Blog Archives

இந்திய வேதியியல் துறையின் முன்னோடி

-வ.மு.முரளி

ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்

ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்

(பிறப்பு: 1861, ஆகஸ்டு 2- மறைவு: 1944, ஜூன் 16)

விடுதலைப் போராட்டக் காலம் அது. அப்போது, பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளை ஐரோப்பாவிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. ‘நமது நாட்டு மக்களின் நோயை சரிப்படுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?’  என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.

இந்தக் கேள்வியுடன் அவர் நிற்கவில்லை. தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901-இல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார்.  இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான அந்நிறுவனம் இன்று  ஆல்போல வளர்ந்து, ரூ. 65 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதலாகக் கொண்ட பிசிபிஎல் என்ற பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்.

வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ராயின் வாழ்க்கையே தியாக மயமானது.

1861, ஆகஸ்டு 2-இல், பிரிக்கப்படாத பாரதத்தில் (வங்கதேசம்) குல்னா மாவட்டம், ராருலி கத்தபாரா என்ற கிராமத்தில், நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராய்.
தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தபோது ராய்க்கு வயது 9. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது சீதபேதியால் பாதிக்கப்பட்ட ராயின் படிப்பு இடையில் நின்றுபோனது. ஆனால் வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஆங்கில இலக்கியம், அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் படித்தார் ராய்.

அடுத்த ஆண்டு பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த ராய், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் 1879-இல் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். ஆனால் அறிவியல் மீது தீரா தாகம் கொண்ட அவரால் கலைப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

தனது ஆர்வத்தை ஈடுகட்ட, கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியின் அறிவியல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார் ராய். அங்கு அலெக்ஸôண்டர் பெட்லர் என்ற பேராசிரியரின் வேதியியல் வகுப்புகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன்காரணமாக வேதியியல் மீது ராய்க்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன் பின்விளைவாக, தனது பி.ஏ. படிப்பைக் கைவிட்டு, பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. படிக்க கப்பலேறினார் ராய். 1887-இல் அங்கு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் வெளியிட்ட ‘தாமிரம், மெக்னீசியம் தனிமக் குழுமத்தின் சல்பேட் கலப்பினம்’ என்ற ஆய்வறிக்கை  (Conjugated Sulphates of the Copper-magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combinations) அவருக்கு புகழை அளித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சபை துணைத் தலைவராக 1888-இல் தேர்வானார் ராய்.

1889-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார் ராய். அவருக்கு துறை சார்ந்த அனுபவமும் உயர் கல்வித் தகுதியும் இருந்தபோதும், ஆங்கிலேயராக இல்லாத காரணத்தால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டவில்லை. அந்த பாரபட்சத்தை எதிர்த்துப் பாராடியும் பலன் கிடைக்கவில்லை. இதுவே பின்னாளில் இந்திய வேதியியல் பள்ளி (1924) என்ற ஆராய்ச்சி மையத்தைத் துவங்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது.

வேதியியலில் புதிய சேர்மங்களை உருவாக்குவது பிரதானமானதாகும். இதில் ராய்க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1896-இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.

1916-இல் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் சேர்ந்த ராய், அங்கு தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கண்டறிந்தார்.

1921-இல் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றாலும், 1936 வரை தொடர்ந்து மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த 15 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆராய்ச்சிக்கே வழங்கிவந்தார்.

வங்க மொழியில் நூற்றுக் கணக்கான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள ராய், பிரம்ம சமாஜ அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். 1923-இல் வடக்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின்போது நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து அந்தக் காலத்திலேயே ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டி மக்களுக்கு உதவினார்.

இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான ‘ரச ரத்னாகரா’ நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922-இல் ஒரு விருதை உருவாக்கிய ராய், அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்தார்.

தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு குடும்ப வாழ்க்கை சுமையாகக் கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாக வாழ்ந்த ராய், 1944, ஜூன் 16-இல் மறைந்தார்.

தனது சுயசரிதையை இரு பாகங்களாக, ‘வங்க வேதியியலாளரின் வாழ்க்கையும் அனுபவங்களும்’ என்ற தலைப்பில் (1932, 1935) வெளியிட்டார் ராய்.

சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ராய், பண்டைய நூல்களில் இடம்பெற்ற வேதியியல் கருத்துகளை இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த, ‘இந்து ரசாயன சாஸ்திர சரித்திரம்’  என்ற நூலை இரண்டு பாகங்களாக (1906, 1909) எழுதி வெளியிட்டார்.

விடுதலைப் போராட்டத்திலும், காதி இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய ராய், பொருளாதாரத் தன்னிறைவே உண்மையான சுதந்திரத்தை அளிக்கும் என்றார். அவரது சுதேசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையே அதுதான்.

இந்தியாவில் வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு ராயின் பங்களிப்பு முதன்மையானது. அவரது வேதியியல் அறிவு தேச எல்லை கடந்தது. ‘தலைசிறந்த வேதியியல் மேதை’ என்று லண்டனிலுள்ள ‘ராயல் சொஸைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி’யால் அறிவிக்கப்பட்ட, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்ந்த முதல் விஞ்ஞானி பிரஃபுல்ல சந்திர ராய் தான்.

 

நன்றி: தினமணி இளைஞர்மணி (15.12.2015)

Advertisements

புரட்சிக்கார எழுத்தாளர்

-ம.பூமாகுமாரி

 

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு. ஐயர்

(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.

1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.

குறிப்பு:

திருமதி பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:   சாவர்க்கரின் தமிழகத் தோழர்

.

இந்திய புள்ளியியலின் துவக்கப்புள்ளி

-வ.மு.முரளி

பிரசாந்த சந்திர மகலனோபிஸ்

பிரசாந்த சந்திர மகலனோபிஸ்

(பிறப்பு: 1893, ஜூன் 29- மறைவு: 1972, ஜூன் 28)

ரவுகள் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம், ஊகங்கள், கள ஆய்வு ஆகியவற்றின் தொகுப்பே புள்ளியியல் (Statisitics) எனப்படுகிறது. நிகழ்கால புள்ளிவிரங்களிலிருந்து எதிர்காலத்துக்கான திட்டமிடலைச் செய்ய முடியும்.

உதாரணமாக பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புகளை அறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, அப்போதைய புள்ளிவிவரங்கள் நம்மிடம் இருந்தால் ஒப்பிட்டு அறிய முடியும். இது அறிவியல் ரீதியான கணிதத் துறை ஆகும். இத்துறையை நம் நாட்டில் வளர்த்தெடுத்தவர், வங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பிரசாந்த சந்திர மகலனோபிஸ்.

வங்க மாகாணத்தில், கொல்கத்தாவில் 1893, ஜூன் 29-இல், செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவர் பிரசாந்த சந்திர மகலனோபிஸ். சமூக சீர்திருத்தத்தில் அக்கறை கொண்ட பிரம்மசமாஜ இயக்கத்தின் தீவிர அபிமானிகளாக குடும்பத்தினர் இருந்ததால், குழந்தைப் பருவத்திலேயே  ஆராய்ச்சிச் சிந்தனைகள் மகலனோபிஸின் உள்ளத்தில் பதிந்தன.

கொல்கத்தாவின் பிரம்மோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மகலனோபிஸ், 1908-இல் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஜெகதீச சந்திரபோஸ், பிரஃபுல்ல சந்திர ராய் உள்ளிட்ட பேரறிஞர்களிடம் பாடம் கற்கும் வாய்ப்பு மகலனோபிஸுக்குக் கிடைத்தது. 1912-இல் இயற்பியலில் இளநிலைப் பட்டம் பெற்ற மகலனோபிஸ், மேற்படிப்புக்காக லண்டன் சென்றார்.

கேம்பிரிட்ஜ், கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்து கணிதம், இயற்கை அறிவியல், இயற்பியலில் பாடம் பயின்றார். அங்கு அவருக்கு கணிதப்பாடம் நடத்த வந்தவர் தமிழக கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன். அங்கு டிரிப்போ பட்டம் பெற்ற மகலனோபிஸ், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற வானிலையியல் விஞ்ஞானி சி.டி.ஆர்.வில்சனின் கீழ் ஆய்வுகள் மேற்கொண்டார்.

லண்டனில் அவர் இருந்தபோது, ஆக்ஸ்போர்டு நிறுவனம் வெளியிட்ட ‘பயோமெட்ரிகா’ என்ற (Biometrika) புள்ளியியல் சஞ்சிகையைக் கண்டார். அதன் அனைத்துத் தொகுப்புகளையும் வாங்கிவந்த மகலனோபிஸ், அதில் ஆழ்ந்தார். மானுடவியல், வானிலையியல் உள்ளிட்ட துறைகளில் புள்ளியியலின் உதவியுடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம் என்பதை அவர் உணர்ந்தார்.

அடுத்து வந்த 30 ஆண்டுகள், கொல்கத்தா மாநிலக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றிய மகலனோபிஸ், அக்காலத்தில் புள்ளியியலில் தனது ஆர்வத்தை விரிவாக்கி, அத்துறை இந்தியாவில் வளரவும் அடிகோலினார்.

இதனிடையே பிரபல வங்கக் கல்வியாளர் ஹேரம்ப சந்திர மொய்த்ராவின் புதல்வி நிர்மல்குமாரியை மணம் புரிந்தார். மகலனோபிஸ் தம்பதிக்கு கவிஞர் ரவீந்திரநாத் தாகூருடன் மிகுந்த பிணைப்பு உண்டு. அவருடனேயே பல ஆண்டுகள் வசித்த பெருமைக்குரியவர்கள் மகலனோபிஸ் தம்பதியர். தாகூரின் உலகப் பயணங்களில் உடனிருந்து உதவிய அவர்கள், சீர்திருத்த இயக்கமான பிரம்மசமாஜம் அமைப்பிலும் தீவிரமாக இயங்கினர்.

1922-இல் வட வங்கத்திலும் 1926-இல் ஒடிசாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அதற்கு தீர்வு காணுமாறு மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்போது வங்கத்திலும் ஒடிசாவிலும் 60 ஆண்டுகால மழையளவுகளைச் சேகரித்து, புள்ளியியலின் உதவியுடன் அந்தத் தரவுகளை ஆராய்ந்தார் மகலனோபிஸ். அப்போது அவர் அளித்த பரிந்துரைகளை ஏற்று தாமோதர் பள்ளத்தாக்கு நீர்மின் நிலையத் திட்டம் பின்னாளில் உருவானது.

இந்திய புள்ளியியல் கழகம்: கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் மகலனோபிஸின் அறையில் புள்ளியியல் ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு புள்ளியியல் ஆர்வலர்கள் பலர் ஒருங்கிணைந்தனர். அங்கு சக போராசிரியர்களுடன் நடந்த விவாதத்தின் இறுதியில், கல்லூரியின் இயற்பியல் துறையிலேயே புள்ளியியல் கழகத்தைத் துவங்க முடிவானது. அதன்படி, 1931, டிசம்பர் 17-இல் இந்திய புள்ளியியல் கழகம் (Indian Statistical Institute- ISI) துவங்கப்பட்டது. இந்த அமைப்புக்கென ‘சங்க்யா’  என்ற சஞ்சிகையையும் (1933) மகலனோபிஸ் துவக்கினார். இன்று இந்த நிறுவனம் அரசு நிறுவனமாக வளர்ந்து, தனித்த பல்கலைக்கழகமாக இயங்குகிறது.

புள்ளியியல் கழக உதவியுடன், 1937 முதல் 1944 வரை நுகர்வோரின் செலவு, தேநீர் அருந்தும் வழக்கம், தானிய இருப்பு, தாவரங்களின் நோய்த் தாக்குதல் உள்ளிட்ட தரவுகள் தொடர்பான மாதிரிக் கணக்கெடுப்பை (Sample Survey) நாட்டில் நடத்தினார் மகலனோபிஸ். அதுவே நாட்டில் எடுக்கப்பட்ட முதல் மாதிரி கணக்கெடுப்பாகும்.

1936-இல் உலகப் புகழ்பெற்ற ‘மகலநோபிஸ் தொலைவு’ என்ற (Mahalanobis Distance) தனது புள்ளியியல் கோட்பாட்டை பிரசாந்த சந்திர மகலனோபிஸ் அறிமுகம் செய்தார். இரு வேறுபட்ட தரவுகளுக்கு இடையிலான ஒப்பீட்டு மதிப்பை வரையறுக்க இக்கோட்பாடு உதவுகிறது.

திட்டக்குழு பணிகள்: 1938-இல் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேருவுடன் இந்த சமயத்தில் மகலனோபிஸுக்கு நட்புறவு ஏற்பட்டது. இந்த நட்புறவால் புள்ளியியலின் பயன்பாட்டை அரசியலுக்கும் விஸ்தரிக்க மகலனோபிஸால் முடிந்தது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் முதல் பிரதமரான நேரு, நாட்டின் வளர்ச்சிக்காக சோவியத் யூனியன் பாணியில் திட்டக்குழு ஒன்றை அமைத்தார். ஐந்தாண்டுகளை ஆதாரமாகக் கொண்ட இத்திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளைத் திட்டமிட்டன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் விவசாய அபிவிருத்தியாக இருந்தது.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961) தொழில்துறை மேம்பாடாக இருந்தது. அதில் பணிபுரியுமாறு நேருவால் மகலனோபிஸ் கேட்டுக்கொள்ளப்பட்டார். அப்போது அவர் அளித்த பல திட்டங்களின் பயனாக, நாட்டில் தொழில்மயமாக்கல் வேகம் பெற்றது. இதில் ஃபெல்டுமேன்- மகலனோபிஸ் மாதிரி (Feldman–Mahalanobis model) என்ற, சோவியத் ருஷ்யத் திட்டங்களின் அடிப்படையில் மகலனோபிஸ் வடிவமைத்த பொருளாதார வளர்ச்சி மாதிரி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறாக, பயன்பாட்டு புள்ளியியலுக்கு (Applied Statistics) அடித்தளமிட்ட மகலனோபிஸ், 1949-இல் மத்திய அமைச்சரவையின் கெüரவ புள்ளியியல் ஆலோசகராகவும் செயல்பட்டார். மத்திய திட்டக்குழு உறுப்பினராக 1955 முதல் 1967 வரை இருந்து வழிகாட்டினார்.

1950-இல், தேசிய மாதிரி கணக்கெடுப்பு (National Statistical Survey- NSS) எடுக்கப்படவும், 1951-இல் மத்திய புள்ளியியல் மிறுவனம் அமைக்கப்படவும் (Central Statistical Organaisation- CSO) வித்திட்ட மகலனோபிஸ், ‘இந்திய திட்டமிடல்’ என்ற  வார்த்தைப் பிரயோகத்துக்கு காரணமானார்.

எஃப்ஆர்எஸ் (1945)  உள்ளிட்ட பல்வேறு உலக அளவிலான விருதுகளைப் பெற்ற பல துறை அறிஞரான மகலனோபிஸ், மானுட உடலியல் அளவீடுகள் (Anthropometry) பற்றிய ஆய்விலும் நிபுணத்துவம் பெற்றவர். பேரளவிலான மாதிரிக் கணக்கெடுப்புகளில் ஒழுங்குமுறையற்ற மாதிரி முறையை (Random Sampling) அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்.

இவ்வாறாக, நாட்டின் வளர்ச்சிக்கு புள்ளியியலை ஆயுதமாக்கிய மகலனோபிஸ் 1972, ஜூன் 28-இல் மறைந்தார். அவருக்கு பாரத அரசு 1968-இல் பத்மவிபூஷண் விருதளித்து கௌரவித்தது. அவரது பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

குறிப்பு:

இக்கட்டுரை தினமணி -இளைஞர் மணியில் வெளியானது.

காண்க: வமுமுரளி

 

கோல்வல்கர் பரம்பரை

-மலர்மன்னன்

குருஜி கோல்வல்கர்

குருஜி கோல்வல்கர்

குருஜி 

மாதவ சதாசிவ கோல்வல்கர் 

(பிறப்பு:  1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5)

 

 “ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காது தான்- என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?” என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ‘கோல்வல்கர் பரம்பரை’ என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத பாராட்டு என்பது கோல்வல்கர் யார் எனத் தெரிந்தால் புரிந்துவிடும்!

இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரதத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றதென்றால் அதற்கு முழு முதற் காரணம் கோல்வல்கர்தான். ஆனால் நமது வரலாற்றுப் புத்தகத்தைப் பார்த்தால் இந்த உண்மை அதில் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஏதோ ஷேக் அப்துல்லாதான் அதற்கு ஒத்துழைத்தார் என்பது போல் ஒரு மாயத் தோற்றமே அதில் புலப்படும். கோல்வல்கர் எடுத்த முயற்சியினால்தான் 1947-ல் காஷ்மீர மன்னர் ஹரி சிங் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டார் என்ற உண்மை ஆவணங்களில் புதைந்து கிடக்கிறது. நல்லவேளையாக அந்த ஆவணம்அழிக்கப்பட்டுவிடவில்லை. இணயத்திலேயே கூட அகப்பட்டுவிடும், கூகிளில் தேடினால்! காஷ்மீர் என்று எழுத்துகளைத் தட்டினாலேயே போதும், கொண்டு வந்து கொட்டிவிடும், மறைக்கப்பட்ட உண்மைகளை!

காஷ்மீர் நம் பாரதத்தின் ஒரு பகுதியே என உறைக்கச் செய்தவர் கோல்வல்கர். ஏனெனில் புராதனமான சைவ சித்தாந்தத்தின் உறைவிடம் புனிதம் வாய்ந்த காஷ்மிர் என்பது அவருக்கு உறைத்திருந்தது. மேலும், 1947-இல் பாகிஸ்தான் தோன்றிய சூட்டோடு சூடாகவே காஷ்மீர் மாநிலத்தை வஞ்கமாகக் கவர முகமது அலி ஜின்னா முற்பட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதில் பாரத ராணுவத்துடன் இணைந்து நின்று ரத்தச் சாட்சிகளாய் உயிர்த் தியாகம் செய்த திருக் கூட்டம், அந்த கோல்வல்கரின் ஆணைக்கு இணங்கவே அவ்வாறு தன்னை பலி கொடுத்தது. ஆகவே  ‘கோல்வல்கர் பரம்பரை’ என்று குறிப்பிடப்படுவோமானால் எமக்கு அதனைக் காட்டிலும் வேறு பெருமை என்ன இருக்க முடியும் ?…

…1969- ஆம் ஆண்டு, யூனிவர்சல் பிரஸ் சர்வீஸ் என்ற பாரத- மேற்கு ஜெர்மனி தனியார் கூட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றில் கர்நாடக மாநிலம் முழுமைக்குமான செய்தியாளனாகப் பணியிலிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னையில் இருக்க விரும்பாமல் பெங்களூருக்கு மாற்றல் கேட்டுப் போய்விட்டிருந்த சமயம். மேற்கு குமாரப் பார்க்கில் ஒரே கட்டடத்தில் விசாலமான அலுவலகம், வசிக்குமிடம் என அளித்திருந்தாலும், எனக்குக் கீழே ஒரேயொரு டெலிபிரின்டர் ஆபரேட்டர், ஒரு ஆஃபீஸ் பாய் என மிகச் சிறிய நிர்வாகம். செய்தியைப் பொருத்தவரை மாநிலம் முழுவதுமே நான்தான் சென்று வந்தாக வேண்டும். கணக்கு வழக்குகளைப் பார்த் துகொள்வதும் அலுவலக நிர்வாகமும் ஆபரேட்டர் பொறுப்பு. நான் பீரோ சீஃப் என்று அழைக்கப்பட்டேன். மூன்றே பேர் இயங்கும் அலுவலகம்; எனவே பிரச்சினைகள் இல்லாமல் வேலை நடந்தது.

தினமும் கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்குப் போவேன். வீரேந்திர பாட்டீல் முதலமைச்சராகவும், ராமகிருஷ்ண ஹெக்டே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்று நிர்வாகத்தை அருமையாக நடத்தி வந்த காலகட்டம். முதல்வரும் நிதியமைச்சரும் பிற அமைச்சர்களும் செய்தியாளர்களுடன் எவ்வித வித்தியாசமும் இன்றி நெருங்கிப் பழகுவார்கள். மாநிலத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு நேரில் செல்வதும் மற்ற சாதாரண நிகழ்வுகளை செய்தித்தாள்களிலிருந்தே எடுத்து அனுப்புவதுமான நடைமுறையனைக் கடைப்பிடிப்பதுதான் சாத்தியமாக இருந்தது. பிற மாநிலத்தில் பணிசெய்தாலும் சொந்த மாநிலத்தின் மீதும் நாட்டம்மில்லாமல் போகாது அல்லவா ? தினமும் தமிழ் நாட்டு நிலவரம் பற்றி டெலிப்ரிண்டர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

தமிழ் நாட்டில் எம்ஜிஆரும் மதியழகனும் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றதில் இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் முதல்வராகும் வாய்ப்பினை இழந்துவிட்டிருந்தார். கருணாநிதி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நான் பெங்களூருக்குச் சென்றுவிட்டிருந்தேன்.

நெடுஞ்செழியன் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசித் தாமே ஒரு கேலிப் பொருளாக ரசிக்கப்படுகிறோம் என்கிற பிரக்ஞையின்றி,  தமது பேச்சைத்தான் ரசிக்கிறார்கள் என்ற நினைப்பில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாரேயன்றி, நிர்வாகத் திறமை ஏதும் இல்லாதவர். மேலும் அரசியல் சாதுரியமும் அற்றவர். முதல்வர் பதவிக்கு அவர் வராமல் போனது நல்லதுதான். அந்தச் சமயத்தில் கருணாநிதிதான் முதல்வர் நாற்காலியில் அமர முற்றிலும் தகுதி பெற்றவராக இருந்தார். அவர் மட்டும் சுய நலமில்லாதவராகவும், முதல்வர் பதவியை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தவேண்டும் என்று கருதுபவராகவும், உண்மையிலேயே அண்ணாவின் இருதயத்தை இரவலாகப் பெற்றவராகவும், முகஸ்துதியை விரும்பாதவராகவும், தற்புகழ்ச்சியில் திளைக்காதவராகவும் இருந்திருப்பின் அவரால் தமிழகம் எவ்வளவோ பயனடைந்திருக்கும். 1998-இல் நான்காம் தடவையாக முதல்வரானபோது அவருக்கு இருந்த பொது நல அக்கறை 1969-இல் முதல் தடவை முதல்வரானபோதே இருந்திருக்கலாகாதா ?

… வீரேந்திர பாட்டீலும், ராமகிருஷ்ண ஹெக்டேவும் ராம லக்ஷ்மணராக நிர்வாகம் செய்ததில் நான் பணியாற்றிய கர்நாடகம் சிறப்பாகவே வளர்ச்சிபெற்று வந்தது. முதல்வர், நிதியமைச்சர் இருவருமே அடக்கமானவர்கள், பதவி வகிப்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே என்று உணர்ந்து செயல்பட்டவர்கள். அந்தச் சமயத்தில் உடுப்பியில் விசுவ ஹிந்து பரிஷத் மிக விரிவாக ஏற்பாடு செய்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் அதுபற்றிச் செய்தி திரட்டி அனுப்ப உடுப்பிக்குச் சென்றேன்.

மாநாட்டின் மேடையில் ஓர் அரிமாபோல் அமர்ந்திருந்த புருஷோத்தமனைப் பார்த்தேன். விசாரித்தபோது, அவர்தான் குருஜி என்றார்கள். ஒரு மந்திரச் சொல் மாதிரி அது மிக விசையுடன் என்னுள் இறங்கியது. துறவின் தூய்மையும், தொண்டின் தீவிரமும் ஜொலிக்கும் அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் அசாதாரணமானவர் எனப் புரிந்துகொண்டேன். மாநாட்டின் இடைவேளையில், உணவுக்குப் பிறகு அவரைச் சந்தித்துப் பேச அவகாசம் கேட்டேன். மிகுந்த கனிவுடன் சம்மதித்தார்.

ஒரு செய்தியாளானாக அவரை நெருங்கியபோதிலும், அவரது கம்பீரமும், அதே சமயம் அவரது எளிமையான பழகும் தன்மையும், ஆசானிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்கும் ஒரு சீடனைப் போல என்னை மாற்றிவிட்டன. காந்திஜி கொலை தொடங்கிப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் பெற்றேன் என்றாலும், அதிகம் வெளிவராத காஷ்மீர் விவகாரத்தில் அவரது பங்கையும், அவருடைய இயக்கத்தினர் அவரது கட்டளைக்கு இணங்க உயிரைத் துச்சமாகக் கருதி ஆற்றிய துணிகரச் செயல்களையும் பற்றி அவர் வாயிலாகவே கேட்டறிந்த தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்தால் போதுமானது.

1947-இல் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டுவந்தவர் ஹரி சிங். இன்று தம் சொந்த மாநிலத்திற்கு வெளியே வாழ்ந்துவரும் கரண் சிங்கின் தந்தையார். முஸ்லிம் காஃன்பரன்ஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய ஷேக் அப்துல்லா, அதனை நேஷனல் கான்ஃபரன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்துகொண்டிருந்தார். ஹரி சிங்கின் பிரதான அமைச்சராக இருந்தவர் மெஹர் சந்த் மஹாஜன் என்பவர். அந்தக்காலத்தில் ஜம்மு- காஷ்மீருக்கு பாரதத்தின் வழியாகப் போக்கு வரத்து வசதி எதுவும் இல்லை. லாஹூர்தான் அவர்களுக்கு ஆசார வாசல்போலிருந்தது. அந்த லாஹூர், பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அது பாகிஸ்தானுக்கு மிகவும் வசதியாகவும் ஹரி சிங்கிற்குச் சங்கடமாகவும் ஆயிற்று.

சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க முற்பட்டபோது இதைக் காரணம் காட்டினார், ஹரி சிங். ‘எனது சமஸ்தானம் சுதந்திரமாக இயங்குவதையே விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமல் பாரதமா, பாகிஸ்தானா என்ற கேள்வி எழுமானால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பாரதத்துடன் எப்படி இணைவது ? மேலும் இங்கு அரசியல் என்ற பெயரில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற ஷேக் அப்துல்லாவுடன் சகோதர பாசத்துடன் பழகும் நேரு பிரதமராக உள்ள பாரதத்துடன் இணைவது அப்துல்லாவின் கொட்டத்தை வேறு அதிகரிக்கச் செய்துவிடுமே ? ‘ என்று தயங்கினார், அரசர் ஹரி சிங். படேல் எவ்வளவு சொல்லியும் மன்னர் இணங்கவில்லை. சமஸ்தானத்தின் பிரதமர் மஹாஜனை அழைத்தார், பட்டேல்.

“நீங்கள் ஒருவரிடம் தூது செல்ல வேண்டும்; அவர் உங்கள் மன்னரிடம் பேசினால் மன்னர் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்கச் சம்மதித்துவிடுவார்” என்று மஹாஜனிடம் கூறினார். அப்படி வல்லபாய் படேல் அடையாளங் காட்டிய பெருமகன்தான் குருஜி எனஅனைவராலும் மரியாதையுடனும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட கோல்வல்கர்.

குருஜி ஸ்ரீநகர் சென்று மன்னர் ஹரி சிங்கைச் சந்தித்தார்.மன்னருக்குப் பலவாறு அறிவுரைகள் கூறி காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க இணங்க வைத்தார்.

இந்த மாபெரும் சரித்திர சாதனையைச் செய்த குருஜி, நான் பலவாறு கேள்விகளால் துளைத்தெடுத்த பிறகுதான் காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையத் தாமே ஒரு கருவியாக இருந்ததை வெளிப்படுத்தினார். எனது கேள்விகளைப் புன்னகைத்தே தவிர்த்து வந்த குருஜி, இறுதியில் ‘நீ விடமாட்டாய் போலிருக்கிறதே’ என்று நகைத்துத் தமது முயற்சியை ஒப்புக்கொண்டார்.

”குருஜி, நீங்கள் இதனை ஏன் மறைத்து வைக்கவேண்டும் ? பல விஷயங்கள் இப்படி வெளியே தெரியாமல் போய்விடுவதால்தானே நமது சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப் படாமல் போகிறது ?” என்று மிகவும் ஆவேசப்பட்டு வினவினேன்.

“நிகழ்ச்சி நடந்ததாகப் பதிவு ஆகிவிட்டதல்லவா. அது போதாதா ? யாரால் என்றும் பதிவாவது அவ்வளவு முக்கியமா ? சரித்திரத்தில் முக்கியமாக ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் இருந்தால்தான் முழு விவரங்களையும் தவறாமல் பதிவு செய்வது அவசியம். நாம் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக. மேலும் பொதுவாக எமது இயக்கத்தில் நாங்கள் அவ்வளவாக விளம்பரம் செய்துகொள்ள விரும்புவதில்லை” என்று சொன்னார் குருஜி.

ஹரி சிங் இணைப்பிற்குச் சம்மதித்த சந்தர்ப்பத்தில்தான் ஜின்னாவும் காஷ்மீரத்தைக் கபளீகரம் செய்ய அடியெடுத்து வைத்தார். அவர் தனது ராணுவ சிப்பாய்களை வனவாசிகள் போல வேடமணியச் செய்து காஷ்மிருக்குள் நுழைக்கப் போவதை உளவறிந்து வந்து முன்கூட்டியே எச்சரித்தவர்கள் குருஜியின் தொண்டர்கள்தாம். அதேபோல் ஸ்ரீ நகரை கபடவேடதாரிகளான பாகிஸ்தான் சிப்பாய்கள் அணுகிவிட்டபோது, அதற்கு முன்னர் இருபத்து நான்கு மணி நேரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று, பாரத ராணுவ வீரர்கள் போதிய எண்ணிக்கையில் வந்து சேரும்வரை நகரைப் பாதுகாத்த இருநூறு இளஞர்கள் குருஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட தொண்டர்களாவார்கள். ஸ்ரீநகர், பூஞ்ச், ஜம்மு ஆகிய இடங்களில் மின்னல் வேகத்தில் விமான தளங்களைச் சீரமைத்து பாரத ராணுவம் வந்திறங்கவும், பாகிஸ்தானின் தயவு இன்றி, மக்களுக்குத் தேவையான

பொருள்கள் சீராகக் கிடைக்கவும் வழி செய்த கண்மணிகளும் குருஜியால் வளர்க்கப்பட்டவர்களே. அதுமட்டுமா, பாரத விமானப்படையினர் தவறுதலாகப் பாகிஸ்தானிய சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகள் பாயக் கூடிய பகுதியில் வெடிமருந்துப் பெட்டிகளைப் போட்டுவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது, எட்டு இளைஞர்கள் துணிவுடன் பெட்டிகள் இருந்த பகுதிக்குப் பாய்ந்து சென்று அவற்றை மீட்டுவந்தனர். இந்தசாகசச் செயலில் நால்வர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்தனர். அந்த தீரர்களும் குருஜியின் சீடர்கள்தாம்.

காஷ்மீர் மீட்புப் போரில் குருஜியின் சீடர்கள் ஆற்றிய கடமையைக் கண்டு வியந்த ராணுவ அதிகாரி ஒருவர் பிற்பாடு குருஜியிடம் கேட்டார்:  “உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதைப்பற்றறியும் கவலைப் படாமல் இவ்வளவு சாகசம் புரிகிறார்களே, நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் கற்றுக் கொடுக்கிரீர்கள் ?”

குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம்: “கபடி!”

இவ்வாறு குருஜியின் தொண்டர்கள் குருதி சிந்திக் கொண்டிருந்தபோது நேருவால் காஷ்மீரச் சிங்கம் எனப் பாராட்டப்பட்ட ஷேக் அப்துல்லா என்ன செய்துகொண்டிருந்தார் எனத் தெரிந்துகொள்ள ஆவல் எழுவது இயற்கைதான். அந்தச் சிங்கம் கர்ஜனை செய்தவாறு பாகிஸ்தான் சிப்பாய்கள் மீது பாய்வதற்குப் பதிலாகத் தன் மனைவி, பிள்ளை குட்டிகளுடன் இப்போது மும்பை என அறியப்படுகிற பம்பாயில் போய் பதுங்கிவிட்டது! வெடி குண்டுச் சத்தம் கூட எட்டாத தொலைவு! ஆனால் அதே சிங்கம் துப்பாக்கி ஓசையெல்லம் அடங்கியான பிறகு ஓடோடி வந்து ஆட்சிபீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டது, நேருவின் பேராதரவுடன்!

குருஜியின் வாய்மூலமாகவே அவரது சீடர்களின் வீரஞ்செறிந்த காஷ்மீர் சாகசச் செயல்களைக் கேட்டறிந்தவன் நான். இதுதான் கருவிலே திருவென்பது! ஆனால் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்கத் தோன்றலாம். குருஜியிடம் விவரம் கேட்டு நான் பதிவு செய்த செய்தி வெளிவந்த கன்னட, ஆங்கில செய்தித்தாள்கள் என்னிடம் உள்ளன. ஆனால் 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சாதாரண நியூஸ் பிரின்ட் காகிதத்தில் அச்சான அவை எந்த நிலையில் இருக்குமோ தெரியாது. மேலும் எனது ஆவணங்களும் புத்தகங்களும், சென்னையிலும் பெங்களூரிலுமாகச் சிதறிக் கிடக்கின்றன. எனது ஆவணங்கள் உடனடியாகக் கிடைக்கவிடினும் ‘காஷ்மீர்’ என கூகிளில் தேடினால் நான் பதிவு செய்திருப்பது அவ்வளவும் உண்மை என்று தெரியவரும். என்ன, சிறிது பொறுமை தேவைப்படும், அவ்வளவுதான். ஏதேனும் ஒரு இடத்தில் விவரங்கள் சிக்கிவிடுவது உறுதி.

சரி, இதில் ஹிட்லர் எங்கிருந்து வந்தார், கோல்வல்கர் விதந்தேத்தும் விதமாக ?

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மிரளச் செய்த ஹிட்லரின் ஜெர்மனியை அனைவருமே வியந்து பாராட்டிய காலம் ஒன்று இருந்தது. அது ஹிட்லரின் இன வெறியாட்டம் வெளிவராத காலம். சுபாஷ் பாபு கூட பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட ஹிட்லருடன் கை கோத்தவர்தாம். ஹிட்லரின் இனவெறி அப்போது வெளிப்பட்டிருக்கவில்லை. முதலாம் உலகப் போரின் போதே சாகசம் செய்த தேசம் ஜெர்மனி. ஆகையால் தொடக்க காலத்தில் ஹிட்லரைப் பலரும் விதந்தேத்தியதுபோலவே கோல்வல்கரும் விதந்தேத்தியிருந்தாலும் அதில் குறையேதும் காணத் தேவையில்லை. இந்த சமாசாரம் எனக்கு அன்று தெரிந்திருந்தால் இது பற்றியும் அவரிடமே நேரில் கேட்டிருப்பேன்.

குருஜி, குருஜி என்று சீடர்கள் கொண்டாடுவது அவர் விலங்கியல் பேராசிரியராக காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோதே தொடங்கிவிட்டது. எனவே அவர் பொது வாழ்விற்கு வந்த பிறகு வெறும் மரியாதைக்காக இடப்பட்ட பெயர் அது என எண்ணவேண்டாம்.

விவரம் தெரிந்த பெரியவர்கள் அனைவரும் குருஜியைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறர்கள். அவற்றையெல்லாம் அடுக்கிகொண்டு போவது சூரியனை அகல் விளக்கால் அடையாளம் காட்டுவதுபோலாகும். எனக்கு எதற்கு அந்த வீண் வேலை ?

இவ்வளவும் சொன்ன பிறகு கோல்வல்கரின் பரம்பரை என எம்மை அடையாளப்படுத்துவது எமக்குப் பெருமை சேர்க்கும் மரியாதையே என்பதில் ஐயமிருக்காது. ஆனால் சிலருக்கு குருஜி, குருஜியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்கிறேனே யார் அவர், எது அவரது அமைப்பு என்ற ஐயம் எழலாம். அதையும் மறைப்பானேன் ?

குருஜி என லட்சக் கணக்கானோர் இன்றளவும் போற்றும் மாதவ சதாசிவ கோல்வல்கர், அகில பாரதத் தலைவர் என்ற நிலைக்கு ஈடான சர் சங்க சாலக்காக அவர் சார்ந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாருக்குப் பிறகு பொறுப்பேற்றவர். அவர் சார்ந்திருந்த அமைப்புதான், ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் என்கிற பேரியக்கம். குருஜியின் வழிகட்டுதலில்தான் அது மாபெரும் சக்தியாக உருவெடுத்தது…

குறிப்பு:

மறைந்த மூத்த பத்திரிகையாளர் திரு. மலர்மன்னன் அவர்கள், திண்ணை இணைய இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட பகுதி இங்கு நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க:

பாரதத் தாயின் தவப்புதல்வர்

தவப்புதல்வர்கள் (வைகாசி)

-ஆசிரியர் குழு

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

ஆன்றோர்- திருநட்சத்திரங்கள்:

வைகாசித் திங்கள் (15.05.2015  – 14.06.2015)

 

திருக்கோஷ்டியூர் நம்பி

(வைகாசி- ரோகிணி)

மே 19

நமிநந்தி அடிகள்

(வைகாசி- பூசம்)

மே 23

சேக்கிழார் பெருமான்

(வைகாசி – பூசம்)

மே 23

சோமாசி மாறனார்

(வைகாசி – ஆயில்யம்)

மே 24

குரு அர்ஜுன் தேவ்

(பலிதானம்: மே 30)

நம்மாழ்வார்

(வைகாசி – விசாகம்)

ஜூன் 1

அன்னமாச்சாரியார்

(வைகாசி – விசாகம்)

ஜூன் 1

காஞ்சி மகா பெரியவர்

(வைகாசி – அனுஷம்)

ஜூன் 2

திருஞான சம்பந்தர்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

திருநீலகண்ட யாழ்ப்பாணர்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

திருநீலநக்க நாயனார்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

முருக நாயனார்

(வைகாசி – மூலம்)

ஜூன் 3

கழற்சிங்க நாயனார்

(வைகாசி – பரணி)

ஜூன் 13

 ***

சான்றோர் – மலர்வும் மறைவும்

 .
(பிறப்பு: மே 16)

ராஜாராம் மோகன்ராய்

(பிறப்பு: மே 22)

செண்பகராமன் பிள்ளை

(பலிதானம்: மே 26)

வீர சாவர்க்கர்

(பிறப்பு: மே 28)

தேவி அகல்யாபாய் 

(பிறப்பு: மே 31)

பிர்ஸா முண்டா

(பிறப்பு: மே 31) (பலிதானம்: ஜூன் 9)

குருஜி கோல்வல்கர்

(நினைவு: ஜூன் 5)

ஜி.டி.பிர்லா

(நினைவு: ஜூன் 11)

 

 

 

 

 

%d bloggers like this: