Blog Archives

இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

-பேரா. தி.இராசகோபாலன்

b6516-nivedita

சகோதரி நிவேதிதை

 

சகோதரி நிவேதிதை

(பிறப்பு:  1867, அக். 28- மறைவு: 1911, அக். 11)

நிவேதிதை-150வது ஆண்டு  துவக்கம்

.

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து, தானே முளைக்கின்ற விதை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமோக விளைச்சலைத் தரும். அப்படி அயர்லாந்திலே இருந்து வந்து இந்திய மண்ணில் விழுந்த விதைதான், சகோதரி நிவேதிதா.

1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாளில், சாமுவேல் ரிச்மென்ட் நோபில் எனும் தந்தைக்கும் – மேரி இசபெல் எனும் தாய்க்கும் மகவாக, அயர்லாந்து மண்ணில் மார்க்ரெட் எலிசபெத் நோபில் எனும் பெயரில் ஓர் அரும்பு முளைத்தது. தந்தை சாமுவேல் ஒரு மதபோதகர்.

என்றாலும், ஏழ்மையை ஆணிவேரிலிருந்து அகற்றுவதுதான் மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மகளுக்குப் பாலபாடமாகப் படிப்பித்தார். பெற்ற தந்தையால் விதைக்கப்பட்ட வித்து, ஹாலிபேக்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்த மார்க்ரெட் நெஞ்சில், ஞானத்தந்தையாகிய சுவாமிஜி விவேகானந்தரால் நீரூற்றி வளர்க்கப்பட்டது.

சிகாகோ நகரில் சுவாமிஜி வெளிப்படுத்திய ஆன்மிக ஆவேசம், இலண்டனிலிருந்த மார்க்ரெட் மனத்தில் எக்ஸ்ரே கதிர்களாகப் பரவியது.

1895-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த தமது சீடர் இசபெல்லா மார்க்கஸன் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்த இருந்த பிரசங்கத்திற்கு இசபெல்லா தம் தோழியாகிய மார்க்ரெட்டையும் அழைத்திருந்தார். சுவாமிஜியின் புதிய வெளிச்சத்தில் அனைவரும் வழி கண்டனர், மார்க்ரெட்டைத் தவிர.

சமூக ஏற்றத்தாழ்வு எனும் புண்ணிற்குப் போதிமரத்துப் புத்தன் தான் புதிய மருந்து தடவுவான் என எண்ணியிருந்த மார்க்ரெட், சுவாமிஜியிடம் எதிரும் புதிருமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

மலை கலங்கிலும், கடல் கலங்கிலும் நிலை கலங்காத சுவாமிஜி, “மகளே, என்னை ஏற்றுக்கொள்வது சிரமமே, புரிகிறது. அது தவறும் இல்லை. என்னுடைய குருவான பரமஹம்சரிடம் ஆறு ஆண்டுகள் போராடிய பிறகே அவரை நான் ஆசாரியனாக ஏற்றேன். அதனால் சந்தேகங்கள் கிளம்பிப் பதில் கிடைக்கும் போதுதான், ஒவ்வொரு விஷயமும் தெளிவாகப் புரியும்” என்றார்.

சுவாமிஜியின் அடுத்தநாள் சொற்பொழிவுக்கும் மார்க்ரெட் சென்றார். தீட்சா ரகசியங்களில் ஆழங்காற்பட்டிருந்த சுவாமிஜி,  “இந்தியா முன்னேற, உலகின் ஆன்மிக மகுடம் தரித்திருக்கும் பாரதத்தின் துயர் தீர்க்க, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் இவற்றிற்குத் தொண்டாற்ற, துணிவே துணை என கொள்கை தீபம் ஏற்றும் பல புத்தர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணியில் உங்களில் யார் அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்கள் தொண்டுக்கு நான் கடைசிவரை தோள் கொடுப்பேன்” என்றார்.

சுவாமிஜியின் ஞானஸ்நானத்தில் முழுமையாக நனைந்த மார்க்ரெட்,  “இந்தியாவுக்கு எப்போது புறப்பட வேண்டும் சுவாமிஜி?” என்றார். சுவாமிஜி,  “மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதை, தோல்களைப் பிளந்து கொண்டு வெளியே தலைகாட்டும்வரை காத்திரு” எனக் கூறிச் சென்றார்.

சுவாமிஜியின் இசைவு பெற்று, மார்க்ரெட் 28.01.1898 அன்று கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். மாம்பசா எனும் கப்பலின் மூலம் வந்த மார்க்ரெட்டை சுவாமிஜியே துறைமுகத்திற்குச் சென்று வரவேற்கின்றார். மார்க்ரெட் முதல் வேலையாகப் பரமஹம்சர் நிர்மாணித்த தட்சிணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.

சுவாமிஜி 1898 மார்ச் 11-ஆம் நாளன்று, கல்கத்தா ஸ்டார் தியேட்டரில் மார்க்ரெட்டை அறிமுகப்படுத்துகிறார். மார்க்ரெட் எனும் பெயரை மாற்றி, நிவேதிதா என நன்னீராட்டுகின்றார்.  “இந்தியாவுக்கு இங்கிலாந்து சில நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் தலையானது சகோதரி நிவேதிதா எனக் குறிப்பிடலாம்” என்றார் சுவாமிஜி.

மார்ச் 17-ஆம் நாள் சகோதரி நிவேதிதா, அன்னை சாரதா தேவியைச் சந்திக்கிறார். அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் கையிலிருந்த கைக்குட்டையால் பாதங்களில் படிந்திருந்த தூசியைத் துடைக்கிறார்.
அன்னையும் என் மகளே (வங்காளத்தில் கோக்கி) என்று வாரி அணைத்து, உச்சிமுகந்து ஆசீர்வதித்தார். அன்னையின் குடிலில் தங்கத் தொடங்கிய பிறகு, நிவேதிதா ஓர் இந்து பெண் சந்நியாசியாகவே மாறிவிடுகிறார்.

சகோதரி நிவேதிதாவின் தொண்டு வாழ்க்கையில் – அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் இடிதாங்கி மேலேயே இடி விழுந்தது போன்றதோர் துயரம் ஏற்பட்டது. சுவாமிஜி, 1902 ஜூலை 4-ஆம் நாள் இரவு அமரத்துவம் அடைந்த செய்தி, பேலூர் மடத்திலிருந்து சகோதரி நிவேதிதாவிற்கு தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சகோதரி, இராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலிலிருந்து இரண்டாவது முறையாக உயிர்பிரிந்து மேலே செல்லுவதுபோல் கனவு காணுகிறார். உடனடியாக அவர் பேலூர் மடத்திற்கு விரைகிறார்.

படுக்கையில் அமர்த்தப்பட்டிருந்த சுவாமிஜியின் தலைமாட்டில் அமர்கிறார். உட்கார்ந்த நேரத்திலிருந்து சுவாமிஜியின் புகழுடம்பு, நீராட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வரையில், பனையோலையால் செய்யப்பட்ட விசிறியால் விசிறிக்கொண்டேயிருந்தார்.
சுவாமிஜியின் புகழுடம்பு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, சுவாமிஜியின் உடம்பின்மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியிலிருந்து ஒரு துண்டு வெட்டித் தரும்படி, மடத்துத் தலைவர் சுவாமி சாரதானந்தாவிடம் வேண்டுகிறார். அவரும் சம்மதித்தாலும், அச்செயல் சுவாமிஜியின் புனிதயாத்திரை நேரத்தில் சரியாக இருக்குமா எனச் சிந்தித்து அவரே வேண்டாமென்று மறுதலிக்கிறார்.

ஆனால், தகனத்தின்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. தகனத்தின்போது, தீயின் கடைசி கங்கு அணைகின்ற வரையில் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நிவேதிதா. அப்போது தமது அங்கியின் பின்புறத்தை யாரோ பின்னாலிருந்து இழுப்பதுபோன்று ஓர் தொடுவுணர்ச்சி நிவேதிதாவிற்கு ஏற்படுகிறது.

திடீரென்று எரிந்து கொண்டிருந்த புகழுடம்பிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி புறப்பட்டு வந்து நிவேதிதாவின் மடியில் விழுகிறது. அதனை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்ட நிவேதிதா, அது தம்முடைய குருஜியின் கடைசி ஆசீர்வாதம் எனக் கருதி, அதனைத் தம்முடைய அமெரிக்கத் தோழி, ஜோசப் மேக்லியோடிக்கு அனுப்பிவிடுகிறார்.

1905-ஆம் ஆண்டு காசி காங்கிரசை முடித்துக்கொண்டு, மகாகவி பாரதி கல்கத்தா வழியாகச் சென்னைத் திரும்ப நினைத்தபோது, கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் சகோதரி நிவேதிதா தங்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றார். அத்தரிசனம் ஒரு தெய்வ தரிசனமாயிற்று. ஒரு குருஜிக்குச் சீடராக வந்த நிவேதிதா, ஒரு மகாகவிக்கு ஞானகுருவாகிறார்.

தம்முடைய படைப்புகளை எந்தத் தனிமனிதருக்கும் சமர்ப்பிக்காத மகாகவி பாரதி, ஞானரதம் போன்ற நான்கு படைப்புகளை ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் அன்னை நிவேதிதாவிற்குச் சமர்ப்பித்து, “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, சுதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில், இச்சிறு நூலில் ஸமர்ப்பிக்கின்றேன் சுதேசிய பாடல்களை சமர்ப்பிக்கின்றேன்” என்று எழுதுகிறார்.

அடுத்து ‘ஜென்மபூமி’ எனும் தலைப்பில் வெளியிட்ட சுதேசிய கீதங்களையும், “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீநிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றவாறு எழுதி, குருவணக்கம் செய்கிறார்.

மேலும், நிவேதிதாவின் குரு உபதேசத்தை, “சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் … பெற்றதை ஏதென்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினர் தோழி” என ‘ குரு உபதேசம்’ எனும் தலைப்பில் பரவசப்பட்டுப் பாடுகிறார்.

சுவாமிஜி அமரத்துவம் அடைந்த பின்னர், சகோதரி நிவேதிதா ஆன்மிகப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்.

அரவிந்தருடனும், அனுசீலன் சமிதி எனும் இரகசிய புரட்சியாளர்களுடனும் இணைந்து, இந்திய விடுதலையில் தீவிரவாதம் காட்டுகிறார். கவிஞர் இரவீந்திரநாத தாகூர், நிவேதிதாவின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சுகிறார். வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராடியதில் லார்ட் கர்சானுக்கே ஒரு நடுக்கம் ஏற்படுகின்றது.

1911-ஆம் ஆண்டில் நிவேதிதா நோய்வாய்ப்பட்டுள்ளார். 06.10.1911 அன்று தம்முடைய சொத்துகளையும், உடைமைகளையும் தாம் தோற்றுவித்த பள்ளிக்கே சேருமாறு உயில் எழுதி வைக்கிறார். அச்சொத்துகளைப் பராமரிக்கின்ற உரிமையை பேலூர் மடத்தின் ஆதீனகர்த்தாக்களுக்கே வழங்கினார்.

அந்திம காலத்தில் அறிவியலறிஞர் ஸர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தம்பதியருக்குச் சொந்தமான டார்ஜிலிங் மாளிகையில் சகோதரி நிவேதிதா தங்குகிறார். 13.10.1911 அன்று தமது 44-வது வயதில் அவருடைய ஆன்மா இறைவனடியில் பரிபூர்ணத்துவம் அடைகிறது.
அவருடைய கல்லறையில்  ‘இந்தியாவிற்கே எல்லாவற்றையும் அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே இளைப்பாறுகிறார்’  எனப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்திய மண்ணிலிருந்தே புறப்பட்ட பூவொன்று, அம்மண்ணிற்கே புயலானது. சகோதரி நிவேதிதா, சுவாமிஜிக்குச் சீடரானார். மகாகவி பாரதிக்குக் குருவானார்.

குறிப்பு:.

இந்த ஆண்டு சகோதரி நிவேதிதை பிறந்த 150-ஆவது ஆண்டு.  திரு. தி.இராசகோபாலன்,  ஓய்வு பெற்ற பேராசிரியர்.

.
நன்றி: தினமணி (28.10.2016)

Advertisements

சமயப் பற்றால் சரிதமானவர்

-முத்துவிஜயன்

சத்தி நாயனார்

சத்தி நாயனார்

(குருபூஜை நட்சத்திரம்: ஐப்பசி- பூசம்)

(நவ. 13)

 .
சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர்.
.
யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார்.
 .
சத்தியார் இகழ்வோர் நாவை குறடாற்பற்றி இழுத்து கத்தியால் அரிந்து தூய்மை செய்வார். அன்பினாற் செய்யும் இந்த அரிய  திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவன் திருவடி சேர்ந்தனர்.
 .
“கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்”
 – திருத்தொண்டத் தொகை

 

ஹிந்து பல்கலைக்கழக நிறுவனர்

-முத்துவிஜயன்

பண்டித மதன்மோகன் மாளவியா

பண்டித மதன்மோகன் மாளவியா

(பிறப்பு: 1861, டிச. 25 – மறைவு: 1946 , நவ. 12)

அரசியல் தலைவர், கல்வியாளர், பத்திரிகையாளர், விடுதலைவீரர், ஹிந்து தேசியவாதி ஆகிய பன்முகங்களுக்கு உரியவர் பண்டித மதன்மோகன் மாளவியா. காசியில் 1916ல்  ஹிந்து பல்கலைக்கழகம் நிறுவியவர் மாளவியா. பாரதத்தில்  ஸ்கவுட்   இயக்கத்தை நிறுவியவரும் (1913) இவரே.

உத்தரப்பிரதேசத்தின் பிரயாகையில் (அலஹாபாத்) 1861, டிச. 25-ல் பிறந்தவர் மாளவியா. சிறுவயதிலேயே சம்ஸ்கிருத நூல்களைப் படித்த மதன்மோகன், பின்னாளில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். அப்போது தாதாபாய் நௌரோஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்று முறை (1909, 1918, 1932)  இருந்தவர் மாளவியா. 1909ல் இவர் அலஹாபாதில் நடத்திய ‘தி லீடர்’ என்ற  பத்திரிகை   விடுதலைப் போராட்டக்  காலத்தில் பெரும் பங்கு வகித்தது.

ஆங்கிலேயரால் பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் (1909) துவங்கப்பட்ட ஸ்கவுட் இயக்கத்துக்கு மாற்றாக, இந்தியர்களுக்கென்று பிரத்யேகமாக ஸ்கவுட் இயக்கத்தை ‘சேவா சமிதி’ என்ற பெயரில் மாலவியாவும் அவரது நண்பர்களும் தோற்றுவித்தனர். வழக்கறிஞர் தொழிலில் மிக பிரபலம் அடைந்திருந்த நேரத்திலும் சமூகப் பணிக்காக அதனை உதறிவிட்டு சந்நியாசி போல வாழ்ந்தார். ஆயினும் ஸௌரி ஸௌராவில்  நடந்த வன்முறைக்காக 177  போராளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன், அவர்களுக்காக வாதாடி, 156 பேரை விடுவித்தார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் முன்னணி வகித்த மாளவியா, முஸ்லிம்களை திருப்திப்படுத்த கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்றதை ஆட்சேபித்தார். விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களை இணைப்பதற்காக அவர்களை தாஜா செய்வது, முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி வழங்குவது, நாட்டின் பிரிவினைக்கே வழிகோலும் என்று அவர் மகாத்மா காந்தியை எச்சரித்தது, 1947-ல் உண்மையானது.  “சத்யமேவ ஜெயதே” (உண்மையே வெல்லும்)என்பதே இவரது தாரக மந்திரம்.

நாட்டில் நிலவிய தீண்டாமைப் பேயை ஒழிக்க பல முயற்சிகளில் ஈடுபட்டவர் மாளவியா. ஹரிஜன ஆலயப் பிரவேசப் போராட்டங்களை அதற்காக நடத்தினார். 1919 முதல் 1926 வரை மத்திய சட்டசபையின் உறுப்பினராக பதவி வகித்த மாளவியா முதல் வட்டமேஜை மாநாட்டில் (1931) இந்தியப் பிரதிநிதியாக சென்றவர். 1946 , நவ. 12-ல் தனது 86-வது வயதில் மாளவியா மறைந்தார்.

 

காண்க:

காசி ஹிந்து பலகலைக்கழகத்தின் இணையதளப் பக்கம்

 

தர்மம் காக்க தலையைக் கொடுத்தவர்

-முத்துவிஜயன்

குரு தேக்பகதூர்

குரு தேக்பகதூர்

(பிறப்பு: 1621 , ஏப். 1 -பலிதானம்: 1675, நவ. 11 )

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேக்பகதூர். 1621 , ஏப்ரல் 1-ல் பிறந்தவர். குரு ஹர்கிஷனுக்கு அடுத்து சீக்கியர்களின் தலைவரானவர்.

இஸ்லாமிய  ஆட்சியாளர்களான முகலாயர்கள் இந்துக்களுக்கு அளித்த கொடுமைகளை எதிர்க்க உருவான சமயம் சீக்கியம். இதனை போர்ப்படையாக மாற்றிய குரு கோவிந்த சிம்மனின் தந்தை தேக் பகதூர்.  இவரது பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் எனப்படும் ஸ்ரீ குருகிரந்தத்தின் இறுதிப்பகுதியில் உள்ளன.

காஷ்மீரில் பண்டிட்களை  (பிராமணர்கள்) முஸ்லிம்களாக மாற்ற அட்டூழியம் புரிந்த ஔரங்கசீப்பின் படைகளை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட குரு தேக் பகதூர்,  கொடூரமான  சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார்.

அவரை முஸ்லிமாக மாற்றிவிட்டால், இதர மக்களை மதம் மாற்றுவது எளிது என்று கருதிய ஔரங்கசீப், பல சித்ரவதைகளைச் செய்தார். ஆயினும் “தலையைத் தான் இழப்பேன்; தர்மத்தை அல்ல” என்று முழங்கி, தில்லி, சாந்தினி சௌக்கில்,  வீரமரணத்தைத் (11.11.1675)  தழுவினார், சீக்கியர்களின் ஒன்பதாவது குரு.

அவரது தலைவீழ்த்தப்பட்டாலும்,ஹிந்து தர்மம் குரு கோவிந்த சிம்மனால் காக்கப்பட்டது. ஹிந்து தர்மம் காக்க, மத மாற்றத்தை எதிர்த்து உயிர்நீத்த குரு தேக்பகதூரின் நினைவுகள் என்றும் வாழும்.

 

 

தமிழ் நாடகத் தந்தை

-முத்துவிஜயன்

சங்கரதாஸ் சுவாமிகள்

சங்கரதாஸ் சுவாமிகள்

(பிறப்பு:  1867, செப்.  7 – மறைவு: 1922, நவ. 13)

சங்கரதாஸ் சுவாமிகள் (1867 – 1922) 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர்.

கூத்து மரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்க வடிவம் பாடல் வடிவத்தோடு இணைத்து எழுதும் மரபில் உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் தான்.  ‘தமிழ் நாடகத் தந்தை’ என அழைக்கப்படுகிறார்.

சங்கரதாஸ் சுவாமிகள், திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாயக்கன்பட்டி என்ற சிற்றூரில் 7.9.1867ம் ஆண்டு பிறந்தார்.  பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சங்கரன் என்பது. அது நாடக உலகில் சங்கரதாஸ் சுவாமிகளாக மாறிவிட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே தம் வாழ்நாளை வாழ்ந்து முடித்தார். தமிழ் இலக்கண, இலக்கியங்களில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதனாலேயே இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவையாகத் திகழ்ந்தன.

சிறுவயதில் தம் தந்தையாரிடமும், பின்னர் பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். தம் 24-ம் வயதில் முழுநேர நாடகக் கலைஞர் ஆனார்.  புராணக் கதைகளை நாடகமாக்கி, மக்களிடையே பக்தியைப் பரப்பிய சங்கரதாஸ் சுவாமிகள் 68 நாடகங்களை எழுதியவர். அவற்றில் இப்போது 18 நாடகங்களே கிடைத்திருக்கின்றன.

 

காண்க: தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்

– பேரா. சி. சேதுராமன். (திண்ணை கட்டுரை)

 

%d bloggers like this: