Blog Archives

இந்தியர்களைத் துயிலெழுப்பிய அன்னி பெசன்ட்!

-ஆர்.நட்ராஜ் ஐபிஎஸ்

அன்னி பெசன்ட்

அன்னி பெசன்ட் அம்மையார்

(1847, அக்.1 – 1933 செப். 20 )

அக்டோபர் மாதத்திற்குத் தனி மகிமை உண்டு. நாம் நேசிக்கும் பல மாமனிதர்கள் பிறந்த மாதம் இது. மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ஜெயபிரகாஷ் நாராயணன், வல்லபபாய் படேல், சுப்பிரமணிய சிவா ஆகியோர் பிறந்த மாதம்.

நம் நாட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த தேசிய தலைவர்களில் அன்னி பெசன்ட் அம்மையார் முக்கியமானவர். ஆனால், அவரைப் பற்றி நாம் அதிகம் நினைவில் கொள்வதில்லை.

1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர்,  “சகோதர சகோதரிகளே” என்று தன் பேச்சைத் துவங்கி கூடியிருந்தோரின் கரகோஷத்தைப் பெற்றதை நேரில் கண்டார் அன்னி பெசன்ட்.

மனிதப் பிறவியின் நோக்கம், பிரபஞ்சத்தின் விந்தைகள், மதங்களின் நெறிகள் இவற்றுக்கானத் தேடலின் முடிவு இந்தியாவில் கிடைக்கும் என்ற உணர்வு உண்டாக, இந்தியாவின் தென்முனையான தூத்துக்குடி துறைமுகத்தில் வந்திறங்கினார்.

இளம்பருவத்தில் அன்னி பெசன்ட்டுக்கு ஏற்பட்டது போன்ற கஷ்டங்கள் வேறொருவருக்கு ஏற்பட்டிருந்தால் அவர் விரக்தியின் எல்லைக்கே சென்றிருப்பார்.

ஐந்து வயதில் தந்தை இறப்பு, சில வருடங்களில் சகோதரன் இறப்பு, அவருடைய தாயார் இரு குழந்தைகளை இன்னல்களைப் பொருள்படுத்தாமல் வளர்த்தது என்று அன்னியின் இளம் பிராயம் கஷ்ட ஜீவனத்தில் கழிந்தது. ஆனால்,  “மற்றவர்களுக்கு உதவுவதே வாழ்க்கையின் குறிக்கோள்” என்ற ஆழமான வைராக்கியத்தை அது அளித்தது.

வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்ற தேடலில் இருந்தவருக்கு, தான் சார்ந்திருந்த மதத்தின் இறுக்கமான கோட்பாடுகள் உறுத்தின. உண்மையைத் தேடும் உள்மனதிற்கு ஏற்புடையதாக இல்லை.

இந்நிலையில், பத்தொன்பது வயதிலேயே ப்ராங்க பெசன்ட் என்ற போதகருடன் திருமணம். புகுந்த இடத்தில் நிம்மதியில்லை. அடுத்தடுத்து பிறந்த இரு குழந்தைகளின் உடல்நிலை பாதிப்பு, அவர்களை குணப்படுத்த மாதக்கணக்கில் போராட்டம் என்று தொடர் கஷ்டங்கள்.

குடும்ப வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து, குழந்தைகள் மீது உரிமை பெற நீதிமன்றத்தில் வழக்கு, அன்புத் தாயாரின் மரணம் இவையெல்லாம் மதங்கள் மீது கொண்ட அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்தின.

1872-ஆம் வருடம் பிளாவட்ஸ்கி அம்மையாரின் பிரம்ம ஞான சபையில் அன்னி பெசன்ட் தன்னை இணைத்துக் கொண்டார். சோஷலிசக் கொள்கைகளில் அதிகப் பற்று கொண்டு ஃபேபியன் இயக்கத்தில் இணைந்து, அப்போதைய உயரிய சிந்தனையாளர்களான பெர்னாட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், வெல்ஸ், வெர்ஜீனியா உல்ப் போன்றவர்களோடு சிந்தனைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது.

மனிதப் பிறவி, மதம், அரசியல், சமுதாய ஏற்றத்தாழ்வு போன்ற உண்மைகள் அவரை மிகவும் பாதித்தன. மனிதப் பண்பு உயர பாடுபட வேண்டும், மனித நேயம் நிலைபெற உழைக்க வேண்டும் என்ற முடிவோடு பிரம்ம ஞான சபையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சீடராக விவேகானந்தர் அமைந்தது போல், பிளாவட்ஸ்கி அம்மையாருக்கு அன்னி பெசன்ட் அமைந்தார். பிரம்ம ஞான சபையின் கொள்கைகளை இந்தியாவின் பல இடங்களுக்கும் சென்று மக்களோடு பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் கலாசாரம் என்ற பொக்கிஷத்தை சுமந்துகொண்டு, ஆனால், அதைப்பற்றிய ஸ்மரணையின்றி அடிமைகளாக வாழும் இந்தியர்களைக் கண்டு மனம் வருந்தினார்.

பெண் கல்வியின் அவலநிலை கண்டு, பெண் கல்விக்காகப் பல முயற்சிகளை எடுத்தார். 1898-ஆம் ஆண்டு வாராணசியில் பெண்களுக்கான கல்விக் கூடத்தை நிறுவினார்.

காசியில் நிறுவப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை அடிப்படையாக வைத்து தர்பங்கா மஹாராஜா ராமேஸ்வர பிரதாப் சிங் தலைமையில் காசி இந்து பல்கலைக்கழகம் உருவானது. இந்து சமயத்தையும், இந்தியப் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வித் திட்டம், 1904-ஆம் ஆண்டு அவர் நிறுவிய பெண்கள் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அக்கல்வித் திட்டம் பல்கலைக்கழகத்தின் அடிப்படை சித்தாந்தமாக அமைந்தது. 1921-ஆம் வரும் காசி பல்கலைக்கழகம் பெசன்ட் அம்மையாரின் சேவையைப் பாராட்டி அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

அன்னி பெசன்ட் முற்றிலும் தன்னைச் சமுதாயப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். உண்மையாகவும், தைரியமாகவும் தனது கருத்துகளை எடுத்துக்கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அவரது கருத்துச் சுதந்திரத்தால் பல எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அறிஞர் சார்லஸ் பிராட்லோவுடன் சேர்ந்து திருமணம், கருத்தடை, ஜனத்தொகை அதிகரிப்பால் ஏழைகள் படும் இன்னல் இவை குறித்து பல கருத்துகளைத் துணிச்சலாகக் கூறினார். அக்கருத்துகள் பிற்போக்கான மதபோதகர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

நீதிமன்றத்தில் நாத்திகம் பரப்புவதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு அன்னிக்கு ஆறுமாத தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அதனால் சோர்ந்துவிடவில்லை அன்னி. மேல்முறையீட்டில் நிரபரதியாக வெளி வந்து, ஆண் – பெண் உறவு, விவாகம் பற்றிய தனது கருத்துகளை சிறு சிறு பிரசுரங்களாக வெளிட்டார். அவை லட்சக்கணக்கில் விற்பனையாயின. பல மொழிகளிலும் வெளிவந்தன.

அன்னி இந்தியாவிற்கு வந்தபோது இங்கிருந்த சமுதாயச் சூழலைக் கண்டு வருந்தி, இந்நிலையை மாற்ற விழைந்தார். 1912-ஆம் வருடம்  ‘மகன்கள் – மகள்கள்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, மகன், மகள் இருவரும் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற குறிக்கோளை வலியுத்தினார்.

இந்தியாவில் முதல் சட்டப்பேரவை உறுப்பினர் என்ற பெருமை கொண்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. ஒருமித்த கருத்து கொண்ட இரு சமூக சீர்திருத்தவாதிகளும் இணைந்தனர். பெண்களின் நிலையை உயர்த்தவும், பிற்போக்குப் பிணைப்புகளிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாதர் சங்கம் என்ற அமைப்பை 1913-இல் உருவாக்கினார்.

டாக்டர் முத்துலட்சுமியோடு அன்னி இணைந்து பெண்களுக்கு கல்வி, ஆண்களுக்கு இணையான உரிமை என பல முயற்சிகளை மேற்கொண்டார். ‘இந்தியாவே விழித்தெழு’ என்ற தனது கட்டுரைகளின் தொகுப்பினை 1913-ஆம் ஆண்டு வெளியிட்டு அதன் மூலம் விடுதலைக்கான விழிப்புணர்வை நாடெங்கும் ஏற்படுத்தினார்.

நாட்டின் இளைஞர்களை ஒன்றிணைக்க ஓர் அமைப்பு தேவை என்பதை உணர்ந்து, ‘இந்திய இளைஞர்கள் சங்க’த்தை (YMIA) 1914-ஆம் ஆண்டு துவங்கினார். உடற்பயிற்சிக் கூடம் நம் உடலை எவ்வாறு வலுவடையச் செய்யுமோ அதுபோல, சீரிய குடிமக்களை உருவாக்கும் மையமாக இச்சங்கம் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்தார். அந்த “இந்திய இளைஞர்கள் சங்கம்’ இப்போது நூற்றாண்டு சேவையை கொண்டாடுகிறது.

‘சுயாட்சிப் பேரியக்கம்’ என்ற விடுதலைப் போராட்டத்தை (HomeRule Movement) சென்னையில் துவக்கியதற்கு பேருதவியாக இருந்தவர் பாலகங்காதர திலகர். விடுதலை வீரர் தாதாபாய் நெüரோஜி தலைவராகச் செயல்பட்டார். அன்னி பெசன்ட் விதைத்த விடுதலை விருட்சம் வளர்ந்து அதன் விழுதுகள் நாடெங்கும் இறங்கின.

ராஜாஜி, சர் சி.பி. ராமசாமி, திரு.வி. கல்யாண சுந்தரனார், சுப்பிரமணிய ஐயர், இந்து பத்திரிகை கஸ்தூரி ரங்கன் போன்றோர் சென்னையிலும், மோதிலால் நேரு, சாப்ரூ, தாஸ் போன்றோர் அகில இந்திய அளவிலும் செயல்பட்டனர். பிரிட்டிஷ் அரசு 1917 ஜூன் மாதம் அன்னையை சிறையிலிட்டது. ஆனால், எதிர்ப்பு அதிகரிக்கவே அவரை விடுவித்தது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 1917-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவர் அன்னி பெசன்ட் அம்மையார்தான்.

1907-இல் அன்னி பிரம்ம ஞான சபையின் தலைவராகி மதங்களின் ஒற்றுமைக்காக பாடுபட்டார். உண்மை நெறி, நேர்மையான பாதை, மனித நேயம், சகோதரத்துவம் இவைதான் பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்.

இந்தியாவையும் இந்தியர்களையும் அன்னி வெகுவாக நேசித்தார். மகாத்மா காந்தி “அன்னி பெசன்ட்தான் இந்தியர்களை நீண்ட துயிலிலிருந்து தட்டி எழுப்பி சுதந்திர உணர்வை ஊட்டினார்” என்று பாராட்டியுள்ளார்.

தமிழறிஞர் திரு.வி.க. அம்மையாரால் வெகுவாக கவரப்பட்டார்.  “அம்மையாரின் கிளர்ச்சி என்னுள் கனன்று கொண்டிருந்த கனலை எழுநாவிட்டு எரியச் செய்தது; வெஸ்லி பள்ளிப் பணியை விட்டுவிடத் தூண்டியது; “தேசபக்தன்’ இதழுக்கு ஆசிரியனாக்கியது; தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்தது; மொத்தமாகச் சொல்ல வேண்டுமானால் என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் போக்கையே மாற்றி அமைத்த அன்னி பெசன்ட் எனக்கு அன்னை வசந்தை ஆனார்” என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார்.

இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி, சாஸ்திரி, ஜெயப்பிரகாஷ், படேல் போன்றோருடன் அன்னி பெசன்ட் அம்மையாரையும் மறவாமல் நினைவுகூர்வோம்.

இன்னொரு அன்னை வசந்தையோ, காந்தியோ, சாஸ்திரியோ, அம்பேத்கரோ, அன்னி பெசன்ட்டோ வரமாட்டார்கள்.

அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் உபாதைகள் முளைக்காமல் கண்காணித்தலே நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய சமூக சேவையாகும்.

.

குறிப்பு:

திரு.ஆர். நட்ராஜ் ஐபிஎஸ், தமிழக முன்னாள் காவல்துறை தலைவர் (டிஜிபி).

இக்கட்டுரை தினமணியில் வெளியானது.

Advertisements

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்

-ஆசிரியர் குழு

 

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

ஐரிஷ்  நாட்டில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபில், பாரதத்தையே  தாயகமாக   சுவீகரித்துக் கொண்டவர்.  உலகம் முழுவதும் திக்விஜயம் செய்து ஹிந்து தர்மத்தின் மேன்மையைப்  பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட மார்கரெட், அவரது பிரதம சிஷ்யையாகி சகோதரி நிவேதிதை என்று பெயர் பெற்றார்.

ஆன்மிகப் பணி மட்டுமல்லாது, நாட்டு விடுதலைக்காகவும் உழைத்தார் நிவேதிதை. ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீச சந்திர போஸ், மகரிஷி அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடனும் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். இவரது சந்திப்பால், மகாகவி பாரதி, பெண்மையின் உயர்வு குறித்து அதிகமான கருத்துக்களை எழுதினார். தனது  ஞான குரு என்று பாரதி  இவரை வரித்திருக்கிறார்.

எளிய மக்களின் கல்விக்காக கொல்கத்தாவில் பள்ளியை நடத்தியவர். ஜெகதீச சந்திர போஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக கெளரவம் பெறக் காரணமாக இருந்தவர். இந்தியர்களுக்கு தேசபக்தியைப் புரியவைக்கவே ஐரிஷ் நாட்டிருந்து (அதுவும் ஆங்கிலேயனால் அடிமைப்பட்ட நாடு தான்) வந்தவராக வாழ்நாள் முழுவதும் பாரத நலனுக்காக உழைத்தார்.

காண்க:  பெண் சிங்கம் சகோதரி நிவேதிதை

***

சகோதரி நிவேதிதைக்கு குருநாதர் சுவாமி விவேகானந்தரின் ஆசி:

அருள் வாழ்த்து

 தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்

ஆய தென்றலின் அற்புத இனிமையும்

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்

சீரிய எழிலும் திகழும் வலிமையும்

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்

உனதென ஆகி ஓங்குக மென்மேல்!

எதிர்காலத்தில் இந்திய மகனின்

சீர்சால் தலைவியாய்ச் செவிலியாய்த் தோழியாய்

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!

-சுவாமி விவேகானந்தர்.

ஆங்கில மூலம்: A Benediction

***

சகோதரி நிவேதிதையை சத்குருநாதராக வரித்துக் கொண்ட மகாகவி பாரதியின் கவிதை…

சகோதரி நிவேதிதை

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

-மகாகவி பாரதி

துவைதம் கண்ட மகான்

-ராஜேஸ்வரி ஜெயகுமார்

ஸ்ரீ மத்வாச்சார்யர்

 ஸ்ரீ மத்வர்

(மத்வ ஜெயந்தி:  விஜயதசமி,  புரட்டாசி)

இயந்திரமயமான இவ்வுலகில் மனிதர்களும் கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். பொருளைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். அதன் காரணமாக எங்கும் துன்பமயமாகவும்,  போராட்டமாகவும் வாழ்க்கைச் சூழல் அமைந்திருப்பதை உணராமல் இருக்கிறோம்.

பாரதநாடு உலகினுக்கு மனிதத்தை,  தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் பாரத நாட்டில் இருந்து கொண்டு எளிமையாக உணர வேண்டியதை, மேலைநாட்டு மோகத்தால், பணம் சம்பாதிக்கும் பேராசையால் உணராமல் இருக்கிறோம்.

நம் நாட்டில் எத்தனையோ மகான்கள் தோன்றி ஞானத்தேடலில் ஈடுபட்டு தத்துவ விளக்கங்களை அளித்துள்ளனர். அவர்களில் மூவர் மிகவும் முக்கியமானவர்கள். ஆதிசங்கரர் – அத்வைதம், ராமானுஜர் – விசிஷ்டாத்வைதம்,  மத்துவர் – துவைதம்.

பாரதநாட்டின் அரிய பொக்கிஷங்களாக விளங்குபவை வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவாகும். அவற்றுக்கான விளக்கங்களையும், தத்துவங்களையும் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்துவர் ஆகியோர் அளித்துள்ளனர்.

ஆச்சாரியர் மத்துவரின் காலம் பொது யுகத்துக்குப் பின்  (கி.பி) 1238 முதல் 1317. இவர் உடுப்பியிலிருந்து 8 மைல் தொலைவிலுள்ள ‘பாஜக’ எனும் மலைசூழ் சிற்றூரில், தந்தை மத்யகேஹ பட்டர்,  தாய் வேதவதிக்கும் மகனாக அவதரித்தார். இவருக்குக் கல்யாணி தேவி என்ற மூத்த சகோதரியும் ஒரு தம்பியும் உண்டு. இவருடைய தம்பி பின்னாளில் ஸ்ரீ மத்வரால் சந்யாச தீட்சை கொடுக்கப்பட்டு விஷ்ணு தீர்த்தராக மாற்றம் கண்டவர்.

தாய் தந்தையர் இவருக்கு வைத்த பெயர் ‘வாசுதேவன்’ என்பதாகும். சந்யாசம் கிடைத்தபோது வைத்த பெயர் பூர்ணப்நர். வேதாந்த ஸாம்ராஜ்ய பீடத்தில் குருவினால் அமர்த்தப்பட்டபோது பெற்ற பெயர் ‘ஆனந்த தீர்த்தர்’. இது தவிர, ‘மத்வ’ , தஸப்ரமதி’ போன்ற பெயர்களை வேத மந்திரங்களில் இவரைக் குறிக்கின்றன. ஸ்ரீமத் விஜயம் எனும் காவியத்தில் நாராயண பண்டிதர் இவரை நூற்றுக் கணக்கான பொருள் பொதிந்த பெயர்களால் கவிநயத்துடன் குறிப்பிடுகிறார்.

ஒரு சமயம் உடுப்பிக்கு அருகில்  கடலில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி ஆபத்துக்குள்ளானது. கடற்கரையில் நின்று கொண்டிருந்த மத்வர் தன் மேல் துணியைக் காற்றில் வீசிக் காட்டினார் கப்பல் ஆபத்திலிருந்து மீண்டு கரைவந்து சேர்ந்தது.

கப்பலின் தலைவர் அவரை வணங்கி நின்றார். தன்னிடமிருந்து ஒரு பரிசு பொருளை வாங்கி கொள்ளும்படி வற்புறுத்தினார். கப்பலின் அடித்தளத்தில் கோபி சந்தனத்தில் ஒரு பாறை இருப்பதாகவும், அது தனக்கு வேண்டும் என்றும் கூறினார் மத்வர். இவ்விதம் ஓர் அற்பமான கற்பாறையைக் கேட்கிறாரே என்று வியந்தவாறே கப்பல் தலைவர் அதை எடுத்துக் கொடுத்தார். அதனுள் தன் கையைவிட்டு சாலிக்கிராமத்தைத் தானே தூக்கிக் கொண்டுசென்றார். அதுதான் இன்றும் உடுப்பிக்   கோயிலில் மூலவிக்ரகமாக உள்ளது.

அவ்விக்ரகம் குறித்த அற்புதமான செய்தியையும் அவர் வெளியிட்டார். விசுவகர்மா என்ற தேவச்சிற்பியால் செய்யப்பட்டு, துவாரகையில் துவாபராயுகத்தில் ஸ்ரீ ருக்மணி தேவியால் பூஜிக்கப்பட்டு வந்த விக்கிரகம், துவாரகை மூழ்கியபோது அதுவும் மூழ்கிவிட்டது. அவ்விக்கிரகம் தான் மத்துவரால் வெளிக்கொண்டு வரப்பட்டது.

ஒரு நாள் மத்துவர் மீது வானிலிருந்து மலர்மாரி பொழிந்ததாம். மலர்க்  குவியலை விலக்கிப் பார்த்த போது அவரைக் காணவில்லை; மறைந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

“பிரபஞ்சம் என்பது ஒரு மாயத்தோற்றமல்ல. உண்மை. அந்த உண்மை உருவாவதற்கான கருத்தாகவும் விதிகளாகவும் உள்ளதே பிரபஞ்ச சாரமான பிரம்மம். அது எந்த வகையிலும் மானுடனின் தர்கத்தால் அறிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அப்படி ஒன்று உள்ளது என்பதற்கு இந்தப் பிரபஞ்சத்தின் செய்லமுறையே சான்றாகும்” – இதுவே மத்வரின் வாதம்.

 

குறிப்பு:

திருமதி ராஜேஸ்வரி ஜெயகுமார், சென்னையில் வசிக்கும் இல்லத்தரசி.

காண்க:  தேசமே தெய்வம் (பிளாகர்)

 

 

ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் அகல்விளக்கு

– தெ.ஞானசுந்தரம் 

மு.வரதராசன்

மு.வரதராசனார்

(பிறப்பு: 1912 ஏப். 25 ,  மறைவு: 1974 அக். 10)

சென்ற நூற்றாண்டில் எத்தனையோ பேராசிரியர்கள் பணிபுரிந்தார்கள்; ஓய்வு பெற்றார்கள்; மறைந்தார்கள். அவர்கள் அத்தனை பேரும் இன்று நினைவுகூரப்பட்டுப் போற்றப்படவில்லை. ஒரு சிலரே மறைந்தும் மறையாமல் வாழ்கிறார்கள். அவர்களில் சிலரை மாணவர்கள் மட்டும் நினைவுகூர்கிறார்கள்; மிகச் சிலரையே எல்லோரும் நினைந்து போற்றுகிறார்கள். அத்தகைய மிகச் சிலருள் ஒருவரே பேராசிரியர் மு.வ.

இருபதாம் நூற்றாண்டு கண்ட நிகரற்ற பேராசிரியர் டாக்டர் மு.வ. என்பது வரலாற்று உண்மை. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மு.வ. என்னும் இரண்டெழுத்து, தமிழ் மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே ஒலித்த இரண்டெழுத்து மந்திரம் ஆகும். வட ஆர்க்காடு மாவட்டத் திருப்பத்தூரில் பிறந்த மு.வ. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியைத் தொடங்கினார். தனியே படித்துப் புலவர் தேர்வில் மாநிலத்தில் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அவ்வூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகி, பின் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்து, சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியராகத் திகழ்ந்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒளிர்ந்து புகழின் உச்சியில் மறைந்தார். அவரது வாழ்வு எளிய குடும்பத்தில் பிறந்து ஆர்வத்தாலும் உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்து முன்னேற்றம் கண்ட பெருவாழ்வு நேரிய வாழ்வு.

ஆசிரியர்கள் மூன்று வகை. சிலர் மாணவர்களை பகைவர்களைப்போல் நினைப்பார்கள். இவர்கள் மாணவர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூடத் தாங்கிக்கொள்ளாமல் தண்டிப்பார்கள். சிலர், மாணவர்களைத் தங்களிடம் பாடம் கற்க வந்தவர்களாக மட்டும் கருதுவார்கள். இவர்கள் பாடத்தை மட்டும் கற்பித்து மாணவர்களைத் தேர்வுக்கு ஆயத்தம் செய்வார்கள். சிலர் மாணவர்களைத் தங்கள் மக்களாகக் கருதி, எல்லா வகையிலும் துணை நிற்பார்கள். இவர்களே மாணவர்களை வாழ்வாங்கு வாழத்தக்கவர்களாக உருவாக்குபவர்கள். இவற்றில் இறுதிவகையைச் சேர்ந்தவர் பெருந்தகை மு.வ.

அவர் மாணவர்களுக்குப் பாடம்சொல்லும் ஆசிரியராக மட்டுமன்றி ஆதரவு நல்கும் தந்தையாகவும் திகழ்ந்துள்ளார். அவர்கள் குடும்பச் சூழல்நிலையை அறிந்து அதற்கேற்ப அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்துள்ளார். மறைந்த பேராசிரியர் பொன். சௌரிராசன் போன்ற எளிய மாணவர்களைத் தம் வீட்டிலேயே தங்கச்செய்து உணவும் தந்து படிக்க வைத்துள்ளார். மறைந்த பேராசிரியர் ப. ராமன் போன்ற சிலருக்கு விடுதிக்கட்டணமும் வேறு சிலருக்குக் கல்லூரிக் கட்டணமும் கட்டி உதவி புரிந்துள்ளார். இவ்வுதவிகளை எல்லாம் அடுத்தவருக்குத் தெரியாமலே செய்துள்ளார். மாணவர்கள் நல்வாழ்வுக்காகப் பல்கலைக்கழகத்தோடு போராடியுள்ளார். அவர் ஆசிரியப் பணியைத் தாம் வாழ்வதற்கான பணியாக மட்டும் கருதாமல் மாணவர்களை வாழ்விக்கும் பணியாகக் கருதி அரும்பாடுபட்டுள்ளார்.

பெரும்பாலும் கல்லூரி முடிந்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே இருந்த தொடர்பு அறுந்து போய்விடுகிறது. அதன்பின்பு அவர்கள் யாரோ, இவர்கள் யாரோ. ஆனால் மு.வ. மாணவர்களோடு கொண்டிருந்த தொடர்பு கல்லூரிப் படிப்பு முடிந்த பின்பும் வளர்ந்து, வாழ்நாள் உறவாக நிலைபெற்றுள்ளது. அவர் பலருக்கு வேலை தேடும் முயற்சியில் உதவியுள்ளார்; வீடு கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவியுள்ளார்; பலரை நூல்கள் எழுதச் செய்து, அவற்றைப் பாடநூல்களாக வைத்து வருவாய்க்கு வழிசெய்துள்ளார். வாழ்க்கைச் சிக்கல்களுக்குக் கடிதங்கள் எழுதி வழிகாட்டியுள்ளார். அவர் அளவுக்குத் தம் மாணவர்களுக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர் மற்றொருவர் இல்லை என்றே சொல்லலாம்.

அவர் மாணவர்களை மதிப்போடு நடத்தியவர். தம் நாவல்கள் குறித்து மாணவர்கள் சிலரிடம் விவாதம் செய்துள்ளார். படிக்கக் கொடுத்துக் கருத்துக் கேட்டுள்ளார். தம் முதலணி மாணவர் ம.ரா.போ. குருசாமியின் கருத்தை ஏற்று, நாவலுக்கு வைத்திருந்த முருங்கைமரம் என்ற பெயரைச் ‘செந்தாமரை’ என்று மாற்றிக்கொண்டார். ஒரு சிறுகதைக்கு அவர் தெரிவித்த ‘விடுதலை’என்னும் தலைப்பையொட்டி  ‘விடுதலையா?’ என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், நான்கு நாவல்களுக்குத் தம் முதல்அணி மாணவர்கள் நால்வரையும் ஒவ்வொரு நாவலுக்கு அணிந்துரை எழுதச் சொல்லி அவர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.

மற்றப் பேராசிரியர்களெல்லாம் தமிழைப்பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் ஒரு படி மேலே சென்று தமிழர்களைப் பற்றியும் சிந்தித்தார். அதன் விளைவே அவர் எழுதிய நண்பர்க்கு, தம்பிக்கு, தங்கைக்கு, அன்னைக்கு ஆகிய கடித இலக்கியங்கள். தமிழர்கள் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது அவற்றின் உள்ளடக்கமாக அமைந்தது. இந்தச் சமுதாய அக்கறை அவரை ஏனைய தமிழாசிரியர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.

மாணவர்கள் மட்டுமன்றிப் பிறரும் அவர் அறிவுரைகளால் வாழ்ந்துள்ளார்கள். தங்கள் குடும்பச் சிக்கலைத் தெரிவித்து வழிகேட்டுக் கடிதம் எழுதியவர்கள் பலர். ஒருமுறை சூழ்நிலையால் வாழ்க்கையில் தவறிவிட்ட தன் மனைவியைக் கொன்றுவிடலாமா என்று தோன்றுவதாக ஒருவர் கடிதம் எழுதி அவருடைய அறிவுரையை நாடினாராம். அதற்கு மு.வ., அப் பெண்ணை மனைவியாக ஏற்க முடியாவிட்டாலும், இரக்கங்காட்டி வீட்டு வேலைக்காரி போலவாவது இருந்துவிட்டுப்போக அனுமதிக்கலாம் என்று பதில் எழுதினாராம். மு.வ.வின் எழுத்து வாழ்விக்கும் எழுத்து என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

அவருடைய தமிழ்ப்பணிகள் எல்லாம் காலத்திற்கு ஏற்பத் தமிழை வளர்க்கும் பணிகளாக அமைந்தன. திரு.வி.க.வால் எளிமைக் கோலம் பூண்ட தமிழ்நடையை எளிமையின் எல்லைக்குக் கொண்டுசென்றவர் மு.வ. எளிதில் புரியும் திருக்குறளுக்கு விளங்காத நடையில் உரைகண்டு பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உரையாசிரியர்கள் அதனை ஏற்றி வைத்திருந்தார்கள். அவர் குறளுக்கு எளிய உரைகண்டு கையடக்கப் பதிப்பாக வெளியிட்டு அதனை எளியவரும் கற்கும்படி ஆக்கினார். சராசரித் தமிழ் மக்களுக்குப் புரியாமல் இருந்த சங்கப்பாடல்களை விளக்கிப் புரியும் தமிழில் கட்டுரைகளாக வடித்து, விருந்து என்ற பெயரிலும், செல்வம் என்ற பெயரிலும் வழங்கினார். அவர் காலத்தில் வளர்நிலையில் இருந்த இலக்கியத் திறனாய்வுப் போக்கில் சிலப்பதிகாரம் குறித்து, இளங்கோவடிகள், கண்ணகி, மாதவி ஆகிய நூல்களை எழுதினார். இவை பண்டை இலக்கியங்களைப் பரப்புதற்கு மேற்கொண்ட ஆக்கப் பணிகள்.

இலக்கியத் திறனாய்வும் மொழியியலும் அவர் காலத்தில்தான் தமிழில் புதிய துறைகளாகத் தோற்றம் கொண்டன. அவற்றின் வளர்ச்சிக்காக. இலக்கியத் திறன், இலக்கிய மரபு, இலக்கிய ஆராய்ச்சி, எழுத்தின் கதை, மொழியின் கதை, மொழி வரலாறு, மொழிநூல், மொழியியற் கட்டுரைகள் முதலியவற்றை எழுதினார். இவை புதிய துறைகளில் தமிழ் வளர்வதற்கு ஆற்றிய அரும்பணிகள்.

இலக்கிய உலகில் மு.வ. பெற்ற தனிச் சிறப்புக்குக் காரணம் அவரது படைப்பிலக்கியத் திறனே. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர் மு.வ. அதன் பயனாக ஆங்கில இலக்கியப் போக்குகளைத் தமிழில் புகுத்தும் முயற்சியிலும் தலைப்பட்டார். நாவல், சிறுகதை, நாடகம் போன்ற இலக்கிய வகைகளில் தம் படைப்பாற்றலைச் செலுத்தினார். சிறுகதையில் பெரிய வெற்றியைப் பெறமுடியவில்லை. நாடகத்தில் ஓரளவே வெற்றி கண்டார். ஆனால், நாவல் இலக்கியத்தில் தனித்தடம் பதித்தார்.

அவரைத் தமிழ் வகுப்பறைகளிலிருந்து தமிழர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவை அவருடைய நாவல்களே. பொதுவாக ஆசிரியர் கூற்றாகவே நாவல்கள் அமையும். ஆங்கில நாவல்களில் பாத்திரங்களே கதை சொல்லுவதாக அமைந்திருப்பது கண்ட மு.வ., “கள்ளோ காவியமோ’ என்னும் நாவலை மங்கையும் அருளப்பரும் மாறி மாறிச் சொல்வதாகப் படைத்தார். கதைத் தலைவனின் நண்பன் வேலய்யன் கதையைச் சொல்வதாக அகல்விளக்கினைப் படைத்தார். ஆசிரியர் கூற்றாகக் “கயமை’ நாவலை அமைத்தார். கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடா மலர், அல்லி, கயமை, கரித்துண்டு முதலிய நாவல்களைப் படிக்காத தமிழ் மாணவர்களோ, சுவைஞர்களோ சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் இல்லை என்றே சொல்லலாம். அந்த நாளில் இந்த நாவல்களைப் பலர் திருமணங்களில் பரிசாக வழங்கி வந்தனர்.

சிலர் சொல்வதுபோல் அவருடைய படைப்புகள் நாவல் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தாமல் இருக்கலாம். ஆனால் அவை நன்னெறி காட்டி இளைஞர்களைத் திருத்துவன; சமுதாயச் சிக்கல்களுக்குத் தீர்வுகாட்டுவன.

இல்லறத்தைத் தொடங்கும் காதலர்கள் பிறர் என்ன கருதுவார்களோ என்று எண்ணாமல், ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்தல் வேண்டும், இல்லையென்றால் பிரிந்து தொல்லைப்பட நேரிடும் என்னும் அறிவுரையை வழங்குவது கள்ளோ காவியமோ.

உணர்ச்சிக்கு முதன்மை தாராமல் அறிவு வழி வாழ்ந்தால் வாழ்க்கை முற்றும் துளசியைப்போல் மணமுடையதாக அமையும், உணர்ச்சி வயப்பட்டு வாழ்ந்தால் ஒருபகுதி அழகாக அமைய, ஏனைய பகுதிகள் வெறுக்கத்தக்கனவாய் அரளிச் செடிபோல் ஆகிவிடும் என்று இளைஞர்களுக்கு எச்சரிக்கையூட்டுவது அகல்விளக்கு.

முறையற்ற வேகம் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் என்னும் உண்மையை உணர்த்துவது வாடாமலர். ஒருவனோடு வாழும்போது மற்றொருவனை எண்ணாமல் அவனுக்கு நேர்மையாக நடந்துகொண்டால் அதுவே  ‘கற்பு’ என்று வாழ்க்கையை இழந்தவர்களுக்கும் வாழ வழி காட்டுவது கரித்துண்டு.

அவர் நாவல்கள் பொழுதுபோக்கு நாவல்கள் மட்டுமல்ல பழுதுபார்க்கும் நாவல்கள். அவர் கலை கலைக்காகவே என்று கருதாமல் கலை வாழ்க்கைக்காகவே என்னும் கருத்தில் வேரூன்றி நின்றவர். அவர் எழுத்துகளில் உருவான அல்லி, மங்கை, பாவை, தேன்மொழி, வளவன், எழில், நம்பி போன்ற பெயர்களை அன்றைய பெற்றோர் பலர் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்ததே அவர் நாவல்கள் பெற்ற வெற்றிக்குச் சான்றாகும்.

அவர் நாவல்களின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சி ஒன்று. மு.வ., மயிலை மாணிக்கஞ்செட்டியார், அவர் மைந்தர் மா. சம்பந்தம் போன்றவர்களோடு வடநாட்டுச் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது காஷ்மீரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவரும் மா. சம்பந்தமும் அறியாமல் ராணுவப் பாதுகாப்பு எல்லைக்குள் சென்றுவிட்டனர். உடனே காவலர்கள் இருவரையும் ராணுவ அதிகாரி முன்பு அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.

தமிழரான ராணுவ அதிகாரி பெயரைக் கேட்டுள்ளார். மு.வரதராசன் என்று தெரிவித்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்து,  “நாவல்கள் எழுதும் மு.வ.வா?” என்றவாறு வணங்கினாராம். பின்னர் சிற்றுண்டி அளித்து வண்டியில் ஏற்றி அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பிவைத்தாராம். அவர் எழுத்து அவரைக் காத்ததோடு சில நாள்களாய்த் தமிழ்நாட்டு இட்லியைக் காணாமல் இளைத்துப் போயிருந்த வாய்க்கு இனிய உணவையும் ஈட்டித் தந்துவிட்டது.

வள்ளுவமும் காந்தியமும் அவர் கைக்கொண்ட நெறிகள். அவர் பகவத்கீதையை தூற்றாமலே திருக்குறளைப் போற்றியவர். அவர் திருக்குறளை நடத்தியவர் மட்டுமல்லர், அதன்வழி நடந்தவர். அவரைக் குறை சொன்னவர்கள் உண்டு. அவர் யாரைப் பற்றியும் குறை சொன்னதே இல்லை. மாணிக்கவாசகரிடத்தும் தாயுமானவரிடத்தும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளிய பாடல்களைப் பலகால் ஓதி ஓதி உள்ளத்தைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர். ஆனால், திருத்தலங்களுக்குச் செல்வதிலோ, சமயச் சின்னங்களை அணிந்துகொள்வதிலோ விருப்பம் இல்லாதவர். தேசியத்தை மறவாத தமிழ்ப்பற்றும், இறைப்பற்றை இகழாத சீர்திருத்தமும், பிறர் மனதைக் காயப்படுத்தாத எழுத்தாற்றலும் அவருடைய சிறப்பு இயல்புகள்.

தம் புகழ்கேட்க நாணிய சான்றோர் அவர். முனைவர் பட்டம் பெற்றபோது, திருப்பத்தூரில் பாராட்டு விழா எடுக்க முயன்றனர். தாம் அப் பட்டம் பெற்றது  “நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குப் போவது போன்ற ஒரு செயல்தான்” என்று தெரிவித்து அதனைத் தவிர்த்தார். தமிழக அரசு இயல்தமிழ் விருது வழங்கியபோது அவரிடம் மாணவர்கள் கூட்டமாகச் சென்று பாராட்டு விழா எடுக்க இசைவு கேட்க,  “இத்தனை பேர் வந்து பாராட்டியதே போதும், காலத்தை வீணாக்க வேண்டா” என்று கூறி மறுத்துவிட்டார். அவ்வாறே மணிவிழா எடுக்க மாணவர்கள் முயன்றபோதும் கண்டிப்போடு கடிதம் எழுதித் தடுத்துவிட்டார்.

அவர் தூய வாழ்வு வாழ்ந்த கொள்கைவாதி. வாழ்நாள் முழுவதும் வெந்நீர் பருகாதவர். ரஷியா சென்றிருந்தபோது குளிர் தாங்காமல் வாடினார். அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்தவர்கள் குளிரைத் தாங்க மது அருந்துமாறு வற்புறுத்தினார்கள். மறுத்துவிட்டார். தேநீர் அருந்துமாறு வேண்டினார்கள். வேண்டா என்று ஒதுக்கிவிட்டார். வெந்நீராவது பருகுங்கள் என்றார்கள். தாம் வெந்நீர் அருந்துவதில்லை என்று தம் கொள்கையைத் தெரிவித்தார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தபோது,  “எனக்கு உதவுவதாயின், இன்னும் ஒரு போர்வை கொடுங்கள்”  என்று கூறிப் பெற்று அதனைப் போர்த்திக்கொண்டு உறங்கினார். இந்தக் கொள்கை உறுதியோடு அவர் தம் வாழ்க்கை முடிவினை எதிர்கொண்டார்.

அவர் இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால் தம் பிள்ளைகள் மூவரும் ஆங்கில மருத்துவம் பயின்றிருந்தும் அவர் அதனை ஏற்க மறுத்தார். அவர் அதனை ஏற்றிருந்தால் ஒருவேளை இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்பது பலரது கருத்து.

அவர் கால்கள் எந்த அரசியல் தலைவர் வீட்டையும் நோக்கி நடந்ததில்லை. ஆனால், அவரை நாடி அவர் வீட்டுக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் வந்தார்கள். அவர் பெரும்பதவிகளை நாடிச் செல்லவில்லை. பதவிகளே அவரை நாடி வந்தன. அவர் இறுதிச் சடங்கில் காமராஜர், அன்பழகன், எம்.ஜி.ஆர். போன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர் என்பதே அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அறிஞர் என்பதனைக் காட்டும்.

வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் புகழையும் கொண்டாட்டத்தையும் வேண்டாத அவரை நாடிப் புகழ் குவிந்தது. உலகம் நூற்றாண்டு விழாக் கொண்டாடி அவரை நினைவுகூர்கிறது. ராமன் சொல்லையும் மீறி அவனுக்குத் தொண்டு செய்த இலக்குவன் செயல் அவன் அண்ணன்மீது கொண்ட அளவற்ற அன்பினைக் காட்டுவதுபோல், மு.வ.வின் கருத்துக்கு மாறாக எடுக்கப்படும் இந்த விழாக்கள் தங்கள் ஆசிரியர்மீது மாணவர்கள் கொண்ட அளவற்ற அன்பினை வெளிப்படுத்துகின்றன.

அகல் விளக்கு எழுதிய மு.வ.வும் ஓர் அகல்விளக்கே. அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக உழைப்பே திரியாக ஒளி தந்த விளக்கு அது. அதன் ஒளி எங்கும் பரவட்டும்.
.

குறிப்பு:

பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர்.

தினமணியில் வெளியான மு.வ. நூற்றாண்டுக் கட்டுரை இது.

காண்க: தமிழ் வளர்த்த பேராசிரியர்

கானக்குயில் கே.பி.சுந்தராம்பாள்

-தஞ்சை வெ.கோபாலன்

 

கே.பி.சுந்தராம்பாள்

கே.பி.சுந்தராம்பாள்

(பிறப்பு: 1908, அக். 11, –  மறைவு: 1980,  செப். 19)

 

அந்தக்கால நாடகமேடை சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்த கானக்குயில், அவர் மறைவுக்குப் பிறகு பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்தியிருந்து ஜெமினி ஒளவையார் படத்தின் மூலம் வெளிவந்த இந்த இசையரசி, ஒரு சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்த விடுதலைப் போராட்ட வீராங்கனையைப் பற்றி இந்தக் கட்டுரையில் சிறிது பார்ப்போம்.

காவிரி வளம் விரிக்கும் கொடுமுடி (ஈரோடு மாவட்டம்) எனும் சிற்றூரில் பிறந்தவர் கே.பி.எஸ். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தாய்மாமனான மலைக்கொழுந்து என்பவரின் ஆதரவில் வளர்ந்தார். சின்னஞ்சிறு சிறுமியாக இருந்தபோதே தன் வயதொத்த சிறுவர் சிறுமியரோடு விளையாடப் போகுங்கால் இவர் பாடும் பாட்டுக்களைக் அனைவரும் விரும்பிக் கேட்டுப் பாராட்டுவராம்.

இவர் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்தபோது பாடிய பாடலொன்று, அதே ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த வேலு நாயர் எனும் நாடகக் கம்பெனி முதலாளியின் மனதைத் தொட்டது. உடனே மலைக்கொழுந்துவிடம் பேசி, கே.பி.எஸ். ஐ கும்பகோணத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த வேலு நாயரின் நாடகக் குழுவில் குழந்தை நட்சத்திரமாகச் சேர்த்துக் கொண்டார்.

அங்கு நாடகங்களில் நடித்தும் பாடியும் வந்த இவருடைய புகழ் நாலா திசைகளிலும் பரவியது. இவரது ஏழ்மை நிழல் விலகி வளமையின் ஒளி இவர் மீது படிந்தது. ஊருக்கு வெளியே ஏழ்மைக் குடிலில் வாழ்ந்த இவர், கொடுமுடியின் நடுநாயகமாக ஒரு வீட்டை வாங்கிக் குடியேறினார்.

இவரது பாட்டுக்களும், குரல் வளமும், மைக் வசதி இல்லாத அந்தக் காலத்தில் கூட்டத்தினர் அனைவரும் கேட்கும் வண்ணம் இவர் பாடும் திறமையும் தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்காங்கே இவரது நாடகங்களைப் பார்க்கவும், இவரது பாடல்களைக் கேட்கவும் மக்களிடையே ஆர்வம் ஏற்பட்டது.

சினிமாவின் தாக்கம் ஏற்படாத அந்தக் காலத்தில் தென் மாவட்டங்களிலும், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் இவரது நாடகங்களுக்கு அதிக வரவேற்பும் பாராட்டுக்களும் கிடைத்தன. இவர் நடித்துப் பாடிய ஸ்ரீ வள்ளி, நந்தனார் போன்ற நாடகங்கள் பல நாட்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றன.

அதே காலகட்டத்தில் நாடகங்களில் உச்ச ஸ்தாயியில் பாடி மக்களைக் கவர்ந்த எஸ்.ஜி.கிட்டப்பா,  தன்னைப் போலவே பாடி நாடக உலகின் முடிசூடா அரசியாக விளங்கிவந்த கே.பி.எஸ்.ஐப் பற்றிக் கேள்விப்பட்டார். இவர் திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையைச் சேர்ந்தவர். அன்றைய நாடக உலகின் சக்கரவர்த்தி இவர்தான். கிட்டப்பா, செல்லப்பா போன்றவர்கள் அன்றைய நாடக உலகில் பெயர் பெற்று விளங்கினார்கள்.

இந்த இரு நாடக உலகின் சிகரங்கள் 1924-இல் திருமண உறவின் மூலம் ஒன்று கலந்தன. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்த பிறந்து, அது இறந்து போயிற்று.

திருமணமாகி எட்டு ஆண்டுகளில் எஸ்.ஜி.கிட்டப்பாவும் இறந்து போனார். கானக்குயில் தனது 24-ஆம் வயதில் விதவையானார். எனினும் அன்று தொடங்கி தான் காலமான 72-ஆம் வயது வரை சுமார் ஐம்பது ஆண்டுகள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு நாட்டுக்கு உழைத்து வந்தார்.

இவருடைய நாடகங்கள் வெரும் புராணக் கதைகளாக இருந்தபோதும், அதன் ஊடே வரும் தேசியக் கருத்துக்கள் பார்ப்போர் மனதில் விடுதலை உணர்ச்சியைத் தட்டி எழுப்புவதாக இருந்தன.

அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் தீரர் சத்தியமூர்த்தி, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் கொடுமுடி சென்று கே.பி.எஸ்.ஐ சந்தித்து கூட்டங்களுக்கு அழைத்திருக்கிறார்கள். 1937-இல் நடந்த தேர்தலில் இங்கு பலம் பொருந்தியிருந்த நீதிக் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டது. அப்போது கொடுமுடியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீரர் சத்தியமூர்த்தி பேசுவதற்கு முன், கே.பி.எஸ். தன் வெண்கலக் குரலில்  “ஓட்டுடையார் எல்லாம் கேட்டிடுங்கள்” என்று பாடத் தொடங்கியது தான் தாமதம், கூட்டம் தாங்கமுடியாத அளவுக்குச் சேர்ந்து விட்டது.

“சிறைச்சாலை என்ன செய்யும்?” எனும் இவரது பாடலும்,   “காந்தியோ பரம ஏழை சந்நியாசி” எனும் பாடலும் மிகப் பிரசித்தம். தீரர் சத்தியமூர்த்தி சென்னையில் தேர்தலில் நின்று வெற்றிபெற கே.பி.எஸ்.சின் பாடல்கள் தான் துணை நின்றன.

கணவர் இறந்த பிறகு பாடுவதை நிறுத்தியிருந்த கே.பி.எஸ். மகாத்மா காந்தி அவருடைய வீடு தேடிச் சென்று கேட்டுக் கொண்ட பிறகு, மீண்டும் பாடி தேச சேவையில் ஈடுபட்டார். இவரை   ‘கொடுமுடி கோகிலம்’ என்று வர்ணித்து தனது  ‘திராவிட நாடு’ பத்திரிகையில் புகழ்ந்து எழுதினார் அறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் காமராஜ் காலத்தில் கே.பி.எஸ். சென்னை சட்ட மேல்சபை உறுப்பினராக ஆறு ஆண்டு காலம் இருந்தார். இந்த  ‘இசைப் பேரரசி’ மறைந்து போனாலும், இவர் விட்டுச் சென்ற இவரது பாடல்களும், இவர் ஊட்டி வளர்த்த தேசிய உணர்வுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

வாழ்க கே.பி.எஸ்.புகழ்!

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன்,  திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தி வருபவர்; 4 நூல்களை எழுதி இருக்கிறார்.  ஆன்மிக, கலாசார இயக்கங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர்.

நன்றி: சுதந்திரப் போராட்ட தியாகிகள்

காண்க: நாடக மேடையில் ஒலித்த விடுதலைக்குரல்

%d bloggers like this: