Blog Archives

வேதகால சட்ட வல்லுநர்

-சு.சத்தியநாராயணன்

 

யாக்ஞவல்கியர்

யாக்ஞவல்கியர்

(யாக்ஞவல்கியர் ஜெயந்தி: ஐப்பசி-   பூரட்டாதி)

(நவ. 3)

 

வந்தேஹம் மங்களாத்மானம் பாஸ்வந்தம் வேதவிக்ரஹம்!

யாக்ஞவல்க்யம் முனிச்ரேஷ்டம் ஜிஷ்ணும் ஹரிஹரப்ரபும் !

ஜிதேந்த்ரியம் ஜிதக்ரோதம் ஸ்தாத்யான பராயணம் !

ஆனந்தநிலயம் வந்தே யோகானந்த முனீச்வரம் !

 

இந்த மாதம் நவம்பர் 3 அன்று இந்த முனிசிரேஷ்டரின் பிறந்த நாள் வந்தது. இவரது ஜெயந்தி பல ஊர்களிலும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. வேதகால சட்ட வல்லுநராக யாக்ஞ்வல்கியர் கருதப்படுகிறார். அவரது  ‘யாக்ஞவல்கிய ஸ்மிருதி’, இன்றைய நவீன சட்டங்களுக்கு ஆரம்பகர்த்தா.

சரத்ருது, கார்த்திக சுத்த ஸப்தமி திதி, சதபிஷக் நட்சத்திரம், பானுவாரம், தனுர்லக்னம் சேர்ந்த நல்ல வேளையில் சுனந்தா தேவியாருக்கும், ப்ரும்மராதருக்கும் மகனாக யாக்ஞவல்கியர் அவதரித்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட திருநாமம்  ‘ஸானந்தர்’ என்பதாகும். ப்ரும்மராதருக்கு  ‘யக்ஞவல்கியர்’ என்ற ஒரு பெயருண்டு. அவரது மகனானதால் இவருக்கு  ‘யாக்ஞவல்கியர்’ என்று பெயரிடப்பட்டது. ஸானந்தருக்கு ஐந்து வயதில் ப்ருஹஸ்பதியினால் அக்ஷராப்யாஸமும், உபநயனமும் செய்விக்கப்பட்டது.

101 சாகைகளைக் கொண்ட யஜூர் வேதத்தில் கடம் முதலிய 59 சாகைகளை விருத்த வியாசரிடமும், 27 சாகைகளை வைசம்பாயனரிடமும் அத்யயனம் செய்தார். வைசம்பாயனரின் கோபத்திற்கு ஆளாகிய அவர் அவரது ஆணைப்படி தான் அவரிடம் கற்ற வேதத்தை அக்னிப் பிழம்புகளாகக் கக்கினார். அதை தித்திரிப் பறவைகளாக மாறிய வைசம்பாயனரின் மற்ற சீடர்கள் விழுங்கினர். அதனால் அவ்வேதம்  ‘தைத்ரீயம்’ என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் காயத்ரிதேவியின் அனுஹ்ரஹம் பெற்று சூரியனிடமிருந்து மற்றவர் அறிந்து கொள்ளாத யஜூர் வேதத்தின் 15 சாகைகளைப் பெற்றார். இதுவே  ‘சுக்ல யஜூர்வேதம்’ எனப்படுகிறது.

குருவுடன் முரண்பாடு:

ஏன் வைசம்பாயனருக்கு யாக்ஞவல்கியரிடத்திலே கோபமேற்பட்டது?

சுப்ரியன் என்ற ஒரு மன்னன் தனது தீய பழக்கவழக்கங்களால் கொடிய நோய்க்கு ஆட்பட்டான். அவன் தனது நோயைப் போக்கி உதவுமாறு வைசம்பாயனரை அணுகினான். அவர் தனது சிஷ்யர்கள் மூலமாக சாந்தீக ஹோமம் செய்து அவனை அந்த நோயிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அவர்களது முயற்சிகள் பலனளிக்காமல் போகவே யாக்ஞவல்கியரை அதனைச் செய்யுமாறு கேட்டார்.

தீய பழக்கங்களினால் ஒருவன் நோயுறுகையில் அவனை அந்த நோயிலிருந்து காப்பாற்றுவது தர்மமாகுமா?  என யாக்ஞவல்கியர் வினவ, ஒருவன் தான் செய்த தவறுகளை உணர்ந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுகையில் அவனுக்கு உதவி செய்தல் சரியென வைசம்பாயனர் மறுமொழி அளித்தார். அதனால் அந்த அரசனுக்காக சாந்தி ஹோமம் செய்து அவனுக்கு அளிக்க முற்படுகையில் அவனால் அவமதிக்கப்படுகிறார்.

அதனால் கோபம் கொண்ட யாக்ஞவல்கியர் ஹோம தீர்த்தத்தையும் மந்திர அக்ஷதையையும் ஒரு தூணின் மீது இறைத்துவிட்டு திரும்பி விடுகிறார். அந்தத் தூண் உயிர் பெற்று பசுந்துளிர் விட்டுத் தழைக்கிறது. யாக்ஞவல்கியரின் சக்தியுணர்ந்து அந்த அரசன் மீண்டும் தனக்காக சாந்தி ஹோமம் செய்து தருமாறு வைசம்பாயனரிடம் வேண்டுகிறான். யாக்ஞவல்கியர் மீண்டும் ஒருமுறை சாந்தி ஹோமம் செய்ய மறுக்கிறார்.

வைசம்பாயனர் ஆசிரமம் அமைத்துள்ள பகுதிக்கு அரசன் என்பதாலும், அந்த ஆசிரமப் பாதுகாப்புக்கும், அதற்குப் பொருளுதவி தரும் நிலையில் அவனிருப்பதாலும் அவனுக்கு உதவுவது தமது கடமை என அவர் நினைக்கிறார். ஆனால் யாக்ஞவல்கியரின் பதில் வேறு மாதிரியாக அமைகிறது.

“ஒரு வேத விற்பன்னர் அனைத்துத் தரப்பினரையும் சமநோக்குடன் அணுக வேண்டும். சாதாரண மனிதராயினும் மன்னனாயினும் நாம் சமமாக பாவிக்க வேண்டும். மன்னன் என்பதற்காக கூடா ஒழுக்கத்தினால் நோயினைப் பெற்ற இவனுக்கு உதவ முற்பட்டதே தவறு. ஏனெனில் இவன் செய்த தீய செயல்களை மீண்டும் செய்ய மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இம்மன்னனுக்கு இவன் எனக்கு அளிக்கப் போகும் செல்வத்தை மனதில் கொண்டு உதவ இயலாது. அவ்வாறு நான் அடையும் செல்வம் மகாபாவத்தை அளிக்கும். தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு செய்யலாகாது என்று உறுதியாகத் தெரிவிக்கிறார். மேலும் இதைச் செய்ய கட்டாயப்படுத்தினால் அதர்மத்தை போதிக்கும் குரு என்ற வகையில் அவரை நீங்கிச் செல்வதே சரியாக இருக்கும்” என்கிறார். இந்த வார்த்தைகளே வைசம்பாயனுருக்கு கோபத்தை உண்டாக்கியது.

தர்மத்தைப் போதிக்கும் சமய நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தினையும் பாமர மக்களையும் ஒன்று போல் பாவிக்க வேண்டும். தர்மம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தனக்குக் கிடைக்கும் செல்வத்திற்காகவோ, தனது சுய தேவைக்காகவோ தர்மத்திலிருந்து வழுவக்கூடாது என்பதை இந்நிகழ்வின் மூலம் யாக்ஜவல்கியர் உறுதிபடுத்துகிறார். இன்றைய நிலை என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால் நாம் எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதும் புரிந்துவிடும்.

யாக்ஞ்வல்கியர்- கார்க்கி சம்வாதம்:

ஜனக மன்னனின் அவையில் நடைபெற்ற விவாதங்கள் யாக்ஞவல்கியரின் வரலாற்றில் மிகப் பிரசித்தமான ஒன்று.  இதில் கர்கியுடன் நடந்த விவாதம் குறிப்பிடத்தக்கது.

கார்க்கி என்பவர் வாசகீனு என்பவரின் மகள். ஒரு பெண் வேத வேதாந்தங்களைக் கற்று பல அறிஞர்கள் விவாதிக்கக்கூடிய சபையிலே சமமாக இருந்து விவாதித்துள்ளாள். எனவே வேதகாலம் பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்கி வந்த காலம் என்று உறுதியாக அறிந்து கொள்ளலாம். பின்னர் ஏன் அது மாறியது எக்காலத்தில் என்பது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

கார்க்கி முதலில் கேட்ட கேள்வி,  படைப்பில் முதலில் தோன்றிய ஒன்று தண்ணீராகத் தானே இருக்க முடியும்! பூவுலகம் முழுவதும் தண்ணீரால் தானே சூழப்பட்டிருக்கிறது. அந்தத் தண்ணீரில் ஊடுருவிப் பரவியிருக்கும் பொருள் எது? இதற்கு யாக்ஞவல்கியர் அளித்த பதில் தண்ணீர் உருவாகக் காரணமாயிருப்பது வாயு என்பதே!

இதன் மூலமாக தண்ணீருக்கு முன்னதாக வாயு உண்டாகியிருக்கக் கூடுமென்று கூறுகிறார். இன்றைய விஞ்ஞானத்தோடு பொருத்திப் பார்க்கையில் தண்ணீரானது ஹைட்ரஜன்,  ஆக்ஸிஜன் ஆகிய வாயுக்களின் மூலங்களினால் ஆனது என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்றைய விஞ்ஞானிகள் பிரபஞ்சம் உருவாகியிருக்கும்போது முதலில் வெடித்துச் சிதறியது ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களின் அணுக்கள் தான் என்று நம்புகின்றனர்.

மேலும் பலகேள்விகளுக்கு பதிலளிக்கையில் இப்பிரபஞ்சம் முழுதும் வாயு பரவியிருக்கிறது என்றும் அதிலுள்ள ஒவ்வொன்றையும் இணைப்பது வாயு தானென்றும் கூறுகிறார்.

தனது திறமையான வாதத்தை நேர்த்தியாகக் கொண்டு சென்ற கார்க்கி,  அப்படி எனில் அந்த வாயுவில் ஊடுருவி அதற்கு உறுதுணையாக இருப்பது எது?  என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறாள். இதற்கு பரம்பொருள் என்பதே விடையாய் அளிக்க முடியும். அன்றைய காலகட்டத்தில் பரம்பொருளைப் பற்றி விவாதிக்காமல் இருப்பது மரபு.  கார்க்கிக்குப் பதிலளித்தால் மரபை மீறிய ஒரு செயலைச் செய்ய வேண்டிய சூழல். பதிலளிக்காவிடில் விவாதத்தில் தோற்க வேண்டிய சூழல். ஆனால் பிரம்மஞானிகள் சொல்வதாகச் சொல்லி பரப்ரும்மமே அதற்குக் காரணம் என்று நிரூபிக்கிறார்.

யாக்ஞவல்கியர் அளித்த ஸ்மிருதி:

அத்ரி முனிவருடன் நடைபெற்ற உரையாடலில் காட்டில் வசிக்கும் சந்யாஸிகள் செய்ய வேண்டிய விரஜா ஹோமம் பற்றிக் கூறுகையில் சந்யாசி காட்டில் அக்னியை உருவாக்கக் கூடாது என்றும் அருகிலுள்ள கிராமத்திலிருந்து பாதுகாப்பாகக் கொண்டுவர வேண்டுமென்றும் கூறுகிறார். அக்னி உருவாக்கப்பட்டு அது காட்டிற்கு அழிவு ஏற்படக் காரணமாகி விடக் கூடாது என்ற ஒரு உயர்ந்த எண்ணம் இங்கு வெளிப்படுகிறது.

யாக்ஞவல்கியர் ஒரு ஸ்மிருதியை நமக்கு அளித்துள்ளார்.  ‘ஸ்மிருதி’ என்பது ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று பல வகையிலும் சட்டதிட்டங்களை வகுத்து அளிப்பது. இதில் பரப்ரும்மம், அதன் தோற்ற மாறுபாடுகள், பரிணாம வளர்ச்சி, ஆன்மா – உடல் ஆகியவையின் சம்பந்தங்கள், கருவின் பரிணாம வளர்ச்சி, இறப்பு,  மறுபிறப்பு, நீத்தார் கடன்கள் போன்ற பல விஷயங்களை அலசுகிறார்.

வர்த்தக ரீதியாக இல்லாமல் ஆத்மார்த்தமாக இசையில் ஈடுபடுபவர்கள் தியானம், தவம் ஆகியவை இல்லாமலேயே முக்தியடைய முடியும் என்கிறார்.  தியானம் செய்யும் முறையையும் அதன்மூலம் ஆன்மாவை மனக்கண்ணால் கண்டு தியானிக்க இயலும் என்றும் கூறுகிறார்.

பிரம்மச்சாரிகள் கடைப்பிடிக்க வேண்டியதாக அவர் கூறுபவை:

 •  தினசரி குளித்து உடல் தூய்மை செய்து கொள்ளுதல்
 •  அதிகம் பேசாமல் அமைதி காத்தல்
 •  நோன்புகள், விரதங்கள் ஆகியவை மேற்கொள்ளுதல்
 •  மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்தல்
 •  தினசரி குறைந்தது நூற்றியெட்டு முறையாவது காயத்ரி ஜபம் செய்தல்
 • இரக்கம், மன்னித்தல், வாய்மை, நேர்மை, கோபத்தை அடக்குதல், காம இச்சையை அடக்குதல் ஆகிய குணங்களைக் கொண்டிருத்தல்
 • தினசரி பிச்சை எடுத்து உண்ணுதல்
 • குருவுக்குத் தேவைப்படும் உதவிகள் செய்தல்
 • வேதங்களைப் பயிலுதல்
 • ஹோமம்,  ஜபம் போன்றவற்றைத் தவறாமல் செய்தல்

இல்லறத்தார் (கிரஹஸ்தர்கள்) ,  பிரமச்சர்யம் காத்தல், பிச்சையெடுத்து உண்ணுதல், குருவுக்குத் தொண்டு செய்தல் ஆகிய மூன்றைத் தவிர பிறவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.

பிச்சையெடுத்து உண்ணுதல் இன்றைய காலகட்டத்தில் ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால் ஏனைய பிறவற்றை இன்றைய பிரமச்சாரிகளும் இல்லறத்தாரும் கடைப்பிடித்தால் நிச்சயம் நமக்கு உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

ரிஷி என்பவர் யார்?

சந்யாசிகளுக்கு அவர் தகுதியையும், கடமைகளையும் நிர்ணயிக்கிறார். தகுதி உள்ளவர்களே வானப்ரஸ்தம், சந்யாஸம் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கூறுகிறார். எல்லா ரிஷிகளும், முனிவர்களும் சந்யாசிகள் அல்லர்.

 • நான்கு வேதங்களையும் கசடறக் கற்று தினசரி வாய்விட்டு பாராயணம் செய்திருக்க வேண்டும்.
 • இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்து ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும்.
 • ஏழைகளுக்கும் பசியோடிருந்தவர்களுக்கும் அன்னதானம் செய்திருக்க வேண்டும்.
 • தினசரி அதிகாலையிலும் அந்தி சாயும் வேளையிலும் அக்னிஹோத்திரம் செய்திருக்க வேண்டும்.
 • தனது தகுதிக்கேற்றவாறு ஹோமங்கள், யாகங்கள் செய்திருக்க வேண்டும்.
 • முக்தியடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் மனதை ஒருங்கிணைத்து த்யானம் செய்ய வேண்டும்.
 • தனது சொத்துக்களை சந்ததியினருக்கு முறைப்படி அளித்து, எஞ்சியவற்றை தானம் செய்திருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக திடசித்தத்தை பிரதானத் தகுதியாகக் கூறுகிறார் யாக்ஞவல்கியர்.

மேற்சொன்னவற்றைத் தகுதியாக்கிய அவர் சந்யாசி ஆன பிறகு இருக்கக் கூடிய நியமங்களையும் கூறுகிறார்:

கமண்டலமும், பிரம்ம தண்டமும் ஏந்தி தனிமையில் வாழ வேண்டும். நிலையாகத் தங்காமல் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். நகர, கிராம எல்லைகளில் தங்கி பிச்சையெடுக்காமல் விருப்பமுடன் அளிக்கும் உணவையே ஏற்க வேண்டும். எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திக்க வேண்டும்.

அத்ரி மகரிஷியிடம் கூறும்போது, ‘ஒற்றைக் காவி உடை, கோவணத்தைத் தவிர வேறு எந்த ஆடையும் அணியக் கூடாது. பட்டினி கிடந்து இறக்கவோ, ஜலசமாதியாகவோ ஆயத்தமாக இருக்க வேண்டும். திகம்பர சந்யாசியாக வாழவும் சித்தமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் புதர் மண்டிய இடங்கள், இடிந்த வீடுகள், குகைகள், பாலைவனத்திலோ கூட வசிக்கத் தயாராக வேண்டும்’ என்கிறார்.

முதல் சந்யாசி:

அநேகமாக யாக்ஞவல்கியரே முதல் சந்யாசியாக இருக்கக் கூடும் என்கின்றனர். நாம் கண்மூடித்தனமாக எல்லா சந்யாசிகளையும் மதிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். யாக்ஞவல்கியர் தனது குரு அதர்மத்தை போதிக்கிறார் என்பதை அறிந்தவுடன் துணிவுடன் அவரை நீங்க முயல்கிறார். அவரது குரு வைசம்பாயனர் அவரது தாய்மாமனும் கூட. ஆயினும், உறவு, குரு என்ற நிலைகளைக் அடந்து தர்மமே பிரதானமாய் கருதிச் செயல்பட்டார். இந்தச் செயலை நாம் முன்னுதாரணமாகக் கொண்டு தகுதியற்ற சந்யாசிகளைத் தொழுவதைத் தவிர்த்தல் அறமேயன்றி பாபச் செயலல்ல.

சனாதன தர்மத்தின் ஆணி வேராக இருப்பது  ‘ஸ்ருதி’ எனப்படும் வேதங்களே. அடுத்த இடத்தில் ஸ்மிருதிகள் இருக்கின்றன. மரபுகளும் நடைமுறைச் செயல்பாடுகளும் இவற்றை ஆதாரமாகக் கொண்டே செயல்படவேண்டும் என்கிறார். ஆயினும் வேதங்களின் நிர்ணயங்களுக்கும், ஸ்மிருதிகளின் நடைமுறைகளுக்குமிடையே ஏதாவது முரண்பாடாக அமையுமானால் அப்பொழுது வேதங்களில் கூறப்பட்டதையே இறுதியான முடிவாகக் கொள்ள வேண்டுமென்கிறார்.

ஆயினும் சமுதாய மரபுகளும் நடைமுறைகளும் குறிப்பிட்ட சில பிரச்னைகளில் வேதங்கள், ஸ்மிருதிகளின் நிர்ணயங்களை மீறலாம் என விதிவிலக்கும் அளிக்கிறார். உதாரணம்:

கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்பதைப் போல. பெரும்பாலான மக்களால் கண்டனத்துக்குள்ளான எந்தவொரு நடைமுறையும்- அது வேதங்கள், ஸ்மிருதிகள் ஆகியவற்றால் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் அதனைத் தொடரக்கூடாது என்பது யாக்ஞவல்கியரின் மிகச் சிறந்த கருத்து.

வருமானம், சேமிப்பு, முதலீடு மற்றும் தானம் பற்றிக் கூறுகையில்,

தனது வருமானத்தை ஆறாகப் பங்கிட்டு-

ஒரு பங்கை குடும்பச் செலவுக்காகவும்,

ஒரு பங்கை வருங்காலத்திற்கான சேமிப்பாகவும்,

ஒரு பங்கை நேர்மையான முதலீடுகளுக்காகவும்,

ஒரு பங்கை அரசுக்கு வரியாகவும்,

ஒரு பங்கை சமுதாயநலத் திட்டங்களுக்காகவும்,

ஒரு பங்கை தானம் வழங்கவும் – பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

ஒரு பங்கு அரசுக்கு வரியாகச் செலுத்தப்படும்போது பாதுகாப்பு என்ற ஒன்றைச் செய்ய அரசுக்குப் போதுமானதாக இருக்கும். சமுதாயநலத் திட்டங்களுக்கும், தானத்திற்கும் தானே நேரிடையாகப் பங்களிக்கும்போது ஊழல் இல்லாமல் சரியாகப் பயனளிக்கும் திட்டங்களை மக்களே செய்து கொள்ளலாம் என்ற நோக்கில் இது சொல்லப்பட்டிருக்கும் என நினைக்கிறோம்.  மக்களின் நேரிடையான பங்களிப்பு இருக்கும் என்ற நிலையில் இன்று போல் மக்கள் எல்லாமே அரசின் வேலை என்று ஒதுங்கி நிற்கும் நிலை ஏற்படாது. இந்தச் செயல்பாட்டை மக்கள் அனைவரும் பின்பற்றும் நிலையிருந்தால், ஏழ்மை- வறுமை என்பதே இல்லாது போய்விடும்.

பெண்களுக்கு அளித்த உரிமை:

திருமணத்தில் பெண்களுக்குச் சில உரிமைகளை அளித்திருக்கிறார். முக்கியமாக தன் திருமணத்தை ஒரு பெண் ரத்து செய்ய நியாயமான காரணங்களைச் சொல்லுகிறார்.

கணவன் மோசமானவனாகவோ, துர்நடத்தையுள்ளவனாகவோ இருந்தால், எட்டு ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டிலேயே இருந்து இடையிலொரு முறை கூட வராமலிருந்தால், கணவன் தேசத்துரோகியாக மாறினால், ஆண்மையில்லாதவனாக இருந்தால், மனைவியின் உயிருக்கு கணவனால் ஆபத்து நேரிடுமென்றால் ஒரு பெண் தன் திருமணத்தை ரத்து செய்யலாம்.

இம்மாதிரி திருமணத்தை ரத்து செய்த பெண் மறுமணம் செய்து கொள்ளலாம் என்கிறார். மேலும் கணவன் இறந்துவிட்டாலோ, சந்யாசியாகிவிட்டாலோ மறுமணம் செய்து கொள்ளலாம் என்கிறார்.

இதனைப் படித்த போதும், எழுதும்போதும் இவ்வாறு பலகோணங்களில் சிந்தித்து சட்டதிட்டங்களை வகுத்தளித்த சனாதன தர்மத்தை பிற்போக்கானது என்று கூறும் முற்போக்காளர்களை நினைக்கையில் சிரிக்கத் தோன்றுகிறது. ஆனால் இதனை அனைவரும் அறிந்து கொள்ளாமல் போனதால் தானே இந்த நிலை என எண்ணும்போது,  முற்போக்காளர்களை நினைத்து மனம் ரௌத்ரம் கொள்கிறது.

மேலும் வர்த்தக நிறுவனங்களின் வகைகள், அவற்றுக்கிடையிலான செயல்பாடுகள், சட்டதிட்டங்கள் போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிடுகிறார். நிலங்களின் வகைகள், எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பது பற்றியும் இவரது ஸ்மிருதி திட்டவட்டமாகப் பேசுகிறது.

கால்நடைகளுக்காக மேய்ச்சல் நிலம், கிராமம்- நகரத்திற்கு ஏற்றாற் போல ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். வேலியில்லாத நிலத்தில் கால்நடைகள் பயிரைச் சேதப்படுத்தினால் அதற்காக நஷ்டஈடு கோர முடியாது என்றும், அதே நேரத்தில் வேலியை நாசம் செய்து, பயிரையும் சேதப்படுத்தினால் நிலத்தின் சொந்தக்காரருக்கு கால்நடையின் உரிமையாளர் நூறு பணம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மாட்டு வண்டி, குதிரை வண்டி, தேர் போன்றவை கால்நடைகளை காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ ஓட்டுநருக்கு பெரும் அபராதம் விதிக்கப்படும்.

இந்தக் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் ஒவ்வொரு ஊருக்கு அருகிலும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லாமல் இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு நகரத்தைச் சுற்றியும் விளைநிலங்கள் அருகி வருகின்றன. இனி வரும் காலங்களில் அரசு விழித்துக் கொண்டு மேய்ச்சல் நிலங்களையும், விளைநிலங்களையும் பாதுகாத்தாலன்றி எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மிகப் பெரும் இடர்ப்பாடுகளை எதிர்கொள்வது என்பது மிகச்சிரமமாகிவிடும்.

கைவினைக் கலைஞர்களின் பொருளாதார முக்கியத்துவத்தை மிகவும் அறிந்து அவர்களுக்கு சமூகப் பொருளாதார அமைப்புகளிலும் முக்கிய இடம் அளிக்கப்படவேண்டும் என்கிறார். இன்று இந்த முக்கியத்துவம் அருகியுள்ளது. வெளிநாட்டு வர்த்தகம், ஒப்பந்தம், யோக சாஸ்திரம் எனப்பல துறைகளிலும் இவரது ஸ்மிருதி பேசுகின்றது.

நமது முன்னோர்கள் பல்துறை வல்லுநர்களாக பரிமளித்துள்ளனர் என்பது யாக்ஞவல்கியரைப் பற்றி அறியும்போது தெரியவருகிறது. தேசம், தெய்வம், சமுதாயம் என அனைத்தையும் ஒன்றிணைத்து செயல்படக்கூடிய முன்னேறிச் செல்லக்கூடிய திட்டங்களையும், சட்டங்களையும் அவர்கள் முன்மொழிந்திருப்பது ஆச்சர்யமோ அதிசயமோ அல்ல. அதனைப் போற்றி பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

உதவிய நூல்கள்:

1. ஸ்ரீ யாக்ஞவல்கியர் திவ்ய சரித்ரம்

– இஞ்சிக்கொல்லை பண்டிட் ஆர்.சிவராம சாஸ்திரிகள்

2. யாக்ஞவல்கியரின் விவாதங்கள்

– அறந்தை மணியன்

3. யாக்ஞவல்கிய ஸ்மிருதி

– அறந்தை மணியன்

குறிப்பு:

திரு.சு.சத்தியநாராயணன், திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர்;   ‘பன்யான்’ என்ற பன்மொழிப் பயிலகத்தை நடத்தி வருகிறார்.

Advertisements
%d bloggers like this: