Blog Archives

இனிய துவக்கம்….

-ம.கொ.சி.ராஜேந்திரன்,

மாநில அமைப்பாளர்,

தேசிய சிந்தனை கழகம்,

சென்னை.

***

அனைவருக்கும் வணக்கம்!  

வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று நமது தேசிய சிந்தனை கழகம் சார்பில் தேசமே தெய்வம் என்கின்ற இணையதளம் துவக்கப்படுகிறது.

இன்றைய உலகம் விஞ்ஞான சாதனைகளால் பிரமாண்டத்தைக் காட்டும் வளத்தையும் வலிமையையும் பெற்றுள்ளது. மேலும் எந்த மனிதனையும் தொடர்பு கொள்வதும் எந்த ஒரு நிகழ்வைக் காணும் அற்புதக் காட்சியையும் விஞ்ஞானத்தால் பெற முடிகிறது. ஆனால் அதே சமயத்தில் உலகத்தை சுருக்கிய கண்டுபிடிப்புகள்,  பல்வேறு தேசங்களில் வாழும் மக்களின் உள்ளங்களைச் சுருக்கிய தன்மையையும் வருத்தத்தோடு காண முடிகிறது.

அறிவியல், பொருளாதாரம், கல்வி, அரசியல்,  இலக்கியம் போன்ற எல்லாத் துறைகளிலும் உயர்ந்த நிலையுடன் உதாரணங்களுடன் கூடிய, ஆளுமைத் திறனுள்ள, வழிகாட்டுகின்ற தலைவர்களோ, முன்னோடிகளோ இல்லாத ஒரு வெற்றிடத்தை நம் நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறை சந்தித்து வருகிறது.

பரந்து விரிந்த உலகில் தோன்றிய நாகரிகங்கள்  எல்லாம் தங்கள் அடையாளங்களாக கட்டடங்களையும் சில நூல்களையுமே விட்டுச் சென்றிருகின்றன. ஆனால் அன்றுமுதல் இன்று வரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அறுந்திடாத தொடர்ச்சியாக தனது பண்பாட்டையும் கலாசாரத்தையும் உயிரோட்டமுள்ளதாக ஜீவித்து வருவது பாரத கலாச்சாரம்  மட்டும் தான்.

மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் கிழகத்திய நாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அவை தங்களது பண்பாட்டின் சுவடுகளைக் காப்பாற்றி கொண்டுதான் இருக்கின்றன. அவ்வழியில் நமது பாரத தேசம் நமது  உயிர்நாடியாக விளங்குகின்ற- அதே சமயத்தில் உலகிற்கே வழிகாட்டக் கூடிய- தர்மத்தை மையமாகக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்வது கண்கூடு.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளானாலும் சரி, பொருளாதாரச் சீர்கேடுகள் ஆனாலும் சரி,  மனிதர்களின் பேராசையினால் ஏற்படும் வன்முறைகள் ஆனாலும் சரி,  வல்லரசு நாடுகளில் ஆதிக்கப் போக்கினால் விளையும் கெடுபிடிகளானாலும் சரி,  எல்லாவற்றுக்கும் தீர்வினைத் தரக்கூடிய நாடு உண்டென்றால் அது பாரத தேசம் தான்.

இத்தகை பெருமை வாய்ந்த பாரத தேசத்தின் மக்களாகிய நாம், நம்முடைய தேசத்தின் அடிநாதமாக விளங்கக் கூடிய தேசிய உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வண்ணமாக, நம்மை ஒருங்கிணைக்கும் தளமாக,  தேசிய சிந்தனைக் கழகம். “தேசமே தெய்வம்” என்ற இந்த இணையதளத்தைத் துவக்கிறது.

இச்சீரிய முயற்சியில் பங்குபெற அறிவியல் பெருமக்கள், கல்வியாளர்கள்,  தேசியச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்  மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள்  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவருக்கும் விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்!
.
ஜய ஆண்டு, புரட்டாசி மாதம், 17ம் தேதி,
வெள்ளிக்கிழமை
(03.10.2014)
.
Advertisements
%d bloggers like this: