Blog Archives

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

-பேராசிரியர் ப.கனகசபாபதி

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

(பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4)

.

நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். “மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்களுக்கான அவசியம் என்ன?”

ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. அரசியல், சமூகம், பொருளாதாரம் என வெவ்வேறு தளங்களிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நூறாண்டு காலத்தில் உலகம் முழுவதிலுமே பல முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை தொடர்ந்து நிகழ்ந்தும் வருகின்றன. சுவாமி விவேகானந்தர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் செல்வச் செழிப்பில் கண்ட பல பணக்கார நாடுகள் இன்று பொருளாதார நெருக்கடியில் உள்ளன. உலகம் முழுமைக்கும் மேற்கத்திய நாடுகளால் முன்வைக்கப்பட்ட அவர்களின் இரண்டு முக்கிய பொருளாதார சித்தாந்தங்களும் தோல்வியைத் தழுவிவிட்டன.

மேலும் அவர்களின் சமூகக் கோட்பாடுகள், சிந்தனை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை எனப் பலவும்  கேள்விக்குறியாகி வருகின்றன. எனவே அந்த நாடுகளின் உலகளாவிய தாக்கமும் செல்வாக்கும் அண்மைக் காலமாக குறைந்துகொண்டே வருகின்றன. ஆகையால் இப்போது அவர்கள் உலக நாடுகளுக்குத் தீர்வுகள் கொடுக்கும் சூழ்நிலையில் இல்லை.

அதே சமயம் இந்தியா உலக அளவில் முக்கியமான நாடாக மேலெழுந்து வருகிறது. சர்வதேச அளவிலான எல்லாக் கணிப்புக்களும் உலகப்  பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை இந்தியா வருங்காலத்தில் எட்டும் எனச் சொல்லி வருகின்றன.

கடந்த ஐந்து வருடங்களாக பெரிய பணக்கார நாடுகள் எல்லாம்  கடும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் போது, இந்தியா மட்டும் தொடர்ந்து பெரிய பிரச்னைகள் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பது உலகம்  முழுவதையும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

அதனால் ஆய்வு நிறுவனங்களும், பிரபல பல்கலைக் கழகங்களும் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள இங்கே வந்துகொண்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம், சமூகங்கள், தொழில்முறைகள் எனப் பலவற்றைப் பற்றியும் அறிந்துகொள்ள அவர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உலக அளவில் முக்கியமான முடிவுகளை எடுக்கக் கூடிய  ‘ஜி-20′ என்னும் இருபது செல்வாக்கான நாடுகளின் அமைப்பில் இந்தியா இடம் வகித்து வருகிறது. இந்தியத் தொழில்களும், தொழில் நிறுவனங்களும் சர்வதேச அளவில் பரவி வருகின்றன. எனவே உலகின் கவனம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் திரும்பிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் அன்றைய வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

சுவாமி விவேகானந்தரின் காலம் (1863-1902) நமது தேச வரலாற்றில் மிக ஏழ்மையானதும் சோகமானதுமாகும். அந்தச் சமயத்தில் பஞ்சமும் பட்டினியும் தலை விரித்தாடின.

ஆங்கிலேயர்களின் மிகக் கொடூரமான  அணுகுமுறைகளாலும், அப்போதைக்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய நாட்டின் ஆட்சிப் பொறுப்பு அரசிக்கு மாறியதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுரண்டல்களாலும் நாடு மிகவும் வறுமையில் இருந்தது. முந்தைய நூற்றாண்டு தொடங்கி பல லட்சக் கணக்கான பேர் பட்டினியால் ஏற்கனவே உயிர் விட்டிருந்தனர்.அப்போதும் பல பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் பசியால் வாடிக் கொண்டிருந்தனர்.

அந்தச் சமயத்தில் தான்  விவேகானந்தர் நாட்டின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்க்கிறார். பலதரப்பட்ட மக்களிடமும் அவர்களிடத்துக்கே நேரில் சென்று பேசுகிறார். சாதாரண மக்களின் நிலைமையை எண்ணி மனம் வெதும்புகிறார். நாட்டின் அப்போதைய சூழ்நிலையை முந்தைய காலகட்டங்களுடன் எண்ணிப் பார்க்கிறார். பிறகு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒப்பிடுகிறார்; இந்திய தேசத்தை உலக அரங்கில் மீண்டும் முதன்மையான இடத்தில் உட்காரவைக்க வேண்டும் என அறைகூவல் விடுக்கிறார்.

வரலாற்றின் மிக மோசமான காலகட்டத்தில், அடிமை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, தேசத்தை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்ப்பது என்பது மற்றவர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காரியமாகும். ஆனால் சுவாமி விவேகானந்தர் அது சாத்தியம் என நம்பினார்.

இன்றைய இந்தியாவுக்குப் பலமான அஸ்திவாரங்கள் உள்ளன. நாடு நிறைய வலிமைகளைப் பெற்றுள்ளது. அபரிமிதமான இயற்கை வளங்கள்,  பரந்த நிலப்பரப்பு, காடுகள், மலைகள், நதிகள், இனங்காண முடியாத அளவு உயிரினங்கள், செடி கொடிகள், வருட முழுவதும் ஆதவனின் கதிர்வீச்சு, மண்ணுக்கு மேலே மட்டுமன்றி கண்ணுக்குத் தெரியாமல் கீழேயும் மதிப்பிட முடியாத மூலப்பொருள்கள் எனப் பலவிதமான அனுகூலங்கள் நமக்கு உள்ளன.

மனித இனத்தின் ஆறில் ஒரு பகுதி மக்கள் இங்கு தான் வாழ்ந்து கொண்டுள்ளனர். மேலும் தற்போது உலகில் உள்ள இளைஞர்களிலேயே அதிகம் பேர் இங்கு தான் உள்ளனர். மிகப் பெரும்பாலான மக்கள் எளிமை, கடின உழைப்பு, குடும்பப் பற்று, முயற்சி, அமைதியை நாடும் குணம் ஆகிய நல்ல தன்மைகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.

இந்தியாவின்  குடும்ப அமைப்பு முறை நமது முக்கியமான சொத்தாகும். நமது குடும்பங்கள் தான் நல்ல மக்களை உருவாக்கி, நாட்டுக்குத் தேவையான சேமிப்புகளைப் பெருமளவு ஏற்படுத்தி, தமது முயற்சியினால் புதிய தொழில்களை உண்டாக்கி, சமூகத்தில் அமைதியை நிலைநாட்டி வருகின்றன.

மக்கள் நிம்மதியாக வாழவும் பொருளாதார முன்னேற்றத்தை அடையவும், சமூகங்கள் உறுதுணையாக அமைகின்றன. நமது நாட்டில் சமூக மூலதனம் அதிகமாக உள்ளது.

நமது குடும்பங்களும் சமூகங்களும் அடுத்தவரைச் சார்ந்து நிற்காமல் சொந்தமாக இயங்கும் தன்மை பெற்றவை. மேற்கத்திய நாடுகளைப் போல அவை எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தைச் சார்ந்து நிற்பதில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய கடந்த  அறுபது ஆண்டு கால வளர்ச்சி மக்களாலேயே பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பல சமயங்களில் அது அரசு இயந்திரங்களை மீறிய வளர்ச்சியாகவும் உள்ளது.

இந்தியக் கலாசாரம் உயர் தரமானது; தனித்தன்மைகள் நிறைந்து நிற்பது. உலகமே ஒரு குடும்பம் என்னும் சிந்தனையில் அமைந்தது. உயிரில்லாத பொருள்களிலும் தெய்வீகத்தைக் காண்பது. கண்ணுக்குத் தெரியாத இந்தக் கலாசாரம் தான் இன்றைக்கும் நமது நாட்டின் அடித்தளமாக விளங்கி வருகிறது. இந்திய வாழ்க்கை முறையில் குடும்பங்களும், சமூகங்களும், அவற்றுக்கு ஆதாரமான கலாசாரமும் மிக முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.

ஆயினும் நமது நாடு, அதன் வளங்கள் மற்றும் திறமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுமையான பலன்களைப் பெற முடியவில்லை. அதனால் தேசம் பல விதமான சிரமங்களை அனுபவித்து வருகிறது.

இதற்கு முக்கியமான ஒரு காரணம் படித்த நமது மக்களின் தேசம் பற்றிய அறிவுப் பற்றாக்குறையாகும். இந்தியர்கள் இன்று உலக அளவில் அதிக எண்ணிக்கையில்  படித்து, பல்வேறு நிலைகளில் உள்ளனர். சாதாரண நிலைகளில் உள்ள மக்களே  பெரும்பான்மையானவர்கள். பொதுவெளியில் அவர்களின் கருத்துக்களுக்குப் பெரிய மதிப்பில்லை. மேலும் அவர்களுக்கு சுலபமாகக் கருத்துக்களை வெளிப்படுத்தத் தெரியாது. எனவே படித்தவர்கள் தான் அவர்களுக்குமான பிரதிநிதிகளாக உள்ளனர். ஆகையால் படித்தவர்களின் பொறுப்பு அதிகம். அவர்களால் தான் நாட்டைப் பற்றி சரியான முறையில் விஷயங்களை எடுத்துவைக்க முடியும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆங்கிலேயரால் திணிக்கப்பட்ட கல்விமுறையின் தாக்கம், சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளுக்குப் பின்னர், இன்னமும் அப்படியே பெரும்பாலும் நீடித்துக் கொண்டுள்ளது. அதனால் நமது நாட்டைப் பற்றி சரியான புரிதல் இல்லை.

நமக்கான ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது. உலகிலேயே அதிக செல்வச் செழிப்பான நாடாக, வரலாற்றில் அதிக காலம் நாம் தானிருந்தோம். தொழில்கள், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், வர்த்தகம், இலக்கியம், கண்டுபிடிப்புகள் எனப் பல துறைகளிலும் உலகுக்கே முன்னோடியாக விளங்கி வந்துள்ளோம்.

பொருளாதாரச் செழிப்பின் உச்சத்தில் இருந்தபோதும், ஆன்மிகத்தின் அடித்தளத்திலேயே கால்களைப் பதித்து  வைத்திருந்த சிறப்பினை உடையது நமது தேசம். இது உலகின் எந்த நாட்டிலும் காணப்படாத அதிசயமாகும்.

நமது வரலாற்றைச் சரியாகப்  படிக்கும்போது இன்றைய வாழ்க்கைக்குத் தேவையான எத்தனையோ நல்ல விஷயங்களை  நாம் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியும். தவறுகளிலிருந்து பாடமும் கற்றுக் கொள்ளலாம். அவையெல்லாம்  நமது முன்னோர்கள்  நமக்குச் சேர்த்துவைத்துச் சென்ற சொத்து.

நமது தேசத்தின் தற்போதைய நடைமுறைகள் மற்றும் அதற்கான அடிப்படைகள் ஆகியவை பற்றியும் நமக்குச் சரியான புரிதல்கள் இல்லை. எந்த ஒரு விஷயமானாலும் அதை மேற்கத்திய அணுகுமுறைகளைக் கொண்டே பார்க்கும் பழக்கமே நம்மிடம் மிகுந்துள்ளது. ஏனெனில் நமது பாடப் புத்தகங்களில் தொடங்கி நாம் செய்திகளுக்காகத் தினசரி நாடும் ஊடகங்கள் வரை பெரும்பாலும் அப்படிப்பட்ட அணுகுமுறைகளை மையமாக வைத்தே அமைந்துள்ளன. எனவே நமது வலிமைகள் நமக்குப் புரிவதில்லை. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பிற நாடுகளை நகலெடுத்துச் செய்யும் பழக்கம் தொடர்கிறது.

இந்தியப் பொருளாதாரத்துக்கு பிற நாடுகளை விட வலிமைகள் இருப்பது நமது கண்ணுக்கு முன்னால் நன்றாகத் தெரிகிறது. கடந்த சில  வருடங்களாக மேற்கத்திய நாடுகள் பெரும் சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து மீள்வதற்கு அவர்களுக்கு எந்த வழியும் தென்படவில்லை. அதே சமயம் நமது பொருளாதாரம் எத்தனையோ குழப்பங்களுக்கு இடையிலும் வலுவாக உள்ளது. ஆயினும்  இதனுடைய அடிப்படை குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை.

பணக்கார நாடுகள் பலவற்றில் ஆணும் பெண்ணும் முறையாக இணைந்து வாழ்வதே வெகுவாகக் குறைந்து வருகிறது; சமூகங்கள் சீரழிந்து வருகின்றன. ஆனால் எவ்வளவோ தாக்கங்களுக்கு அப்புறமும் நமது குடும்ப மற்றும் சமூக அமைப்பு முறைகள் பெருமளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டுள்ளன. ஆனால் அவற்றின் தன்மைகளைப் பற்றி நாம் முழுமையாகத் தெரிந்து கொள்வதே இல்லை.

அதாவது, வரலாற்றை மட்டுமன்றி நிகழ்காலத்தைப் பற்றியும் சரியாகத் தெரியாதவர்களாகவே நாம் இருந்து வருகிறோம். நமது படிப்புகளும் பட்டங்களும் பதவிகளையும் பணத்தையும் கொடுக்கின்றன. ஆனால் நம்மைத் தாங்கி நிற்கும் அடிப்படைகளைப் பற்றியோ, சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றியோ முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவி புரிவதில்லை. அதனால் நமது சுயத்தன்மையை இழந்து அந்நிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டே வாழ்க்கையை நகர்த்தி  வருகிறோம்.

இந்த வேளையில் தான் சுவாமி விவேகானந்தர் நமக்குத் தேவைப்படுகிறார். அவர் ஒரு பெருமை மிக்க துறவி மட்டுமல்ல; ஒரு தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் நிகழக் கூடியவற்றை முன்னமே கண்டறியும் வல்லமை பெற்றவர்; பன்முகத் திறமைகளைக் கொண்ட  ஆளுமையைப் பெற்றவர்; ஒரு உயர்ந்த தலைவராகவும் தலைசிறந்த அமைப்பாளாராகவும் விளங்கியவர். அவரால் நிறுவப்பட்ட நிறுவனங்கள் இன்று உலகின் பல பகுதிகளிலும் பரந்து விரிந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பார்க்கும் போது அவர் எவ்வளவு பெரிய அமைப்பாளர் (Organizer) என்பது  புரியும்.

கடவுளைக் காண நாட்டம் கொண்டு குருவைத் தேடிச் சென்று, பின்னர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு துறவறம் பூண்டிருந்தாலும், அவரது நோக்கம் தனிப்பட்ட முறையில் தான் முக்தி பெற வேண்டும் என்பதல்ல. மாறாக ஒட்டுமொத்த மக்களின் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதேயாகும்.

அதனால் தான் அவர் சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்; சாதாரண மக்கள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், வலிமை குறைந்தவர்கள் ஆகியோரின் முன்னேற்றத்தை வலியுறுத்தினார். அறிவியல் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பெண் கல்வி, சமூக மேம்பாடு எனப் பல விஷயங்கள் குறித்தும் ஆழமான கருத்துகளை எடுத்துரைத்தார்.

அவரது தேசப்பற்று அபரிமிதமானது. மற்ற எல்லாவற்றையும் விட அவர் தேச நலனையே முக்கியமாகக் கருதினார். தேசத்தைத் தாய்மையின் வடிவமாகவும், பராசக்தியின் வடிவமாகவும் போற்றினார். அவரது வார்த்தைகள்  பல லட்சக் கணக்கான மக்களின் மனங்களில் தேச பக்தியை ஊட்டின. திலகர், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்தரநாத் தாகூர் உள்ளிட்ட எண்ணிலடங்காத மகத்தான மனிதர்கள் அவரால் உத்வேகம் பெற்றனர். நாட்டில் சுதந்தர வேட்கை ஏற்பட அவர் முக்கியமான காரணமாக விளங்கினார்.

தனியொருவராக அமெரிக்காவில் நடைபெற்ற சர்வ மத சபையில் பேசி, குறிப்பிட்ட சமயம்  மட்டுமே சரியானது என்னும் மேற்கத்திய நாடுகளின் எண்ணம் ஒட்டுமொத்த உலக நலனுக்கு ஏற்புடையதல்ல என்பதை எடுத்துக் காட்டினார். பின்னர் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பிரயாணம் செய்து, மக்களுடன் உரையாடி இந்திய கலாசாரத்தின் பெருமைகளை அவர்களுக்கு உணர்த்தினார்.

சுவாமி விவேகானந்தர் நமது நாட்டில் உதித்த ஒரு மிகப் பெரிய உந்து சக்தி. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள பல லட்சக் கணக்கான மக்களை ஆட்கொண்டு வருபவர்.

நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்.

இன்றைய காலகட்டம் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாகக் கோலோச்சி வந்த மேற்கத்திய நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. அதேசமயம் எத்தனையோ பிரச்னைகளை எல்லாம்  மீறி உலக அரங்கில் இந்தியா மீண்டெழுந்து வந்து கொண்டுள்ளது. இந்த சமயத்தில் நமக்கெல்லாம் ஒரு முக்கியமான பணி காத்துக் கிடக்கிறது. அது நமது நாட்டைப் பற்றிச் சரியாகப் புரிந்துகொண்டு, நாட்டின் நலனுக்காகச் செயல்படுவதாகும்.

சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகளுக்கு மேலாகியும் தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்னைகள் நம் முன்பு உள்ளன. அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக் கூட வழங்க இயலாத நிலையில் நாம் உள்ளோம். நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயத் துறை கடும் சிரமங்களில் உள்ளது. வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணமாக அமைவது நமது தவறான கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளே.

மேலும் நாட்டுப்பற்றுக் குறைந்த சுயநலவாதிகள் பொது வாழ்க்கையை ஆக்கிரமித்து வருவதும் நமது பெரிய குறைபாடாக உள்ளது.

எனவே நம்மிடத்தில் தேசப்பற்று உருவாக வேண்டும். நமது நாட்டை எல்லாத் திசைகளிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டுசென்று அதன்மூலம் அனைவரும் நன்றாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். நமது தேசத்தின் பெருமை உலகெங்கும் பரவுவதற்கு நாம் பங்களிக்க  வேண்டும். அதற்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, லட்சியங்கள், கருத்துக்கள் ஆகியவை சரியான வழி காட்டும். ஏனெனில் அவரிடம் நம் அனைவரையுமே ஒட்டுமொத்தமாகத் தட்டி எழுப்பும் பேராற்றல் நிறைந்துள்ளது.

சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வார்த்தைகளும் அமரத்துவம் பொதிந்தவை. எனவே அவர் இன்றைக்கும் நமக்குப் பொருத்தமானவர். முந்தைய காலங்களை விடவும் இன்றைக்கு அவரே மிகவும் அவசியமானவர்.

 

குறிப்பு:

பேராசிரியர் திரு. ப.கனகசபாபதி, கோவையில் வசிக்கிறார்; மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். ‘பாரதப் பொருளாதாரம்- அன்றும் இன்றும்’, ‘வலுவான குடும்பம் -வளமான இந்தியா’, ‘INDIAN MODELS OF ECONOMY, BUSINESS AND MANAGEMENT’ ஆகிய நூல்களை எழுதியவர். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர்.

இக்கட்டுரை, நமது ‘விவேகானந்தம் 150.காம்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு.

 

 

Advertisements

கிழக்கிலிருந்து மீண்டும் ஒரு ஒளிக்கீற்று

-ம.கொ.சி.ராஜேந்திரன்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

(பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4)

.

மனிதன் – பரந்த விரிந்த இப்பிரபஞ்சத்தில் இறைவனால் படைக்கப்பட்ட மகத்தானதொரு ஜீவராசி, ஒரு உயிர்ப்பொருள்; இம்மண்ணில் வாழும் பலகோடி உயிர்களில் அளப்பரிய சக்தியால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்ற ஆறறிவு கொண்ட உயர்திணை.

மண்ணில் தோன்றி காட்டுமிராண்டியாய்த் திரிந்து விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் முதல், விஞ்ஞானத்தால் வியத்தகு வளர்ச்சி கண்டு இயற்கையை வென்றுவிடத் துடிக்கும் இன்று வரை, மனிதனே உயிர்களின் படைப்புகளில் அதிகாரமுள்ளவனாகவும் ஆட்சி புரிபவனுமாகவும் திகழ்ந்திடத் துடிக்கிறான்.

ஒருபுறம் வளர்ச்சியின் அடையாளங்களாக விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டாலும், அவை தனக்குள் ஓர் எல்லை வகுத்துக்கொண்டு தான் வளர்கின்றன; அவை புறவளர்ச்சி – அதாவது மனிதனின் இப்பிரபஞ்சத்தின் மீதான ஆதிக்கத்தை அறிவிக்கும் வகையில் தான் அமைகின்றன. கருவிகளால், கண்டுபிடித்த இயந்திரங்களால், வானளாவிய வாகனங்களால், மனிதனின் புறத்தேவையினைப் பூர்த்தி செய்ய முற்படுகின்ற முயற்சிகளாகவே மாறுகின்றன. ஆனால் அவையும் முழுமையாய் முற்றுப் பெறாமல் தொடர்கின்றன.

மறுபுறம் – பரந்த பூமியில் வாழும் பல கோடி மக்கள் நாடுகளாய், மாநிலங்களாய், இனங்களாய் புற அடையாளங்களைத் தாங்கும் முயற்சியில் தங்களை வேறுபடுத்திக் கொண்டும், வேற்றுமைகளையே விரிவுபடுத்திக் கொண்டும் வாழ்வது நமக்கு உலகில் காணும் காட்சிகளாக விரிகிறது.

வேற்றுமைகளை வளர்க்கும் எண்ணங்களை விதைக்கும் செயல்களே, இவ்வுலகில் அதிகாரபூர்வமானவைகளாய் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆண்டான்- அடிமையென்னும் போக்கினால், அதிகார போதைகளால், பொருள் முதல்வாதத்தால் நம்மிடையே அகவளர்ச்சி அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது.

புதுப் புது வார்த்தைகளால், மெருகூட்டும் வண்ண வண்ண அலங்கார சிந்தனைகளால், மனிதன் தன்னை அகவளர்ச்சிக்கு அப்பாற்பட்டு ஆடம்பரத்திற்கும், அதிகாரம், புகழ், பொருள் நுகர்வு கலாச்சாரத்திற்கும் அடிமையாகிக் கொண்டு இருப்பதைத் தான் வேதனையோடு காண முடிகிறது.

வளர்ந்த நாடுகள்  உலகின் வளத்தை சுயநலமாய்க் கொள்ளையடிக்க, வளரும் நாடுகள் அப்பாவித்தனமாய் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான். அன்பு இங்கு அடிமையாய் சேவகம் செய்கிறது; ஆணவம் அதிகார மமதையுடன் ஆளுமை புரிகிறது. மெய்ஞானம் மௌனமாய்ப் புன்னகை புரிகிறது; விஞ்ஞானம் மேதா விலாசத்துடன் மர்மமாய் நகர்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் செயற்கையான இடைவெளியை ஏற்படுத்தும் சந்தைப் பொருளாதாரத்தின் சாதகப் பயணங்களைத்  தொடர்கிறது விஞ்ஞானம்.

வளர்ச்சியின் குறியீட்டை, வானத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஏவுகணைகளின் எண்ணிக்கையில் அளவிடுவதா? பிரமாண்டமான  வானத்தை முட்டும் கோபுரங்களின் உயரங்களைக் கொண்டு அளவிடுவதா? சுனாமி எனும் ஆழிப் பேரலைச் சீற்றத்தாலும், பூகம்பம் என்னும் பூமி விடும் வெப்ப மூச்சாலும் தனது ஆக்ரோஷத்தைக் காட்டும் இயற்கையன்னையை ஆளவும் அடிமைப்படுத்தவும் முயல்வதா? எது உண்மையான வளர்ச்சி?

‘சர்வே பவந்து சுகின: ‘ , ‘யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ – பாரத தேசத்தின் முத்திரை வார்த்தைகள் – மந்திர சக்தி படைத்தவையாய் நம் ரிஷிகளின் சிந்தனைகளிலிருந்து வெளிப்பட்டவை அல்லவா?

புறவளர்ச்சி – உலகாயத வாதத்தைச் சார்ந்தது; அகவளர்ச்சி – மனதை, மெய்ஞானத்தைச் சார்ந்தது; பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய மனிதன், பஞ்ச பூதங்களையே தெய்வமாக வணங்கிட வேண்டியவன் அல்லவா? பஞ்சங்களையும், பகட்டுத்தன்மைகளையும் பேராசை நெருப்புகளால் வளர்த்ததை அணைக்க அல்லவோ நாம் முயல வேண்டும்?

இதோ! உலகிற்கு பாரத தேசம் அறைகூவல் விடுக்கிறது- சுவாமி விவேகானந்தரின் பெயரால்.

தனது ஆன்மிக ஒளியினால்,  இருண்டு வரும் உலகத்தின் துயர்களை, மனித உள்ளங்களின் அறியாமையை, ஆணவப் போக்கை விரட்டிய தனது ஆயிரமாயிரம் ஒளிக்கிரணங்களால் பிரகாசம் தர உலக மக்களை வாஞ்சையுடன் மீண்டும் அணைக்கிறது பாரதம்.

சுவாமி விவேகானந்தர்…

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நமது புனிதமான பாரத தேசத்தின் கோடிக் கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் மந்திர பெயர்ச்சொல்!

பண்டைய கால ரிஷிகள் புகட்டிய உன்னதக் கருத்துக்களை நமது உள்ளங்களில் – ஏன், உலகெங்கும் வாழும் மக்களின் சிந்தனைகளை தன் வாழ்க்கையால் செதுக்கிய சிற்பி!

பழமையும், புதுமையும் இணைத்து பாரதத்திற்கு  புதிய வலிமையூட்டிய நவீன சீர்திருத்தத் துறவி!

இருண்டு கிடந்த தேசத்தைத் தட்டி எழுப்பி எங்கும் ஒளிக்கீற்றுக்களைப் பரப்பி புத்துணர்வு பாய்ச்சிய இளைய சூரியன்!

இத்தகைய பெருமைகளை தனக்குள் கொண்டு  கம்பீரமாய் நம்முன்   நினைவுக்கு வருபவர் சுவாமி விவேகானந்தர்.

காலமகள் தன்னுள் பலகோடி உயிர்களை – ஜீவ ராசிகளைத் தோற்றுவித்து, வாழவைத்து, பின்னர் மடியவைக்கும் பெரும் பணியைச் செய்கிறாள். இருந்தாலும் சில பேரைத் தான் தனது வரலாற்றில் பதிவு செய்து கொள்கிறாள்.  அப்படிப்பட்ட பதிவால் நிறைவும் அடைகிறாள். வாழ்வாங்கு வாழ்ந்த அத்தகையவர்களை உலகிற்கு மகான்களாகவும் அடையாளம் காட்டுகிறாள். அந்த மகான்களே பின்னர் தாங்கள் பிறந்த மண்ணிற்கு வழிகாட்டிகளாகவும்  அடையாளங்களாகவும்  மக்கள் மனதில் என்றும் நிலைபெற்று வாழ்கிறார்கள்.

இந்த வரலாற்று நாயகர்களின் வரிசைகளில், நம் தேசத்து மக்களிடையே வீரத்திற்கும் தேசத்திற்கும் அடையாளமாகிப் போனவர்களில் தலையாயவர்; ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைத்து புதிய பரிமாணத்தை கொடுத்த புரட்சியாளர்;  இனிவரும் காலங்களில்  நாம் வணங்கும் தெய்வங்களாக தரித்திர நாராயணர்களை வழிபடச் செய்த சமுக சீர்திருத்தவாதி;  சோர்ந்து கிடந்த சமுதாயத்தை தனது மொழிகளால், சிந்தனைகளால், தனது வாழ்க்கையால் தட்டி எழுப்பிய தேசபக்த துறவி…

தான் செல்லும் இடங்களில் எல்லாம் நம் மண்ணின் பெருமை மிகு பண்பாட்டைப் பதிவு செய்து நம் பாரம்பரியத்தைப் பற்றிய பெருமித உணர்வை வளர்த்த தேசபக்தர்;  மோட்சத்தை அடைவதையே நோக்கமாக கொண்ட மத சிந்தனையை மாற்றி  மக்கள் சேவைப் பணி மூலம் இறைவனை அடைய வழிகாட்டிய நவீன புருஷர். குறைந்த காலங்களில் வாழ்ந்து, நிறைந்த வாழ்க்கைக்கான நெறிகளால் புதுமைகளைப் புகுத்திய புதுமைவாதி…

– இவ்வாறெல்லாம் வெறும் வார்த்தைகளால் சுவாமிஜியின் பெருமைகளை, அசாத்தியமான செயல்களை சொல்லிவிடத் தான் முடியாது. எனினும், அத்தகு நம் வரலாற்று நாயகனை, வீரத்துறவியை எண்ணுவதன் மூலம் நமக்கு உத்வேகமும் உற்சாகமும் ஏற்படும் என்றால் மகிழ்ச்சி தானே?

இன்று உலகம் ஒருபுறம் அசுர வேகத்துடன் விஞ்ஞானத்தால் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் இன்னொரு புறம்,  உலகில் உள்ள மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சக்திகள், வேற்றுமை வளர்க்கும் அமைப்புகளால் அதே அசுர வேகத்துடன் நாம் அழிவையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் முடிவுதான் என்ன? விடிவுதான் என்ன?

இருட்டைப் போக்கும் ஒரு ஒளிக்கீற்று, அதுவும் நம் முன் தோன்றுகிறது. தன்னுள் அணைக்க முடியாத வீரத்துடன் புறத்தில் பொலிவுடனும், தேஜஸு டனும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் சுவாமி விவேகானந்தர் தான் அந்த நம்பிக்கை ஒளி ஊட்டும் நட்சத்திரம்…

தான் பிறந்த பாரதத்திற்கு ஒளியூட்டி, நம் தர்மத்திற்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மகான் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு ஜனவரி 12- 2013 துவங்குவதும், நாம் இக்காலகட்டத்தில் வாழ்வதும் நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் அல்லவா?

சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சிஷ்யை சகோதரி கிறிஸ்டி இப்படி சொன்னார் :

“சுவாமியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் கடவுளால் ஒருமுறை அருளாசி பெற்றவர்கள்; அவருடன் பழகியவர்கள் கடவுளால் இருமுறை அருளாசி பெற்றவர்கள்; அவருடன் சேர்ந்து அவரது பணிகளை செய்தவர்கள் கடவுளால் மூன்று முறை அருளாசி பெற்றவர்கள்”.

– இந்த நிதர்சனமான, சத்தியமான வார்த்தையை நிஜமாக்கும் வாய்ப்பு நமக்கு கடவுள் அருளால் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் யுவசக்தி தனது வலிமையால் ஒன்றுகூடி பாரத தேசத்தை உயர்த்த தனது தோள் தரட்டும்!

மகளிர் சக்தி தனது பொறுமையால்,  தாய்மையால் நம் தேசத்தின் பண்பாட்டைக் காத்திட தனது கரங்களைத் தரட்டும்!

அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்கபூர்வமான எண்ணங்களால்,  எழுத்துக்களால் இப்புண்ணிய பூமியின் பெருமைகளை உணர்ந்திட,  தங்கள் உள்ளங்களை சமர்ப்பணமாக்கட்டும்!

இந்த மண்ணின் இதயம்  கிராமங்கள். கிராம மக்கள் நமது பாரம்பரிய மரபுகளைக் காப்பதோடு, என்றும் அழியாத நம் தேசத்தின் வேர்களுக்கு நீர் ஊற்ற முன்வரட்டும்!

வனவாசி என்று அழைக்கப்படும் மலைகளின் மைந்தர்கள், விட்டுவிடாது தொடரும் பெருமைமிகு நமது கலாச்சார விழுமியங்களுடன் நம் தர்மத்தைக் காக்கும் வேடர்களாகச் செயல் புரியட்டும்!

சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டுவிழாவை ஒட்டி ‘தேசிய சிந்தனைக் கழகம்’ இந்த இணையதளத்தைத் துவங்கியுள்ளதன் நோக்கம் இதுவே. இந்த ஆண்டு முழுவதும் நிகழும் விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு பதிவகமாகவும், மக்கள் சிந்தனையின் தொகுப்பாகவும் இத்தளம் செயல்படும்.

எந்த ஒரு செயலும் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெறுகிறது. இந்தத் தளம், சுவாமி விவேகானந்தர் அமர்ந்துள்ள திருத்தேர். தமிழக ரத வீதிகளில் இதை அற்புதத் தேரோட்ட விழாவாக மாற்றுவது நம் அனைவரின் பொறுப்பு.

150 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் உதித்த அந்த ஒளிக்கீற்று, உலகுக்கு வழிகாட்ட மீண்டும் சுடர் விடுகிறது.

அந்தச் சுடரை நாடெங்கும் ஏற்றுவோம். உலகை சுத்திகரிக்கும் பணி நம்மிடமிருந்து துவங்கட்டும்!

 

குறிப்பு:

திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்; சமூக சேவகர்.

இக்கட்டுரை, விவேகானந்தம்150.காம் என்ற நமது தளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு.

நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர்

-எஸ்.குருமூர்த்தி

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்

(பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4)

 

“அன்பார்ந்த அமெரிக்கச் சகோதரிகளே, சகோதரர்களே” என்ற, இந்து சமய இளந்துறவியான சுவாமி விவேகானந்தரின் துவக்க வரிகள் செப்டம்பர் 11, 1893 அன்று சிகாகோவில் நடந்த உலக மதங்களின் முதல் மாநாட்டில், கற்றோர், சிந்தனையாளர்கள், ஆன்மீகவாதிகள் எனப்  பலரும்  கூடியிருந்த சுமார் 6,000 பேர் நடுவில் வெண்கலக் குரல் போல் ஒலித்து, அனைவரையும் கவர்ந்து ஈர்த்தது.

‘அதைக் கேட்ட மாத்திரத்தில் உற்சாகமடைந்த கூட்டத்தினர் எழுப்பிய கரவொலி பல நிமிடங்கள் நீடித்தன’ என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறார், மாநாட்டின் தலைமை  அமைப்பாளரும், முதல் பிரஸ்பிடேரியன் சர்ச் போதகருமான  ஜான் ஹென்றி பர்ரோஸ். அந்தக் கரவொலி அடங்கி அமைதி திரும்பியதும், 471 சொற்களே கொண்ட தனது சரித்திர மகத்துவம் வாய்ந்த உரையை அவர் இரண்டே நிமிடங்களில் நிகழ்த்தி முடித்தார்.

பாரத தேசத்திற்கு வெளியே உருவான மதங்கள் எதுவும் அறியாததும்,  இந்து மதத்திற்கே உரித்தானதுமான ‘அனைத்து இறை நம்பிக்கைகளுக்கும் பொதுவான அடிப்படை’ எனும் தத்துவத்தை  அவர் தனது உரையில் வெளிக்கொண்டு வந்தார். ‘கிறிஸ்துவ மத உணர்வே சாலச் சிறந்தது, அதுவே அனைத்துலக மக்களின் பொது உணர்வு’ என்று மாநாடு வழிமொழிய வேண்டும் என்ற அந்த மாநாடு அமைப்பாளர்களின் மறைமுகமான நோக்கத்தை, அன்று தனது  உரையால் அவர் தவிடுபொடியாக்கினார்.

அமைப்பாளர் பர்ரோஸ், ‘கிறிஸ்துவமே அனைத்துலக மக்களின் மிகச் சிறந்த மதம்.  அவர்களின் பைபிளே அனைவருக்குமான வேதாகம நூல். இயேசு கிறிஸ்துவே அனைவரையும் காக்கும் கடவுள்’ என்பதில் வெளிப்படையாகவே உறுதியாக இருந்தார். “பல கிறித்துவ மற்றும் யூனிடரி பிரிவுகளும் சேர்ந்து கூட்டிய அந்த மாநாட்டில் ‘பிராடஸ்டண்ட் கிறிஸ்துவ வழியே மற்றெல்லாவற்றிலும் சிறந்தது’ எனக் காட்டவேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் அப்படிக் காட்டமுடியாத அளவுக்கு கல்கத்தாவிலிருந்து வந்திருந்த சுவாமி செய்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்து போயிற்று” என்று 2009-ல் ஒப்புக் கொண்டார்  முதல் யுனிடேரியன் சர்ச்சின் ஜேம்ஸ் இஸ்மாயில் போர்ட்.

பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும்செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்

– என்று அற்புதமான விவரங்களை அடுக்கடுக்காகத் தந்து அந்த மாநாட்டில் இந்த இந்து இளந்துறவி நா நயத்துடனும், சொல் வளத்துடனும் மிகவும் பெருமையாக இந்தியாவின் புராதன மதத்தின் அருமையை அந்த மாநாட்டில் நிறுவினார்.

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு அவர், பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன….

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்”  என்று தனது சிற்றுரையை முடித்தார்.

அப்படி அங்கு அவர் பேசியபோது அவருக்கு முப்பது வயது தான் ஆகியிருந்தது. அப்போது அவர் கையில்  குறிப்புகளை எழுதி வைத்திருக்கவும் கூட இல்லை  அவர் தன் உள்ளத்தில் இருந்ததைப் பேசினார். அப்படிப் பேசி அவர் அங்கிருப்போரை மெய்மறந்து போகச் செய்தார்.

இதனை பர்ரோஸ், ”சுவாமி விவேகானந்தாவின் மூன்று பேச்சுக்கள் சந்தேகமில்லாமல் அமெரிக்கப் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டன” என்று எழுதுகிறார்.

“அந்தச் சமய மாநாட்டில் விவேகானந்தரின் உரை ஆகாயம் போல பரந்து விரிந்து, அனைத்து மதங்களின் தூய சித்தாந்தங்களையும்  உள்ளடக்கி, அதுவே அனைத்துலக மதக் கருத்து போல இருந்தது” என்று அன்றைய அமெரிக்க பத்திரிகை செய்தி குறிப்பிட்டது.

மாநாட்டு மேடையிலிருந்து அவர் வெளியே வரும்போது, “இவரா ஒன்றும் அறியாதவர்? அவருடைய நாட்டிற்கா நாம் மத போதகர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்? உண்மையில் அவர்களல்லவா நம் நாட்டிற்கு (அமெரிக்கா) போதகர்களை அனுப்ப வேண்டும்?” என்று ஒரு அமெரிக்கர் அனைவர் காதுபடவும் சொன்னார். இப்படியாக சுவாமி விவேகானந்தரின் அந்த சரித்திர மகத்துவம் வாய்ந்த சிற்றுரை அனைத்துலக மத விவாதங்களின் போக்கையை மாற்றி அமைத்துவிட்டது.

அமெரிக்கா சென்று வந்த பின் அவர் இந்த உலகில் வாழ்ந்திருந்தது எட்டு வருடங்களும் சில மாதங்களுமே. அதிலும் அவர் பாதி நாட்கள் இந்தியாவிலும்,  மீதி நாட்கள் வெளிநாட்டிலுமாக இருந்தார். அந்தக் குறுகிய காலத்திலேயே அவர் இந்தியாவுக்கு, குறிப்பாக இந்தியர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், இந்திய விடுதலை உணர்வுக்கும் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. தேசிய உணர்வுக்கு அவர் விடுத்த அறைகூவல்கள் இந்த தேசத்தையே கடவுளாகத் தொழும் அளவுக்கு எடுத்துக்கொண்டு சென்றன; விடுதலைப் போராட்ட முயற்சிகளுக்கு வித்திட்டு, நாட்டின் பல தலைவர்களை ஊக்குவித்தன.

தான் விவேகானந்தரின் நூல்களைப் படித்ததால் முன்னெப்போதையும் விட இந்தியாவை ‘நூறு மடங்கு’ அதிகம் நேசித்ததாக மகாத்மா காந்தி சொல்வார். நாடு தழுவிய போராட்டத்திற்கு வித்திட்டு அதைத்  தொடங்கி வைத்த ஒரு மகத்தான தலைவராகவும், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கிரியா ஊக்கியாகவும், தான் சுவாமி விவேகானந்தரைப் பார்ப்பதாக ஜவஹர்லால் நேரு கூறுவார்.

விவேகானந்தரை ‘இந்தியாவின் நவீன தேசிய இயக்கத்தின் சிற்பியாக’ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்த்தார்.  “விவேகானந்தர் இருந்திருக்காவிட்டால் நாம் நமது இந்து மதத்தையே இழந்திருப்போம், விடுதலை கூட அடைந்திருக்க மாட்டோம்; நம்மிடம் இப்போது இருப்பது எல்லாமே அவரால்தான்” என்றும் ராஜாஜி கூறுவார்.

“இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், விவேகானந்தரின் எழுத்துக்களைப் படி” என்று ரவீந்திரநாத் தாகூர் சொல்வார். ஆன்மீகமும், தேசியமும் கலந்த கலவைகளான அரவிந்தரும், சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரும் கூட, சுவாமி விவேகானந்தரின் எண்ணங்களால் கவரப்பட்டனர்.

விடுதலைப் போராட்ட வீரர்களின் கைகளில் விவேகானந்தரின் நூல்களை அடிக்கடிப் பார்த்த ஆங்கிலேய காவல்துறை, ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மடத்தின் மேலேயே நடவடிக்கை எடுக்கலாமா என்று யோசித்தது. இப்படியாக விவேகானந்தர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு உந்துசக்தியாக விளங்கினார்.

இவ்வாறாக,  இந்தியாவின் எழுச்சி துளிர்விட்டு எழுவதற்கு நூறு ஆண்டுகள் முன்னரே, ஒரு ரிஷியைப் போல பின்பு நடக்கப் போவதை முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அவர் அறிவித்தார்.

‘இந்து மதம் ஓர் உதவாக்கரை மதம், இந்தியக் கலாச்சாரம் அழிந்து போயிற்று, மற்றும் இந்தியர்கள் என்றும் அடிமைகள் தான்’ என்றெல்லாம் உலகம் நம்மை உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தபோது, நம் இளம் துறவியோ நான் எதிர்காலத்துக்குள் நுழைந்து பார்க்க விரும்பவில்லை. அதில் எனக்கு அக்கறையும் இல்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள். தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள். மீண்டும் இளமை எழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்துகொண்டிருக்கிறாள். சாந்தியும் அருளும் கலந்த மொழியால் அவளை உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்என்று சொன்னார்.

இளந் துறவியின் தொலைநோக்குப் பார்வை அந்தக் காலத்தில் மனநிலை பிறழ்ந்தவரின் பிதற்றலாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ, நாடு தழுவிய அளவில் அவரது 150-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல சிந்தனையாளர்களும் வரப்போவதைக் கணித்துச் சொல்லத் துவங்கி இருக்கின்றனர்;  அமெரிக்க தேசிய அறிவு ஆய்வுக் குழு, ‘வரப்போகும் 2030-களில், இந்தியா சீனாவையும் விட முன்னேறி, உலக அரங்கிலேயே முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா, சீனாவுடன் முதன்மை வகிக்கும்’ என்று சென்ற மாதம் சொன்னபோது, அவரது தொலைநோக்குச் சிந்தனையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

அமெரிக்கர்களிடம் போக வாழ்வுமுறை பெருகிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளைத் தடுப்பதற்கு அவர்கள் இந்தியாவிலிருந்து ஆன்மீக அடிப்படையிலான வாழ்வுமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று, அன்றே பொருளாதாரத்தில் வெகுவேகமாக வளர்ந்து வந்துகொண்டிருந்த அமெரிக்காவைப் பற்றி, அவர்களிடம் தொலைநோக்குடன் சொன்னார். ஆனால் செல்வம் கொழித்திருந்த அமெரிக்கா அந்த ஊர் சுற்றும் துறவியின் கணிப்பைப் பொருட்படுத்தவில்லை.

அதன் விளைவுகளாக, அங்கு இன்று சரிபாதி குடும்பங்கள் பொருளாதாரத்தில் நொடித்துப் போயிருக்கின்றன; அங்குள்ள 41 விழுக்காடு குழந்தைகள் மணமாகாத கன்னிப்பெண்களுக்குப் பிறந்திருக்கின்றன; முதல் திருமணம் செய்துகொண்டவர்களில் 55 விழுக்காடும், இரண்டாம் மணம் புரிந்தவர்களில் 67 விழுக்காடும், மூன்றாம் மணம் செய்தவர்களில் 74 விழுக்காடும் என்ற விகிதத்தில் திருமணம் முறிவு பெற்றவர்களாக உள்ளனர். இவை அங்கு நிலவும் சமூக நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

‘The Gift Unopened’ என்ற தனது நூலில் விவேகானந்தரைப் பற்றி ‘அவர் மனித குலத்திற்கே வந்த மாபெரும் பரிசு; அது இன்னும் திறந்து பார்க்கப்படாது இருக்கிறது’ என்றும் எலீனார் ஸ்டார்க் எழுதும்போது, அவர் அமெரிக்காவைப் பற்றிச் சொல்வது போலத் தான் இருக்கிறது.

இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்.

”சர்வ தர்ம சமபாவணை எனப்படும் மதச்சார்பற்ற தன்மையே இந்து மதத்தின் ஆதாரக் கருவாகும்” என்று ஜாகீர் ஹுசேன் நினைவுச் சொற்பொழிவில் முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா சொல்லியிருந்ததை அயோத்தி வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்ததது. ஆனாலும் மக்களின் வாக்கு வங்கிகளை மட்டுமே கணக்கில் கொண்டு, தன்விருப்பப்படி மதச்சார்பின்மையைத் திரித்துச் செயலாற்றும் அரசியல்வாதிகள் தான் இந்து மதத்தின் ஆன்மீக வேரை உணராது இருக்கின்றனர். அத்தகைய போக்கு இந்தியாவின் ஆணிவேரான இந்து மதத்துக்கும்  ஆன்மீகத்துக்கும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மக்களின் சேவையில் ஈடுபட வேண்டிய அரசில் அங்கம் வகிப்போரின் தணியாத செல்வ மோகமும், அதனால் புற்றுநோய் போல் படர்ந்திருக்கும் ஊழல்களும், சுவாமி விவேகானந்தர் தனது மூச்சாக சுவாசித்த, மற்றும் உயிராக நேசித்த தேசத்தின் தர்ம சிந்தனைக்கே சோதனையாக மாறி இருக்கின்றன. இதனால் இன்றைய இளைஞர்கள் கோபத்துடன் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு எந்தத் திசையில் போவது என்று தெரியவில்லை. இவ்வாறு திகைத்து நிற்கும் தேசம்,  தான் மேற்கொண்டு செல்லவேண்டிய நல்வழிக்குத் தன்னைத் திருத்திக்கொள்ள விவேகானந்தரின் எண்ணங்களை அசைபோட்டுஅவற்றை மீண்டும் நினைவூட்டிக் கொள்கிறது.

இப்போது சுவாமி விவேகானந்தர் பிறந்து  150 ஆண்டுகள் ஆகின்றன. அவரது வழியில் இளைஞர்களுக்குத் திசைகாட்ட இது ஒரு நல்ல வாய்ப்பு. பல்லாண்டுகள் கடந்த பின்னரும், தற்கால இளைஞர்கள் மனதில் இன்றும் வாழும் அவர், இளைஞர்களின் சிறந்த வழிகாட்டி. இந்தியாவின் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக என்றும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் தனது 39 வயதிலேயே உயிர் துறந்து, இன்றும் இளமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாரோ?

.

குறிப்பு:

திரு. எஸ். குருமூர்த்தி, பிரபல கணக்கு தணிக்கையாளர்; எழுத்தாளர்; பொருளாதார  சிந்தனையாளர்; சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தை தேசிய அளவில் வழிநடத்துபவர்.

இக்கட்டுரை, நமது ‘விவேகானந்தம் 150.காம்’ இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மீள்பதிவு.

தேசபக்தியைக் கற்றுக் கொடுத்தவர்

-ஆசிரியர் குழு

 

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை

(பிறப்பு: 1867, அக். 28 – மறைவு: 1911, அக். 13)

ஐரிஷ்  நாட்டில் பிறந்த மார்கரெட் எலிசபெத் நோபில், பாரதத்தையே  தாயகமாக   சுவீகரித்துக் கொண்டவர்.  உலகம் முழுவதும் திக்விஜயம் செய்து ஹிந்து தர்மத்தின் மேன்மையைப்  பறைசாற்றிய சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட மார்கரெட், அவரது பிரதம சிஷ்யையாகி சகோதரி நிவேதிதை என்று பெயர் பெற்றார்.

ஆன்மிகப் பணி மட்டுமல்லாது, நாட்டு விடுதலைக்காகவும் உழைத்தார் நிவேதிதை. ரவீந்திரநாத் தாகூர், ஜெகதீச சந்திர போஸ், மகரிஷி அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோருடனும் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். இவரது சந்திப்பால், மகாகவி பாரதி, பெண்மையின் உயர்வு குறித்து அதிகமான கருத்துக்களை எழுதினார். தனது  ஞான குரு என்று பாரதி  இவரை வரித்திருக்கிறார்.

எளிய மக்களின் கல்விக்காக கொல்கத்தாவில் பள்ளியை நடத்தியவர். ஜெகதீச சந்திர போஸ் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக கெளரவம் பெறக் காரணமாக இருந்தவர். இந்தியர்களுக்கு தேசபக்தியைப் புரியவைக்கவே ஐரிஷ் நாட்டிருந்து (அதுவும் ஆங்கிலேயனால் அடிமைப்பட்ட நாடு தான்) வந்தவராக வாழ்நாள் முழுவதும் பாரத நலனுக்காக உழைத்தார்.

காண்க:  பெண் சிங்கம் சகோதரி நிவேதிதை

***

சகோதரி நிவேதிதைக்கு குருநாதர் சுவாமி விவேகானந்தரின் ஆசி:

அருள் வாழ்த்து

 தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்

ஆய தென்றலின் அற்புத இனிமையும்

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும்

சீரிய எழிலும் திகழும் வலிமையும்

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில்

உனதென ஆகி ஓங்குக மென்மேல்!

எதிர்காலத்தில் இந்திய மகனின்

சீர்சால் தலைவியாய்ச் செவிலியாய்த் தோழியாய்

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!

-சுவாமி விவேகானந்தர்.

ஆங்கில மூலம்: A Benediction

***

சகோதரி நிவேதிதையை சத்குருநாதராக வரித்துக் கொண்ட மகாகவி பாரதியின் கவிதை…

சகோதரி நிவேதிதை

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்

       கோயிலாய், அடியேன் நெஞ்சில்

இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நாடாம்

       பயிர்க்கு மழையாய், இங்கு

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

      பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

      நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!

-மகாகவி பாரதி

%d bloggers like this: