Blog Archives

கவிபாடிய கன்னட நந்தனார்

-ஜடாயு

பக்த கனகதாசர்

பக்த கனகதாசர்

(திருநட்சத்திரம்: ஐப்பசி- சதயம்)

(02.11.2014)

 

ராமனுடைய அரசவைக்கு ஒரு வினோதமான வழக்கு வருகிறது. அரிசி, கேழ்வரகு (ராகி) ஆகிய இரண்டு தானியங்களுக்கும் நடுவில் யார் பெரியவர் என்பது வழக்கு. இரண்டு தானியங்களும் தங்கள் பெருமைகளைக் கூறி வாதம் செய்கின்றன. இரண்டையும் ஆறு மாதம் சிறைக்கு அனுப்புகிறான் ராமன். ஆறு மாதத்திற்குப் பிறகு அரிசி உளுத்துப் போய்விடுகிறது. கேழ்வரகு உறுதியாக நிற்கிறது.  ‘கஷ்டங்களைப் பொறுக்கும் சக்தி படைத்த கேழ்வரகே உயர்ந்தது, அதற்கே என் அனுக்கிரகம்’ என்று ராமன் தீர்ப்பு வழங்குகிறான்.

கன்னடத்தில் கனகதாசர் எழுதியிருக்கும் ‘ராமதான்ய சரித்ரே’ என்ற குறுங்காவியத்தின் கதை இது. அரிசி உயர்குடி மக்களின், செல்வந்தர்களின் உணவு. கேழ்வரகு கீழ்சாதிக் காரர்களின், உழைக்கும் மக்களின் உணவு. இந்த இரண்டையும் குறியீடுகளாகப் பயன்படுத்தி சமூகத்தின் அடித்தட்டு மக்களே மன உறுதி வாய்ந்தவர்கள், கடவுளின் அருள் அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தை அவர் அறிவுறுத்துகிறார் என்பது கன்னட இலக்கியவாதிகள் கூறும் கருத்து. சமூக விமர்சனத்தை அழுத்தமாக முன்வைத்த ஒரு பக்தி இலக்கியப் பிரதி என்று இந்த நூலை அவர்கள் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

கர்நாடகத்தில் அடித்தட்டு மக்களின் சமூக, ஆன்மிக எழுச்சிக்கு ஒரு குறியீடாகவே கனகதாசர் விளங்குகிறார் என்று சொல்லலாம். அவரது காலம் 15-ஆம் நூற்றாண்டு (1506 – 1609). உன்னதத்துடனும், செல்வச் செழிப்புடனும் விளங்கிய விஜயநகரப் பேரரசு மறையத் தொடங்கியிருந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

கர்நாடகத்தின் மத்தியப் பகுதியில் உள்ள ஹவேரி மாவட்டத்தில் காகினேலே என்ற சிற்றூரில் கௌடர்களின் ஒரு பிரிவான குருபர் (குறும்பக் கவுடர்) குலத்தில் இவர் பிறந்தார். அவரது இயற்பெயர் திம்மப்ப நாயக்கர். அவர் ஒரு குறுநிலமன்னரிடம் போர்த் தளபதியாகப் பணியாற்றுகையில் ஒரு போரில் உயிர்போகும் சமயம் தெய்வாதீனமாகக் காப்பாற்றப் பட்டதாகவும், அதன்பின் உலக வாழ்க்கையைத் துறந்து ஆன்மிகப் பாதையில் திரும்பியதாகவும் கூறப்படுகிறது. அவரது பல பாடல்களில் தனது சொந்த ஊரில் குடிகொண்ட பெருமாளின் பெயரான  ‘காகினேலே ஆதிகேசவா’ என்ற முத்திரையையும் பதித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் உடுப்பியில் வாழ்ந்து வந்த மத்வ சம்பிரதாய மடாதிபதி வியாசராஜ தீர்த்தர். தனது ஆன்மிக குருவாக இவரை கனகதாசர் ஏற்றுக் கொண்டிருந்தார். ஒருமுறை சீடர்கள் வேதாந்த விசாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்சத்திற்குப் போக அதிகாரி யார் என்று விவாதம் வந்தது. அப்போது ‘நானு ஹோதரே ஹோதெனு’ (நான் போனால் போகலாம்) என்று சொன்னார் கனகதாசர்.

“என்ன ஆணவம் இந்த கீழ்ச்சாதிக் காரனுக்கு?” என்று மற்ற சீடர்களும், பண்டிதர்களும் கூச்சலிட்டனர். குரு அவர்களை அமைதிப்படுத்தி, அதன் பொருளை விளக்குமாறு கனகதாசரைக் கேட்க, ‘நான்’ என்ற அகங்காரம் போனவன் தான் மோட்சத்திற்குப் போக அதிகாரி என்று அவர் விளக்கமளித்தார். பிறகு சீடர்களின் கர்வம் அடங்கியது. இது ஒரு சம்பவம்.

உடுப்பியில் கனகதாசர் சாளரம்:

இன்னொரு சம்பவம், கனகதாசர் அக்காலத்திய சாதிய அடக்குமுறையினால் எந்த அளவு அவமதிக்கப் பட்டார் என்பதையும் பதிவு செய்கிறது. ஒருமுறை அவர் உடுப்பிக்குச் சென்று அங்குள்ள கிருஷ்ணர் கோயிலில் நுழைந்து தரிசனம் செய்ய விரும்பினார். சிறுமதி படைத்த பிராமண பூசாரிகள் தடுத்தனர். எனவே கோயிலின் பின்புற வாயிலுக்குச் சென்று அங்கிருந்தே மனமுருகிப் பாட ஆரம்பித்தார். அவரது பக்திக்கு இரங்கினார் பரந்தாமன். அவருக்கும் கிருஷ்ண விக்கிரகத்திற்கும் இடையே இருந்த சுவரில் கீறல் விழுந்து பிளந்து, அதில் ஜன்னல் அளவு பெரிய இடைவெளி தோன்றியதாம். அதே நேரத்தில் கிருஷ்ண விக்கிரமும் அரைவட்டமாகத் திரும்பி அந்த துவாரத்தின் வழியே தாசருக்குத் தரிசனம் தந்ததாம். பிறகு சுவரை சீர்ப்படுத்தி அதில் அந்த இடைவெளியை அப்படியே விட்டுவிட்டார்களாம்.

இன்றும் உடுப்பி கோயிலின் வாயிலில் ‘கனகன கிண்டி’ (கனகனது சாளரம்) என்று ஒரு ஜன்னல் இருக்கிறது. சம்பிரதாயத்தின்படி கிழக்கு நோக்கி வீற்றிருக்காமல், கிருஷ்ண விக்கிரம் மேற்கு நோக்கி இருப்பதற்கும் இதுவே காரணம் என்று கூறப் படுகிறது.

கனகதாசர் குருபர் குலத்தினராக இருந்தும், இளம்வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்தும், கவி பாடும் திறன் பெற்றவராகவும் இருந்ததார். ஹரிபக்திசாரம், நரசிம்ஹஸ்தவம் ஆகிய துதிப்பாடல்களும், மேற்சொன்ன ராமதான்யசரித்ரே தவிர நளசரித்ரே, மோகனதரங்கிணி ஆகிய காவியங்களும், நூற்றுக் கணக்கான தனிப் பாடல்களும் அவர் இயற்றியவை என்று கருதப் படுகிறது.

மோகனதரங்கிணி என்ற காவியம், கிருஷ்ணன்- ருக்மிணி இருவருக்கும் மகனாகப் பிறந்த பிரத்யும்னன், பாணாசுரனின் மகள் உஷையைக் காதலித்து மணம் புரியும் புராணக் கதையின் காவிய வடிவம். இக்காவியத்தில் துவாரகை நகரை வர்ணிக்கும்போது, முத்தும் மணியும் தெருவில் கூறுகட்டி விற்கும் அகன்ற கடைவீதிகள், பேரம் பேசும் பல நாட்டு வணிகர்கள், மது மயக்கத்தில் திளைக்கும் கிராமத்து மள்ளர்கள் என்று தமது ராஜ்யத்தின் தலைநகரான விஜயநகரத்தையே (இன்றைய ஹம்பி) விரிவாக வர்ணித்திருக்கிறார்.

கர்நாடக இசைஞானி:

கனகதாசருக்கு கர்நாடக சங்கீதத்தின் இசையமைப்பு பற்றிய அடிப்படை ஞானம் இருந்தது. கிராமிய இசைவாத்தியமான எளிய தம்புராவை மீட்டிப் பாடும் வகையில் எளிய சொற்களிலேயே அவரது பெரும்பாலான பாடல்கள் அமைந்துள்ளன. பல பாடல்கள் தத்துவார்த்தமானவை. ஒரு பாடல் –

கன்னடம்:

நீ மாயெயொளகொ நின்னொளு மாயெயொ
நீ தேஹதொளகொ நின்னொளு தேஹவொ!

பயலு ஆலயதொளகொ, ஆலயவு பயலொளகொ
பயலு ஆலயவெரடு நயனதொளகொ
நயன புத்தியொளகொ புத்தி நயனதொளககொ
நயன புத்திகளெரடு நின்னொளகொ ஹரியெ!

ஸவியு ஸக்கெரெயொளகொ சக்கரெயு ஸவியொளகொ
ஸவியு ஸக்கரெயெரடு ஜுஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸினொளகொ மனஸு ஜிஹ்வெயொளகொ
ஜிஹ்வெ மனஸுகளெரடு நின்னொளகொ ஹரியெ!

குஸுமதொளு கந்தவொ கந்ததொளு குஸுமவொ
குஸும கந்தகளெரடு ஆக்ரஹணதொளகொ
அஸம்பவ காகினெலெ ஆதிகேசவராய
உசுரலென்னளவல்ல எல்ல நின்னொளகொ ஹரியெ!

தமிழில்:

நீ மாயையினுள்ளா அன்றி நின்னுள் மாயையா
நீ தேகத்தினுள்ளா அன்றி நின்னுள் தேகமா?

வெளி வீட்டினுள்ளா வீடு வெளியினுள்ளா
வீடும் வெளியும் இரண்டும் விழியிலேயோ
விழி அறிவினுள்ளா அறிவு விழியினுள்ளா
விழி அறிவு இரண்டும் உன்னிலேயோ ஹரியே!

இனிமை சர்க்கரையினுள்ளா சர்க்கரை இனிமையினுள்ளா
இனிமை சர்க்கரை இரண்டும் நாவிலேயோ
நா மனதினுள்ளா மனம் நாவினுள்ளா
நா மனம் இரண்டும் உன்னிலேயோ ஹரியே!

மலரினுள் மணமா மணத்தினுள் மலரா
மலர் மணம் இரண்டும் நாசியிலேயோ
சொல்ல வல்லேன் அல்லேன் காகினெலெ ஆதிகேசவராயா
ஒப்பற்றவனே, எல்லாம் உன்னிலேயோ ஹரியே!

மேலும், பல பாடல்களில் சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடுமையாக விமர்சித்தும் பாடுகிறார். ‘குல குல குலவெந்து’ என்று தொடங்கும் ஒரு பாடல்:

குலம் குலம் குலம் என்று சண்டையிடாதீர்-
உம் குலத்தின் ஆதிமூலம் என்ன என்றாவது அறிவீரோ?

நாம் பிறக்காத யோனிகளும் இல்லை நடக்காத நிலங்களும் இல்லை.
இப் பிறவிகளில் நாம் உண்ணாத பொருளே இல்லை.
இறுதிச் சொட்டு நீருக்காகத் துடிக்கும் நேரத்தில் கீழ் மேல் என்று பார்ப்பாயா?
இதனை உணர்; சர்வக்ஞனான ஹரியையே நினை.
இது ஏன் உனக்குப் புரியவில்லை மானிடா?

தண்ணீரே அனைத்துக் குலங்களுக்கும் தாயல்லவோ?
தண்ணீரின் குலம் என்ன என்று தெரியுமோ?
நீர்க்குமிழி போன்று நிலையில்லாதது இத்தேகம்-
நீர் புரிந்து கொள்ளும் இதனை மானிடரே!

ஹரியே சர்வோத்தமன், ஹரியே சர்வேஸ்வரன்
ஹரிமயம் இதெல்லாம் என்று அறிந்து தெளிந்து
ஸ்ரீ காகினெலெ ஆதி கேசவராயனின்
சரண கமலத்தைப் புகழ்ந்து பாடுபவனே நற்குலத்தான்!

சாதிய அடக்குமுறைக்கு எதிரான பாடகர்:

பகவான் தரிசனம் தந்து விட்டார்; ஆனால் தன் வாழ்நாளின் கடைசிவரை கனகதாசர் கோயிலுக்குள் நுழையவே இல்லை. இத்தனைக்கும் நந்தனார் போன்றோ, திருப்பாணாழ்வார் போன்றோ அவர் கடைநிலைச் சாதியினர் கூட இல்லை. போர்வீரராக ‘நாயக்கர்’ என்ற பட்டத்துடன் வாழ்ந்திருக்கிறார். இருந்தாலும் அவர் உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. சாதியக் கட்டுப் பாடுகள் கெட்டிப் பட்டு கடுமையாகி, மிகவும் இறுகிய நிலையை அக்காலகட்டத்தில் அடைந்திருந்தன என்ற சித்திரத்தையே இது அளிக்கிறது.

தன் வாழ்நாளின் இறுதிக் காலத்தைக் கனகதாசர் திருமலையில் கழித்தார் என்று சொல்லப்படுகிறது. பிறப்படிப்படையில் மனிதருக்கு மனிதர் வேறுபடுத்திப் பார்த்து, அதையே சமூக நடைமுறையாக்கி, சில மக்கள் சமூகங்களின் சமூக, வழிபாட்டு உரிமைகளையே முழுவதுமாக முடக்கி வைத்திருந்த ஆதிக்கவாதிகளுக்கு, தன் ஆன்மிக அற உணர்வின் அடியாழத்திலிருந்து புறப்பட்ட எளிய பாடல்கள் மூலம் வாழ்நாளின் இறுதிவரை அவர் உபதேசம் செய்து வந்தார்.

உடுப்பியில் அவர் நின்று பாடிய வீதியில் கோயிலுக்கு வெளியே அவருக்கு ஒரு சிறு நினைவு மண்டபம் உள்ளது. அதில் கனகதாசரின் திருவுருவச் சிலைக்கு மாலையிட்டு வைத்திருக்கிறார்கள். கோயிலுக்குள் அவரது சிலையோ திருவுருவப் படமோ எதுவும் இல்லை. அவருக்கு பகவான் தரிசனம் தந்த நுழைவாயிலில் எழுப்பப்பட்ட கோபுரம்  ‘கனக கோபுரம்’ என்று சம்பிரதாயமாக அழைக்கப்பட்டதாம்.

கனகதாசரைப் போன்றே புரந்தர தாசர், விஜயவிட்டலதாசர், ரங்கவிட்டலதாசர் என்று பல ஹரிதாசர்கள் கன்னடத்தில் எளிமையான மொழியில் பக்திரசம் ததும்பும் பாடல்களைப் பாடியுள்ளார்கள். இவர்களது பாடல்களை ஒட்டுமொத்தமாக ‘ஹரிதாஸ சாஹித்யம்’ என்று அழைக்கிறார்கள். ஹரிதாசர்களின் பாடல்கள் எல்லா மக்களாலும் பக்தியுடன் பாடப்படுகின்றன. ஆனால் மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த குருமார்களைப் போல கோயில்களும் பிருந்தாவனங்களிலும் வைத்து இவர்களைப் பூஜிப்பதில்லை என்று அறிய வருகிறது.  தேசந்தோறும் பாஷை வேறு, சம்பிரதாயம் வேறு.

அந்த விதத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும், அவர்களின் அடியார்களும் பாக்கியசாலிகள்.  ‘திருநாளைப் போவாரையும்,  திருப்பாணாழ்வாரையும் பார்ப்பார் கோயிலிலே வைத்துப் பூசை செய்யவில்லையா?’ என்று பாரதியார் ஒரு கட்டுரையில் கேட்டது ஞாபகம் வருகிறது. ஆகம முறைப்படி கட்டப்பட்ட தமிழகக் கோயில்களில் அடியார்களது திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கு விழாக்களும் கொண்டாடும் நல்மரபு சைவ, வைணவ சமயாசாரியார்களாலும், பண்டைத் தமிழ் அரசுகளாலும் ஏற்படுத்தி வைக்கப் பட்டிருக்கிறது.

கனகதாசரின் பிறந்தநாள் கர்நாடகத்தில் மாநில அரசு விடுமுறை. அதே பட்டியலில் இன்னொரு நாளும் வருகிறது – பஸவ ஜயந்தி. கர்நாடக வீரசைவ சமயப் பிரிவின் குருநாதரான பசவண்ணர் எனப்படும் பசவேஸ்வரரின் பிறந்த நாள்.

அடித்தட்டு மக்களின் சமய, ஆன்மீகக் குரலாக எழுந்த இரு பெரும் சைவ, வைணவப் பெரியார்கள். அவர்கள் இருவரது பிறந்த நாளையும் அரசு விடுமுறையாக அறிவித்ததோடு, அவர்களின் புனித நினைவைப் போற்றி, அவர்களது மனிதநேய ஒருமைப்பாட்டுச் சிந்தனைகளைப் பரப்பும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் நடத்த மாநில அரசு ஆதரவு தருவது உத்தமமான காரியம்.

.

குறிப்பு:

திரு. ஜடாயு, பெங்களூருவில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்.  இலக்கிய ஆர்வலர்; எழுத்தாளர். பாரதப் பண்பாட்டைக் காக்கும் துடிப்புடன்  ‘தமிழ் ஹிந்து’  இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

காண்க:

தமிழ் ஹிந்து இணையதளம்

இறைவனையே தன்னிடம் அழைத்தவர்

 

 

Advertisements
%d bloggers like this: