Blog Archives

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

-செங்கோட்டை ஸ்ரீராம்

andal

ஆண்டாள்

ஆண்டாள்

(திருநட்சத்திரம்: ஆடி- பூரம்)

 

அது திரேதா யுகம். மிதிலை நகரை சிறப்புற ஆண்டு வந்தான் ஜனக மகாராஜன். கர்மத்தாலேயே சித்தியடைந்தவன் என்று ஜனக மன்னனைச் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட ஜனக மன்னன், யாகசாலை அமைப்பதற்காக கலப்பை கொண்டு பூமியை உழுதான். யாகசாலைக்காக நிலமகளைக் கீறி வந்தபோது, அந்தக் கலப்பையின் படைச் சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமாக ஒரு மகள் தோன்றினாள்.

அவளை ஜனகன் தன் மகளாகப் பாவித்து, சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். மணப் பருவம் எய்திய அம்மகளை அயோத்தி மன்னன் தசரதனின் குமாரனாக அவதாரம் செய்த  ராமபிரான் மணந்து கொண்டான். மனைவியைக் காரணமாகக் கொண்டு புவியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தான். ஸ்ரீதேவி புவியில் தோன்றி, புவியிலுள்ள மறச் செய்திகள் மறையவும், அறச் செயல்கள் தழைத்து உலகம் உய்யவும் வேண்டியே, திருமாலின் அவதாரமாகிய ராமனுக்குத் துணைவியானாள்.

அதேபோல் இது கலி யுகம். தென்பாண்டி நாட்டைச் சேர்ந்த வில்லிபுத்தூரில் சிறப்புறத் திகழ்ந்துவந்தார் பட்டர்பிரான். அவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. பக்தியாலே சித்தியடைந்தவர் என்ற சிறப்பு அவருக்கு உண்டு. அவர் அங்கே கோயில் கொண்டிலங்கும் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் ஒருங்கே சமர்ப்பித்து பக்தி யாகம் செய்து வருபவர். அவருடைய வேள்விச் சாலை, அவர் அமைத்திருந்த நந்தவனம்தான். அந்த நந்தவனத்தில் ஒரு நாள் அவர் துளசி தளங்களைப் பறித்தவாறே வருகையில், அதன் அடியில் ஒரு குழந்தை மலர்ந்து சிரிப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து தன் மகள் போலே வளர்த்து வந்தார். கோதை என்று அந்தக் குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

பூமாதேவியே இவ்வுலக மக்களை நன்னெறிப்படுத்துவதற்காக சீதையைப் போலே மீண்டும் கோதையாக அவதரித்தாள். அவளுடைய அந்தரங்க பக்தியெல்லாம் அந்த அரங்கன் மேலேயே இருந்தது. இப்படி ஆண்டாள் பிறந்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்டது, ஆடிப் பூர நன்னாள். இதனாலேயே அந்த ஆடிப்பூரம் மிகுந்த சிறப்பும் சீர்மையும் பெற்றது.

இதை மணவாள மாமுனிகள் தம் உபதேச ரத்தின மாலையில் இப்படிச் சொல்கிறார்…

பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை – ஒருநாளைக்கு
உண்டோ மனமே உணர்ந்து பார் ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.

– என்றும்,

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் – பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

– என்றும் பாடிப் போற்றுகிறார்.

இப்படி அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாக அவதரித்த ஆண்டாள், சிறுவயது முதலே, தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து பக்திச் சிறப்பையும் கவிச் சிறப்பையும் கற்று வளர்ந்தார். அதிலே கிருஷ்ணனைப் பற்றியும், அவனுடைய லீலைகளைப் பற்றியும் அவர் சொல்லும் கதைகள் அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது. அதில் கிருஷ்ணனின் பால லீலைகள் அவளுடைய மனத்தைக் கவர்ந்தன. எந்நேரமும் குழந்தை கிருஷ்ணன் தன்னிடம் விளையாட வருவது போலவும், அவன் தன்னுடனேயே இருப்பது போலவும் அவள் எண்ணிக் கொண்டாள். சிறுமியான கோதைக்கு, அந்தக் கண்ணன் அவள் உள்ளம் திருடிய கள்வனாகத் தெரிந்தான்.

தந்தை முதலியோர் கண்டு வியக்கும்படி, இளமை முதலே எம்பெருமான் பக்கலில் பக்திப் பெருவேட்கை கொண்டிருந்தாள் கோதை. சிறுவயது முதல் தன்னுடன் மனத்தால் விளையாடி எப்போதும் தன்னுடனேயே இருந்து வந்த அந்தக் கண்ணனையே தாம் மணம் செய்துகொள்வதாகக் கருதினாள். அப்படி, அவனது பெருமைகளையே எப்போதும் சிந்தித்து, துதித்து வாழ்ந்து வந்தாள் கோதை நாச்சியார்.

பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலை கட்டி அழகு பார்க்கும் நந்தவனக் கைங்கர்யத்தையே வேள்வியாகச் செய்துவந்தார் அல்லவா? அப்படி அழகாகப் பூத்துக் குலுங்கும் பூக்களை அரங்கனுக்குப் படைப்பதற்காக மாலை கட்டிச் செல்வார். அவ்வமயம், இவருடைய மூக்கினால் அந்தப் பூக்களின் வாசனையை அறியாமல் நுகர்ந்துவிடும் வாய்ப்பும் இருந்தது. அப்படி, தான் நுகர்ந்து பார்த்த பூவின் வாசனையையா அந்த அரங்கனும் நுகர்வது என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றியது. தன் எச்சில் அந்தப் பூக்களில் படாதவண்ணம் இருக்க முகத்திலே மூக்கை மறைத்தாற்போல் துணியைக் கட்டிக் கொண்டு அந்தப் பூக்களைப் பறித்து மாலை கட்டுவாராம். அவ்வளவு தூரம் அரங்கனுக்குப் படைக்கும் பூவில் தூய்மையைக் கடைப்பிடித்த பெரியாழ்வாருக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

இங்கே பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்துவந்த கோதைக்கு, அதன் அழகும் கம்பீரமும் பெரிதும் கவர்ந்தன. அதைக் காட்டிலும், இந்தப் பூவைச் சூடிக்கொள்ளும் அரங்கன் என்ன அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணமும் அவள் மனத்தே உதித்தது. புத்தம் புதிதாகப் பூத்த பூக்களின் புதுமை வாடிவிடுவதற்குள்ளே அதே மணத்தோடு அதை அழகு பார்க்க விரும்பினாள். தன்னையே அந்த அரங்கனாக உருவகப்படுத்திக் கொண்டாள்.

அவளுள் இப்போது அரங்கன். தூய்மை போற்றிய பெரியாழ்வாரின் அந்தப் பூக்குடலையிலிருந்து பூமாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் சூடி இப்போது அதன் அழகை ரசித்தாள். கண்ணாடி எதிரே இருந்தது. அதன் அருகில் சென்றாள். அந்தக் கண்ணாடி முன்னே மாலை சூடிய வண்ணமாய் அவள் நின்றிருந்தாள். ஆனால் அந்தக் கண்ணாடியிலோ அரங்கன் மாலை சூடி அவளுடன் கள்ளச் சிரிப்பு பூத்தவனாய்த் தோற்றமளித்தான். பின்னர் அந்த மாலையை அப்படியே கழற்றி, பெரியாழ்வார் கோயிலுக்கு எடுத்துச் செல்லும் அந்தப் பூக்குடலையினுள் வைத்துவிடுவாள்.

நாள்தோறும் இந்த நாடகம் நடந்து வந்தது. கோதை சூடிக் களைந்த மாலைகளை அரங்கனும் மிகுந்த உவப்போடு சூடி வந்தான். பெரியாழ்வாரும் வழக்கம்போலவே தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள்…. பெரியாழ்வார் பூக்குடலை ஏந்தி அரங்கன் சன்னிதிக்குச் சென்றார். பூக்குடலையிலிருந்து மாலையை வெளியே எடுத்தார். மாலையைப் பார்த்த அக்கணம் அவருக்கு மனத்தில் தூக்கிவாரிப் போட்டது. காரணம் அந்த மாலையில் நீளமான தலைமுடி ஒன்று அவர் கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது.

அவ்வளவுதான் துக்கம் மேலிட இல்லத்துக்கு ஓடினார். இவ்வளவு தூய்மையாக இருந்தும் எப்படி இத் தலைமுடி அரங்கன் சூடும் மாலையில் வந்தது?

மறுநாள் அவருக்கு விடை கிடைத்துவிட்டது. அவரின் பெண்பிள்ளை கோதை, அரங்கனுக்கு வைத்த மாலையைத் தான் சூடி, பின் அரங்கன் சூடுவதற்காக பூக்குடலையில் வைத்ததை பின்னிருந்து கண்டுகொண்டார். அடுத்த கணம், எல்லையில்லாக் கோபம் அவருக்கு மூண்டது. தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.

பொழுது அப்படியே சென்றது. இரவும் வந்தது. துயரத்தின் உச்சத்தில் உறங்கிப் போனார் பெரியாழ்வார். கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணத்தைக் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கையைச் சொல்லி ஆறாத்துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். ‘நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது’ என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார்.

கனவு நீங்கி, காலை கண்விழித்த ஆழ்வாருக்கு உண்மை புரிந்தது. செல்லப் பெண்ணைக் கோபித்ததற்காக வருத்தப்பட்ட ஆழ்வார், மறுநாள் பூத்தொடுத்து அந்த மாலைகளை கேட்காமலேயே அவள் கையில் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக்கொண்டு அரங்கனின் சந்நிதி நோக்கி விரைந்தார். தந்தையின் செயலால் விழி அகல விரித்து விசித்திரப் பார்வையோடு நின்றிந்தாள் கோதை.

விஷ்ணுசித்தர் தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார். அவளுக்கு, ‘ஆண்டாள்’ என்றும், மாதவனுக்குரிய மலர் மாலையைத் தாம் சூடிப் பார்த்து, பின்பு அரங்கனுக்குக் கொடுத்தது காரணமாக, ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் பெயரிட்டு அழைத்துவந்தார்.

நாட்கள் சென்றன. இறை அறிவும் பக்தியும் உடன் வளர்த்து வந்த ஆண்டாள், தமக்கு ஏற்ற காதலனாகக் கருதிய கடல்வண்ணன் மேல் விருப்பம் மிகக் கொண்டவளானாள். அவன் மீதான காதல் அதிகரித்தது.

இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரிந்திருக்க முடியாது என்னும் கருத்துடன், கண்ணனுடைய பிரிவை ஆற்றாத ஆயர் மங்கையர் போலத் தாமும் நோன்பு நோற்று உயிர் தரிக்க மாட்டாதிருந்தாள். இத்தகைய தன் எண்ணத்தை  ‘திருப்பாவை, நாச்சியார் திருமொழி’ என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாக அந்தக் கண்ணனிடத்தே விண்ணப்பம் செய்து வந்தாள்.

மணப் பருவத்தே வந்து நின்ற இந்தப் பெண்ணைப் பார்த்து, தந்தையாரான பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ,  ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்று உறுதியாக உரைத்தாள்.அவ்வளவில் பட்டர்பிரான், ‘பின் என்ன செய்யப் போகிறாய்?’  என்று கேட்க, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளும்,  ‘யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்’ என்றுரைத்தாள்.

பின்னர் கோதை, தம் தந்தையாகிய பட்டர்பிரானிடம்,  ‘நூற்றெட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளி சேவை சாதிக்கும் இறைவனின் பெருமைகளை விளங்க எடுத்துக் கூறியருள ’ என்று வேண்டினாள். அவரும் அவ்வாறே விரித்துக் கூறி வந்தார். அப்படிக் கேட்டு வருகையில், வடமதுரையில் எழுந்தருளும் கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட அவ்வளவிலே மெய் சிலிர்ப்பும், திருவேங்கடமுடையானது பெருமையை செவிமடுத்தபோது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை மலையழகரின் வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மனமகிழ்ச்சியும் பெற்றாள். அடுத்து திருவரங்கன் பெருமை செவியில் பட்ட அம்மாத்திரமே அளவற்ற இன்பம் மனத்தே அலைமோத நின்றாள். அவர்களுள் அரங்கநாதனிடம் மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தம்மை மணமகளாக நிச்சயித்து, அவனையே எண்ணியிருந்தாள் கோதை.

கோதை நாச்சியார் தம் ஆற்றாமையைத் தணித்துக் கொள்ள எண்ணி வில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தம்மையும் ஆயர்குல மங்கையராகவும், வடபெருங்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதி, திருப்பாவையைப் பாடியருளினாள். அதன் தொடர்ச்சியாக பின் பதினான்கு திருமொழிகளைப் பாடினார். இதற்கு  ‘நாச்சியார் திருமொழி’ என்று பெயர் ஏற்பட்டது.

கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வாரும்,  ‘நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?’  என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி,  ‘நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்’ என்று திருவாய் மலர்ந்தருளினான்.

அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி,  ‘நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக’ என்று பணித்தான். மேலும் பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன் கனவிலும் தோன்றி,  ‘நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக’ என்றருளினான்.

மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப் பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.

பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும்,  “ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்!” என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.

பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே!

சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளையொலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள்.

உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.

காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள், ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான்.  ‘கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர்’ என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.

எல்லாம் பெற்றுக்கொண்டு, சொன்னவண்ணம் தன் மகளை ஏற்றுக்கொண்ட மகிழ்வில் பெரியாழ்வாரும் வில்லிபுத்தூர் திரும்பினார். முன் போல இறைவனுக்கு நந்தவனக் கைங்கர்யம் கைக்கொண்டு, எண்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்து, இறைமையின் இருப்பிடம் அடைந்தார்.

(உய்யக்கொண்டார் அருளிச் செய்தவை)

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்- இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.

– இந்த வெண்பாக்களை திருப்பாவை சொல்வதற்கு முன்னே வைணவர்கள் சொல்வது வழக்கம். இவை ஆண்டாளின் ஏற்றத்தைச் சொல்லும் வெண்பாக்கள்.

திருப்பாவை

இனி ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்களில் ஆண்டாள் சொல்ல விழைவதை நாம் கொஞ்சம் அறிய விழைவோம்.

ஆண்டாள், திருப்பாவையின் முதல் பாசுரமான  ‘மார்கழித் திங்கள்’ என்னும் பாசுரத்திலே யசோதை இளம்சிங்கமான கண்ணபிரானே நமக்கு உபாயம் என்பதாலே, இந்த நோன்பைக் காரணமாக வைத்து கிருஷ்ணானுபவம் பெற வாருங்கள் என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறாள்.

‘வையத்து வாழ்வீர்காள்’  பாசுரத்திலே ஆண்டாள் சொல்வது… பாற்கடலில் பையத்துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு அவர்கள் வேண்டும் அளவு பொருட்களையும், பிட்சையையும் கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள்… நெய், பால் போன்றவற்றை அமுது செய்தல், கண்களில் மையிட்டுக் கொள்ளல், பூக்கள் சூடிக் கொள்ளல், பெரியோர்கள் செய்யக் கூடாதென விலக்கியவற்றை செய்தல், தவறான சொற்களை சொல்லுதல் போன்றவை நோன்பு நோற்பவர்கள் செய்யக் கூடாத காரியங்கள் என்பது ஆண்டாள் அருளிச் செய்வது.

‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில், தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்குக் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை அடுக்குகிறாள் ஆண்டாள். நாட்டுக்கு ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்யும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற்பயிர்களின் அளவுக்கு கயல்மீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும், பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொறியும்… இப்படிப்பட்ட அளவில்லாத செல்வங்கள் நிறையும் என்கிறாள்.

‘ஆழிமழைக் கண்ணா’ பாசுரத்தில், மழைக்குத் தலைவனான வருண தேவனை அழைத்து, கடலில் புகுந்து கடல் நீரை முகந்து மேகமாகி, ஊழி முதல்வன் உருவம் போலே கறுத்து, ராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களைப் போலே, உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடும்படியாகவும் மழையைப் பொழியச் செய்வாயாகஔ என்று வேண்டுகிறார்கள் கோபியர்கள்.

அப்போது அப்பெண்களிலே ஒருத்தி,  ‘நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் செய்த பாவங்களால் இந்த நோன்பு இடையூறு ஏதுமில்லாமல் நிறைவேற வேண்டுமே’ என்று கவலையோடு கேட்கிறாள். அதற்கு வடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும் என்று பதில் சொல்கிறாள் ஆண்டாள். இந்த ஐந்தாவது பாசுரமான,  ‘மாயனை மன்னு’ பாசுரத்திலே!

இப்படி, முதல் ஐந்து பாசுரங்களாலே கிருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டியதைச் சொன்னவர்கள், அடுத்த பத்து பாசுரங்களில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்காக தோழிகளை எழுப்புகிறார்கள்.

‘புள்ளும் சிலம்பினகான்ஒ பாசுரத்தில், பகவத் விஷயத்தின் சுவை அறிந்திருந்தும் அதை மறந்து உறங்கிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

‘கீழ்வானம் வெள்ளென்று’ பாசுரத்தில், கண்ணனால் விரும்பப்பட்டவளான ஒருத்தியையும்  ‘மா வாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து பார்த்து எழுந்து வா, கோதுகலம் உடைய பாவையே, நீ பாடிப் பறை கொண்டு எழுந்து ஓடிவா’, என்று எழுப்புகிறார்கள்.

‘தூமணிமாடத்து’ பாசுரத்திலே, ‘உடமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உள்ள கடமையல்லவா’  என்று ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் பாவையே உடனே எழுந்து வா’ என்று கண்மூடிக் கிடக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே! தேற்றமாய் வந்து தாழிட்ட கதவைத் திறந்து எழுந்துவா’ என்று கண்ணனுடைய அண்டை வீட்டில் இருப்பவளும், எல்லோரும் கண்ணபிரானைக் கன்டு மயங்கி நிற்க, அக்கண்ணனே மயங்கும்படியான மகிமை உடையவளுமான ஒருத்தியை,  அருங்கலமே என்று அழைத்து எழுப்புகிறார்கள், ‘நோற்றுச் சுவர்க்கம்’ பாசுரத்தில்!

‘கற்றுக் கறவை’ பாசுரத்திலே,  ‘கண்ணனைப் போல நற்குடிப் பிறப்புடையவளாய் ஊராரால் கொண்டாடப்படுபவளாக இருப்பவளுமான ஒருத்தியை ஓகோவலர்தம் பொற்கொடியே’ என்று அழைத்து எழுப்புகிறார்கள்.

ராமபிரானை விட்டு கண நேரமும் பிரியாது கைங்கர்யம் செய்யும் லட்சுமணனைப்போல் கண்ணனின் கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருப்பவனான நற்செல்வனின் தங்கையை எழுப்புகிறார்கள்  ‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரத்தில்…

‘புள்ளின் வாய் கீண்டானை’ பாசுரத்தில், ‘நாமே மிகச் சிறந்த கண்ணழகியாக இருக்கும்போது, அந்தக் கண்ணன்தான் நம்மைத் தேடி வரவேண்டுமேயொழிய, நாம் அவன் இடம் தேடிச் செல்ல வேண்டியதில்லை’ என்று செருக்கோடு கண்மூடிப் படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இப்படி இவர்கள் செயல்களுக்கெல்லாம் முன் நிற்பவளாகச் சொல்லி, எல்லோரையும் தானே முதல் ஆளாகச் சென்று எழுப்பி அழைத்து வருவதாகச் சொல்லி வைத்து, ஆனால் அதை மறந்து உறங்குபவளை ‘நாணாதாய்! நாவுடையாய்!’ என்று கூறி எழுப்புகிறார்கள் ‘உங்கள் புழக்கடை’ பாசுரத்தில்.

‘எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ’ பாசுரத்தில், எல்லாப் பெண்களையும் கூட்டத்தோடு காண ஆசைப்பட்டு படுத்திருக்கும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

இவ்வாறாக எல்லாப் பெண்களையும் எழுப்பி விடுகிறார்கள். பின்னர் எல்லாப் பெண்களுமாகக் கூடி, ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலுக்குச் சென்று நிற்கிறார்கள். வாசல் கதவு அடைத்திருப்பது கண்டு, கோயில் காப்பானையும், திருவாசல் காக்கும் முதலிகளையும், நேய நிலைக்கதவம் நீக்குமாறு வேண்டுகிறார்கள், ‘நாயகனாய் நின்ற’ பாசுரத்தில்!

இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த அவர்களும் கதவைத் திறந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறார்கள். இவர்கள் உள்ளே போய் நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் துயில் எழுப்புகிறார்கள் ‘அம்பரமே தண்ணீரே’ பாசுரத்தில்.

நந்தகோபர் முதலானவர்களை எழுப்பியும், பலராமனையும் கண்ணனையும் எழுப்பியும் அவன் எழுந்திருக்காதது கண்டு புருஷகாரபூதையான நப்பின்னைப் பிராட்டியை முன்னிடாமையாலே பேசாமலே இருக்கிறான் என்று அறிந்து, நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் என்று நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள் ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில்.

‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய், திறந்தால் மகிழ்வோம்’ என்று இவர்கள் வேண்டியவுடன், நம்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி துயில் கலைந்து எழுந்தாள். நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறந்து விட வேண்டும் என்று நினைத்த கண்ணன், அவள் கதவைத் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். இதை அறிந்த பெண்கள், ‘குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் உறங்கும் மலர்மார்பா, வாய்திறவாய், மைத் தடங்கண்ணினாய் உன் மணாளனை துயில் எழ ஒட்டாயோ?’ என்று நப்பின்னையையும் கேட்டவாறே கண்ணனைத் துயில் எழுப்புகிறார்கள் – ‘குத்து விளக்கெரிய’ பாசுரத்தில்!

‘கணநேரமும் கண்ணனை எழ சம்மதியாமலும், ஒரு சிறிதும் அவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் இயற்கையான குணத்துக்குத் தகுந்ததன்று’ என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்கிறார்கள். அவளும், ஓதக்க நேரம் பார்த்து விண்ணப்பிக்கலாம்ஔ என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நாம் கோபித்துக் கொண்டதால்தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, ‘பிராட்டியை நாம் பேசின பேச்சைக் கேட்டு கண்ணன் திருவுள்ளம் கலங்கினானோ’ என்று எண்ணி அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள்,  ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில்.

இவர்களால் இங்ஙனம் எழுப்பப்பட்ட நப்பின்னைப் பிராட்டி,  ‘என்னைச் சரணடைந்த பின் உங்களுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ? ஆகையால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன். நாம் எல்லோருமே கூடிக் கண்ணனை எழுப்புவோம்’ என்று கூறி அவர்கள் அனைவருமே கூடி கண்ணனை எழுப்புகிறார்கள் ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில்.

‘உலகில் மிகப் பெரும் தேசங்களை ஆட்சிசெய்யும் அரசர்களும்கூட, தங்களுடைய அகங்காரம் கரைந்து, உன் பள்ளிக் கட்டிலின் கீழே திரளாகக் கூடியிருக்கிறார்கள். அதைப் போலே, நாங்களும் அகதிகளாக வந்துள்ளோம், உன் தாமரைக் கண்கள் எங்கள் மீது பதியும் வண்ணம், சிறிது எங்கள் மேலும் விழிக்க மாட்டாயா?’ என வேண்டுகிறார்கள் ‘அங்கண்மா ஞாலத்து அரசர்’ பாசுரத்தில்!

இப்படி இவர்கள் நெஞ்சுருக நெக்குருக விண்ணப்பித்துக் கொண்டவுடன், அதைக் கேட்ட கண்ணன், பிராட்டியை அண்டினவர்களான இவர்களை இவ்வளவு பாடு படுத்திவிட்டோ மே! என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். பின்னர் இவர்களுக்கு நல்ல வார்த்தைகள் சொன்னான். இவர்களும் கண்ணனின் நடையழகைக் காண எண்ணி,  ‘சீரிய சிங்கமெனப் புறப்பட்டு, மேன்மை மிகுந்த சிங்காசனத்தில் இருந்து எம் குறையை விசாரித்து அருள வேண்டும்’ என்கிறார்கள்,  ‘மாரிமலை முழைஞ்சில்’ பாசுரத்தில்.

‘கண்ணனும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றான். சீரிய சிங்காசனம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நடையழகிலே இவர்கள் தம்மை மறந்தார்கள். உலகமளந்த அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்துக்கும், சகடாசுரன் அழியும்படி உதைத்த அவன் புகழுக்கும், கோவர்த்தனக் குன்றை குடையாக எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெடுக்கும் வேலுக்கும் அவர்கள் மங்களாசாசனம் செய்தார்கள். பின்,  ‘நாங்கள் உன்னிடம் பறை கொள்வதற்காக வந்தோம்; எங்கள் மீது இரக்கம் காட்டவேணும்’ என்று வேண்டுகிறார்கள் ஑அன்றிவ்வுலகம்ஒ பாசுரத்தில்.

‘மங்களாசாசனம் செய்யும் நீங்கள், பறைகொள்ளுதற்காக வந்ததாகச் சொல்கிறீர்களே; இரண்டும் பொருத்தமானதாக இல்லையே!’ என்று கண்ணன் கேட்கிறான்.  ‘பறை என்பது ஒரு காரணமே! உண்மையில் உன்னிடம் உன்னையே யாசித்து வந்தவர்கள் நாங்கள்’ என்று இவர்கள் உரைக்கிறார்கள்…  ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து’ பாசுரத்தில்.

‘சரி! என்னை வேண்டும் நீங்கள், ஏன் பறையை வேண்ட வேண்டும்?’ என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு இவர்கள்,  ‘உன்னைக் காண்பதற்கு வாய்ப்பாக ஒரு நோன்பை நோற்கச் சொன்னார்கள். அந்த நோன்புக்கு மார்கழி நீராட்டம் என்கிற அனுஷ்டானத்தை முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அந்நீராட்டத்தை முடிக்க வேண்டுமாயின், சங்கங்கள், பெரும் பறைகள், பல்லாண்டை இசைப்பவர்கள், கோல விளக்காகிய மங்கல தீபங்கள், கொடிகள், விதானங்கள் ஆகியன தந்தருள வேண்டும்’  எனப் பிரார்த்திக்கிறார்கள்  ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில்.

மார்கழி நீராட்ட நோன்புக்காக அவர்கள் கேட்ட எல்லாவற்றையும் கண்ணபிரான் கொடுக்கிறான். பின்னர்,  ‘உங்களுக்கு வேண்டியது இவ்வளவுதானே, போதுமா?’ என்று வினவினான். அதற்கு இவர்கள்,  ‘நோன்புக்கு வேண்டுபவை இவையே, அது போதும்…நோன்பு நோற்ற பிறகு உன்னிடம் பரிசாக சிலவற்றைப் பெற விரும்புகிறோம்’ என்று கூறினார்கள்.  ‘அது என்ன?’ என்று அவனும் கேட்க,  ‘நீயும் பிராட்டியும் ஆபரணங்களாகிய சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ ஆகியவற்றையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு வரவேண்டும். அதன் பின் உங்களுடன் ஒன்றாக அமர்ந்து, ஑மூட நெய் பெய்து முழங்கை வழிவார பால் அமுது செய்ய வேண்டும்’ என்ற தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள்,  ‘கூடாரை வெல்லும்சீர்’ பாசுரத்தில்.

கண்ணனும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறான். பின் மனத்தில் இப்படி நினைத்தான்… ‘ஊருக்கு வேண்டிய பறையை நம்மிடமிருந்து பெற்றுவிட்டார்கள். இனி தங்களுக்கான பறையை (அதாவது, தம்மைத்தான்) கேட்கப் போகிறார்கள்’ என்பதை அறிந்துகொள்கிறான். பிறகு,  ‘நீங்கள் விரும்பும் பறையைப் பெற ஏதாவது சாதனங்களை அனுஷ்டானம் செய்ததுண்டா? எந்த சாதனங்களையும் அனுஷ்டிக்காமல் என்னைப் பெற முடியாது என்னும் அர்த்தம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே’ என்று இவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்,  ‘நாங்கள் எந்த சாதனமும் செய்ய அருகதையற்ற அஞ்ஞானிகளல்லவா? பசுக்களின் பின்னே சென்று காடுகளை அடைந்து உண்டு திரிவோம். அறிவொன்றும் இல்லாத எங்கள் ஆயர் குலத்தில் உன்னைப் பிறக்கப் பெறுவதற்கு ஏற்ற புண்ணியங்கள் செய்தவர்களாக இருக்கிறோம். எம்பிரானே! உன்னோடு எங்களுக்குள்ள உறவு ஒழிக்க ஒழியாது. அன்பினாலே கட்டுண்டோ ம். அந்த அன்பினால் உன்னை ஏதாவது விபரீதமாகச் சொல்லியிருந்தாலும் பொறுத்துக்கொள்… இந்த அன்பால் நாங்கள் விரும்பும் பறையை எங்களுக்கு அளித்தருள வேண்டும்’ என்கிறார்கள் ‘கறவைகள் பின்சென்று’ பாசுரத்தில்.

இப்படி இத்தனை பாசுரங்களில் தாங்கள் வேண்டி வந்திருக்கும் பறையை  ‘சிற்றஞ் சிறுகாலே’ பாசுரத்தில் விவரிக்கிறார்கள்…  ‘காலம் உள்ளளவும் கடவோம், உனக்கு மாத்திரமே நாங்கள் அடிமை செய்வோம், இதர விஷய விருப்பங்களைத் தவிர்த்தருள வேண்டும்’ என்கிறார்கள். இவ்வாறு  ‘தாங்கள் பறை என்று சொல்லுவது கண்ணனின் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே’ என்று முடிவாக நிர்ணயிக்கிறார்கள். அந்தக் கைங்கர்யமும் அவன் உகப்புக்காகவே செய்யப்படுகிறதேயொழிய தங்களுடைய ஆனந்தத்துக்காக அன்று என்னும் அரும்பொருளை அறிவிக்கிறார்கள்,  ‘சிற்றஞ்சிறுகாலே’ பாசுரத்தில்.

கடல் கடைந்த அந்த மாதவனைக் கேசவனை, சந்திரனைப் போன்ற அழகிய சேயிழையாரான இவர்கள் சென்று இறைஞ்சி பறை கேட்டார்கள்.  ‘நீயே உபாயம்’ என்றும்,  ‘உன் உகப்புக்கு எப்பிறப்பிலும் உனக்கு அடிமை செய்வதே எங்களுக்கு நீ தரும் பறையாகும்’ என்றும் இவர்கள் உரைத்ததைக் கேட்ட கண்ணபிரான்,  ‘நீங்கள் வேண்டிக் கேட்ட குற்றேவல்களை (அந்தரங்கக் கைங்கர்யங்களை) கொள்கிறேன் நான்’ என்று உகந்து அருளினான்.

அதற்கு இவர்கள்,  ‘கண்ணனே, இவ்வாறு நாங்கள் ஆய்ப்பாடியிலே உன்னை வணங்கி பறையைப் பெற்ற வைபவத்தை விளக்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த பட்டர்பிரான் திருமகளான அழகிய ஆண்டாள் அருளிச்செய்த சங்கத்தமிழ் மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் தப்பாமல் ஓதுபவர்கள், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாகிய கண்ணபிரானால் எல்லாவிடத்திலும் அவனுடைய திருவருளைப் பெற்று இன்புறுவர்கள்’ என்று  ‘வங்கக் கடல் கடைந்த’ பாசுரத்தோடு திருப்பாவையை நிறைவு செய்கின்றாள் ஆண்டாள்.

நாச்சியார் திருமொழி

திருப்பாவையில் ஆண்டாள், கண்ணனே உபாயம் என்றும், அவன் மனத்துக்குப் பிடித்தமான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும், தன் உறுதியை அறுதியிட்டுக் கூறினாள். ஆயினும் தன்னுடைய விருப்பப்படி அவனைப் பெற முடியவில்லை. ஆகவே அவனைப் பெற்றே தீரவேண்டும் என்ற வைராக்கிய ஆசை ஏற்பட்டவளாய், சித்தம் கலங்கி, பிரிந்தவர்களை ஒன்றுசேர்க்கும் இயல்புடைய காமதேவனை,  ‘அனங்கதேவா! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே’  என்று வேண்டுகிறாள்,  நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாசுரங்களான  ‘தையொரு திங்களில்’.

மனித வடிவாக அவதரித்த கண்ணனே, எங்கள் மாமியான யசோதை தீம்பு செய்யும் உன்னை மகனாகப் பெற்றதால், நாங்கள் உன் குறும்பால் துன்புறுதலும் தப்புமோ? பங்குனி மாதம் ஆதலால், காமன் வரும் காலம் என்று பாதையை அலங்கரித்து வைத்தோம். நீ எங்கள் சிறுவீடு சிதைக்காதே என்று இந்தப் பெண்கள், சிற்றில் சிதைக்க வேண்டாம் என்று கண்ணனை வேண்டுகிறார்கள். இதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத கண்ணபிரான் விரைந்து வந்து அவன் முகம் காட்ட, ஆண்டாள் ஊடல் கொண்டவளாய் முகம் காட்டாது இருந்ததையும், அவன் இவள் கை பற்றி, மெய் தீண்டி அணைத்ததையும், இதைப் பார்ப்பவர்கள் என்னதான் பேசமாட்டார்கள் என்றும் பேசுகிறாள், இரண்டாம் திருமொழியான  ‘நாமமாயிரத்தில்’.

இரண்டாம் பத்தான நாமமாயிரத்தில் கூறியபடி, அவனுடனான இணைப்பும் பிணைப்பும் தொடர்ந்ததால், இந்தப் பெண்களுக்கு ஆனந்தம் அதிகரித்து, அதன் காரணத்தால் இவளுக்கு உயிர்த் தியாகம் ஏற்படக் கூடுமோ என்று அஞ்சிய உறவினர்கள், கண்ணனையும், இவர்களையும் பிரித்து நிலவறைகளில் அடைத்து வைத்தனர். ஆனால், அந்தப் பிரிவாற்றாமையாலும் இவர்களுக்கு உயிர்போக்கல் நிலை ஏற்படும் சூழல் உண்டாகியது. அந்நிலை கண்ட உறவினர்கள், பெண்கள் நல்ல கணவனைப் பெறுவதற்காகச் செய்யும் பனி நீராடுதல் எனும் நோன்பைச் செய்வதற்காக இவர்களை வெளியில் விட்டனர். இவர்களும் கண்ணனோடு சேர்ந்தும் பிரிந்தும் படும் வருத்தங்களைத் தவிர்ப்பதற்காக அவன் அறியாதபடி ஒரு பொய்கைக்குச் சென்றனர். தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு விரகதாபம் தணியும்படி அப்பொய்கையில் நீராடினர். அப்போது அங்கு வந்த கண்ணன் இவர்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் இருந்த குருந்த மரத்தில் ஏறி அமர்ந்தான். இவர்களும் குளித்துக் கரையேறியவுடன் ஆடை ஆபரணங்களைக் காணாமல் தவித்தனர். பின்னர் ஒருவாறு கண்ணனை மரத்தின் மேல் கண்டு அவனிடம் தங்கள் ஆடை ஆபரணங்களைத் தந்துவிடுமாறு இரந்து கேட்டனர்; வாழ்த்திக் கேட்டனர்; கோபமாய்ச் சீறியும் கேட்டனர். பலவிதமாகக் கெஞ்சிக் கேட்டனர். கடைசியில் மனமிரங்கிய அவனும் அவர்களுக்கு ஆடை ஆபரணங்களைக் கொடுத்து அருளினான் – என்பதை மூன்றாம் திருமொழியான ‘கோழியழைப்பதன் முன்னம்’ என்ற பத்துப் பாசுரங்களாலே அருள்கிறாள்.

ஆயினும் கண்ணபிரானோடு இருந்த இந்தக் கூட்டு பிரிவிலே முடிந்தது. அந்தப் பிரிவாற்றாமை மனத்தில் பொங்க,  ‘மறுபடியும் கண்ணன் கூடவல்லானோ?’ என்று கூடல் இழைத்தல் பேசுகிறாள். என்னை அடையத் தீர்ந்த முடிவுடன் அவதரித்த கண்ணன், இங்கு வருவானாகில், கூடலே நீ கூடிடு என்று கூடலை உருவகப்படுத்தி அதனோடு பேசுகிறாள் ‘தெள்ளியாரில்’ என்ற நான்காம் திருமொழியில்.

உயிரற்றதான கூடல் எந்த மறுமொழியும் கூறாதிருந்தது. அதனால் உயிருள்ள ஏதேனும் ஒன்றை கண்ணன் வரக் கூவவேண்டும் என்று எண்ணியபோது ஆண்டாளுக்குக் குயிலின் நினைவு வந்தது. எனவே அவள் குயிலைப் பார்த்து,  ‘சோலைப் பொந்துகளில் வாசம் செய்யும் குயிலே, திருமாமகள் கேள்வனை விரும்பியதால், என் கைவளைகள் கழன்றுபோகும்படி உடல் தளர்ந்து மெலிந்து தாபத்தால் உருகுகிறேன். இது தகுமோ? எனவே எம்பெருமான் வரும்படி அவன் திருப்பெயர்கள் பல சொல்லிக் கூவ வேணும்’ என்று பிரார்த்திக்கிறாள்  ‘மன்னு பெரும் புகழ் மாதவன்’ என்ற ஐந்தாம் திருமொழியில்.

கண்ணன் வரவேணுமாகக் குயிலும் கூவியது. ஆயினும் அவன் வராதிருந்தான். வருத்தம் மிகக் கொண்டாள் கோதை. அதனால் இவளை உயிர் தரித்திருக்கச் செய்ய வேண்டும் என்று எண்ணிய கண்ணன், இவள் விரும்பியவாறே ஒன்றும் குறைவிலாதபடி கனவிலே வந்து பாணிக்கிரகணம் வரை செய்துகொண்டான். கனவிலே ஆண்டாள் கண்ணபிரானை மணந்துகொண்ட அனுபவத்தைத் தோழிக்குச் சொல்லுகிறாள்  ‘வாரணமாயிரம்’ என்ற ஆறாம் திருமொழியில்!

கனவிலே கண்ணனோடு ஏற்பட்ட உறவும் நீட்டிக்கப் பெறவில்லை. கவலையாலே அவள் முகம் துவண்டது. எப்போதும் அவனோடு சேர்ந்திருக்கும்படியான அனுபவத்தைப் பெறவேணுமே! அந்த அனுபவத்தைக் கேட்கவாவது வேணுமே! என்ன செய்வது? கோதைக்கு அவன் திருப்பவள வாய் வைத்து கர்ஜிக்கும் பாஞ்சஜன்யத்தின் நினைவு வந்தது. எப்போதும் அவன் கைகளிலே ஒட்டி உறவாடும் அந்த சங்கு அடைந்த பெரும் பேற்றை எண்ணியெண்ணி உகக்கிறாள் ஆண்டாள். அவன் பவள உதடுகளில் வாசனையை நுகர்ந்த சங்கே அந்த அனுபவத்தை எங்களுக்கும் கூறேன் என்று, பகவதனுபவம் இருக்கும்படியைப் பலவாறு கேட்கிறாள்  ‘கற்பூரம் நாறுமோ’ என்ற ஏழாம் திருமொழியில்.

அடுத்து, அவள் கண்களுக்குப் பட்டவை மேகங்கள். திருமலை திருப்பதியில் அவன் திருக்கோயில் முகடு தொட்டுத் தழுவி வரும் மேகங்கள் அவன் திருமேனி உரசும் பேறு பெற்றன. அந்த அனுபவத்தைத்தான் விளிக்கின்றாள். தன் நிலையைச் சொல்லி அந்தத் திருவேங்கட முடையானுக்குத் தூது விட்டாள்.  ‘எனக்குக் கதியாக உள்ள அவன், தன்னை ஒரு காப்பானாகவே கருதவில்லையோ! இவன் ஒரு பெண்பிள்ளையைத் தவிக்க விட்டு வதைத்தான் என்ற பேச்சு எழுந்தால், உலகோர் மதிக்க மாட்டார்களே!’ என்று எட்டாம் திருமொழியான ‘விண் நீல மேலாப்பு விரித்தால் போல்’ பாசுரங்களில் மேகவிடு தூது பேசுகிறாள்.

மேகங்களும் தூது செல்லவில்லை. அவை நின்ற இடத்திலேயே நின்று மழை பொழியச் செய்தன. அதனாலே மழைக் காலத்தில் உண்டாகும் வளப்பம் பூமியில் மிகுந்தது. திருமாலிருஞ்சோலை மலையில் முல்லைகள், காயா முதலிய மலர்கள், கனிகள், வண்டினங்கள், பூஞ்சுனைகள் முதலானவை உண்டாகி இயற்கை பூத்துச் சிரித்தது. ஆனால் கண்ணனைப் பிரிந்த ஆண்டாளோ துயரால் வாடினாள். அதைக்கண்டு பூத்துச் சிரித்திருந்த மலர்கள் எல்லாம் இவளைப் பார்த்து ஏளனம் செய்தன. எம்பெருமானின் வரவுக்காக இவள் கட்டி வைத்திருந்த பொன்மாலைகள் வாடிப்போய் நிற்கின்றன. அதனோடு தானும் வாட்டமுற்று, பயனற்றுக் கிடப்பதாக, ஒன்பதாம் திருமொழியான  ‘சிந்துரச் செம்பொடிப்போல்’ பாசுரங்களில் தெரிவிக்கிறாள்.

இவ்வாறு மன வருத்தம் மிகக் கொண்டவளாய், நமக்கு உயிர்தரிக்க வேறு வழி உண்டோ ? என ஆராய்ந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் நினைவுக்கு வந்தார் பெரியாழ்வார். பெரியாழ்வார் பெண்பிள்ளையாகத் தான் பிறந்ததை எண்ணிப் பார்த்தாள். ஆழ்வார் அழைத்தவுடனே கூடல் நகரின் அன்று கருடாரூடனாகக் காட்சிதந்த அவன் செயலையும் மனத்தில் கொண்டாள். மற்றவை எல்லாம் தப்பினாலும் பெரியாழ்வாரோடு நமக்குண்டான உறவு தப்பாது. அவனுக்கான சுதந்திரத்தையும் மாற்றி, நம்மை அவன் திருவடிகளில் சேர்த்துவிடும் தன்மை பெரியாழ்வாரின் பக்திக்கு உண்டு. எனவே அவரையே நாம் ஆசார்யராக அடைவோம் என்று உறுதி பூண்ட தன்மையைப் பேசுகிறாள் பத்தாம் திருமொழியான ‘கார்கோடற் பூக்காள்’ பாசுரங்களில்.

இத்தகைய உறுதியோடு அவள் இருந்தாள். ஆயினும் கண்ணபிரான் முகம் காட்டவில்லை. அதனால் அவள் நோவுப்பட்டாள். இவள் இருக்கும் நிலையைக் கண்டு, தாய்மார், தோழிமார் முதலானவர்கள் இவளைக் காண வந்து திரண்டு நிற்கிறார்கள். அப்போது அவள்,  ‘எழில் மிகக் கொண்ட மனையில் வாழ்ந்து வரும் அன்பு பூண்டவர்களே! என் அரங்கன் எனக்கு அமுதம் போன்ற இனியவன். அவன் குழல் அழகன், வாய் அழகன், கண்ணழகன், கொப்பூழ் மேல் எழுந்த தாமரை அன்ன அழகன். என்னவனான அவன் என்னுடைய கழல் வளைகளைத் தாமே கழன்றுவிடும் படியாக என்னை ஆக்கிவிட்டான். அவன் நம்மை வைத்த நிலையைப் பார்த்தீர்களா’ என்று வெறுத்து வார்த்தை சொல்லித் தவிக்கிறாள். பின்,  ‘நம்மைப் போன்ற சிலருக்கு உதவினவன், பெரியாழ்வார் பெற்றெடுத்த எமக்கும் கட்டாயம் உதவாமல் இருக்க மாட்டான்’ என்று மனம் தேறியவளாகப் பேசுகிறாள் பதினோராம் திருமொழியான ‘முகக்குக் தம்கையில் சங்கமே போலாவோ’ பாசுரங்களில்.

இப்படி உறுதி பூண்டிருந்தும் அவன் வரவில்லை. நடக்கவும் இயலாத நிலையை அடைந்து சோர்ந்திருந்தாள் அவள். அருகில் இருப்பாரைப் பார்த்து ஓமானம் கெட்டவளாய், உடல் நிறம் மாற, மனம் தளர்ச்சியடைய, வாய் வெளுத்து, உணவு வெறுத்து, உள் மெலிந்து போனேன். இவை நீங்க வேண்டுமாயின், கண்ணனிடத்தே என்னைக் கொண்டுபோய் விடுங்கள்ஔ என்கிறாள் பன்னிரண்டாம் திருமொழியான ஑மற்று இருந்தீர்கட்கு அறியலாகாஒ என்ற பாசுரங்களில்.

இப்படி இவளின் வேண்டுகோளை ஏற்று அவன் இருக்கும் இடத்திலே இவளைக் கொண்டு சேர்க்க அவர்களால் இயலவில்லை. எனவே, ‘அவனோடு தொடர்புள்ள ஏதாவதொன்றை, கண்ணன் அணிந்த ஆடை முதலியவற்றைக் கொண்டு வந்து என்னைத் தொடச்செய்து, என்னை உயிர் தரிக்கச் செய்யுங்கள்’ என்று பிரார்த்திக்கிறாள் பதிமூன்றாம் திருமொழியான  ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம்’ பாசுரங்களில்..

இப்படி மெலிந்து கதறுகிற ஆண்டாளுக்கு பரம பக்தியை விளைவிக்கச் செய்வதற்காகவே, கண்ணன் முகம் காட்டாமல் இருந்தான். அதனால் இவளின் ஆற்றாமை கரை புரண்டு, அவனைப் பெறாமல் உயிர் தரித்திருக்க இயலாத நிலை ஏற்பட்டது. அப்போது அவள் கண்ணனைக் கண்டீரோ என்று கேட்கிறாள்,  ‘பட்டிமேய்ந்து ஓர் காரேறு’ என்னும் பதினான்காம் திருமொழியில்.

ஒவ்வொரு பாசுரத்தின் முதல் இரண்டு அடிகளிலும்  ‘கண்டீரே’ என்று கேட்கிறவர்கள் பேச்சாகவும், பின்பாதியில்  ‘கண்டோ ம்’  என்று பதில் சொல்கிறவர்கள் பேச்சாகவும், முறையே தமக்குப் பிறந்த பரம பக்தியையும், பெற்ற பேரின்பத்தையும் இருவர் பேச்சாகப் பேசி, கண்ணனை பிருந்தாவனத்திலே தாம் கண்ட விதத்தைக் கூறி, நாச்சியார் திருமொழியாகிய இப்பிரபந்தத்தை நிறைவு செய்கிறாள் கோதை நாச்சியார்.

***

ஆண்டாள் வாழி திருநாமம்!

திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

.

குறிப்பு:

திரு. செங்கோட்டை ஸ்ரீராம், பத்திரிகையாளர்.

.

Advertisements

பல்லாண்டு பாடிய அருளாளர்

-செங்கோட்டை ஸ்ரீராம்

பெரியாழ்வார்

பெரியாழ்வார்

பெரியாழ்வார்

(திருநட்சத்திரம்: ஆனி – சுவாதி)

 

வடவேங்கடம் முதல் குமரி வரை எல்லையாகக் கொண்ட திராவிட நாட்டில், பாண்டிய தேசம் அக்காலம் முதலே சிறப்புற இருந்து வந்தது. அங்கே முத்தும் முத்தமிழும் பொலிவுற்று விளங்குவதாய் இருந்தது. அந்தப் பாண்டிய நாட்டில் காட்டுப் பகுதில் வாழ்ந்து வந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் குல வழக்கப்படி, வேட்டையாடுவதில் வல்லவர்களாக விளங்கினார்கள்.

ஒரு நாள் வில்லியும், கண்டனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றார்கள். இருவரும் தனித்தனியே சென்றபோது, கண்டன் முன்னே ஒரு புலி வந்து நின்றது. அவன் அப் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவினான். ஆனால் அந்த அம்பு மழைக்குத் தப்பிய புலி, கண்டனைக் கொன்றது. இதை அறியாத வில்லி, தன் சகோதரனான கண்டனைத் தேடிக்கொண்டு காடு முழுதும் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் களைப்பின் மிகுதியால் அவன் மரத்தின் அடியில் அயர்ந்து அமர்ந்தான். அப்படியே நித்திரை கண்களைத் தழுவ உறங்கிப் போனான்.

திருமகள்கேள்வனான திருமால் அவன் கனவில் தோன்றினார். கண்டனின் விதியைப் பற்றிக் கூறி, அதற்காக வருந்த வேண்டாம் என்றார். முன்னொரு காலத்தில் காலநேமி என்ற அசுரனை வதம் செய்வதற்காக தாம் அங்கே எழுந்தருளியதாகவும், பின்னர் அந்த ஆலமரத்தின் அடியில் உள்ள புதர்களுக்கு நடுவே வடபத்ர சாயி என்ற திருநாமத்தோடு, விமலாக்ருதி விமானத்தினுள் சயனத் திருக்கோலத்தில் இருப்பதாகவும் காட்டி, இந்தக் காட்டை அகழ்ந்து நாடாக்கி, தமக்குக் கோயில் கட்டி ஆராதித்து வருமாறும் கூறினார்.

அவ்வண்ணமே கனவு நிலையிலிருந்து விழித்தெழுந்த வில்லி, வடபெருங்கோயிலுடையானைக் கண்டெடுத்து, அவனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்பி, அழகிய தெருக்களை அமைத்து நகர் அமைத்தான். அந்த நகரம் புதிதாக உருவாகியதால் அதற்கு புத்தூர் என்று பெயர் ஏற்பட்டது. வில்லியால் அந்த நகரம் அமைக்கப்பட்டதால், வில்லிபுத்தூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

இப்படித் தோற்றம் பெற்ற வில்லிபுத்தூரில் குடியேறிய அந்தணர்களுள் வேயர் என்ற வகுப்பினர் இருந்தனர். அவர்களுள் முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில் முகுந்த பட்டர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் பத்மவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லற தர்மத்தைக் குறைவற நடத்திவந்தார். அவர்கள் இருவரும் வடபெருங்கோயிலுடையானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள். அவனுக்கு அநேகக் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்கள். அவர்களுக்கு அநேக பிள்ளைச் செல்வங்கள் இருந்தார்கள். அவர்களில் வடபெருங்கோயிலுடையான் அருளால் ஐந்தாவதாக ஓர் ஆண் மகவு பிறந்தது.

குரோதன வருடத்தில் ஆனி மாதம், சுக்ல பட்ச ஏகாதசி திதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீகருடாம்சராய் அவதரித்த அந்தக் குழந்தையே பரமனைப் பூமாலையோடு பாமாலையும் சூடித் தொழுத பெரியாழ்வார்.

பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தன் என்பது. விட்டுசித்தன் என்ற அந்தப் பெயராலே பெற்றோர் அவரை அழைத்தனர். அவருக்குக் தக்க வயதில் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். அந்தணச் சிறுவனுக்குரிய உயநயனமும் குடுமி வைத்தலும், வேதப் பயிற்சியும் நடைபெற்றன.

நாட்கள் செல்லச்செல்ல விட்டுசித்தருக்கு திருமால் தொண்டே சிறந்தது எனத் தோன்றியது. பிரகலாதனைப் போல குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ண பக்தியில் சிறந்து விளங்கினார் விஷ்ணுசித்தர். கண்ணனுக்கே இவ்வுயிரும் உடலும் அடிமை என்று உணர்ந்து கிருஷ்ண தியானத்தில் வாழ்ந்து வரலானார். பரமனுக்கு அடிமை செய்வதில் அவனுக்கு உகப்பான விஷயம் எது என்று ஆராய்ந்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

முன்பு கண்ணன் யசோதை இளஞ்சிங்கமாய் ஆய்ப்பாடியில் வளர்ந்து வரும்போது, கம்சனின் அழைப்பாலே அவனை வதம் செய்தற்பொருட்டு தன் தமையனான பலராமனுடன் மதுராபுரிக்கு எழுந்தருளினார் அல்லவா? அப்போது கம்சனுக்கு மாலை கட்டும் மாலாகாரனின் இல்லத்துக்குச் சென்று தனக்கும் ஒரு மாலை வேண்டும் என்று இரந்து நின்றார்.

அந்த மாலாகாரனும் மிகவும் மனம் உகப்புற்று, எத்தனையோ யோகிகளும் மகான்களும் உன் திவ்விய அழகு தரிசனத்துக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்… நீயோ அடியேனின் இல்லத்துக்கே வந்து அருள் புரிகிறார். நான் என்ன கைமாறு செய்வேன் என்று அழகிய மாலையை அவனுக்குக் கொடுத்தான்.

பெரியாழ்வார் கண்ணனின் இந்த லீலையில் மனம் அனுபவித்து, அவன் விரும்புவது அழகிய மாலைகள் சூட்டி அழகு பார்த்தலே என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மூதாதையர் ஈட்டி வைத்திருந்த பொற்குவியலிலிருந்து ஒரு பெரும் பகுதியைக் கொண்டு நீர்ப் பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச் செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, வில்லிபுத்தூர் பதியில் உள்ள வடபெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பள்ளிகொண்டபிரானுக்கு சாத்தி வரலானார்.

அந்த நந்தவனத்திலே, துளசி, தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், மல்லிகை, முல்லை, மாதவி முதலிய பூக்கள் நிறைந்து பொலியும்படி செய்தார். அதிகாலை துயில் எழுந்து, நித்ய அனுஷ்டானங்களை முடித்து, நந்தவனத்துக்குச் சென்று, பரமனுக்கே உரிய வாசனையை தாம் முகர்ந்து விடாமல் இருக்க, சிறிய ஆடையொன்றை மூக்கைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, தூய்மையான கரங்களால் அம்மலர்களைக் கொய்து, கூடைகளில் சேர்த்து மாலை கட்டி, மாலவனுக்குச் சார்த்துவார்.

அக்காலத்தே மதுரையைம்பதியைத் தலைநகராகக் கொண்டு, பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான் வல்லபதேவன் என்னும் அரசன். அவன் பாண்டியர் குலத்துக்கு எழில் விளக்குப் போன்றவன். கலைகள் பல கற்றுத் தேர்ந்தவன். எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினான்.

ஒருநாள் இரவு அவன் மாறுவேடம் பூண்டு நகரச் சோதனை மேற்கொண்டான். ஒரு வீட்டின் திண்ணையில் வயதான அந்தணர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். மாறுவேடத்திலிருந்த மன்னன், அவரை எழுப்பி, ‘ஐயா நீங்கள் யார்? ஏன் இங்கே படுத்து உறங்குகிறீர் ?’ என்று வினவினான். அதற்கு அப்பெரியவர், அந்தணனான தாம் வடதேச யாத்திரை செய்துவிட்டு, கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடி வந்திருப்பதாகவும், ராம சேது தரிசனத்துக்காகச் செல்ல இருப்பதால், இரவு கழிப்பதற்காக இந்தத் திண்ணையில் உறங்குவதாகவும் கூறினார். பிறகு, தாம் பல புனிதத் தலங்களுக்கும் சென்று வந்த விஷயத்தைக் கூறி, ஒரு ஸ்லோகம் சொல்கிறேன், அதைக் கேளுங்கள் என்றபடி அதைச் சொல்லத் தொடங்கினார்.

வர்ஷார்த்தம் அஷ்டௌ ப்ரயதேத மாஸான்
நிஷார்த்தம் அர்த்தம் திவஸம் யதேத |
வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந
பரத்ர ஹேதோரிஹ ஜன்ம நாச ||

– மழைக்காலத்துக்கு வேண்டிய பொருள்களை மற்ற எட்டு மாத காலங்களில் சேகரிக்க வேண்டும். இரவுக்கு வேண்டியவற்றை பகலிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். முதுமைக்கு வேண்டியவற்றை இளமையிலேயே தேடி வைத்துக் கொள்ள வேண்டும். மறுமைக்கு வேண்டியவற்றை இம்மையிலேயே தேடிக்கொள்ள வேண்டும்…

-இப்படி பொருள்படும்படி இந்த ஸ்லோகத்தைச் சொன்ன அம்மாத்திரத்தில், மன்னனின் மனத்தில் வருத்தம் உண்டாகியது. தாம் மறுமையாகிய பரலோக சுகானுபவத்துக்கு இதுவரை ஒன்றும் செய்யாமலேயே காலம் கழித்துவிட்டோமே என்று மனம் வருந்தினான்.

பின்பு அந்தப் பெரியவரை வணங்கி, தமக்கு நல்லதோர் சிந்தனையைத் தந்தமைக்காக அவரை சில நாட்கள் தன்னுடன் இருந்து வழிநடத்துமாறு கோரினான். அப்பெரியவரும் தாம் அறிந்த நல்லனவற்றை அவனுக்கு உபதேசித்து, பின் சேது தரிசனத்துக்காகப் புறப்பட்டுச் சென்றார்.

வல்லபதேவனுக்கு தமக்கு மறுமையில் பரமானுபவம் கிடைக்க வேண்டுமே என்ற கவலை மனத்தை அறுத்தது. அப்போது அவனது புரோகிதரும், பரம வைணவருமான செல்வ நம்பிகள் என்னும் பெரியவர் அங்கு எழுந்தருளினார். அவரிடம் வல்லப தேவன் தன் மனக்கிலேசத்தைக் கூறி, மறுமையில் பேரின்பம் அடைய வழி என்ன? என்று வினவினான்.

செல்வ நம்பிகளும் ‘நாடு முழுவதும் பறை அறிவித்து, வித்வான்களைத் திரட்டி, வேத அர்த்தங்களைக் கொண்டு, பரம்பொருளைப் பற்றி ஒரு நிர்ணயம் செய்வித்து, அவ்வழியாலேயே பெறவேண்டும்’ என்று யோசனை கூறினார். அதன்படி அரசனும், பெரும் தனத்தை ஒரு துணியிலே கட்டி, அப்பொற்கிழியை சபை மண்டபத்தின் நடுவே ஒரு கம்பத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்தான். பிறகு வித்வான்களைத் திரட்டுவதற்காக,  ‘பரதத்துவ நிர்ணயம் செய்பவர்கள் அப்பொற்கிழியைப் பரிசாகப் பெறலாம்’ என்று நாடெங்கும் பறை அடித்து அறிவிக்கச் செய்தான்.

இந்தச் செய்தி வில்லிபுத்தூரையும் சேர்ந்தது. அப்போது, வடபெருங்கோயிலுடையான் விஷ்ணுசித்தரின் கனவில் தோன்றி, அவர் மூலம் உண்மைப் பொருளை உலகுக்கு உணர்த்த எண்ணம் கொண்டவனாய், ‘நீர் போய் பொற்கிழியை அறுத்துக் கொண்டு வாரும்’ என்று கட்டளையிட்டான். ஆனால் விஷ்ணுசித்தரோ, ‘அது சகல சாத்திரங்களும் கற்ற பண்டிதர்கள் செய்யவேண்டியதன்றோ? நானோ அவ்வாறு சாத்திரம் முழுதும் கற்றவன் அல்லேன். உமக்கு நந்தவனக் கைங்கரியம் செய்வது மட்டுமே என் தொழிலாகக் கொண்டேன், ஆயின் எவ்வாறு நான் இப்பெரும் செயலைச் செய்யமுடியும்! சகலகலா வல்லவர்களான அந்த மாயாவாத பண்டிதர்கள் நிறைந்த சபையில் எப்படி நான் பரதத்துவ நிர்ணயம் செய்யப்போகிறேன்?’  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வடபெருங்கோயிலுடையானும்,   ‘அதைப்பற்றி உமக்கு என்ன கவலை? உம்மைக் கண்டு பரதத்துவ நிர்ணயம் செய்யப்போவது நாமேயன்றோ! நீர் அவசியம் மதுரைக்குச் செல்ல வேண்டும்!’  என்று ஆணையிட்டு மறைந்தான்.

விஷ்ணுசித்தரும் விடியற்காலையே எழுந்து, இதையே சிந்தித்தவராக மதுரைக்குச் செல்லத் தயாரானார். அப்போது வடபெருங்கோயிலுடையானின் கைங்கர்யபரர்கள், விஷ்ணுசித்தர் எழுந்தருள்வதற்காக, திருப்பல்லக்குடனும், திருச்சின்னம் முதலிய கோயில் மரியாதைகளுடனும் வந்து, தாங்களும் கூடல்நகருக்கு தங்களோடு செல்ல வேண்டுமாய் வடபெருங்கோயிலுடையான் கட்டளையிட்டிருப்பதாக அறிவித்தனர். விஷ்ணுசித்தரும் அவற்றை ஏற்று, கூடல்மாநகருக்குப் பயணமானார்.

இப்படி விஷ்ணுசித்தர் பாண்டியனின் சபைக்கு வரும் செய்தி மன்னனுக்குக் கிடைத்தது. அவனும் ஏற்கெனவே செல்வநம்பியின் மூலம் விஷ்ணுசித்தரின் பெருமைகளைக் கேட்டிருந்தான் ஆதலால், செல்வநம்பியோடு சேர்ந்து அவரை எதிர்கொண்டு அழைக்கச் சென்றான். விஷ்ணுசித்தரின் ஒளிபொருந்திய திருமுகம் கண்டு அவரை வணங்கி வரவேற்றான்.  ‘என் பட்டர்பிரான் வந்தார்’ என்று கொண்டாடினான்.

ஆனால் அங்கிருந்த வேத சாத்திரங்களைக் கற்ற பண்டிதர்கள், எந்தவித வேதமும் கல்லாத இவரைக் கொண்டாடுவது தவறு என்று மறுத்துரைத்தனர். ஆனால் மன்னனோ அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. பின் செல்வநம்பிகள், விஷ்ணுசித்தரின் அடிபணிந்து, ‘வேதத்தின் விழுப்பொருளான பரதத்துவத்தை நிச்சயித்து அருளிச் செய்ய வேண்டும்’  என்று பிரார்த்தித்தார்.

விஷ்ணுசித்தரும் வடபெருங்கோயிலுடையான் அருளால், மடை திறந்த வெள்ளம் போல வேதத்தின் விழுப்பொருளை உரைக்கலானார். சர்வ ஞானமும் கைவரப்பெற்றவராக, வேத, இதிகாச, புராணாதிகளின் வாக்கியங்களைக் கொண்டு,  ‘இந்த உலகுக்குக் காரணமான வஸ்து எவனோ அவனே தியானத்துக்குரியவன்’ என்று அருளிச் செய்தார்.

எவனிடத்திலிருந்து அனைத்துப் பொருளும் உண்டாகின்றனவோ, எவனால் இவை யாவையும் நிலைபெற்றிருக்கின்றனவோ, முடிவில் எவனிடத்தில் இவையனைத்தும் லயமாகின்றனவோ அவனே பரப்பிரும்மம் என்றும்,

– எது, வாக்கினாலும் மனத்தினாலும் துதிக்கவும் அறியவும் அருமையாக இருக்குமோ, அந்த பிரம்மத்தை அறிந்து கொண்டவர்கள் யமனுக்கும் அஞ்சார் என்றும்,

– சிலந்திப் பூச்சியானது எவ்வாறு நூலை உருவாக்கிக் கொண்டு, உணவாகிற பூச்சிகளைப் பிடித்துக் கொள்ளுமோ அவ்வாறே சகல உயிர்களையும், பொருள்களையும் அந்தப் பரன் படைத்தான் என்றும்,

– அந்தப் பரன் விஷ்ணு என்னும் பெயருடையவனாய், சாத்விகனாய், அனைவராலும் தொழப்படுகின்றவனாய் இருக்கிறான் என்றும்,

– அவனுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மா பிறந்தான் என்றும், அந்தப் பிரம்மனுடைய புருவங்களின் மத்தியிலிருந்து ருத்ரன் பிறந்தான் என்றும்,

– ஓம்கார வடிவினனான அந்த விஷ்ணு ஒருவனே என்றும், வேத வசனங்களுக்கும் நாயகன் அவனே என்றும்,

– ஜீவர்கள் அந்த ஓம்காரத்தை உச்சரித்த மாத்திரத்திலேயே நலன் அடைகிறார்கள் என்றும்,

– அப்படிப்பட்ட ஓம்காரத்தில் முதல் ஸ்வரமான அகாரம் அந்தப் பரமனையே குறிப்பிடுகிறது என்றும்,

– அந்த நாராயணன் ஒருவனே பாபங்களைக் களைபவன் என்றும்,

– ஸ்ரீமந் நாராயணனிடத்திலிருந்து பிரம்மா, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும் பிறந்தார்கள் என்றும்,

– நாராயணனே பர ப்ரும்மம் என்றும்,

– தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும், அவனுடைய புருவங்களின் இடையிலிருந்து ருத்ரனும், அவனிடத்திலிருந்து ஆறுமுகனும் பிறந்தான் என்று பகவானே கீதையில் அருளிச் செய்திருக்கிறார் என்றும்,

– பகவான் வியாசரும்,   ‘எந்தக் காலங்களிலும் நாராயணனுக்கு மிஞ்சிய பர தெய்வமில்லை என்று வேதங்களும், புராணங்களும் சத்ய பூர்வமாகச் சொல்லி இருப்பதை ரிஷிகளாகிய உங்கள் மத்தியில் பிரமாண பூர்வமாகச் சொல்ல விழைகிறேன்’  என்று கையை மேலே உயர்த்தி சத்தியம் செய்து,  ‘வேதங்களுக்கு மிஞ்சின பரதெய்வமுமில்லை’ என்று சொல்லியிருக்கிறார் என்றும்,

– இவ்வாறு சமஸ்த தேவர்களில் நாராயணன் ஒருவனே பரனாயிருப்பது போல, சர்வ மந்திரங்களில் அஷ்டாட்சரம் ஒன்றே பரதத்வ நிர்ணயம் செய்யவும் உயர்ந்த மந்திரமாக இருக்கிறது என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்தார்.

பல்லாயிரக் கணக்கான வேத வாக்கியங்களைக் கொண்டும், ஸ்ம்ருதி, இதிகாசம், புராணம் முதலான பிரமாணங்களைக் கொண்டும் அனைத்து வித்வான்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள் என்று நிர்ணயம் செய்தார்.

உடனே, விஷ்ணுசித்தரின் வெற்றி, பரம்பொருளாலும் இசையப் பெற்றது என்பதைச் சொல்லும்படியாக, பொற்கிழி கட்டியிருந்த கம்பம், பொற்கிழி இவர் அருகே வரும்படி வளையலாயிற்று. விஷ்ணுசித்தரும் பொற்கிழியை அறுத்துக் கொண்டார். வேந்தனும், செல்வநம்பியும், ஏனையோரும் அவரை வணங்கிப் போற்றினர்.

பின்னர் அரசன் கட்டளையினால் ஏவலர்கள், அந்நகர மாடங்கள் தோறும் கொடிகளை ஏற்றி, தோரணக் கம்பங்கள் நாட்டி, மலர் மாலைகள் கட்டித் தொங்கவிட்டனர்.

வல்லபதேவனாகிய பாண்டிய மன்னன் விஷ்ணுசித்தருக்கு  ‘பட்டர்பிரான்’ என்னும் பட்டம் வழங்கி, பட்டத்து யானையின்மீது அவரை ஏற்றி, நகர் உலா வரச் செய்தான்…

விஷ்ணுசித்தர் உலா வரும் வீதிகள் யாவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. ‘வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்’ என்னும் வாழ்த்தொலிகள் முழங்க, விட்டுசித்தர் வீதிகள்தோறும் உலாவந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.

அங்ஙனம் உலாவரும் காலத்தே, பரமபதத்தின் தலைவனாக விளங்கும் திருமால், அயன், அரன், இந்திரன் முதலியோர் புடைசூழ கருடன் மீதேறி வந்து, விஷ்ணுசித்தருக்கும் அரசனுக்கும் காட்சியளித்தார்.

முதலும் ஈறும் இல்லாத முதற்பொருள் ஆகியவரும், அமரர்கள் அதிபதியும், பரமபதத்தில் சித்தரும் முத்தரும் சேவிக்க விளங்கும் பரம்பொருள் ஆனவரும் பீதாம்பரதாரியுமான பரந்தாமனது எழிலைக் கண்ணுற்ற விஷ்ணுசித்தர், அவனுடைய எழிலுக்கு கண்பட்டுவிடுமோ என்று கவலையுற்றார்.

அதனால் அவன் எழில் நிலை பெற்றிருக்கும் வகையில் பல்லாண்டு பாடி வாழ்த்தத் தொடங்கினார். அவர் அமர்ந்திருந்த யானையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளையே தாளமாக்கி, பல்லாண்டு பாடினார்.

(எப்படி ஒரு குழந்தைக்கு கண்பட்டுவிடுமோ என்று தாயார் அஞ்சுவாளோ அப்படியே, பெருமானையும் எண்ணிய ஆழ்வார்தான் பின்னாளில் தமிழிலக்கியத்தின் முதல் பிள்ளைத்தமிழை பெற்றவர் நிலையிலிருந்து, கண்ணனைக் குழந்தையாக்கிப் பாடினார்…)

பிறகு அவர் அரசனிடமும் செல்வநம்பியிடமும் விடைபெற்றுக் கொண்டு, வில்லிபுத்தூரை அடைந்தார். விட்டுசித்தர் கிழியறுத்துக் கொணர்ந்த பொன்னைக் கொண்டு வடபெருங்கோயிலைப் புதுப்பித்து அதனை அங்குள்ள திருமாலுக்கே ஆக்கினார்.

விட்டுச்சித்தர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால்,  ‘பெரியாழ்வார்’ என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர். இவர், கண்ணனது திரு அவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்தப் பாசுரங்கள் நானூற்று அறுபத்தொன்று. திருப் பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு. ஆக, பெரியாழ்வாரால் பாடப்பட்ட பாசுரங்களில் எண்ணிக்கை நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள்  ‘பெரியாழ்வார் திருமொழி’ என்று, திவ்விய பிரபந்தத்தில் முதலில் அமைக்கப்பட்டுள்ளது.

பெற்றோரால் விட்டுசித்தர் என்று வழங்கப்பட்ட இவருக்கு வழங்கும் வேறு பெயர்கள்: 1. பெரியாழ்வார், 2. பட்டர்பிரான், 3. ஸ்ரீவில்லிப்புத்தூர்கோன், 4. கிழியறுத்தான், 5. புதுவைக்கோன்…

பெரியாழ்வாரின் பாடல்கள் பெரும்பாலானவை மிக எளிதாகப் புரியக் கூடியவை. அன்பும், பாசமும், பரிவும், கவிதைத் திறமும், காதலும் கொண்டு கண்ணனின் குழந்தைப் பருவத்தை அனுபவித்துப் பாடியவை. பெரியாழ்வார் அனுபவித்து அருளிய பாசுரங்களின் சுவையை இங்கே நாம் கொஞ்சம் அனுபவிப்போம்.

பெரியாழ்வாரின் திருமொழிக்குத் தனியனாக பாண்டிய பட்டர் அருளியவை இந்த வெண்பாக்கள்.

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாம்உடைய பற்று.

பொருள்: முன்பு ஒரு நாள் வேதங்களின் விழுப்பொருள் கூறி, பரம்பொருள் யாரென பாண்டியர்க்கும் சபைக்கும் இந்த உலகுக்கும் உரைத்து, விரைந்து பொற்கிழியினை அறுத்த அந்தப் பெரியாழ்வார் என்றும், வில்லிபுத்தூர் என்றும் இந்தத் திருநாமங்களைச் சொல்வதனாலே கீழ்மையான நரகத்தை நாம் அடையும் வழியை, அந்தப் பாவத்தை நாம் அறுத்து விட்டோ மாவோம்.

பெரியாழ்வார் தம் திருமொழியில் முதல் பாசுரமாகப் பாடியிருப்பதே, பெருமானுக்கான பல்லாண்டுதான். அதனால்தான், இந்த நாலாயிரமும் எம்பெருமானின் குணநலங்களையும் அவன் தன்மைகளையும் பெருமைகளையும் சொல்வதாயினும், அவனை வாழ்த்துகின்ற இந்தப் பல்லாண்டுப் பாசுரங்களை, நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் முதல் பாசுரமாக வைத்தார் இதனைத் தொகுத்த நாதமுனிகள். காரணம் பல்லாண்டுப் பாசுரங்கள் அவ்வளவு முக்கியமானதும் வேதக் கருத்துக்கு ஒப்பானதும் ஆகும்.

எப்படி வேதத்துக்கு ஓம் என்பது முதல் ஒலியாக அமைந்து வேதத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறதோ, அதுபோல் பல்லாண்டு, இந்தத் தமிழ் வேதத்துக்கு என்பது மணவாள மாமுனிகளின் கருத்து.

கோது இலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கு எல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் — வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கு எல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால். (19)

உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்?
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்? — தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய்கலையில்
பைதல் நெஞ்சே ! நீ உணர்ந்து பார். (20)

-மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலையில் பல்லாண்டு பாசுரங்களின் சிறப்பை அறியலாம். திருப்பல்லாண்டுக்கும் பெரியாழ்வாருக்கும் ஒப்புமை எதுவும் இல்லை என்பது மாமுனிகள் கண்ட முடிவு.

இந்தப் பல்லாண்டில் ஆழ்வார் என்னவெல்லாம் வாழ்த்துகிறார்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படை போர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே!

– என்று, முஷ்டிகன், சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்ற உன் திருத்தோள்களின் பலத்தை நிறுவியவனே உனக்குப் பல்லாண்டு என்று தொடங்குகிறார். தீமையை வென்று உலகைக் காப்பவன் எவனோ அவனே பல்லாண்டு நின்று உலகைக் காத்தருள வேண்டும்; எனவே, ஒன்றின் அழிவின் முடிவில் ஒன்றின் ஆரம்பம் இருக்கிறது; அழிவு – அதர்மத்துக்கு. தொடக்கம் – தர்மத்துக்கு. திவ்வியப் பிரபந்தத்தின் முதல் கருத்தே இப்படி அமைந்து, பிரபந்தம் முழுவதற்குமான ஆழ்பொருளை அறிவிக்கிறது.

மேலும் என்னவெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் – பகவானின் சிவந்த திருவடிகள், பகவானுக்கும் பக்தனுக்குமான பிரிவிலாத தொடர்பு, அவன் வலத் திருமார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி, வலக் கரத்தில் ஒளியுடன் திகழும் சுதர்சனச் சக்கரம், யுத்தத்தில் புகுந்து முழங்கி தீயோர் மனத்தைக் கலங்கடிக்கும் பாஞ்சஜன்யச் சங்கு ஆகியன.

அடுத்த பாசுரங்களில்,  ‘அடியார்களே, நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து பெருமானுக்குப் பல்லாண்டு கூறுங்கள், அவன் நல்ல மனத்தைச் சிந்தியுங்கள், எம்மோடு கூடி வாய்விட்டுப் பாடுங்கள், ஓம் நமோ நாராயணாய என்று கூறுங்கள்’ என்று அடியார்களுக்குச் சொல்கிறார்.

சங்கச் சத்வம் சம் வதத்வம் சம்வோ மனாம்ஸி ஜானதாம்

-என்று, எல்லோரும் ஒரு சங்கமாக ஒன்று கூடுங்கள்; ஒன்றையே பேசுங்கள்; ஒன்றையே மனத்தால் சிந்தியுங்கள் என்று ரிக் வேதசாகை சொல்வதை பெரியாழ்வார் பாசுரம் நினைவுபடுத்துகிறது.

இன்றைய நாட்களில், கோயிலுக்கோ அல்லது பஜனை சம்பிரதாயக் குழுக்களோ வரும் பெரும்பாலானோரும் அங்கு வழங்கப்படும் பிரசாத உணவுக்காக அலைமோதுவதைப் பார்க்கிறோம்.

பக்திதான் முதலில் இருக்கவேண்டும், அதன் பிறகே மற்றதெல்லாம் என்பதற்காக, இப்படி வருபவர்களைப் பார்த்து பெரியாழ்வார் சொல்லும் வார்த்தை இதுதான்… அது – கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவில் புகுதலொட்டோம்… என்பது. சோற்று வாழ்வுக்காக பிறர்க்கு அடிமைப்பட்டிருப்பீராயின் எங்கள் கூட்டத்திலே சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்கிறார் ஆழ்வார்.

இப்படி பன்னிரண்டு பாசுரங்களால் பெரியாழ்வார் பல்லாண்டு பாடுகிறார். அதன் பிறகு வருபவை, தமிழின் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகப் போற்றப்படும் பிள்ளைத் தமிழின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் பெரியாழ்வார் திருமொழிப் பாசுரங்கள். இங்கே பாட்டுடைத் தலைவனாக கண்ணனைக் கொண்டு, பிள்ளைத் தமிழுக்கே உரிய இலக்கணங்கள் அமையப் பெற்று பாடியுள்ளார். ஆயின், பெரியாழ்வாரின் திருமொழிக்குப் பிறகே பிள்ளைத் தமிழ் வகையறா தமிழில் வந்தது என்பர்.

ஆழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழில் கண்ணன் பிறந்தது முதற்கொண்டு நிகழ்பவை அழகிய பாசுரங்களாக வடிவெடுத்துள்ளன. முதலில் இருப்பவை, கண்ணன் திரு அவதாரச் சிறப்பை உணர்த்தும் ‘வண்ணமாடங்கள்’ பாசுரம். கண்ணன் பிறந்த வைபவத்தை நந்தகோபன் மாளிகையில் எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்கிற மகிழ்ச்சியை இந்தப் பாசுரத்தில் தெரிவிக்கிறார்…

ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே. (2).

இங்கே கண்ணன் பிறந்ததால் உண்டான ஆய்ப்பாடியின் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. ஆய்ப்பாடி மக்கள் மகிழ்ச்சியால் ஓடுவார்கள், பின் வழுக்கி விழுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள், நம் தலைவன் கண்ணன் எங்கே என்று தேடுவார்கள், பறைகள் கொட்ட நின்று ஆடுவார்கள்… இப்படியாகக் கொண்டாட்டம் மிகுந்து ஆய்ப்பாடி விளங்கியது.

அடுத்து கண்ணனின் அடி முதல் முடி வரையான திருமேனி அழகு ஆழ்வாரால் அனுபவிக்கப்படுகிறது –  ‘சீதக் கடலுள்’ இருபது பாசுரங்கள் மூலம்! அதன் பின்னே குழந்தைக்கு தாலாட்டு. குழந்தையைத் துயில் கொள்ள வைத்தற்காக பெரியாழ்வார் பாடுபவை. அதற்கேற்ப ராகத்தோடு அழகுற அமையப் பெற்ற பாசுரங்கள். தாலப் பருவம் – கண்ணனைத் தொட்டிலிட்டுப் பாடுவது …

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே. தாலேலோ…

– என்று கண்ணனுக்கு மிக உயர்ந்த அணிகளை அணிவித்து, தாலாட்டுப் பாடி உறங்க வைக்கும் வகையிலான பாசுரங்கள். பிறகு அம்புலிப் பருவம். இங்கே பெரியாழ்வார் தானே கண்ணனை வளர்த்தெடுக்கும் யசோதையாக மாறிப் போனார்.

கண்ணனை யசோதையாகிய தன் இடுப்பில் வைத்துக்கொள்கிறார். அப்போது, பேசும் பொற்சித்திரமாக வளர்ந்து விட்ட குழந்தை கண்ணன் வானத்து அம்புலியைக் கைநீட்டி அழைக்கிறான். அந்த மழலைச் சொல்லில் மனம் பறிகொடுத்து, அன்னை யசோதையாகிய பெரியாழ்வார் சந்திரனை வருமாறு அழைக்கிறார்…

சக்கரக் கையன் தடங் கண்ணால் மலர விழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக் காட்டும் காண்
தக்கது அறிதியேல் சந்திரா. சலம் செய்யாதே
மக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்.

– என்று, சக்கரம் ஏந்திய கை கொண்ட கண்ணன் தன் அகன்ற விழிகளால் மலர விழித்து உன்னையே பார்க்கிறான். என் ஒக்கலை மேலிருந்து (இடுப்பில் அமர்ந்து கொண்டு – ஒக்கலை என்ற இந்தச் சொல்லை, இடுப்பு என்னும் பொருளில் எங்கள் நெல்லை வட்டாரச் சொல்லாக இப்போதும் கேட்டு வருகிறேன். நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ் பாடிய புலவர் தம் ‘வாராதிருந்தால் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்; தேரார் வீதி வளம் காட்டேன்…’ என்ற பாடலிலும், ஒக்கலை என்ற இந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்)   ‘உன்னைச் சுட்டிக்காட்டும் இக்குழந்தையின் விருப்பத்துக்காக நீ வா…. நீ என்ன பிள்ளை பெறாத மலடனா? இல்லையே! குழந்தையின் ஆசைதான் உனக்குத் தெரியுமே! தக்கது அறிந்தாயாகில் வா’ என்று அழைக்கிறார்.

அடுத்து செங்கீரைப் பருவம். கண்ணன் தன் தலையை நிமிர்த்தி, முகத்தை அங்கும் இங்கும் அசைத்து ஆடும் விளையாட்டு. கண்ணனின் சிறப்புகளைச் சொல்லி, கண்ணா என் மனம் மகிழ, உன் காதுக் குண்டலங்கள் அசைந்து ஆடும் வண்ணம் உன் திருமுகம் ஆட்டு. அந்த அழகினை அனுபவிக்க வேண்டும்.

கைகொட்டி விளையாடும் சப்பாணிப் பருவம் அடுத்து வருவது. இப்போது குழந்தைக் கண்ணன் சற்று வளர்ந்து முகம் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருக்கிறான். அவனிடம், மாணிக்கக் கிண்கிணி ஒலிக்க உன் கைகளைக் கொட்டி முகம் சிரித்து விளையாடும் அந்த விளையாட்டை நான் காண வேண்டும் என்று வேண்டுகிறார்.

இப்போது தளர் நடைப் பருவம். கண்ணன் தளர்நடையிட்டு வளரும் பருவத்தில் இருக்கிறான்.  ‘கலகலவென்று சிரித்து மகிழ்ந்தபடி, என் முன்னே நின்று முத்தம் கொடுக்கும் கண்ணன் வாயிலிருந்து உமிழ்நீர் ஓடி வழிகிறது. திருமகள் மார்பன் மேக வண்ணனைப் பிள்ளையாகப் பெற்ற எனக்கு தன் வாயமுதம் தந்து என்னைத் தழையச் செய்கிறான். தன்னை எதிர்க்கும் பகைவர்களுடைய தலைகள் இவன் தளர் நடவானோ?’  என்று இந்தப் பருவத்தேயும், அவன் பெருமை சொல்கிறார்.

தளர்நடையிட்டு வந்த கண்ணன் தன் தளிர் பாதங்கள் மண்ணில் பதிய, கீழே விழுந்துவிடாதபடி வேகமாக ஓடி வருகிறான். இங்கே யசோதைத் தாய் அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் ஓடி வந்து விழுந்து அணைத்துக் கொள்ள வேண்டுமாகப் பிரார்த்திக்கிறார், அச்சோப் பருவத்தில்!
முன்னே ஓடிவந்து அணைத்துக் கொண்ட கண்ணன், இப்போது பின்னேயும் ஓடி விளையாடும் அளவுக்கு வளர்ந்து விட்டான். அவன் யசோதையின் முகம் திரும்பிப் பார்க்கும் முன்னரே குடுகுடுவென ஓடிச் சென்று பின்னே மறைகிறான். பின், தாயின் பின்புறத்தே வந்து, அவளைக் கட்டிக் கொள்கிறான். இது  ‘புறம் புல்கல்’ பருவத்தில் கண்ணனின் விளையாட்டு.
இப்படி புறம் வந்து நின்ற கண்ணன் சும்மாயிருந்தானோ! தன் தளிர்க்கரங்களால், ஓம்மா! யாரென்று சொல்லேன்ஔ என்று அன்னையின் கண் பொத்தி, பின் தன் கண்பொத்தி பூச்சி காட்டி விளையாடுதல் அடுத்த பருவம்.

குழந்தை அங்குமிங்கும் ஓடி, கண்ணைப் பொத்தி விளையாடிக் கொண்டே இருக்கிறான். இப்படி விளையாடும் அவனுக்கு பசிக்குமே. அன்னை தாய்ப்பால் உண்ண அந்தக் குழந்தைக் கண்ணனை அழைக்கிறாள்.  ‘திரு உடைய வாய் மடுத்துத் திளைத்து உதைத்துப் பருகிடாயேஒ என்றும், முத்து அனைய முறுவல் செய்து மூக்கு உறிஞ்சி முலை உணாயே’  என்றும் வேண்டிக்கொள்கிறாள் – தாய்ப்பால் அருந்த அழைக்கும் இந்தப் பருவத்தில்!

அடுத்து,  ‘காது குத்துதல்’.  ‘கேசவ நம்பீ, உன்னைக் காது குத்த ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்; அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்…’ – பெரியாழ்வார் அடைக்காய் என்றது வெற்றிலை பாக்கு. அதைத் தயாராக வைத்திருக்கிறேன். காதுகுத்த வேண்டும் அருகே வா என்று அழைக்கிறார். இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பன்னிரண்டு திருநாமங்களையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லி மகிழ்கிறார்.

குழந்தையை நீராட அழைக்கும் நீராடல் பருவம் அடுத்தது.  ‘வெண்ணெய் அளைந்த குணுங்கும்’  என்ற இந்தப் பாசுரங்களில், குழந்தையின் மனநிலையை எடுத்துக்காட்டும் சொற்கள் நிறைய உண்டு. உதாரணத்துக்கு ஒன்று.

கறந்த நற்பாலும் தயிரும் கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே.
சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய்.

– என்று, கண்ணா, நீ பிறப்பதற்கு முன்புவரை கறந்து வைத்த பாலும் தயிரும் உறியில் அப்படியே இருக்கும். ஆனால் நீ பிறந்த பின் நான் அதை முழுதாக எடுத்து உபயோகித்ததில்லை. ஏனென்றால் அதை நீயே பதம் பார்த்துவிடுகிறாய். ஆனால் இதை நான் பிறர் முன் வெளியிட்டால் உன் மதிப்பு வெளியாரிடத்தே குறைந்துபோகும். இந்தப் பழிச் சொல் கேட்டால் உன் மனம் வேதனைப்படும். நான் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால்தானே இப்படிச் சொல்லப் போகிறேன். நான் மறந்தும்கூட யாரிடமும் பேசமாட்டேன், வருத்தமுறாமல் நீ நீராட வா என்று அழைக்கிறாள் அன்னை யசோதை.

கண்ணன் கேசத்தை வாருவதற்காக காக்கையை வா என்று அழைப்பதும், கன்றுகளின் பின்னே மேய்க்கப் போகும் கண்ணனுக்கு கோல் கொண்டு வா என்று காக்கையைக்கேட்டுக் கொள்வதும் தொடர்ந்து வரும் பாசுரங்களில்…

அடுத்து வாசமுள்ள பூக்களைச் சூட்டிக்கொண்டு மலர் மணம் வீசும் மேனியோடு வலம் வர அவனுக்கு விதவிதமான பூக்களைச் சூட அழைக்கிறார் யசோதை.  ‘ஆனிரை மேய்க்க நீ போதி’ பாசுரங்களில். இங்கே, ஆழ்வாரின் பாசுரங்களில் உவமைகள் பெருக்கெடுத்து வருகின்றன. ‘கருவுடை மேகங்கள் கண்டால், உன் கண்ணைக் கண்டது போல் இருக்கும்’ என்பது அவற்றில் ஒன்று. இந்தப் பாசுரங்களில் வகைவகையான பூக்களைச் சுட்டிக்காட்டுகிறார், நந்தவனக் கைங்கர்யம் செய்து வந்த பெரியாழ்வார்.

கண்ணன் அழகினை ஊரார் எல்லாம் கண்டு கண் எச்சில் பட்டுவிட்டது; அதாவது கண்திருஷ்டி பட்டுவிட்டது. மேலும் பலரோடு அவன் சேர்ந்து விளையாடுவதால், அவர்கள் தீமைகள் அவனுக்கும் உண்டாகும். அதனால் திருஷ்டி சுற்றிப்போட (நல்ல தமிழில் சொன்னால், திருவந்திக் காப்பிட) கண்ணனை அழைக்கிறாள்.

அதன் பின் வரும்  ‘கண்ணன் பிள்ளை விளையாட்டை முறையிடுதல்’ என்ற இந்தப் பாசுரங்களில் கண்ணனின் பால லீலைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. கண்ணனின் குறும்பு விளையாட்டைத் தாங்கவொண்ணாத ஆய்ச்சிமார் எல்லோரும், தாய் யசோதையிடம் கண்ணனின் குறும்புகளைச் சொல்லி முறையிடுகிறார்கள். ஆய்ச்சிகள், கண்ணனின் தீம்புகளைக் கூறிக்கொண்டு யசோதையிடம் வருகிறார்கள். அவர்களுக்கு சமாதானம் சொன்ன அன்னை, அடுத்து அவனுக்கு முலைப்பால் கொடுக்க அஞ்சுகிறாள். அது, அவன் குழந்தையல்ல, தெய்வம் என்று அறிந்ததால் ஏற்பட்ட ஞானத்தால்.

கண்ணன் வளர்ந்துவிட்டான். அவனுக்கு கன்றினைக் காத்துவரும் தொழிலைப் பணிக்கிறாள் யசோதை. பின் அவனை அதற்கு அனுப்பியதற்காக வருந்துகிறாள்… அவனுக்கு என்ன துன்பம் நேருமோ என்று அஞ்சுகிறாள். ஆனால் மாலையில் அவன் கன்று மேய்த்து புண்சிரிப்புடன் வருவது கண்டு மனமகிழ்வு கொள்கிறாள்.

இப்படி கன்று மேய்த்து வரும் கண்ணன் அழகினைக் கண்டு கன்னியர் காமுறுகிறார்கள். – இவை தொடர்ந்து வரும் பாசுரங்களில் அனுபவிக்கப்படுகிறது.

கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்ததும், அவன் புல்லாங்குழல் ஊதுவதும் அதன் சிறப்பும் அதன்பின் வரும் பாசுரங்களில் பேசப்படுகிறது. இப்படி பெரியாழ்வாரால் பிள்ளைத் தமிழ் இலக்கியம் முதலில் வித்தூன்றியது.

தொடர்ந்து வரும் பாசுரங்களில் பெரியாழ்வார் தன்னை கண்ணனின் தாயான யசோதை நிலையிலிருந்து மாறி, கண்ணனின் மாமியார் நிலைக்குச் சென்றுவிடுகிறார். தன் மகள் கண்ணனின் நினைவாகவே இருப்பதையும், அவளின் இளமை கண்டு இரங்குவதையும், தொடர்ந்து ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று எம்பெருமானகளைப் பாடுவதாகவும் பாசுரங்கள் அமையப் பெற்றுள்ளன.

பெரியாழ்வார் சமூகத்துக்குச் சொல்லும் அறவுரைகளாக சில உள்ளன. அவற்றில் ஒன்று – எம்பெருமானின் பெயர்களையே குழந்தைகளுக்குச் சூட்டுங்கள் என்பது. அவற்றில் ஒரு பாசுரம்…

நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேர் இட்டால்
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேர் இட்டு அழைத்தக்கால்
நம்பிகாள்! நாரணன் தன் அன்னை நரகம் புகாள்

– என்பது. விளக்கமே தேவைப்படாததும் இந்த நூற்றாண்டிலும் நம்மால் புரிந்து கொள்ளக்கூடியதுமான தமிழ் இது. அதுதான் பெரியாழ்வார் பாசுரங்களின் பலம். சீர் இளமைத் தமிழின் சிறப்பு என்றும் சொல்வோமே!

***

பெரியாழ்வார் வாழி திருநாமம்!

நல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே!
நானூற்று அறுபத்து ஒன்றும் நமக்கு உரைத்தான் வாழியே!
சொல்லரிய வானிதனில் சோதிவந்தான் வாழியே!
தொடை சூடிக் கொடுத்தாளைத் தொழுந்தமப்பன் வாழியே!
செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்புற்றான் வாழியே!
சென்று கிழியறுத்து மால் தெய்வம் என்றான் வாழியே!
வில்லிபுத்தூர் நகரத்தை விளங்க வைத்தான் வாழியே!
வேதியர் கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே!

 

குறிப்பு:

திரு. செங்கோட்டை ஸ்ரீராம், பத்திரிகையாளர்.

.

திருமாலின் திருவடி அம்சம்

-செங்கோட்டை ஸ்ரீராம்

 

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

நம்மாழ்வார்

(திருநட்சத்திரம்: வைகாசி – விசாகம்)

பாண்டிய நாடு தாமிரபரணி நதியால் வளம் பல பெற்று மலர்ச்சியோடு திகழும் பூமி. அந்த தாமிரபரணி நதிக்கரையில் திருக்குறுகூர் திருத்தலம், சிறப்புறத் திகழ்ந்தது. அவ்வூரின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக ஒரு கதையும் விளங்குகிறது. அந்தக் கதை…

தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஒரு யோகி இருந்தார். அவர் அன்புடன் ஒரு நாயை வளர்த்து வந்தார். நாள்தோறும் அந்த நாய் வைணவப் பெரியவர் வீடுகளின் முன் கிடக்கும் எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு திரும்பி வரும். இவ்வாறு இருக்கும்போது ஒருநாள் வழக்கம்போல் திருநகரிக்குச் சென்ற நாய் வெகு நேரம் வரையில் திரும்பி வரவில்லை. அதனால் மனம் வருந்திய அந்த யோகி, பொருனையாற்றின் வடகரையில் நின்று தென்கரையிலிருக்கும் திருநகரியினை நோக்கி அந்த நாயின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நாய் நட்டாற்றில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஆற்றில் பெருவெள்ளம் சூழ்ந்துவிட்டது. அவ் வெள்ளத்தை எதிர்த்து நாய் ஆனமட்டும் நீந்திக் கரையைக் கடக்க முயன்றது. ஆனால் வெள்ளத்தை அதனால் கடக்க முடியவில்லை. வெகு நேரத்துக்குப் பிறகு அதன் கால்களும் ஓய்ந்துவிட்டன. அது நீரில் மூழ்கி மேலே வந்தது. வயிறு நிறைய ஆற்று நீரையும் குடித்து விட்டது.

அதனால் நாயின் மண்டை வெடித்தது. அந்த மண்டையின் வழியே நாயின் ஆத்மா பேரோளியுடன் எழுந்து விண்வெளி நோக்கிச் சென்றது. அதைக் கண்ட யோகி பெரும் வியப்படைந்தார். நாய் வீடுபேறு பெற்றதை எண்ணினார். ‘எதனால் அதற்கு வீடுபேறு கிடைத்தது?’ என்று சிந்தித்தார். ஆழ்வார் திருநகரியில் வாழும் வைணவர்கள் சாப்பிட்ட இலையிலிருந்த மீதத்தை உண்டதால்தான் அந்த நாய்க்கு இந்த அரும்பெரும் பேறு கிடைத்தது என்பதை முடிவில் உணர்ந்தார். அதனால் அவர் மனம் உருகி கண்களில் நீர் மல்கியது.

வாய்க்கும் குருகை திருவீதி எச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய் அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் இடமளித்தால் பழுதோ? பெருமான் மகுடம்
சாய்க்கும் படிக்கு கவிச்சொல்லு ஞான தமிழ்க்கடலே!

– என்று இந்தச் சிறப்பு உண்டாகக் காரணமான நம்மாழ்வாரைப் போற்றி பல பாடல்களைப் பாடிப் பணிந்தார். அது முதல் நம்மாழ்வார் மீது ஆராக் காதலும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். முடிவில் நம்மாழ்வாரின் அருளால் அந்த யோகியும் பரமபதம் அடைந்தார்.

இவ்வளவு பெருமை அந்தத் தலத்துக்கு வரக் காரணமாக அமைந்தவர்தான் சுவாமி நம்மாழ்வார்.

திருக்குருகூரில் வேளாண் குலத்தில் பிறந்த பொற்காரியார் என்னும் திருமகள்நாதனின் தொண்டர் ஒருவர் புகழ் பல பெற்று வாழ்ந்து வந்தார். அவர் முற்பிறவியில் செய்த தவப் பயனால், அவருக்கு காரியார் என்று ஒரு மகவு பிறந்தது.

காரியார் மணப் பருவம் அடைந்தார்.  திருவண்பரிசாரத்தில் வாழ்ந்துவந்த திருவாழ்மார்பரின் அருந்தவச் செல்வி உடையநங்கையை இவருக்கு மணம் புரிவிக்க எண்ணினார் பொற்காரியார். திருவாழ்மார்பரிடம் தம் எண்ணத்தைச் சொல்ல, அவரும் அதுகேட்டு மகிழ்ந்து, அவ்வாறே செய்வோம் என்றார்.

நல்லதொரு மங்கல நாளில் காரியாருக்கும் உடையநங்கைக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. அவர்கள் இல்லறத்தை மகிழ்வுடன் தொடங்கினார்கள். மனமொருமித்த காதல் தம்பதியாக வாழ்ந்து வந்தார்கள். ஆண்டுகள் சில சென்றன. ஆயினும் அவர்களுக்கு குழந்தைச் செல்வம் மட்டும் கிட்டவில்லை.

அதனால் வருத்தத்தில் ஆழ்ந்திருந்த காரியாரும் உடையநங்கையாரும் ஒரு குழந்தைக்காக மிகவும் ஏங்கினார்கள். ஒருமுறை, காரியார், மனைவியோடு மாமனாரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு, திருவண்பரிசாரத்திலிருந்து திருக்குருகூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திருக்குறுங்குடியை அடைந்து, அவ்வூரில் கோயில் கொண்டுள்ள மலை நம்பியைக் கண்டு வணங்கினார். அவருடைய உள்ளத்தில் மழலைச் செல்வம் பற்றிய துக்கம் மேலிட, நம்பியைப் பலவாறாகப் போற்றினார்.

‘எம்பெருமானே! எங்களுக்கு எல்லாச் செல்வமும் அளித்த நீ மழலைச் செல்வத்தையும் அளித்து அருள் புரிய வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். பிறகு அவர்கள் இருவரும் அன்றிரவு ஓரிடத்தில் படுத்து உறங்கினார்கள்.

அன்று இரவு, அத்தம்பதியின் கனவில் திருக்குறுங்குடி நம்பி தோன்றி, ‘உங்களுக்கு நம்முடைய அம்சமாக ஒரு மகன் பிறப்பான்’ என்று கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்து எழுந்ததும், அவர்கள் தங்கள் கனவைக் குறித்து ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தனர். பின்னர் திருக்குறுங்குடி கோயிலை அடைந்து, நம்பியை வணங்கிப் பலவாறு துதித்து, பின் திருக்குருகூரை அடைந்தார்கள்.

பரந்தாமன் அவர்களுக்கு அருளியவாறே, சேனை முதலியார் அம்சமாக, உடையநங்கையாருக்கு ஒரு மகவைப் பிறக்கச் செய்தார். ஆழ்வாராக சேனைமுதலியார் அங்கு அவதரிப்பதற்கு முன்பே, பெருமாளின் பஞ்சணையான ஆதிசேஷன் அவ்வூரின் பெருமாள் கோயிலில் வடபுறத்தில் ஒரு புளியமரமாகத் தோன்றியிருந்தார். நம்மாழ்வார் அவதரித்ததுமே, நம்பியெம்பெருமாள் அவர் மனையினுள் அருள் வடிவமாகப் புகுந்து, அவருக்கு ஞானமென்னும் தெய்வீகப் பாலை ஊட்டி மறைந்தார்.

ஞானப் பாலமுது உண்ட அந்தப் பச்சிளம் குழந்தை அரங்கப் பெருமானின் திருவடி ஒன்றினையே தன் உள்ளத்தில் நிலைநிறுத்தி, தாயின் முலைப்பால் அருந்தாமலும் அழாமலும் கண் திறவாமலும் கண்ணிமை மூடியபடியே அசைவற்றுக் கிடந்தது. ஆயினும் உடலில் வாட்டமுறாமல், பொலிவு குன்றாமல் திவ்விய ஒளியோடு திகழ்ந்தது. காரியாரும் உடையநங்கையாரும் தங்கள் குழந்தை அவ்வாறு இருப்பதைக் கண்டு வருத்தினார்கள். தான் பெற்ற பிள்ளை தன்னிடம் பால் அருந்தவில்லையே; வாய் திறந்து அழவில்லையே; கண் திறந்து பார்க்கவில்லையே – என்று உடையநங்கையின் உள்ளம் பெரிதும் ஏங்கித் தவித்தது.

‘பெருமாளே நமக்கு மகனாகப் பிறப்பதாக நம் கனவில் சொன்னார்! ஆனால், இந்தக் குழந்தை இப்படிக் கண் திறவாமல் கிடக்கிறானே?’ என்று காரியாரின் உள்ளம் கரைந்தது.

தம்பதி தங்கள் குழந்தையைத் தூக்கிச் சென்று குருகூரின் சங்கணித்துறையுடைய தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் திருக்கோயில் கொண்ட பொலிந்து நின்ற பிரானின் திரு முன் கிடத்தினார்கள்.

அந்தப் பெருமானை வணங்கி, ‘பகவானே! எல்லாம் உன் செயல்’ என்று மனம் தேறினார்கள். பிறகு அப்பெருமாளை வணங்கி,  ‘மாறன்’ என்று தங்கள் மைந்தனுக்குப் பெயரிட்டு, தொட்டிலில் குழந்தையைக் கிடத்தி தாலாட்டினார்கள். பின்னர் குருகூர் திரும்பி, எம்பெருமானின் திருவருளை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அதேநேரம், வைகுந்தத்தில் திருமால் தம் சேனைத் தலைவரான சேனைமுதலியாரிடம் ‘நம் ஆழ்வாருக்கு உபதேசம் செய்துவிட்டு வருக’ என்று பணித்தார். சேனை முதலியார் அவ்வாறே திருக்குருகூர் சென்று, பிறர் அறியாதவாறு பாலகனான மாறனுக்கு தத்துவப் பொருட்களை விளக்கிக் கூறினார்.

பாலகனான ஆழ்வாரும் எல்லா உண்மைப் பொருட்களையும் நன்குணர்ந்துகொண்டு, ஆதிப்பிரான் சந்நிதியின் வடபுறத்தில் ஆதிசேடன் உருவமாக நிற்கும் புளியமரத்தடிக்குத் தவழ்ந்து சென்று அமர்ந்தார் (ஆழ்வார் திருநகரியில் பழைய புளியமரம் இன்றும் இருப்பதைக் காணலாம்).

பரந்தாமனின் முகத்தையன்றி வேறு எதிலும் விழியேன் என்று கண்களை மூடிய வண்ணம், எதையும் உண்ணாமலும் அருந்தாமலும் பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் ஆழ்ந்திருந்தார்.

குழந்தைகள் பிறந்ததும் இவ்வுலகப் பிறவி பந்தத்தைப் பிணைப்பதற்காக, சடம் என்ற வாயு குழந்தைகளிடம் சேர்ந்து விடுவது உலக இயல்பு. ஆனால் இவர் தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த சட வாயுவைக் கோபித்து விரட்டி, முன் உணர்வோடு விளங்கி, பிறவி பந்தச் சுழலை வென்றுவிட்டார் என்பதால் இவர் ‘சடகோபர்’ எனப்பட்டார்.

சடகோபரோ பிறவித் தளைகளிலிருந்து விடுபட்ட ஆத்மாவாகி பரந்தாமனான பரமாத்மாவிடமே உள்ளுறைந்து வாழ்ந்தும் சஞ்சரித்தும்,  பரமாத்மாவை எல்லா விதத்திலும் அனுபவித்து வந்தார். நம்மாழ்வார், திருமாலின் திருவடி அம்சம் என்றும்  சொல்லப் படுவதுண்டு. அதனால்தான் பெருமாள் சந்நிதிகளில் பக்தர்களின் தலையில் வைத்து ஆசிர்வதிக்கும் சடாரியை ‘சடகோபம்’ என்கிறார்கள்.

அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மாறன் என்பதே. அவர் காரியாருடைய மைந்தர், ஆகையால் அவரைக் ‘காரிமாறன்’ என்றும் கூறுவார்கள். பெருமாளின் பிரசாதமான மகிழ மாலையை இவர் சூடியதால்  ‘வகுளாபரணர்’ என்றும் அழைப்பார்கள். தம் பாசுரங்களால் புறத் தத்துவங்களை ஓட்டியதாலும், அங்குசத்தால் பரமனாகிய களிறு தம் வசமாகும்படி செய்ததால் இவரை  ‘பராங்குசர்’  என்றும் அழைப்பர். திருமகள்நாதன் அவரை  ‘நம்மாழ்வார்’ என்று கூறி சிறப்பித்ததால் வைணவர்கள் அனைவரும் அவரிடம் கொண்ட அன்பினால்  ‘நம்மாழ்வார்’ என்று குறிப்பிட்டு வந்ததால், அந்தப் பெயரே நிலைபெற்று விளங்கியது.

நம்மாழ்வாரைப் பற்றிய குரு பரம்பரைக் கதைகள் சில உண்டு.

திருக்கோளூரைச் சேர்ந்தவர் மதுரகவியார். அவருக்குத் தென் திசையில் ஒருநாள் திவ்விய ஜோதி ஒன்று பளீர் எனத் தெரிந்தது. அதற்கான காரணம் புரியாமல் மதுரகவியார் தவித்தார். அப்படியே அந்த திவ்விய ஜோதியைப் பார்த்தவாறே, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு இடமாக வந்தார். கடைசியில், அந்த ஜோதி திருக்குருகூரில் ஒரு புளிய மரத்தடியில் நிலை கொண்டது. அங்கே ஒளிபொருந்திய மௌனக் குழந்தையாக இருந்த நம்மாழ்வாரைப் பார்த்தார். அவருக்கு உண்மை புரிந்தது. இருந்தாலும் அதையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. உடனே அந்தக் குழந்தையை நோக்கி கை தட்டிப் பார்த்தார். ‘சுவாமி’ என்று விளித்துப் பார்த்தார். பதில்தான் ஏதுமில்லை. பின்னர் ஒரு பெரிய கல்லைத் தூக்கிப் போட்டு, அதிக சப்தம் எழுப்பி, ஆழ்வாரை எழுப்பினாராம் மதுரகவியார்.

பின்னர் அவருடைய ஞானத்தை அறிய எண்ணி,  ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலாக, ஆழ்வார் முதன்முதலாக வாய்திறந்து,  ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்’ என்றாராம். இந்த பதிலைக் கேட்ட மதுரகவியாருக்கு, ஆழ்வாரின் ஞானநிலை புரிந்தது. அவரையே தன் குருவாக மனதில் சிந்திக்கத் தொடங்கினார்.

மதுரகவியாருக்கும் நம்மாழ்வாருக்கும் நடந்த இந்த உரையாடலில் பெற்ற கேள்வி- பதிலின் உள்ளர்த்தம் மிக ஆழமானது. ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய கேள்வி அது. அதாவது ஓர் ஆத்மா எந்த உடலை அடைகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் வடிவத்துக் கேற்ற இன்ப துன்பங்களை அனுபவித்துக்கொண்டு அப்படியே இருக்கும் என்பதை விளக்குகிறது.

மதுரகவியின் கேள்விக்கான நேரடியான விளக்கம் இதுதான். அவர் கேட்டது, உயிர் தோன்றும்போது அந்த உயிரானது எதை அடைந்து, அனுபவித்து எங்கே கிடக்கும் என்பது… அதற்கு நம்மாழ்வாரின் பதில் – அந்த உடம்பின் தொடர்பாக வரக்கூடிய பண்புகளைத்தான் கொள்ள முடியும் என்பது.

ஒருநாள் நம்மாழ்வார் மதுரகவியாரை நோக்கி,  ‘இறைவனை அடைவதற்கு உரிய வழியைக் காட்டும் பாமாலைகளைப் பாடப்போகிறோம். அவற்றைப் பட்டோலையில் எழுதுங்கள்’ என்று கூறியருளினார். மதுரகவியாழ்வாரும் அவ்வாறே செய்யலானார்.

‘மகாத்மாவே! மேவினேன் அந்தப் பரந்தாமனின் பொன்னடி மெய்மையை’ என்றார் மதுரகவியார். அவர் விருப்பத்தை சடகோபர் நிறைவேற்றினார். அதன்பின்னர், மதுரகவியார் நம்மாழ்வார் சொல்லச்சொல்ல பாடல்களை பட்டோலையில் எழுத விழைந்தார்.

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் மீது காதல் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உருவகப்படுத்திக்கொண்டு, நம்மாழ்வார் பாடினார்…

இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்த வாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல் வண்ணா கடியை காண் என்னும்
வட்டவாய் நேமி வலம் கையா என்னும்
வந்திடாய் என்று என்றே மயங்கும்
இட்டனே செழுநீர்த் திருவரங்கத் தாய்
இவள் திறந்து என் சிந்தித்தாய்.

பொருள்: கால் கைகளை அசைக்க முடியாமல் இட்டகால் இட்டபடியே இருக்க இந்தப் பெண் இருக்கின்றாள். வைத்த கை வைத்தபடியே இருக்கும்; எழுந்து வாய் பேச முடியாமல் மயங்கி நிற்கும்; கைகூப்பி வணங்கி நிற்கும்; காதல் என்றால் கஷ்டமே என்று மூர்ச்சிக்கும்; கடல் வண்ணனான திருமாலே நீ மிகவும் கடுமையானவன் பார் என்று சொல்லும்; வட்டமான கூர்மை பொருந்திய சக்கரப் படையை வலக்கரத்தில் ஏந்தி இருப்பவனே என்று சொல்லும்; என்னிடம் வந்துவிடு என்று சொல்லி மயங்கி நிற்கும் இந்தக் காதலியின் திறத்தில் என்னதான் சிந்தித்தாய்?… – என் இஷ்டனே காவேரி சூழ் திருவரங்கத்துள்ள திருமாலே! – என்ற கருத்தமைந்த பாசுரத்தைப் பாடினார்.

இதைக் கேட்ட பரந்தாமன், தன்னை சேவித்து மகிழும் ஆழ்வாருக்குத் தன்னருள் புரிய எண்ணி, திருமகளுடன் சங்கு சக்ரதாரியாக கருட வாகனத்தில் தோன்றி, அவருக்கு சேவை சாதித்து மயர்வறு மதிநலம் அருளினார். சடகோபர், அக்கருணையை எண்ணி மனம் கனிந்தார். பாமாலைகள் பாடலானார்.

மதுரகவியாழ்வாரை முன்னிட்டு ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரங்களைத் தமிழில் பாட எண்ணி,  ‘திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி’ ஆகிய நான்கு தமிழ் வேதங்களாகப் பாடியருளினார். அவற்றை மதுரகவியாழ்வார் முதலானவர்களெல்லாம் கற்றுத் தேர்ந்து பேரருள் பெறும்படி உலகுக்கு வழங்கினார்.

நம்மாழ்வார் திருக்குருகூரில் திருப்புளிய மரத்தடியிலே வீற்றிருந்தபோது, திவ்வியதேசப் பெருமாள் திருத்தலங்களில் உள்ள எம்பெருமான்களெல்லாம் அங்கு வந்து நம்மாழ்வாரின் திருமுகம் பார்த்துச் சென்றார்கள். அவர் இவ்வுலகில் முப்பத்தோராண்டு காலம் புளிய மரத்தடியில் வீற்றிருந்து பரமாத்மாவிடமே உள்ளுறைந்து, மாலடியார் தெய்வீகத் தேனமுதாம் பாமாலை அமுதுண்ணுதற்காகப் பாடி, பரமபதம் சேர்ந்தார்.

ஸ்ரீவைணவ தத்துவத்தை நம்மாழ்வார் நிலை நாட்டியதால்  ‘குலபதி’ என்று கூறி உன்னத நிலையில் கொண்டாடுகிறார்கள். திருமாலுக்கு ஆட்பட்ட அவர், தம்மை திருமாலின் பெரிய திருவடிகளே என்று குறிப்பிட்டிருந்ததால், அவரை பெருமாளின் பெரிய திருவடியாகவே வைணவர்கள் பாவித்து, பிற்காலத்தில் அவருடைய திருமேனி உருவையும் பெருமாள் கோயில்களில் வைத்துப் போற்றி பூஜித்து வரலானார்கள்.

வைணவக் குரவர்களை ஆழ்வார்கள் எனவும், ஆசார்யர்கள் எனவும் இருவகையாகப் பிரித்துக் கூறுவார்கள். ஆனால் நம்மாழ்வாரோ அவ்விரு வகையிலும் சேர்ந்தவர். பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வாரை   ‘அவயவி’ என்றும், மற்ற ஆழ்வார்களை அவரின் அம்ச அவதாரங்களான ’அவயவங்கள்’ என்றும் குறிப்பிடுவார்கள்.

வைணவர்கள் பிரபந்தத்தையோ அல்லது பூஜை செயல்களைச் செய்யத் தொடங்கும்போதோ இந்த சுலோகத்தைச் சொல்வது வழக்கம். அது வைணவ குரு பரம்பரையைச் சொல்வது. வைணவ ஆசார்யரான கூரத்தாழ்வார் அருளிச் செய்த இந்த ஸ்லோகத்தில் குரு பரம்பரையைப் பற்றிச் சொல்கிறார்:

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

வைணவர்கள் போற்றும் ஆசார்யர்களில், ஸ்ரீமந் நாராயணன், மகாலட்சுமித் தாய், சேனை முதலியார் எனப்படும் முதல் மூன்று ஆச்சார்யர்களும் பரமபதத்தில் இருப்பவர்கள். இதில் மூன்றாவதாகக் குறிப்பிட்ட சேனை முதலியாரின் அம்சமாகவே நம்மாழ்வார் அவதரித்தார் என்பதால் அவரும் ஆசார்ய பரம்பரையைச் சேர்ந்தவராகிறார்.

இதில் நான்காவதாகக் குறிப்பிடப்படும் நாதமுனிகள், நம்மாழ்வாரின் திருவாய்மொழி விஷயமாக அருளிச்செய்த சுலோகம் இது.

பக்தாம்ருதம் விச்வ ஜநாநுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம் |
ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம் ||

பொருள்: ஆயிரம் சாகைகளாக விரிந்து உபநிஷதங்களுக்கு சமானமாக விளங்கும் – சடகோபர் அருளிச் செய்த – இந்தத் திருவாய்மொழி, திராவிட வேதக் கடலாகும்; இந்த பக்தி அமுதத்தை உலக மக்களுக்காக அவர் அளித்தார் என்பதைத் தெரிவிக்கிறார்.

திருவாய்மொழி சம்பந்தமாகவும் நம்மாழ்வார் விஷயமாகவும் ஆசார்யப் பெருமக்கள் அளித்துள்ள எளிய வெண்பாக்கள் சிலவற்றை இங்கே காணலாம்…

ஈச்வரமுனிகள் அருளிச்செய்தது:

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், – அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து.

சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது:

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை அல்லாது இறைஞ்சேன், – தனத்தாலும்
ஏதும் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச்செய்தது:

ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுச முனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன் -ஆய்ந்த
பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும் 
பேராத வுள்ளம் பெற.

பட்டர் அருளிச்செய்தவை:

வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், – ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமா னுசன்.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் -தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.

பட்டர் அருளியபடி, மதிள் அரங்கர் வண்புகழ் மேல், தமிழ் மறைகள் ஆயிரம் அருளிச் செய்த ஈன்ற முதல் தாய் சடகோபனாகிற நம்மாழ்வார். அதைப் பாராட்டி சீராட்டி வளர்த்த இதத்தாய் – செவிலித்தாய் ராமானுஜர் என்று காட்டுகிறார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியை சாமவேதத்துக்கு ஒப்பாகச் சொல்வார்கள். அதன் அடிப்படையில் பார்த்தால், சாமவேதம் என்பது இசையும் சேர்ந்த ஒன்று என்பதால், இந்தத் திருவாய்மொழிப் பாசுரங்களும் இசையோடு பாடுவதற்கு இனிதாக அமைந்திருக்கும்.

அதனால்தான் பட்டர் இங்கே  ‘யாழினிசை வேதத்து இயல்’ என்று இயலும் இசையும் கலந்த தெய்வீகத் தேனமுதாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியைப் பாடுகிறார்.

மகாகவி கம்பர் ராமாயணம் பாடப் புகுந்தபோது முதலில் நம்மாழ்வாரைத் துதித்து  ‘சடகோபர் அந்தாதி’ பாடியிருக்கிறார். அந்தச் சுவையான சம்பவம் இது.

மகாகவி கம்பர், ராம கதையைத் தமிழில் பாட விரும்பி வால்மீகியின் ராமகீர்த்தியையும் இன்னும் சில ராமாயணங்களையும் புராணங்களையும் வடமொழிப் புலவர்கள் மூலம் ஆராய்ந்து தமக்கென ஒரு தனி வழி வகுத்துக் கொண்டு, தமிழில் கம்ப ராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் பதினைந்தே நாளில் இயற்றி முடித்தார்.

தான் இயற்றிய அந்த ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் சந்நிதியில் அரங்கேற்ற ஆசை கொண்டார் கம்பர். ஆனால் அதற்கு பல தடங்கல்கள் எழுந்தன. தடை பல தாண்டி, அவர் ஸ்ரீரங்கம் சென்று வைணவ சமய ஆசார்யராக அப்போது வீற்றிருந்த ஸ்ரீமந் நாதமுனிகளிடம் அனுமதி கேட்டார். அவர் அனுமதியளித்த பின்னே, ஆலயத்தினுள் ஒரு மண்டபம் எழுப்பி நல்லதோர் நாளில் தம் ராமாயணத்தை அரங்கேற்ற முனைந்தார் கம்பர். ஆனால் அப்போதும் ஏதோ தடங்கல். கம்பர் அரங்கநாதனை மனமுருகப் பிரார்த்தித்தார். ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கம்பரின் கனவிலே‘ எம்மைப் பாடினாய் அன்றி நம் சடகோபனைப் பாடினாயோ? அவனையும் பாடினால்தான் உன் ராமாயணத்தை நாம் ஏற்போம்!’ என்று கூறினார்.

அதனால் கம்பர் நம்மாழ்வாரான சடகோபர் மீது நூறு பாக்களால் சடகோபர் அந்தாதியை இயற்றினார். அதன் பிறகே அவருடைய ராமாயணம், நாதமுனிகளின் முன்னிலையில், அரங்கநாதப் பெருமான் ஆலயத்தில் தாயார் சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் அரங்கேறியது.
அப்போது, தாயார் சந்நிதி முன் இருந்த மேட்டு அழகிய சிங்கப் பிரான் சப்தம் எழுப்பிச் சிரித்ததாகவும் ஒரு செய்தி உண்டு. இந்த மண்டபம், இன்றும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் என்று அரங்கநாயகித் தாயார் சந்நிதி முன்னால் உள்ளது.

கம்பர் தம் சடகோபர் அந்தாதியில்  ‘நம்மாழ்வாரே எனக்குக் காப்பு’ என்று சொல்லி ஒரு காப்புச் செய்யுள் படைத்து அந்தாதியைத் தொடங்கினார். அந்த துதிப்பாடல்…

தருகை நீண்ட தயரதன் தான் தரும்
இருகை வேழத்தி ராகவன் தன் கதை
திருகை வேலைத் தரைமிசைச் செப்பிடக்
குருகை நாதன் குரைகழல் காப்பதே.

-இந்தக் காப்புச் செய்யுளார் நம்மாழ்வாரின் பெருமையைப் போற்றிக் கொண்டாடுகிறார் கம்பர்.

இதன்பிறகு வைணவர்கள் நூல் இயற்றத் தொடங்கும்போது முதலில் நம்மாழ்வாருக்குத் துதி கூறும் வழக்கம் உண்டானது.

கம்பரின் சடகோபர் அந்தாதியில் நம்மாழ்வாரின் பெருமை பலவாறாகப் பேசப்படுகிறது. அதில் ஒரு சம்பவம்…

நம்மாழ்வாரின் சிறப்புகளை விருது கூறிக்கொண்டு மதுரகவியார் அவருடைய விக்கிரகத்தை எழுந்தருளச் செய்துகொண்டு வீதியுலா வருவார். அப்போது மதுரைச் சங்கத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

நம்மாழ்வாரின் பெருமையைப் பறைசாற்ற, ‘கண்ணன் கழலிணை’ என்னும் ஒரு பாசுரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மதுரை சங்கத்தைச் சேர்ந்த புலவர்களுடன் வாதுக்குச் சென்றார் மதுரகவியாழ்வார். அப்போது நம்மாழ்வாரின் அந்த ஒரு பாடலுக்கு சங்கப் பலகை இடம் தந்து மற்றவர்களைக் கீழே தள்ளியது (இந்த நிகழ்ச்சியை மதுரகவியாழ்வாரின் சரித்திரத்தில் விரிவாகப் பார்க்கலாம்).

இந்த நிகழ்ச்சியை கம்பர் தம் சடகோபர் அந்தாதியில் சிறப்புறக் காட்டுகிறார்.

தமிழிலக்கியத்தில் மிக மிக உயர்வான கருத்துகள் நம்மாழ்வாரின் பாசுரங்களில் பரவலாக இடம் பெற்றிருக்கின்றன.

நம்மாழ்வார் தனக்காகப் பாடாது, உலக மக்களின் நலனுக்காக எம்பெருமானிடம் அவர்கள் சார்பில் ஒரு விண்ணப்பம் செய்கிறார்…

பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கமும் அழுக்குடம்பும்
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிர் அளிப்பான்
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே

பொருள்: பொய்யான அறிவு; தவறான ஒழுக்கங்கள்; அழுக்கான உடம்பு- இத்தகைய குணங்கள் இனி எங்களுக்கு ஏற்படாதபடியான வாழ்வினைத் தருவாய். வானவர் தலைவனே, அடியேன் செய்யும் இந்த விண்ணப்பத்தைக் கேள் என்று உலக மக்களின் சார்பில் எம்பெருமானிடம் விண்ணப்பம் வைக்கிறார்.

நான்கு வேத சாரம்

வேத காலத்தில் தொகுக்கப்பட்ட நான்கு வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதாதிகளின் சாராம்சத்தை ஆழ்வார் திராவிட வேதமாகிற வகையில், தமிழில் எளியோர்க்காக அருளிச் செய்தார் என்பர். அப்படி, திருவாசிரியத்தை யஜுர் வேதத்தின் சாரமென்றும், திருவிருத்தம் ரிக்வேத சாரம் என்றும், பெரிய திருவந்தாதி அதர்வண வேத சாரமெனவும், திருவாய்மொழி சாம வேத சாரம் என்றும் சொல்வார்கள்.

திருவாசிரியம்

இது ஏழு ஆசிரியப் பாக்களால் அமைந்தது. முதல் பிரபந்தத்தில் ஆழ்வார் தம் சம்ஸார பந்தத்தை நீக்கி திருநாட்டை அருளுமாறு பிரார்த்திக்கிறார். அவ்வாறு செய்தால் மற்ற பிரபந்தங்கள் அவதரிக்க வாய்ப்பு ஏற்படாதே! அதனால் பகவான் ஒரு வழி செய்தார்.

ஆழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்று ஆசைப்படுவது, தன்னை பரிபூரணமாக அனுபவிக்கத் தான் என்பதால், அந்த அனுபவத்தை இந்தப் பூவுலகிலேயே கொடுத்துவிட்டால் என்ன என்று யோசித்து, தன் திருமேனி, குணம் முதலியவற்றை இங்கேயே காட்டி அருளினான். அவ்வண்ணம் அவனை தரிசித்த ஆழ்வார், பரமபதத்தில் பெற வேண்டிய அனுபவத்தை இங்கேயே பெற்றுவிட்ட மகிழ்ச்சியில், அந்த அனுபவத்தை விவரிக்கிறார் இந்தப் பிரபந்தத்தில். இது யஜுர் வேத சாரம் என்று போற்றப்படுகிறது.

திருவாசிரியத்திலிருந்து ஒரு பா…

யாவகை உலகமும் யாவரும் இல்லா
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்
கெல்லாம் அரும்பெறல் தணிவித்து ஒருதான்
ஆகித் தெய்வநான்முகக் கொழுமுளை
ஈன்று முக்கண் ஈசனோடு தேவுபல
நுதலி மூவுலகம் விளைத்த உந்தி
மாயக் கடவுள் மாமுதல் அடியே

-இந்தப் பாசுரத்தில், விஷ்ணு புராணத்தை ஒட்டிய செய்திகளும், அதே நேரம், நவீன காஸ்மாலஜி காட்டும் கருத்துகளும் எழுகின்றன. எந்த வகை உலகமும் உயிரினமும் இல்லாத பாழ் காலத்தில் பொருள்களுக்கு எல்லாம் வித்தாக, ஒரே ஒரு ‘தானா’க, பிரமனையும் ஈசனையும் தேவர்களையும் கொண்டு வந்து, மூன்று உலகங்களையும் உண்டாக்கியது மாயக் கடவுளான திருமாலின் முதல் அடியே!

செக்கர் மாமுகில் உடுத்து மிக்க செஞ்சுடர்
பரிதி சூடி அஞ்சுடர் மதியம் பூண்டு

– என்று மேகத்தையும் சூரியனையும் சந்திரனையும் திருமாலின் உடைகளாக அணிவித்துப் பார்க்கிறார்.

இறுதியில்,

நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிர்ஔத இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலம், நீர், தீ, கடல், சுடர் இரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்த
எம்பெருமானே அல்லாது
ஒருமா தெய்வம் உடையமோ யாமே?

பொருள்: சிவனும், பிரம்மாவும், இந்திரன் முதலான தேவர்களும் எல்லா உலகங்களும், நிலம், நீர், நெருப்பு, காற்று, சூரிய சந்திரர்கள்; நட்சத்திரங்கள் அனைத்திலும், விதிவிலக்கின்றி மறைந்து விரவியிருக்கும் ஆலிலைமேல் தூங்கும் அந்த எம்பெருமானை அல்லாது வேறு தெய்வம் எங்களுக்கு உண்டோ !

திருவிருத்தம்

இதுவே முதல் பிரபந்தம் ஆகும். கட்டளைக் கலித்துறையால் அமைந்த பாக்கள். விருத்த வகையில் அமைந்திருக்கும். திரு என்பது அதன் மேன்மையைக் காட்டும் அடைமொழி. ஆழ்வார் இந்தப் பிரபந்தத்தில், எம்பெருமானிடம் இந்நிலவுலகில் இருப்பு கொண்டிருப்பது தமக்கு மிகவும் பொறுக்க முடியாதபடி இருப்பதாகச் சொல்கிறார். அதனால் சம்சார பந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறு பகவானிடம் விண்ணப்பிக்கிறார். இந்தப் பிரபந்தத்தில் எம்பெருமானாகிய நாயகனிடம் ஆழ்வார் தாம் பெண்மைத் தன்மை அடைந்து பேசுவனவாக இவை அமைந்திருக்கும். இந்தப் பாசுரங்கள் ரிக் வேத சாரமாகும்.

திருவிருத்தத்தில் ஒரு பாசுரம்…

வணங்கும் துறைகள் பலபலவாக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபலவாக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலபலவாக்கி நின்மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரையில்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

பொருள்: வணங்கும் துறைகள் பலப்பலவாக்கி வைத்தாய். எதிர்க் கருத்துகளால் வேறுபடும் – பிணங்கும் சமயங்கள் பலவற்றையும் ஆக்கி வைத்தாய். தெய்வங்கள் பலவற்றையும் நீயே ஆக்கி உன் உருவத்தையே பரவ வைத்திருக்கிறாய். உனக்கு இணை யாரும் இல்லை. அப்படிப்பட்ட உன்மேல் எனக்கு விருப்பம் எழுகிறது.

பெரிய திருவந்தாதி

நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதி முழுவதும் வெண்பாவால் ஆனது. இது, 87 வெண்பாக்களைக் கொண்டது. இதில் தாம் பெற்ற பகவத் அனுபவத்தில் ஆசையானது கட்டுக்கடங்காமல் மேன்மேலும் பெருகியது. அந்த அனுபவத்தை முழுவதும் பெற ஆழ்வார் பெறுவதற்காக ஏங்கும் நிலை இதில் வெளிப்படுத்தப்படுகிறது.  இந்தப் பிரபந்தத் தொடக்கத்தில் ஆழ்வார் தம் நெஞ்சை அழைத்து, தம்முடன் பகவதனுபவத்தில் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறார். இறுதியில் தம் நெஞ்சுக்கு நல்லுபதேசம் நல்கி, இந்தப் பிரபந்தத்தை நிறுவுகிறார். இது அதர்வண வேத சாரமெனப் போற்றப்படுகிறது.

ஆழ்வார் தம் நெஞ்சுடன் பேசிக்கொள்வதான அழகான வெண்பாக்கள் இவை…

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம் – இகழோம்மற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல்நீ தீவினையேம்
எங்கள்மால் கண்டாய் இவை.

பொருள்: சிவந்த கண்களுடைய எங்கள் திருமாலே, உன்னை நாங்கள் புகழ்வோம், புகழமாட்டோம்; பழிப்போம், பழிக்க மாட்டோ ம்; மதிப்போம், மதிக்காமலும் இருப்போம். நீ அதற்காக எங்களைக் கோபித்துக் கொள்ளாதே… உன்னைச் சரியாக எங்களால் புகழவே முடியாது. இது என்ன தீவினை, இது என்ன பிரேமை?… நீ எங்கள் மாலாயிற்றே!

கடவுள் யார் என்பதில் இருக்கும் ஐயத்தை இந்தப் பாசுரத்தில் இப்படித் தெரிவிக்கிறார்…

அவனாம் இவனாம் உவனாம் மற்று உம்பர்
அவனாம் அவன் என்றிராதே – அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தாய்
அவனே எவனேலும் ஆம்

பொருள்: கடவுள் யார் என்பதில் ஐயமா? அது அவனா, இவனா? இல்லை இரண்டு பேருக்கு இடையில் உள்ள உவனா? அல்லது அமரர் லோகத்தில் இருப்பவனா என்றெல்லாம் கலங்க வேண்டாம், உறுதியாக அவன் கண்ணனே எனத் தெளிந்தோம்.

திருவாய்மொழி

இதுவே ஆழ்வாரின் சரமப் பிரபந்தமாம். அதாவது சரணாகதியடைந்து, அவன் திருவடி அடைதலைக் கூறும் பிரபந்தம் எனக் கொள்ளலாம். இது சாம வேத சாரம் என்பர் பெரியோர்.

ஒரு தாய், தன் குழந்தைக்கு எப்படி அஜீரணமாகாத அளவிலும், அதே நேரம், பசியைத் தணிக்கிற வகையிலும் பார்த்துப் பார்த்து பக்குவமாகச் சோறிடுவாளோ, அப்படி பகவானும் தனக்கு பகவத் விஷயங்களிலே ருசியை ஏற்படுத்தியதையும், அந்தப் பரபக்தி, பரஞான, பரம பக்தியாகக் கொண்டு, பக்குவமானதையும், அதன் பிறகு, இந்த உலக சம்பந்தம் அறுத்து வீடுபேறு பெற்றதையும் தெரிவிக்கிறது இந்தப் பிரபந்தம். இதில் சகல சாஸ்திர சாரமாகச் சொல்லப்படும் அர்த்த பஞ்சகமும் சொல்லப்படுகிறது. இறை நிலை, உயிர்நிலை, சரணாகதியாகிற நெறி, ஊழ்வினை, பேறாகிய அந்தம் இல்லாத பேரின்பம் போன்றவை விவரிக்கப்படுகின்றன.

இப்பிரபந்தம் நூறு பதிகங்களாக அமைந்த 1,102 பாசுரங்களைக் கொண்டது.  ஆழ்வார்களில்  நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு மற்றைய அருளிச் செயல்களைக் காட்டிலும் ஏற்றம் அதிகம் உண்டு. திருவாய்மொழிக்குத்தான் வைணவ மரபில் அதிக வியாக்கியானங்கள் உள்ளன.

குருகைப்பிரான் அருளிச்செய்த ஆறாயிரப்படி, நஞ்சீயர் அருளிச்செய்த ஒன்பதாயிரப்படி, பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த இருபத்துநாலாயிரப்படி, நம்பிள்ளை அருளிச் செய்ததை வடக்கு திருவீதிப்பிள்ளை படியெடுத்த ஈடு முப்பத்தாறாயிரப்படி, அழகிய மணவாள ஜீயர் அருளிய பன்னீராயிரப்படி – இப்படிப் பல வியாக்யானங்கள் திருவாய்மொழிக்கு உண்டு என்பது இதன் சிறப்பு.

திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களுக்கும் ஏற்றவாறு அதன் அர்த்தத்தைச் சுருக்கி நூறு வெண்பாக்களால் மணவாள மாமுனிகள் திருவாய்மொழி நூற்றந்தாதியைப் படைத்துள்ளார். இதில், பத்து பாசுரங்களுக்கு ஒரு வெண்பா என்ற வகையில் இந்த நூற்றந்தாதியைப் படைத்துள்ளார். திராவிட வேதம் என்று சொல்லப்படும் இந்தத் திருவாய்மொழியில், வேத உபநிஷதக் கருத்துகள் அனைத்தும் இருக்கின்றன.

திருவாய்மொழியின் முதல் பாசுரத்தில் பகவானின் குணநலன்களைப் பட்டியலிடுகிறார் ஆழ்வார். அவன் குணமற்றவன் என்ற வேற்று மதக் கருத்தை மறுத்து, அவனுடைய குணங்களை இதில் அடுக்குகிறார்.

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயரவற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயர்அறு சுடர் அடி தொழுது எழன் மனனே 1.1.1

பொருள்: தன்னைவிட உயர்ந்த குணங்கள் இல்லாதவன் எவனோ, அறியாமை (மயர்வு) விலக ஞானத்தையும் பக்தியையும் அருளியவன் எவனோ, மறத்தல் (அயர்வு) இல்லாத தேவர்களுக்குத் தலைவன் எவனோ, துயரங்களைப் போக்குகிற அவனது அடிகளை வணங்கி எழு மனமே என்று தெளிவாக்குகிறார்.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே. 1.1.4

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் ரிறையவ ரெனவடி யடைவர்கள்
அவரவர் ரிறையவர் குறைவில ரிறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

பொருள்: அவரே அனைத்தாகவும் இருக்கிறார் என்பதை, 1.1.4 பாசுரத்தில் காட்டுகிறார். அவரவர், தங்கள் தங்கள் அறிவினால் அறியப்படுகிற மற்ற தெய்வங்களைத் தொழுதெழலாம். ஆனால் அவரவர் விதிப்படி அந்தந்த வழியை அடையச் செய்வது அந்த தெய்வங்களினுள்ளும் அந்தர்யாமியாய் நிற்கும் திருமாலே.

திடவிசும்பு எரிவளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுதுமாய் அவை அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே 1.1.7

பொருள்: திடப்பொருட்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவை எல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன் அவன். அவற்றில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வெளியேயும் வியாபித்திருக்கிறான். வேதத்தில் உள்ளவன். இவையெல்லாம் உண்டவனும் இவனே. பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருட்களிலும் சாரமாக விரவியிருப்பவன். இந்தக் கரந்தெங்கும் பரந்துளன் என்ற வார்த்தைதான் பகவத் ராமானுஜருக்கு ஸ்ரீபாஷ்யம் எழுதும்போது கைகொடுத்தது என்பர் பெரியோர்.

இந்தப் பாசுரம், முதல் பத்தின் சிகரம் போன்றது.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவம் இவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

பொருள்: அவன் உண்டு என்று சொன்னால் உண்டு. இல்லை என்று சொன்னால் இல்லை. இருக்கிறான், இல்லை என்னும் இரண்டு நிலைகளையும் உடையதாலே உருவமுள்ளவைகளும் உருவமற்றவைகளும் பெருமானின் ஸ்தூல, சூட்சும சரீரமாகக் கருதப்படும். இவ்விரண்டு தன்மைகளோடு எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் உள்ளவன் அவனே!

இரண்டாம் திருவாய்மொழியில் உள்ள பாசுரங்கள்…

வீடுமின் முற்றவும்
வீடுசெய்து உம்முயிர்
வீடுடையானிடை
வீடு செய்ம்மின்னே!

எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள். அப்படி விட்டுவிட்டு உங்களுடைய உயிரை சொர்க்கத்தில் உள்ளவனிடை ஒப்படைத்து விடுங்கள்.

மின்னின் நிலையில
மன்னுயிர் யாக்கைகள்
என்னுமிடத்து இறை
உன்னுமின் நீரே.

மின்னலைக் காட்டிலும் நிலையற்றது நம் உடல். இதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இறை எண்ணம் தானாய் உள்ளே புகும்.

நீர் நமது என்றிவை
வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன்
நேர்நிறை யில்லே

நான் எனது என்கிற அகங்கார மமகாரங்களை வேரோடு மாய்த்து இறைவனைச் சேருங்கள். அதற்கு ஈடானது வேறு எதுவும் இல்லை.

இல்லதும் உள்ளதும்
அல்லதும் அவன் உரு
எல்லையில் அந்நலம்
புல்கு பற்றற்றே

இருப்பது, இல்லாதது, அல்லாதது எவையுமே அவன் உருவம்தான். எல்லையில்லாத பேரானந்தத்தை பற்றுகளை அறுத்து ஏற்றுக்கொள்க.

அற்றது பற்றெனில்
உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே

பற்றுகளை அற்றுப்போகச் செய்தால், வீடுபேறு நிச்சயம். அதற்கு இறைப் பற்று என்ற ஒன்றினைப் பற்றுக என்கிறார் ஆழ்வார்.

இவ்விடத்து திருவள்ளுவரின்,

பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றை
பற்றுக பற்று விடற்கு

– என்னும் குறள் ஒப்புமைப்படுத்துகிறது.

-இப்படி திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரங்களும் அவற்றின் உள்ளர்த்தங்கள் நவீன தத்துவங்களை ஒட்டியவாறு விரிவடைந்துகொண்டே செல்லும்…

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழியெழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழியெழ உலகம் கொண்டவாறே

-திருவாய்மொழியின் (7-4-1) இந்தப் பாசுரம், பிரபஞ்சத்தின் ஆரம்பக் கணத்தை விவரிக்கிறது. முக்கியமான சிருஷ்டித் தத்துவங்களைச் சொல்கிறது. முதலில் சக்கரம் எழுந்தது. பின் சங்கம், வில், கதை, வாளும் எழுந்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் வாழ்த்துக்கள் எழுந்தன. பிரபஞ்சம் எனும் முட்டை (மோழை) உடைந்தது. அதிலிருந்து தலையும் பாதமும் எழுந்தன. காலம் எழுந்தது; உலகம் வந்தது.

இப்படிக் கடவுள் தன்னைத்தானே சிருஷ்டித்துக் கொள்ளும் சிருஷ்டி தத்துவம் ஆழ்வாரால் விளக்கப்படுகிறது. நம்மாழ்வாரும் பெண்மையடைந்து, கண்ணனை மோகித்துப் பாடும் பாசுரங்கள் ஏராளம். தான் பராங்குச நாயகியாகி கண்ணனை மோகித்துப் பாடும் பாசுரங்களில், உருக்கமான சூழ்நிலை நிலவுவதை நாம் உணர்ந்தறியலாம்.

இங்கே இவள் கண்ணனை நினைத்தவாறே ஏங்கிக் கிடக்கிறாள். அப்போது, கண்ணன் பகவத்கீதையில் கூறியதை எண்ணிப் பார்த்தவளாய், அவன் சொன்னவற்றை மொழிகிறாள்…

ஆழ்வார் காட்டும் இந்தப் பாடல்தான் கீதையின் மையமான சிந்தனை.

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக்கொலோ
கடல் ஞாலத்தீர்க்கு இவை என் சொல்கேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றனவே

பொருள்: நீரையும் நிலத்தையும் செய்தது நானே; அது ஆவதும் நான், அதைக் கொண்டதும் நான், அதைப் பிளந்ததும் நான், உண்டதும் நான் என்று கண்ணன் சொன்னவற்றை இவளும் மொழிகிறாள். கண்ணன் வந்து இவள் மனத்தே புகுந்ததால் அன்றோ என் மகள் இப்படிப் பேசுகிறாள்…

நம்மாழ்வாரின் பாசுரங்கள் இப்படி வேதத் தத்துவங்களை அழகுத் தமிழில் கொண்டு இலங்குகின்றன. அவை திராவிட தேசத்தின் பக்திச் செழுமையையும் இலக்கிய வளமையையும் என்றென்றும் பறைசாற்றி இப்பூவுலகில் நிலைத்திருக்கும்.

***

நம்மாழ்வார் வாழி திருநாமம்!

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே!
ஆசிரியம் ஏழு பாட்டு அளித்தபிரான் வாழியே!
ஈனம் அற அந்தாதி எண்பத்தேழு ஈந்தான் வாழியே!
இலகு திருவாய்மொழி ஆயிரத்து ஒருநூற்றிரண்டு உரைத்தான் வாழியே!
வான் அணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே!
வைகாசி விசாகத்தில் வந்து உதித்தான் வாழியே!
சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே!
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே!
திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே!
திருவான திருமுகத்துச் செவி என்னும் வாழியே!
இருக்கு மொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே!
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே!
கருக்குழியில் புகாவண்ணம் காத்தருள்வோன் வாழியே!
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே!
வருத்தமற வந்து என்னை வாழ்வித்தான் வாழியே!
மதுரகவி தம்பிரான் வாழி வாழி வாழியே!

.

குறிப்பு:

திரு. செங்கோட்டை ஸ்ரீராம் பத்திரிகையாளர்.

.

சக்கரத்தின் அம்சமாக அவதரித்தவர்

-செங்கோட்டை ஸ்ரீராம்

திருமழிசையாழ்வார்

(திருநட்சத்திரம்: தை-மகம்)

(பிப். 5)

 

பொருட்களை வேண்டுமானால் துலாக்கோலில் எடைபோடலாம்; ஆனால் ஒரு ஊரையே துலாக்கோலில் நிறுக்க முடியுமா?

முடிந்திருக்கிறதே… நம்மால் முடியாது, ஆனால் பிரமன் நினைத்தால் முடியுமல்லவா? ஆம். இது நடந்ததாகச் சொல்லப்படுவது வேத காலத்தில்.

பிருகு, அத்திரி மகரிஷி, வசிஷ்டர், பார்க்கவர் போன்ற முனிவர்கள் பூமிக்குச் சென்று தவமியற்ற வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் என்னவென்றால், தாங்கள் தவமியற்றும் இடம் பகவான் விஷ்ணுவால் அவருடைய மகிமையால், உலகிலேயே மிகச் சிறந்த தலமாக இருக்க வேண்டும் என்பது தான்!

முனிவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்றார்கள். தங்கள் எண்ணத்தைத் தெரிவித்தார்கள். பிரமன் ஒருகணம் யோசித்தான். பிறகு இதுதான் அந்தத் தலம் என்று சொல்லி, திருமழிசைத் தலத்தைச் சுட்டிக் காட்டினான். ஆனால் அதை முனிவர்கள் நம்ப வேண்டுமே?  “தேவனே இது எந்த வகையில் உலகிற் சிறந்த தலம் என்கிறீர்கள்?”  என்று கேட்டார்கள்.

பிரம்ம தேவன் உடனே இந்தத் தலத்தை நிறுத்துக் காட்டிவிடுகிறேன் என்று சொல்லி, ஒரு துலாக்கோலில் ஒரு தட்டில் மற்ற எல்லாத் தலங்களையும் வைத்து, இந்தத் திருமழிசைத் தலத்தை மற்றொரு தட்டில் வைத்து எடை போட்டுக் காட்டினார். ஆச்சரியப்படும் விதத்தில், மற்ற எல்லாத் திருத்தலங்களையும் சேர்ந்த தட்டைவிட கனத்தால் அதிகரித்து திருமழிசைத் தலம் இருந்த தட்டு மட்டும் கீழே தாழ்ந்து இத்தலத்தின் பெருமையை உயர்த்திப் பிடித்தது.

மறுகணம் தேவர்கள் சந்தோஷ மிகுதியால் ஆர்ப்பரித்து,  “பிரம்மதேவனே, இந்தத் தலத்தையே நாங்கள் எங்கள் தவத்துக்கு ஏற்ற இடமெனத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்” என்று சொல்லி பூரிப்படைந்தனர். இந்தத் தலமே  ‘மஹிசாரண்யம்’ என்று பெயர் பெற்று, பின்னர் திருமழிசை என்று பெயர் பெற்றது.

பிரம்ம தேவன் இந்தத் தலத்தை துலாக்கோலில் எடைபோட்டு இதன் பெருமையை உணர்த்திய செய்தியை, திருக்கச்சி நம்பிகள் தம்முடைய ஒரு வெண்பா மூலம் சுட்டிக்காட்டுகிறார்:

உலகு மழிசைய முள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க – உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசை திருத்தலத்தில் உள்ள ஆலயத்தில் ஒரு சிலா உருவம் இந்தக் கதையைச் சொல்லும் வண்ணம் உள்ளது.

மேற்கண்ட இந்தப் பாடலில் புலவர் என்று திருக்கச்சி நம்பிகள் குறிப்பிடும் பிரம்ம தேவன் துலாக்கோல் ஏந்தி நிற்கும் காட்சியைச் சித்திரிக்கும் அந்த உருவம் இந்தக் கதையைச் சொல்லும்.

அதுசரி, ஏன் அனைத்து திவ்ய தேசங்களைக் காட்டிலும் இந்தத் தலம் உயர்ந்தது என்று பிரம்மதேவன் காட்டினான் என்றால், அது அந்த மண்ணில் ஒரு மகானின் அவதாரம் நிகழப் போவதைக் காட்டத் தான் என்பது புரியும்.

ஸ்ரீமந் நாராயணின் மனத்துக்கு உகந்த இடமாகவும் மாறிப் போனதற்குக் காரணம் இங்கு அவரையே சொன்னபடி கேட்கச் செய்த ஒரு பிள்ளை அவதரிக்க இருப்பதன் காரணத்தால் தான்.

அந்தப் பிள்ளை, பெருமாளுக்கே மிகப் பிரியமான பிள்ளை. அந்தப் பிள்ளை சொன்னதெல்லாம் பெருமாள் மனமுவந்து கேட்டு நடந்திருக்கிறார்.  “பெருமாளே உன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்  என்றால் பெருமாளும் சுருட்டிக் கொண்டு அவரோடு நடந்திருக்கிறார். பின்னர், பழையபடி  “பைந்நாகப் பாய் விரித்துக் கொள்” என்றால், தந்தையான அவர் அந்தப் பிள்ளையின் சொற்படி கேட்டு அப்படியே செய்திருக்கிறார்.

அப்படி படுத்துக் கொண்டிருந்த பெருமாளைப் பார்த்து ஓரிடத்தில்,  “என்ன பெருமாளே,  வந்தது கூடத்தெரியாமல் நீர் அப்படியே படுத்துக் கொண்டிருக்கிறீரே?”  என்று செல்லமாகக் கேட்க, அவரும் பிள்ளையின் சொல்லுக்காக எழுந்திருந்து அவருடன் பேசவும் செய்திருக்கிறார்.

இப்படியெல்லாம் மகிமைகளை நடத்திக் காட்டிய அந்தப் பிள்ளைதான், திருமழிசை திருத்தலத்தில் அவதரித்த திருமழிசையாழ்வார்.

***

பிரம்ம தேவன் மூலம் இந்தத் தலத்தின் சிறப்பைக் கேட்டறிந்த பார்க்கவர் முதலிய சில முனிவர்கள் அந்தத் தலத்தில் வந்து தவம் செய்யலாயினர். பார்க்கவ முனிவர் திருமாலை நோக்கி தீர்க்கசத்திர யாகம் புரிந்தார். அந்த நேரத்தில் தான், கந்தர்வப் பெண்ணான அவருடைய மனைவியார் கருவுற்று தைத் திங்களில் மகம் நாளில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு இடைப் பகுதியில்) ஒரு பிள்ளையைப் பெற்றார்.

கைகால்கள் இல்லாது பிண்ட உருவில் அந்தப் பிள்ளை பிறந்தது. அதனைக் கண்ட முனிவரும் அவரது மனைவியாரும் மிகுந்த வருத்தமுற்றார்கள். வேறு வழியின்றி அப்பிள்ளையைப் பிரம்புப் புதர் ஒன்றின் கீழ் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

பகவானின் அருளால், அந்தப் பிண்ட உருவத்தில் இருந்து, சுயமாக ஓர் அழகிய குழந்தை உருப்பெற்று வெளிவந்தது. அந்தக் குழந்தைக்கு உணவு தர வேணுமே! அதற்கும் நாராயணனே வழி செய்தான். ஞான சம்பந்தருக்கு அன்னை உமையாளே அமுதூட்டியதுபோல், இந்தக் குழந்தைக்கு நேரே ஒரு தேன்கூட்டை வைத்து, அந்தக் குழந்தையின் பசியைப் போக்கினார் லட்சுமி சமேதராக அங்கு வந்த நாராயணன்.

அந்தத் தெய்வீகத் தேனருந்தி வளர்ந்த காரணத்தால் தான் பின்னாளில் தேனினும் இனிய சந்தப் பாக்களை அவர் இயற்றித் தந்திருக்கிறார் போலும்!

இப்படித் தேனுண்டு பசி தீர்ந்த அந்தப் பிள்ளையை, பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் பிரம்பு அறுத்துப் போவதற்காக அங்கே வந்தபோது கண்டான். தன்னந்தனியாக அழகான குழந்தை ஒன்று அந்தப் பிரம்புப் புதரில் அழுவதைக் கண்டதும் பரிவோடு அள்ளியெடுத்தான்.

அந்தக் குழந்தையின் பெற்றோர் பக்கத்தில் எங்கேனும் இருக்கின்றனரா என்று சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். யாரும் கண்ணில் தட்டுப்படாததால், பிள்ளையில்லாத தன்னுடைய குறையைத் தீர்ப்பதற்காகவே இறைவன் இக் குழந்தையைக் கொடுத்தருளியிருக்கிறான் என்று எண்ணி, பெருமகிழ்வோடு வீட்டுக்கு எடுத்துச் சென்றான். தன் மனைவியான பங்கயச்செல்வியிடம் குழந்தையைக் கொடுத்து, அந்தக் குழந்தை கிடைத்த விவரத்தையும் கூறினான்.

“நம்முடைய குறை இன்றே தீர்ந்தது. இந்தக் குழந்தைதான் எத்தனை அழகுடன் இருக்கிறது. இனி நாம் பிறந்ததன் பயனை அடைந்தவர்களானோம்” என்று குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தான். ஆனால் குழந்தை எதுவும் உண்ண மறுத்தது.

பங்கயச்செல்வி தாய் உள்ளத் தவிப்போடு பால் புகட்ட முயன்றும் குழந்தை அப்பாலைக் குடிக்க மறுத்தது. அந்த அறியாப் பருவத்திலேயே உணவின் மீதான பற்றைத் துறந்தது. பங்கயச்செல்விக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. அந்தக் குழந்தையோ வெகுநாள் வரை பால் உண்ணாமலும் சிறுநீர் கழிக்காமலும் அப்படியே இருந்து வந்தது. திருவாளனும் அவன் மனைவியும் மனம் வருந்தினர்.

அந்தக் குழந்தை பால் உண்ணவில்லையே தவிர, அதன் மேனி சிறிதும் வாட்டமடையவில்லை! பூரண வளர்ச்சியோடு மேன்மேலும் பொலிவுற்றது. அதைக் கண்டு அவர்களிருவரும் பெரும் வியப்படைந்தார்கள். இந்தச் செய்தி ஊர் மக்களுக்குப் பரவியது. அவர்கள் ஒவ்வொருவரும் வந்து அந்தக் குழந்தையைப் பர்த்துவிட்டு  “இது தெய்வக்குழந்தை”  என்று போற்றிச் சென்றார்கள்.

திருமழிசை இறைவன் அருளால் தோன்றிய அந்தக் குழந்தையை ‘திருமழிசைப் பிரான்’ என்ற பெயராலேயே கூப்பிட்டுக் கொண்டாடினார்கள்.

திருமழிசையில் ஞானியராக வயதான தம்பதி ஒருவர் இருந்தனர். தாழ்குலத்தில் பிறந்திருந்தாலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அந்தப் பெரியவர்கள், திருமகள் நாதனான ஸ்ரீமந் நாராயணன் மீது நீங்காத பக்தி செலுத்தி வந்தனர். அவர்களுக்கும் பிள்ளையில்லாக் குறை இருந்தது.

பால் உண்ணாத அதிசயக் குழந்தையைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்ட அவர்கள், உடனே பசுவின் பாலை இனிய சுவை கொள்ளும்படியாகக் காய்ச்சி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்க வந்தனர். குழந்தையைப் பார்க்கப் போகும்போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது என்பதால், கையில் பால் கிண்ணத்தோடு வந்தனர்.

அந்தக் குழந்தையை நோக்கி,  “செல்வமே! இந்தப் பாலைக் குடித்து என் குறையைக் போக்கியருள வேண்டும்” என்று விண்ணப்பித்தனர். அதற்குத் தாம் கொண்டு வந்திருந்த பாலையும் புகட்டினார். குழந்தையும் புன்சிரிப்பு பூத்து அந்தப் பாலை விரும்பி அருந்தியது.

இதைக் கண்ட பங்கயச்செல்வி வியப்புற்றாள். தன் மார்பிலே சுரந்த பாலைக் குடிக்காமல் இவர்கள் கொண்டுவந்த பாலைக் குடிக்கிறதே. சரி, எப்படியாவது இந்தக் குழந்தை ஏதாவது உண்டால் சரிதான் என்று எண்ணிய அவள், தன் கணவரிடம்,  “இனி தினமும் அந்தப் பெரியவரை நம் குழந்தைக்கு பால் கொண்டுவந்து ஊட்டும்படி சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டாள்.

திருவாளனும் அவரிடம்,  “பெரியவரே, நீங்களே நாள்தோறும் எங்கள் குழந்தைக்கு பால்கொண்டுவந்து கொடுத்து எங்கள் மனவருத்தத்தைப் போக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டான். அவரும் அதற்கு இணங்கி அன்றுமுதல் நாள்தோறும் தன் வயதான மனைவியுடன் குழந்தைக்கு காய்ச்சிய பால் கொண்டு வந்து கொடுத்தார். குழந்தையும் புன்சிரிப்போடு பருகி மகிழ்ந்தது.

இப்படியிருக்கையில் ஒருநாள் அம்முதியவர் கொண்டுவந்த பாலில் ஒரு பகுதியை மட்டும் குடித்துவிட்டு சிறிது மீதி வைத்தது. அப்படி எஞ்சிய பாலை அம்முதியவரும் அவருடைய மனைவியும் அருந்தினால் பிள்ளையில்லாக் குறை தீரும் என்று தன் கடைக்கண் குறிப்பினால் அந்தப் பெரியவருக்கு உணர்த்தியது. அவரும் அதுபோலவே தம் மனைவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பாலை அருந்தினார். ஆச்சரியப்படும் விதத்தில், வயது முதிர்ந்த அந்தத் தம்பதிக்கு மீண்டும் புத்திளமை மலர்ந்து, அதன் விளைவாக  மனைவி கர்ப்பம் தரித்தாள்; அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

பெற்றோர் அக்குழந்தைக்கு  ‘கணிகண்ணன்’ என்று பெயரிட்டனர். அக்குழந்தை கணிகண்ணனே திருமழிசைப்பிரானுக்குத் தோழனாகி, பிற்காலத்தில் அவருக்கு சீடனாகவும் விளங்கினார்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் வேறு ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த கண்ணனைப் போல், பார்க்கவ முனிவரின் மனைவிக்கு மகனாகப் பிறந்து, வேடர் குலத்து பங்கயச்செல்விக்கு வளர்ப்பு மகனாகவே வளர்ந்தார் திருமழிசையாழ்வார்.

அவருடைய திருச்சந்த விருத்தத்தில் இப்படி வெளிப்படுத்துகிறார்:

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாவிலும் நவின்றிலேன்

  -என்கிறார்.

இருந்தபோதும், அவர் இயல்பில் முனி குமாரராகையால் வயது ஏழு வந்தவுடனேயே ஐம்புலன் அடக்கி அஷ்டாங்க யோகம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதற்கு இந்த உலகுக்கெல்லாம் மூலகாரணமான பரம்பொருள் யார் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே அத்தகைய பரம்பொருளைத் தியானித்து யோக நிஷ்டையில் அமர வேண்டும்.

எனவே அதற்குரிய வழியை ஆராய்வதற்காக அனைத்து சமய நூல்களையும் தத்துவ நுட்பங்களையும் கற்றுத் தெளிவுற எண்ணினார்.

அதன் அடிப்படையில், சாக்கியம்,  சமண மதங்களின் நூல்களைக் கற்றார். பின் அவற்றை விட்டுவிட்டு, சைவ சமயத்தில் புகுந்து சைவம் தொடர்பான நூல்களை ஆராய்ந்தார். பிறகு   “உலகுக்கெல்லாம் மூலகாரணமான முழுமுதற்பொருள் சிவபெருமானே!”  என்று தீர்மானித்து சைவ சமயத் தத்துவங்களுக்கு ஓர் அவதார புருஷராகவும் மகானாகவும் விளங்கினார்.

ஞான ஒளியும் தெய்வீக அருளும் பெற்று, யோகங்கள் பலவும் புரிந்து சித்தராக மாறினார் திருமழிசைப் பிரான். சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களுக்குச் சென்று, விரிசடையில் பிறைசூடிய முக்கண்ணனை சேவித்தவாறே, திருமயிலைக்கு வந்தார். அங்கே மௌன விரதம் கைக்கொண்டார்.

அந்த நேரத்தில், திருமயிலையில் வைணவரான பேயாழ்வார் ஒரு பூஞ்சோலையில் தங்கியிருந்தார்.  ‘திருமழிசையார் ஒரு மகா யோகி; மா மேதை; சைவர்’  என்று பேயாழ்வார் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார். எனவே சிறப்பு வாய்ந்த திருமழிசையாருக்கு பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் ஆத்மானுபவத்தை போதித்து, அவரை சைவ சமயத்திலிருந்து வைணவத்துக்கு திருத்திப் பணி கொள்ள எண்ணினார் பேயாழ்வார்.

எனவே அவர் திருமழிசையாரை நாடிச் சென்று சமய வாதம் செய்ய அழைத்தார். ஆனால் திருமழிசையாரோ மௌன விரதம் கைக்கொண்டிருந்ததால் அதற்கு இணங்கவில்லை. எனவே பேயாழ்வார் ஒரு யுக்தியைக் கையாண்டார். திருமழிசையாரின் கண்களில் படும்படி, ஓரிடத்தில் செடிகளைக் கொண்டுவந்து நடத் தொடங்கினார். ஆனால் வழக்கம்போல நடாமல், அவற்றின் வேர்களை வானத்தை நோக்கியும், இலைகள் பூமியில் பதியும் படியும் தலைகீழாக நட்டு வைத்தார். பிறகு அறுத்து முடியப்பட்ட கயிற்றில் பொத்தல்கள் உள்ள ஓட்டைக் குடத்தைக் கட்டி, நீர் எடுத்து அச்செடிகளுக்கு ஊற்ற முயன்றார்.

பேயாழ்வாரின் விசித்திரமான செய்கையைக் கண்ட திருமழிசையார் எள்ளி நகையாடினார். உடனே பேயாழ்வார்,  “யோகியாரே, ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நீர் செய்யும் பித்துக்கொண்ட செயலைக் கண்டால் யாவரும் சிரிக்கத் தான் செய்வார்கள்” என்றார் திருமழிசையார்.

“பித்து கொண்ட செயலை யாமோ செய்கிறோம்? பித்தனை வழிபட்டு வெறும் சித்துக்களாலும் யோக வித்தைகளினாலுமே பரம்பொருளை அடைந்துவிட முயலும் நீர் தான் பித்துப் பிடித்தவர்போல் செயல் புரிகிறீர். நான் செடி நடுவதைக் கண்டு பேதைமையால் ஏளனம் செய்தீரே தவிர, அதன் உட்பொருளை உம்மால் உணர முடியவில்லையே! நீரா மறுமையில் முக்தியெனும் பேரின்பத்தை அடைவதற்குரிய வழியை உலக மக்களுக்கு எடுத்துக்காட்டப் போகிறீர்?” என்று கேட்டார் பேயாழ்வார்.

திகைப்பு மேலிட ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தார் திருமழிசைப் பிரான்.  பிறகு அவர்  “மாயனை வழிபடுபவரே, நும் செயலின் உட்பொருள் தான் யாதோ?”  என்று கேட்டார்.

“சிவயோகியாரே, யாம் செய்த செயல் நும் மன நிலையைக் குறிப்பதாகும். அது எவ்வாறு என்பதை விளக்குகிறேன். உம்முடைய மனம் சிறிது காலம் ஒரு மதத்தைச் சார்ந்திருந்தது. அதை விட்டுவிட்டு மற்றொரு மதத்தைப் பற்றிக்கொள்வதையே அறுந்து முடிபோட்ட கயிறு குறிக்கிறது. இந்த ஓட்டைக் குடத்தில் முகக்கும் தண்ணீரெல்லாம் ஒழுகி ஓடிவிடுமல்லவா? அதுபோலவே உம்முடைய மனத்தில் எவ்வித மதக்கொள்கையும் தத்துவ ஞானங்களும் நிலைகொள்ளாமல் பலவாறாக நீங்கி ஓடிவிடுகின்றன. செடிகளைத் தலைகீழாக நட்டது, உலகத்துக்கு ஆதி அந்தம் தெரிந்து கொள்ளாமலே உண்மையான பரம்பொருளை அறிந்து விட்டதாக நினைத்து மயங்கித் தலைகீழாகச் செல்லும் உம்முடைய ஞானநிலையையே குறிப்பதாகும்” என்றார் பேயாழ்வார்.

பின்னர், அனைத்துக்கும் மூல காரணமான பரம்பொருளின் தத்துவம் பற்றி இருவருக்குமிடையே பலவித வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.  “மாலடியாரே! காணுதற்கரிய அந்தப் பரம்பொருளை நீர் கண்டீரோ?” என்று கேட்டார் திருமழிசையார்.

”கண்டேன்; என்னுள்ளேயும் கண்டேன்; எனக்கு வெளியேயும் கண்டேன்; நான்மறையுள்ளும் அவனைக் கண்டேன். அன்றலரும் மலரினுள்ளும் கண்டேன். வீசும் காற்றிலும் கண்டேன். மண்ணிலும் கண்டேன்; விண்ணிலும் கண்டேன். நாமங்கள் பல சொல்லி நாரணனாகி நிற்பதைக் கண்டேன்”  என்றார் பேயாழ்வார்.

“சரி, அவன் எல்லாமாகி எங்குமாகி நின்றாலும், அவன் உருவைக் காண முடியுமா?”  என்று கேட்டார் திருமழிசையார்.

“அவன் உருவமற்றவன் என்றாலும், அவன் உருவமெடுப்பதையும் நான் கண்டேன். நாராயணனாகி நிற்கும் அவன் திருமேனி அழகையும் கண்டேன். திகழும் அருக்கன் நிறங்கண்டேன். அவன் கையில் பொன்னாழியும் வலம்புரிச் சங்கும் கண்டேன். அந்த மணிவண்ணன் குழலூதி மாடு மேய்ப்பதையும் கண்டேன். வாமனனாகி மாவலியிடம் மூவடி நிலம் தானம் கேட்பதையும் கண்டேன். பின் நெடுமாலாகி மூவுலகையும் ஈரடியால் அளந்து மூன்றாம் அடியாக மாவலியின் முடி மீது திருவடி வைப்பதையும் கண்டேன். என் உள்ளத்துள்ளே ஒளிவிளக்கேற்றி வைத்த அந்த மாயனை நான் நாடி நாடி என் மனத்தினுள்ளே வசப்படுத்தினேன். அவன் என் உள்ளத் தாமரையில் புகுந்து நின்றான்; இருந்தான்; கிடந்தான்… அவன் அடி சேர்ந்து வாழும் வகையையும் யானறிந்தேன்”  என்று, பேயாழ்வார் உள்ளம் உருகி அவன் தரிசனம் கண்ட விதத்தை எடுத்துரைத்தார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த திருமழிசையாருக்கு மெய் சிலிர்த்தது. அனைத்துலகத்துக்கும் ஆதிமூலமான பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணனே என்பதை அவர் உணர்ந்தார்.

மேலும் பெருமான் உலகை உண்டு உமிழ்ந்த காரணத்தையும் விளக்கினார். “ கடல் அலைகள் எல்லாம் கடலிலே பிறந்து, அதாவது கடலிலிருந்தே பொங்கிப் பொங்கி எழுந்து, கடைசியில் கடலினுள்ளேயே அடங்கி விடுவதுபோல், உலகில் தோன்றிய அனைத்தும் இறைவனாலேயே தோன்றி இறைவனுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன. இதை உலகுக்குக் காட்டவே எம்பெருமான் உலகத்தை உண்டு உமிழ்ந்தான்”  என்று விளக்கமளித்தார் பேயாழ்வார்.

“ஆத்மானுபவமாக நீங்கள் கண்ட பரம்பொருளை யானும் காண வழிகாட்ட வேண்டும்”  என்று பேயாழ்வாரை வேண்டிக் கொண்டார் திருமழிசையார்.  “பரஞான பரபக்தியோடு பரம பக்தியின் மூலம் பரம்பொருளின் அருள்பெற்றால் தான், அந்தப் பரம்பொருளைக் காணமுடியும்”  என்றார் பேயாழ்வார்.

உடனே திருமழிசையார் அவரை நோக்கி,  “என் மன இருளைப் போக்கி ஞானம் பெற அருள்செய்தீர். அதனால் நீரே எனக்கு குரு. இனி நான் திருமகள்நாதனின் திருவடித் தாமரையையே பற்றுக் கோடாகக் கொள்வேன். அதற்குரிய தன்மையை எனக்கு நீரே கூறி அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.

பேயாழ்வாரும் அதற்கிணங்க திருமழிசையாருக்கு திருமந்திரத்தை உபதேசித்து அருளினார். பிறகு திருமழிசையார் பேயாழ்வாரை வணங்கி, அத்திருமந்திரத்தையே சிந்தித்து யோகத்தில் ஆழ்ந்தார். அவருக்கு ஸ்ரீமந் நாராயணன் தம் தேவியோடும் பரிவாரத்தோடும் சங்கு சக்ரதாரியாக கருடன் மீது தோன்றி காட்சியளித்தார்.

திருமழிசையார் அக்காட்சியைக் கண்டு அகம் மகிழ்ந்து,
நெஞ்சமெல்லாம் கசிந்துருகி பாடியாடினார். திருமால் அவருக்கு மதிநலம் தந்தார். பரம்பொருளான பரந்தாமன் தனக்குக் காட்சி தந்த கருணைத் திறத்தை எண்ணியெண்ணி மகிழ்ந்தார் திருமழிசையார்.

சாக்கியம் கற்றோம் சமணம் கற்றோம் அச்சங்கரனார்
ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம் – பாக்கியத்தால்
செங்கட் கரியானை சேர்ந்துயாம் தீதிலோம்
எங்கட்கு அரியதொன்றும் இல்

– என்னும் திருமழிசையாரின் வெண்பாவின் மூலம், அவருடைய மனநிலையை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு திருமழிசையாழ்வார் பகவான் ஸ்ரீமந் நாராயணன் மீது இன்னிசைப் பாக்களைத் தீந்தமிழில் புனையலானார். திருவல்லிக்கேணிக்குச் சென்று மாலவனை மனத்தில் ஏந்தி யோகத்தில் ஆழ்ந்தார்.

அந்த நேரத்தில் அவருடைய பரம பக்தியை சோதிப்பதுபோல் உமையொரு பாகரான சிவனார் தம் தேவியோடு ரிஷப வாகனத்தில் சென்றார். உமாதேவி திருமழிசையாரைக் கண்டதும்  ‘யோகத்தில் அமர்ந்திருக்கும் அவருக்குக் காட்சியளித்து நாம் அருள்புரிவோம்’  என்று கயிலையானிடம் கூறினாள்.
“தேவி! அவர் நாராயணன் மீது பக்தி பூண்டவர். அவர் பாகவத அனுபவம் ஒன்றிலே லயித்திருக்கிறார். தவிரவும் வேறொன்றையும் அவர் விரும்ப மாட்டார். நம்மையும் கவனிக்க மாட்டார்” என்றார் சிவபெருமான்.

ஆயினும்  “அவரைக் கண்டு செல்வதே தங்கள் திருவருளுக்கு ஏற்றது” என்று அவரை வற்புறுத்த, சரி என்று, திருமழிசையாரின் முன் காட்சியளித்தார்.
திருமழிசையாழ்வாரோ உமையொருபாகனைக் கண்ணெடுத்தும் பாராதிருந்தார்.

அதை உணர்ந்த சிவனார், கண்டும் காணாதவர் போல் திருமழிசையார் அருகில் சென்று,  “உமக்கு அருள் புரியவே யாம் இங்கு வந்தோம். எம்மை அலட்சியம் செய்யலாமா?”  என்று கேட்டார்.

“உம்மால் எனக்கு ஆக வேண்டிய பயன் என்ன? அதனாலே மௌனமாக இருக்கிறேன்”  என்றார் திருமழிசையார்.  “ஏதாவது வரம் கேள்! தருகிறோம்!” என்றார் சிவபெருமான்.  “எனக்கு ஒன்றும் வேண்டாம்” என்றார் திருமழிசையார்.

“நம்முடைய வருகை வீணாகாமல் ஏதாவது ஒரு வரத்தைக் கேள்!”  என்று மீண்டும் சிவபெருமான் புன்சிரிப்போடு கூறினார்.

திருமழிசையாரும் புன்சிரிப்போடு  “உம்மால் எனக்கு பரமபதம் தர முடிந்தால் அதையே வரமாகத் தாருங்கள்” என்று கேட்டார்.

“பரமபதத்தை அருளக்கூடியவன் பரந்தாமனான வைகுந்த நாதனே! ஆகையால் என்னால் தரக் கூடிய வேறு ஏதாவது வரத்தைக் கேளும்” என்றார் பரமசிவன்.

“பரமபதம் பெற பல தவங்கள் புரிய வேண்டும். அதற்கு எனக்கு அதிக ஆயுள் வேண்டும். எனவே இன்று சாக வேண்டியவர்களை நாளை சாகும்படி செய்ய உம்மால் முடியுமா?”  என்று கேட்டார் திருமழிசையார்.

”அது உயிர்களின் வினைப்படி நடக்கும்”  என்றார் சிவபெருமான். இதைக் கேட்டதும் எள்ளி நகையாடிய வண்ணம், அருகிலிருந்த ஒரு ஊசியைக் காட்டி,  “இதன் பின்னே இந்த நூல் வருகிறபடி செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

இந்த எள்ளல் வார்த்தை கேட்டதும் மிகுந்த சினங்கொண்டார் சிவனார். முக்கண்ணனாகிய சிவபெருமான் தம் மூன்றாம் கண்ணான நெற்றிக் கண்ணைத் திறந்தார். அடுத்த கணம் அதிலிருந்து பெரும் நெருப்பு எழுந்து மூவுலகையும் சூழ்ந்தது. ஆனால் அந்நெருப்பால் திருமழிசையார் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. பதிலுக்கு திருமழிசையார் யோக வலிமையால் தம் வலது திருவடியில் ஒரு கண்ணை உண்டாக்கி, அதை ஏவினார்.

அதிலிருந்து நெருப்பு ஊழித்தீ போல் பொங்கி எழுந்தது. மூவுலகையும் தாக்கி தகிக்கச் செய்தது. கங்கையை சடையில் தாங்கிய சிவபெருமானையும் அந்நெருப்பு சூழ்ந்தது. அதனால் இந்திராதி தேவர்கள் வைகுந்தம் சென்று பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமகள்நாதனை வணங்கி   ‘இந்நெருப்பிலிருந்து எம்மைக் காத்தருள வேண்டும’  என்று வேண்டிக் கொண்டனர்.

திருமால் அந்தத் தேவர்களை நோக்கி,  “தேவர்களே கவலையை விடுங்கள்; நாம் புஷ்கலாவர்த்தம் பொழியச்செய்து, அப்பெரு நெருப்பை அடக்குகிறோம்”  என்றார். அவ்வாறே  ‘புஷ்கலாவர்த்தம்’ என்னும் மேகத்தை அனுப்பினார். அம்மேகம் பெருமழையைப் பெய்வித்து பெருந்தீயை அணைத்தது. அதோடு பிரளய வெள்ளம் போல் பூமியெங்கும் நீர் நிறையலாயிற்று. ஆயினும் அதற்கு  அஞ்சாதவராக  திருமழிசையார் திருமகள்நாதனை மனத்தில் எண்ணியவாறு அந்தப் பெரு வெள்ளத்தினிடையேயும் அசைவற்று அமர்ந்திருந்தார்.

அவருடைய செயலைக் கண்ட சிவபெருமான் அவருடைய பரம பக்தியின் வலிமையைப் போற்றிப் புகழ்ந்து,  “பக்திசாரர்” என்னும் பட்டத்தைக் கொடுத்துவிட்டு தேவியோடு கயிலைக்குச் சென்றார். அதிலிருந்து திருமழிசையாருக்கு பக்திசாரர் என்ற பெயரும் வழங்கி வரலாயிற்று.

திருமழிசையார் முன்போலவே யோகத்தில் இருந்தார். அப்போது மாய மந்திர வித்தைகளில் வல்லவரான சுத்திகாரன் என்னும் சித்தன் ஒருவன் ஒரு புலியின் மீது அமர்ந்து வான் வழியில் சென்று கொண்டிருந்தான். அந்தப் புலி திருமழிசையாழ்வார் யோகம் புரியும் இடத்துக்கு வந்ததும் மேலே செல்லாமல் தயங்கி நின்றது. அதைக் கண்டதும் மந்திர சித்தன் வியப்புற்று விண்வெளியிலே நான்கு பக்கங்களிலும் பார்த்தான். பிறகு பூமியையும் நோக்கினான். திருமழிசையார் யோகத்தில் இருப்பதைக் கண்டு அவருடைய சக்தியால்தான் தன் புலி அவரைத் தாண்டிப் போகவில்லை என்பதை உணர்ந்தான்.
உடனே கீழே இறங்கி அவர் முன் வந்து நின்றான். அவர் சிதைந்த ஆடை உடுத்தியிருப்பதைப் பார்த்ததும் சுத்திகாரன் தன்னுடைய மந்திர வித்தையின் வலிமையால் நல்லாடை ஒன்றைத் தோற்றுவித்து  “அருந்தவச் செல்வரே! இவ்வாறு கந்தல் ஆடையைத் தாங்கள் உடுத்தியிருக்கலாமோ? நான் தரும் அருமையான ஆடையை வாங்கி உடுத்திக் கொள்ளுங்கள்” என்றான்.

திருமழிசைப்பிரான் அதை வாங்காமல் புன்சிரிப்பு பூத்து தம் யோக வலிமையினால் மாணிக்க மயமாக மின்னும் பொன்னாடை ஒன்று உருவாக்கிக் காட்டினார். சுத்திகாரன் வியந்தான். அவன் தன் கழுத்திலிருந்த ரத்தின மாலையைக் கழற்றி,  “இதை உங்கள் ஜப மாலையோடு சேர்த்து வைத்துக் கொள்ளும்” என்றான்.

திருமழிசையாரோ மறுபடியும் புன்முறுவலோடு தன் கையிலிருந்த துளசி மாலையையே அந்த சித்தனின் ரத்தினமாலையை விடப் பன்மடங்கு பேரொளி வீசும் மணிமாலையாக மாற்றிக் காண்பித்தார். அதைக் கண்டதும் சுத்திகாரன் மிகவும் வெட்கமடைந்தான். பின்னர் அவருடைய பெருந்தவச் சிறப்பைக் கண்டு, அவரைப் போற்றி வணங்கிவிட்டு அம்மாலையைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றான்.

முன்போலவே திருமழிசைப்பிரான் பரந்தாமனைத் தியானித்தபடி யோகத்தில் அமர்ந்திருந்தார். கொங்கண சித்தன் என்னும் ரசவாதி ஒருவன் அவருடைய பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்து வணங்கினான்.  “ஞான யோகியாரே! கோடி இரும்பையும் பொன்னாக்க வல்ல ஒரு குளிகை தங்களுக்குத் தருகிறேன். இதை என் பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று ஒரு ரசவாத குளிகையை நீட்டினான்.

அதைக் கேட்ட திருமழிசையார், தம் உடம்பில் படிந்துள்ள புழுதியையும் காதின் குறும்பியையும் திரட்டியெடுத்து, ஒரு சிறு உருண்டையாக உருட்டி,  “இந்தக் குளிகை கோடானுகோடி கருங்கற்களையும் செம்பொன்னாக்கும்”  என்று கூறி அவனிடம் கொடுத்தார்.

அதை வாங்கிய அவன் ஒரு கருங்கல்லை எடுத்துப் பரிசோதித்தான். அது அப்படியே செம்பொன்னாக மாறியது. அதைக் கண்டதும் அந்த ரசவாதி வியப்படைந்து தன் தவறை உணர்ந்தான்.  “நான் கற்ற வித்தை அனைத்தும் உங்கள் ஆற்றலின் முன் தூசிக்கு சமனாகும். நான் அகம்பாவத்தால் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுவீராக!”  என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

இப்படி யோக நிலையைச் சோதிக்கும் நிகழ்வுகளால் திருமழிசையார் அவ்விடத்தை விட்டு அகன்று, ஒரு மலையின் குகைக்குச் சென்று தியான யோகத்தில் அமர்ந்தார். அப்போது முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார்கள்.

திருமழிசையார் யோகத்தில் அமர்ந்திருந்த குகைக்கு அருகில் உள்ள ஊரை அவர்கள் வந்தடைந்தபோது, ஒரு பேரோளி அவர்களைக் கவர்ந்திழுத்தது. அதைக் கண்டு அவர்கள் மூவரும் வியப்பெய்தினார்கள்.  “ஆஹா தெய்வ மணம் கமழும் இந்தப் பேரொளி எங்கிருந்து வருகிறது? தொடர்ந்து சென்று பார்ப்போம்”  என்று எண்ணியவாறே, அந்தக் குகையை அடைந்தார்கள்.

அந்தக் குகையினுள்ளே திருமழிசையார் யோகத்தில் அமர்ந்திருப்பதை தங்கள் மனக் கண்ணில் கண்டார்கள். இவர் யார் என்பதையும் அறிந்து கொண்டார்கள். திருமழிசையாரும் அவர்களின் வருகையை அறிந்து கொண்டார். உடனே முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒருமித்த குரலில் “பார்க்கவ முனிவரின் அருந்தவச் செல்வரே நலம்தானா?”  என்று கேட்டார்கள்.
திருமழிசையாரும்  “ஆஹா! தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி என்னும் முப்பூக்களும் பூவுலகில் புகழ்பெறும்படி, அப்பூக்களிலே அவதரித்த மெய்ஞானச் செல்வர்களே… நீங்களும் நலந்தானே?”  என்றார்.

பிறகு நால்வரும் பக்திப் பரவசத்தில் லயித்தார்கள்; மனம் ஒன்றிக் கலந்து பகவத் அனுபவத்தில் திளைத்தார்கள்.  அந்நால்வரும் அரங்கப்பெருமானை மனத்தில் கொண்டு யோகத்தில் அமர்ந்தார்கள்.

பிறகு மயிலைக்குச் சென்று பேயாழ்வார் தோன்றிய கைரவ தீர்த்தத்தின் அருகில் பக்தியோகம் புரிந்தார்கள். கடைசியாக முதலாழ்வார்கள் மூவரும் மறுபடியும் தலயாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திருமழிசையார் வருத்தம் மிகக் கொண்டு,  “நாரணனே! மெய்யன்பர்களான அவர்களைப் பிரிந்தது எனக்கு வாட்டத்தைத் தருகிறது. மீண்டும் அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்பை எனக்குத் தந்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு திருமழிசைக்குச் சென்றார்.

திருமழிசையை அடைந்ததும், அவர் திருமண் இட்டுக் கொள்வதற்காக மண்ணில் ஓரிடத்தில் தோண்டினார். ஆனால் அங்கே திருமண் கிடைக்கவில்லை. அதனால் வருத்தம் எழ அங்கேயே அமர்ந்துவிட்டார். இரவுப் பொழுதும் வந்தது. வருத்தத்தோடு அங்கேயே உறங்கிவிட்டார். அன்றிரவு கனவிலே திருமால் தோன்றி திருமண் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு மறைந்தார்.

கண்விழித்த திருமழிசையார், முன் இரவில் தன் கனவில் தனக்கு ஏழுமலையான் கூறிய இடத்துக்குச் சென்று தோண்டினார். அங்கே திருமண் இருந்தது. அதை எடுத்து பன்னிரு திருமண் தரித்து அவன் அருங்கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.

அதன் பிறகு, காஞ்சிபுரத்திலிருந்த திருவெஃகா திருத்தலத்துக்குச் சென்றார் திருமழிசையாழ்வார்.  அங்கே திருக்கோயிலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெருமானை வணங்கினார். அத்திருக்கோயிலினுள்ளே சிறிது காலம் யோகத்தில் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவ்வூரிலேயே அவர் தங்கியிருக்கலானார்.

அந்த நேரத்தில் தான் கணிகண்ணன் அவரைத் தேடி வந்தார். அவர் திருமழிசையாரின் திருவருள் பெற்று, அவருடைய சீடராகி தொண்டுகள் பல செய்து வந்தார். இவ்வாறு இருக்கும்போது கிழவி ஒருத்தி திருமழிசையாரின் பெருமைகளைக் கேள்விப்பட்டு வந்து, நாள்தோறும் அவர் உள்ள இடத்தைக் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி கோலமிட்டு வந்தாள். ஒருநாள் திருமழிசையாழ்வார் கண் விழித்தபோது, அவளை நோக்கி,  “பெருமாட்டி! உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ என்ன விரும்புகிறாய்?”  என்று கேட்டார்.

அதற்கு உடல் தளர்ந்த அந்தக் கிழவி  “என்னை வாட்டி வருத்தும் கிழப் பருவம் என்னை விட்டு நீங்கினால் போதும்!” என்று வரம் கேட்டாள். திருமழிசையாரும் புன்முறுவல் பூத்து,  “அப்படியே ஆகட்டும்” என்றவுடனேயே, கிழவியின் நரையும் மூப்பும் நீங்கி இளம் குமரியாக மாறினாள். தன் அழகைக் கண்டு தானே சொக்கிப் போனாள் அவள். திருமழிசையாழ்வாரைத் தொழுது அவரை வியந்து போற்றி வணங்கி வீடு சென்றாள்.

ஒருநாள் அவள் தன் வீட்டு மேல்மாடத்தில் நின்றுகொண்டு வீதியை நோக்கிக்கொண்டிருந்தாள். அப்போது காஞ்சியை ஆண்டுவந்த பல்லவ மன்னன் பட்டத்து யானையின் மேல் அமர்ந்து பவனி வந்தான். வீட்டின் மேல் மாடத்தில் நின்றுகொண்டிருந்த இந்த அழகுக் கன்னியைக் கண்டான். அவன் மனம் அவள் அழகில் மயங்கியது. அந்த மயக்கத்துடனேயே அரண்மனைக்குத் திரும்பினான் மன்னன். எண்ணம் முழுதும் அந்தக் கன்னியே ஆக்கிரமிக்க, தன் விருப்பத்தை அரண்மனை சேவகர்களிடம் கூறி, அந்தப் பெண்ணை அரண்மனைக்கு அழைத்துவரச் சொன்னான்.
மன்னன் சொல்லைத் தட்டாமல் அரண்மனைக்கு வந்த அந்தப் பெண்ணிடம், மன்னன் தன் காதல் வார்த்தைகளைக் கூறி,  அவளைப் பட்டத்து ராணியாக்கும் தன் விருப்பத்தையும் சொன்னான். அவளும் மன்னனின் விருப்பத்தை உடனே ஏற்றாள். இருவரும் மணம் புரிந்து அந்தப்புர வாழ்க்கையை மகிழ்ச்சியுடனேயே கழித்து வந்தார்கள்.

நாட்கள் சென்றன. மன்னனுக்கு வயதாகிக் கொண்டு வருவது அவனுடைய நரை முடி, உடல் தளர்ச்சி போன்றவை மூலம் தெரிந்தது.  இந்த மகாராணி மட்டும் இப்படி கட்டுடல் குலையாமல், இளமை அழகு குறையாமல் எப்படி இருக்கிறாள்? மன்னன் ஆச்சர்யப்பட்டுப் போனான். அதை அவளிடமே கேட்டும் விட்டான்.

“வயதான காரணத்தால் நானோ கிழவனாகிக் கொண்டு வருகிறேன். ஆனால் நீ மட்டும் எப்படி இன்னும் இளமைப் பொலிவோடு அழகாகத் திகழ்கிறாய்? உன் அழகுக்கும் இளமைக்கும் ஏதேனும் ரகசியம் உண்டோ ?”  என்று கேட்க, மன்னனிடம் பொய் ஏதும் கூற விரும்பாத அரசி, தனக்கு இளமை எப்படி வந்தது என்ற வரலாற்றைக் கூறினாள்.

“மன்னர்பெருமானே! பைந்தமிழால் பரமனுக்குப் பாட்டிசைக்கும் திருமழிசையாழ்வார் அருளால் எனக்குக் கிடைத்த இளமை அழகு இது. அவருடைய சீடர் கணிகண்ணர் தினமும் பிட்சை ஏற்க நம் அரண்மனைக்கு வருகிறார். நீங்கள் அவருடைய உதவி பெற்று, ஆழ்வார் திருவாக்கு அருளைப் பெற்றால் நீங்களும் என்றென்றும் இளமை அழகோடு திகழலாம்…”  என்றாள்.

மறுநாள் அரண்மனைக்கு வரப்போகும் கணிகண்ணனின் வரவுக்காக பல்லவன் காத்திருந்தான். பிட்சை ஏற்க வந்த கணிகண்ணனைக் கண்ட அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. கணிகண்ணனை அழைத்த மன்னன், தன் உள்ளக் கிடக்கையைத் தெரியப்படுத்தினான்.  “சீடரே தங்களுக்கு ஒரு வேண்டுகோள்… தங்கள் குருவான திருமழிசையாழ்வாரை இந்த அரண்மனைக்கு அழைத்துவாருங்கள். அவர் அருள் பெறவேண்டும்…” என்று கேட்டுக் கொண்டான்.

கணிகண்ணருக்கோ ஆச்சர்யம். ஏன் ஆழ்வாரை இந்த மன்னன் அரண்மனைக்கு அழைக்க வேண்டும்? என்று யோசித்தவாறே,  “மன்னா! அவர் இதுபோன்று எங்கும் எவர் அரண்மனைக்கும் வரமாட்டார்”  என்று மறுமொழி உரைத்தான்.

“சரி! அப்படியானால் எனக்கு இளமை அழகு என்றென்றும் வாய்க்க உம் வாயால் நீரே என்னைப் பற்றிப் பாடி விடுமே!”  என்று கேட்டான் மன்னன்.

“பரமனைப் பாடும் வாயால் பாமரனைப் பாடும் குணம் பெற்றவன் யானில்லை! மனிதரைப் பாடிப் பிழைக்கும் புலவனும் அல்லன்! ஆகவே என்னால் உம்மைப் பாடமுடியாது…” என்று பதிலுரைத்தான் கணிகண்ணன்.

“நாட்டை ஆளும் மன்னன் தெய்வத்துக்குச் சமானமன்றோ? ஆகவே நீர் ஏன் என்னைப் பாடக்கூடாது? நீர் என்னைப் பாடுவது அந்தத் திருமாலையே பாடுவதற்குச் சமமல்லவா? ஆகவே பாடும்…”  என்றான் மன்னன்.

“அப்படியா.. சரி இதோ பாடுகிறேன்…”  என்று சொல்லி ஒரு பாடலைப் பாடினான் கணிகண்ணன்.

ஆடவர்கள் எங்கண் அகல்வார் அருள்சுரந்து
பாடகமும் ஊரகமும் பாம்பணையும் – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்னார் பொழிற்கச்சி பாண்டி.

– இப்பாடலைக் கேட்டு மன்னனுக்குக் கோபம் தான் வந்தது.

“என்ன கணிகண்ணரே! என்னைப் பற்றி பாடச் சொன்னால், கோயிலில் படுதிருக்கும் திருமாலைப் பாடுகிறீரே!” என்று சினந்து கேட்டான்.

அதற்கு கணிகண்ணன் குறும்போடு பதிலிறுத்தான்…
“நீர்தானே சற்றுமுன் சொன்னீர்… மன்னனும் திருமாலும் ஒன்று; அவரைப் பாடினால் என்ன? மன்னனைப் பாடினால் என்ன? இரண்டும் ஒன்றுதான் என்றீரே! அதனால்தான் நான் திருமாலைப் பாடினேன். அப்படிப் பார்த்தால் அது உம்மையும் பாடியதாகத்தானே அர்த்தம்…” என்று குறும்பாகச் சொன்னான்.

மன்னனுக்கு கோபம் தலைக்கேறியது.  “என் சொல்லையும் மீறி என்னைப் பாடாத நீர் இனிமேல் என் நகரில் இருக்கக் கூடாது. நீர் உடனே இந்த நகரை விட்டு வெளியேறி விடும்” என்று ஆணையிட்டான்.

கணிகண்ணரோ,  “மன்னா… நான் பாடிப் பரவும் அந்தப் பரந்தாமன் உம் நகரத்துக் கோயிலில் மட்டும் உறங்குவதில்லை… நான் இந்த நகரை விட்டுப் போய்விடுகிறேன்”  என்று கூறிவிட்டு விறுவிறுவென்று அந்த அரண்மனையை விட்டு வெளியேறினான்.

ஆழ்வாரிடம் சென்று அவரடி பணிந்து அரண்மனையில் நடந்தவற்றைக் கூறினான் கணிகண்ணன்.  “சுவாமி நான் இந்த நகரை விட்டுப் போகின்றேன். எனக்கு விடை கொடுங்கள்” என்று இறைஞ்சி நின்றான்.

ஆழ்வார் மனம் துணுக்குற்றது. தம் பிரியமுள்ள சீடன் தன்னையும் இந்த நகரையும் விட்டுப் பிரிந்து போக அனுமதி கேட்கிறான். அவனை விட்டுப் பிரிந்திருந்து தாம் மட்டும் இந்த நகரத்தில் எப்படி இருப்பது என்ற வருத்தம் அவருக்கு ஏற்பட்டது.

“மெய்யன்பரே நீர் இந்நகரை விட்டுப் போவதானால் நான் மட்டும் இங்கு இருப்பேனா? நானும் உம்மோடு வருகிறேன். சற்று இங்கே இரும். ஆலயத்தில் அரிதுயில் புரியும் நம்பெருமானையும் எழுப்பிக் கொண்டு வருகிறேன்”  என்று சொல்லிவிட்டு திருவெஃகா கோவிலுள் சென்றார்.

அங்கே பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை நோக்கித் துதித்து,  “கச்சி மணிவண்ணா, இவ்வூரைவிட்டு கணிகண்ணன் போகிறான். செந்நாப் புலவனான நானும் துணிந்து போகிறேன். நீ இங்கு படுத்துக் கிடக்க வேண்டாம் . நீயும் உன் பாம்புப் படுக்கையான பாயைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கிளம்பு”  என்று வேண்டிக்கொள்ளும் விதமாக பின்வரும் பாடலைப் பாடினார்:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்.

என்று வேண்டினார். அவ்வளவுதான்! கோயிலில் பள்ளி கொண்டிருந்த பெருமாளும் அரிதுயில் நீங்கி, துள்ளியெழுந்து, தம் பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு கிளம்பிவிட்டார். திருமழிசைப்பிரானை பின்தொடர்ந்து செல்லலானார்.

பெருமாள் புறப்பட்டுப் போனதால் மற்ற திருக்கோயில்களில் உள்ள தெய்வங்களும் மற்ற தேவர்களும் அவ்விறைவனைப் பின் தொடர்ந்து போனார்கள். அவர்கள் எல்லோரும் அந்நகரைவிட்டு நீங்கிச் சென்று, இரவு ஒரு சோலையில் தங்கினார்கள்.

அதனால் திருவெஃகா நகரம் களையிழந்தது. சூரியனும் அந்த நகரை விட்டு நீங்க, இருள் சூழ்ந்தது. பயிர்கள் முதலான எல்லா உயிர்களும் வாடின. எங்கும் வெறுமை நிறைந்தது. இதனால் பல்லவ மன்னன் மனம் பதைபதைத்தது. இதுபற்றிய விவரம் அறிந்து வருமாறு தன் ஒற்றர்களுக்குக் கட்டளையிட்டான் மன்னன்.

திருவெஃகா கோயிலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் தம் பாம்புப் படுக்கையை சுருட்டிக் கொண்டு திருமழிசையாழ்வாரையும், கணிகண்ணனையும் பின் தொடர்ந்து போய்விட்டது தான் காரணம் என்பதை அறிந்து, மன்னன் தன் தவறுணர்ந்தான்.

உடனே தம் மதியமைச்சர்களோடு புறப்பட்டு, அவர்கள் தங்கியுள்ள சோலைக்கு வந்தான். கணிகண்ணரை நோக்கி,  “மாலடியவரே! மன்னன் என்ற இறுமாப்பால் நான் அறியாமல் பேசிய மொழிகளை மறந்து என்னை மன்னித்து, மீண்டும் காஞ்சி நகருக்குத் திரும்பி வரவேண்டும்!” என்று கேட்டுக் கொண்டார்.

கணிகண்ணன் திருமழிசையாழ்வாரை வேண்ட, அவரும் யதோக்தகாரிப் பெருமானைப் பார்த்து,  “நம் கணிகண்ணன் போவதை நிறுத்திவிட்டான், செந்நாப் புலவனான நானும் துணிந்து நின்றேன்! நாங்கள் நகருக்குத் திரும்புகிறோம். மணிவண்ணா நீயும் உன் நகருக்குத் திரும்பி உன் கோயிலிலே பைந்நாகப் பாய் விரித்து அதில் படுத்துக்கொள்!” என்று வேண்டிக் கொண்டார்:

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தான் நீயும்உந்தன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.

-இப்படிப் பாடிய அவருடைய வேண்டுதலை பெருமாள் ஏற்றார். திருமழிசையாருடனும் கணிகண்ணனோடும் மற்ற தேவர்களுடனும் திருவெஃகா திருத்தலம் வந்தார். பைந்நாகப் பாய் விரித்துப் படுத்து, தன் திருக்கை கீழ்ப்பட கண்வளர்ந்தார். இவ்வாறு ஆழ்வார் சொன்னவிதமே செய்தார். அதனால் அப்பெருமானை அன்று முதல்  “சொன்னவண்ணம் செய்த பெருமாள்” என்று எல்லோரும் போற்றி வரலானார்கள்.

அவ்விறைவன் தம் அடியார்களோடு ஒரு நாள் இரவு சென்று தங்கிய அந்த இடத்தை  “ஓர் இரவு இருக்கை” எனும் பொருளில்  ‘ஓரிரவிருக்கை’  என்று அழைத்தனர். அது பின்னாளில்  ‘ஓரிருக்கை’ என்றாகி, தற்போது  ‘ஓரிக்கை’ என்று வழங்கப்படுகிறது.

நன்றிருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனான்
குன்றிருந்த மாட நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃகணை கடந்தது என்ன நீர்மையே!

மீண்டும் நகரம் பொலிவுபெற்றது. மன்னன் மகிழ்ந்தான் . அதன் பிறகு திருமழிசையார் கச்சி மணிவண்ணனை தம் நெஞ்சில் நிறுத்தி யோகத்தில் அமர்ந்தார்.

திருமழிசையார் திருக்குடந்தை செல்ல எண்ணினார். திருவெஃகா இறைவனை சேவித்துவிட்டு கணிகண்ணரோடு புறப்பட்டு நடந்து சென்றார். பயண வழியில் அவர் பெரும்புலியூர் என்னும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்.

திருமழிசையார் வெகுதூரம் நடந்து வந்ததால் மிகவும் களைப்புற்றார். தம் களைப்பு நீங்கிப் பயணம் கொள்ள விரும்பினார். எனவே ஓர் அந்தணரின் வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார். அப்போது அங்கே வேதியர்கள் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமழிசையாரைக் கண்டதும்,  “நான்காம் வருணத்தினனாகிய இவன் கேட்க நாம் வேதம் ஓதுவதாவது! கூடாது!”  என்று சட்டென நிறுத்திவிட்டார்கள். அதை அறிந்துகொண்ட திருமழிசையார், திண்ணையிலிருந்து இறங்கினார்.

உடனே அவர்கள் வேதம் தொடங்கி விட்ட வாக்கியம் தெரியாமல் விழித்துத் தவித்தார்கள். அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட திருமழிசையார், கீழே சிந்திக் கிடந்த நெற்களுள் ஒரு கரிய நெல்லை எடுத்து அவர்கள் பார்க்கும்படி உகிர (கிருஷ்ணாநாம் வ்ரிஹீணாம் நகனிர்ப்பிந்தம்), அந்தக் குறிப்பால் அவர்கள் விட்ட வாக்கியத்தை அவர்களுக்கு உணர்த்தினார்.

அவ்வேதியர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர்.  திருமழிசையாரின் திருவடி பணிந்து,  “அடியாரே! தங்கள் பெருமை தெரியாது நாங்கள் செய்த தவறைப் பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டினார்கள். அவர்களுக்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தத்துவத்தை எடுத்துரைத்து விடைபெற்றுச் சென்றார் திருமழிசையாழ்வார்.

திருமழிசையாழ்வார் அவ்வூரில் பிட்சை பெறும் பொருட்டு பல வீதிகளுக்கும் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வூரில் கோயில் கொண்டிருந்த திருமால் விக்கிரகத்தின் முகம் அவர் செல்லும் திசைகளில் எல்லாம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு அர்ச்சகர்கள் பெரும் வியப்பெய்தினார்கள். வேதியர் சிலரிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அவர்களுக்கு அது வியப்பை அளித்தது. ஆனால் அந்தக் காரணத்தை அவர்களால் அறிய முடியவில்லை.

அவர்கள் எல்லோரும் யாகசாலைக்குச் சென்று அங்கு வேள்வித் தலைவராக யாகம் தொடங்கும் பெரும்புலியூர் அடிகளிடம் எடுத்துரைத்தார்கள். பெரும்புலியூர் அடிகள் பெருமான் இவ்வாறு செய்வதன் காரணத்தை உணர்ந்தார். யாகசாலையை விட்டுச் சென்று திருமழிசையாரை அடைந்து, அவருடைய காலில் விழுந்து வணங்கினார்.

அவரைப் போற்றித் தம்முடன் யாகசாலைக்கு வந்து, உன்னதமான பீடத்தில் அமரச் செய்து உபசரித்தார். யாகம் தொடங்கியது. வேள்வித் தலைவர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பூஜையை திருமழிசையாருக்குச் செய்தார். அப்போது வேள்விச் சடங்குகள் செய்வதற்கு அமர்ந்திருந்த வேதியர் சிலர்,  “நான்காம் வருணத்தானுக்கு அக்கிர பூஜை செய்வதா?”  என்று ஆத்திரப்பட்டார்கள். பெரும்புலியூர் அடிகள் அதைக் கண்டு மனம் வருந்திக் கண்ணீர் விட்டார்.

இதைக் கண்ட திருமழிசையாழ்வார், அவர்களுக்கு புத்தி புகட்ட எண்ணி, திருமகள்நாதனை நோக்கி,  “சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமாலே, இக் குறும்பை நீக்கி, என்னையும் உன்போல் ஓர் ஈஸ்வரனாக்க முடிந்தால், இவ்வேள்விச் சடங்கர் வாய் அடங்கிட என் உள்ளத்தினுள்ளே நீ கிடக்கும்வண்ணமே என் உடம்புக்கு வெளியேயும் உன் உருவப் பொலிவை காட்டிவிடு” என்று வேண்டிக் காள்ளும் விதமாக பின்வரும் பாடலைப் பாடினார்:

அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவது தம்கொலோ?
இக்குறும்பை நீக்கி என்னை ஈசனாக்க வல்லயேல்
சக்கரம்கொள் கையனே, சடங்கர் வாயடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே!

-இப்படிப் பாடியவுடனேயே, பாற்கடலில் பாம்பணையில் தன் திருவடிகளைத் திருமகளும் பூமகளும் வருடிட, தான் பள்ளி கொண்ட காட்சியை அனைவரும் காணும் வண்ணம் திருமழிசையாரின் உடல் மீது காட்டியருளினார். அந்த அற்புதத்தைக் கண்டு அனைவரும் வியந்தார்கள். தங்கள் குற்றத்தை உணர்ந்து அவரைப் பணிந்தார்கள். பிறகு திருமழிசையார் அவர்களிடமும் பெரும்புலியூர் அடிகளிடமும் நன்மொழிகளைக் கூறி விடைபெற்று திருக்குடந்தை புறப்பட்டுச் சென்றார்.

திருக்குடந்தைக்குச் சென்ற திருமழிசையாழ்வார், அங்கே கோயில் கொண்டு உறையும் ஆராவமுதப் பெருமானைக் கண்டு வணங்கினார். பின் காவிரி ஆற்றை அடைந்தார். தாம் பாடிய பாசுரங்கள் அடங்கிய ஏடுகளை எல்லாம் காவிரி ஆற்றிலே தூக்கி எறிந்தார்.

அவற்றுள் நூற்று இருபது பாசுரங்கள் கொண்ட திருச்சந்த விருத்தமும், தொண்ணூறு பாசுரங்களைக் கொண்ட நான்முகன் திருவந்தாதியும் நீரோட்டத்தை எதிர்த்து வந்து திருமழிசையார் திருவடிகள் அருகில் சேர்ந்தன. உடனே அவ்விரு ஏடுகளையும் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று பெருமானை வணங்கி அவற்றை உலகம் உய்ய வெளிப்படுத்தினார்.

கோயிலுள் அரிதுயில் புரியும் பெருமானின் கோலத்தைப் பார்த்து,  “குடந்தையில் படுத்துறங்கும் பெருமானே, நடந்த கால்கள் நொந்தனவோ? பூமியை ஏனமாய் ஏந்திய உடல் குலுங்கினவோ? படுத்துறங்கும் நீ எழுந்து வந்து என்னோடு பேசு!”  என்று வேண்டினார்.

பெருமாளும் உடனே எழுந்து வந்தார். அடியவர்க்கு எளியவனாய் அருகில் வரும் ஆராவமுதனின் அற்புதக் கோலத்தைக் கண்டு,  “வாழி நேசனே”  என்றார் திருமழிசையாழ்வார்.

அவரை திருமழிசையார் பின் வருமாறு பாடினார்:

கடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்குமால் வரைசுரம்
கடந்த கால் பரந்த காவேரிக் கரை குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி நேசனே!

பிறகு திருமழிசையாழ்வார் குடந்தை நகரிலேயே பல ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்து அங்கிருந்தபடியே அவனடி சேர்ந்தார்.

இனி திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியையும், திருச்சந்த விருத்தத்தையும் கொஞ்சம் பார்க்கலாம்.

விஷ்ணு புராணத்தை மையமாகக் கொண்ட தத்துவத்தை இவர் தன்னுடைய நான்முகன் திருவந்தாதியின் முதல் பாசுரத்திலேயே தெளிவுற வெளிப்படுத்துகிறார்.

நான்முகனை நாராயணன் படைத்தான்; நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் – யான்முகமாய்
அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளை;
சிந்தாமல் கொள்மின்நீர், தேர்ந்து.

பொருள்: ஸ்ரீமந் நாராயணனே நான்முகங்களுடைய பிரமனைப் படைத்தான். அப் பிரமனும் தன்னையே முதலாகக் கொண்டு சங்கரனைப் படைத்தான். நான் அறிந்த இந்த ஆழ்பொருளை அந்தாதி வடிவத்தில் சொல்கிறேன். சிந்தாமல் சிதறாமல் மனதில் இதைக் கொள்ளுங்கள்.

நான்முகன் திருவந்தாதியின் இரண்டாவது பாசுரத்தில் இதை இன்னும் யோசித்துப் பார்க்கிறார் ஆழ்வார்:

தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர்;
ஆரும் அறியார் அவன் பெருமை; – ஓரும்
பொருள்முடிவும் இத்தனையே; எத் தவம் செய்தார்க்கும்
அருள்முடிவது ஆழியான் பால்.

பொருள்: தேர்ந்து பார்த்தால் சக்கரத்தைக் கையில் கொண்ட திருமால் ஒருவன்தான் தேவன். அவன் பெருமையை ஒருவரும் அறிய மாட்டார். வேதம் முதலிய நூல்களால் ஆராயப்படும் பொருள் முடிவும் இத்தனையே. எவ்விதமான சாதனங்களை மேற்கொண்டவர்களுக்கும் அவற்றின் பலன் சக்கரம் ஏந்திய திருமாலின் அருளால் மட்டுமே உண்டாகும்.

அறியார் சமணர்; அயர்ந்தார் பவுத்தர்;
சிறியார் சிவப்பட்டார்; செப்பில்- – வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தாதார்
ஈனவரே, ஆதலால் இன்று.

பொருள்: இதுநாள் வரை மாயவனை மாலவனை மாதவனை ஏற்றிப் போற்றாதார், அறியாமையாலே நீசரேயாவார் என்று கூறுகிறார்.

இன்றாக நாளையே ஆக இனிச் சிறிது,
நின்றாக நின் அருள் என்பாலதே; — நன்றாக
நான் உன்னையன்றி இலேன் கண்டாய்; நாரணனே!
நீ என்னை அன்றி இலை.

பொருள்: நாராயணனே, இன்றைக்கோ, நாளைக்கோ, என்னும் சிறிது காலம் கழித்தோ என்றைக்கு ஆனாலும் தலைவனான உன்னருள் அடியவனான என்னிடம் ஏற்படும். நிச்சயமாக நான் உன்னையன்றி வேறு புகல் இல்லாதவன். அதேபோல் நீயும் என்னையன்றி வேறு காப்பாற்றப்படக்கூடிய பொருள் பெறாதவன்.

வாழ்த்துக -வாய்; காண்க கண்; கேட்க செவி; மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள் தண்மலரால்- – சூழ்த்த
துழாய் மன்னு நீள் முடி என் தொல்லை மால் தன்னை
வழாவண் கைகூப்பி மதித்து.

பொருள்: திருத்துழாய் மாலை சூடிய திருமுடி உடையவனும் என்னிடம் நெடுநாட்களாக அன்பு பூண்டவனும் ஆன திருமாலை, விடாது கைகள் கூப்பித் தொழுது, தியானித்து, தலை சாய்த்து வணங்கி, குளிர்ந்த பூக்கள் கொண்டு வழிபடுங்கள். உங்கள் வாய் அவனைத் துதிக்கட்டும். கண்கள் அவனையே நோக்கட்டும். காதுகள் அவனைப் பற்றியே கேட்கட்டும் – என்று எப்போதும் அவனைச் சிந்தித்திருக்கும் வழியைக் காட்டுகிறார் இந்தப் பாசுரத்தில்.

திருமழிசை ஆழ்வார் இறுதியில் அடைய விரும்புவது வைகுந்தத்தை. வைகுந்தம் அடைவது எங்ஙனம்? அவர் தமது நான்முகன் திருவந்தாதியின் இறுதிப் பாடல்களில் அதைத் தெரிவிக்கிறார்.

ஏன்றேன் அடிமை; இழிந்தேன் பிறப்பு இடும்பை;
ஆன்றேன் அமரர்க்கும் அமராமை; – -ஆன்றேன்
கடன் நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடம் நாடு காண, இனி.

பொருள்: உனக்கு அடிமை செய்வதையே ஏற்றேன். பிறப்பால் வரும் வினைகள் நீங்கப் பெற்றேன். பிரமன் முதலிய தேவர்களும் என் பக்கலில் அமர முடியாத படியான பக்தி ஞானத்தால் நிறைவுற்றேன். ஆகவே அடியேற்கு சுவர்க்கம் பூவுலக இன்பம் ஆகியன தேவையே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலான அடியார்கள் குழாங்களின் திருநாட்டைக் காண பரம பக்தி பெற்றேன் என்று வைகுந்தம் அடைவதான பரமபக்தியை வெளிப்படுத்துகிறார் ஆழ்வார்.

திருமால் அருகில் எப்போதும் வாசம் செய்யும் பெரும் பேற்றை அளிப்பது வைகுந்தப் பெருவாழ்வு. அது அமரர் உலகைவிடப் பெரிதானது. இந்த வைகுந்தப் பெருவாழ்வைப் பெறுவதற்காக ஏன் இப்படிப்பட்ட முயற்சிகளைச் செய்யவேண்டும் என்றால், இந்த உலகுக்கு மூலகாரணனான நாரணனின் இருப்பிடம் அது என்ற ஞானத்தால் தான். அதற்கு மூலகாரணன் நாரணன் என்ற ஞானம் வரவேண்டும். அதை அறிந்த விதம் எங்ஙனம் என்பதை ஆழ்வார் காட்டும் பாங்கு இது.

நான்முகன் திருவந்தாதியின் கடைசிப் பாசுரத்தில் அதை வெளிப்படையாக அறிவிக்கிறார் ஆழ்வார்:

இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்;
இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை- – இனி அறிந்தேன்
காரணன் நீ; கற்றவை நீ; கற்பவை நீ; நல்கிரிசை
நாரணன் நீ; நன்கு அறிந்தேன் நான்.

பொருள்: சிவனுக்கும் பிரமனுக்கும் தெய்வமாக இருப்பவன் நீயே என்பதை அறிந்து கொண்டேன். உன் இயல்பை அறிந்ததால், நீயே உலக காரணன் என்பதையும் தெரிந்து கொண்டேன். முன்பு கற்றவை, இனி அறியப் போகிறவை யாவும் நாராயணன் ஆகிற உன் பேரருளாலே என்பதையும் நன்கு அறிந்துகொண்டேன்.

ஆகவே காரணப் பொருளான உன் இருப்பிடமே என் பிறப்பறுக்கும் இருப்பிடம் என்பதாலே அதை நாடினேன்… என்பது ஆழ்வாரின் தீர்மானமான முடிவு.

திருச்சந்த விருத்தம்

திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம், பிரபந்தத் தொகுப்பிலேயே தனிச் சிறப்பு கொண்டது. 120 பாசுரங்களைக் கொண்ட அது சந்தக் கலிவிருத்த யாப்பு வகையைச் சேர்ந்தது. திருச்சந்த விருத்தம், ஓசை நயம் மிகக் கொண்டது… ஒவ்வொரு பாட்டும் ஒரு தாள வாத்தியத்தைத் தட்டுவது போன்ற ஓசை நயத்தோடு திகழ்கின்றது.

திருச்சந்த விருத்தத்தின் முதல் பாடல் இது:

பூநிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்;
தீநிலாய மூன்றுமாய், சிறந்தகால் இரண்டுமாய்;
மீநிலாயது ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?

– என்று கீழ் வரிசையாக எண்கள் சென்றுகொண்டிருக்கும். இது என்ன கணக்கு? பூநிலாய ஐந்து என்றது – பூமியில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை, நாற்றம் ஆகியவை (அதாவது ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் ஆகியவை). புனல் கண் நின்ற நான்கு என்றது – நீரில் உள்ள ஒலி, ஊறு, தோற்றம், சுவை என்பது (நீருக்கு நான்கு குணங்கள் உண்டு. ஒலி, தொடுகை, உருவம், சாரம் ஆகியன). தீ நிலாய மூன்று என்றது – தீயில் ஒலி, ஊறு, நாற்றம் என்பது (அதாவது சப்தம், தொடுகை, வடிவம் என்று மூன்று). கால் இரண்டு என்றது – காற்றில் ஒலி, ஊறு என்பது (அதாவது சப்தம், தொடுகை ஆகியன). மீநிலாயது ஒன்று என்றது – விண்ணில் ஒலியாய் என்பது. இப்படி வெவ்வேறு வகைப்பட்ட தேவர், மனிதர், விலங்கு, தாவரம் என இவற்றின் ஆத்மாவாய் உள்ள நீ, காரிய காரணப் பொருளாக, முழுமுதலாக இருப்பதை யாரால் நினைக்க முடியும்?

முதல் பாட்டைத் தொடர்ந்து தன் இரண்டாவது பாடலிலும் எண்களோடு விளையாடுகிறார் திருமழிசையாழ்வார்.

ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்,
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்,
ஊறொடு ஓசை ஆய ஐந்தும் ஆய ஆய மாயனே!

மூன்று ஆறு முதலில் வருகிறது. மூன்று ஐந்து; ஓர் இரண்டு, ஒரு மூன்று, ஓர் ஏழு, ஓர் எட்டு, கடைசி வரியில் ஒரு ஐந்து. இந்த எண்ணிக்கைகள் குறிப்பிடுவன…
முதலில் சொல்லப்படும் ஆறு, வேதமோதல் முதலான தொழில்களைச் சொல்வது. படிப்பது, கற்பது, படிக்க வைப்பது, கற்பிப்பது, கொடுப்பது, பெறுவது என்று ஆறு செயல்கள் சொல்லப்படுகின்றன.

இரண்டாவது ஆறு, இந்தச் செயல்கள் செய்வதற்கான ஆறு பருவ காலங்கள்… அவை கார்; கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியன.
மூன்றாவது ஆறு, ஆக்னேயம் முதலிய யாகங்கள். வேதம் ஓதல், வேள்வி வளர்த்தல், திருப்பலி கொடுத்தல், தானம் செய்தல் போன்று யாகங்கள் செய்பவர்கள் அனுஷ்டிக்கத் தக்க ஆறு செயல்கள்.

அடுத்து ஆழ்வார் கூறும் ஐந்துகள்… முதல் ஐந்து, ஐந்து யக்ஞங்கள். தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, இயற்கைக்கு, மனிதர்களுக்கு, பிரம்மாவுக்கு என ஐந்து யக்ஞங்கள்…

இரண்டாவது ஐந்து உண்ணும்போது செய்யப்படும் ப்ராண, அபான, வ்யான, உதான, சமான என்ற ஐந்து ப்ராண ஆஹுதிகள்…

மூன்றாவது ஐந்து, ஐவகை வேள்வித் தீ…
ஏறு சீர் இரண்டு என்றது, ஞானம் வைராக்கியம் ஆகியன.அடுத்து வரும் மூன்று, செல்வம், கைவல்யம், பரமபதம் ஆகியன.

ஏழு என்பது, விவேகம் முதலிய ஏழு மன நிலைகள்.
ஆறு என்றது, ஞான சக்தியாகிய ஆறு.

எட்டு என்பது பலன்கள். (அவை பாபமற்ற தன்மை, கிழத்தனம் அற்ற தன்மை, மரணமற்ற தன்மை, சோகமற்றிருப்பது, பசியற்றிருப்பது, தாகமற்றிருப்பது, வீண் போகாத இஷ்டம், வைராக்கியம் ஆகியன).

வேறு வேறு மதங்களாகவும் உண்மையும் பொய்யுமாகி தன்மாத்திரைகளாகவும் ஆனவன் மாயன் கண்ணன் என்பது ஆழ்வார் கூறும் உண்மை.

இப்படியும் அல்லாது அழகிய சந்தமெட்டுக்களோடு படித்துப் பார்க்க அழகையும் சிறந்த அனுபவத்தையும் தரும் பாசுரங்கள் திருச்சந்தவிருத்தத்தில் அநேகம் உள்ளன. அவற்றில் ஒரு பாடல்:

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதிநீ
சொல்லினால் படைக்கநீ படைக்கவந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்கநின் குணங்கள் சொல்லவல்லரே?

பொருள்: சொல் என்று சொல்லப்படுவது வேதங்களை. வேதங்களின் தொடர்ச்சி நீயே. வேதங்கள் சொல்லும் பொருளும் நீயே. வேதத்தாலே அளவிட்டு அறியப்படாமல் வெளிப்படும் சோதியும் நீயே. நீ கொடுத்த வேதத்தாலே படைப்பதற்குத் தோன்றிய பிரம்மனும் வெறும் சொற்களால் உன் குணங்களைச் சொல்லிவிட முடியுமா?

– பிரமனாலேயே முடியாதென்றால் மற்றெல்லோரும் எம்மாத்திரம் என்கின்ற கேள்விதான் ஆழ்வாரின் இந்தப் பாடல் மூலம் தொக்கி நிற்கும்.

***

திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடன் அந்தாதி தொண்ணூற்றுஆறு உரைத்தான் வாழியே!
அழகாரும் திருமழிசை அமர்ந்த செல்வன் வாழியே!
இன்பமிகு தையில் மகத்து இங்கு உதித்தான் வாழியே!
எழில் சந்த விருத்தம் நூற்றிருபது ஈந்தான் வாழியே!
முன்புகத்தில் வந்து உதித்த முனிவனார் வாழியே!
முழுப் பெருக்கில் பொன்னி எதிர் மிதந்த சொல்லோன் வாழியே!
நன்புவியில் நாலாயிரத்து எழுநூற்றான் வாழியே!
நங்கள் பத்திசாரன் இரு நற்பதங்கள் வாழியே!

குறிப்பு:

திரு.செங்கோட்டை ஸ்ரீராம், பத்திரிகையாளர்.

ஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தவர்

-செங்கோட்டை ஸ்ரீராம்

குலசேகர ஆழ்வார்

 குலசேகர ஆழ்வார்

(திருநட்சத்திரம்:  மாசி – புனர்பூசம்)

(மார்ச் 1)

.

சேரநாட்டை வழிவழியாக சேர மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் பெரும் சிறப்பும் புகழும் உடையவர்கள். சேரமன்னர் மரபில் அன்புக்கும் அருளுக்கும் இருப்பிடமாகத் திகழ்ந்தான் திடவிரதன் என்னும் மன்னன். அவன் கல்வியறிவில் சிறந்தவன். செங்கோல் வழுவாமல், அறநெறி பிறழாமல் ஆட்சி செலுத்தும் தன்மையில் தேர்ந்தவன். மக்களுக்கு நன்மையே செய்பவன். திருமாலின் மீது நீங்காத பக்தி கொண்டிருந்தான். அவன் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச்செய்யும் வீரன். தன்னிடம் பரிசு வேண்டி வருபவர்க்கு வேண்டிய பொருட்களைக் கொடுத்தனுப்பும் ஈகை குணம் கொண்டவன்.

இப்படி சிறப்பு பொருந்திய அந்த அரசனுக்கு அவன் செய்த தவத்தின் பயனாக திருமாலின் அருங்கருணையால் ஒரு குழந்தை (பொது யுகத்திற்குப் பின்  8-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) மாசி மாதம்,  சுக்ல பட்ச துவாதசியில்  புனர்பூச  நட்சத்திரம் கூடிய திருநாளில், விஷ்ணுவின் ஸ்ரீ கௌஸ்துப அம்சமாக அவதரித்தது. அக்குழந்தையைக் கண்டு மன்னன் அளப்பரிய மகிழ்ச்சி அடைந்தான். தலைநகர் மங்கல விழாக்கோலம் பூண்டது. வறியவர்க்கு வேண்டுவன வாரி வாரி வழங்கினான். புலவர் பெருமக்களுக்கு வேண்டிய அளவு பொன்னும் பொருளுமாகப் பரிசுகள் தந்து மகிழச் செய்தான். நகரக் கோயில்கள் அனைத்திலும் பூஜைகள் களை கட்டின.

உலகம் உய்யும் பொருட்டு திருமாலின் அருளால் வந்து பிறந்த அந்தக் குழந்தைக்கு ஊர்கூடி பெயர்சூட்டு விழா நடந்தது. முதியவர்கள் ஒன்று கூடி சேரர் குலம் செழிக்கப் பிறந்த செம்மல் என்பதால் குலசேகரன் என்று பெயர் சூட்டினர்.  குலசேகரரின் மீது பெற்றோர் அளவற்ற பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள். தங்களின் ஆருயிர் போன்று அவரை சிறிது நேரமும் விட்டுப் பிரியாது கவனமாக வளர்த்தார்கள்.

குலசேகரருக்கு ஐந்து வயதாயிற்று. அவருக்கு கற்க வேண்டிய நூல்களைக் கற்பித்தனர். செந்தமிழிலும் வடமொழியிலும் நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவி பாடவும் ஆற்றல் பெற்றார். யானையேற்றம், குதிரையேற்றம், தேர் ஓட்டுதல், வாள் சண்டை, குத்துச் சண்டை, ஈட்டி எய்தல் ஆகிய படைக்கலப் பயிற்சி பெற்று பெரும் வீரராகவும் விளங்கினார். அவரின் வீரத்தையும் கல்வியறிவையும், கலைப் பற்றையும் தெய்வ பக்தியையும் கண்டு சான்றோர்கள் போற்றிப் புகழ்தார்கள்.

குலசேகரருக்கு தக்க பருவம் வந்ததும் அவருடைய தந்தை அவரை இளவரசராக்கி மகிழ்ந்தார். தந்தையாரின் காலத்துக்குப் பிறகு குலசேகரருக்கு நல்லதொரு மங்கல நாளில் முடிசூட்டப்பெற்றது. அதன்பின் அவர் சேர நாட்டைத் திறம்பட ஆண்டு வரலானார். அறநெறி வழுவாத அவருடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

அவருடைய திறமையையும் அறிவையும் ஆட்சி செய்யும் ஆற்றலையும் கண்ட சோழ மன்னனும் பாண்டிய மன்னனும் அவர் மீது பொறாமை கொண்டனர். அவரைப் போரிலே வென்று அவமானப்படுத்தி, சேர நாட்டை தங்கள் ஆட்சிக்குள் கைப்பற்றிக் கொள்ள பேராசைப்பட்டார்கள்.

அதனால் குலசேகரரைப் போரில் வெல்லக் கருதி அவரை எதிர்த்தார்கள். ஆனால் அந்தப் போரிலே சோழ, பாண்டிய வேந்தர்களை குலசேகரர் வென்று, வெற்றிவாகை சூடினார். சேர சோழ பாண்டிய நாடுகளுடைய தமிழகத்தை ஒரு குடைக்கீழ் ஆண்டு, பெரும் சக்கரவர்த்தியென புகழ்பெற்றுத் திகழ்ந்தார். பாண்டிய மன்னன் அவருடைய வீரம் கண்டு, தன் அருத்தவப் புதல்வியை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தான்.

குலசேகரர் இப்படி வீரப்போர் நிகழ்த்தும் விருப்பம் உடையவராகவும், இல்லற வாழ்க்கையில் பெரும் இச்சை கொண்டவராகவும் வாழ்ந்து வந்தார். அப்போது பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன் அவர் மனத்திலே புகுந்து அவரிடம் உறவாடிய நான் என்ற அகங்காரத்தையும் எனது என்ற மமகாரத்தையும் நீக்கி, தன் மீது நேசம் உடையவராக மாற்றியருளினான்.

அன்று முதல் குலசேகரர், நாராயணன் அடியார்க்கு எளியவராக விளங்குவதையும், உலகத்து உயிர்களைத் தன்னுயிர்போல் காத்தருளும் தன்மையையும், அவருடைய பெருமைகளையும் உணரத்  தொடங்கினார். தாம் இதுவரை செய்த போர்களின் தன்மையை எண்ணி மனம் வருந்தினார். உலகப் பற்றில் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. பவளவாய் கமலச் செங்கண் அருளை எண்ணி மகிழ்ந்தார்.

குலசேகர ஆழ்வாருக்கு நாளாக நாளாகத் திருவரங்கப் பெருமான் மீதுள்ள பக்தி அதிகரித்தது. அவருக்கு திருமால் அடியார்களிடத்தும் திருமாலின் அவதாரக் கதைகளைக் கேட்பதிலும் ஈடுபாடு அதிகரித்தது. எப்போதும் திருமால் அடியார்களுடன் காலம் கழிப்பதிலேயே கண்ணாக இருந்தார்.

அப்படியே அவர் மனம், பெருமானின் லீலைகளில் அதிகமாக ஈடுபடலாயிற்று. கண்ணன் அருகில் இருந்தவாறான அனுபவத்தை அவர் மனத்தில் சிந்திக்கத் தொடங்கினார். கண்ணணைப் பெற்றெடுத்த தாயாகிய தேவகி அவனுடைய பால லீலைகளைப் பார்த்து மகிழும் பேற்றைப் பெறவில்லையே என்று தனக்குள் வருந்துவார். அவர் தன்னை தேவகியாகவே பாவித்துக்கொண்டு, தானே தேவகியாகவே இருந்து தன் மகன் கண்ணனைப் பற்றி உள்ளம் உருகப் பாடி மகிழ்வார். தன்னையே காதலியாக வைத்தும் பாடி மகிழ்ந்தார்.

இவ்வாறு திருமால் மீதே அன்பு பூண்டு, அடிமையாகி வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கண்ணனின் தொண்டர்கள் பலரை வரவழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவளித்து அவர்களுடைய சேவடிகளைப் போற்றினார்.

குலசேகரர் இவ்வாறு வாழ்ந்து வரும் காலத்தே, அவருக்கு புராணக் கதைகளைக் கேட்பதில் ஆர்வம் பெருகியது. அதிலும் குறிப்பாக ராமாயணக் கதை கேட்பதில் பெருவிருப்பம் உண்டானது. அதனால், அவர் நற்குண சீலரும் ராமபக்தருமான ஒரு வைணவப் பெரியவரைக் கொண்டு வால்மீகி மகரிஷி இயற்றிய ராமகதையைக் கூறக் கேட்டு வந்தார்.

குலசேகரர் ராமாயணம் கேட்கும்போது அவருடைய நெஞ்சம் நெகிழ்ந்து போகும்; கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பெருகி வழிந்தோடும். கதை கூறும் சூழ்நிலைகளிலே அவருடைய உள்ளமெல்லாம் கரைந்துவிடும். அப்படியே அவர் பக்திப் பரவசமாகித் தம்மையும் தம் சுற்றுப்புறச் சூழ்நிலைகளையும் மறந்து, அதிலேயே லயித்துவிடுவார்.

மன்னரின் வைணவ பக்தி அதிகமாகிவிட்டதை அறிந்த அமைச்சர்கள் ஒன்றுகூடி விவாதித்தார்கள். நிலைமை இப்படியே போனால் மன்னர் நாட்டை பரிபாலிப்பதை மறந்து விடுவார் என்று எண்ணினார்கள். வைணவர்களின் கூட்டுறவாலேயே மன்னர் இவ்வாறு பைத்தியமானார். அதனால் அவர்களின் கூட்டுறவை விட்டு மன்னரை விலகச் செய்ய வேண்டும். அதற்கு என்ன வழி? என்று ஆராய்ந்தார்கள். கடைசியில் ஒருவழி அவர்களுக்குப் புலப்பட்டது. வைணவர்கள் மீது ஏதாவது பழி சுமத்தி, அவர்களை மன்னரிடமிருந்து விலக்க வேண்டும் என்று யோசித்தார்கள். ஓர் உபாயத்தை செயல்படுத்தினார்கள்.

மன்னர் ஆராதிக்கும் பெருமானுடைய அணிகலப் பேழையிலிருந்து ஒரு நவமணி மாலையை யாரும் அறியாதவாறு எடுத்து மறைத்து விட்டார்கள். மறுநாள் வழக்கம்போல் குலசேரர் எம்பெருமானை ஆராதிப்பதற்காகப் பேழையைத் திறந்தார். அதிலே நவமணிமாலை இல்லாதிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். செய்வதறியாது கலங்கினார். பிறகு அமைச்சர்களை அழைத்து செய்தியைக் கூறினார்.

அமைச்சர்கள் ”வேந்தே! இந்த அரண்மனையில் இவ்விடத்தில் வருவதற்கு வைணவர்களுக்கு மட்டுமே உரிமை  உள்ளது. எனவே அவர்களில் யாரேனும் அதை திருடிச் சென்றிருக்க வேண்டும். வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை” என்றார்கள்.

”அமைச்சர்களே! அவ்வாறு கூறாதீர்கள். மாலவனின் அடியார் எவரும் இப் பாவத்தைப் புரிய மாட்டார்கள். அவர்கள் நான், எனது என்ற அக, புறப் பற்றை நீக்கிய உத்தமர்கள். பேரழகுப் பெண்களாலும் அவர்களை மயக்க முடியாது. அப்படியிருக்க அவர்கள் கேவலம் இந்த மணி மாலைக்கா மயங்குவார்கள்? நிச்சயமாக இக்கீழான செயலை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்திருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் உணரும்படி செய்கிறேன் பாருங்கள். ஒரு குடத்தில் நல்ல பாம்பையிட்டு என்னிடத்தில் கொண்டு வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

மன்னரின் கட்டளையாயிற்றே! அவர்களும் அவ்வாறே நல்ல பாம்பை ஒரு குடத்தில் வைத்து, அதைக் கொண்டு வந்தார்கள். ஆயினும் அவர்களுடைய உள்ளம் பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்தது.

குலசேகரர் அவர்களையெல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு, ”எம்பெருமான் அடியவர்கள் அம்மாலையை எடுத்திருப்பார்களானால், இந்தப் பாம்பு என்னை தீண்டட்டும்; இல்லாவிடின் அது அப்படியே வாளாவிருக்கட்டும்”  என்று கூறி, தன்னுடைய கையை அந்தக் குடத்தினுள் நுழைத்தார்.

குடத்தினுள் இருந்த நல்ல பாம்போ, அவர் கையைத் தீண்டாது, மடங்கி ஒடுங்கி முடங்கிப்போனது. வெகுநேரம் கழித்து கையை அதனுள்ளிருந்து வெளியே எடுத்தார். பாம்பும் வெளியே வந்து, படம் எடுத்தாடி அவரை வணங்கியது. அதைக் கண்ட குலசேகரர், ”இந்தப் பாம்புக்கு தீங்கு ஏதும் நேராமல் பத்திரமான இடத்தில் விட்டு வாருங்கள்” என்று பணியாளனுக்கு ஆணை பிறப்பித்தார்.

நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அமைச்சர்கள், மனம் நடுங்கினார்கள். மன்னரிடம் தங்கள் தவறைச் சொல்லி, நவரத்தின மாலையைத் திருப்பித் தந்து, தங்களை மன்னித்திடுமாறு வேண்டினார்கள். குலசேகரர் அவர்கள் அறியாமல் செய்த பிழையை மன்னித்தார்.

பின்னர் அவர்களை நோக்கி, ”அமைச்சர்களே! நீங்கள் இவ்வுலகத்து இன்பம் ஒன்றையே கருதி இப்படி எல்லாம் செய்தீர்கள். நீங்கள் இத்தகு மாயையில் இருக்கிறீர்கள். உலகப் பற்றை நீக்கி, எம்பெருமானின் திருவடிகளில் சரண் புகுந்து பாருங்கள். அதுதான் நித்திய இன்பத்தை அளிக்க வல்லது. பேரின்பப் பெருவாழ்வுக்கு வாழ வழிகாட்ட வல்லது. பெருமானின் திருவடி ஒன்றே பிறப்பறுக்கும்; எல்லாம் அறுக்கும். இவ்வளவு நடந்துவிட்ட பிறகு இனி எனக்கு இந்த அரசில் மனம் ஈடுபடாது. நான் இந்த அரசை வேண்டேன். மண்ணை வேண்டேன். திருவரங்கனின் திருவடிநிழலையே பெரிதெனப் போற்றுகிறேன். எனவே இந்த அரசை என் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு நான் திருவரங்கம் செல்லப் போகிறேன். நீங்கள் அவனுக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். நான் இனி எம்பெருமானின் திருத்தொண்டில் ஈடுபடப் போகிறேன்” என்று உறுதிபடக் கூறினார் குலசேகரர்.

மன்னரின் உள்ளத்தை இனி மாற்றமுடியாது என்பதை நன்குணர்ந்த அமைச்சர்கள் அவ்வாறே செய்ய எண்ணம் கொண்டார்கள். நல்லதொரு நாளில் குலசேகரரின் மைந்தருக்கு முடிசூட்டினார்கள். குலசேகரர் தம் மைந்தருக்கு அரசியல் திறமைகளைக் குறைவறச் சொல்லி நாட்டை ஆளும் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார். பிறகு அமைச்சர்களிடமும் மக்களிடமும் விடை பெற்று, அரங்கனின் அடியாரோடு திருவரங்கப் பெரு நகரை நோக்கிச் சென்றார். அவர்களோடு பல திருத்தலங்களுக்கும் யாத்திரை செய்தார்.

அவர் ராமபிரானிடம் அதிக பக்தி கொண்டு, ராம கதையைக் கேட்பதிலேயே அதிக விருப்பு கொண்டிருந்ததால் அவரை பெருமாள் என்றே குறிப்பிட்டனர். அதனால்தான் குலசேகரப் பெருமாள் என்ற பெயர் அவருக்கு வழங்கப்படலாயிற்று.

பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

குலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் இனியவை. இவர் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்களைப் பாடியுள்ளார். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள் அதிகம் உண்டு.

தொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.

ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!

– நான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை.  இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை.  இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.

இன்றைக்கு இறைவனைத் தொழும் அடியார்கள் சிலர், தமக்கு ஒரு கஷ்டம் என்று வந்தவுடனே, இறைவன்மீது கோபம் கொண்டு அவன் மீதான பக்தியைக் கைவிட்டுப் புலம்புவதைப் பார்க்கிறோம்.  ஆனால் உண்மையான பக்தி என்பது, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதை குலசேகராழ்வாரின் அடுத்த பத்து பிரபந்தப் பாசுரங்களில் இருந்து நாம் உணர்ந்து தெளியலாம்.

எல்லோருக்கும் கஷ்டங்கள் வரலாம். ஆனால் அதற்கான காரணமாக நாம் வணங்கும் கடவுளை எண்ணினால், அது எதையும் எதிர்பார்த்துச் செய்யும் பக்தியாகவே இருக்கும், அதற்குப் பெயர் வியாபாரம் என்பதை நாம் உணரவேண்டும். அந்த மனவுறுதியை நமக்கு அளிக்கத்தான் குலசேகராழ்வார் இந்தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

– என்பது இவர்தம் பாடல்.  மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே! ராகவனே! தாலேலோ!

இதுவும் குலசீகரரின் பாடலே. ராமபிரான் அணை கட்டி, லங்கையை அடைந்த கதையை நம் நாட்டின் பல மொழிகளில் வந்துள்ள ராமாயணங்களும் பறைசாற்றும். அந்த வகையில் ராமபிரானின் பக்தராகவே வாழ்ந்த குலசேகரப் பெருமாளும் ராமபிரான் கடலில் அணை கட்டி லங்கையை அடைந்து போர் புரிந்த வரலாற்றைத் தம் பாசுரத்தில் தெளிவுறக் காட்டுகிறார். மலைப் பாறைகளால் அந்த அணை அமைந்தது என்பது குலசேகரப் பெருமான் காட்டும் காட்சி.

மன்னராக இருக்கும்போது ஒரு வைணவப் பெரியவர் மூலம் ராமகதை கேட்டுக்கேட்டுப் பழகி ராமபிரானின் மேல் ஆறாக் காதல் கொண்டிருந்த குலசேகராழ்வார், தம் பாசுரங்களில் ராமபிரானின் சரிதத்தையும் அழகுறப் பாடியிருக்கிறார். அது கேட்பதற்கு மிக உருக்கமாக இருக்கும். இந்த வகையில், குலசேகரப் பெருமாளை கம்பநாட்டாழ்வானின் முன்னோடி என்று சொல்லலாம்.  குலசேகர ஆழ்வார் முகுந்தமாலை என்னும் சம்ஸ்க்ருத நூலையும் எழுதினார் என்று சொல்பவர்களும் உண்டு.

குலசேகராழ்வார் வாழி திருநாமம்!
குறிப்பு:
திரு. செங்கோட்டை ஸ்ரீராம், பத்திரிகையாளர்.
%d bloggers like this: