Blog Archives

இந்திய வேதியியல் துறையின் முன்னோடி

-வ.மு.முரளி

ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்

ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய்

(பிறப்பு: 1861, ஆகஸ்டு 2- மறைவு: 1944, ஜூன் 16)

விடுதலைப் போராட்டக் காலம் அது. அப்போது, பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளை ஐரோப்பாவிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. ‘நமது நாட்டு மக்களின் நோயை சரிப்படுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?’  என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.

இந்தக் கேள்வியுடன் அவர் நிற்கவில்லை. தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901-இல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார்.  இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான அந்நிறுவனம் இன்று  ஆல்போல வளர்ந்து, ரூ. 65 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதலாகக் கொண்ட பிசிபிஎல் என்ற பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்.

வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ராயின் வாழ்க்கையே தியாக மயமானது.

1861, ஆகஸ்டு 2-இல், பிரிக்கப்படாத பாரதத்தில் (வங்கதேசம்) குல்னா மாவட்டம், ராருலி கத்தபாரா என்ற கிராமத்தில், நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராய்.
தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தபோது ராய்க்கு வயது 9. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது சீதபேதியால் பாதிக்கப்பட்ட ராயின் படிப்பு இடையில் நின்றுபோனது. ஆனால் வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஆங்கில இலக்கியம், அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் படித்தார் ராய்.

அடுத்த ஆண்டு பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த ராய், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் 1879-இல் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். ஆனால் அறிவியல் மீது தீரா தாகம் கொண்ட அவரால் கலைப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

தனது ஆர்வத்தை ஈடுகட்ட, கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியின் அறிவியல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார் ராய். அங்கு அலெக்ஸôண்டர் பெட்லர் என்ற பேராசிரியரின் வேதியியல் வகுப்புகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன்காரணமாக வேதியியல் மீது ராய்க்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.

அதன் பின்விளைவாக, தனது பி.ஏ. படிப்பைக் கைவிட்டு, பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. படிக்க கப்பலேறினார் ராய். 1887-இல் அங்கு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் வெளியிட்ட ‘தாமிரம், மெக்னீசியம் தனிமக் குழுமத்தின் சல்பேட் கலப்பினம்’ என்ற ஆய்வறிக்கை  (Conjugated Sulphates of the Copper-magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combinations) அவருக்கு புகழை அளித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சபை துணைத் தலைவராக 1888-இல் தேர்வானார் ராய்.

1889-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார் ராய். அவருக்கு துறை சார்ந்த அனுபவமும் உயர் கல்வித் தகுதியும் இருந்தபோதும், ஆங்கிலேயராக இல்லாத காரணத்தால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டவில்லை. அந்த பாரபட்சத்தை எதிர்த்துப் பாராடியும் பலன் கிடைக்கவில்லை. இதுவே பின்னாளில் இந்திய வேதியியல் பள்ளி (1924) என்ற ஆராய்ச்சி மையத்தைத் துவங்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது.

வேதியியலில் புதிய சேர்மங்களை உருவாக்குவது பிரதானமானதாகும். இதில் ராய்க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1896-இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.

1916-இல் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் சேர்ந்த ராய், அங்கு தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கண்டறிந்தார்.

1921-இல் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றாலும், 1936 வரை தொடர்ந்து மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த 15 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆராய்ச்சிக்கே வழங்கிவந்தார்.

வங்க மொழியில் நூற்றுக் கணக்கான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள ராய், பிரம்ம சமாஜ அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். 1923-இல் வடக்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின்போது நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து அந்தக் காலத்திலேயே ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டி மக்களுக்கு உதவினார்.

இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான ‘ரச ரத்னாகரா’ நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922-இல் ஒரு விருதை உருவாக்கிய ராய், அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்தார்.

தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு குடும்ப வாழ்க்கை சுமையாகக் கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாக வாழ்ந்த ராய், 1944, ஜூன் 16-இல் மறைந்தார்.

தனது சுயசரிதையை இரு பாகங்களாக, ‘வங்க வேதியியலாளரின் வாழ்க்கையும் அனுபவங்களும்’ என்ற தலைப்பில் (1932, 1935) வெளியிட்டார் ராய்.

சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ராய், பண்டைய நூல்களில் இடம்பெற்ற வேதியியல் கருத்துகளை இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த, ‘இந்து ரசாயன சாஸ்திர சரித்திரம்’  என்ற நூலை இரண்டு பாகங்களாக (1906, 1909) எழுதி வெளியிட்டார்.

விடுதலைப் போராட்டத்திலும், காதி இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய ராய், பொருளாதாரத் தன்னிறைவே உண்மையான சுதந்திரத்தை அளிக்கும் என்றார். அவரது சுதேசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையே அதுதான்.

இந்தியாவில் வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு ராயின் பங்களிப்பு முதன்மையானது. அவரது வேதியியல் அறிவு தேச எல்லை கடந்தது. ‘தலைசிறந்த வேதியியல் மேதை’ என்று லண்டனிலுள்ள ‘ராயல் சொஸைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி’யால் அறிவிக்கப்பட்ட, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்ந்த முதல் விஞ்ஞானி பிரஃபுல்ல சந்திர ராய் தான்.

 

நன்றி: தினமணி இளைஞர்மணி (15.12.2015)

Advertisements

லட்சியத்தில் இணைந்த நட்சத்திரப் பொறிகள்

-என்.டி.என்.பிரபு

ராஜகுரு, பகத் சிங், சுகதேவ்

ராஜகுரு, பகத் சிங், சுகதேவ்

பகத் சிங்

(பிறப்பு: 1907,  செப். 27 – பலிதானம்: 1931 மார்ச் 23)

ராஜகுரு

(பிறப்பு: 1908,  ஆக. 24- பலிதானம்: 1931 மார்ச் 23)

சுகதேவ்

(பிறப்பு: 1907,  மே 15- பலிதானம்: 1931 மார்ச் 23)

 

பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் 1919 ஏப்ரல் 14-ஆம் நாள் நடத்தப்பட்டது.

பல ஆயிரக் கணக்கான மக்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்க மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது அந்த இடம் ஆங்கிலப் படையால் சுற்றிவளைக்கப்பட்டது.

ஜெனரல் டயர் சுட உத்தரவிட்டவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தப்பி ஓட வழியின்றித் தவித்தனர். அங்கிருந்த ஒரு கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைவிட மிதி பட்டும் கிணற்றில் குதித்தும் இறந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். 90 துப்பாக்கிகளால் 10 நிமிடத்தில் 1,650 ரவுண்டுகள் சுடப்பட்டதாக கூறாப்படுகிறது. இறந்தவர்களின் முழுக் கணக்கு மறைக்கப்பட்டது.

அங்கே ஒரு 11 வயது சிறுவன் சென்றான். அந்த கோரக்காட்சியைக் கண்டு மனம் கொதித்தான். அங்கிருந்த ரத்த மண்ணைக் கையால் அள்ளினான்; சபதம் ஏற்றான்,  ‘ஆங்கிலேயர்களை பழிவாங்காமல் விட மாட்டேன்’ என்று. அவன் பெயர் பகத்சிங்.

இந்த சபத்தை நிறைவேற்ற அவருடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்ட இளைஞர்கள் ராஜகுரு, சுகதேவ்.

பகத் சிங், பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டம், பங்கா என்னும் ஊரில் 1907-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று பிறந்தார்.

ராஜகுரு, மகாராஷ்டிரா மாநிலம் பூனா அருகே உள்ள (Khed) கெஹெட் என்னும் இடத்தில் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று பிறந்தார்.

சுகதேவ் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் 1907-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிறந்தார்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும், 1919 -ஆம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையால் உந்தப்பட்டவர்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

விடுதலையை தங்கள் லட்சியமாகக் ஏற்றுக் கொண்ட இவர்கள், அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினர். அதற்கு புரட்சிப் பாதையில் ஈடுபடுவது என முடிவெடுக்கின்றனர்.

ஒத்த கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி  ‘ஹிந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு’ கட்சியை 1926-ஆம் ஆண்டு தொடங்கினர்.  ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே  அக்கட்சியின் திட்டம்.

1928 -ஆம் ஆண்டு சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவித்தபோது அதில் இவர்களின் அமைப்பும் ஈடுபட்டது.

அக்டோபர் 30 -ஆம் தேதி சைமன் கமிஷனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதில் கலந்துகொண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான லாலா லஜபதிராய் படுகாயமுற்றார். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நவமபர் 17 -ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.

இந்த இளைஞர்களை இச்சம்பவம் மிகவும் கோபமுறச் செய்தது. பகத்சிங்கும், ராஜகுருவும் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவாயினர்.

விவசாயிகள் மத்தியிலும், தொழிலாளர்கள் மத்தியிலும் விடுதலை வேட்கையை ஏற்படுத்தினர். ஆங்கில அரசும் தொழிலாளர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு ‘தொழில் தகராறு சட்ட வரைவு’ என்ற ஒன்றை கொண்டுவந்தது.

இந்த தொழில் தகராறு சட்ட வரைவுவை எதிர்த்து ‘சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்’ குண்டு வீசுவதென்று பகத் சிங்கும் அவரது தோழர்களும் தீர்மானித்தனர். 1929-ஆம் ஆண்டு, ஏப்ரல் 8 அன்று இச் சட்ட வரைவை நிறைவேற்ற இருந்தனர். புரட்சியாளர்கள் பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டனர். இவர்கள் ஒரு திட்டம் வைத்திருந்தனர். தொழில் தகராறு சட்ட வரைவு நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் வந்தபோது, உறுப்பினர்கள் யாரும் இல்லாத பகுதியை நோக்கி அதிக சத்தம் மட்டுமே வரக்கூடிய குண்டுகளை வீசினர். கையால் எழுதப்பட்ட காகிதங்களையும் வீசினர். அதில்  “செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் இந்தக் குண்டை வீசினோம்’’ என்று எழுதப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் பகத்சிங், ராஜகுரு,  சுகதேவ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் குண்டு வீசி, துண்டுப்பிரசுரம் வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆங்கில காவல்துறை அதிகாரி சாண்டர்ஸை சுட்டுக்கொன்ற வழக்கில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் தொடர்பு தெரியவரவே, அவ்வழக்கும் விசாரிக்கப்பட்டு, மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனைக்காக குறிக்கப்பட்ட நாள் மார்ச் 24, 1931. ஆனால் 1931 -ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதியே மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அப்போது ராஜகுருவுக்கு 23 வயது, பகத்சிங், சுகதேவ் ஆகியோருக்கு 24 வயது. அஞ்சாநெஞ்சம் கொண்டு விளங்கிய இவர்கள் சாவைக் கண்டு சலனமோ, கலக்கமோ, வருத்தமோ இன்றி தைரியமாக தூக்கை எதிர்கொண்டனர்.

லாகூர் சிறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் உடல்களை சிறைசாலைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அதிகாரிகள் கொண்டுசென்று  எரித்து, சாம்பலை சட்லெஜ் நதியில் கரைத்துவிட்டனர்.

மகாத்மா காந்தி கேட்டுக்கொண்டிருந்தால் இவர்களின் தூக்கு தவிர்க்கப்பட்டிருக்கும் என்று ஒரு சர்ச்சையும் உள்ளது. பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை தூக்கிலிட்ட சமயத்தில் கராச்சியில் அகில இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. காந்திஜியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. பல ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

‘பகத்சிங், சுகதேவ், ராகஜ்குரு ஆகிய இளைஞர்கள் போராடிய விதத்தைத் தான் ஏற்கவில்லையே தவிர, அவர்களது நோக்கம் புனிதமானது. அவர்களது தியாகம் விலைமதிப்பற்றது. அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறோம்’ என்று தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், தண்டனை குறைக்கப்படும் என்ற ஆசை வார்த்தை கூறப்பட்டும் அதை பகத்சிங் ஏற்கவில்லை. தன் உயிரை ஈந்தேனும் இந்த நாட்டு மக்களின் விடுதலை உணர்வை தட்டி எழுப்பவே விரும்பினார் பகத்சிங். பகத்சிங் இறுதியாக எழுதியது:

“நீங்கள் எங்கள் உயிரைக் கொல்லலாம். லட்சியங்களைக் கொல்ல முடியாது. சாம்ராஜ்ஜியங்கள் ஒரு நாள் அழியும். ஆனால் லட்சியங்கள் என்றும் நிலைக்கும்.”

 .

காண்க:

ஸ்வதந்திர கர்ஜனை- 23

 

தமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி

-என்.டி.என்.பிரபு

தீரர் சத்தியமூர்த்தி

தீரர் சத்தியமூர்த்தி

(பிறப்பு: 1887, ஆக. 18- மறைவு: 1943 மார்ச் 28)

இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணிய ஆங்கிலேய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து “இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லையென்றால், யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டார்.

“யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல.  அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்” என்றார் அந்த சுதந்திரப் போராட்ட வீரர். இந்த பதிலைக் கேட்டு ஜேம்ஸ் அதிர்ந்து விட்டார். இவ்வாறு துணிச்சலாக கூறியவர்  சத்தியமூர்த்தி. இப்படி பல வகையிலும் துணிச்சலாக அவர் நடந்து கொண்டதால், அவர் ‘தீரர் சத்தியமூர்த்தி’ என்று புகழ்ந்து பாராட்டப்பட்டார்.

அந்த வீரர் பிறந்தது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமயம் ஆகும். 1887, ஆக. 18-ம் நாள் பிறந்தார்.  தந்தை சுந்தரேச சாஸ்திரி. திருமயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சத்தியமூர்த்தி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.

படிக்கும்போதே, எந்தத்  தலைப்பாக இருந்தாலும், சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்தார். இவரது சொற்பொழிவு கேட்போரை மெய்மறந்து கேட்கச் செய்திடும் வல்லமை உடையது. ஒருமுறை வடமொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்து தமிழில் சொற்பொழிவாற்றும் இவர், அனைவரும் வியக்கும்படி வடமொழியில் ஆற்றினார். இந்நிகழ்வு வடமொழியிலும் இவருக்கு புலமை இருந்ததைத் தெளிவுபடுத்தியது.

நாடகத்தில் நடிப்பது,  இயக்குவது ஆகியவற்றில்  ஆர்வம் கொண்டிருந்தார்;  பம்மல் சம்மந்த முதலியார் அவர்களின் நாடகத்தில் நடித்துள்ளார்;  திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்;  தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.

வழக்கறிஞரான இவர் நாட்டுப்பற்று கொண்டிருந்ததால்,  நாட்டு  விடுதலைக்காப் போராடி வந்தார். ‘ஹோம் ரூல்’ இயக்கத்தில் பங்கேற்றிருந்தபோது அவ்வியக்கத்துடன் உண்டான கருத்து வேறுபாட்டினால், அதிலிருந்து விலகினார். பின் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

1919ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு நவீன  அரசியல் கோட்பாடுகளை கற்றார். அவற்றை நம் நாட்டிற்கு எடுத்துக் கூறி வழிநடத்தவும் செய்தார். காங்கிரஸ் பேரியக்கம் 1992ல் பிளவுபட்டு ‘சுயராஜ்யக் கட்சி’ உதயமான போது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

1923-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். சென்னை மாநகராட்சியிலும் உறுப்பினரானார். சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றார். 1936-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.

1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை பாதிக்கப்ட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அவரால் முன்பு போல் பொதுவாழ்வில் ஈடுபட முடியாமல் போனது. 1943, மார்ச் 28-ம் நாள் சத்தியமூர்த்தி  இயற்கை எய்தினார்.

இவரைப் போன்ற பலரின் தியாகமே நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது.  கர்மவீரர் காமராஜரின்  அரசியல் குருவாக தீரர் சத்தியமூர்த்தி   போற்றப்படுகிறார்.

தீரர் சத்தியமூர்த்தி,  இலக்கியம், நாடகம்,  திரைப்படம்,  அரசியல் என பல துறைகளில் ஈடுபட்டு முழுமை பெற்ற மனிதராக வாழ்ந்ததை நினைப்போம். அவரது  பல்துறை ஆர்வத்தையும் தேச நேசத்தையும் நாமும் நம்முள் காண்போம்.

.

விவேகானந்தரின் குரு

-ஆசிரியர் குழு

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்

ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சர்

(அவதாரம்: 1836, பிப். 18 – முக்தி: 1886, ஆக. 16)

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் கதாதர் சாட்டர்ஜி 19-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

***

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனை துளிகள்:

ஒருவன் வாழ்வில் இறைவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்ற பின்னரே பிறருக்குப் போதனை செய்ய முன்வர வேண்டும். அப்போது தான் அது நல்ல பயனைப் பிறருக்குத் தரும். மனிதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அவனைப் பெரிதும் பாதிக்கின்றன. அதனால் தெய்வீகப் படங்களை, நாம் இருக்குமிடத்தில் எப்போது கண்ணில் படும் வகையில் வைத்திருப்பது நல்லது. அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும். செடி பெரிய மரமான பிறகு, அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக் கூட அதில் கட்டி வைக்கும் அளவிற்கு வலிமை அந்த மரத்திற்கு உண்டாகி விடும். அதைப் போல பக்குவம் உண்டான மனிதனுக்கும் உலக விஷயங்கள் எந்த இன்னலையும் உண்டாக்குவதில்லை.

இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையனுபூதி பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும். உலக வாழ்க்கையில் இருப்பவர்கள் பலவிதமான கடமைகளால், ஆசைகளால், சூழப்பட்டிருக்கிறார்கள்; அதிலும் சாதனையின் ஆரம்ப காலத்தில் இருப்பவர்கள் பலவிதமான தடைகளைச் சந்திக்க
வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்களின் கவனம் சிதறுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை ஒன்று:

குரு ஒருவரை, அவருடைய சிஷ்யன் கேட்டான், “குருவே, இறைவனைக் காணும் வழியை எனக்குச் சொல்லுங்கள்”, என்று.

அவரும், “என்னுடன் வா, காட்டுகிறேன்”, என்று கூறி, அந்த சிஷ்யனை அருகிலிருந்த ஒரு ஏரிக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் தண்ணீரில் இறங்கினர். திடீரென்று, குருவானவர், சிஷ்யனின் தலையைப்  பிடித்துத் தண்ணீருக்குள் அமிழ்த்தினார். சில நிமிடங்கள் கழித்துதான் அவனை விடுவித்தார். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த சிஷ்யன், ஒருவழியாக விடுபட்டு எழுந்து நின்றான்.

“எப்படி இருந்தது?” என்று குரு கேட்டார்.

“என்னால் மூச்சே விட முடியவில்லை. தவித்துப் போய் விட்டேன். செத்து விடுவேன் என்றே நினைத்தேன்”, என்றான் சிஷ்யன்.

“இதைப் போலவே சுவாசத்தை இழந்தாற்போல இறைவனுக்காக எப்போது தவிக்கிறாயோ, அப்போது அவனைக் காண்பாய்” என்றார், குரு.

.

விடுதலையின் போர்ப்படைத் தளபதி

-இல.நாராயணன்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

(பிறப்பு: 1897, ஜன. 23 – மாயம்: 1945, ஆக. 18)

‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள்… உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன்’’  என்று  முழங்கியவர் நேதாஜி.

ஆறரை அடி உயரம், அப்பழுக்கில்லாத குழந்தை முகம், அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கருவிழிகள், சொக்க வைக்கும் செக்கச் சிவந்த மேனி…

தூய கதராடை, துள்ளும் புலி நடை… இதுதான் சுபாஷ் சந்திரபோஸ்.

துறவியாக விரும்பி, ஞானியாக வாழ்ந்து, வீரனாக மாறி, தியாகியாக பரிணமித்து, எரி நட்சத்திரமாய் உதிர்ந்து போன ஓர் உத்தமத் தலைவர்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் தன்னிகரில்லாத தலைவர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் பிறந்த அதே வங்க மண்ணில் பிறந்தவர் நேதாஜி.

வங்கத்தில் கோடாலி என்னும் கிராமத்தில் 1897, ஜன. 23 ம் தேதி பிறந்தார். தந்தை  ஜானகிநாத் போஸ். தாய் பிரபாவதி தேவி 14 குழந்தைகளில் சுபாஷ் 9-வது குழந்தை.

16 வயதில் துறவியாக வேண்டும் என விரும்பி வீட்டை விட்டு வெளியேறி சில மாதங்கள் சுற்றி அலைந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்து படிப்பைத் துவங்கினார்.

கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது,  இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதற்காக பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார். அதனால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

லண்டன் சென்று ஐ.சி.எஸ். படித்தார்.  24 வயதில் அரச போகம் அனைத்தையும் தரும் ஐ.சி.எஸ். பட்டத்தை உதறினார்.

35 -ஆவது வயதில் கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்ப்பணித்தார்.

42- வது வயதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். நேதாஜியை எதிர்த்து பட்டாபி சீதாராமையாவை போட்டியிடச் செய்தார் காந்திஜி.

நேதாஜிக்கு கிடைத்த வாக்குகள் 1,580. பட்டாபி சீதாராமையாவுக்கு கிடைத்தது 1,317.  ‘பட்டாபியின் தோல்வி என் தோல்வி’  என்று அறிவித்துவிட்டு காங்கிரஸ் மாநாட்டுக்கே போகாமல் ஒதுங்கி நின்றார் காந்திஜி.

“சுபாஷ் சந்திரபோஸ் ஓர் ஓட்டைப் படகு” என்று ராஜாஜி வர்ணித்தார்.  இதை எதிர்த்து சத்தியமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், ஜீவானந்தம் போன்ற தமிழ்நாட்டு தீவிரவாத காங்கிரஸ் தலைவர்கள் சுபாஷை ஆதரித்தனர். ஜவஹர்லால் நேரு, அச்சுத பட்டவர்த்தன் ஆகியோர் நடுநிலை வகித்தனர்.

காந்திஜியின் கோஷ்டியைச் சார்ந்த காரியக் கமிட்டி உறுப்பினர்கள் 12 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் மனமுடைந்த நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு வார்தாவில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி நேதாஜியை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே மூன்று ஆண்டுகளுக்கு விலக்கி வைத்தது.

அதன் பின்னர் சுபாஷ் ‘பார்வர்டு பிளாக்’ கட்சியைத் தொடங்கினார். முத்துராமலிங்க தேவரும், எஸ். சீனிவாச ஐயங்காரும் தமிழகத்தில் அக் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றனர்.

44 வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றார். ஜெர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து தற்காலிக சுதந்திர அரசை அமைத்து, இந்திய தேசிய ராணுவத்தை திரட்டி, போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையைப் படைத்தார்.

ஆயுதப் போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெர்மனி சென்று ஹிட்லரைச் சந்தித்தார். இந்தியாவின் வருங்கால சர்வாதிகாரியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன் என்று ஜெர்மன் சர்வாதிகாரி சொன்னதற்கு,  “சுதந்திர  பாரதத்தை உருவாக்க மட்டுமே உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்”  என்று பதிலளித்தாராம் போஸ்.

ஜெர்மனியில் இருந்தபோது போஸ் துவக்கிய ‘இந்திய சுதந்திர  அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மனி அரசு நிதி உதவி அளித்தது. 1944 -ம் ஆண்டின் இறுதியில் இந்திய நாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிய நிதியிலிருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மனி தூதரிடம் கொடுத்து கடனைக் கழித்தார் போஸ்.

அவரது தாரக மந்திரம்  ‘ஜெய் ஹிந்த்’. அதாவது  ‘வெல்க பாரதம்’. அதை நேதாஜிக்கு அறிமுகப் படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்.

பர்மாவில் மேஜர் ஜெனரல் ஆங்சான் எனும் புரட்சி தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை  எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் நாடினர். ‘இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ) என்பது ஒரு கூலிப்படை அல்ல’ என்று கூறி சுபாஷ் அவ்வாறு செய்ய மறுத்தார்.

ஜப்பானில் ஏற்கனவே இந்திய தேசிய ராணுவத்தை அமைத்திருந்த ராஷ் பிஹாரி போஸ் உதவியுடன் மீண்டும் அதனை அமைத்து, அப்படையைக் கொண்டு பிரிட்டீஷ் இந்திய அரசு மீது போர் தொடுத்தார் நேதாஜி. அப்போது அவர் அளித்த முழக்கம் தான் ‘தில்லி சலோ’. துரதிர்ஷ்டவசமாக இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் அடைந்த வீழ்ச்சியால்  இந்திய தேசிய ராணுவத்தின் முயற்சி வீணானது.

1943ல் நேதாஜியின் படை பிரிட்டிஷாரிடமிருந்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைக் கைப்பற்றியது. நேதாஜி செய்த முதல் வேலை அந்தத் தீவுகளுக்கு  ‘ஷாஹீத்’(தியாகம்) மற்றும் ‘ஸ்வராஜ்’ (சுயராஜ்யம்) என்று பெயர் மாற்றியதுதான்.

1945, ஆக. 18-ம் தேதி தைபேவில் ஒரு விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தைவான் அரசோ அப்படி அன்று ஒரு விமான விபத்தே நடைபெறவில்லை என்றது.

இதுவரை  நேதாஜி மறைவு குறித்து 12 கமிஷன்கள் விசாரித்துள்ளன. ஆனாலும் அவரது மரணம் இன்றும் மர்மமாகத் தான் உள்ளது.

.

குறிப்பு:

மறைந்த திரு. இல. நாராயணன், ஆன்மிக, தேசிய எழுத்தாளர்.

நன்றி: விஜயபாரதம்

%d bloggers like this: