Blog Archives

லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்

-என்.டி.என்.பிரபு

ராஜகுரு, பகத் சிங், சுகதேவ்

ராஜகுரு, பகத் சிங், சுகதேவ்

பகத் சிங்

(பிறப்பு: 1907,  செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23)

ராஜகுரு

(பிறப்பு: 1908,  ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23)

சுகதேவ்

(பிறப்பு: 1907,  மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23)

 

பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் 1919 ஏப்ரல் 14-ஆம் நாள் நடத்தப்பட்டது.

பல ஆயிரக் கணக்கான மக்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்க மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது அந்த இடம் ஆங்கிலப் படையால் சுற்றிவளைக்கப்பட்டது.

ஜெனரல் டயர் சுட உத்தரவிட்டவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தப்பி ஓட வழியின்றித் தவித்தனர். அங்கிருந்த ஒரு கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைவிட மிதி பட்டும் கிணற்றில் குதித்தும் இறந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். 90 துப்பாக்கிகளால் 10 நிமிடத்தில் 1,650 ரவுண்டுகள் சுடப்பட்டதாக கூறாப்படுகிறது. இறந்தவர்களின் முழுக் கணக்கு மறைக்கப்பட்டது.

அங்கே ஒரு 11 வயது சிறுவன் சென்றான். அந்த கோரக்காட்சியைக் கண்டு மனம் கொதித்தான். அங்கிருந்த ரத்த மண்ணைக் கையால் அள்ளினான்; சபதம் ஏற்றான்,  ‘ஆங்கிலேயர்களை பழிவாங்காமல் விட மாட்டேன்’ என்று. அவன் பெயர் பகத்சிங்.

இந்த சபத்தை நிறைவேற்ற அவருடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்ட இளைஞர்கள் ராஜகுரு, சுகதேவ்.

பகத் சிங், பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டம், பங்கா என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார்.

ராஜகுரு, மகாராஷ்டிரா மாநிலம் பூனா அருகே உள்ள (Khed) கெஹெட் என்னும் இடத்தில் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று பிறந்தார்.

சுகதேவ் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் 1907-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும், 1919 -ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டவர்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

விடுதலையை தங்கள் லட்சியமாகக் ஏற்றுக் கொண்ட இவர்கள், அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினர். அதற்கு புரட்சிப் பாதையில் ஈடுபடுவது என முடிவெடுக்கின்றனர்.

ஒத்த கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி  ‘ஹிந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு’ கட்சியை 1926-ஆம் ஆண்டு தொடங்கினர்.  ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே  அக்கட்சியின் திட்டம்.

1928 -ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தபோது அதில் இவர்களின் அமைப்பும் ஈடுபட்டது.

அக்டோபர் 30 -ஆம் தேதி சைமன் கமிஷனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் கலந்துகொண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 -ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.

இந்த இளைஞர்களை இச்சம்பவம் மிகவும் கோபமுறச் செய்தது. பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

விவசாயிகள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் விடுதலை வேட்கையை ஏற்படுத்தினர். ஆங்கில அரசும் தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு ‘தொழில் தகராறு சட்ட வரைவு’ என்ற ஒன்றை கொண்டுவந்தது.

இந்த தொழில் தகராறு சட்ட வரைவுவை எதிர்த்து ‘சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்’ குண்டு வீசுவதென்று பகத் சிங்கும் அவரது தோழர்களும் தீர்மானித்தனர். 1929-ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 அன்று இச் சட்ட வரைவை நிறைவேற்ற இருந்தனர். புரட்சியாளர்கள் பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டனர். இவர்கள் ஒரு திட்டம் வைத்திருந்தனர். தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் வந்தபோது, உறுப்பினர்கள் யாரும் இல்லாத பகுதியை நோக்கி அதிக சத்தம் மட்டுமே வரக்கூடிய குண்டுகளை வீசினர். கையால் எழுதப்பட்ட காகிதங்களையும் வீசினர். அதில்  “செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் இந்தக் குண்டை வீசினோம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் பகத்சிங், ராஜகுரு,  சுகதேவ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் குண்டு வீசி, துண்டுப்பிரசுரம் வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆங்கில காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக்கொன்ற வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் தொடர்பு தெரியவரவே, அவ்வழக்கும் விசாரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனைக்காக குறிக்கப்பட்ட நாள் மார்ச் 24, 1931. ஆனால் 1931 -ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதியே மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அப்போது ராஜகுருவுக்கு 23 வயது, பகத்சிங், சுகதேவ் ஆகியோருக்கு 24 வயது. அஞ்சாநெஞ்சம் கொண்டு விளங்கிய இவர்கள் சாவைக் கண்டு சலனமோ, கலக்கமோ, வருத்தமோ இன்றி தைரியமாக தூக்கை எதிர்கொண்டனர்.

லாகூர் சிறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் உடல்களை சிறைசாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அதிகாரிகள் கொண்டுசென்று  எரித்து, சாம்பலை சட்லெஜ் நதியில் கரைத்துவிட்டனர்.

மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டிருந்தால் இவர்களின் தூக்கு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று ஒரு சர்ச்சையும் உள்ளது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை தூக்கிலிட்ட சமயத்தில் கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. காந்திஜியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. பல ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

‘பகத்சிங், சுகதேவ், ராகஜ்குரு ஆகிய இளைஞர்கள் போராடிய விதத்தைத் தான் ஏற்கவில்லையே தவிர, அவர்களது நோக்கம் புனிதமானது. அவர்களது தியாகம் விலைமதிப்பற்றது. அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்’ என்று தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், தண்டனை குறைக்கப்படும் என்ற ஆசை வார்த்தை கூறப்பட்டும் அதை பகத்சிங் ஏற்கவில்லை. தன் உயிரை ஈந்தேனும் இந்த நாட்டு மக்களின் விடுதலை உணர்வை தட்டி எழுப்பவே விரும்பினார் பகத்சிங். பகத்சிங் இறுதியாக எழுதியது:

“நீங்கள் எங்கள் உயிரைக் கொல்லலாம். லட்சியங்களைக் கொல்ல முடியாது. சாம்ராஜ்ஜியங்கள் ஒரு நாள் அழியும். ஆனால் லட்சியங்கள் என்றும் நிலைக்கும்.”

 .

காண்க:

ஸ்வதந்திர கர்ஜனை- 23

 

Advertisements

குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்

-வ.மு.முரளி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூறாவது ஆண்டு (6.4.1815) ஏப்ரல் 6-இல் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

பிள்ளையின் சிறப்பு, அவர் இயற்றிய நூல்களால் அமையவில்லை. ஆனால், அவரது குருகுல மாணாக்கர்களாக இருந்த பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டே குருநாதரை இன்றும் நினைக்கச் செய்கிறது. அவர்களுள் ஒருவர்தான் உ.வே.சா.

திருவாவடுதுறை ஆதீனத்தால் “மகாவித்துவான்’ என்ற பட்டம் பெற்று புகழ்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழில் கரை கண்டவர்; நினைத்தவுடன் யாப்புடன் கூடிய கவி புனையும் ஆற்றல் மிகுந்தவர். தனது வாழ்நாளில் அவர் எழுதிய செய்யுள்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார் உ.வே.சா.

ஆனால், அக்காலத்தில் அவற்றைத் தொகுத்து வைக்க போதிய சாதனங்கள் இல்லை. அதையும் மீறி, அவருடைய நூல்கள் பலவற்றை உ.வே.சா.வின் முயற்சியால் நாம் இன்று படிக்க முடிகிறது. அவர் எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும், குசேலோபாக்கியானம் என்ற காப்பியமும், அவரது மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தலபுராணத்திலும் தமிழின் சிறப்பு மிளிரச் செய்வதில் பிள்ளை முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய தலபுராணங்கள் 22.

தனது அருமுயற்சியால் கற்ற தமிழை தன்னுடைய மாணாக்கர்களுக்கு அள்ளி வழங்கும் திறனால் இவரது புகழ் பரவியது. இவரது வீடே மாணாக்கர்களின் இல்லமானது. பிரதிபலன் பாராமல் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்து, தமிழ் கற்பிப்பதை தனது வாழ்வின் நோக்கமாகவே கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய மாணாக்கர்களின் தரத்தை உயர்த்துவதே அவரது இலக்காக இருந்தது. நல்ல மாணாக்கர்களைத் தேடிக் கண்டறிந்து பாடம் கற்பிப்பது பிள்ளையின் இயல்பு.

 “பணத்துக்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமையாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சிகளில் இவரைச் செலுத்தாமல் இருந்தது” என்கிறார் உ.வே.சா.

தன் குருநாதரின் சிறப்புகள் குறித்து உவே.சா., 1934-இல் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் பிள்ளையின் தவ வாழ்வை விளக்குகிறது.

 “மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தார். அவர்களோ தந்தையாகவே எண்ணி இவரிடம் பயபக்தியுடன் ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்துவிடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குவதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லர் என்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது” என்று, தனது வாழ்வின் அரிய ஆறு ஆண்டுகளை பிள்ளையின் இறுதி நாள்களில் அவருடன் கழித்த உ.வே.சா. கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கவனித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதமான வாழ்க்கை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடையது. குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவரான இவரின் இரு நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழரின் – தமிழகத்தின் கடமையாகும்.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

இக்கட்டுரை,  தினமணி- தமிழ்மணியில் வெளியானது.

காண்க: ஆசான்களின் ஆசான்…

அம்பேத்கரும் தேசியமும்

-சேக்கிழான்

டாக்டர் அம்பேத்கர்

டாக்டர் பீமராவ் அம்பேத்கர்

(பிறப்பு: ஏப். 1891, 14 – மறைவு: 1956, டிச. 6 )

அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண முடியும்.

இந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர் செயல்பட்டார் என்று இன்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விஷயத்தில் அம்பேத்கரை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு சமயங்களில் அவர் தேசியம், தேசப்பிரிவினை, தீண்டாமை, சுய நிர்ணய உரிமை குறித்துக் கூறிய பல்வேறு கருத்துகளை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறிய சில கருத்துகளைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதும், புறக்கணிப்பதும் தவறாகவே முடியும். இன்று ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் பல அறிவுஜீவிகள், வருண அடிப்படையிலான ஹிந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளைக் கையாள்கிறார்கள். அவர்கள் பின்னாளில் ஹிந்துத்துவம் குறித்து என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். அதுபோலவே தான், தேசியம் குறித்த அண்ணலின் கருதுத்துகளில் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கர் மிகவும் தாழ்த்தப்பட்ட மஹார் ஜாதியைச் சார்ந்தவராக இருந்ததால், அவர்கள் குடும்பம் வசதியாக இருந்தபோதும் (அவரது தந்தை ஆங்கிலேய ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியவர்) புறக்கணிக்கப்பட்ட அனுபவங்களை இளமையிலேயே அடைந்தவர். தனது முன்னேற்றத்துக்கு ஜாதி அடையாளமே ஒவ்வொருமுறையும் தடையாக இருந்ததைக் கண்டபோது அவருக்குள் இருந்த புரட்சியாளர் வெளிவந்தார். தனக்கு பல உயர்ஜாதியினர் உதவியதை அவர் எக்காலத்திலும் மறக்கவில்லை. அதேசமயம், தன்னை மேலிருந்து அழுத்தும் நாசகரமான தீண்டாமை என்னும் பாரத்திற்குக் காரணம் யாது என்பதை அவர் தீவிரமாக ஆராய்ந்தார். அவர் பயின்ற உயர்கல்வியும் ஆராய்ச்சிப் படிப்பும் சட்டமும் அவருக்கு ஒளிவிளக்காக உதவின.

இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வேகமடைந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான கொடுமைகள் தீராதவரை விடுதலைப் போராட்டம் நியாயமற்றதாகவே இருக்கும் என்பதை மகாத்மா காந்தியும் உணர்ந்திருந்தார். அவரது செயல்திட்டங்களில் ஹரிஜன மேம்பாடு முக்கியத்துவம் பெற்றது அதனால் தான். காந்தியின் வரவுக்குப் பிறகே (1915) இந்திய விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது.

ஆனால், மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசுடன் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், தனது மக்களின் சுயநிர்ணயத்துக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடும் மனநிலையில் அம்பேத்கர் இருந்தார். எனவே அவர் மகாத்மா காந்தியால் தனது மக்களுக்கான போராட்டங்கள் குலையாமல் இருக்க மிகக் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். அவற்றை மகாத்மா காந்தி புன்னகையுடன் கடந்தார். ஏனெனில் அண்னல் அம்பேத்கரின் வலியை அவர் உணர்ந்திருந்தார்.

காந்தி தாழ்த்தப்பட்டோர் விஷயத்தில் நாடகமாடுகிறார் என்று அம்பேத்கர் விமர்சித்தபோதும், மகாத்மா காந்தி அதனால் கோபமடையவில்லை. நாடு விடுதலை அடைந்தபோது அமைந்த தேசிய அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவை காந்திஜி கட்டாயப்படுத்தினார் என்பது வரலாறு.

நமது துரதிர்ஷ்டம், மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்பது தான். எனினும், அம்பேத்கர் எக்காலத்திலும் தேச விரோதமாகச் செயல்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவரைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவர் அதிகாரத்திற்காகவோ, புகழுக்காகவோ தனது தேசபக்தியை விட்டுக் கொடுத்ததில்லை.

தனது சமுதாய மக்களின் மீட்புக்காக எங்கிய அண்ணல், “யாராலும் நம் குறைகளைத் தீர்க்க இயலாது. நமது கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற ஒரு வாய்ப்பில் அமைந்த அரசியல் சட்டத்தால் மட்டுமே அவ்வாறு தீர்க்க இயலும். இத்தகைய அரசியல் அதிகாரம் இல்லையெனில் நம் மக்களால் நம் பிரச்னைகளைத் தீர்வுக்குக் கொண்டுவர இயலாது’’ என்றார்.
அவரது வழிகாட்டுதலால் தான், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விடுதலைப் போராட்டத்தில் உடன் இணைந்து பணியாற்றினர்.

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, அவரைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டக் களத்தில் குழப்பம் விளைவிக்க ஆங்கிலேயர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். லண்டன் முதலாவது வட்டமேஜை மாநாட்டில் (1931) அவரைக் கலந்துகொள்ளச் செய்வதன் மூலமாக காந்திக்கு எதிராக அவரை முன்னிறுத்த முயன்றனர். ஆனால், வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று கூறிச் சென்றார் அம்பேத்கர்.

தனது வழித்தடத்தின் முந்தைய பயணியான மகாத்மா ஜோதிராவ் புலேவின் கருத்துகள் அம்பேத்கரின் கருத்துருவாக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தின. அதன் அடிப்படையில் தான் அவரது ‘தலித்- பகுஜன் தேசியம்’ என்ற சிந்தனை வெளிப்பட்டது. அடிப்படையில் தான் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை என்று குரல்கொடுத்தார். அதை மகாத்மா காந்தி எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது, 1931-இல் பூனா ஒப்பந்தம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாஇந்த நிகழ்வு அரங்கேறியது. அதன்படியே இன்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதி தேர்தல் முறையில் நீடிக்கிறது.

1931-இல் மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் நேரில் சந்தித்தபோது இருவரிடையிலான பார்வை முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது. அவர் சொன்னார்:

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன்- எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகம் யுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”

“தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது” என்றார் அம்பேத்கர்.

அவரைப் பொருத்தமட்டிலும், தான் பிறந்த ஜாதியின் சமூக விடுதலையே முதன்மையானது. மிகவும் நசுக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அவருக்கு பிறப்பிலிருந்தே மறுக்கப்பட்ட உரிமைகள் – ஆங்கிலேயரால் அல்ல, இந்த நாட்டின் பிரஜைகளான பிற உயர்ஜாதி இந்துக்களால் மறுக்கப்பட்டவை- மீட்கப்பட வேண்டும். அந்த அடிமைத் தளையிலிருந்து தனது சமுதாயம் விடுதலை பெறாமல், தேச விடுதலை பற்றிப் பேசுவது போலித்தனம் என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார்.

“மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்” என்று தனது நிலைப்பாட்டை அம்பேத்கர் விளக்கினார்.

“ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது”. என்று சொன்ன அவர், இந்த நிலைமையில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தேச விடுதலைக்காக ஓரணியில் நிற்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், தேசியம் குறித்த தெளிவான பார்வைகளை அம்பேத்கர் கொண்டிருந்தார். தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா? எனும் கேள்விக்கு “புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே” என்கிறார்.

(ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter IV)

“தேசிய ஒருமை என்பது அதன் சிதறிக் கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்” என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையுடன் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை ஒத்திருப்பதை இங்கு காண முடியும்.

(ஆதாரம்: சுவாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாயக் கருத்துகள்– அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை -திண்ணை)

ஜாதி விஷயத்தில் கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று இருந்தது போன்றே அக்காலத்தில் பெண்ணடிமையும் ஆணாதிக்கமும் இந்தியாவில் அதிகமாக இருந்தது. அக்காலத்தில் விடுதலைப் போரில் பங்கேற்றவரான சகோதரி நிவேதிதை, சமுதாயத்தில் சரிபாதியான பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தியிருக்கும் வரை நாட்டின் சுதந்திரம் அடைய முடியாது என்று மகாகவி பாரதியிடம் கூறினார் என்றும், அதுவே பாரதியாரின் பெண்விடுதலைக் கருத்துகளுக்கு வித்திட்டது என்றும் பாரதி வரலாறு கூறுகிறது. அதைப் போலவே அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளும் உள்ளன என்பதைக் காண முடியும்.

அவர் காலத்தில் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள்- ஜாதி ஹிந்துக்கள் என்ற பிரிவினை அரசால் திணிக்கப்பட்டிருந்தது. உயர்ஜாதியினர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற எண்ணம் ஆங்கிலேய அரசின் உச்சத்தில் இருந்தவர்களால் கவனமாகப் பரப்பப்பட்டது. அதற்கேற்றதுபோல தன்னுணர்வு இழந்த சமுதாயமாக ஹிந்து சமுதாயமும் வீழ்ந்து கிடந்தது. தாழ்த்தப்பட்டவர்களின் வலியை அறியாத உயர்ஜாதி மக்கள் ஆங்கிலேய அரசிடம் அடிமைகளாக இருப்பதை பெருமிதமாக நம்பிய காலம் அது.

“ஹிந்துக்கள் மட்டுமே தேசியத்தைக் கட்டமைத்துவிட முடியாது” என்ற அம்பேத்கரின் கருத்தானது ஜாதி ஹிந்துக்கள் என்ற கருத்தின் மீதான தாக்குதலாகும். அதை பொதுவான ஹிந்துத்துவத்துடன் ஒப்பிட முடியாது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கருடன் அவர் கொண்டிருந்த நட்புறவும், தொடர்பும், பௌத்த மதத்தை நாகபுரியில் (1956) அவர் தழுவியபோது அவர் ஆற்றிய உரையும் இதனை நிரூபிக்கின்றன.

இந்த ஜாதி ஹிந்துக்களின் மனநிலையை மாற்றவே பல விடுதலை வீரர்கள், சமுதாயப் போராளிகள் உருவானார்கள். அவ்வாறு நாட்டின் விடுதலைக்கு உழைத்த அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான கருத்து நிலவியுள்ளது. ராஜராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, வீர சாவர்க்கர், டாக்டர் ஹெட்கேவார், நேதாஜி என இந்த தேசத்தை மறுசீரமைக்கப் போராடிய அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான குரலைக் கேட்க முடியும். ஆனால், அவர்களிடமிருந்து அண்ணல் அம்பேத்கர் வேறுபடுவது, பிறப்பின் அடிப்படையிலான வேறுபாட்டால் ஆகும்.

இந்த தேசம் நலமுடன் வாழ தீண்டமையை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தலைவர்கள் பலரும் பிறப்பினால் உயர்ஜாதியினர். அவர்கள் தங்கள் உணர்வூக்கத்தாலும், மனிதாபிமானத்தாலும், உயர் சிந்தனையாலும், தீண்டாமையை எதிர்த்தனர். ஆனால், அம்பேத்கர் பிறப்பிலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்; அதன் கொடும் கரத்தால் அவதிப்பட்டவர். அவரது உள்ளும் புறமும் அனலாகக் கொதித்தது தனது சமுதாய விடுதலைக்காகவே. அதன் பிறகே அவர் தேச விடுதலை தேவை என்றார். “எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்” என்பது அண்ணலின் கருத்து.

அம்பேத்கரின் தேசியம் குறித்த சிந்தனை, பாகிஸ்தான் பிரிவினையின் போது மிகத் தெளிவாக வெளிப்பட்டது. ஆரம்பத்திலேயே முஸ்லிம் லீகின் வெறித்தனத்தைக் கண்டித்தவர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர். தேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும்.

அம்பேத்கர் கூறுகிறார் : “இஸ்லாமின் குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூகத் தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால்  ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லிம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் , உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லிமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.

அதாவது இஸ்லாமியர்கள் இந்திய மண்ணைவிட இஸ்லாமிய மண்ணையே விரும்புகிறார்கள், விரும்புவார்கள் என்பதை இங்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். முஸ்லிம்களுடைய தேசபக்தி, தேசிய உணர்வு எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை துல்லியமாக விளக்குகிறார் அம்பேத்கர்.

‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார்: “சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்பதிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும். எனவே, இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலையும் சுதந்திரமும் பெறுவதில் மட்டுமல்லாது அந்த விடுதலையையும் சுதந்திரத்தையும் வேறு எந்த அந்நிய சக்தியிடமிருந்தும் பாதுகாப்பதிலும் உடன்பாடு ஏற்படுவது அவசியம். உண்மையில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விடவும் பெற்ற சுதந்திரத்தை ப் பேணிக் காப்பது அதை விடவும் முக்கியமான கடமை என்பதில் ஐயமில்லை.”

“ஆனால் இந்த மிக முக்கியமான கடமை விஷயத்தில் முன்போல் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தோன்றவில்லை. எது எப்படியிருந்தபோதிலும் இந்த விஷயத்தில் முகம்மதியர்களின் போக்கு அத்தமை நம்பிக்கையளிப்பதாக இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணிகாக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்க முடியாது என்று முஸ்லிம் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துகளிலிருந்து இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்.

(ஆதாரம்: இஸ்லாமும் இந்திய தேசியமும்: அம்பேத்கர்– ம.வெங்கடேசன்; தமிழ் ஹிந்து கட்டுரை)

இந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் தொடரும்போது தாழ்த்தப்பட்ட சாதிகள் தம் நிலையிலிருந்து மேம்பட இயலாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “இந்த அரசாங்கம் தொடர்ந்து இப்படியே இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தில் எந்தவொரு பங்கும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை” என்றார்.

இந்தப் பிரச்னையைப் பொருத்த வரை, விடுதலை இயக்கத்தை முன்னடத்திய சிலரைக் காட்டிலும் அம்பேத்கர் முன்னணியில் நின்று 1930 டிசம்பரில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘தாழ்த்தப்பட்ட மக்கள் டொமினியன் அந்தஸ்தைக் கோரவில்லை. ஆனால் மக்களால் மக்களுக்கான, மக்களின் பெயரிலான அரசாங்கத்தைக் கோருகின்றனர்’’

மொத்தமாகப் பார்த்தால், இந்தியாவுக்கு பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று திலகர் அல்லாத காங்கிரஸ் தலைவர்கள் கோராத காலத்திலேயே கோரிக்கை விடுத்தவர் அம்பேத்கர் (1930). பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு என்ற இரண்டு அம்சங்களில் பிற அரசியல் தலைவர்கள் சொல்லத் துணியாத கருத்துகளை நேர்மையுடன் முன்வைத்தவர் அம்பேத்கர்.

தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே.

குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை.

 

குறிப்பு:

திரு. சேக்கிழான், பத்திரிகையாளர்.

இக்கட்ட்ரை அவரது  ‘எழுதுகோல் தெய்வம்’ தளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க:

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவெள்ளி

வந்தேமாதரம் தந்த ரிஷி

-என்.டி.என்.பிரபு

பக்கிம் சந்திர சட்டர்ஜி

பக்கிம் சந்திர சட்டர்ஜி

பக்கிம் சந்திர சட்டர்ஜி

(பிறப்பு: 1838, ஜூன் 27 – மறைவு: 1894 ஏப்ரல் 8)

‘வந்தே மாதரம்’

-இந்த வார்த்தைகள் விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர எழுச்சியை, உத்வேகத்தை ஊட்டிய மந்திர வார்த்தைகள்.

அன்று மட்டும் அல்ல, இன்றும் ‘வந்தே மாதரம்’ என்றால் நாடி நரம்பெல்லாம் தேசபக்தி கணல் பாய்கிறது.

இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், இந்த நாட்டை நம் அனைவருக்கும் சொந்தமாக்க விதை தூவியவர், பக்கிம் சந்திர சட்டோபத்யாய என்னும் பக்கிம் சந்திர சட்டர்ஜி.

1838 ஜூன் மாதம் 27 -ஆம் தேதி, வங்க மாகாணத்தில்,  வடக்கு 24 பர்கானாவில் உள்ள கனந்தல்பரா என்ற ஊரில் பிறந்தார். 1894 ஏப்ரல் 8 -ஆம் தேதி மண்ணைவிட்டு விண் சென்றார்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி, எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாகவும், கலெக்ட்டராக பணியாற்றினார்.

இவர் 13 நாவல்கள் எழுதியுள்ளார். நகைச்சுவை, அறிவியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ என்ற பாடல் ஆகும். அதைப்போல நமது நாட்டின் தேசப் பாடலாக ‘வந்தே மாதரம்’ பாடலும் உள்ளது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் சுதந்திரக் கணலை எழுப்பிய பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் ‘வந்தே மாதரம்’. ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்றது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது. இஸ்லாமியர் மனம் புண்படுகிறது என்று பாடலை தேசிய கீதமாக ஏற்க முடியாது என்ற எதிர்ப்புக் குரல் இப்போதும் ஆங்காங்கே உள்ளது.

பக்கிம் சந்தரர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும், வந்தேமாதரம் பாடல் இடம் பெற்ற ஆனந்த மடம் நாவலை எழுதவும் விதை போட்டவர் ராமகிருஷ்ணர் பரமஹம்சர்.

ஆம். ஒருமுறை பக்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காளத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தட்சிணேஸ்வரம் சென்று ராமகிருஷ்ணரிடம் ஆசி பெற்றார்.

அப்போது ராமகிருஷ்ணர், இவரின் பெயரைக் கேட்டார். இவரும், ‘பக்கிம் சந்திரர்’ என்று பதிலளித்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். அதாவது வளைந்த சந்திரன். ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.

இவரின் பெயரைக் ராமகிருஷ்ண பரஹம்சர் சிரித்தார்.  “ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே! ஆங்கிலேயனின் பூட்ஸ் காலால் மிதிபட்டதில் வளைந்து போய் விட்டாயா?” என்று கேட்டார்.

இந்த வார்த்தையால் சட்டர்ஜி வருத்தமுற்றார். வீடு வந்து சேர்ந்த்தும் அவர் செய்த முதல்வேலை ராஜினாமா கடிதம் எழுதியதுதான். தனது துணை ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார்.

அத்ன்பிறகு தீவிரமாக தேச விடுதலை பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதினார். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக சாதுக்கள் செய்யும் கலகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதினம், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுமாறு மக்களைத் தூண்டுவதாக அமைந்ததாகும்.

சுதந்திரப் போராட்டப் புரட்சிக்குழுக்களுக்கு பக்கிம் சந்திர சட்டர்ஜியின் படைப்புகள் உத்வேகம் ஊட்டின. பக்கிம் சந்திர சட்டர்ஜியின் எழுத்தில் இடம்பெற்றிருந்த  ‘அனுசீலன் சமிதி’ என்ற என்ற இயக்கம் ஆகும்.

பிபின் சந்திர பால் ஆகஸ்ட் 1906-இல் தேசப்பற்றை வளர்க்க ஒரு பத்திரிகை தொடங்க முடிவு எடுத்தபோது ‘வந்தே மாதரம்’ என்றே பெயரிட்டார். லாலா லஜபதி ராயும் இதே பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார்.

பாரதியார் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பக்கிம் சந்திரரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. நமது நாட்டின் 50-ஆவது பொன்விழா சமயத்தில் வந்தே மாதரத்தை தமிழில்  ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தபோது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

சாலப் பெரிய ஆசிரியர்பிரான்!

-ம.வே.பசுபதி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

கற்பனைகள், வர்ணனைகள், நீதிகள், நியதிகள் என அனைத்தும் கருக்கொண்டு, சொற்கட்கு இலக்கண அமைதிகளுடன் உருக்கொண்டு, ஓர் இலக்கியம் வெளிப்படுவது மகப்பேற்றுக்கு ஒப்பானது. சொல்லணி, பொருளணிகளை அணிவித்துத் தன் படைப்பைக் காணும் கவிஞனின் நிலை, நல்ல தாய் அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும் நல்லதாய் அமையும்.

காரணம் தாய் பெறும் குழந்தை பிரம்மப் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை உண்டு. கவிஞனின் இலக்கியக் குழந்தை கலைமகள் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை இல்லை; அழிவதில்லை. “மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வதுபோல் மாயா; புகழ் கொண்டு மற்றுஇவர் செய்யும் உடம்பு’ – என்பது குமரகுருபரரின் திருவாக்கு.

குசேலோபாக்கியானம், சூதசம்ஹிதை என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை உருவாக்கி,  “இவற்றை உங்கள் பெயரில் வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்று வல்லூர் தேவராசப் பிள்ளைக்குக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வல்லூரார் “வேண்டாம்’’ என மறுத்தார். மகாவித்துவான் வற்புறுத்தித் திணித்தார்.

மகாவித்துவான் எப்பொழுது இந்த இலக்கியக் கொடை கொடுத்தார் என்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. வல்லூர் தேவராசப் பிள்ளையின் அழைப்பின்பேரில் மகாவித்துவான் பெங்களூருக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து அவருக்கும் பிறருக்கும் சில நூல்களைப் பாடம் சொன்னார்.

பின்னர் திருச்சிக்கு மீள் பயணம் மேற்கொண்ட நாளில், மகாவித்துவானைப் பிரிய மனமின்றித் தவித்த தேவராசர், மரியாதை நிமித்தமாக ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செய்தார். அன்றைய ஐயாயிரம் இன்றைய கோடிக்குச் சமமென்றே சொல்லலாம்.

நமக்கு இவ்வளவு அதிகமான செல்வமா என மகாவித்துவானின் மனம் மறுதலித்தது. “காணிக்கை’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டதால் மறுக்க முடியவில்லை! அதனினும் மேலான குருவின் வாழ்த்தளிப்பாக, இலக்கியங்களை வழங்கினார். மகாவித்துவானே வென்றார்.

தமிழில் 11,661 செய்யுள்கள் செய்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரே. அவற்றில் 1,293 பாடல்களை “மிகைப்பாடல்கள்’ என்று தனிமைப்படுத்துவதும் உண்டு. அப்படி ஒதுக்கினாலும் 10,368 பாடல்கள் கம்பர் இயற்றியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் நூறாயிரம் செய்யுள்கள் செய்தவர் மகாவித்துவான். இதனால் இவரைப் பத்துக் கம்பர் என்று குறிப்பிடலாம். இதுவரை அச்சில் வெளிவந்துள்ள மகாவித்துவானின் பிரபந்தங்கள், புராணங்கள், சரித்திரச் செய்யுள் நூல்கள் முதலியன மொத்தம் 75.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரம் காலமே கிடையாது. எந்த நேரத்திலும் எந்தப் பணியின் ஊடேயும் பாட போதனை நடைபெறும். நள்ளிரவில் மாணவர்களை அழைத்து “திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’யைப் பாடம் சொன்ன வரலாறும் உண்டு.

வெளியூர்களில் இருக்கும்போது மாலை, இரவு நேரங்களில் அரங்கேற்றம் செய்வார். அன்றைய நாள் காலையில் இயற்றிய கவிதைகளை அவையினர் முன்னே சொல்லி நயங்களுடன் விளக்குவார். மகாவித்துவான் பத்துப் பதினைந்து நாள்கள் ஓர் ஊரில் தங்கினாரென்றால் ஆயிரம் பாடல்களுக்கு மேற்பட்டதான ஒரு தலபுராணம் உருவாகியிருக்கும். அல்லது சில சிற்றிலக்கியங்கள் உருவாகியிருக்கும்.

அவர், கவிதைகளை அதிவேகமாகவும் சொல்வதுண்டு. பல மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்வதும் உண்டு. சொல்லச் சொல்ல எழுதுவதையே தொழிலாகக் கொண்ட சிலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களை ஏடெழுதுவோர் அல்லது கையேட்டுப் பிள்ளை என்பர்.

ஓர் அவசரத் தேவைக்காக மகாவித்துவான் சொல்லும் பாடல்களை ஏட்டில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டார். தன் தொழில் திறமையின் பேரில் அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டவர் அவர். அதனால் அவரிடம் ஆணவப் பேச்சும் உண்டு.

 “என் கை வலிக்கும்படி விரைவாகவும் அதிகமாகவும் கவிதை சொன்னவர் எவரும் இலர்” என்று ஒருநாள் அதிகாலையில் மகாவித்துவானின் மாணவர்களிடம் அவர் கூறினார்.

அன்று காலை ஏழு மணிக்கு மகாவித்துவான், நாகைக் காரோணப் புராணம் சுந்தர விடங்கப் படலக் கவிதைகள் சொல்லத் தொடங்கினார். கற்பனைச் சூறாவளிகளுடன் கவிமழை கனமழையாகப் பொழிந்தது. பகல் பத்து மணிக்குள் நீராடிப் பூசைக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட அவர், அன்றைக்குக் கவிதையில் ஒன்றிக் காலத்தை மறந்தார்.

பதினொரு மணியளவில், ஏடெழுதுபவரின் வலக்கரத்தில் ரத்தம் கட்டிவிட்டது. வலியைத் தன் மனவலிமையால் தாங்கிக் கொண்டு தவித்தபடியே எழுதினார். பன்னிரண்டு மணி ஆயிற்று. மகாவித்துவான் கவி சொல்வதை நிறுத்தவில்லை. ஏடெழுதுவோரின் தாங்கும் சக்தி விடைபெற்றுக் கொண்டது. எழுத்தாணியைக் கீழே வைத்தார். ஓலைகளை அடுக்கிக் கட்டி வைத்தார். மகாவித்துவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி  “இனி என்னால் ஆகாது; என் ஆணவம் அடங்கிப் போயிற்று” என்று அலறினார்.

இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட கவிஞர்களும் தமிழறிஞர்களும்,  “கவி சொல்ல வல்ல நல்வித்தை” என்னும் சகலகலாவல்லிமாலையின் தொடருக்கு மகாவித்துவானே உரிய உதாரணம் என்று கைகூப்பித் தொழுதனர்.

பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடமில்லை. தன்னிடம் தமிழ்ப் படிக்க வந்த ஏழைகளுக்கு உணவு, உறைவிடம் அளித்து நுண்ணறிவுத் தமிழ்ப் புலமை கொடுத்த தனிப்பெரும் புலமைக் கொடையாளி இவரே. கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வங்களைச் சேகரித்து வைத்து மயிலாடுதுறையில் தொள்ளாயிரம் ரூபாயில் இரண்டுகட்டு வீடு வாங்கி, மாணவர்கள் தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்த கருணையாளர் இவர்.

அக்காலப் புலவர்களுக்கே உரிய வறுமையை ருசிக்கவும் செய்தார்; தமக்குக் கிட்டிய வளங்களைத் தமிழார்வலர்களுக்குச் செலவழித்து ரசிக்கவும் செய்தார்.

ஊடக வெளிச்சங்கள் இல்லாத அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  ‘மகாவித்துவான், இந்தியா’ என்று மட்டும் முகவரி எழுதி லண்டனில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதம் மயிலாடுதுறையில் இருந்த இவரிடம் வந்து சேர்ந்ததென்றால், ‘இவரின் மிகுபெரும் புலமைத் தென்றல் உலகின் பல பாகங்களிலிருந்தோர்க்கும் இதமளித்தது’ என்பதுதானே பொருள்?

திருவாவடுதுறை ஆதீனம் இளைய பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நல்லாதரவு காரணமாகத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டவர் இவர். இவரின் அளப்பரும் கவியாற்றலுக்கும் தமிழ் கற்பிக்கும் தனிப்பெரும் திறனுக்குமாக இவருக்கு மேற்படி சன்னிதானம்  ‘மகாவித்துவான்’ என்னும் உச்சமான விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தக்கவருக்குத் தக்க காரணங்களால், தக்கதொரு பெரு நிறுவனம், தக்கதொரு பட்டத்தை வழங்கினால் மட்டுமே, அது அவரின் இயற்பெயரையும் தேவையற்றதாக்கி, என்றும் நிலைபெறும் என்பதற்கு மகாவித்துவானே சான்றானார். மகாவித்துவான் என்ற பட்டத்தைச் சொன்னால், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற அவரின் திருப்பெயர் சொல்ல வேண்டிய தேவை எழுவதில்லையல்லவா?

மகாவித்துவான் படைப்புகளில் தமிழ்த் தொண்டுக்காகவே உருவாக்கிய பெருங்காப்பியப் படைப்பொன்றுண்டு. அப்படைப்பின் பெயர்தான் உ.வே.சா. தமிழ் இலக்கண, புராண, இதிகாச, சாத்திர, தோத்திர, கவித்துவம் ஆகிய அனைத்தியல்களிலும் நுண்மாண் நுழைபுலம் எய்துமாறு உத்தமதான புரத்து உத்தமரை உருவாக்கியவர் இவரே.

 “மூலையிலே இருந்தாரை முன்றிற்கழைப்பவரே

சாலப் பெரியரென் றுந்தீபற”

-என்பதற்கேற்பச் சூரிய மூலையிலே உதித்த சுடர்க் கொழுந்தை, குன்றேறி ஒளிவிட வழிசெய்த  ‘போதனைப் புனிதர்’ மகாவித்துவானே ஆவார்.

தம் குருநாதரின் சரித்திரத்தை விரிவாக எழுதி வெளியிட்டும், அவரின் நாற்பத்திரண்டு கவிதைப் படைப்புகளை இரு தொகுதிகளாக வெளியிட்டும் அவருக்குப் புகழஞ்சலி செய்த நன்மாணாக்கரும் உ.வே.சா.வே.

உ.வே.சாமிநாதய்யருக்கு மிகப் பிடித்த பேச்சு என்றால் மகாவித்துவானைப் புகழ்வதே. உ.வே.சா. பெற்ற புகழில் பெரும் பங்கு இந்த ஆசிரியப் பிரானின் திருவடிகட்கே உரியன.

இன்று நாம் மகாவித்துவானைப் பற்றிப் பேசுகிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்குக் காரணமும் அவரது மாணாக்கர் உ.வே.சா தான்.  ‘தமிழ்த் தாத்தா’ தனது குருநாதர் ‘மகாவித்துவான்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எழுதிப் பதிவு செய்திருக்காவிட்டால், நாம் அந்த மாமேதையைப் பற்றித் தெரிந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

ஆசிரியர்களால் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கும் மாணவர்களால்தான் ஆசிரியர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கு மகாவித்துவானும் அவர் உருவாக்கிய மாணவரும்தான் எடுத்துக்காட்டு!

குறிப்பு:

திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர்.

இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (06.04.2015) வெளியானது.

காண்க: ஆசான்களின் ஆசான்…

%d bloggers like this: