Blog Archives

அள்ளிக் கொடுத்த தமிழ் வள்ளல்

-டாக்டர் ஹேமா சந்தானராமன்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக கிருபானந்த வாரியார்

திருமுருக

கிருபானந்த வாரியார்

(பிறப்பு: 1906, ஆக. 28- மறைவு: 1993 நவ. 7)

(திருநட்சத்திரம்: ஆவணி- சுவாதி)

.

கங்கைக் கரையில் தோன்றியவன் என்ற பொருளில் முருகனை ‘காங்கேயன்’ என்று அழைத்தனர். காங்கேயனுக்கு உகந்த நல்ல ஊரினை காங்கேயநல்லூர் என்று அழைத்தனர்.  வாழ்நாள் முழுவதும் காங்கேயன் பெருமையைப் பேசிய வாரியார் அந்த ஊரில் பிறந்தது மிகப் பொருத்தமே.

காட்பாடிக்கும், வேலூருக்கும் இடையில் ஒருகல் தொலைவில் காங்கேயநல்லூர்,  பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது.  இங்கு இளமுலைநாயகி உடனுறை சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்,  கங்கையைத் தலையில் சூடியதால் சிவபெருமானக் காங்கேசர் என்பர்.  அவருக்கு (காங்கேசருக்கு) உகந்த தலம், காங்கேய நல்லூர் என்று அழைக்கப்பட்டது எனவும் கொள்ளலாம்,  சுந்தர வரதராஜப்பெருமாள் என்ற திருமாலும் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.  ஊரின் நடுவில் முருகனின் தனிக்கோயில் அமைந்துள்ளது.

பொய் சொல்லாத மெய்யன்பர்

வாரியாரின் பாட்டனார் சாமியண்ணா என்பவர் செங்குந்த வீரசைவ மரபில் தோன்றியவர்.  சிவபக்தியில் சிறந்த சாமியண்ணா, திருவண்ணாமலைக்கு, ஐம்பத்தைந்து மைல் நடந்தே சென்று தரிசனம் செய்வார்.  அவர் ஒருமுறை திருவண்ணாமலைக்குச் சென்ற சமயத்தில் காங்கேயநல்லூர் உள்ளிட்ட வேலூர் பகுதியில் காலரா நோய் பரவி வந்தது.

திருவண்ணாமலை ஊரெல்லையில் சுகாதாரத் துறையினர் முகாம் அமைத்திருந்தனர்.  வெளியூர் அன்பர்களை விசாரணை செய்து, தடுப்பூசி போட்டு ஊருக்குள் அனுமதித்து வந்தனர்.  வேறு சில காங்கேநல்லூர் அன்பர்களும் திருவண்ணாமலைக்குச் சென்றனர்.  அவர்கள் சுகாதார அதிகாரியிடம் தங்கள் அரக்கோணம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொய் சொல்லி ஊருக்குள் நுழைந்து தரிசனமும் செய்துவிட்டு ஊர் திரும்பினர்.  பொய் சொல்ல விரும்பாத சாமியண்ணா. தான் காங்கேயநல்லூரிலிருந்து வந்ததாகக் கூறினார்.  சுகாதாரத்துறை அதிகாரி அவரை ஊருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.

பொய் சொல்லி  திருவண்ணாமலை ஈசனைத் தரிசிப்பது பாவம் என்று வாரியரின் பாட்டனார் சாமியண்ணா கருதினார். போக வர நூற்றுப்பத்து மைல் நடந்தது வீணாயிற்று.

தந்தையார் செய்த திருப்பணி

சத்திய சீலர் சாமியண்ணாவின் நான்காவது புதல்வர் மல்லையதாசரும் இசைச்சொற்பொழிவுகள் செய்து வந்தார்.  அருட்செல்வம், பொருட்செல்வம், மக்கட்செல்வம் ஆகிய மூன்றையும் பெற்றவர் மல்லையதாசர்.  மல்லையதாசர், கனகவல்லி தம்பதியர் பதினொரு குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.

மல்லையதாசர் தன்னுடைய சொந்த செலவில் காங்கேயநல்லூர் முருகன் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டார்.   ஐந்து லட்சம் செங்கற்களைத் தயார் செய்துவிட்டார். திருப்பணி மூன்றாண்டுகள் தடைப்பட்டது.  முருகன் கோயில் திருப்பணியை, மல்லையதாசர், விடாமுயற்சியுடன் நாற்பது நாட்களில் செய்து முடித்தார்.  மதுரை, திருப்புகழ் சுவாமிகளின் தலைமையில் காங்கேயநல்லூர் முருகன் கோயில் குடமுழுக்கு 1933-ம் ஆண்டு இனிதே நிறைவேறியது.  மல்லையதாசர், ராஜகோபுரம் கட்டியதுடன், அருணகிரிநாதர் திருமேனியையும் பிரதிஷ்டை செய்தார்.

வாரியார் பிறந்தார்

பராபவ ஆண்டு, ஆவணி மாதம் ஒன்பதாம் நாள் (25.8.1906) முருகனுக்கு உகந்த சஷ்டி திதியில், சுவாதி நட்சத்திரத்தில் வள்ளல் வாரியார் பிறந்தார். பெற்றோர் அவருக்கு, ‘கிருபானந்தவாரி’ என்று பெயர் சூட்டினர்.

மல்லையதாசர் தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டில் வைத்தே சகல கலைகளையும் கற்பித்தார். மல்லையதாசர் அதிகாலை நேரத்தில் ஒரு மணி நேரம் வயலின் (பிடில்) சாதகம் செய்வார். அவருடைய அண்ணனும் முன்னால் அமர்ந்து சங்கீத சாதகத்தைக் கேட்பார்கள்.

தந்தையார், காலை ஏழு மணியளவில் நன்னூல் முதலிய இலக்கண நூல்களைச் சொல்லிக் கொடுப்பார். அந்த நேரத்தில் கற்றவை மனதில் ஆழப் பதியும். மதிய உணவிற்குப் பிறகு, தேவாரப் பாடல்கள் மற்றும் திருப்புகழ்ப் பாடல்களை எழுதி மனப்பாடம் செய்யச் சொல்வார். இரவு நேரத்தில் சரித்திரப் பாடங்களைக் கற்பிப்பார். நேரத்தை வீணடிக்காமல் கற்றதால், வாரியாருக்கு, பன்னிரெண்டு வயதிற்குள் பத்தாயிரம் தமிழ்ப் பாடல்கள் மனப்பாடமாகிவிட்டது.

அந்தப் பயிற்சி வாரியாருக்கு வாழ்நாள் முழுவதும் உதவியது. கிருபானந்த வாரியார் எந்தக் குறிப்பும் இல்லாமல், தங்குதடையின்றிப் பாடல்களைக் கூறி, கேட்போரை பிரமிக்கச் செய்தார். மல்லையதாசர், சிறந்த கல்வியுடன், உயர்ந்த நல்லொழுக்கத்தையும் கற்பித்தார்.

வாமதேவ சிவம்

திருவண்ணாமலையில் சைவ மடாலயங்கள் உள்ளன. அவற்றுள் பாணிபத்திர தேவர் மடாலயம் வீரசைவ நெறியைப் பரப்பி வந்தது. மல்லையதாசர் உள்ளிட்ட சில காங்கேயநல்லூர்வாசிகள் பாணிபத்திர தேவர் மடத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர். வீரசைவ மரபுப்படி, வாரியாருக்கு ஐந்தாவது வயதில் ‘சிவலிங்க தாரணம்’ என்னும் சிவலிங்கம் அணிவிக்கும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, வாரியாரின் தந்தையார் மல்லையதாசர், வாரியாருக்கு முருகனுக்குரிய ஆறெழுத்து மத்திர உபதேசம் செய்தார்.  வாரியார் அம்மந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்தார். மதுரை, திருப்புகழ் சுவாமிகள், காங்கேயநல்லூர் வந்த பொழுது, வாரியாருக்கு, ‘சூட்சும சடாட்சரம்’ என்ற மந்திரத்தை உபதேசித்தார்.

பழநி ஈசான சிவாச்சாரியர், சிவ ஆகமங்களில் கரை கண்டவர். அவர் வாரியாருக்கு, சிவாகம விதிப்படி ‘நிருவாண தீட்சை’ என்னும் உயர்நிலை சீட்சை அளித்தார். அப்போது கிருபானந்த வாரியாருக்கு, ‘வாமதேவ சிவம்’ என்ற தீட்சாநாமம் சூட்டப்பட்டது.

முதலில் கிருபானந்த வாரியார், தந்தை மல்லையதாசருடன் சென்று சொற்பொழிவுகளைக் கேட்டு வந்தார். சில ஆண்டுள் தந்தையின் இசைச் சொற்பொழிவிற்குப் பின்பாட்டுப் பாடி வந்தார். அதனால், வாரியாருக்கு கேள்விஞானமும் இசை அறிவும் கிட்டியது.

கிருபானந்த வாரியாருக்குப் பத்தொன்பதாவது வயதில் திருமணம் நடந்தது. கிருபானந்த வாரியாரின் தாய்மாமா திரு.வே. சிவகுரு முதலியாரின் புதல்வி அமிர்தலட்சுமியை வாரியார் மணந்து கொண்டார்.

பாம்பன் சுவாமிகள் தரிசனம்

வாரியார் காங்கேயநல்லூரில் தங்கியிருந்தார். அப்பொழுது, சொற்பொழிவாற்ற சென்னை நகரத்திற்கு வர வேண்டியிருந்தது. அதனால், வாரியார் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்து குடியேறினார். பாம்பன் சுவாமிகள் நம்புல்லையர் தெருவில் ஒரு வீட்டு மாடியில் தங்கியிருந்தார். அந்த மாடியில் ஒரு கீற்றுக் கொட்டகை இருந்தது. அதனுள் பாம்பன் சுவாமிகள் கட்டிலில் அமர்ந்திருந்தார். புண்ணிய வசத்தால் பாம்பன் சுவாமிகள் தரிசனம் கிடைத்தது என்று வாரியார் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில், எவரையும் காண விரும்பாத, ஏகாந்தத்தை விரும்பிய சுவாமிகள் மாடிப்படிகளை இடித்துவிட்டு, வெளியுலகத்தொடர்பு இல்லாமல் இருந்தார். பாம்பன் சுவாமிகள் இயற்றிய நூல்கள் அனைத்தையும் வாரியார் கற்றுத் தேர்ந்தார்.

பாம்பன் சுவாமிகள் சமாதி எய்திய பிறகு, திருவான்மியூரில் உள்ள அவருடைய சமாதிக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மயூரவாகன சேவை விழாவில் வாரியார் பங்கேற்று உரையாற்றி வந்தார். திருநாரையூரில் வாரியாருக்குக் காட்சியளித்த பாம்பன் சுவாமிகள், அவருக்கு, சடாட்சர மந்திர உபதேசம் செய்தருளினார்.

வள்ளல் வாரியார்

ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு இடங்களில் வாரியார் உரையாற்றுவார். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இலக்கிய மன்றங்கள், ஆன்மிக மாநாடுகள், இலக்கியப் பேரவைகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் வாரியார் சுவாமிகள் உரையாற்றுவார்.

ஓயாது உழைத்து, ஈட்டிய பெருந்தொகையைப் பல்வேறு சமுதாய நலப்பணிகளில் செலவிட்ட பெருமைக்குரியவர் கிருபானந்த வாரியார். சுவாமி சித்பவானந்தரின் திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண குடில் என்ற கல்வி நிலையத்துக்குப் பல லட்சங்கள் கொடுத்து உதவியவர். திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்திற்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வந்தார்.

(மா)சம்பத்து வருகிறது!

வைலாமூர் பாரதி திரு  கிருஷ்ணசாமி சர்மா என்பவர் ஒரு கிராமத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருக்கு வில்லிபாரதப் பாடல்கள் முழுவதும் மனப்பாடமாக இருந்தன. வாரியாரின் சொற்பொழிவுகளைத் தவறாமல் கேட்பார். வாரியாரின் மகாபாரத உரையை முன்வரிசையில் அமர்ந்து கேட்ட சர்மாவின் வாய் பாரதப் பாடல்களை முணுமுணுத்தது. அதனைக் கவனித்த வாரியார், சர்மாவின் வில்லிபாரத அறிவை அறிந்து கொண்டார்.

நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன் வாரியார், கிருஷ்ணசாமி சர்மாவை அருகில் அழைத்தார். சர்மா அச்சத்துடனும், தயக்கத்துடனும் வாரியாரின் அருகில் சென்றார். வில்லி பாரதப் பாடல்கள் முழுவதையும் மனப்பாடமாக வைத்திருக்கீறீர்கள்! தங்கள் பெயர் என்ன?” என்று வாரியார் வினவினார். ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வைலாமூர் பாரதி கிருஷ்ணசாமி சர்மா, கிராமங்களில் பாரதச் சொற்பொழிவு ஆற்றி வந்த செய்தியைக் கூறினார். அப்போது, போதுமான வருவாய் கிடைப்பதில்லை என்றும் சர்மா கூறினார்.

அருகிலிருந்த உதவியாளரை அழைத்த வாரியார், சர்மாவின் முகவரியை வாங்கிக் கொள்ளச் செய்தார். அடுத்த மாதத்திலிருந்து வாரியார் எங்கிருந்தாலும், அங்கிருந்து, திரு. கிருஷ்ணசாமி சர்மாவிற்கு மாதம் பத்து ரூபாய், ‘மணி ஆர்டர்’ அனுப்பி வந்தார். அடுத்த முறை சர்மாவைச் சந்தித்த பொழுது, சரியாகப் பணம் வருகிறா?” என்று வாரியார் கேட்டார். ”மாசம்பத்து வருகிறது” என்று வைலாமூர் பாரதி நன்றிப் பெருக்குடன் கூறினார். அதுபோல், வாரியார், பலருக்கு விளம்பரம் இல்லாமல் நிதி உதவி செய்து வந்தார்.

வெண்பா வேந்தர் வாரியார்

வாரியார் சுவாமிகள் தமது எட்டாவது வயதிலிருந்து, நினைத்த மாத்திரத்தில் வெண்பா இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். திருமண வாழ்த்தானாலும், நூலுக்குச் சாற்றுக்கவி ஆனாலும், உடனடியாக உரியவரின் பெயரைக் குறிப்பிட்டு வெண்பா இயற்றிக் கொடுத்துவிடுவார். பச்சை மை நிரப்பப்பட்ட பெரிய பேனாவால், சற்றும் தடங்கல் இன்றி அடித்தல் திருத்தல் இல்லாமல் வெண்பாவை எழுதிவிடுவார்.  வாரியார் அவர்கள் ஆயிரக் கணக்கில் வெண்பாக்களை இயற்றியுள்ளார்.

வயலூர் கும்பாபிஷேகம்

திருச்சிக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் உள்ளது வயலூர். பசுமையான வயல்களுக்கு நடுவில் வயலூர் அமைந்துள்ளது. வாரியாரும் உள்ளூர் பிரபலங்களும் இணைந்து செயற்பட்டு இருபத்தோரு மாதத்தில் வயலூர் திருப்பணியைச் செய்து முடித்தனர். ராஜகோபுரமும் சக்தி தீர்த்தமும் புதுப்பிக்கப்பட்டன. புதிய அருணகிரி நாதர் சந்நிதி கட்டினார். 1936-ம் ஆண்டு வயலூர் குடமுழுக்கு இனிதே நிறைவேறியது.

வாரியாரின் நண்பர் முனுசாமிச் செட்டியார், வரவு செலவுக் கணக்குகளை விரிவாக அச்சிட்டு வழக்கினார். வாரியாரின் புகழ் எங்கும் பரவியது. வயலூர் முருகனைத் தரிசிக்கப் பலர் வரத் தொடங்கினர்.

உரை(இதழ்) ஆசிரியர் வாரியார்

அருணகிரிநாதரின் திருப்புகழ் முழுவதற்கும் உரை எழுத வேண்டுமென்று பல அன்பர்கள் வாரியாரிடம் கேட்டனர். முதலில் தயங்கிய வாரியார், ஒரு தைப்பூச நாளில் வடலூரில் அமர்ந்து, திருப்புகழ் விரிவுரை எழுதத் தொடங்கினார். அந்த உரை, உரிய முறையில் அன்பர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், ‘திருப்புகழமிர்தம்’ என்ற மாத இதழை வாரியார் வெளியிடத் தொடங்கினார்.

ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு திருப்புகழ் விரிவுரையும், ஒரு கந்தரலங்காரப் பாடல் உரையும் வேறு சில கட்டுரைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகள் வெளியான ‘திருப்புகழமிர்தம்’ இதழில் ஆறுபடை வீடுகளுக்குரிய பாடல்களும், பஞ்சபூதத் தலங்களுக்கு உரிய பாடல்களும் விரிவுரையுடன் வெளிவந்தன. அவற்றைத் தொகுத்து, தனித்தனி நூல்களாகவும் வெளியிட்டுள்ளார். திருப்புகழை விளக்கிப் பேசுபவர்களும், பாடல்களைப் பாடுபவர்களும் வாரியார் நூல்களையே நாடுகின்றனர்.

வடலூர் குடமுழுக்கு

வாரியார் அயராது முயன்று வடலூர், சத்தியஞானசபை திருப்பணியை நிறைவேற்றினார். வடலூர் கும்பாபிஷேகத்தைக் காண சுமார் எட்டு லட்சம் பக்தர்கள் கூடினர். நாற்பது லட்சம் ரூபாய்க்கு ரயில்வே டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன. 24.4.1950 காலை ஒன்பது மணியளவில், ஓமந்தூர் ரெட்டியார் தலைமையில் வடலூர் சத்தியஞான சபை குடமுழுக்கு இனிதே நிறைவேறியது.

மகா சுவாமிகளின் பாராட்டு

காஞ்சி மகா சுவாமிகள், வாரியார் சுவாமிகளின் கொடைக்குணத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். கிள்ளிக் கொடுக்கவே கீழ்க்கணக்கப் பார்க்கும் இவ்வுலகில் அள்ளிக் கொடுப்பதையே அன்றாடக் கடமையாகக் கொண்டிருக்கிறாய்!” என்று வாரியாரை மகா சுவாமிகள் பாராட்டினார்.

மல்லிகார்ஜுனத்தில் மணிவிழா

1966-ம் ஆண்டு வாரியாரின் மணிவிழா வந்தது. வாரியாரின் தமையனார் மறைஞானசிவம் அவர்கள் வீரசைவ மரபுப்படி, ஸ்ரீசைலத்தில் மணிவிழாவை நடத்திட ஆலோசனை வழங்கினார். அதன்படி, ஸ்ரீசைலத்தில் வாரியார், தன் கரங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்தார். பிறகு வீரசைவ குருக்கள், வாரியார் தம்பதியருக்கு அபிஷேகம் செய்தார். வாரியாரின் மணிவிழா எளிமையான முறையில், மல்லிகார்ஜுனம் என்ற ஸ்ரீசைலத்தில் நடந்தேறியது.

பிறந்த மண்ணில் சிறந்த பள்ளிகள்

வாரியார், காங்கேயநல்லூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உயர்நிலைப் பள்ளி நிறுவியுள்ளார். பிறந்த மண்ணில் எழுந்தருளியுள்ள அத்தனை தெய்வங்களுக்கும் வாரியார் திருப்பணிகள் செய்துள்ளார். சமகால மற்றும் எதிர்கால மக்களுக்கும் பயன்தரும் வகையில் வாரியார் பொதுநலப் பணிகளைச் செய்துள்ளார்.

1976-ம் ஆண்டு வாரியாரின் பவளவிழா வந்தது. உலகளாவிய புகழ் பெற்றுவிட்ட வாரியாரின் பவளவிழாவை ஆங்காங்கு கொண்டாடி மகிழ்ந்தனர். ஆதீனங்களும், இலக்கிய மன்றங்களும் பல்கலைக்கழகங்களும் வாரியார் சுவாமிகளுக்கு, பட்டங்களையும் விருதுகளையும் வழங்கின.

மிளகாய்ச்சாமியின் விருப்பம்

வள்ளியூர் மிளகாய்சாமி என்ற சித்தர், ”வாரியார் எப்போதும் ஏழையாகவே இருக்க வாழ்த்துகிறேன்!” என்று வாரியாரை வாழ்த்தினார். பக்தர்கள் திகைத்தனர்! மிளகாய்ச்சாமி விளக்கினார். ”வாரியார் ஏழையாக இருப்பதால் தான் நாம் கூப்பிட்டபொழுது வந்து உரையாற்றுகிறார். அவர் செல்வந்தர் ஆகிவிட்டால், அப்படி வர இயலுமா? அதனால்தான் அவர் என்றும் ஏழையாக இருக்க வாழ்த்தினேன்!” என்றார் மிகாய்ச்சாமி.

லட்சக் கணக்கில் சம்பாதித்த வாரியார், ஏழையாக வாழ்ந்தார். எளிய தேவைகளுக்கு மட்டும் பணத்தை வைத்துக்கொண்டு எஞ்சிய அனைத்தையும் அறப்பணிகளில் செலவிட்டார். ஒரே நேரத்தில் ஏழையாகவும் வள்ளலாகவும் வாழ்ந்து காட்டினார்.

வான்கலந்த வாரியார்

1993-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வாரியார் லண்டனுக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு அவருடைய உடல்நிலை குன்றியது. லண்டனிலிருந்து புறப்பட்டு மும்பை வழியே சென்னைக்கு விமானத்தில் 7.11.1993 அன்று வந்து கொண்டிருந்தார். வாரியாருடன் வந்தவர்கள் ”இப்போது திருப்பதிக்கு மேலே பறக்கிறோம்” என்றனர். வாரியார் சுவாமிகள், ”அப்படியானால், திருத்தணியும் வந்துவிடுமே!” என்றவர், ”முருகா! முருகா!” என்றபடி கண்ணை மூடினார்! அக்கணமே முருகனுடன் கலந்துவிட்டார்!

காங்கேயநல்லூரில் 8.1.1993 அன்று சமாதிநிலை கண்டார். சில ஆண்டுகளில் அங்கு வாரியார் மணிமண்டபம் கட்டப்பட்டது.

.

குறிப்பு:

திருமதி  ஹேமா சந்தானராமன், எழுத்தாளர்.

நன்றி: விஜயபாரதம் தீபாவளி மலர் – 2014

Advertisements
%d bloggers like this: