Blog Archives

உலகைக் கவர்ந்த தொல்தாவரவியல் நிபுணர்

-வ.மு.முரளி

பீர்பல் சாஹ்னி

பீர்பல் சாஹ்னி

(பிறப்பு:  1891,நவ. 14- மறைவு:  1891,நவ. 14)

 

அறிவியல் வளர்ச்சிக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்ற பொதுவான கருத்து நம் மனதில் பதிவாகியுள்ளது. அது முழுவதும் உண்மையல்ல. உலக அளவில் அறிவியல் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பலரும் அரும்பணி ஆற்றியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், உலக அளவில் புகழ் பெற்ற தொல்தாவரவியல் விஞ்ஞானியான பீர்பல் சாஹ்னி.

தாவரவியல் (Botany) என்பது பொதுவாக உலகிலுள்ள பலவகையான தாவரங்களை ஆராய்வது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தத் தாவரங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தன என்று ஆராய்வது தொல்தாவரவியலாகும் (Paleobotany).

புதைபடிவுகளிலிருந்து கிடைக்கும் தாவரப் படிமங்களை ஆராய்வது இத்துறையாகும். இது நிலவியல் (Geology), மானுடவியலின் (Anthropology) ஆராய்ச்சிகளுக்கும் உதவக் கூடியது.

மிகுந்த பொறுமையும் கடின உழைப்பும் தேவைப்படும் இந்தத் துறையில் உலகப் புகழ் பெற்ற ஆராய்ச்சியாளராக பீர்பல் சாஹ்னி விளங்கினார்.

பிரிக்கப்படாத பாரதத்தில், மேற்கு பஞ்சாபில் (தற்போதைய பாகிஸ்தான்) ஷஹரான்பூர் மாவட்டத்தில் உள்ள பெஹ்ரா கிராமத்தில், 1891,நவ. 14-இல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரான பேரா. ருச்சி ராம் சாஹ்னியின் மூன்றாம் மகனாகப் பிறந்தார் பீர்பல் சாஹ்னி.

இவரது இல்லத்துக்கு மோதிலால் நேரு, மதன்மோகன் மாளவியா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் அடிக்கடி வருவர். அதன்காரணமாக, தேசப்பற்றும் நாட்டுக்கு சேவை செய்யும் எண்ணமும் சிறு வயதிலேயே பீர்பலுக்கு ஏற்பட்டன.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (1911) பயின்ற பீர்பல், மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். கேம்பிரிட்ஜில் இம்மானுவேல் கல்லூரியில் தாவரவியலில் பட்டம் (1914) பெற்ற பீர்பல், தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அப்போது, உலகப் புகழ்பெற்ற தாவரவியல் விஞ்ஞானியான பேரா. ஆல்பிரட் செவர்டு வழிகாட்டுதலில் பீர்பல் ஆய்வுகளில் ஈடுபட்டார். துடிப்புள்ள இளைஞனான பீர்பலின் அறிவும் செயல்திறம் செவர்டு தம்பதிக்கு மிகவும் பிடித்துப்போயின; அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதி அன்பு காட்டினர்.

அவரது வழிகாட்டலில் இந்தியாவின் கோண்ட்வானா பிரதேசத்திலுள்ள தாவரங்கள் குறித்த மீள் ஆய்வை பீர்பல் மேற்கொண்டார். புகழ் பெற்ற லாசன்ஸ் தாவரவியல் குறிப்பேடு (Lawson’s textbook on Botany) அவரால் மீள் ஆய்வு செய்யப்பட்டது. இளம் வயதிலேயே இந்திய தாவர வல்லுநர் என்று பெயரெடுத்தார் பீர்பல்.

உறையில்லாத வித்துத் தாவரங்கள் (Gymnosperms) குறித்த ஆய்வுக்காக பீர்பலுக்கு டி.எஸ்சி. பட்டம் (1919) வழங்கப்பட்டது. அதன்பிறகு அவர் தாய்நாடு திரும்பினார்.

1920-இல் சாவித்ரி சூரியை பீர்பல் சாஹ்னி மணம் புரிந்தார். கணவரின் மனமறிந்த மனைவியாக அவரது தாவரவியல் ஆராய்ச்சிகளில் சாவித்ரி வாழ்நாள் முழுவதும் உடனிருந்தார்; பீர்பல் சென்ற இடமெல்லாம் துணையாகச் சென்று அவரது ஆராய்ச்சிகளுக்கு பேருதவி புரிந்தார்.

காசியிலுள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றிய பீர்பல் (1920), அடுத்த ஆண்டு, லக்னோ பல்கலைக்கழகத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட தாவரவியல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கிருந்த தாவரவியல் ஆய்வுக்கூடம் பீர்பலின் வாழ்க்கையில் முக்கியமான மையமானது. பீர்பலின் ஆராய்ச்சி தொடர்பான மாதிரிகள், நூல்கள், ஆதாரங்களின் ஆவண மையமாக அது மாறியது.

தாவரவியல், தொல் தாவரவியலில் பல முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் பீர்பல் எழுதியிருக்கிறார். அவரது தொடர்ந்த ஆராய்ச்சிகளுக்காக 1929-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

இந்தியாவில் தொல்தாவரவியல் துறையை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கான கல்வி மையம் உருவாக்கப்பட வேண்டும் என்பது பீர்பலின் கனவு. அதை நனவாக்க தனது வாழ்நாளெல்லாம் இடையறாது பாடுபட்டார்.

1939-இல் சக விஞ்ஞானிகளுடன் இணைந்து  ‘தொல்தாவரவியல் சங்கம்’ என்ற அமைப்பை பீர்பல் நிறுவினார். அந்த சங்கத்தின் தொடர் முயற்சிகளால் 1946, செப். 10-இல் தொல்தாவரவியல் கல்வி மையம் (The Institute of Palaeobotany) லக்னோவில் துவங்கப்பட்டது. அதன் முதல் இயக்குநராக பீர்பலே பொறுப்பேற்றார்.

நிலவியலிலும் தொல்லியலிலும் ஆர்வம் கொண்டிருந்த பீர்பல் சாஹ்னி, இந்திய நிலவியல் அளவீட்டுக் கழகத்தின் (Geological Survey of India) ஆய்வுகளுக்கு உதவி புரிந்தார்.

தாவரவியலில் புகழ்பெற்ற உலக விஞ்ஞானிகளுடன் தொடர்ந்த நல்லுறவை பீர்பல் கொண்டிருந்தார். பிரிட்டனின் எஃப்ஆர்எஸ் 1939-இல் இவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பல உலக அளவிலான கெüரவங்கள் பீர்பலைத் தேடி வந்தன.

தேசிய அறிவியல் அகாதெமியின் தலைவராகவும் (1937- 1939), இந்திய அறிவியல் காங்கிரஸின் தலைவராகவும் (1940) செயல்பட்ட பீர்பல், 1950-இல் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற சர்வதேச தாவரவியல் காங்கிரஸின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், அவரது இடையறாத உழைப்க்கு முற்றுப்புள்ளிவிழுந்தது. 1949- ஏப். 10-இல் பார்பல் சாஹ்னி காலமானார். அதற்குள் அவரது கல்விமையக் கனவு உயிர் பெற்றிருந்தது. அதை அவரது மனைவி சாவித்ரி சாஹ்னி புகழ்பெற்ற நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

அறிவியலின் ஒரு பிரதானத் துறையாக இருந்தபோதும் வெகுமக்கள் பிரபலம் அல்லாத துறையாக தொல்தாவரவியல் உள்ளது. ஆயினும், தனது தனிப்பட்ட நலனைக் கருத்தில் கொள்ளாமல், சந்தனம் போல தன்னையே ஈந்து அத்துறைக்கு இந்தியாவில் உயிர் கொடுத்த பீர்பல் சாஹ்னியை விஞ்ஞான உலகம் என்றும் மறக்காது.

 

குறிப்பு:

திரு. வ.மு.முரளி பத்திரிகையாளர்.

இக்கட்டுரை தினமணி நாளிதழில் வெளியானது.

காண்க: வ.மு.முரளி

.

Advertisements

வெள்ளையரைக் கொள்ளையிட்ட வீராதி வீரன்

-வ.மு.முரளி

வாசுதேவ் பல்வந்த் பட்கே

வாசுதேவ் பல்வந்த் பட்கே

(பிறப்பு:  1845, நவ. 4 – பலிதானம்: 1883, பிப். 17)

இந்திய ஆயுதப் புரட்சிக் குழுக்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர், மராட்டிய மாவீரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே. ஆங்கிலேய ஆட்சியால் சீர்குலையும்  இந்தியப் பொருளாதாரம் கண்டு பொருமிய அவர், ஆயுதக் குழுக்களை உருவாக்கி வெள்ளையர் கஜானாவைக் கொள்ளையடித்து ஆதிக்க ஆட்சியை அதிர வைத்தார்.

மகாராஷ்டிராவின் ராஜ்காட் மாவட்டம், பன்வேல் வட்டம், ஷிர்தான் கிராமத்தில், விவசாயக் குடும்பத்தில், மராட்டிய சித்பவன் பிராமண வகுப்பில், 4.11.1845-ல் பிறந்தார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. சிறுவயதிலேயே மல்யுத்தம் உள்ளிட்ட உடற்பயிற்சி சாகசங்களில் நாட்டம் கொண்டிருந்த பட்கே, உயர்நிலைப் பள்ளியில் இடைநின்றார். எனினும், புனாவில் இருந்த ராணுவ கணக்குத் துறையில் எழுத்தராகப் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் 15  ஆண்டுகள் பணிபுரிந்தார். அப்போது ஆங்கிலேயே ஆட்சியின் அநியாயங்களை  நேரில் காணும் வாய்ப்பு பெற்றார்.

அப்போது புரட்சிவீரர் லாஹுஜி வஸ்தாத் சால்வே உடன் பட்கேவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சால்வே நடத்திய உடற்பயிற்சிசாலை சென்ற பட்கே, அங்கு தேசபக்திப் பிரசாரங்களை அறிந்தார். அதே சமயம் மராட்டியத்தில் புகழ் பெற்று விளங்கிய மகாதேவ கோவிந்த ரானடேவின் சொற்பொழிவுகளையும் அவர் கேட்டார். அப்போது, நமது நாட்டின் பொருளாதார வளம் ஆங்கிலேய அரசால் கொள்ளையடிக்கப்படுவது பட்கேவுக்குப் புரிந்தது. இதற்கு மாற்றாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையில், ‘ஐக்கிய வர்த்தினி சபா’ என்ற அமைப்பை 1870 ல் நிறுவினார் பட்கே.

அதன்மூலமாக  இளைஞர்களை பட்கே ஒருங்கிணைத்தார். சால்வே  உடனான் தொடர்பால், பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த மக்களுடன் இணைந்து பணி புரிவதன் வாயிலாகவே ஆங்கிலேயரை எதிர்க்க முடியும் என்று உணர்ந்தார் பட்கே.

இந்நிலையில் தான் பட்கேயின் வாழ்வில் திருப்புமுனையான சம்பவம் நடந்தது. அவரது தாய் மரணத் தறுவாயில் இருந்தபோது அவரைக் காண விடுமுறைக்கு விண்ணப்பித்தார் பட்கே. ஆனால், விடுமுறை மறுக்கப்பட்டது. அதனால் தாயின் இறுதிக்கணத்தில் அவரால் உடனிருக்க முடியாமல் போனது. இதனால் மனம் வெகுண்ட பட்கே அரசுப் பணியிலிருந்து விலகினார். ஏற்கனவே அவரது நெஞ்சில் கனன்ற சுதந்திர தாகம், எரிமலையாய் வெடித்தது.

1875 ல் பரோடா சமஸ்தானத்தின் கெய்க்வாட் மன்னர் ஆங்கிலேய அரசால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அதனை எதிர்த்து பட்கே மக்களிடம் தீவிரமாக பிரசாரம் செய்தார். அந்தச் சமயத்தில் தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் நிலவியது. ஆங்கிலேய அரசு நாட்டைச் சுரண்டுவதில் காட்டிய அக்கறையை நாட்டு மக்களைக் காப்பதில் காட்டுவதில்லை என்பதை உணர்ந்த பட்கே, பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் துடித்தார். அதற்காக ஆங்கிலேய அரசின் கருவூலங்களைக் கொள்ளையடிக்கவும் துணிந்தார்.

மராட்டியத்தின் ராமோஷி, கோலிஸ், பில்ஸ், தாங்கர்ஸ் ஜாதி மக்களை திரட்டிய பட்கே, அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 300  இளைஞர்களைக் கொண்டு ஒரு தாக்குதல் படையை உருவாக்கினார். அவர்களுக்கு துப்பாக்கியால் சுடுதல், குதிரையேற்றம், தற்காப்பு உத்திகளைப் பயிற்றுவித்தார். இந்தப்படை முதன்முதலாக  ஆங்கிலேய அரசுக்கு செலுத்துவதற்காக வசூலித்து  வைக்கப்பட்டிருந்த கப்பப் பணம் ரூ. 400  ஐ ஒரு வர்த்தகர் வீட்டிலிருந்து கொள்ளை அடித்தது. அந்தப் பணம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.

அரசுப் பணத்தைக் கொள்ளையடித்த கும்பல் மீது அரசு தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டது. ஆனால், உள்ளூர் மக்களின் ஆதரவு காரணமாக, பட்கே குழுவினரைப் பிடிக்க முடியவில்லை. இவ்வாறு பல இடங்களில் அரசு பணத்தைக் கொள்ளையடித்த பட்கே குழு ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பனம் ஆனது.

எனினும், பட்கேவின் தளகர்த்தரான தவுலத்ராவ் நாயக் என்னும் ராமோஷி இனத் தலைவர் சிக்காலி என்ற இடத்தில் அரசு கஜானாவில்  ரூ. 1.5  லட்சம் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்துத் தப்பியபோது அரசுப் படைகளால் சூழப்பட்டார். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தவுலத்ராவ் நாயக் கொல்லப்பட்டார். பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது.

கொள்ளைக் கும்பலின் தலைவனான பட்கேவுக்கு ஆங்கிலேய அரசு வலை விரித்தது. அவர்களிடமிருந்து தப்பி ஸ்ரீசைலம் சென்ற பட்கே, மல்லிகார்ஜுனர் கோயிலில் தலைமறைவாக சில நாட்கள் இருந்தார். அங்கிருந்தபடி, மீண்டும் 500  இளைஞர்கள் கொண்ட மற்றொரு படையை உருவாக்கினார் பட்கே. எனினும் பெரும் ஆயுத பலம் கொண்ட ஆங்கிலேய அரசு முன் பட்கேவின் முயற்சிகளுக்கு பெரும் பலன் கிடைக்கவில்லை. கானூர் என்ற இடத்தில் பிரிட்டீஷ் ராணுவம் மீது பட்கே குழு நடத்திய நேரடித் தாக்குதல், அரசுக்கு எச்சரிக்கையாக அமைந்தது.

ஆங்காங்கு கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த வாசுதேவ் பல்வந்த் பட்கேவைப் பிடித்துத்  தருவோருக்கு  வெகுமதி அழைப்பதாக அரசு அறிவித்தது.  இதற்கு பதிலடியாக, பம்பாய் மாகாண ஆளுநரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசளிப்பதாக பட்கே அறிவித்தார்!

ஆங்கில அரசின் தேடுதல் வேட்டையிலிருந்து  தப்பிய பட்கே, ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு சென்றார்.  அங்கும் அவர் புரட்சிப்  படைக்கு  ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுவந்தார். ஆனால், இரவும் பகலும் பலநூறு ஆங்கிலேய போலீசார் பட்கேவை  வலைவீசித் தேடி வந்தனர். நிஜாம் அரசின் காவலர்களும் அவர்களுக்கு உதவியாக பட்கேவைத் துரத்தினர். இறுதியில் பந்தர்ப்பூர் செல்லும் வழியில், காட்டிக்கொடுத்த துரோகி ஒருவனின் உதவியுடன் பட்கேவை கலாட்சி என்ற இடத்தில் 20.7.1879-ல் கைது செய்தனர் பிரிட்டீஷ் போலீசார்.

புனா கொண்டுசெல்லப்பட்ட பட்கேவும் அவர்தம் தோழர்களும் ஆங்கிலேய அரசின் விசாரணைக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். பட்கே அடேன் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், சிறைக்கதவை உடைத்து தப்பினார் பட்கே (13.2.1883). அதன்மூலமாக மராட்டியம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தினார். எனினும் மிகக் குறுகிய காலத்தில் பட்கேவை மீண்டும் கைது செய்த பிரிட்டீஷ் போலீசார்,  மீண்டும் சிறைக்கு அனுப்பினர்.

சிறையில் அவருக்கு பயங்கர கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவற்றைக் கண்டித்து, சிறைக்குள்  உண்ணாவிரதத்தைத் துவக்கினார் வாசுதேவ் பல்வந்த் பட்கே. தொடர் உண்ணாவிரதத்தின் முடிவில், 17.2.1883 -ல் உயிர்நீத்தார் பட்கே.

பட்கேவின் உயிர்த்தியாகம் ஆங்கிலேய அரசுக்கு ஒருவாறாக நிம்மதி அளிப்பதாக அமைந்தது. ஆயினும் பிற்காலத்தில் நாட்டில் தோன்றிய புரட்சிப் படைகளுக்கு பட்கேவின் வீரம் உந்துசக்தி அளிக்கும் காவியமாக மாறியது.

.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

கப்பலோட்டிய தமிழர்

-தஞ்சை வெ.கோபாலன்

வ.உ.சிதம்பரம் பிள்ளை

வ.உ.சிதம்பரம்  பிள்ளை

(பிறப்பு: 1872, செப். 5 – மறைவு: 1936, நவ. 18)
.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர்.

காங்கிரஸ் வரலாற்றை மிதவாத அரசியல்வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. போராடினார்.

தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம் தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5-ஆம் நாள்.

கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர் தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர்.

தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895-இல் தமது 23-ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.

வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906-இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை ‘இந்தியா’ அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர்.

1905-இல் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர் பிரிட்டிஷ்காரர்கள். நாடெங்கிலும் எதிர்ப்பலை எழுந்தது. விபின் சந்திர பால் சென்னை வந்து கடற்கரையில் ஒரு சொற்பொழிவாற்றினார். 1908-இல்  ‘சென்னை ஜனசங்கம்’ எனும் அமைப்பு ஒன்று தோன்றியது. இதில் வ.உ.சி. நிர்வாகக் குழுவின் இருந்தார்.

வ.உ.சி. தூத்துக்குடியில் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பார்த்து பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக் கூட அறிவித்தது.

1907-இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குதான் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டிக்கும், மிதவாதத் தலைவர்களுக்குமிடையே பூசல் எழுந்து மாநாடு நின்று போயிற்று. இதற்கு வ.உ.சி, மகாகவி பாரதி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னையிலிருந்து ரயிலில் சென்றனர்.

அங்கிருந்து திருநெல்வேலி திரும்பிய வ.உ.சி. ‘தேசாபிமானச் சங்கம்’ என்றதொரு அமைப்பைத் தோற்றுவித்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். ஆங்கில நிர்வாகம் இவர் மீது ஆத்திரம் கொண்டது.

தனது வீரமான மேடைப் பேச்சினால் மக்களை மிகவும் கவர்ந்து வந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா இவரது ஆதரவில் இவரோடு தங்கியிருந்து பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். எங்கும் சுதந்திர வேகத்தையும் ‘வந்தேமாதர’ கோஷத்தையும் இவர்கள் இருவரும் பரப்பி வந்தனர். அப்போது தூத்துக்குடியில் துணை மாஜிஸ்டிரேட்டாக இருந்த ஆஷ் எனும் ஆங்கிலேயன் வ.உ.சி மீது வன்மம் பாராட்டி இவருக்கு இடையூறு செய்து வந்தான். அதற்கு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையும் ஆதரவாக இருந்தான்.

1918-இல் ஏப்ரல் 13. பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் பயங்கரமாக பொதுமக்களை ஆயிரக் கணக்கில் சுட்டுத் தள்ளினான் ஜெனரல் டயர் என்பவன். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய கூட்டம் நடைபெற்றது. வ.உ.சி.யும் சிவாவும் பேசினர். விபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாள் விழாவாக அது நடைபெற்றது.

போலீஸ் அடக்குமுறையாலும், ஆஷ், கலெக்டர் ஆகியோரின் வெறித்தனத்தாலும் அன்று திருநெல்வேலியில் பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனை ‘நெல்லைச் சதி வழக்கு’ என்ற பெயரில் விசாரித்தார்கள். இந்த வழக்கின் முடிவில் வ.உ.சி.க்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுத்தார்கள். இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சி.க்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்து தான்.

இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்தபோது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர்.

(இந்தச் செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972- இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.)

இதற்கிடையே ஆஷ் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராக ஆனான். அவன் தன் மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தன் மக்களைப் பார்ப்பதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் மாற்று ரயிலுக்காகத் தன் ரயில் பெட்டியில் காத்திருக்கும்போது, வாஞ்சிநாதன் எனும் செங்கோட்டை வாலிபன் உள்ளே நுழைந்து ஆஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வெளியே வந்து தானும் சுட்டுக்கொண்டு இறந்து போனான்.

ஆளுவோரின் சந்தேகம் வ.உ.சி., பாரதி. வ.வே.சு. ஐயர் ஆகியோர் மீதும் விழுந்தது. சிறையிலிருந்த வ.உ.சிக்கு இதனால் மேலும் சில கஷ்டங்கள் நேர்ந்தன. பாரதியை பிரிட்டிஷ் வேவுகாரர்கள் வேவு பார்த்துத் தொல்லை கொடுத்தனர். 130 பவுண்டு எடையோடு சிறை சென்ற இவர் வெளிவரும்போது 110 பவுண்டு இருந்தார்.

இவர் சிறையில் இருந்த காலத்தில் இவரது சுதேசி கப்பல் கம்பெனி ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டு விட்டது. இவர் 24-12-1912இல் விடுதலை செய்யப்பட்டார். சுப்பிரமணிய சிவா 2-11-1912இல் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் இவர் சிறையில் இருந்த போது தொழுநோய் அவரைப் பற்றிக்கொண்டது. வியாதியஸ்தராகத்தான் இவர் வெளியே வந்தார். ‘இது சிறை தந்த சீதனம்’ என்று மனம் நொந்து கூறினார் சிவா.

ஆயிரக் கணக்கான மக்கள் வழியனுப்ப சிறை சென்ற வ.உ.சி. விடுதலையாகி வெளியே வரும்போது எவரும் இல்லை. தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருந்தார். இதனை பி.ஆர்.பந்துலு எனும் சினிமா தயாரிப்பாளர் தான் தயாரித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ எனும் படத்தில் காட்டியிருந்தார். பார்த்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

சிறைவாசம் முடிந்து வ.உ.சி. தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்லவில்லை. மாறாக சென்னை சென்றார். இவர் சிறைப்பட்டதால் இவரது வக்கீல் சன்னது பறிக்கப்பட்டது. சென்னையில் என்ன தொழில் செய்வது? மண்ணெண்ணை விற்றார். சரிப்பட்டு வரவில்லை. மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எனும் தேசபக்தர் இவருக்கு உதவினார்.

சென்னையில் சில பிரபல தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு.வி.க., சிங்காரவேலர், சர்க்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோர் அவர்கள். சென்னை பின்னி மில், சென்னை டிராம்வே தொழிலாளர்கள், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டார்.

இந்திய தொழிலாளர் இயக்கத்தில் அன்னிய நாட்டில் பிறந்த அன்னிபெசண்ட் ஈடுபடுவதை இவர் எதிர்த்து குரல் கொடுத்தார். சிலகாலம் இவர் கோயம்புத்தூரிலும் சென்று தொழிற்சங்கப் பணியாற்றினார். எனினும் முன்போல காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

திலகர் காலமாகிவிட்ட பிறகு மகாத்மா காந்தி 1919-இல் இந்திய சுதந்திரப் போரை முன்னின்று நடத்தத் தொடங்கினாரல்லவா? அப்போது அவர் ஒரு சில நேரங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டு மகாத்மாவின் சாத்வீக இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு அவரது நம்பிக்கை தளர்ந்தது போலும். 1920 ஆகஸ்டுக்குப் பிறகு இவர் ‘திலகர் ஒத்துழையாமை மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை. சட்டப்படியான ஆயுதத்தைப் பயன்படுத்தியே சுதந்திரம் பெற வேண்டும்” என்றும் பேசியிருப்பதிலிருந்து இவருக்குச் சிறுகச் சிறுக மகாத்மாவின் சாத்வீக இயக்கத்தில் நம்பிக்கை இழப்பு நேர்ந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு காங்கிரசிலிருந்து இவர் விலகினார். கொள்கை காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. பிறகு 1927-இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மகாநாட்டில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். எனினும் பிறகு இவர் காங்கிரசில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை.

1916-இல் சென்னை ராஜதானியில் டாக்டர் நாயர் தலைமையில் தோன்றி வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார் இயக்கத்தின்பால் இவருக்கு ஈடுபாடு வந்தது. 1927-இல் இவர் கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் தலைமை ஏற்றார். எனினும் இந்த இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியாக மாறியபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்த போதும் வ.உ.சி. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

பல துறைகளிலும் பிராமணரல்லாதார் பின்தங்கி இருப்பதற்காக அவர் வருந்தினார், அவர்கள் முன்னேற பாடுபடவும் விரும்பினார் என்றாலும் அதற்காக பிராமணர் – பிராமணரல்லாதார் எனும் சாதி வேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் தோன்றுவதையோ, வளர்வதையோ அவர் விரும்பவில்லை.

பெறுதற்கரிய ஓர் சிறந்த தேசபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936 நவம்பர் 18-ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தறுவாயில் மகாகவியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’ எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது.

வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்!

 ***

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடிய பாடல் இது:

சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் – அங்கே

சுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால்

விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் – நாட்டின்

விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

 

திலக மகரிஷியின் கதைபாடும் – போது சிதம்பரம்

பிள்ளை பெயர் வந்து சுதிபோடும்

வலது புயமெனவே அவர்க்குதவி – மிக்க

வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி.

 

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் – அதில்

துன்பம் பல சகித்த அணிமனத்தான்

விதேச மோகமெல்லாம் விட்டவனாம் – இங்கே

வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

 நன்றி: ‘தமிழன் இதயம்’

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன்,  திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தி வருபவர்; 4 நூல்களை எழுதி இருக்கிறார்.  ஆன்மிக, கலாசார இயக்கங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர்.

நன்றி: சுதந்திரப் போராட்ட தியாகிகள்

காண்க:

செக்கிழுத்த செம்மல்

மழலை இலக்கியம் படைத்த மாமா

 -வ.மு.முரளி

ஆனந்த் பை

ஆனந்த்  பை

(பிறப்பு: 1929, நவ. 17 – மறைவு: 2011, பிப். 24)
 .
அமர் சித்திர கதைகள் மூலமாக நாடு முழுவதும் குழந்தைகளுக்கான பாரம்பரிய இலக்கியத்தை செழுமையாக்கியவர், ஆனந்த் பை.
 .
கர்நாடகாவின் கர்கலாவில் வேங்கடராயா – சுஷீலா பை தம்பதியினரின் மகனாக 17.09.1929  ல் பிறந்தவர் ஆனந்த். இரு வயதிலேயே பெற்றோரை இழந்த  இவர், உறவினர்களால் வளர்க்கப்பட்டார். 12  வயதில் மும்பை வந்த ஆனந்த் மாஹிமில் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ரசாயனத் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்ற ஆனந்த் பை,  1954  ல் ‘மானவ்’ என்ற குழந்தைகள் இதழைத் தொடங்கி நடத்த முடியாமல் கைவிட்டார். பிறகு, டைம்ஸ் ஆப் இந்தியாவின் ‘இந்திரஜால்’ காமிக்ஸ் வெளியீட்டு பிரிவில் பணி புரிந்தார்.
 .
1967-இல் இவரது மனக்கண்ணைத் திறக்கும் ஒரு  நிகழ்ச்சி நடந்தது.  தூர்தர்ஷன்  நடத்திய கேள்வி-பதில் நிகழ்ச்சியை ஆனந்த் பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிரேக்க புராணங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கூட பதில் அளித்த குழந்தைகள்,  நமது இதிகாசமான ராமாயணத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறியதைக் கண்டார். ஸ்ரீ ராமனின் தாய் பெயர் சொல்ல முடியாத குழந்தையைக் கண்ட அவர், அப்போதே அதற்கான முயற்சிகளில் ஈடுபடத் துணிந்தார்.
 .
நல்ல ஊதியம் தரும் வேலையைக் கைவிட்டு, ‘அமர் சித்திரக் கதா’  நிறுவனத்தை அதே ஆண்டில்  தொடங்கினார். பிரபல நிறுவனங்கள் அவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கத் தயங்கிய நிலையில், இந்திய புக் ஹவுசின் ஜி.எல்.மிர்ச்சந்தனி ஆனந்த் பைக்கு கை கொடுத்தார். பாரதத்தின் பாரம்பரியம், இலக்கியங்கள், பண்பாடு, தலைவர்கள் குறித்த சித்திரக் கதைகளை இந்நிறுவனம் வெளியிட்டது. குறுகிய காலத்திலேயே நிறுவனம் புகழ் பெற்றது. நிறுவனம் வளர்ந்தபோது, சித்திரக்கதை எழுத்தாளராகவும், ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் மாறினார் ஆனந்த் பை.
 .
ராமாயணம்,  மகாபாரதம்,  பாகவதம் கதைகள் மட்டுமல்லாது, சுதந்திரப் போராட்ட வீரர்கள்,  நமது நாட்டின் மன்னர்கள்,  வீரர்கள், புலவர்கள், ஆன்மிக ஞானிகள், துறவிகள், சமயச் சான்றோர்கள், தொண்டுள்ளம் படைத்த மகான்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள் குறித்த படக்கதைகளை அமர் சித்திரக் கதா நிறுவனம் வெளியிட்டது.  தற்போது, 440  தலைப்புகளில் 8.6  கோடி காமிக்ஸ் புத்தகங்களை, இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்றுள்ளது. இந்த சித்திரக் கதை படித்து வளர்ந்த குழந்தைகளின் ஞானம் பாரதப் பாரம்பரியம் குறித்த தெளிவுடன் விசாலமானது.
 .
1969-இல் ஆனந்த் பை நாட்டின் முதல் கார்டூன் சிண்டிகேட் நிறுவனமான ‘ரங் ரேகா பியுச்சர்ஸ்’ நிறுவினார்; 1980-இல் ‘டிவிங்கிள்’  என்ற ஆங்கில குழந்தைகள் இதழைத் தொடங்கினார். இதன்மூலமாக லட்சக் கணக்கான குழந்தைகளின் உள்ளம் கவர்ந்தார்.
 .
ராமுவும் சாமுவும், கபிஷ், லிட்டில் ராஜி, பேக்ட் பேண்டசி, பன் லேண்ட் போன்ற சித்திரத் தொடர்கள்  ஆனந்த் பையால் உருவாக்கப்பட்டவை. இவை பல நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் வெளியாகி, மழலைகளை மகிழ்வித்தன. தமிழில் வெளியான பைக்கோ  நிறுவனத்தின்  ‘பூந்தளிர்’ மாத இதழ், அமர் சித்திரக் கதா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, இக்கதைகளை தமிழில் (தமிழாக்கம்: வாண்டுமாமா) வெளியிட்டது.
 .
‘ஏகம் சத் (இறைவன் ஒருவரே)’, ‘வெற்றிக்கு ஏழு பாதைகள்’ ஆகிய இரு வீடியோ படங்களையும் ஆனந்த் பை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தயாரித்துள்ளார். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான தன்னம்பிக்கையூட்டும் நூல்கள், ஆளுமை வளர்ப்பு நூல்களையும் பை எழுதியுள்ளார். தனது கார்டூன் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் பை.
 .
இவரது வாழ்வே, நமது எதிர்காலத் தலைமுறைக்கு நாட்டின் பழம்பெருமையை நினைவு படுத்தும் நோக்கத்துடன் கழிந்தது. அதே நேரம் அறிவியலின் தாக்கமும், நவீனக் கல்வியின் ஊக்கமும் பையின் சித்திரக் கதைகளுக்கு புது மெருகும் புத்திளமையும் அளித்தன. குழந்தைகளைப் பொருத்த  வரை, இவர் மழலை இலக்கியம் படைத்ததால்  ‘பை மாமா’ ஆனார்.
 .
குழந்தைகள்  இலக்கியம் படைப்பதில் பாரம்பரியம் காத்த ஆனந்த் பை, கடந்த பிப். 24  ம் தேதி மறைந்தார். ஆயினும், அவர் படைத்த அமர் சித்திரக் கதைகள் உள்ள வரையிலும் அவர் என்றும்,  புதிய புதிய  குழந்தைகளின் வாசிப்பில் வாழ்வார்.
 .

பிரெஞ்ச் நாடு தந்த அன்னை

-பி.எஸ்.ரமணன்

ஸ்ரீ அன்னை

புதுவை ஸ்ரீ அன்னை

(பிறப்பு: 1878, பிப். 21- மறைவு:1973, நவ.  17)

‘கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’

– இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது.  ‘மதர்’ என்றாலும்  ‘ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும்.

கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மிக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். வளர வளர இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டவர், பின் பாண்டிச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார்.

1878, பிப்ரவரி, 21 -அம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது.

அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெளியேறுவார். வீடு, தெரு, நகரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து மேகக் கூட்டங்களினிடையே காட்சி அளிப்பார். பொன்னொளி வீசிக் கொண்டிருக்கும் அவர் உடலை, ஒளீவீசக் கூடிய ஒரு நீண்ட பட்டாடை தழுவிக் கொண்டிருக்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துன்பமுற்றவர்களும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழியால் அவர்களைப் பார்ப்பார் மிரா.

ஒளீவீசும் அவருடைய பட்டாடையைத் தொட்டவுடன் சிலருக்குப் பிணி தீரும். சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்வர்.

தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இக்கனவு அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிர்ரா அன்னையாக உயர்ந்த போது, அவர் அளித்த பால்கனி தரிசனத்திற்கு முன்மாதிரியாய் இக்கனவு அமைந்திருந்தது.

பிரான்சில் அன்னை வசித்த போது அவரது கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்களும் தோன்றி பல உண்மைகளை அவருக்கு போதித்தனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடனும் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர், இந்தியத் தத்துவங்கள் பற்றியும், வேத உபநிஷத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அன்னை அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டார்.
பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த போது, அவரே தனக்கு கனவில் வந்து பல உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரே தனது குரு என்பதையும் கண்டு கொண்டார். அவரையே முழுமையாகச் சரணடைந்தார். தனது ஆன்ம ஆற்றலால் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை ஒரு முன் மாதிரி ஆசிரமாக உருவாக்கினார்.

இந்தியாவின் யோக ஞான மரபு செழுமையுற உழைத்தார்.
ஒரு முறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரவிந்தரால் ‘ஸ்ரீ அன்னை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் அன்னையும் தங்களுடன் தற்போது இருக்கும் அன்னையும் ஒருவர் தானா என்று. தங்களின் சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டனர். அதற்கு ஸ்ரீ அரவிந்தர்  ‘சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்’ என்று விடையளித்தார்.

பராசக்தியின் அம்சமான அன்னை சாதகர்களை பல விதங்களில் ஊக்குவித்தார். எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ’Never look at the Future with the Eyes of Fears’ என்றும் Let not the talk of the vulgar make any impression to you என்றும் பலவாறாக அவர் போதித்த தத்துவங்கள் எண்ணற்றவை. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரர்களாக ஒருமித்த உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ‘ஆரோவில்’ நகரை நிர்மாணித்தார். இன்று அது ஒரு சர்வ தேச நகரமாகத் திகழ்கிறது.

ஸ்ரீ அன்னையால் பல்வேறு அற்புதங்களும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன.

ஒரு நாள் புதுவையில் பலத்த புயல் வீசியது. பல மரங்கள், வேரோடு சாய்ந்தன. கடல் பொங்கி உள்ளே வந்து ஆசிரமம் உட்பட பலவற்றை அழிக்கும் சூழல் உருவாகியது. மக்கள் உட்பட பலரும் செய்வதறியாது திகைத்தனர். என்ன செய்வதெனப் புரியாமல் ஸ்ரீ அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டனர்.

அன்னையும் அவர்கள் வேண்டுகோளுக்கு மனமிரங்கினார். தியானத்தில் ஆழ்ந்தார். சூட்சும உருவில் சென்று கடல் தேவதையின் முன் நின்றார். ஆசிரமம் பற்றியும் சாதகர்கள் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அப்பாவிகளை அழிப்பதால் நேரும் துன்பத்தைப் பற்றியும் தேவதைக்கு எடுத்துச் சொன்னார். பெரிய பெரிய கற்களைக் கொண்டு வரச் செய்து, அவற்றை கரையோரத்தில் போடச் செய்தார்.

அதைத் தாண்டி நகருக்குள்ளே வரக் கூடாது என்று கடல் தேவதைக்குக் கட்டளையிட்டார். அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட கடல் பின் வாங்கியது. அது முதல் அது, கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனது எல்லையைத் தாண்டி நகருக்குள் வருவதில்லை.

ஒரு முறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்து சாதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே அவர் தனது கண்களைத் திறந்தார். சாதகர்கள் காரணத்தை வினவிய பொழுது, தான் கிரீஸ் நாட்டிற்குச் சென்று விட்டு வந்ததாகவும், பல பக்தர்கள் மானசீகமாக தன் உதவி வேண்டி அழைத்ததால், சூட்சும உருவில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகவும் அன்னை குறிப்பிட்டார்.

ஆம், அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே சாதகர்களிடம் இது குறித்து, ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன.  ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஸ்ரீ அன்னை குறிப்பிட்டுள்ள மலர்களை வைத்து வணங்கும் பொழுது அவரது ஆற்றல் அங்கே பலவாறாகப் பெருகுகிறது. அன்னையின் அருளைப் பெறத் தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.

ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் சில:

1. மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.

2.’பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி.

3. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்.

4. நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!

5. ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.

6. இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.

.
அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்!

அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்!

ஓம் ஸ்ரீ ஆனந்தமயி; ஓம் ஸ்ரீ சைதன்ய மயி!

ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

குறிப்பு:

 திரு. பி.எஸ்.ரமணன், ஆன்மிக எழுத்தாளர்.

இக்கட்டுரை அவரது தளத்திலிருது மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க: பாலஹனுமான்

தொடர்புடைய கட்டுரை:

திரு. திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய  ‘ஸ்ரீ அன்னை அவதரித்த தினம்’

%d bloggers like this: