Blog Archives

மொகலாயர்களை தண்டித்தவன்

-ம.பூமாகுமாரி

 

Shivaji

சத்ரபதி சிவாஜி

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630,  பிப்  19  – மறைவு: 1680, ஏப். 3)

சத்ரபதி சிவாஜி ராஜே போஸ்லே – பாரதத்தாயின் வீரமகன் – 1674-இல் வடக்கு திசையில் ஒரு மஹா இந்து சாம்ராஜ்யத்தை, மாரத்திய பேரரசை நிறுவியவன்.

பலம்:  வல்லமை படைத்த காலாட்படையும், கப்பல் படையும் சிவாஜியின் வசம் இருந்தன. கோட்டைகள் நிர்மானிப்பதும், கொத்தளங்களை சீரமைப்பதும் அவனின் பொழுதுபோக்கு. கொரில்லா யுத்த முறையைக் கையாள தேர்ச்சி பெற்ற போர்வீரன். யுத்த தந்திரம் என்பது அவனது அடிப்படை வியூகம். மிகச் சிறந்த புலனாய்வுக் குழுமம் இருந்தது மராத்திய பேரரசிடம். எந்த ஜாதி, எந்த மதத்தவனானாலும் சரி, திறமை இருந்தால் முன்னுக்கு வர முடியும், சிவாஜியின் ஆட்சியில். ஒரு தேர்ந்த ராஜ தந்திரி மட்டுமல்ல, நிபுணத்துவமான ஆட்சியை செலுத்திய ஸ்டேட்ஸ்மேன் எனத் தெரிய வருகிறது. ஒரு மாபெரும் இராணுவப் படைத் தலைவனாகவும் தேர்ந்த ஆட்சியாளனாகவும் இருப்பது அரிதல்லவா?

சர்வ வல்லமை பொருந்திய மஹாராஜா, பொதுமக்களை துன்புறுத்த அந்தப் பதவியைப் பிரயோகிக்கவில்லை, பெரும் புகழ் சூட்டப்பட்ட போதும் தன் தலைக்கு அதை ஏற்றி ஆணவம் கொள்ளாத மாமனிதன். சம காலத்தில் அதிக படைபலம் கொண்ட அந்நியர்களை எதிர்த்து நின்று, சூழ்ச்சியாலும், மதி நுட்பத்தாலும், வீர தீரச் செயல்களாலும் படைகளை வழி நடத்திச் சென்று வெற்றி வாகை சூடிய மாமன்னன் அவன்.

சிறுவனாக: சிறுவன் சிவாஜியின் வாழ்வில் தாய் ஜீஜிபாயின் பங்களிப்பு ஏராளம் ஏராளம். மல்ஹர் ராம்ராவ் சிட்னியில் என்பவர் ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜன்சே சப்தப்ரகாரணத்மகீ’ என்ற புத்தகத்தில் இப்படி எழுதுகிறார்:

“தான் முகலாயர்களுடன் போர் புரியப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அவனுக்கு. அந்நியர்களால் படை எடுத்து வெற்றி கொள்ளப்பட்டு அவர்கள் ஆட்சி புரிய நமது மதம், அடையாளம் ஆகியவற்றை இழந்து நிற்கிறோம் நாம். நம் உயிரையும் ஈந்து இந்நிலையை மாற்றுவோம் எனச் சூளுரைத்தது மட்டுமல்லாமல், ராஜேஸ்வரியின் முன்பு வெற்றி கொள்வேன் என ஆணையிட்டு, ‘தோரணா’ கோட்டையைத் தனதாக்கிக் கொண்டான் சிவாஜி மஹராஜ்”.

கோட்டைகள்: ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். நமது சக்கரவர்த்தி சிவாஜியின் ஸ்டைல் இதுதான். புதிது புதிதாக கோட்டைகள் கட்டி, எதிரிகளை நடுங்க வைப்பது. வருகட், பூஷண்கட், மஹிமாகட், வர்தன்கட், சதாசிவகட், மச்சிந்திரகட் என எத்தனை எத்தனை கோட்டைகள்! ஆக்ரா சிறையில் இருந்து சிவாஜி மஹாராஜா தப்பிப்பாரா? அல்லது உயிர் துறப்பாரா எனத் தெரியாமல் தவித்த வேளையிலும், மாவலர்கள் அதற்காக பயந்து மொகலாயர்களைக் கண்டு நடுங்கி விடவில்லை. தங்கள் மஹாராஜா வரும் வரை நாட்டை பத்திரமாக ஆட்சி செய்து வந்தனர்.

ஆனால் எந்த சுப காரியங்களும் நடத்தவில்லை. தாங்களே உயிர் துறக்கவும் நாட்டு மக்கள் தயாராக இருந்தனர். நீதி, நேர்மை எந்தப் பக்கம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உணர்ந்திருந்தனரே? எனவே தான் தங்கள் கணவனமார்கள் வீட்டோடு பத்திரமாகத் தங்கிவிட வேண்டும் என விரும்பவில்லை மஹாராஷ்டிரத்து வீர மகளிர். நீதியின் பெயராலே அந்தப் போர் நடத்தப்பட்டபடியால் தான், மராத்திய தாய் வீரப் பெண்மணியாய் தன் மகன்களை சந்தோஷமாக போர்க்களம் அனுப்பி வைத்தனர். நாம் மொகலாயரை எதிர்த்து ஏன் போர் புரிகிறோம் என்பதை முழுதும் உணர்ந்திருந்தனர் அந்த வீரப் பெண்டிர்.

ஒரு காலத்தில் நிலப் பிரபுத்துவ அமைப்பில், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு வருவாய் வசூலிக்கும் கூலிப்படையினர் போன்று செயல்பட்டு வந்த மராத்தியர்கள், தங்கள் அபிமானத்தை மொகலாய மன்னர்களிடையே மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு, துயரமான அடையாளமற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

ஷாஜி போஸ்லே (வீர சிவாஜியின் தகப்பனார்) இப்படி பீஜபூரின் அடில்ஷாக்களுக்கும், பேரார், அஹமத்நகர் நிஜாம்ஷாக்களுக்கும் மாறி மாறி பணி செய்து வந்தார். தங்களுக்கென, சுதந்திரமான மராத்தா – ஹிந்து ராஜ்யத்தை நிறுவும் நினைப்பு முளை விட்டாலும், அது அவர் காலத்தில் உருப்பெறவில்லை. மகன் வீர சிவாஜியின் வாழ்வில் கூடியது. அந்த நினைப்பை ஆளப் பதிய வைத்தவர் ஜீஜாபாய் தான். தேவகிரியின் ராஜவம்சத்துப் பெண் அல்லவா அவர்?

வெறும் 17 வயதுச் சிறுவனாய் சிவாஜியும் அவன் தோழர்களும் ஜீஜாபாய் மற்றும் குரு தாதாஜி கொண்டதேவின் தூண்டுதலால், மொகலாய கொடூர ஆட்சியின் தளைகளை உடைத்தெறிவோம் என சூளுரைத்தனர். வென்று காட்டினார் என்பது வரலாறு.

இளைஞர் சக்தியை சமானியமாக எடை போட்டுவிட முடியாது என்பதற்கு வீரன் சிவாஜி உதாரணம்.

 

காண்க:  ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

Advertisements

விண்ணில் மின்னும் வீராங்கனை

-ம.பூமாகுமாரி

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

(பிறப்பு: 1961 ஜூலை 1- மறைவு: 2003, பிப்ரவரி 1)

இந்திய வம்சாவளியில் வந்த ஒரு பெண், விண்ணை அளந்தவள் என்ற பெருமைக்கு உரியவராகிறார் என்றால் நம் சமூகத்திற்கு, குறிப்பாக இந்திய பெண்களுக்கு எத்தனை பெருமை, எத்தனை உத்வேகம்? அவர் தான் கல்பனா சாவ்லா.

அவர் ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்.  1961 , ஜூலை 1-இல் அவர் பிறந்தது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், கர்னல் எனும் ஊரில்.  படித்தது தாகூர் பள்ளி,  கர்னல்.  1976-இல்  அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்தார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ‘ஏரோனாடிகல் இஞ்சினீயரிங்’ துறையில் படித்தார். முதுகலை படிப்பிற்காக 1982-இல் அமெரிக்கா பறந்தார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் ‘ஏரோஸ்பேஸ் இஞ்சினீயரிங்’கில் முதுகலைப் பட்டம்  (1984) பெற்றார். பிறகு,  அதே பாடத்தில் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் 1988 வரை முனைவர் பட்டத்திற்காக உழைத்தார்.

 1983 -ஆம் ஆண்டு ஜீன் பியரி ஹாரிஸன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்து அமெரிக்க குடிமகளானார்.

நாசா அனுபவம்:

யாருக்கும் எளிதில் கிடைக்காத ஒன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் (NASA) பணி புரியும் வாய்ப்பு. அநத வாய்ப்பு கல்பனாவுக்குக் கிடைத்தது. முனைவர் பட்டம் வரை அதற்காகத் தன்னைத் தகுதி உடையவராக ஆக்கிக்கொள்ள கடுமையான உழைப்பும், சோர்வின்மையும், மிகக் கவனமாக செயல்படுதலும், உற்சாகமும், குன்றாத நம்பிக்கையும் அவரிடத்தில் ஏராளமமாக இருந்தன.

அந்நிய நாட்டில் சென்றால் முதலில்  தன்னை நிரூபிக்க, நிலைநிறுத்தவே வெகுவாக கஷ்டப்பட நேரிடும். கடுமையான போட்டி இருக்கும் சூழல் வேறு. அந்த நாட்டைச் சேர்ந்த அமெரிக்கர்கள் மட்டுமல்லாது, வேறு பல ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் பிற நாடுகள் என்று எங்கிருந்து எல்லாமோ இளம் மாணவ மாணவிகள் தங்களை நிரூபிக்க, தங்கள் பலத்தை சோதிக்க, முன்வரும் பூமி அது. அதில் வெற்றி என்பது அத்தனை எளிதானது அல்ல. அயராத உழைப்பு, தன் முனைப்பு, வேலையில் முழு சரணாகதி இவை கல்பனா சாவ்லாவிடம் அமைந்திருந்தது வியப்பாக உள்ளது.

1994 டிசம்பரில் நாசாவில் பணி புரிய கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏவுதள ஆராய்ச்சி மையத்தில், ‘கம்ப்யூடேஷனல் ஃபுளூயிட் டைனமிக்ஸ்’ல் தான் அவருக்கு முதல் பணி. ஏவுகணைகள் சந்திக்கும் சிக்கலான காற்றுவெளி, காற்றோட்டம் இதை உருவகப்படுத்தி சோதனை செய்யும் பெரிய பொறுப்பு இளம் வயதில் கல்பனாவுக்கு கிடைத்தது. அதை முடித்தவுடன்,  அடுத்த பணி,   இயக்கப்படும் லிஃப்ட் கணிப்புகள் சம்பந்தமானது.

1993-இல்  ‘ஓவர்செட் மெத்தட்ஸ்’ என்ற நிறுவனத்தில் கலிஃபோர்னியாவில் பணியைத் தொடங்கினார், ‘ஏரோ டைனமிக்ஸ் ஆப்டிமைசேஷன்’ என்பது தான் அவரின் அத்தனை சோதனைகளையும் இணைக்கும் அடிநாதம். இந்தச் சோதனைகள் எல்லாம் தொழில்நுட்ப மாநாட்டில் ஆவணங்களாக, சஞ்சிகைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

நாசா- ஓர் அறிமுகம்:

இவ்வளவு எல்லாம் கல்பனாவைப் பற்றித்தெரிந்து கொள்ளும்போது,  NASA வைப் பற்றியும் சில அரிய தகவல்கள் இதோ:

1. (அமெரிக்க) தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பே நாசா எனப்படுகிறது.

2. பொதுமக்களின் விண்வெளி திட்டம், விண் பயணம் பற்றிய அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான பொறுப்பு நாசாவினுடையதே.

3. அப்போலோ சந்திரனில் மனிதன் கால் பதித்தது, ஸ்கை லேப், விண்கலம் ஆகியவை நாசாவின்  உழைப்பே.

4. சர்வதேச விண்வெளி ஸ்டேஷனுக்கு நாசா தான் ஆதாரமாக உள்ளது.

5. விண்வெளியைப் புரிந்துகொள்ள, அதன் ரகசியங்களை மனிதன் உணர்ந்துகொள்ள, நாசா பெரும்பங்கு ஆற்றுகிறது.

6. பூமியைப் பற்றி மேலும் தகவல்கள் அறியவும் நாசாவின் விண்கலங்கள் அனுதினமும் விண்வெளியில் சுற்றி வருகின்றன.

7. அக்டோபர் 1, 1958-இல் நாசா தனது பணியைத் துவங்கியது.  8,000 பணியாளர்களையும், வருடத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டு இயங்க ஆரம்பித்தது.

8. Langley Aeronautical Laboratory, Ames Aeronautical Laboratory மற்றும் Lewin Flight Propulsion Laboratory ஆகிய மூன்று மிகப் பெரிய சோதனைக் கழகங்கள் நாசாவுக்கு பெருமை சேர்க்கின்றன.

9. அப்போலோ தொடங்கி ஸ்பேஸ் ஷட்டில், ஸ்பேஸ் ஸ்டேஷன், என வியக்க வைக்கும் அனி வகுப்பு- நாசாவினுடையது.

10. ஜான் கு.கென்னடி ஸ்பேஸ் சென்டர், நாசாவின் வசதிகளில் ஒன்று.

கல்பனாவும் நாசாவும்:

1994  டிசம்பரில் கல்பனா ஜான்சன் விண்வெளி மையத்தில் ஒரு விண்வெளி வீரராகப் பதிவு செய்தார். ஒரு வருடம் பயிற்சி, தேர்வுக்குப்பின், ரோபாடிக்ஸ், கணினிப் பிரிவுகளில் பணி புரிய ஆரம்பித்தார். 1998 ஜனவரியில்  ‘க்ரூ ரெப்ரசென்டேடிவ்’ (விண்கலக் குழு) ஆக, விண்கலத்தில் பணி செய்ய பணிக்கப்பட்டார்.

1997-இல் STS -87,  2003-இல் STS -107 ஆகியவற்றில் 30 நாட்கள், 15 மணி நேரம் விண்ணில் பறந்தார்.

STS -87 (ஸ்பேஸ் ஷட்டில்)  4-வது அமெரிக்க மைக்ரோ கிராவிட்டி பே லோடு ஃபிளைட். ஆதில் தான் சோதனைகள் மேற்கொண்டார் கல்பனா. விண்வெளியில் பாரமற்ற சூழல் நிலவுகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகள் இச் சூழலில் எங்ஙனம் உள்ளது என்பது அவர் சோதனைக்கு எடுத்துக் கொண்டதில் நமக்குப் புரிகிற பாகம். சூரியனின் வளி மண்டல அடுக்குகள் இந்த பாரமற்ற சூழலில் என்ன பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றும் கவனித்தார்.

STS -87, 252 தடவை பூமியைச் சுற்றியது. 6.5 மில்லியன் மைல்கள் 376 மணி நேரம் 34 நிமிஷங்களில் கடந்து வந்துள்ளார். இதைக் கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறதே? STS -107 கொலம்பியாவில் (ஜனவரி 16, 2003- பிப்ரவரி 1,2003) 16 நாட்கள் விண்வெளிப் பயணம் – அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தியது. ஒரு நாளில் 24 மணி நேரங்கள் அயராத உழைப்பு.  மாறி மாறி, விண்வெளி வீரர்கள் மிக கெட்டிக்காரத் தனமாக 80 சோதனைகளைச் செய்து முடித்திருந்தனர்.

விதி வலியது:

STS -107 என்ற இரண்டாவது ஃபிளைட்டுக்குத் தயாரான போது 2000-ஆம் ஆண்டில் முதல் தடைவ தட்டிப் போனது சில கோளாறுகளால் 2002 ஜூலைக்குத் தள்ளிப் போனது. அப்புறம் அதிலும் ஷட்டிலில் சில விரிசல்கள் கண்டுபிடிக்கப் பட்டு அவை களையப்பட்டன.

ஜனவரி 16, ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில், கல்பனா சாவ்லாவும் ஏனைய விண்வெளி வீரர்களும் சென்றனர். மரணத்தை நோக்கி விதி அவரை இட்டுச் சென்றதோ எனத் தோன்றுகிறது. அந்தப் பயணத்தில் கல்பனா மைக்ரோ கிராவிட்டி சோதனைகளுக்குப் பொறுப்பேற்று இருந்தார்.

பிப்ரவரி 1,2003-இல் டெக்சாஸ் மேல் விண்ணில் இருந்து பூமியின் வளி மண்டலத்திற்குள் மீண்டும் புகும் வேளையில் அது வெடித்துச் சிதறியது. 16 நிமிடங்களில் வெற்றிகரமாகத் தரையிறங்கிக வேண்டிய விண்கலம். எத்தனை துயரமான நிகழ்வு அது. விண்வெளி வீரர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே அது அதிர்ச்சி தினமாகத் தான் விடிந்ததது. விதி வலியது. நம்மிடம் இருந்து நம்பிக்கையின் நட்சத்திரத்தைப் பறித்து சென்றது.

கல்பனாவின் வாழ்கைப் பாடம்:

ஒரு வகையில் ஆணாதிக்க சமூகத்தில் தான் கல்பனா பிறந்து வளர்ந்தார். ஆண்களே இங்கு விண்ணில் பறக்க ஆசைப்படாத வேளையில், இந்தப் பெண், வானில் சிறகசைக்க, விர்ரெனப் பறக்க யத்தனித்து ஆச்சர்யம்.

விண்ணில் பறக்க வேண்டும் என்ற ஆசையைப் பொக்கிஷமாகக் காத்து, தேவையான நடவடிக்கைகளில் உறுதியாக இறங்கி, சாதித்தும் காட்டினார் கல்பனா. மற்றவரின் ஆதிக்கப் போக்கிற்கு தன்னை உட்படுத்த ஒரு போதும் சம்மதிக்காதவர் அவர். சம காலத்தில், ஏரோநாடிக்ஸ் இன்ஜினீயரிங் விருப்பப் பாடமாக எடுத்த முதல் பெண் அவர்.

இந்தியாவின் ராகேஷ்  சர்மா ஏற்கனவே விண்ணில் பறந்தவர். இந்திய வம்சாவளியில் முதல் பெண் கல்பனா தான் விண்னை அளந்தவர். முதல் பயணத்தின் போது அவர் உதிர்ந்த நல் முத்து: You are just your intelligence (உங்கள் கெட்டிக்காரத்தனமே நீங்கள்).

JRD டாட்டாவில் கவரப்பட்டவர்; சைவ உணவு மட்டுமே உட்கொண்டார். மாமிச உணவை   அவர் கண்டிப்புடன் தவித்தார்.கடைசிப் பயணத்தில் வெண்பட்டுப் பதாகை ஒன்றை, உலகளவில் ஆசிரியர்களுக்காக பிரசாரம் செய்யும் வண்ணம் எடுத்துச் சென்றிருந்தார். 2 டஜன் இந்திய இசை மேதைகளின் இசைதட்டுகளை எடுத்துச்  சென்றிருந்தார். ஹீஸ்டனில் உள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று வந்த பக்தை. தன் சொந்த ஊரில் கிராமத்து பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்தி தன் வழிநடக்க பிரயத்தனம் மேற்கொண்டவர் அவர்.

கல்பனாவுக்கு மரியாதை:

கர்நாடக அரசு கல்பனா  பெயரில் பரிசு தருகிறது. ஹரியானாவில் ஒரு பிளான்டோரியத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  நாசாவும் அவரை கௌரவிக்கத் தவறவில்லை. இந்தியா தனது சீதோஷ்ண நிலையை உணரும் விண்கலத்திற்கு  ‘கல்பனா 1’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.

கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா சொல்கிறார்:  “என் சகோதரி சாகவில்லை. அவர் சாகாவரம் பெற்ற நட்சத்திரம், வானில் ஒளிர்கிறார். வானத்திற்குச் சொந்தக்காரி அவர்”.

கல்பனா தனது கடைசி பேட்டியில் சொன்னது:  “பால் வீதியை நாங்கள் பார்த்திருப்போம் ஒரு கனவு போல. ஒவ்வொரு சமயம் எரி நட்சத்திரங்களைப் பார்ப்போம். அது போன்ற சமயங்களில் வியப்பும், அடிப்படைக் கேள்விகளும் என்னுள் எழும்பின. சொர்க்கங்களின் மேல் பெரும் வியப்பு தோன்றியது”.

‘நான் ஒரு மூலையில் முடங்கப் பிறந்தவள் இல்லை, இந்த பிரபஞ்சம் முழுவதும் என் சொந்தமே’ என்று செனகா என்ற தத்துவஞானி சொன்னதை வைத்தே பூமிப் பந்து, விண்வெளி ஆகியவற்றோடு தன் பிணைப்பை விவரிக்கிறார் கல்பனா.

பூமியில் பிறந்த மகள் விண்ணின் மடியில் உயிர் நீத்தாள்;  அவள் என்றும் நம் நினைவில்…

 

குறிப்பு:

திருமதி ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

.

சுதந்திரமே பெயரானவர்

-என்.டி.என். பிரபு

சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத்

சந்திரசேகர ஆசாத்

(பிறப்பு: 1906, ஜூலை 23- பலிதானம்: 1931, பிப். 27)

.

சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன்.

காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு காசி வித்யா பீடத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் ஊர்வலமும் வந்து சேர்ந்தது. அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சிறுவன் இந்தக் காட்சியைக் கண்டான். அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்களே என எண்ணினான். உடனே கோபம் உச்சிக்கேறியது. ஒரு கல்லை எடுத்தான், குறி பார்த்தான், அடித்தான், சப் இன்பெஸ்க்டர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

சிறுவன் சிரித்தவாறு கம்பீரமாக நின்றிருந்தான். சப்-இன்ஸ்பெக்டர்,  ‘அந்த பையனைப் பிடி, பிடி’ என்று கத்தினான். கான்ஸ்டபிள்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனைப் பிடிப்பதற்குள் அந்தச் சிறுவன் காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பிவிட்டான்.

அந்த சிறுவன் தான், சந்திரேசகர ஆசாத்.

இப்படி சிறுவயதிலேயே வீர சாகசம் செய்த சந்திரசேகர ஆசாத்தின் இயற் பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டபோது அவரது வயது 15. அப்போதே நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான பதிலை அளித்து நீதிபதியை கோபப்படச் செய்தார். அதன் பிறகே  ‘சந்திரசேகர ஆசாத்’ என அனைவராலும் அறியப்பட்டார்.

ஆசாத், 1906 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 -ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், சபுவா மாவட்டம் ‘பாப்ரா’ என்ற ஊரில் பிறந்தார். அப்பா சீதாராம் திவாரி. அம்மா ஜக்ராணி தேவி.

சிறுவனாக இருக்கும்போதே வில் வித்தை கற்றார். (இந்தப் பயிற்சிதான் சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை குறிதவறாமல் தாக்க உதவியது எனலாம்) இவரது அம்மாவிற்கு, சந்திரசேகரை சமஸ்கிருதம் படிக்கச் செய்ய வேண்டும் ஆசை. எனவே காசிக்கு அனுப்பினார்.

சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்துவிட்டு தலைமறைவாக இருந்த போது, சந்திரசேகருக்கு ஒரு செய்தி வந்தது. ‘நாளை கல்லூரியில் ஹிந்தி பரீட்சை நடக்கிறது. அதைப் புறக்கணிக்க வேண்டும். அதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று.

மறுநாள் காலை திட்டமிட்டபடி போராட்டம் நடந்தது. அப்போதும் போலீஸார் கையில் சிக்காமல் தப்பித்தார். ஆனாலும் போலீசார் அவரை தேடிச் சென்று 1922, பிப்ரவரி 12 அன்று கைது செய்தனர். அவரும் தன்னை கைதுசெய்ய அனுமதித்தார். அதன் பின் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு.

பிப்ரவரி 21 அன்று அந்த வழக்கு நடந்தது.

நீதிபதி உன் பெயர் என்ன என்று கேட்டார்.

“என் பெயர்…………. என் பெயர்…………..” என ஒரு கணம் ஏதோ நினைத்தவன் போல் நிறுத்தி “ஆசாத்” என சத்தமாக கூறினார்.

இந்தப் பதிலைக் கேட்ட நீதிபதியும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு கூச்சலும் குழப்பமும் நிகழ்ந்தது.

“சைலன்ஸ்! சைலன்ஸ்!” என்ற நீதிபதி,

“உன் அப்பா பெயர் என்ன?” என்று கேட்டார்.

“விடுதலை” என்று பதில் சொன்னார் சந்திரசேகர்.

நீதிபதி பொறுமையிழந்து “சரியா சொல்லு, உன் வீடு எங்கே என்று?” என்றார்.

“என் வீடு சிறைச்சாலை!” என்றார் சந்திரசேகர்.

நீதிபதிக்கு கோபம் பொங்கி வந்தாலும், வேறு வழியில்லாமல் தடுத்துக் கொண்டே, “உன் வேலை என்ன?” என்று கேட்டார்.

“ஆங்கிலேயர்களை பாரதத்திலிருந்து விரட்டுவது” என பதிலளித்தார் சந்திரசேகர்.

கோபம் கொண்ட நீதிபதி தீர்ப்பை எழுதத் தொடங்கினார்.

“ஆசாத் என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த காங்கிரஸ் சுதந்திர வீரன் இந்தியக் குற்றவியல் சட்டம் 504 பிரிவின்படி போலீசாரை மிரட்டிய குற்றம் செய்திருக்கிறான். 447 பிரிவின்படி அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்திருக்கிறான். 143- ஆவது பிரிவின்படி அமைதியைக் குலைத்திருக்கிறான். இவை அனைத்தும் மதிப்புள்ள ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களாக இருந்தாலும், சிறுவன் என்ற காரணத்தால் நீதிமன்றம் இவனுக்கு 12 பிரம்படி தண்டனை விதிக்கிறது.” என்று முடித்தார்.

தண்டனையை வீரமுடன் ஏற்ற சந்திரசேகர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே!” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிப்படுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி, ஒத்துழையாமைக் கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

ராம் பிரசாத் பிஸ்மில் என்பவரின் அறிமுகம் கிடைத்த்து. இவர்  ‘இந்துஸ்தான் குடியரசு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார். இந்த அமைப்பில் சந்திரசேகர ஆசாத் சேர விரும்பினார். அதில் சேர்வதற்காக விளக்குத்தீயில் தன் கையை சுட்டுக்கொண்டு தனது மன உறுதியை நிரூபித்தார்.

1925 -ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். அப்போது ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது. சந்திரசேகர ஆசாத், பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோஷலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை மாற்றி “இந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு அமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1931, பிப்ரவரி 27 அன்று அலகாபாத் ‘அல்ப்ரெட்’ பூங்காவில் இயக்க நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸார் சுற்றி வளைத்துக்கொண்டனர். நண்பர்களைத் தப்பிக்க வைத்துவிட்டு தானும் தப்பிப்பதற்காக போலீஸாரிடம் போரிட்டார். அப்போது அவர் காலில் குண்டடிபட்டது. தப்பிச்செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருந்தது. போலீஸாரிடம் உயிருடன் சிக்க அவர் விரும்பவில்லை. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார்.

தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பக்தி கொண்டவராக வளங்கிய சந்திரசேகர ஆசாத் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர்.

ஆசாத்துக்கு அனைத்துமே இந்த நாடுதான். தொடர்ந்து பசி, தாகம், ஏழ்மை ஆகிய கடும் பிரச்னைகள் நச்சரித்துக் கொண்டு இருந்தபோதும்  ஒரு தடவைக் கூட கடமையில் தளர்வு ஏற்பட்ட தனது வாழ்க்கையில் அவர் அனுமதிக்கவே இல்லை.

ஆசாத்துடைய வாழ்க்கை, கொள்கைக்காக சமர்ப்பணம் ஆனது. பிறழாத தேசபக்தி கொண்ட லட்சியப் பற்று ஒன்றே அவருடைய வாழ்க்கை மூச்சு.

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் மாபெரும் புரட்சி வீர்ராகத் திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் முழு வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வீர சரித்திரம் ஆகும்.

குறிப்பு:

திரு. என்.டி.என். பிரபு, சென்னையில் வசிப்பவர். வார இதழ் ஒன்றில் பக்க வடிவமைப்பாளராக உள்ளார்.

அறிவியல், தொழிலக ஆய்வகங்களுக்கு வித்திட்டவர்

-வ.மு.முரளி

சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

சாந்தி ஸ்வரூப் பட்நாகர்

(பிறப்பு: 1894, பிப்ரவரி 21 – மறைவு: 1955, ஜனவரி 1)

டிப்புக்கும் அனுபவப் பயன்பாட்டுக்கும் இடையிலுள்ள தொலைவு குறையும்போது சாதனைகள் சங்கமிக்கின்றன. இதற்கு மிகச் சிறந்த உதாரணம், ‘இந்திய அறிவியல், தொழிலக ஆய்வகங்களின் தந்தை’ என்று போற்றப்படும் சாந்தி ஸ்வரூப் பட்நாகர். வேதியியல் விஞ்ஞானியான பட்நாகர், இந்தியாவில் அறிவியலையும் தொழில்துறையையும் இணைத்த முதல் பாலமாகக் கருதப்படுகிறார்.

1894, பிப்ரவரி 21-இல், பிளவுபடாத பாரதத்தில் (இன்றைய பாகிஸ்தான்) பஞ்சாப் மாகாணத்தில் பேரா என்னுமிடத்தில் பிறந்தார் சாந்தி ஸ்வரூப் பட்நாகர். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்த பட்நாகரை அவரது தாய்வழித் தாத்தா பரமேஸ்வரி சஹாய்  வளர்த்தார். அவர் பொறியாளராக இருந்ததால், இயல்பிலேயே அறிவியல் ஈடுபாடு பட்நாகருக்கு ஏற்பட்டுவிட்டது. அதேபோல பரம்பரைத் திறனாக கவிதை எழுதும் ஆற்றலும் அவருக்கு வாய்த்தது.

சிக்கந்தராபாத்தில் ஆரம்பக்கல்வி பயின்ற பட்நாகர், 1911-இல் லாகூரிலிருந்த தயாள்சிங் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அங்கு படித்தபோது மேடை நாடகங்களில் நடித்ததுடன், உருது மொழியில்  ‘காராமதி’ என்ற நாடகத்தையும் எழுதினார்.

பிறகு லாகூரிலுள்ள ஃபோர்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பி.எஸ்சி. பட்டமும் (1916), வேதியியலில் எம்.எஸ்சி. பட்டமும் (1919) பெற்றார்.

தயாள்சிங் கல்லூரி வழங்கிய கல்வி உதவித் தொகையைக் கொண்டு பிரிட்டன் சென்று லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று டி.எஸ்சி. ஆய்வியல் பட்டம் (1921) பெற்றார். பிரிட்டன் அரசின் அறிவியல், தொழிலக ஆராய்ச்சித் துறை அவருக்கு 250 பவுண்ட் ஸ்டெர்லிங் ஆய்வுதவி நிதி வழங்கியது.

1921-இல் நாடு திரும்பிய பட்நாகர், காசியிலுள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராகச் சேர்ந்தார். அப்போது பல்கலைக்கழக கீதத்தை பட்நாகர் இயற்றினார்.
மூன்றாண்டுகள் பணிக்குப் பிறகு, லாகூரிலுள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறைக்கு இயக்குநராகச் சென்றார் பட்நாகர். அங்குதான் அவரது படிப்புக்கு சவால் விடும் பல தொழிலக சவால்கள் காத்திருந்தன.

பட்நாகருக்கு கூழ்மங்கள் (Colloids), பால்மங்கள் (Emulsions), தொழிலக வேதியியல் (Industrial Chemistry) தொடர்பான ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு. அதேபோல காந்த வேதியியலிலும் அவருக்கு மிகுந்த நிபுணத்துவம் இருந்தது.

1928-இல் கே.என்.மாத்தூர் என்பவருடன் இணைந்து, காந்தப் பண்புகளை அளவிடும் கருவியை (Bhatnagar-Mathur Magnetic Interference Balance) கண்டுபிடித்தார். இது லண்டன் ராயல் சொûஸட்டியில் பார்வைக்கு வைக்கப்பட்டபோது, சிறந்த கண்டுபிடிப்பாகப் பாராட்டப்பட்டது. இதை வர்த்தகரீதியாக லண்டனிலுள்ள ஆதம் ஹில்ஜர் கம்பெனி தயாரித்தது.

‘நவீன லாகூரின் தந்தை’ என்று போற்றப்படும் கங்காராம் அகர்வால் தனது கரும்பு ஆலைகளில் வீணாகும் சோகைகளை என்ன செய்வது என்று பட்நாகரிடம் ஆலோசித்தார். அதுவே, பட்நாகரின் வாழ்வின் திருப்புமுனை. கரும்புசோகைகளை வீணாக்காமல் அவற்றைக் கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறையை பட்நாகர் உருவாக்கினார். பயன்பாட்டு அறிவியலின் (Applied Science) பக்கம் பட்நாகர் செல்ல அதுவே வழிகோலியது.

அதைத் தொடர்ந்து ஜவுளி ஆலைகள், மாவு அரவை ஆலைகள், எண்ணெய் ஆலைகள், எஃகு ஆலைகளின் தொழிலகப் பிரச்னைகளுக்கு பல தீர்வுகளைக் கண்டார் பட்நாகர். அச்சமயத்தில் ராவல்பிண்டியில் இயங்கிய ஸ்டீல் பிரதர்ஸ் என்ற பெட்ரோலிய துரப்பண நிறுவனம், தனது தொழிலகப் பிரச்னைக்கு தீர்வு கோரி பட்நாகரை நாடியது.

கடல்புறத்தில் கச்சா எண்ணை தோண்டும் கருவிக்கு உயவு எண்ணையாகப் பயன்பட்ட பொருள் உப்புநீருடன் கலந்து கெட்டியாகிவிட்டது. இதற்கு, இந்தியாவில் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் கூழ்மமான கோந்து பசையை உயவு எண்ணையுடன் கலந்து பயன்படுத்தி, கூழ்ம வேதியியலின் (colloidal chemistry) உதவியால் தீர்வு கண்டார் பட்நாகர்.

இதற்கு ஈடாக, அவருக்கு ரூ. 1.50 லட்சம் பணத்தை அளிக்க பெட்ரோலிய நிறுவனம் முன்வந்தது. அதை மறுத்த பட்நாகர், தனது கல்லூரியின் ஆராய்ச்சித் துறைக்கு அந்த நிதியை வழங்குமாறு கூறிவிட்டார். அந்த நிதியால் கல்லூரியின் ஆய்வுச்சாலையில், மெழுகு மணத்தை அகற்றுதல், மண்ணெண்ணை ஜூவாலையின் உயரத்தை அதிகரித்தல், தாவர எண்ணெய் ஆலைகளின் கழிவுகளையும் கச்சா எண்ணையின் கழிவுகளையும் உபயோகித்தல் தொடர்பான ஆய்வுகளில் பட்நாகர் ஈடுபட்டார்.

1935-இல், சக விஞ்ஞானி கே.என்.மாத்தூருடன் இணைந்து அவர் எழுதிய காந்த வேதியியல் தொடர்பான நூல் (Physical Principles and Applications of Magneto Chemistry) இன்றும் அந்தத் துறையில் முதன்மை நூலாக விளங்குகிறது.

ஆராய்ச்சி மன்றங்களின் தோற்றம்:

இந்தியாவில் தொழிலக வளர்ச்சியில் அறிவியலின் பங்களிப்புக்கான ஆராய்ச்சியின் தேவை உணரப்பட்டபோது, 1935-இல் பிரிட்டீஷ் அரசு சார்பில் தொழிலக அறிவுத்திறன் ஆராய்ச்சித் துறை ரூ. ஒரு லட்சம் செலவில் துவங்கப்பட்டது.

ஆனால் பிரிட்டனில் உள்ளது போல அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று பட்நாகர் வலியுறுத்தினார். அதை ஏற்று ரூ. 5 லட்சம் ஆண்டு நிதிநிலையுடன் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி வாரியம் (Board of Scientific and Industrial Research -BSIR) 1940-இல் துவங்கப்பட்டது. இதன் தலைவராக திவான்பகதூர் ஆற்காடு ராமசாமி முதலியாரும், இயக்குநராக பட்நாகரும் நியமிக்கப்பட்டனர்.

பிறகு பட்நாகரின் தொடர் முயற்சிகளால், தொழிலக ஆராய்ச்சி பயன்பாட்டுக் குழு (Industrial Research Utilisation Committee -IRUC) 1941-இல் அமைக்கப்பட்டது. மேற்கண்ட இரு அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் சுயேச்சையான அமைப்பாக ‘அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம்’ (Council of Scientific and Industrial Research -CSIR) 1942-இல் துவங்கப்பட்டது. இதன்மூலமாக, தேசிய வேதியியல் ஆய்வு மையம், தேசிய இயற்பியல் ஆய்வு மையம், கண்ணாôடி, பீங்கான் தொடர்பான ஆய்வு மையம், எரிபொருள் ஆய்வு நிலையம் ஆகியவற்றை பட்நாகர் நிறுவினார். நாட்டில் முதன்முதலில் அமைந்த தேசிய அறிவியல் ஆய்வு நிலையங்கள் இவையாகும்.

நாடு விடுதலை அடைந்தவுடன் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR) தலைவராக பட்நாகர் 1947-இல் நியமிக்கப்பட்டார். அன்றுமுதல் தனது இறுதிக்காலம் வரை அங்கு பணியாற்றிய பட்நாகர், நாடு முழுவதும் பரவலாக பல துறைகளில் தேசிய ஆய்வகங்களை ஏற்படுத்தினார். இன்று நாடு முழுவதும் 39 தேசிய ஆய்வு மையங்களுடன், 17,000 ஊழியர்களுடன், நாட்டின் பிரமாண்டமான ஆராய்ச்சி நிறுவனமாக சிஎஸ்ஐஆர் வளர்ந்திருக்கிறது.

1951-இல் பட்நாகர் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், எண்ணைத் துரப்பண நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி பல எண்ணை வயல்களை உருவாக்கியது. தவிர, தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தையும் (National Research Development Corporation-NRDC) பட்நாகர் 1953-இல் அமைத்தார். அதே ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தற்காலிக அமைப்புக்கு முதல் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

இவ்வாறாக தனது தொலைநோக்குப் பார்வையால் நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட பட்நாகர், நூற்றுக்கணக்கான இளம் விஞ்ஞானிகளை இத்துறையில் ஈடுபடுத்தி, நாட்டின் முன்னேற்றத்துக்கு வித்திட்டார். அவரது அறிவியல் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, 1954-இல் இந்திய அரசு  ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கௌரவித்தது. 1955, ஜனவரி 1-இல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மறைந்தார்.

அவரது நினைவைப் போற்றும் விதமாக, 1958 முதல், நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் துணை புரியும் விஞ்ஞானிகளுக்கு ‘சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பு:

இக்கட்டுரை தினமணி நாளிதழில் வெளியானது.

 காண்க: வ.மு.முரளி

 

.

சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி

-வ.மு.முரளி

மேகநாத் சாஹா

மேகநாத் சாஹா

(பிறப்பு: 1893 அக்டோபர் 6 – மறைவு: 1956, பிப்ரவரி 16)

“விஞ்ஞானிகள் தங்கக் கோபுரத்தில் வசிப்பவர்களாகவும்,  நிதர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் இல்லாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.  நானும் எனது இளம் வயதில் சில புரட்சிகரத் தொடர்புகளைத் தவிர்த்து 1930 வரை தங்கக் கோபுரத்தில்தான் இருந்தேன். ஆனால் சட்டம்- ஒழுங்கு ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியம். எனவேதான் நான் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தேன். ஏனெனில் என்னால் முடிந்த வழியில் நாட்டுக்கு ஏதேனும் செய்யவே நான் விரும்பினேன்”.

-இது ஒரு விஞ்ஞானியின் வாக்குமூலம். இந்த நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மேகநாத் சாஹா என்ற அந்த விஞ்ஞானியைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்திருப்பது அவசியம்.

வானியற்பியல் விஞ்ஞானியான சாஹா தனது 27-ஆம் வயதில் உருவாக்கிய சாஹா அயனியாக்க சமன்பாடு (Saha Ionization Equation- 1920), விண்ணியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வேதியியல் மாற்றம், புறநிலை மாற்றங்களை அறிய இந்தச் சமன்பாடு உதவுகிறது.

பிரிக்கப்படாத இந்தியாவில் டாக்கா அருகிலுள்ள சியோரடலி கிராமத்தில் மளிகைக் கடைக்காரரின் ஐந்தாவது மகனாக 1893 அக்டோபர் 6-இல் பிறந்தார் மேகநாத் சாஹா. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் அளவுக்கு வறுமை குடும்பத்தில் தாண்டவமாடியது. ஆனால் நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களின் உதவியால் படிப்பைத் தொடர்ந்தார்.

1905-இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு எதிராக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடியதால், அவருக்கு அளிக்கப்பட்ட உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டது. ஆயினும் தேசிய சிந்தனை கொண்ட சிலரது உதவியால் வேறு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து, முதல் மாணவனாகத் தேறினார்.

பிறகு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை பட்டம் படித்தார். அங்கு இவரது சக மாணவராக இருந்தவர் சத்யேந்திரநாத் போஸ்.

இடைக்காலத்தில் புரட்சிகர விடுதலைப் போராளிகளுடனும் சாஹாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டீஷாருக்கு எதிரான ஜெர்மனி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பக்கா ஜதின் என்னும் ஜதீந்திரநாத் முகர்ஜியுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. ‘அனுசீலன் சமிதி’ என்ற புரட்சிப்படையை உருவாக்கியவர்களுள் ஒருவரான அவர் பின்னாளில் (1915) பிரிட்டீஷ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இந்தத் தொடர்பால், சாஹாவின் அரசுப்பணிக் கனவு நிறைவேறாது போனது. புரட்சியாளர்களுடனான உறவு காரணமாக, அவரது இந்திய நிதிப்பணித் தேர்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதுவே அவர் அறிவியல் சாதனையாளராக மாறவும் வித்திட்டது.

வான் இயற்பியலில் இவரது ஈடுபாடு மிகுந்தது. சூரிய நிற மாலையில் காணப்படும் பிரான்ஹோபர் (Fraunhofer) என்னும் கருவரிகளின் தோற்றத்துக்குக் காரணம் புரிபடாமல் இருந்தது. இதை சாஹா உருவாக்கிய வெப்ப அயனியாக்கச் சமன்பாடு விளக்கியது.

விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வெப்பநிலை, புறநிலை மாற்றங்களை அவற்றிலுள்ள தனிமங்களே தீர்மானிக்கின்றன என்பதை சாஹா சமன்பாடு வெளிப்படுத்தியது. பின்னாளில், சூரியனில் பெருமளவில் ஹைட்ரஜன் வாயு உள்ளதை ஆய்வுகள் நிரூபிப்பதற்கு இந்தச் சமன்பாடு ஆதாரமானது.

இந்தச் சமன்பாடு மேகநாத் சாஹாவுக்கு பெரும் புகழைத் தந்தது. அதுமட்டுமல்ல, சக விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸுடன் இணைந்து மெய்வாயுக்களின் நிலைச் சமன்பாடு (Equation of state for Real gases) என்ற ஆய்வறிக்கையையும் சாஹா வெளியிட்டார்.

பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரிராகப் பணிபுரிந்த சாஹா, அதை முதல்தரமான கல்வி நிறுவனமாக்கினார்; இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டி முறையான சக ஆண்டு கணக்கீட்டையும் முறைப்படுத்தினார்.

பிற்காலத்தில் இவரது ஆய்வுக் கண்ணோட்டம் உடனடி மக்கள் நலன் சார்ந்ததாக மாறியது. அதன் விளைவாக, தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா நங்கல், ஹிராகுட் அணைத் திட்டங்களுக்குத் தேவையான கள ஆய்வு உதவிகளைச் செய்தார்.

1948-இல் கொல்கத்தாவில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் சாஹா தொடங்கினார். அது இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா நிறுவனமாக (Saha Institute of Nuclear Physics) வளர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி சமூகநலனுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் தீவிர உந்துதல் கொண்ட தனது கருத்துகள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதால், தானே அரசியலில் இறங்க சாஹா தீர்மானித்தார். 1952-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கொல்கத்தா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். நாடாளுமன்றத்திலும் மக்கள் சார்ந்த பணிகளுக்காக குரல் கொடுத்தார். அப்போது அரசியல்வாதிகளின் ஏளனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சாஹா,  ‘அறிவியலும் கலாசாரமும்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார். அணுசக்தி ஆராய்ச்சியில் ரகசியத் தன்மை கூடாது என்று குரல் கொடுத்த முதல் விஞ்ஞானியும் சாஹா தான்.

விஞ்ஞானி, விடுதலை வீரர், கல்வியாளர், இதழாளர், நாடாளுமன்றவாதி, பொருளாதார நிபுணர், சீர்திருத்தவாதி எனப் பல முகங்களைக் கொண்டவராக இருந்தும், வாழும் காலத்தில் அவர் உரிய மதிப்பைப் பெறவில்லை.

ஆயினும் எதையும் எதிர்பாராமல், மக்கள் நலனுக்காகச் சிந்தித்து வாழ்ந்த விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1956, பிப்ரவரி 16-இல் மறைந்தார். சாஹா உரிய மரியாதையைப் பெறாமல் மறைந்திருக்கலாம். ஆயினும், விண்ணியலுக்கு அளித்த சாஹா அளித்த சமன்பாடு அவரது பெயரை அறிவியல் உலகில் சாகாவரம் பெற்றதாக்கிவிட்டது.

 

குறிப்பு:

 திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

 இக்கட்டுரை தினமணி -இளைஞர்மணியில் வெளியானது.

 

%d bloggers like this: