளர்.

இக்கட்டுரை, தினமணி- தமிழ் மணியில் வெளியானது, இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி:  தமிழ் மரபு அறக்கட்டளை

 

Advertisements

ஈழத்தின் சைவ எழு ஞாயிறு

-பெ.சு.மணி

ஆறுமுக நாவலர்

ஆறுமுக நாவலர்

(பிறப்பு: 1822 டிசம்பர் 18- மறைவு: 1879 டிசம்பர் 5)

இந்தியாவைப் போலவே, ஈழமும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமய- பண்பாட்டு நெருக்கடிகளை எதிர்கொண்டது. போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கில காலணி ஆதிக்கங்களும், கிறித்துவ மிஷனரிகளின் இந்து சமய எதிர்ப்புப் பிரசாரங்களும் இந்தியாவில் புதிய சமய-பண்பாட்டு இயக்கங்களைத் தோற்றுவித்தன. இவற்றுள் பிரம்ம சமாஜம் (1828) பிரார்த்தனை சமாஜம் (1857), ஆர்ய சமாஜம் (1875), ராமகிருஷ்ண மிஷன் (1886), பிரம்ம ஞானசபை எனப்படும் ‘தியாசபிகல் சொசைடி’ (1875), சமரச சுத்த சன்மார்க்க சங்கம் (1865) ஆகியன குறிப்பிடத்தக்கன.

இதே காலகட்டத்தில் இலங்கை ஈழத்தில் போர்த்துகீசிய, டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கங்களாலும், அவற்றின் ஆதரவில் முடுக்கி விடப்பட்ட சில கிறிஸ்துவ மிஷனரிகளின் இந்து, சைவ சமய எதிர்ப்பு பிரசாரங்களும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலரை சைவ சமய எழு ஞாயிறாகத் தோன்றச் செய்தன.

ஈழத்தில் சைவ சமயமே மிகப் பழமையானது, பெரும்பான்மையானது. ஆங்கிலக் கல்வியும், அதன் வழி அரசு ஊழிய பெரும் வாய்ப்பும், சைவ சமய உண்மை நெறி அறியா அறியாமையும் மேலோங்கி இருந்த சூழலில் சைவ சமயம் பிழைக்குமோ என்ற பேரச்சம் பரவிய காலத்தில், யாழ்ப்பாணம் நல்லூரில் ஆறுமுக நாவலர் 18.12.1822-இல், கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார்.

பதின்மூன்றாம் வயதிலேயே சைவ சமயத்தின் வீழ்ச்சியைத் தடுத்து அருள்புரிய சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு வெண்பாவை இயற்றியதாக அவருடைய வரலாற்றை 1916-இல் எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்ளார். அந்த வயதில் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் மத்திய பாடசாலையில் ஆங்கிலம் கற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது இளமைக்காலத்துச் சிந்தனைகளை, 1868-இல் வெளியிட்ட  ‘சைவ சமயங்களுக்கு விக்கியாபனம்’ எனும் கட்டுரையில் கூறியதாவது:

  “நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலீஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841) பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனானேன். பார்சிவல் துரை  ‘நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது’ என்று பல தரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும், நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை. நான் இல்வாழ்க்கையில், புகவில்லை. இவையெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையாம். நான் என் சிறுவயது முதலாகச் சிந்தித்து சிந்தித்து, சைவ சமயத்தை வளர்த்ததற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின் கண்ணாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சக்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சக்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!’ என்று இரவும் பகலும் பெருங் கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்கும் பிதற்றலிலுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்.”

இங்கு பண்டைய ஈழத்தின் அரசியல் பின்னணியையும் சுருக்கமாக அறிதல் வேண்டும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே இலங்கையில் தமிழ் மன்னர் ஆட்சி நிலவியதை சிங்கள இதிகாசமான  ‘மகாவம்சம்’ ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசுகளும் தமிழ்நாட்டின் சோழ, பாண்டிய விஜயநகர அரசுகளும் தம்முள் கொண்டிருந்த அரசியல் கலாசார உறவுகள் வரலாற்றில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆட்சி பதினேழாம் நூற்றாண்டில் மறைவதற்கு முன்பாக ஆட்சி செலுத்திய தமிழ் மன்னர்கள் ஆரிய சக்ரவர்த்திகள் என்றழைக்கப்பட்டனர். இவர்கள்,  ‘தமிழையும் சைவத்தையும் பேணி வளர்த்த புரவலராகவும், புலவராகவும் பாராட்டப்பட்டுள்ளனர்.

கி.பி. 1620-இல் போர்த்துகீசியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டன. கிறித்துவ சமய மாற்றத்தில் கொடுமைகள் நிகழ்ந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு இந்துவும் போர்த்துகீசிய தலைவனுக்கு நாள்தோறும் உணவிற்காக ஒரு பசுவை அனுப்பி வைக்க வேண்டும் என விதிக்கப்பட்டது.

போர்த்துகீசிய ஆதிக்கத்துக்குப் பிறகு டச்சு, காலனியாதிக்கம் கி.பி. 1658 முதல் கி.பி. 1790 வரையில் நீடித்தது. புரட்டஸ்தாந்து சமயத்தைச் சார்ந்த டச்சு ஆதிக்கத்தில் சுதேசிய சமயங்கள் இழிந்துரைக்கப்பட்டன. மதமாற்றமும் தீவிரமுற்றது. 1796-ல் ஆங்கிலேயர் கொழும்பு நகரைக் கப்பற்றினர். கி.பி. 1815-ல் கண்டி அரசனை வீழ்த்தி ஈழம் முழுவதையும் ஆங்கிலேயர் தமது காலனியாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தினர். இவர்கள் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளாமல் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விட்டு விட்டதால், ஆங்கிலக் கல்வி முறையை தங்களது மதமாற்ற முயற்சிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதால், கிறிஸ்துவ மிஷனரிகள், வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச் மிஷன் (1819) முதலான கிறிஸ்துவ மிஷனரிகள் முன்னிருந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு உத்வேகத்துடன் கல்வி பரப்புதலுடன், கிறிஸ்துவ சமயப் பரப்புதலலயும் மேற்கொண்டனர்.

சைவ சமய ஆர்வலர்கள், சைவ சமய குருமார்கள் கிறிஸ்துவ மிஷனரிகளைப் போல்  கல்வி பரப்புதலை ஆள்வதில் தகுதியும், திறமையுமற்றுப் பின்தங்கியிருந்தனர். பொதுக் கல்வியில் மட்டுமன்று, சைவ சம்யக் கல்வியும் போதிய தேர்ச்சியில்லாமல் புறச் சமயத்தவரின் எதிர்ப்பு பிரசாரத்திற்கு பயனளிக்க இயலாமல் திணறினர். இந்தச் சூழலில் ஆறுமுக நாவலர் கிழர்ந்தெழுந்தார்.

சமயம் பிரசார நூல்களை போர்க்கலன்களாகப் படைப்பதில் நாவலர் தனி முத்திரை பதித்தார். மெதடிஸ்த ப்?டசாலையில் மாணவராகவும், ஆசிரியராகவும் அவர் பெற்ற அறிவும், அனுபவமும் பைபிளை தமிழாக்கம் செய்ததில் பேர்சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும், சமய பிரசாரத்தில் கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகள் நாவலரிடம் பெரும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், இயக்க ஆற்றலையும் ஏற்படுத்தின.

கிறிஸ்தவ கண்டன நூல்கள்:

சைவ தூஷண பரிகாரம் (1854), சுப்பிரபோதம் (1853), வச்சிர தண்டம் ஆகியன கிறிஸ்தவ சமய கண்டன நூல்களாகும். இவருடைய கிறிஸ்தவ மத கண்டனங்களை கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தங்கள்  ‘Hindu Pastor’ எனும் புத்தகத்தில் மிக வியந்து எழுதியிருக்கிறார்கள். 1855இல் ‘சைவ தூஷண பரிகாரம்’ எனும் வெளியீட்டைப் பற்றி வெஸ்லியன் மெதடிஸ்த அறிக்கையில் பின்வரும் வியப்புரைகள் கூறப்பட்டுள்ளன.

“இந்த ஆண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு சைவ தூஷண பரிகாரம் எனும் நூல் வெளியீடாகும். இந் நூல் அசாதாரணமான இலக்கியமாகவும் தொன்மமாகவும் விளங்குகிறது. சைவருடைய ஒவ்வொரு நம்பிக்கையும் நடைமுறையும் கிறிஸ்தவ புனித நூல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கை சடங்குகளோடு இசைந்தும் இணைந்தும் இருப்பதாக நிரூபணம் செய்கிறது.

இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவாகத் திரட்டித் தரம் பெற்றுள்ள சாத்தியக் குவியலைப் பார்க்கும்பொழுது மிக்க வியப்பாக உள்ளது. எதிர்த்தரப்பின் மறுப்பை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதை புறந்தள்ளும் மதி நுட்பம் முதல் தரமான தேர்ந்த உள்ளத்திற்கே உரியதாகும் என்பதையும் இந்நூலில் கான்க்?ன்றோம். இந்நூல் நமக்கு மிகுந்த இடர்களை விளைவிப்பதாகும்.”

சைவ சமய விளக்க நூல்கள்:

சைவ சமய வழிபடுகளை விளக்க பின்வரும் சிறு சிறு நூல்களை வெளியிட்டார் நாவலர்:

 • அனுட்டான விதி முதற்புத்தகம் (நித்ய கன்ம விதி),
 • அனுட்டான விதி இரண்டாம் புத்தகம்,
 • குரு வாக்கியம்,
 • சிவாலய தரிசன விதி,
 • சைவ சமய சாரம்,
 • சைவ வினாவிடை முதற்புத்தகம்,
 • இரண்டாம் புத்தகம் (1875),
 • திருக்கோயிற் குற்றங்கள் (1878).

தாக்குதலுக்காக மட்டுமல்லாமல், தற்காப்பிற்காகவும், சுயசமயத் தெளிவிற்காகவும் நாவலர் தன்னந்தனியாக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்கள் போன்ற அமைப்புகள் ஈழத்தில் இல்லாத காலத்தில் அவரே ஓர் அமைப்பாக, இயக்கமாக புயலாகவும் தென்றலாகவும் இயங்கினார்.

கந்த புராண கலாசாரம்

யாழ்ப்பாண சைவ சமயம் கந்தபுராணக் கலாசாரத்த அடித்தளமாகக் கொண்டது. யாழ்ப்பாணம் நல்லூர், இந்து சமய மன்னர்களின் தலைநகராக விளங்கியது. நல்லூர் கந்தசாமி கோயில் சைவ சமயத்தின் உயிர் நாடியாகும். கிறிஸ்தவ சமயம் பாதிரிமார் இத்திருக்கோயிலை குறிவைத்துத் தாக்கிப் பிரசாரம் செய்தனர். 1852-ம் ஆண்டில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ சமயப் பாதிரிமார் நடத்தி வந்த  ‘நன்கொடை’ எனும் இதழில்  ‘கந்தசாமி கோயிற் திருவிழா’ எனும் தலைப்பில் சுப்பிரமணிய சுவாமி வழிபாட்டை இகழ்ந்து கட்டுரை வெளிவந்தது. எழுத்தில் மட்டுமன்று பேச்சிலும் இகழ்ந்து வந்தனர். இந்த சைவ சமய வெறுப்புப் பிரசாரத்தை முறியடிக்க 1853-ல் நாவலர்,  ‘சுப்பிரமணிய போதம்’  எனும் நூலை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.

கந்தபுராணத்தில் ஆன்மீக மேன்மையை பலவாறாக சைவ சித்தாந்த நோக்கில் தமது நாவன்மையால் விளக்கி வந்தார்.

1861-ல் நாவலருடைய கந்தபுராண வசனம் மதிப்புக்கு வெளிவந்தது. யாழ்ப்பாணத்தில் கந்தபுராணச் சொற்பொழிவுகள் பெரும் செல்வாக்கு பெற்றன.

‘கந்தபுராண கலாசாரம்’ என்றால் என்ன? என்பதை விளக்கி கலாநிதி பேராசிரியர் க.கைலாசபதி எழுதியதாவது:

 “தத்துவத்தையும், பணபாட்டையும் இலக்கியத்துடன் இணைத்துக் காணும் நிலைக்கும் பொருத்தமான குர்ரயீடாக “கந்தபுராண கலாசாரம்” என்னும் தொடர் கச்சிதமாக அமைந்துள்ளது எனலாம்.”

நாவலருக்கு பெரிய புராணத்தில் மிக்க ஈடுபாடு உண்டு. 1851-லேயே பெரியபுராண வசனத்தைப் பதிப்பித்து விட்டார்.

சைவ ஆகம நெறி காவலர்:

இந்தியாவில் ஆர்ய சமாஜ நிறுவனர் சுவாமி தயானந்தர்.  ‘வேதகாலத்திற்கு திரும்புங்கள்’  என்று முழங்கியது போல,  நாவலர்  “சிவாகமங்கள் காலத்திற்கு திரும்புங்கள்”  முழங்கினார். வேதத்தைக் காட்டிலும் ஆகமம் சிறந்தது என்று சாற்றினார். சிவாகமங்களையும், சிவ தீட்சைகளையும் வலியுறுத்தினார். சைவ ஆகமங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முறைகளைக் கண்டித்தார். தமிழக சிதம்பர நடராஜர் திருக்கோயிலில் சிவாகமம் புறக்கணிக்கப்பட்டு, வேதாகமம் பின்பற்றப்பட்டு வந்ததை நாவலர் கடுமையாகச் சாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண சைவ சமயத்தில் அத்வைத வேதாந்த எதிர்ப்பு வீறு பெற்றது.

1897-ல் வேதாந்தச் சிங்கமாக சுவாமி விவேகானந்தரின் யாழ்ப்பாண வெற்றியுலா நிகழ்த்திய போது ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தை பேராசிரியர் க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார்:

“சுவாமி விவேகாநந்தரின் போதனைகளும் ராமகிருஷ்ண இயக்கத்தின் செய்தியும் இலங்கைத் தமிழ் இந்துக்களை வேதாந்ததை ஒப்புக் கொள்ளச் செய்யாவிட்டாலும் பெரும்பாலோரின் நோக்கையும், கொள்கைப் பிடிவாதத்தையும் தளரச் செய்தது.”

சைவ சமய சீர்திருத்தவாதி:

உயிர்ப் பலியுடன் கூடிய சிறுதெய்வ வழிபாடுகளை கைவிட வேண்டும் என்று பிரசாரம் செய்தார், நாவலர். திருக்கோயில் விழாக்களில் தேவதாரிகள் நடனம், வானவேடிக்கைகள், ஆபாசமான சித்திரங்கள் முதலானவை விலக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். சைவ சமயப் பிரசாரங்கள் போலன்று பொது அறிவும், சமய அறிவும் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோயில்களில் நிரிவாகத்தினரின் ஊழல்களையும் அம்பலப்படுத்தினார்.

இவ்வழியில் தமது கருத்துகளை அவருடைய  ‘யாழ்ப்பாணச் சமயநிலை’ (1872), நல்லூர் கந்தசாமி கோயில் (1875), மித்தியாவாத் தரிசனம் (1876) முதலான கட்டுரைகளில் விளக்கியுள்ளார்.

தேசிய உணர்ச்ச்சிக்கு வித்திட்டவர்:

சைவர்களிடையே தேசிய உணர்ச்சிக்கு வித்திட்டவர் நாவலர் என்பதும் அவரைப் பற்றிய பிற்கால மதிப்பீடுகளில் ஒன்றாகும். சைவ சமயத்தை தேசிய சமயமாக முதன்மைப்படுத்தியதால் இந்த மதிப்பீடு தோன்றுயது. தமிழ் மக்களின் தனித்துவத்தையும் பாரம்பரியத்தையும் நிலைநாட்ட நாவலர் பணி பயன்படுகின்றது.

சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக் காண வேண்டும் எனும் கருத்தை நாவலர் தமது ‘யாழ்ப்பாண சமயநிலை’  எனும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“சைவ சமயத்தை தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும் அறிவில்லாத சனங்கள் வழங்குகின்றார்கள். தமிழ் என்பது ஒரு சமயத்தின் பெயரன்று, ஒரு பாஷையின் பெயர்.”

பௌத்த சமயத்தையும், சிங்களத்தையும் இணைத்து இலங்கை தேசியத்தை உருவாக்கியவர், அநகாரிக தர்மபால எனும் பௌத்த சமயத் தலைவர். ஆனால் நாவலர் தொடக்கி வைத்த சைவத் தேசிய உணர்வு தற்காப்பிற்கானது. அது பிறருடன் அரசியல் போராட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதல்ல. தமிழர் தேசியம் இதுவரை சமயச் சார்பற்றதாக இருந்து வருவதற்கு நாவலரது செல்வாக்கும் ஒரு காரணமாகலாம் என்று யாழ்ப்பாணத் தமிழ் ஆய்வாளர் க. அருமைநாயகம் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்கால மீளாய்வில்  ‘தேசியத்தின் தந்தை நாவலர்’ எனும் மதிப்பீடு மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்வித் தொண்டு:

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1845-ல் அவர் தோற்றுவித்த சைவப் பிரகாச வித்யாசாலை, சைவ சமய கல்வி இயக்கத்தின் தலையுற்றாகும். கத்தோலிக்க, புரட்டஸ்தந்த் பாடசாலைகளுக்கு அளிக்கப்படும் அரசு நிதியுதவி சைவ சமயத்த்னால் நடத்தும் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று நாவலர் வாதாடினார். கிறிஸ்துவரின் எதிர்ப்பால் சைவப் பிரகாச வித்யாசாலை இருபத்தி இரண்டு ஆண்டுகள் அரசு நிதியுதவி பெறாமல் அல்லல்பட்டது. கிறிஸ்துவ வேதாகமத்தை ஆங்கிலப் பாடநூலாக ஆக்கிய பின்பே 1870-ல் சைவப் பிரகாச வித்யாசாலைக்கு நிதியுதவி கிடைத்தது.

அக்காலத் தேவையாக விளங்கிய ஆங்கிலக் கல்விக்காக நாவலர் தமது கல்வி இயக்கத்தில் இடமளித்தார். 1872-ல் ஆங்கிலப் பாடசாலையை ஆரம்பித்தார். சைவ சமயத்தினர் இந்த ஆங்கிலப் பாடசாலையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் நான்காண்டுகளில் இந்தப் பாடசாலை மூடப்பட வேண்டியதாயிற்று.

உரையாசிரியர் – பதிப்பாசிரியர்:

1849-ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார் பண்ணையில்  ‘வித்தியாநு பாலன யந்த்திரசாலை’ என்னும் பெயரால் ஓர் அச்சகத்தில் நிறுவினார். இதன் வழியே பல நூல்களை வெளியிட்டார்.

கோயிற் புராணம், சைவ சமய நெறி, நன்னூற் காண்டிகை, சிவ தருமோத்தரம், மருதூரந்தாதி, திருமுருகாற்றுப் படை முதலிய இலக்கண, இலக்கிய, சமய நூல்களுக்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டார். கொன்றை வேந்தன், வாக்குண்டாம் (மூதுரை), நல்வழி, நன்நெறி எனும் நீதிநூல்களுக்கும் நாவலர் உரையெழுதியுள்ளார்.

திருக்குறள் பரிமேலழகர் உரை, திருச்சிற்றம்பலம் கோவையுரை, சுருக்க சங்கரக உரை, சேதுபுராணம் முதலிய சுவடிகளை ஆய்ந்து மதிப்பித்துள்ளார், நாவலர். இவருடைய பரிமேலழகர் உரைப்பதிப்பை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாராட்டியுள்ளார். யாழ்ப்பாணம் பேரறிஞர்களுள் ஒருவரான சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குரிய சேனாவரையர் உரையப் பதிப்பித்தார்.

இவ்வாறு அவருடைய உரை நூல்கள், பதிப்பு நூல்கள் பற்றிய ஆய்வு, தனி ஆய்விற்கு உரியது. அக்காலத் தமிழ்ப் பதிப்புலகில்  ‘பதிப்பு’  என்றால் நாவலர் பதிப்புத்தான் நிகரற்று விளங்கியது. தமிழ் உரைநடையின் ஆதிகர்த்தாக்களுள் ஒருவராகவும் புகழ் பெற்றவர் நாவலர்.

சமூக நோக்கு:

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரவாதியாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் பிற்போக்குவாதியாக இருந்தார். உயர் சாதியினரின் ஏகப் பிரதிநிதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார்.

‘முதலாம் சைவ வினாவிடை’ எனும் நூலில் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக எழுதியுள்ளார். திருக்கோயிலுள்ளே போவதற்கு ‘யோக்கியர்களல்லாத சாதியர்கள்’ என்று தாழ்த்தப்பட்ட சாதியரை இழிவு செய்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து உணவு கொள்ளக் கூடாது என்றும், அவர்களைத் தீண்டினால் “உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும்” என்றும்  ‘நான்காம் பால பாடம்’ எனும் நூலில் எழுதியுள்ளார் நாவலர்.

தமிழக உறவில் நாவலர்:

சென்னையில் சுமார் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சைவ சமய எழுச்சிக்குப் பாடுபட்டார், நாவலர். சிதம்பரத்தில் 1864-ல் சைவப் பிரகாச வித்தியாசாலையைத் தொடங்கினார். இந்த வித்தியாசாலையும், சென்னை தங்கசாலையில் இவர் நிறுவிய வித்யாநுபாலன யந்திரசாலையும் சைவ சமயப் பணியுடன் தமிழ்ப் பணியும் செய்து வந்தன.

திருவாவடுதுறை ஆதீனகர்த்தரால் ‘நாவலர்’ எனும் சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டது. 1860-ல் நாவலர் தமது தமையனாருக்கு எழுதிய கடிதத்தில்  “இச்சென்னைப் பட்டணம் என் சென்ம பூமியிற் சிறந்ததென்று”  குறிப்பிட்டுள்ளார். தமிழக அறிஞர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

தமிழக வாழ்க்கையில் நாவலர், ராமலிங்க சுவாமிகளுடன் கடுமையாக மோதி வள்ளலார் பாடல்களை அருட்பாவாக ஏற்க மறுத்து, மருட்பாவாகப் பழித்துரைத்தது, சற்று கசப்பான வரலாற்றுச் செய்தியாகும்.

1868 முதல் சென்னையிலும், சிதம்பரத்திலும் மாதந்தோறும் வியாழக் கிழமைகளில் திவருட்பா, போலியருட்பா ஆகிய விஷயங்கள் பற்றி, உரையாற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட  ‘போலியருட்பா மருட்பா மறுப்பு’  (1869) எனும் கண்டன நூலாகும்.

கடலூர் மஞ்சகுப்ப்ப நீதிமன்றத்தில் ராமலிங்க சுவாமிகள் மீது  ‘மானபங்க படுத்தியமை’  எனும் குற்றச்சாட்டு நாவலரால் சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் சிதம்பரம் சபா நடேச தீட்சிதர் ஒருவரும் எதிரியாகக் குறிப்பிடப்பட்டார். இவ்வழக்கின் முடிவில் சபா நடேச தீட்சிதருக்கு 50 ரூபாய் அபராதமும், செலுத்தத் தவறினால் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ராமலிங்க சுவாமிகள், நீதிமன்றத்தில் தாம் நாவலரை அவதூறாகப் பேசவில்லை என்று கூறியதால் விடுதலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் மூலச் சான்றுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையும் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளே கிடைத்துள்ளன.

நாவலர் மரபு:

ஓரிரு குறைகள் மேகமூட்டமாக மறைத்தாலும், நாவலர் பெயரால் ஒரு மரபு, பரம்பரை தோன்றி சைவத்தையும், தமிழையும் பெரும் முனைப்புடன் வளர்த்தது. 29.4.1888-ல் யாழ்ப்பாணத்தில் நிறுவப் பெற்ற  ‘சைவ பரிபாலன சபை’யும் அதன் பிரசார முடிவாக 11.09.1889-ல் வெளிவந்த ‘இந்து சாதனம் – Hindu Organ’ எனும் இதழும் நாவலர் மரபின் வரலாற்றை விளக்கவல்லன.

தமிழ் மரபில், நாவலர் மரபிற்கு சிறந்த இடம் உள்ளது.

 

குறிப்பு:

திரு. பெ.சு. மணி, தமிழகம் அறிந்த தமிழ் வரலாற்று ஆய்வாளர்.

இக்கட்டுரை திரு. கனக ஸ்ரீதரன் என்பாரது தளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க: சைவமும் தமிழும் வளர்த்த சீலர்

 

 

%d bloggers like this: