Blog Archives

இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

-பேரா. தி.இராசகோபாலன்

b6516-nivedita

சகோதரி நிவேதிதை

 

சகோதரி நிவேதிதை

(பிறப்பு:  1867, அக். 28- மறைவு: 1911, அக். 11)

நிவேதிதை-150வது ஆண்டு  துவக்கம்

.

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து, தானே முளைக்கின்ற விதை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமோக விளைச்சலைத் தரும். அப்படி அயர்லாந்திலே இருந்து வந்து இந்திய மண்ணில் விழுந்த விதைதான், சகோதரி நிவேதிதா.

1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாளில், சாமுவேல் ரிச்மென்ட் நோபில் எனும் தந்தைக்கும் – மேரி இசபெல் எனும் தாய்க்கும் மகவாக, அயர்லாந்து மண்ணில் மார்க்ரெட் எலிசபெத் நோபில் எனும் பெயரில் ஓர் அரும்பு முளைத்தது. தந்தை சாமுவேல் ஒரு மதபோதகர்.

என்றாலும், ஏழ்மையை ஆணிவேரிலிருந்து அகற்றுவதுதான் மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மகளுக்குப் பாலபாடமாகப் படிப்பித்தார். பெற்ற தந்தையால் விதைக்கப்பட்ட வித்து, ஹாலிபேக்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்த மார்க்ரெட் நெஞ்சில், ஞானத்தந்தையாகிய சுவாமிஜி விவேகானந்தரால் நீரூற்றி வளர்க்கப்பட்டது.

சிகாகோ நகரில் சுவாமிஜி வெளிப்படுத்திய ஆன்மிக ஆவேசம், இலண்டனிலிருந்த மார்க்ரெட் மனத்தில் எக்ஸ்ரே கதிர்களாகப் பரவியது.

1895-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த தமது சீடர் இசபெல்லா மார்க்கஸன் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்த இருந்த பிரசங்கத்திற்கு இசபெல்லா தம் தோழியாகிய மார்க்ரெட்டையும் அழைத்திருந்தார். சுவாமிஜியின் புதிய வெளிச்சத்தில் அனைவரும் வழி கண்டனர், மார்க்ரெட்டைத் தவிர.

சமூக ஏற்றத்தாழ்வு எனும் புண்ணிற்குப் போதிமரத்துப் புத்தன் தான் புதிய மருந்து தடவுவான் என எண்ணியிருந்த மார்க்ரெட், சுவாமிஜியிடம் எதிரும் புதிருமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

மலை கலங்கிலும், கடல் கலங்கிலும் நிலை கலங்காத சுவாமிஜி, “மகளே, என்னை ஏற்றுக்கொள்வது சிரமமே, புரிகிறது. அது தவறும் இல்லை. என்னுடைய குருவான பரமஹம்சரிடம் ஆறு ஆண்டுகள் போராடிய பிறகே அவரை நான் ஆசாரியனாக ஏற்றேன். அதனால் சந்தேகங்கள் கிளம்பிப் பதில் கிடைக்கும் போதுதான், ஒவ்வொரு விஷயமும் தெளிவாகப் புரியும்” என்றார்.

சுவாமிஜியின் அடுத்தநாள் சொற்பொழிவுக்கும் மார்க்ரெட் சென்றார். தீட்சா ரகசியங்களில் ஆழங்காற்பட்டிருந்த சுவாமிஜி,  “இந்தியா முன்னேற, உலகின் ஆன்மிக மகுடம் தரித்திருக்கும் பாரதத்தின் துயர் தீர்க்க, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் இவற்றிற்குத் தொண்டாற்ற, துணிவே துணை என கொள்கை தீபம் ஏற்றும் பல புத்தர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணியில் உங்களில் யார் அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்கள் தொண்டுக்கு நான் கடைசிவரை தோள் கொடுப்பேன்” என்றார்.

சுவாமிஜியின் ஞானஸ்நானத்தில் முழுமையாக நனைந்த மார்க்ரெட்,  “இந்தியாவுக்கு எப்போது புறப்பட வேண்டும் சுவாமிஜி?” என்றார். சுவாமிஜி,  “மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதை, தோல்களைப் பிளந்து கொண்டு வெளியே தலைகாட்டும்வரை காத்திரு” எனக் கூறிச் சென்றார்.

சுவாமிஜியின் இசைவு பெற்று, மார்க்ரெட் 28.01.1898 அன்று கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். மாம்பசா எனும் கப்பலின் மூலம் வந்த மார்க்ரெட்டை சுவாமிஜியே துறைமுகத்திற்குச் சென்று வரவேற்கின்றார். மார்க்ரெட் முதல் வேலையாகப் பரமஹம்சர் நிர்மாணித்த தட்சிணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.

சுவாமிஜி 1898 மார்ச் 11-ஆம் நாளன்று, கல்கத்தா ஸ்டார் தியேட்டரில் மார்க்ரெட்டை அறிமுகப்படுத்துகிறார். மார்க்ரெட் எனும் பெயரை மாற்றி, நிவேதிதா என நன்னீராட்டுகின்றார்.  “இந்தியாவுக்கு இங்கிலாந்து சில நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் தலையானது சகோதரி நிவேதிதா எனக் குறிப்பிடலாம்” என்றார் சுவாமிஜி.

மார்ச் 17-ஆம் நாள் சகோதரி நிவேதிதா, அன்னை சாரதா தேவியைச் சந்திக்கிறார். அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் கையிலிருந்த கைக்குட்டையால் பாதங்களில் படிந்திருந்த தூசியைத் துடைக்கிறார்.
அன்னையும் என் மகளே (வங்காளத்தில் கோக்கி) என்று வாரி அணைத்து, உச்சிமுகந்து ஆசீர்வதித்தார். அன்னையின் குடிலில் தங்கத் தொடங்கிய பிறகு, நிவேதிதா ஓர் இந்து பெண் சந்நியாசியாகவே மாறிவிடுகிறார்.

சகோதரி நிவேதிதாவின் தொண்டு வாழ்க்கையில் – அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் இடிதாங்கி மேலேயே இடி விழுந்தது போன்றதோர் துயரம் ஏற்பட்டது. சுவாமிஜி, 1902 ஜூலை 4-ஆம் நாள் இரவு அமரத்துவம் அடைந்த செய்தி, பேலூர் மடத்திலிருந்து சகோதரி நிவேதிதாவிற்கு தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சகோதரி, இராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலிலிருந்து இரண்டாவது முறையாக உயிர்பிரிந்து மேலே செல்லுவதுபோல் கனவு காணுகிறார். உடனடியாக அவர் பேலூர் மடத்திற்கு விரைகிறார்.

படுக்கையில் அமர்த்தப்பட்டிருந்த சுவாமிஜியின் தலைமாட்டில் அமர்கிறார். உட்கார்ந்த நேரத்திலிருந்து சுவாமிஜியின் புகழுடம்பு, நீராட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வரையில், பனையோலையால் செய்யப்பட்ட விசிறியால் விசிறிக்கொண்டேயிருந்தார்.
சுவாமிஜியின் புகழுடம்பு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, சுவாமிஜியின் உடம்பின்மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியிலிருந்து ஒரு துண்டு வெட்டித் தரும்படி, மடத்துத் தலைவர் சுவாமி சாரதானந்தாவிடம் வேண்டுகிறார். அவரும் சம்மதித்தாலும், அச்செயல் சுவாமிஜியின் புனிதயாத்திரை நேரத்தில் சரியாக இருக்குமா எனச் சிந்தித்து அவரே வேண்டாமென்று மறுதலிக்கிறார்.

ஆனால், தகனத்தின்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. தகனத்தின்போது, தீயின் கடைசி கங்கு அணைகின்ற வரையில் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நிவேதிதா. அப்போது தமது அங்கியின் பின்புறத்தை யாரோ பின்னாலிருந்து இழுப்பதுபோன்று ஓர் தொடுவுணர்ச்சி நிவேதிதாவிற்கு ஏற்படுகிறது.

திடீரென்று எரிந்து கொண்டிருந்த புகழுடம்பிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி புறப்பட்டு வந்து நிவேதிதாவின் மடியில் விழுகிறது. அதனை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்ட நிவேதிதா, அது தம்முடைய குருஜியின் கடைசி ஆசீர்வாதம் எனக் கருதி, அதனைத் தம்முடைய அமெரிக்கத் தோழி, ஜோசப் மேக்லியோடிக்கு அனுப்பிவிடுகிறார்.

1905-ஆம் ஆண்டு காசி காங்கிரசை முடித்துக்கொண்டு, மகாகவி பாரதி கல்கத்தா வழியாகச் சென்னைத் திரும்ப நினைத்தபோது, கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் சகோதரி நிவேதிதா தங்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றார். அத்தரிசனம் ஒரு தெய்வ தரிசனமாயிற்று. ஒரு குருஜிக்குச் சீடராக வந்த நிவேதிதா, ஒரு மகாகவிக்கு ஞானகுருவாகிறார்.

தம்முடைய படைப்புகளை எந்தத் தனிமனிதருக்கும் சமர்ப்பிக்காத மகாகவி பாரதி, ஞானரதம் போன்ற நான்கு படைப்புகளை ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் அன்னை நிவேதிதாவிற்குச் சமர்ப்பித்து, “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, சுதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில், இச்சிறு நூலில் ஸமர்ப்பிக்கின்றேன் சுதேசிய பாடல்களை சமர்ப்பிக்கின்றேன்” என்று எழுதுகிறார்.

அடுத்து ‘ஜென்மபூமி’ எனும் தலைப்பில் வெளியிட்ட சுதேசிய கீதங்களையும், “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீநிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றவாறு எழுதி, குருவணக்கம் செய்கிறார்.

மேலும், நிவேதிதாவின் குரு உபதேசத்தை, “சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் … பெற்றதை ஏதென்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினர் தோழி” என ‘ குரு உபதேசம்’ எனும் தலைப்பில் பரவசப்பட்டுப் பாடுகிறார்.

சுவாமிஜி அமரத்துவம் அடைந்த பின்னர், சகோதரி நிவேதிதா ஆன்மிகப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்.

அரவிந்தருடனும், அனுசீலன் சமிதி எனும் இரகசிய புரட்சியாளர்களுடனும் இணைந்து, இந்திய விடுதலையில் தீவிரவாதம் காட்டுகிறார். கவிஞர் இரவீந்திரநாத தாகூர், நிவேதிதாவின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சுகிறார். வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராடியதில் லார்ட் கர்சானுக்கே ஒரு நடுக்கம் ஏற்படுகின்றது.

1911-ஆம் ஆண்டில் நிவேதிதா நோய்வாய்ப்பட்டுள்ளார். 06.10.1911 அன்று தம்முடைய சொத்துகளையும், உடைமைகளையும் தாம் தோற்றுவித்த பள்ளிக்கே சேருமாறு உயில் எழுதி வைக்கிறார். அச்சொத்துகளைப் பராமரிக்கின்ற உரிமையை பேலூர் மடத்தின் ஆதீனகர்த்தாக்களுக்கே வழங்கினார்.

அந்திம காலத்தில் அறிவியலறிஞர் ஸர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தம்பதியருக்குச் சொந்தமான டார்ஜிலிங் மாளிகையில் சகோதரி நிவேதிதா தங்குகிறார். 13.10.1911 அன்று தமது 44-வது வயதில் அவருடைய ஆன்மா இறைவனடியில் பரிபூர்ணத்துவம் அடைகிறது.
அவருடைய கல்லறையில்  ‘இந்தியாவிற்கே எல்லாவற்றையும் அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே இளைப்பாறுகிறார்’  எனப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்திய மண்ணிலிருந்தே புறப்பட்ட பூவொன்று, அம்மண்ணிற்கே புயலானது. சகோதரி நிவேதிதா, சுவாமிஜிக்குச் சீடரானார். மகாகவி பாரதிக்குக் குருவானார்.

குறிப்பு:.

இந்த ஆண்டு சகோதரி நிவேதிதை பிறந்த 150-ஆவது ஆண்டு.  திரு. தி.இராசகோபாலன்,  ஓய்வு பெற்ற பேராசிரியர்.

.
நன்றி: தினமணி (28.10.2016)

Advertisements

பத்திரிகை உலகின் முதுகெலும்பு

-ம.பூமாகுமாரி

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

(பிறப்பு: 1904, ஏப்ரல் 3- மறைவு: 1991, அக்டோபர் 5)

 

பிரெஞ்ச் தேசத்தில் பண்டைய காலத்தில் சமூகத்தை மூன்று  பெரும் பிரிவுகளாக (எஸ்டேட்) பிரித்திருந்தனர். முதல் எஸ்டேட் மதகுருமார்கள், இரண்டாவது எஸ்டேட் பிரபுக்கள் (அரசர்கள் இதில் வருகிறார்கள்). மூன்றாவது சாமான்யர்கள். நவீன யுகத்தில் 4, 5 எஸ்டேட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்தியாவில் நான்காம் எஸ்டேட் (பத்திரிகைத் துறை) என்று சொன்னால் பளிச்சென சில பெயர்கள் மின்னி மறையும். நமது மனத்திரையில் கட்டாயம் ராம்நாத் கோயங்கா பெயர் தோன்றும்.

RNG என்று பொதுவாக எல்லோராலும் அழைக்கப்பட்டவர். 1904, ஏப்ரல் 3-ல், பிகாரின் தர்பங்கா ஜில்லாவில் பிறந்தார். பின்னாளில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை வலுவாக,  வெற்றிகரமாக நடத்தி, பத்திரிகை உலகில் தனக்கென ஓர் இடத்தை அமைத்துக் கொண்டவர்.

வாரணாசியில் படிப்பு முடித்த பின், அவரது குடும்பம், நூல் மற்றும் சணல் வியாபாரம் செய்ய சென்னைக்கு அனுப்பியது. அவரோ வடகிழக்கு இந்தியாவில் பிறந்து, வட இந்தியாவில் பயின்று, தென்னிந்தியாவில் பத்திரிகைத் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டினார். ஒரு டீலராக சென்னை வந்தவர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’  பத்திரிகையின் பங்குகளை வாங்கினார். இரண்டே ஆண்டுகளில் கம்பெனியை தன்வசப்படுத்தினார். தேசிய அளவில் பத்திரிகை உலக நெட்வொர்க் ஒன்றை உருவாக்கினார். இறுதியில் 14 பதிப்புகள் வெளிவந்தது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. அதுவே இந்தியாவின் மிகப் பெரிய ஆங்கில நாளேடு. மேலும் பல்வேறு இந்திய மொழிகளில் ஆறு நாளேடுகள் (தமிழில் தினமணி) வெளிவந்தது இந்தக் குழுமத்திலிருந்து.

1930-களில், காந்திஜியுடன் கரம் கோர்த்து இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், ஜவஹர்லால் நேரு தலைமையில் இணைந்து செயலாற்றினார்.

1971-ல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, 1975-ல் ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டத்தை தீவிரமாக கோயங்கா ஆதரித்தார்.  அது காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலூட்டியது. இந்திரா காந்தி கொன்உவந்த நெருக்கடி நிலையை எதிர்த்து பத்திரிகை உலகம் வாயிலாகப் போராடினார்.

தேசத்தின் இருட்டுக் காலமான அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு மிக அதிகமான பிரச்னைக்கு உள்ளானது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. இந்திரா காந்தியின் கோபத்திற்கு ஆளான பின் எவரேனும் சுமுகமாக தொழில் செய்ய முடியுமோ? சென்ஸார் நீங்கியபோது சேர்த்து வைத்திருந்த குமுறலைக் கொட்டித் தீர்த்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

‘கட்டாய கருத்தடை, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்கள் – வெகுஜன கட்டாய மீள் குடியேற்றம், பரந்துபட்ட ஊழல், மற்றும் அரசியல் கைதுகள்’  என தினமும் தீபாவளிப் பட்டாசாய் கொளுத்திப்போட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். அரசியல் காழ்ப்புணர்ச்சி, அடக்குமுறை, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவது என்ற எதேச்சதிகாரப் போக்கு – வரலாற்றில் இவற்றுக்கான மிக அழுத்தமான உதாரணமாக இந்திரா காந்தியின் காங்கிரஸும், அவசரநிலைக் காலமும் இருக்கிறது. அதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதும், ஆவணப்படுத்தியதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தான். அந்த இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தைரியம் கொடுத்து ஊக்குவித்தது வேறு யார்? ராம்நாத் கோயங்கா தான். தைரியத்தின் மறுபெயர் கோயங்கா.

அந்தக் கட்டுரைகள் இந்திரா காந்தியின் 1977 தோல்விக்கு அடிகோலின. அதுமட்டுமல்ல, ஜனதா கட்சி உருவாகவும், ஆட்சி மலரவும் கோயங்கா பாடுபட்டார்.  பேனாமுனை, வாள்முனையை விட சக்தி வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் ராம்நாத் கோயங்கோ.

ஜனதா கட்சியின் குழப்பங்களால் மொரார்ஜி தேசாஇ அரசு கவிழ்ந்த பின், 1980-ல் இந்திரா காந்தி மறுபடி அரசியலில் உயிர்த்தெழுந்தார். அப்போது வரி, சொத்து வழக்கு என சாட்டையடி கிடைக்கிறது அரசிடமிருந்து. இந்தியன் எக்ஸ்பிரஸும், கோயங்காவும் அப்போதும் கலங்கவில்லை. 1984-ல் இந்திரா காந்தி அரசியல் படுகொலை செய்யப்படுவது வரை கோயங்காவுக்குப் போராட்டம் தான். ஆனால் அவர் என்றும் அதிகார அரசியலுக்கு முன் மண்டியிடவில்லை. 1991, அக். 5-இல் இந்தப் போர்வீரர் மறைந்தார்.

எழுத்தாளர் பி.ஜி.வர்கீஸ், 2005-ல்  ‘நான்காவது எஸ்டேட்டின் போர் வீரன்: எக்ஸ்பிரஸின் ராம்நாத் கோயங்கா’ என்ற புத்தகத்தில் அவரைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:

ராம்நாத் கோயங்கா, பல முகங்கள் கொண்ட ஒரு மனிதர். சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியவாதி, அரசியல்வாதி, தொழிலதிபர், செய்தித்தாள் முதலாளி.  இவை எல்லாவற்ளையும் விட, பத்திரிகை சுதந்திரத்திற்காகப் போரிட்ட வெல்லமுடியாத போர்வீரன். பத்திரிகை சுதந்திரத்தின் எல்லைக் கோடுகளை அச்சமின்றி காவல் காத்தவரும், விரிவடையச் செய்தவரும் அவரே. நிறைய சமயங்களில் அது அவருக்குப் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியது. ஒரு பத்திரிகை பதிப்பகத்தாராக அவர் செய்தது,  சாதாரண பிரஜையை அதிகாரம் உள்ளவராக ஆக்கியது, அவனுடைய தெரிந்துகொள்ளும் உரிமையைத் தூக்கிப் பிடித்தல், அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வைத்தல் ஆகிய விஷயங்களில் அவர் சலிக்காமல், மிகுதியான ஆர்வத்துடன் செயல்பட்டார்.

மேலும், வர்கீஸ் ‘ராம்நாத் கோயங்கா – ஊடக மன்னர்’ என்ற தலைப்பில் ‘இந்தியா டுடே’ இதழில் எழுதியது இது…

ஒரு மதிநுட்பமான மார்வாரி, சென்னையில் குடியேறி, பத்திரிகை உலகின் பிரபுவாக உயர்ந்தவர். அரசியல் ரீதியாகவோ, பணம் கொடுத்து உதவியோ, தனக்கு சாதகமாக ஆட்களைச் சேகரித்தவர். தேவைப்படுவோருக்கு தன் செல்வாக்கால் உதவி செய்தவர்; ஆனால் பதிலுக்கு எதையும் எதிர்பாராதவர்.

அவர் முழுமையான தேசியவாதி. 1942 இயக்கத்தின் போது தானே தன்னை  ‘காங்கிரஸ் குவார்ட்டர் மாஸ்டராக’ நியமித்துக் கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ தலைமறைவு புரட்சிக்காரர்களுக்கு வெடிமருந்துகள் சப்ளை செய்தவர். நிலைகுலைய வைக்கும் எழுத்துக்களைப் பரப்புரை செய்ய அச்சிட்டுத் தந்தவர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, கு.காமராஜ், ஜெயபிரகாஷ நாராயணன், இந்திரா காந்தி என எல்லோருடனும் நேரடித் தொடர்பில் இருந்தவர்.

அவரது சக்தி, எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதில் அவருக்கு இருந்த வேகம், கடின உழைப்பு ஆகியவற்றை வியப்பதோடு நிறுத்தி விடாமல், நாமும் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

 

குறிப்பு:

திருமதி. ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:

ஊடக உலகின் ஒளிவிளக்கு 

ஸ்வதந்திர கர்ஜனை – 32

.

சமூகப் போராளியான விண்ணியல் விஞ்ஞானி

-வ.மு.முரளி

மேகநாத் சாஹா

மேகநாத் சாஹா

(பிறப்பு: 1893 அக்டோபர் 6 – மறைவு: 1956, பிப்ரவரி 16)

“விஞ்ஞானிகள் தங்கக் கோபுரத்தில் வசிப்பவர்களாகவும்,  நிதர்சனங்களை எதிர்கொள்ளும் மனம் இல்லாதவர்களாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.  நானும் எனது இளம் வயதில் சில புரட்சிகரத் தொடர்புகளைத் தவிர்த்து 1930 வரை தங்கக் கோபுரத்தில்தான் இருந்தேன். ஆனால் சட்டம்- ஒழுங்கு ஒரு நாட்டின் நிர்வாகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் முக்கியம். எனவேதான் நான் மெல்ல அரசியலில் அடியெடுத்து வைத்தேன். ஏனெனில் என்னால் முடிந்த வழியில் நாட்டுக்கு ஏதேனும் செய்யவே நான் விரும்பினேன்”.

-இது ஒரு விஞ்ஞானியின் வாக்குமூலம். இந்த நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்த மேகநாத் சாஹா என்ற அந்த விஞ்ஞானியைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்திருப்பது அவசியம்.

வானியற்பியல் விஞ்ஞானியான சாஹா தனது 27-ஆம் வயதில் உருவாக்கிய சாஹா அயனியாக்க சமன்பாடு (Saha Ionization Equation- 1920), விண்ணியலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வேதியியல் மாற்றம், புறநிலை மாற்றங்களை அறிய இந்தச் சமன்பாடு உதவுகிறது.

பிரிக்கப்படாத இந்தியாவில் டாக்கா அருகிலுள்ள சியோரடலி கிராமத்தில் மளிகைக் கடைக்காரரின் ஐந்தாவது மகனாக 1893 அக்டோபர் 6-இல் பிறந்தார் மேகநாத் சாஹா. பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் அளவுக்கு வறுமை குடும்பத்தில் தாண்டவமாடியது. ஆனால் நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர்களின் உதவியால் படிப்பைத் தொடர்ந்தார்.

1905-இல் நிகழ்ந்த வங்கப் பிரிவினைக்கு எதிராக வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடியதால், அவருக்கு அளிக்கப்பட்ட உபகாரச் சம்பளம் நிறுத்தப்பட்டது. ஆயினும் தேசிய சிந்தனை கொண்ட சிலரது உதவியால் வேறு பள்ளியில் படிப்பைத் தொடர்ந்து, முதல் மாணவனாகத் தேறினார்.

பிறகு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை பட்டம் படித்தார். அங்கு இவரது சக மாணவராக இருந்தவர் சத்யேந்திரநாத் போஸ்.

இடைக்காலத்தில் புரட்சிகர விடுதலைப் போராளிகளுடனும் சாஹாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டீஷாருக்கு எதிரான ஜெர்மனி சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரான பக்கா ஜதின் என்னும் ஜதீந்திரநாத் முகர்ஜியுடனும் அவருக்கு தொடர்பு இருந்தது. ‘அனுசீலன் சமிதி’ என்ற புரட்சிப்படையை உருவாக்கியவர்களுள் ஒருவரான அவர் பின்னாளில் (1915) பிரிட்டீஷ் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.

இந்தத் தொடர்பால், சாஹாவின் அரசுப்பணிக் கனவு நிறைவேறாது போனது. புரட்சியாளர்களுடனான உறவு காரணமாக, அவரது இந்திய நிதிப்பணித் தேர்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதுவே அவர் அறிவியல் சாதனையாளராக மாறவும் வித்திட்டது.

வான் இயற்பியலில் இவரது ஈடுபாடு மிகுந்தது. சூரிய நிற மாலையில் காணப்படும் பிரான்ஹோபர் (Fraunhofer) என்னும் கருவரிகளின் தோற்றத்துக்குக் காரணம் புரிபடாமல் இருந்தது. இதை சாஹா உருவாக்கிய வெப்ப அயனியாக்கச் சமன்பாடு விளக்கியது.

விண்மீன்கள், சூரியன் ஆகியவற்றின் வெப்பநிலை, புறநிலை மாற்றங்களை அவற்றிலுள்ள தனிமங்களே தீர்மானிக்கின்றன என்பதை சாஹா சமன்பாடு வெளிப்படுத்தியது. பின்னாளில், சூரியனில் பெருமளவில் ஹைட்ரஜன் வாயு உள்ளதை ஆய்வுகள் நிரூபிப்பதற்கு இந்தச் சமன்பாடு ஆதாரமானது.

இந்தச் சமன்பாடு மேகநாத் சாஹாவுக்கு பெரும் புகழைத் தந்தது. அதுமட்டுமல்ல, சக விஞ்ஞானியான சத்யேந்திரநாத் போஸுடன் இணைந்து மெய்வாயுக்களின் நிலைச் சமன்பாடு (Equation of state for Real gases) என்ற ஆய்வறிக்கையையும் சாஹா வெளியிட்டார்.

பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரிராகப் பணிபுரிந்த சாஹா, அதை முதல்தரமான கல்வி நிறுவனமாக்கினார்; இந்தியாவின் பாரம்பரிய நாள்காட்டி முறையான சக ஆண்டு கணக்கீட்டையும் முறைப்படுத்தினார்.

பிற்காலத்தில் இவரது ஆய்வுக் கண்ணோட்டம் உடனடி மக்கள் நலன் சார்ந்ததாக மாறியது. அதன் விளைவாக, தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா நங்கல், ஹிராகுட் அணைத் திட்டங்களுக்குத் தேவையான கள ஆய்வு உதவிகளைச் செய்தார்.

1948-இல் கொல்கத்தாவில் ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தைத் சாஹா தொடங்கினார். அது இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாஹா நிறுவனமாக (Saha Institute of Nuclear Physics) வளர்ந்துள்ளது.

அறிவியல் வளர்ச்சி சமூகநலனுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் தீவிர உந்துதல் கொண்ட தனது கருத்துகள் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டதால், தானே அரசியலில் இறங்க சாஹா தீர்மானித்தார். 1952-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடமேற்கு கொல்கத்தா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். நாடாளுமன்றத்திலும் மக்கள் சார்ந்த பணிகளுக்காக குரல் கொடுத்தார். அப்போது அரசியல்வாதிகளின் ஏளனங்களை அவர் பொருட்படுத்தவில்லை.

ஜனநாயகத்தில் மக்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சாஹா,  ‘அறிவியலும் கலாசாரமும்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார். அணுசக்தி ஆராய்ச்சியில் ரகசியத் தன்மை கூடாது என்று குரல் கொடுத்த முதல் விஞ்ஞானியும் சாஹா தான்.

விஞ்ஞானி, விடுதலை வீரர், கல்வியாளர், இதழாளர், நாடாளுமன்றவாதி, பொருளாதார நிபுணர், சீர்திருத்தவாதி எனப் பல முகங்களைக் கொண்டவராக இருந்தும், வாழும் காலத்தில் அவர் உரிய மதிப்பைப் பெறவில்லை.

ஆயினும் எதையும் எதிர்பாராமல், மக்கள் நலனுக்காகச் சிந்தித்து வாழ்ந்த விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1956, பிப்ரவரி 16-இல் மறைந்தார். சாஹா உரிய மரியாதையைப் பெறாமல் மறைந்திருக்கலாம். ஆயினும், விண்ணியலுக்கு அளித்த சாஹா அளித்த சமன்பாடு அவரது பெயரை அறிவியல் உலகில் சாகாவரம் பெற்றதாக்கிவிட்டது.

 

குறிப்பு:

 திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

 இக்கட்டுரை தினமணி -இளைஞர்மணியில் வெளியானது.

 

காந்தியும் லோகியாவும்

-ஜெயமோகன்

ராம் மனோகர் லோகியா

ராம் மனோகர் லோகியா

(பிறப்பு: 1910, மார்ச் 23  – மறைவு:  1967, அக். 12)

எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த  குரு-சீட உறவு அற்புதமானது.
 .
லோகியா அவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் படித்தபோது கற்றுக்கொண்டது அது.
 .
காந்தி சொன்னார்: ‘நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும்’. லோகியா ‘என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார். ‘எனக்கு அப்படி பேதங்கள் ஏதுமில்லை. நான் கண்டிப்பாகத் தலையிடுவேன். நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட வேண்டும். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது’. லோகியா காந்தியுடன் வாதாடவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளவுமில்லை. காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
 .
கடைசியாக காந்தி இன்னொரு காரணத்தைச் சொன்னார். ’நீங்கள் சிகரெட் பிடிப்பது எளிய மக்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். உங்களை அவர்கள் மேட்டிமைவாதியாக நினைக்க வழிவகுக்கும்’ அந்தக் கோணத்தில் லோகியா யோசித்திருக்கவில்லை. அது உண்மை என்று அவர் உணர்ந்தார். சிகரெட் ஒரு குறியீடென்ற நிலையில் அப்படித் தான் பொருள் கொள்ளப்படும். சிகரெட்டை விட்டுவிட்டார்.
 .
காந்தியையும் லோகியாவையும் புரிந்துகொள்வதற்கான அழகிய நிகழ்ச்சி இது. காந்தி அகமும் புறமும் வேறுவேறற்றவர். தான் வேறு சமூகம் வேறு என நினைக்காதவர். தன் உடல்பற்றியும் வெளியுலகம் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை சமமானது. ஆனால் லோகியா தன் அகத்தைத் தன் சொந்த விஷயமாகக் கண்டவர், அதை ஒரு பொருட்டாக நினைக்காதவர். தன் உடலைப் புறக்கணித்தவர், தான் வாழும் உலகைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர். இருவேறு வாழ்க்கை நோக்குகள்.
 .
அதைவிட முக்கியமாக ஒன்றுண்டு. காந்திக்கு மக்களைப் பற்றி, அவர்களின் மனம் செயல்படும் நுண்ணிய வழிகளைப் பற்றித் தெரிந்திருந்தது. லோகியாவுக்குத் தெரியவே இல்லை. அவர் சிந்தனையாளர் மட்டுமே. ஒருபோதும் அவரால் மக்களுடன் உறவாட முடியவில்லை. அந்த எளிய மக்களுக்காகவே அவர் சிந்தித்தார், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால் அவர்களிடமிருந்து தொலைவில் இருந்தார். அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இல்லை.
 .
காந்தி இருக்கும்வரை லோகியா காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டுக் குழுவின் மையக்குரலாக இருந்தார். காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு காந்தியுடன் ஓயாது விவாதித்துக்கொண்டு செயல்பட்டார். காந்தியின் மறைவுக்குப்பின் சோஷலிஸ்டுகள் காங்கிரஸில் இருந்து விலகிச்சென்று தனி இயக்கமாக ஆனார்கள். காங்கிரஸின் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டார்கள். அதற்கான சூசகமாகவே காந்தியிடம் லோகியா முரண்படும் இடத்தைப் பார்க்கிறேன்.
 .
ஆனால் இந்தியாவில் சோஷலிச இயக்கம் எங்குமே உண்மையான அரசியல் வலிமையைப் பெறவில்லை. அதன் தலைவர்களை மக்கள் அறியக்கூட இல்லை. பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் அரசியல் விடுத்த சில வெற்றிடங்களை நிரப்புவதாக மட்டுமே அதன் அரசியல் பங்களிப்பு இருந்தது. அதற்கான காரணத்தையும் அந்த நிகழ்ச்சியில் உருவகமாகக் காண்கிறேன்.
 .
ராம் மனோகர் லோகியா இந்திய சோஷலிஸ்டு இயக்கத்தின் முன்னோடி. அதன் முதன்மை முகமும் அவரே. இந்திய சோஷலிச இயக்கத்தை ஐரோப்பியபாணி மார்க்ஸியத்துக்கும் காந்தியத்துக்கும் நடுவே நிகழ்ந்த உரையாடலின் விளைவு என்று சொல்லலாம். வன்முறை இல்லாமல் பாராளுமன்ற ஜனநாயகம் வழியாக சோஷலிச அமைப்பொன்றை நோக்கி நகர்வதற்கான அரசியலை அவர்கள் உருவாக்கினார்கள்.
 .
சுதந்திரம் பெற்ற தொடக்க காலகட்டத்தில் இந்திய அரசியலின் ஆளும்தரப்பும் எதிர்த் தரப்பும் இடதுசாரித்தன்மையைக்கொண்டதாக அமைந்தமைக்கு எதிர்க் கட்சியாகச் செயல்பட்ட சோஷலிஸ்டுகளே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். வலதுசாரிக் குரல் கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கே உருவானதும் அதனால்தான். பின்னர் சோஷலிஸ்டுகளின் இடம் இந்திய அரசியலில் இல்லாமலானபோதுதான் வலதுசாரி அரசியல் மேலெழுந்தது.
 .
இந்தியாவில் ஓங்கியிருந்த இடதுசாரி அணுகுமுறை தான் இந்தியச்சூழலில் ஆரம்பத்திலேயே அடிப்படை மக்கள்நலத் திட்டங்கள் சார்ந்த அணுகுமுறையை உருவாக்கியது. கல்வி, போக்குவரத்து, தொழிலாளர் நலம், சமூகநலம் சார்ந்த அக்கறைகள் கொண்ட அரசுகள் இங்கே உருவாயின. அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று நம்முடன் சுதந்திரம் பெற்று இடதுசாரி நோக்கு இல்லாத மதவாத, இனவாத வலதுசாரி அரசுகளை உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நிலையைப் பார்க்கையில் உணரலாம்.
 .
இடதுசாரி அரசியலே இங்கே வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்கியது. இன்றும் இந்தியாவின் முக்கியமான மக்கள்சக்திகளாக அவை நீடிக்கின்றன. இன்றைய வலதுசாரிப் பொருளியல் அலையின் பெரும் ஆபத்துகள் பலவற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது இந்திய அரசியலில் வலுவான எதிர்த்தரப்பாக நீடிக்கும் இடதுசாரிக்குரலே என்பது ஓர் உண்மை. இன்று இந்தியாவின் சுதந்திரப் பொருளியலில் அடித்தள மக்களுக்கான உரிமைக்குரலாக அது நீடிக்கிறது.
 .
நேரு உருவாக்கிய ‘அரசாங்க சோஷலிசம்’ அதிகாரிகளிடம் கடிவாளங்களைக் கொடுத்து ‘கோட்டா -பர்மிட்- லைசன்ஸ்’ அரசை உருவாக்கி இந்தியத் தொழில் வளர்ச்சியைத் தேங்கவைத்தது என்பது இன்னொரு பக்க உண்மை என்றாலும், இடதுசாரி அரசியலின் பங்களிப்பு இந்தியாவின் முக்கியமான ஆக்கபூர்வ அம்சம் என்றே சொல்லலாம். அதில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது.
 .
ராம் மனோகர் லோகியா பற்றித் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல், விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வாழ்வும் போராட்டமும்- ராம் மனோகர் லோகியா’ . இந்நூல் முன்னர் கோவை சமுதாய பதிப்பக வெளியீடாக வந்த மூன்று நூல்களின் தொகுதி. மு. ரங்கநாதன் எழுதிய லோகியாவின் வாழ்க்கை வரலாறு, லோகியாவின் கட்டுரைகளின் தொகுதியாகிய ’சரித்திர சக்கரம்’ . காந்தியையும் மார்க்ஸையும் விரிவாக ஆராயும் ’மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம்’.
 .
லோகியா உத்தரப்பிரதேசத்தில் அக்பர்பூரில் ஹீராலால் லோகியாவுக்கு மகனாக 1910-ஆம் வருடம் மார்ச் 23-ல் பிறந்தார். லோகியாவின் அப்பா ஹீராலால் லோகியாவைப் போலவே அதிதீவிரமான அரசியல் செயல்பாட்டாளர். காந்தியப் போரில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்குச் செல்லும் வழியில் மரணமடைந்தவர். அப்போது லோகியா காந்தியப்போரில் சிறையில் இருந்தார்
 .
மும்பையிலும் காசியிலும் கல்விபயின்ற லோகியா எப்போதுமே மிகச்சிறந்த மாணவராக இருந்தார். 1926 ல் தன் பதினாறாம் வயதில் கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டைப் பார்க்கச்சென்ற லோகியாவைப் பஞ்சாபிலிருந்து வந்த காங்கிரஸார் தங்கள் குழுவில் சேர்த்துப் பிரதிநிதியாக ஆக்கினார்கள். அவரது அரசியல்வாழ்க்கை அங்கே ஆரம்பித்தது.
 .
1929-ல் லோகியா மேல்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். அந்த வாழ்க்கை அவருக்கு உலக அரசியல் பற்றிய தெளிவை உருவாக்கியது. அவர் அங்கேதான் சோஷலிசத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டார். உலக சோஷலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். முனைவர் பட்டம் முடித்துத் தன் 23-ஆவது வயதில் இந்தியா திரும்பினார்.
 .
1933-ல் லோகியா காந்தியைச் சந்தித்தார். ஜமுனாலால் பஜாஜ் காந்தியிடம் லோகியாவைக் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார். அந்த நட்பு காந்தியின் மறைவு வரை நீடித்தது. ஆனால் லோகியா காந்தியை வழிபடவில்லை, பின் தொடரவுமில்லை. அவர் காந்தியிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார், இடைவெளியில்லாமல் காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தார். காந்தியையும் மார்க்ஸையும் சந்திக்கச்செய்ய முயன்றார் லோகியா.
 .
இருபத்துமூன்று வயதான இளைஞராகிய லோகியாவுடன் காந்தி கொண்டிருந்த உறவைப் புரிந்துகொள்வது கடினம். அவர் லோகியாவைத்  தன் மகனைப்போல நினைத்தார். மாணவரைப் போல அவருக்குக் கற்பித்தார். அதேசமயம் தோழனைப்போல நடத்தினார். அவரிடமிருந்து ஒரு மாணவராகக் கற்றுக்கொண்டும் இருந்தார்.
 .
காந்தியைச் சந்தித்த அதே வருடம் மே 17 அன்று பாட்னாவில் ஆச்சாரிய நரேந்திரதேவா தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு இந்திய சோஷலிச கட்சியை நிறுவ முடிவெடுத்தது. அதேவருடம் அக்டோபரில் மும்பையில் கட்சியின் அமைப்பு மாநாடு கூட்டப்பட்டது. சோஷலிஸ்டுகள் காங்கிரஸுக்குள்ளேயே ஒரு தனி கருத்துக்குழுவாகச் செயல்பட முடிவெடுத்தார்கள். லோகியாவின் வாழ்நாள் பணி அன்று ஆரம்பித்தது எனலாம்.
 .
கோவா விடுதலைப்போராட்டம் முதலிய நேரடிப்போராட்டங்கள். அவற்றில் லோகியா காட்டிய அஞ்சாமையும் உறுதியும் அவரை ஒரு பெரும் தலைவராக நமக்குக் காட்டுகின்றன. இன்னொரு முகம் அவர் காங்கிரஸுக்குள் சோஷலிஸ்டுகளின் குரலாக ஒலித்தது. லோகியா சலிக்காமல் ஏதாதிபத்தியத்துக்கும் இந்தியப் பெருமுதலாளித்துவத்துக்கும் எதிராகச் செயல்பட்டார்
 .
மூன்றாவது சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸின் எதிர்க்கட்சியாக நேருவை எதிர்த்துச் செயல்பட்டமை. லோகியா நேருவின் சோஷலிசம் வெறும் அரசாங்க சீர்திருத்தம் மட்டுமே என நினைத்தார். அது அதிகாரிகளை மட்டுமே வலுப்படுத்துகிறது என்றார். அவர் முன்வைத்த சோஷலிசம் கிராமியப்பொருளியலை முக்கியமாகக் கருத்தில் கொண்டதாக இருந்தது. நேருவின் பொருளியல் தொடர்ந்து விவசாயிகளையும் அடித்தள மக்களையும் சுரண்டி நகரங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியபடியே இருந்தார் லோகியா
 .
ரங்கநாதன் எழுதிய வரலாற்றில் என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் காந்திமீது லோகியா செலுத்திய செல்வாக்கு. பல முக்கியமான சர்வதேச விஷயங்களில் காந்தியின் கோணத்தைத் தலைகீழாகத் திருப்பியிருக்கிறார் லோகியா. காந்தி அவர் எழுதிய பல அறிக்கைகளை லோகியா முற்றாகக் கிழித்தெறிய அனுமதித்திருக்கிறார். அவரது பல அறிக்கைகளின் முன்வடிவை லோகியாவே எழுதவிட்டிருக்கிறார். காந்தியை லோகியா  ‘கிராமிய சோஷலிசம்’ என்ற கருத்தியலை நோக்கித் தள்ளிக்கொண்டே செல்வதை காண்கிறோம். ஒருவேளை சுதந்திரத்துக்குப்பின் காந்தி பத்தாண்டுக்காலம் வாழ்ந்திருந்தாரென்றால் அவர் லோகியாவின் முகாமின் பெரும் சக்தியாக இருந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
 .
அதைப்போல லோகியா காந்தியால் தீவிரமாக மாற்றமடைந்துகொண்டே இருப்பதை இந்நூல் காட்டுகிறது. ஐரோப்பாவில் வன்முறைசார்ந்த அரசியலைக் கற்றுத்திரும்பிய லோகியா வன்முறை அரசியலை முழுமையாகக் கைவிடுகிறார். நூற்றுக்கணக்கான சமூக ஆற்றல்கள் அதிகாரத்துக்காக மோதிக்கொள்ளும் ஒரு பெருவெளியே அரசியல் என்றும் அங்கே வன்முறையற்ற திறந்த உரையாடலே ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் புரிந்துகொள்கிறார்.
 .
காந்தியின் கடைசிக்காலத்தில் லோகியாதான் அவருடன் இருக்கிறார். வன்முறை கட்டவிழ்ந்த கல்கத்தா தெருக்களில் லோகியா காந்தியுடன் உயிரைத் துச்சமாக நினைத்து இறங்கிச் சென்று அமைதியை உருவாக்க முயல்கிறார். காந்தியின் பணி இரண்டாகப் பிளந்த வானத்தை ஒட்டவைக்க நினைப்பது போல இருந்தது என நினைக்கும் லோகியா மெல்லமெல்ல அந்த மருந்து வேலைசெய்வதைக் காண்கிறார்
 .
கல்கத்தாவில் வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற காந்தி காட்டிய வழியில் லோகியா செய்யும் துணிச்சலும் தியாகமும் நிறைந்த முயற்சி ஒரு காவியநிகழ்வு போலிருக்கிறது. வன்முறையாளர்கள் நடுவே தன்னந்தனியாகச் செல்கிறார், அவர்களிடம் மனச்சாட்சியின் குரலில் பேசுகிறார். அவர்களை வென்று ஆயுதங்களைப் பெற்று கொண்டுவந்து காந்தி தங்கியிருந்த இடிந்த மாளிகையில் குவித்துவிட்டுத் தூங்கச்செல்லும் அந்த இரவு லோகியாவை இன்னொரு காந்தியாக நமக்குக் காட்டுகிறது.
 .
1948-ல் காந்தி லோகியாவைக் கூப்பிட்டனுப்பினார். காங்கிரஸ் காந்தியின் கையில் இருந்து நழுவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. ‘நீங்கள் கட்டாயம் வாருங்கள், காங்கிரஸ் பற்றியும் சோஷலிஸ்டுக் கட்சி பற்றியும் நான் பேச வேண்டியிருக்கிறது’ என்று காந்தி சொன்னார். அதற்கு மறுநாள் ஜனவரி 30 அன்று லோகியா காந்தியைச் சந்திக்க மும்பையில் இருந்து கிளம்பினார். செல்லும்போதே காந்தி கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைக்கிறது.
 .
1967-இல் லோகியா மறைந்தார். நேரு யுகம் என அழைக்கப்பட்ட காலகட்டம் ஒருவகையில் லோகியா யுகமும் கூட என இந்நூல் வாதிடுகிறது. லோகியாவை இந்திய நவீன அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு என சித்தரிக்கிறது.
 .
நூலின் இரண்டாம் பகுதியில் எஸ்.சங்கரன்,  பி.வி சுப்ரமணியம் இருவரும் மொழியாக்கம் செய்த  ‘சரித்திர சக்கரம்’ என்ற நூல் உள்ளது. இந்நூலில் லோகியா விவாதிப்பவை சோவியத் பாணி மார்க்ஸியம் தோல்வியடைந்து மார்க்ஸியத்துக்கு ஜனநாயக வடிவம் ஒன்று இருக்கமுடியுமா என்ற வினா எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மிக மிக முக்கியமானவை. இங்கே மார்க்ஸிய செயல்திட்டத்தை நிராகரிக்கும் லோகியா,  மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை விரிவாக உலக அரசியலுக்கும் உலகப்பொருளியலுக்கும் பொருத்திப் பார்ப்பதைக் காணலாம்
 .
மூன்றாவது பகுதி பி.வி.சுப்ரமணியம் மொழியாக்கத்தில்  ‘மார்க்ஸுக்குப் பின் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் லோகியா எழுதிய கட்டுரைகள். காந்தியப் பொருளியலில் உள்ள பல அம்சங்களை லோகியா ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, காந்தியின் பாரம்பரியவாதம் போன்றவற்றை. ஆனால் கிராமியப்பொருளியலை மேம்படுத்தும் ஒரு சோஷலிச அரசியலுக்காக அவர் வாதாடுகிறார். ஒருங்கிணைந்த உற்பத்தி பெருந்தொழில் ஆகியவற்றுக்கு மாற்றாக சிறிய அளவில் வட்டார ரீதியாக உருவாகி வரும் கிராமிய உற்பத்திப் பொருளியலை முன்வைக்கிறார்.
 .
லோகியாவையும் அவரது சிந்தனைகளையும் விரிவாக அறிந்துகொள்ள உதவியான அரிய நூல் இது.
 .
குறிப்பு:
 .
திரு.ஜெயமோகன், தமிழின் முதன்மை எழுத்தாளர். அவர் தனது தளத்தில் எழுதியுள்ள இக்கட்டுரை, விடியல் பதிப்பக வெளியீடான நூல்கள் குறித்த அறிமுகம் ஆகும்.
 .
 .
காண்க:

21-ம் நூற்றாண்டில் காந்தி

-லா.சு.ரங்கராஜன்

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

(பிறப்பு: 1869, அக். 2 – பலிதானம்: 1948, ஜன. 30)

வையக வரலாற்றில் தடம் பதித்த மகாத்மா காந்தியின் அறிவுரைகள் 21-ம் நூற்றாண்டில் எவ்வளவு தூரம் சரிப்பட்டு வரக்கூடும் என்பதை, இந்நாளில் வெறும் சடங்குக் கடனாகவேனும் நினைவுகூர்வது ஆத்மார்த்த எழுச்சிக்கு வழிகோலும்.

இந்திய மக்களின் வாழ்வில் பல முனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, மாற்றம் நிகழ்வித்தார் காந்திஜி. ஆகவேதான் அவரை நம் தேசப்பிதா என்று கருதுகிறோம். ஓர் சிறந்த தகப்பனார் போன்று அவர் நமக்கு வர்த்தமான ரீதியிலும் ஆன்மிக ரீதியிலும் பெருவளம் வாய்ந்த மரபுரிமைச் செல்வத்தை ஆஸ்தியாக விட்டுச் சென்றுள்ளார். ஆனால், நாமோ படிப்படியாக அந்தச் சொத்துகளை இழந்து தொய்ந்து தார்மிகம் குன்றி அல்லல்படுகிறோம்.

இன்றைய இந்தியாவும் உலகமும் காந்திஜியின் கனவுகளுக்கு முற்றிலும் மாறாக உழன்று வருகின்றன. வன்முறை, பயங்கரவாதம், ஊழல் மலிந்த அதிகார அரசியல், மனித மாண்பின் சீரழிவு ஆகியவை நம்மைச் சூழ்ந்து கோரத்தாண்டவம் ஆடுகின்றன. இதற்குக் காரணம் வேறு யாருமல்ல, நாமேதான்!

இன்றைய அவலங்களின் கோரப் பிடியினின்றும் விடுபட்டு சீரிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கு நாமேதான் நமக்கு உதவ வேண்டும்; வெளியார் யாருமல்ல. அதற்கு நாம் செய்யவேண்டியது என்ன? அண்ணல் காந்தி கற்பித்த மூலக்கோட்பாட்டுக் கூறுகளான அகிம்சை, அன்பு, தன்னம்பிக்கை, சமூக நல்லிணக்கம், வையகம் தழுவிய உயரிய சிந்தனை, அதேசமயம் உள்ளூர் மேம்பாட்டுக்கான செயலாற்றல் ஆகியவற்றை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும். மாற்றம் வேண்டுமாயின், நாம் முதலில் மாற வேண்டும்.

கை ராட்டையில் நூற்றல், கதர் அணிதல், எளிய வாழ்வு,  ‘மாட்டு வண்டிப் பொருளாதாரம்’ என்று ஜவாஹர்லால் நேரு ஒரு சமயம் குத்திக்காட்டிய கிராமிய மேம்பாடு – இவையே காந்தியம் என்று தவறாக மட்டம் தட்டப்படுபவற்றை ஓரங்கட்டிவிட்டு, உண்மையில் காந்திய சிந்தனை என்ன என்பதைக் கவனிக்க வேண்டும்.

அவரது சிந்தனையின் சாராம்சம், மெய்ம்மை, அகிம்சை, சுயவிருப்பார்வுடன் ஒன்றுபட்டு ஒத்துழைப்பது, தரித்திர நாராயணர்களாம் ஏழை மக்களின் மேம்பாடு, ஆன்மிகம் இழைந்த அப்பழுக்கற்ற அரசியல், வீரார்ந்த தன்னம்பிக்கை ஆகியவையே காந்திஜி புகட்டிய அடிப்படைப் பாடங்களாகும்.

‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்ற உறுதிப்பாடுதான் மகோத்தமர் காந்தியை அரசியலில் ஈடுபடச் செய்தது. “சத்திய நாட்டம் கொண்ட எவராலும் எந்த வாழ்க்கைத் தளத்தினின்றும் தனித்திருக்க இயலாது” என்று காந்திஜி தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

“சத்தியமும் அகிம்சையும் பிணைந்த பாதையே அமைதிக்கான ராஜபாட்டை; அவ்வாறாயினும் அமைதியைக் காட்டிலும் மெய்ம்மையைக் கடைப்பிடிப்பதே அத்தியாவசியமானது” என்று 1926 மே மாத வாக்கிலேயே காந்திஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

காந்திஜியின் பொது வாழ்க்கை 54 ஆண்டு காலம் (1893 முதல் 1948 வரை) தொடர்ந்தது. மோட்டார் வாகனம் கண்டுபிடிப்பதற்கு முன்பிருந்து, அணுகுண்டு வீச்சு வரையிலான காலகட்டம் அது. முதல் உலக மகா யுத்தம் 1919-ல் முடிவுற்றது. ஆயினும் போர் சமாதான உடன்படிக்கையை அடுத்து, ஃபாஸிஸம், ஜெர்மானிய நாஸிஸம், ருஷ்ய கம்யூனிஸம் போன்ற வன்முறையும் ரத்த வெள்ளமும் தோய்ந்த தத்துவங்கள் தலையெடுக்கலாயின. 1939 செப்டம்பரில் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின்போது ரத்த ஆறு திரும்பவும் வெள்ளமாகப் பெருகி ஆகஸ்ட் 1945-ல் ஹிரோஷிமா, நாகசாகி ஜப்பானிய நகரங்களை அணுகுண்டு தாக்கியதில் பயங்கர தீப் பிழம்புகளாக உச்சகட்டம் எய்தியது.

வன்முறை வெறி இந்தியாவையும் பீடித்தது. 1946-47 ஆண்டுகளில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும் சொல்லொணாக் கொடுமைகளும் மலிந்தன.

வையகம் முழுவதும் வியாபித்த அந்த வன்முறை உன்மத்த காலப்பரப்பில் தனியொரு காந்திஜியின் தார்மிக நல்லறிவு செரிந்த அமுத அன்பு மொழி, வன்முறையில் ஒடுங்கிப்போன உலக மாந்தரின் கவனத்தைக் கவரத் தொடங்கிற்று.

தீவினைக்கு எதிராக வன்முறை அறவே தவிர்த்த அறநெறிப் போராட்டமாம் சத்தியாக்கிரகம் எனும் புதிய கருத்தும், நடைமுறைக்கு உகந்த நல்லிணக்கச் செயல்பாட்டு வழிமுறைகளும் உலக மக்களுக்குப் பண்டைய நற்போதனைகளை நினைவுபடுத்தின. “கோபதாபங்களையும் காழ்ப்புணர்வையும் முறியடிக்க, அதேபோன்ற ஆத்திரங்களாலும் வெறுப்புணர்வுகளாலும் வன்முறை வழியாக வெற்றிகொள்ள முடியாது. கண்களைப் பறித்ததற்குப் பதிலடியாக எதிரியின் கண்களைப் பறிப்பதுதான் ஒரே வழி என்றாகிவிடின், உலகம் பூராவும் அனைவருமே கண்ணிழந்த கபோதிகளாகிவிடுவார்கள்” என்று எடுத்துரைத்தார் காந்தி மகான்.

மானிடரின் மனிதாபிமானப் பண்புகளைப் பேணி வளமூட்டுவதற்கு மனிதன் தனது வாழ்வின் அடிப்படை நியதிகளைப் பின்பற்றி ஒழுகுதல் வேண்டும். மெய்ம்மை, அன்பு இவையே மானிட தர்மத்தின் அடித்தள நியதிகளாம். ஆனால், அந்தோ, நவீன பெருந்தொழில் சார்ந்த இன்றைய உலகாயத சமூகத்தில் தனிநபர்களிடையேயும், நாடுகளிடையேயும் போட்டாபோட்டியிடும் சுயநலமும் இனவெறியும் பொருளாதார தளத்தில் அதிக லாபம் பெறும் மனப்பாங்கும், தன்நல நாட்டமும் மனித இயல்பு என்ற எண்ணம் பரவிப் படர்ந்துவிட்டது. அதுவே தார்மிக சீரழிவுக்கு வித்திட்டது. அதன் நேர் விளைவே இரு கோர உலக மகா யுத்தங்கள்.

மனித இயல்பு பற்றிய இத்தகைய இழிந்த நோக்கையும், தார்மிகச் சீரழிவையும் கண்ணுற்ற காந்திஜி மனம் நொந்து வெகுண்டெழுந்தார். நவநாகரிக, பெருந்தொழில் சார்ந்த சமுதாயம் ஆண்களையும் பெண்களையும் வெறும் ஜடப்பொருளாகவும் இயந்திரங்களாகவும் ஆக்கிவிட்டன என்று சாடினார்.

“மெஷினாக மாற்றப்பட்டுவிட்ட மனிதனை, அவனது மூலமுதலான மாண்புக்கு உயர்த்தி தார்மிகத்தில் இருத்துவதே எனது லட்சியம்; அவனிடம் / அவளிடம் ஒடுங்கியுள்ள தார்மிகப் பண்புகளைத் தட்டியெழுப்பி ஊக்குவிப்பது அத்தியாவசியம் என்று ஒரு சமயம் தொழிலதிபர் ஜி.டி. பிர்லாவிடம் சுருங்கக் கூறினார். “மனிதன் இயந்திரத்துக்கு அடிமை ஆகிவிடக் கூடாது, இயந்திரங்கள் அவனது / அவளது அடிமைகளாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

புரட்சிகரமான தொழில்நுட்ப விகசிப்புகளோடு வன்முறை, பயங்கரவாதம், ஏழ்மை, அபாயகரமான அணுசக்திக் கழிவுகள், அரசியல் பித்தலாட்டங்கள் ஆகிய அவலங்களும் இழைந்துள்ள இந்த 21-ம் நூற்றாண்டில் அதி அவசர கதியில் இலக்கின்றி விழையும் மானிட வர்க்கத்துக்கு, “சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம்” எனும் முப்பெறு அடித்தளங்கள்மீது எழுப்பப்பட்ட காந்தியத்தின் வாயிலாய் இன்றைய பிரச்னைகள் பலவற்றுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ தீர்வு கண்டறிய முடியும்.

ஆயினும், நினைத்த மாத்திரத்தில் பலன் தருவதற்குக் காந்தியம் புராண கால கற்பக விருட்சமோ காமதேனுவோ அல்ல!

சென்ற நூற்றாண்டில் காந்திஜி காட்டிய வழிமுறைகள் தற்காலச் சூழ்நிலையில் எவ்வாறு பயன்தரக்கூடியதாகப் பின்பற்றலாம் என்பதை நாமே தீர ஆராய்ந்து ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டும்.

தனியார்களோ, குழுவினரோ, அரசாங்கமோ எவ்வளவு பெரிய செயல்முறை திட்டங்கள் தீட்டுகையிலும், மகாத்மா காந்தி தமது உயிர்த்தியாகத்துக்கு ஆறு மாதம் முன்பு விட்டுச்சென்ற பின்வரும் உரைகல் சோதனை போதனை வாசகத்தை நினைவில் நிறுத்துதல் மிக நன்று:

“நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா?

இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுய – ராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்”

(1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்:  ‘கலெக்டட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி’ நூல் 89, பக்கம் 125).

உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சிந்தனையாளர்களும் அரசியல் மேதைகளும் விவாதித்து வருகையில் காந்தியம் சார்ந்த செயல் நோக்கங்களையே பரிந்துரைக்க முற்படுகின்றனர். ‘அரசியலில் ஆன்மிகம் இழைய வேண்டும். அதிகார அரசியல் பலத்தின் மீதான ஆசைக்குப் பதிலாக அன்பின் ஆற்றல் மீது பற்று பெருக வேண்டும்’ என்பதே காந்திஜியின் எதிர்பார்ப்பு. மக்களின் நாகரிக நிலை எந்தக் குறிக்கோளை நோக்கித் திசை திரும்ப வேண்டும் என்பதை மகாத்மா காந்தி தன் வழியில் மேலோட்டமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க பெருந்தலைவர் மார்டின் லூதர் கிங் பின்வருமாறு பதித்துள்ளார்: “காந்திய சித்தாந்தத்தை மேன்மேலும் ஆழ்ந்து படிக்கையில் அன்பின் ஆற்றல் பற்றிய எனது ஐயப்பாடுகள் மெல்ல மெல்ல விலகின. “கிறித்தவக் கோட்பாடான பேரன்பை, காந்தியின் வழிமுறையிலான அகிம்சை வாயிலாய் நடைமுறைப்படுத்துவதே சுதந்திரத்திற்காக மல்லாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாளக்கூடிய ஆற்றல்மிக்க ஒரே ஆயுதம்” என்பதை தெள்ளத் தெளிய உணர்ந்தேன். ஏசுகிறிஸ்து கருத்தையும் செயல்நோக்கத்தையும் கற்பித்தார். காந்தி அதற்கான வழிமுறையை வகுத்தளித்தார்”

(-மார்டின் லூதர் கிங் எழுதிய ஸ்ட்ரெங்த் டு லவ் நூலிலிருந்து; (கால்லின்ஸ் பிரசுரம்).

“மனித வரலாற்றில் வருங்காலத்திய ஓர் புதிய சகாப்தத்தின் பிதாவாக காந்தி திகழக்கூடும்” என்கிறார் இ. ஸ்டான்லி ஜோன்ஸ் எனும் அமெரிக்க கிறித்தவப் பிரசாரகர், “மகாத்மா காந்தி – ஆன் இண்டர்பிரிடேஷன்” எனும் தமது நூலில்.

சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்றும், தெள்ளிய அறிவாற்றலின் புறவுரு என்றும் போற்றப்படும் விஞ்ஞானி ஐன்ஸ்டைன் பின்வருமாறு உறுதிபட எடுத்துரைத்துள்ள கருத்தையும் மனதிற் கொள்வோமாக: ”உலக நாடுகளின் தேசிய சுய நலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அடிப்படையில், உலகில் நிரந்தர அமைதி நிலவச்செய்வது எங்ஙனம் என்கிற நெடுநாள் பிரச்னையை ஆராயுங்கால், காந்தியின் நெறி வழிமுறையைப் பரந்த அளவில் பின்பற்றுவதுதான் ஒரே தீர்வு.”

(ஆதாரம்: ‘ஐன்ஸ்டைன் ஆன் பீஸ்’ – ஹெய்ன்ஸ் நார்டன் தொகுத்தளித்த நூல்).

.

குறிப்பு:

திரு. லா.சு.ரங்கராஜன்,  தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்;  மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர்.

இக்கட்டுரை தினமணியில் வெளியானது.

காண்க: தேசிய சிந்தனை

%d bloggers like this: