Category Archives: ஹிந்துத்துவர்

விவேகானந்தரும் அம்பேத்கரும்

-அரவிந்தன் நீலகண்டன்

ambedkar and vivekananda

 

பாரதத்தின் ஞானமரபின் ஊற்றுக்கண்களாக விளங்குபவை எவை?

பாரதத்தின் ஞான உச்சங்களாக கருதப்படுபவை உபநிடதங்களே. அவற்றின் மகா வாக்கியங்களே பாரதப் பண்பாட்டின் முக்கிய அடித்தள மதிப்பீடுகளாக அமைந்தன. அவை நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடுகள் அல்ல; வழிவழியாக வந்த ஞானத்தேடல்களின் உச்சங்கள். அனுபவங்கள் சார்ந்த தரிசனங்கள். எனவே நம்பிக்கையைக் கோராமல் அவை சிரத்தையுடனான ஞானத்தேடலையே மானுடத்தின் கடமையாக முன்வைத்தன. மானுடத்தின் சமத்துவத்தை மட்டுமல்லாது, சகல சிருஷ்டியின் ஒற்றுமையை அவை வலியுறுத்தின. அத்துடன் இந்த ஆன்மநேய ஒற்றுமையையும் சமத்துவத்தையும் தன் சுயத்தில் உணர்வதையே மானுட சமுதாயத்தின் மிகப் பெரிய அறமாக பாரதம் தலைமுறைகள் தோறும் முன்வைத்து வருகிறது.

ஆனால் மானுட வரலாற்றிலோ ஏற்றதாழ்வுகளும் சாதி உணர்வும் அதிகார அந்தஸ்து பேதங்களும் இந்த ஆன்மநேய சமத்துவத்தை தனிமனிதன் உணராதவாறு செய்கிறது. ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த ஏற்றத் தாழ்வு இருந்திருக்கிறது. அதனுடன் அந்த ஏற்றத் தாழ்வை மீறியும் எதிர்த்தும், அனைத்து மக்களும் பரமாத்மாவின் பகுதியே எனும் அத்வைத சமத்துவ குரலும் தொடர்ந்து ஒலித்த படியே இருந்துள்ளது.

அத்வைதத்தின் ஆன்மநேய சமத்துவ ஒளிக்கு சத்தியகாமனும் ரைக்வரும் வேதகால எடுத்துக்காட்டுக்கள். சமுதாயம் ஒதுக்கிய தொழுநோயுற்ற பெண்கள் வேதத்தில் மந்திர த்ருஷ்டாக்களாக போற்றப்படுகின்றனர்.

வரலாற்றுக் காலங்களில் அந்த சமத்துவ ஞானக்குரல் புத்தர் மூலமாக ஒலித்தது. சங்கரர் ‘மனீஷா பஞ்சகம்’ மூலம் காசியில் அதே வேதாந்த மானுட நேயத்தை பிரகடனம் செய்தார். ராமானுஜர் வைணவத்தை அனைத்து மக்களையும் அணைக்கும் ஆன்மிக மக்கள் இயக்கமாகக் கண்டார். ராகவேந்திரர் தாழ்த்தப்பட்டவர் கொண்டு வந்ததால் எள்ளை சுவாமியின் நைவேத்யத்திலேயே சேர்த்தார்.

இந்த பாரத ஞான மரபின் தொடர்ச்சியை நாம் ராமகிருஷ்ண- விவேகானந்த மரபில் பரிபூரணமாகக் காணலாம். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியுணர்வை முழுமையாக தாண்டிய நிலையில் தனது தலையால் தாழ்த்தப்பட்டவரின் கழிவறையை சுத்தம் செய்தார். விவேகானந்தர் தாழ்த்தப்பட்டவரிடம் புகையிலையைக் கேட்டு வாங்கினார். சிறு வயதிலேயே விவேகானந்தர் சாதிவாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஹூக்காக்களை சாதி வித்தியாசமில்லாமல் பயன்படுத்தி மனிதர்கள்- மனிதர்களிடையே ஏற்படுத்திய கட்டுப்பாடுகளை உடைத்தார்.

பாரத சரித்திரத்தில் மற்றொரு மாபெரும் ஆளுமையாக திகழ்பவர் நவீன பாரதத்தின் போதிசத்வரும் அரசியல் நிர்ணய சட்டத்தின் முதன்மைச் சிற்பியுமான பாபா சாகேப் அம்பேத்கர் ஆவார். சாதிக் கொடுமைகளை தாமே அனுபவித்து, வாழ்க்கையில் போராடி முன்னுக்கு வந்தவர் பாபா சாகேப். அவரது குடும்பம் ராமானந்த- கபீர் பக்தி மார்க்கத்தில் வந்ததாகும். டாக்டர் அம்பேத்கார் திறந்த மனமும் சிறந்த சிந்தனைத் திறனும் கொண்டவராக இருந்தார்.

அவரது ஒவ்வொரு போராட்டத்தையும் அவர் முழுக்க முழுக்க அஹிம்சை முறையிலேயே நடத்தினார். காலாராம் எனும் ராமர் கோவில் நுழைவு போராட்டத்தில் மேல்சாதியினரால் கடுமையாகத்தாக்கப்பட்ட போதும் அம்பேத்கர் தமது மக்களை அமைதி காக்கச் சொன்னார். இறுதியில் ஆச்சாரவாதிகளிடம் மிக மோசமாக ஹிந்து தர்மம் சிக்கியிருப்பதை உணர்ந்த அம்பேத்கர் தமது மக்களை பௌத்தராக மாறும்படி கூறினார். ஆனால் அவர் இயற்றிய அரசியல் சட்டத்தில் அவர் பௌத்தர்களை ஹிந்து தர்மத்தின் ஒரு பிரிவாகவே அங்கீகரித்திருந்தார்.

இக்கட்டுரையில் சாதியம், தேசியம் ஆகியவை குறித்த பார்வையில், அண்ணல் அம்பேத்கருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் இருக்கும் வியக்கத்தகு ஒற்றுமைகள் சிலவற்றைக் காணலாம்.

பாரத தேசிய ஒற்றுமையின் இயற்கை:

பாரதத்தின் ஒருமைப்பாட்டின் அடிப்படைத்தன்மையின் இயற்கை என்ன? சுவாமி விவேகானந்தர் பாரதத்தின் ஒருமைப்பாடு குறித்து பின்வருமாறு கூறுகிறார்:

‘பாரத தேசிய ஒருமை என்பது அதன் சிதறி கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதயத் துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்.’1

டாக்டர் அம்பேத்கரும் தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா எனும் கேள்விக்கு பின்வருமாறு பதிலுரைக்கிறார்:

‘புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே.’2

சமுதாய பிரச்னைகளுக்கு இன ரீதியிலான கண்ணோட்டம் அபத்தமானது:

ஆனால் இன்றைய அறிவுஜீவி என தங்களைக் கருதிக்கொள்பவர்கள் இவ்வாறு கேட்கலாம்: “இந்தியர்கள் என்பவர்கள் உண்மையில் ஆரியரென்றும் திராவிடரென்றும் இரு வேறு இனத்தவர்கள் அல்லவா? அவர்கள் எப்படி ஒரே இனத்தவர்கள் ஆக முடியும்? ஆரியர்கள் திராவிடர்கள் மீது திணித்த இனவெறிக் கொள்கையான வர்ணாசிரம அமைப்பின் அடிப்படையில்தானே இன்றைய சாதிய வக்கிரங்கள் உருவாகியுள்ளன? ‘இந்தியா ‘ என்பதே ஒரு ஆரிய மேலாதிக்க மேல்சாதி கட்டமைப்பல்லவா? பல தேசிய இனங்களின் தொகுப்பு தானே இந்தியா?”

இத்தகைய கருத்துகளை அறிந்தோ அறியாமலோ பரப்புகிற பலர், டாக்டர் அம்பேத்கரின் பெயரையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டாக்டர் அம்பேத்கர் பாரதத்தின் சமுதாய அவலங்களுக்கு இனரீதியிலான வெறுப்பு வியாக்கியானங்களை எவ்வாறு எதிர்கொண்டார் ?

இவ்விஷயங்களில் அதிசயப்படத்தக்க வகையில் அவரது கண்ணோட்டம் சுவாமி விவேகானந்தரை ஒத்திருந்தது.

ஆரிய இனவாதம் குறித்து விவேகானந்தர் கடுமையான ஏளனத்துடன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

”நமது ஐரோப்பிய ஆய்வாளரின் கனவில் இந்தியா முழுக்க முழுக்க அடர்ந்த கருமை விழிகளுடனான பூர்விகவாசிகளால் நிரம்பப்பட்டிருக்கிறது. பின்னர் வெண்ணிற ஆரியர்கள் வருகின்றனர். எங்கிருந்து என்பது கடவுளுக்குதான் வெளிச்சம். சிலர் அவர்கள் மத்திய திபெத்திலிருந்து வந்ததாகக் கருதுகின்றனர். தேசப்பற்றுடைய ஆங்கிலேயர்கள், ஆரியர்கள் சிவப்பு தலைமுடி கொண்டதாகக் கருதுகின்றனர். நமது ஐரோப்பிய ஆய்வாளரின் முடி கருமையானதாக இருந்தால் ஆரியர்களின் முடி நிறமும் கருப்பாகி விடும். சமீபகாலமாக சுவிஸ் தேச ஏரி ஓரங்கள் ஆரிய இனத்தின் தாயகமென அறிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்த ஏரியிலேயே இந்த ஆராய்ச்சி வினோதங்களுடன் மூழ்கிவிட்டாலும் பாதகமில்லை எனக் கருதுகிறேன். ஆண்டவர், ஆரியர்களையும் அவர்களது பிறப்பிடங்களையும் ஆசிர்வதிப்பாராக.ஆனால் இந்த ‘ஆராய்ச்சி’களைப் பொறுத்த மட்டில் ஒரு உண்மை என்னவென்றால், நம் வேத புராணங்களில் ஒரு வார்த்தை, ஒன்று கூட, ஆரியர்கள் இத்தேசத்திற்கு வெளியே இருந்து வந்தார்கள் என்று கூற சான்றாக இல்லை…அதைப் போல சூத்திரர்கள் ஆரியர்களல்ல என்பதும் (ஆரிய இனவாதம் போன்றே) பகுத்தறிவற்ற மடத்தனம். பாரதியர் அனைவருமே ஆரியர், ஆரியரன்றி வேறல்ல”.3

டாக்டர் அம்பேத்கர் மிகுந்த தடைகளுக்கு எதிராக, வேதங்களை தாமே கற்றறிந்தவர். அவருக்கு மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் செய்த தவறான இனரீதியான வியாக்கியானங்கள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்தன. அனாஸா என்பதை மாக்ஸ்முல்லர் அ-நாஸா என பதம் பிரிப்பதை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். சாயனரின் பதப்பிரிப்பே சரியானது என அவர் கருதினார். டாக்டர் அம்பேத்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘ஆரிய படையெடுப்பு ஒரு புனை கதை. இக்கோட்பாடு சிலரை மனமகிழ்விக்க உருவாக்கப்பட்ட நம்பிக்கைகள். அந்நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கட்டப்பட்டது. அறிவியல் ஆய்வின் வக்கிரத்தின் விளைவே அது. உண்மைகளின் அடிப்படையில் பரிணமித்ததல்ல இக்கோட்பாடு. மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அதனை நிரூபிக்க பொறுக்கியெடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இது. ஒவ்வொரு புள்ளியிலும் தகர்ந்து விழும் கோட்பாடு இது.’

‘(வேத இலக்கியத்தில் ஆரிய இனம் குறித்து சான்று உள்ளதா என்பது குறித்து) என் முடிவுகள் பின்வருமாறு:

1. வேதங்கள் ஆரியர் எனும் ஓர் இனத்தை அறியவில்லை.

2. ஆரிய இனம் என்ற ஒன்று படையெடுத்ததற்கோ அது இங்கிருந்த தஸ்யுக்கள் எனும் பூர்விக குடிகளை அடிமைப்படுத்தியதற்கோ எவ்வித சான்றுகளும் வேதத்தில் இல்லை.

3. ஆரிய/ தஸ்யு வித்தியாசங்கள் இன ரீதியிலானவை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

4.வேதங்கள் ஆரியரும் தஸ்யுகளும் வெவ்வேறு தோல் நிறம் கொண்டவர்கள் எனக் கருத இடம் தரவில்லை. பிராமணர்கள் ஆரியரெனில் தலித்துகளும் ஆரியரே. பிராமணர்கள் திராவிடர்களெனில் தலித்துகளும் அவ்வாறே. ’4

நாம் வாழ வேண்டுமென்றால்:

ஹிந்து சமுதாயம் வாழ வேண்டுமெனில் அது தன் சமுதாயத்தின் உயிர்சக்தியை அரித்துக் கொண்டிருக்கும் அனைத்து மூடப் பழக்க வழக்கங்களையும் களைய வேண்டியதன் அவசியத்தை சுவாமி விவேகானந்தரும் டாக்டர் அம்பேத்கரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் கூறினார்:

‘எத்தகைய ஒரு கீழ்த்தர வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். ஒரு பாங்கி (தலித்) ஒரு நம்மிடம் வருகையில் ஏதோ பிளேக் நோய் கண்டது போல அவரை ஒதுக்குகிறோம். ஆனால் ஒரு பாதிரி சில கோப்பை தண்ணீரை அவர் தலையில் விட்டுவிட்டால் ஒரு கோட்டும் போட வைத்துவிட்டால், நமது வைதீகர் அவரை தன் உள்ளறைக்கே அழைத்துச் சென்றுவிடுவார்…நம் மதமே ‘என்னைத் தொடாதே ‘ என்பதில்தான் உள்ளது…. இந்த திருக்கூத்துகள் மேலும் தொடர்ந்தால் நாம் அழிந்து படுவோம். ’5

இதே கருத்தை பாபா சாகேப் அம்பேத்கரும் கூறியுள்ளார். மகாத்மா காந்தி தன் ‘ஹரிஜன் ‘ பத்திரிகையின் தொடக்க மலருக்கு செய்தி அனுப்ப பாபாசாகேப் அம்பேத்கரிடம் கேட்டுக்கொண்ட போது, அம்பேத்கர் பின்வரும் செய்தியினை கொடுத்தார்:

‘சாதியத்தின் விளைவே தீண்டத்தகாதோர் எனும் பிரிவு. இனி வரும் கடுமையான காலகட்டத்தில் ஹிந்து சமுதாயம் உயிர்வாழ, இக்கொடுமை ஹிந்து தர்மத்திலிருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டும். ’6

சமுதாய ஒருமை ஏற்பட சமஸ்கிருதம் தேசிய மொழியாவதன் அவசியம்:

சமஸ்கிருத மொழியை விவேகானந்தர் தேசம் முழுமைக்கும் சொந்தமான பாரம்பரிய பொக்கிஷமாக மட்டும் கருதவில்லை. அதற்கும் மேலாக அது அனைத்து வகுப்பினராலும் கற்கப்படுவதன் மூலம் சமுதாய வேறுபாடுகள் சாதியக் கொடுமைகள் அகற்றப்பட முடியும் என்பதில் தெளிவாக இருந்தார். சாதியத்தை ஒழிக்க பின்வரும் திட்டத்தை சுவாமி முன் வைக்கிறார்:

‘நம் பாரதத்தின் மிக உயர்ந்த ஆன்மிகக் கருத்துகள் மடங்களிலும் சம்ஸ்கிருத மொழியிலும் அடைபட்டு உள்ளன. நம் மக்கள் வெள்ளத்திற்கு அவை அடையப்பட முடியாமல் உள்ளன. எனவே முதலில் அவை மக்களை வந்தடையச் செய்ய வேண்டும். சமஸ்கிருதம் அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்….எனவே நம் பாரத சமுதாயம் உயர்வடைய நம் ஆன்மிக பாரம்பரியம் தாய்மொழிகளில் மக்களை சென்றடைவதும் அனைத்து மக்களும் சமஸ்கிருதம் பயில்வதும் அவசியமாகும்.’7

தி சண்டே ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகைக்கு செப்டம்பர் 11, 1949 அன்று அளித்த பேட்டியில் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு கூறினார்:

‘சட்ட அமைச்சர் எனும் முறையில் அதிகாரப்பூர்வமாக பாரத தேசத்தின் ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என நான் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினேன்’.

இதனைத் தொடர்ந்து அகில இந்திய ஷெட்யூல்ட் வகுப்பினர் பெடரேஷனிலும் டாக்டர் அம்பேத்கர் இதே கருத்தை வலியுறுத்தினார். அப்போது சில உறுப்பினர்கள் எதிர்த்தனர். இது டாக்டர் அம்பேத்கருக்கு மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தியது. பத்திரிகையாளர் கூட்டத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் ‘பாரதத்தின் ஆட்சிமொழியாக தகுந்தது. சமஸ்கிருதம் மட்டுமே எனவும் அது சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அகற்றிட சிறந்த வழி எனவும்’ அவர் கூறினார்.8

நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பட்ட கஷ்டங்களும், அவரே அனுபவித்த துயரமும், அவை இன்றும் தொடரும் அவலமும் அவரது வார்த்தைகளில் கடினத்தை ஏற்றியிருந்தது. அன்று மதத்தின் பெயரில் நிலவிய மானுடமற்ற நடத்தைகளால் முழுமையாக அந்த அமைப்பில் அவர் நம்பிக்கை இழந்த போதும், இந்த மண்ணின் ஆன்மிக ஊற்றிலிருந்தே இத்துயரத்தை துடைக்கும் அமுதம் கிடைக்கும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எனவே தான் அவர் இந்த மண்ணின் மைந்தரான புத்த பகவானின் காருண்ய வழியை தேர்ந்தெடுத்தார்.அதற்கு முன்னால் அவர் குரு கோவிந்த சிங்கின் கால்ஸா பாதையை பாபா சாகேப் தேர்ந்தெடுத்தார்.

சுவாமி விவேகானந்தரையும் மிகவும் ஆகர்ஷித்த ஒரு ஆன்மிக வடிவமாவார் குரு கோவிந்தர்.

“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்காகத் திகழ வேண்டும். நீங்கள் உங்கள் தேசத்தவரிடம் ஆயிரம் குறைகளைக் காணலாம். ஆனால் அவர்கள் நம்மவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் உங்களை பழித்தாலும் என்ன இழிசொற்களை வீசினாலும் அவர்களை அன்பு செய்வதே உங்கள் கடமை. அவர்கள் உங்களை துரத்தினால் கூட மெளனத்தில் மரணத்தை எதிர் கொள்ளுங்கள். குரு கோவிந்த சிம்மனை போல வாழுங்கள், மடியுங்கள். அத்தகைய மனிதனே உங்களில் ஹிந்து எனும் பெயருக்கு தகுதியானவன்.”

என்று விவேகானந்தர் முழங்கினார்.9

பகவான் புத்தரிடம் விவேகானந்தரின் மனம் இயல்பாகவே லயித்தது, புத்தமே ஹிந்து சமயத்தின் பரிபூரணம் என கருதினார் ஸ்வாமி விவேகானந்தர்.

‘’புத்த சமயம் பாரதத்தில் இருந்து மறைந்ததால், அதனுடன் எழுந்த காருண்ய சமுதாய சீரமைப்பு அலையும் மறைந்தது…இந்தியாவின் சரிதலுக்கும் அதுவே காரணமாயிற்று.”

என அவர் கூறினார்.10

பாரதம் குறித்த அடிப்படையான பார்வையும் பாரதத்தின் மேன்மைக்கான செயல்திட்டம் குறித்தும் சுவாமி விவேகானந்தரும் சரி, அண்ணல் அம்பேத்கரும் சரி, எத்தனை ஒற்றுமையான கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது மேலே கூறியுள்ளவற்றால் தெரியும்.

இந்த இருதய ஒற்றுமை எப்படி வந்தது? ஜவஹர்லால் நேருவின் அந்தரங்க காரியதரிசி ஒருமுறை அம்பேத்கரைப் பார்த்தபோது இந்த நூற்றாண்டின் சிறந்த இந்தியராக அம்பேத்கர் சுவாமி விவேகானந்தரை கருதியதாக பதிவு செய்கிறார்.11

பிரம்மத்துவம்: விவேகானந்த அம்பேத்கர் சங்கமம்…

பாபா சாகேப் அம்பேத்கர். ஹிந்து சமுதாயத்தை குறித்து மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த நூல் ஒன்று உண்டு. அதுதான் ’இந்து மதத்தின் புதிர்கள்’ எனும் பெயரில் அவர் எழுதிய நூல். இது ஒவ்வொரு ஹிந்து எதிர்ப்பாளரும் பயன்படுத்தும் நூலாகும். ஆனால் பாபா சாகேப் அம்பேத்கரின் உண்மையான எண்ணம், ஹிந்து சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே. ஹிந்து சமுதாய அமைப்புக்கு எதிராக அவர் கடுமையாக ஒரு குற்றச்சாட்டை அதில் அவர் முன்வைக்கிறார்:

ஹிந்து சமூக அமைப்பு ஜனநாயகத் தன்மையற்றிருப்பது விபத்தல்ல; அவ்விதத்திலேயே அது வடிவமைக்கப்பட்டுள்ளது. வர்ணமாகவும், சாதிகளாகவும், சாதிகளுக்கு புறம்பே உள்ளவர்களாகவும் அது உருவாக்கியிருப்பது கோட்பாடுகளல்ல, கட்டளைகள். அவை அனைத்துமே ஜனநாயகத்துக்கு எதிரான தடை அரண்கள்.

அடுத்ததாக அதிலிருந்து அவர் முக்கியமான ஒரு அவதானிப்பைத் தருகிறார்:

இதிலிருந்து சகோதரத்துவம் எனும் கோட்பாடு ஹிந்து சமயத்துக்கும் ஞானமரபுக்கும் தெரியவே தெரியாத ஒன்று எனத் தோன்றலாம். ஆனால் அத்தகைய ஒரு முடிவு, வரலாற்றின் தரவுகளால் ஏற்றுக் கொள்ளப்பட முடிந்ததல்ல. ஹிந்து சமயமும் ஞானமரபும் சகோதரத்துவத்தைக் காட்டிலும் சமூக ஜனநாயகத்துக்கு பெரும் சாத்தியம் அளிக்கக் கூடிய ஒரு கோட்பாட்டை உருவாக்கின – அதுவே பிரம்மத்துவம்.

சாதிகளற்ற ஹிந்து சமுதாயம் எனும் கோட்பாட்டுக்கான கருத்தியல் தேடலில் பாபா சாகேப் அம்பேத்கர் நவ்யான பௌத்தத்தைத் தன் மெய்ஞான கருத்தியலாகத் தேர்ந்தெடுத்தாலும், அதன் வேர்களை அவர் உபநிடதங்களில் கண்டடைந்தார். பிரம்மத்துவம் என்பதன் அடிப்படையை அவர் பின்வருமாறு விளக்குகிறார்:

பிரம்மத்துவத்தின் சாரம் மூன்று வடிவங்களில் சொல்லப்படுகிறது. அவையாவன: (i) சர்வம் கல்விதம் பிரம்மம் – அனைத்தும் பிரம்மம் (ii) அகம் பிரம்மாஸ்மி – ஆத்மனே -சுயமே- பிரம்மம் எனவே நான் பிரம்மம் (iii) தத்வமஸி – ஆத்மனே சுயமே பிரம்மம் எனவே நீயும் பிரம்மம். மகா வாக்கியங்கள் என அறியப்படும் இவையே பிரம்மத்துவத்தினை வரையறை செய்கின்றன.

பின்னர் பிரம்மத்துவக் கோட்பாட்டிலிருந்து பாபா சாகேப் அம்பேத்கர் ஜனநாயகத்தை ஒரு வாழ்க்கை முறையாக வடித்தெடுக்கிறார்:

அனைவரும் இறைவனின் மக்கள் என்பது ஜனநாயகத்துக்கான ஒரு பலவீனமான அடித்தளமாகும். அத்தகைய அடித்தளத்தினால் தான் பல தேசங்களில் ஜனநாயகம் வலிமையற்று உள்ளது. ஆனால் நீங்களும் நானும் ஒரே பிரபஞ்ச தத்துவத்தின் பகுதிகள் என்பதில் ஜனநாயகத்தைத் தவிர வேறெந்த சமூக கோட்பாட்டுக்கும் இடமில்லாது போகிறது. அத்தகைய கோட்பாடு ஜனநாயகத்தை வெறுமனே போதிக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்கும் கட்டாயமான வாழ்வியல் விதியாக்குகிறது. ஜனநாயகம் குறித்து ஆராய்ச்சி செய்யும் மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள், ஜனநாயகம், கிறிஸ்தவம் அல்லது பிளேட்டானிய கருத்தியலிலிருந்து உருவானதாகவும், அதற்கு வேறேது ஊற்றுக்கண்ணும் இருந்திருக்க முடியாது என்றும் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பிரம்மத்துவம் எனும் கோட்பாடு குறித்தும், அது ஜனநாயகத்துக்கு (கிறிஸ்தவ, கிரேக்க சிந்தனையைக் காட்டிலும்) சிறந்த அடிப்படையை ஜனநாயகத்துக்கு அளிக்கிறது என்பதும் தெரிந்திருந்தால், அத்தனை பிடிவாதமாக (மேற்கை மட்டுமே உயர்த்திப் பிடித்தபடி) இருந்திருக்க மாட்டார்கள்.

இதற்குப் பிறகு பாபா சாகேப் கூறுவது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்:

ஒரு பக்கம் நம்மிடம் ஆகச் சிறந்த ஜனநாயகத்தத்துவமான பிரம்மத்துவம் எனும் கோட்பாடு உள்ளது. மறுபுறமோ நம் சமுதாயம் சாதிகள், உபசாதிகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், ஒடுக்கப்பட்ட பூர்விகக் குடிகள், குற்றப் பரம்பரையினர் எனப் பிரிந்து கிடக்கும் நிலை உள்ளது. இதைவிட மிகப் பெரிய தவிப்பு வேறெதுவாக இருக்க முடியும்?12

சுவாமி விவேகானந்தரும் இதே வார்த்தைகளில் இந்து தருமத்தின் மகோன்னதத்தையும் இந்து சமுதாயத்தின் வீழ்ச்சியையும் கூறுவதை நாம் காண முடியும்:

இறைவன் உங்களிடம் மறுபடியும் புத்தராக வந்தார். ஏழைகள், துன்பப் படுகிறவர்கள், பாவிகள் ஆகியோரிடம் எப்படி அனுதாபம் காட்டுவது, எப்படி இதயப்பூர்வமாக அன்பு பாராட்டுவது என்று கற்பித்தார். ஆனால் நீங்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை. ஹிந்து சமயத்தைப் போல மிக உயர்ந்த முறையில் மனிதகுலத்தின் மேன்மைச் சிறப்பைப் பற்றி வேறெந்தச் சமயமும் இந்த உலகத்தில் போதிக்கவில்லை. அத்துடன் ஏழை, எளியவர்களின் கழுத்தின் மீது ஏறி மிதிக்கிற சமயமாக இவ்வுலகில் ஹிந்து சமயத்தைப் போல வேறெதுவும் இல்லை. இக்குற்றத்திற்கு சமயம் பொறுப்பு அல்ல; ஹிந்து சமயத்திலுள்ள வெளி வேஷக்காரர்கள், வறட்டு ஆசாரவாதிகள் ஆகியோரே காரணம். அவர்கள், இறை தத்துவம் வேறு, நடைமுறை விவகாரம் வேறு என்பது போன்ற கொள்கைகளின் வடிவத்தில் பலவிதமான கொடுஞ்செயல்கள் புரியும் பொறிகளைக் கண்டுபிடித்தார்கள்.13

உபநிடதங்கள் சமூக விடுதலைக்கான ஆயுதம்:

டாக்டர் அம்பேத்கர் ஹிந்து சமுதாயத்தில் சாதியத்தை ஒட்டுமொத்தமாக அழிப்பது குறித்து ஒரு நூல் எழுதினார். சாதியின் நிர்மூலம் (Annihilation of caste) என்பது அந்த நூலின் பெயர். அந்த நூலில் கடுமையாக சாதியத்தை அவர் சாடியதுடன், எவ்வித இரக்கமும் இன்றி ஹிந்து சமுதாயம் தங்கள் சாஸ்திரங்களை கேள்விக்குள்ளாக்கி சமத்துவம் சகோதரத்துவம் விடுதலை எனும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தம்மை சமுதாய புனர்நிர்மாணம் செய்ய வேண்டுமென்று கூறினார். அதற்கான நூல்களாக உபநிடதங்கள் அமையும் என அவர் அதில் சொல்லியிருந்தார். இது 1930-களில்.

இதன் தொடர்ச்சியாகத் தான், இருபது ஆண்டுகளுக்கு பிறகு உபநிடத மகா வாக்கியங்களில் தெரியும் பிரம்மத்துவத்தில் ஆகச் சிறந்த சமுதாய ஜனநாயக தத்துவத்துக்கான ஆன்மிக அடிப்படை இருப்பதை அவர் எழுதினார். இதே கருத்தை சுவாமி விவேகானந்தரும் கூறுகிறார்:

உபநிடதங்கள் சக்திக்கு பெரும் சுரங்கமாகும்… எல்லா இனத்தவரிடையேயும் எல்லா மதத்தினரிடையேயும் எல்லா சமயப் பிரிவினரிடையேயும் உள்ள பலவீனர்களான துன்பத்தால் நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களை இது போர்முரசு கொட்டி அழைத்து உங்களை நம்பி நின்று விடுதலை பெறுங்கள் என்று முழங்கும். விடுதலை உடலுக்கு, விடுதலை மனதுக்கு, விடுதலை ஆன்மாவுக்கு இவையே உபநிடதங்களின் மூல மந்திரமாகும்.14

இந்த வியக்கத்தகு ஒற்றுமை எப்படி இந்த இரு மகான்களின் எண்ணங்களில் ஏற்பட்டது? இதற்கான விடை மிகவும் சுலபமானதாகும்.

சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்.

அத்தகைய இரு பேரான்மாக்களின் பார்வைகளின் தேசத்துக்கான நல்வழிப்பார்வை ஒன்றானது அதிசயமல்லவே.

***

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

1. லாகூர் பேருரை சுவாமி விவேகானந்தர் உரைகளும் எழுத்துகளும் பாகம்- III
2. டாக்டர் அம்பேத்கர் ‘Thoughts on Pakistan ‘ Part-II Chapter- IV
3. சுவாமி விவேகானந்தர், கொழும்பு முதல் அல்மோரா வரையான பேருரைகள்
4. டாக்டர் அம்பேத்கர், உரைகளும் எழுத்துகளும் பாகம்-VII,
5. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம்- VII
6. டாக்டர் அம்பேத்கரின் செய்தி ஹரிஜன், பிப்ரவரி 11, 1933
7. சுவாமி விவேகானந்தர், சென்னை பேருரை (பாகம்-III)
8. டாக்டர் அம்பேத்கரின் சக கட்சித் தோழர் திரு.மவுரியா NCERT க்கு எழுதிய கடிதம்/ தேதி: 14/2/2001 மற்றும் The Sunday Hindustan Standard 11. செப்டம்பர், 1949.
9. சுவாமி விவேகானந்தர், உரைகளும் எழுத்துகளும், பாகம்- III
10. சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை- 26 செப்டம்பர் 1893
11. http://jeyamohan.in/?p=4715
12. பாபா சாகேப் அம்பேத்கர், ஹிந்து மதத்தின் புதிர்கள்: பின்னிணைப்பு: அரசியல், 1956
13. சுவாமி விவேகானந்தர், எழுமின் விழிமின், உபதேச தொகுப்பு, விவேகானந்த கேந்திரம்,
14. அதே.

குறிப்பு:

திரு. அரவிந்தன் நீலகண்டன், சிறந்த சிந்தனையாளர்; ஹிந்து அறிவியக்கத்தை  முன்னெடுத்துச் செல்லும் இவர், நாகர்கோவிலில் வசிக்கிறார். ‘உடையும் இந்தியா’, ‘ஹிந்துத்துவம்- ஓர் அறிமுகம்’,  ‘பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிசம்’, ‘நம்பக் கூடாத கடவுள்’- போன்ற நூல்களின் ஆசிரியர்.

.
Advertisements

வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா

– இளங்குமார் சம்பத்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

(பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11)

 

சிறந்த அறிவாளி, உயர்ந்த சிந்தனையாளர், தீவிர தேசபக்தர், அமைதியான இயல்பு, இனிமையான பேச்சு, ஆடம்பரம்- விளம்பரம் இல்லாதவர், சொல்லும் செயலும் ஒன்றானவர், நல்வினை மட்டுமே அறிந்தவர்; செய்தவர், எதிர்வினை அறியாதவர், எளிமையின் இலக்கணம் – இப்படிப்பட்ட ஒருவர் பேரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் மிகுந்து காணப்படும் அரசியல் துறையில் இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம். அவர்தான் பண்டிட் தீனதயாள் உபாத்யாய.

அரசியல் என்பது துர்நாற்றமடிக்கும் சாக்கடை என்று இகழப்பட்ட காலத்தில் அதை சுத்தம் செய்து சீர்படுத்துவேன் என்று வந்துதிந்த அரசியல் ஞானி.

1916-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் உத்தரப்பிரதேசம்,  மதுராவிற்கு அருகே ஒரு கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். ஆறு வயதிலேயே பெற்றோரை இழந்த தீனதயாள்,  ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார்.

வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மாமா ரயில்வே துறையில் பணியாற்றியதால் இவர் பிரயாணம் பெரும்பாலும் ரயிலிலேயே இருந்தது. இறுதிக்காலம் வரை ரயிலிலே பயணம் செய்தார்.

பட்ட மேற்படிப்பிற்காக ஆக்ரா சென்றபோது ஸ்ரீ நானாஜி தேஷ்முக் என்ற சங்க பிரசாரகர் (நானாஜி) மூலம் ஆர்.எஸ்.எஸ். அறிமுகமாகிறது. சங்கக் கருத்துக் கனலும் டாக்டர்ஜியாலும் (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்), நானாஜியாலும் பெரிதும் கவரப்பட்ட தீனதயாள் 1942 முதல் சங்க பிரசாரகர் (முழு நேர ஊழியர்) ஆகி தேசப் பணியாற்றி வந்தார்.

சுதந்திரத்திற்குப் பின் நமது அரசியலானது நமது இயல்பான ராஷ்ட்ர வாழ்க்கையை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு அரசியல் இயக்கம் துவங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 1951-ல் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் பணியாற்றிட  குருஜி (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர்) அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களுள் தீனதயாள்ஜியும் ஒருவர்.

திட சிந்தனை, தெளிவான நோக்கு, அயராத உழைப்பு, பலனை எதிர்பாராத கடமை உணர்வு இவற்றை தீனதயாள்ஜியிடம் கண்ட டாக்டர் முகர்ஜி 1952-ல் இவரை ஜனசங்கத்தின் அகிலபாரத அமைப்பு பொதுச் செயலாளராக நியமித்தார்.

1953-ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் போராட்டத்தில் சிங்கம் போல் சிறை சென்ற டாக்டர் முகர்ஜி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜனசங்கத்தை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பு தீனதயாள்ஜியின் தோளில் அமர்ந்தது.

தனது அப்பழுக்கறற தேசபக்தியாலும், கிருஷ்ண பரமாத்மா கூறியபடி ‘கருமமே கண்ணாக’ கட்சிப் பணியாற்றி வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஜனசங்கம் நாடு முழுக்க வியாபித்திருந்தது.

1967-ம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த ஜனசங்கத்தின் ஆண்டு பொதுசபாவில் அவர் அகில பாரதத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘செங்கோட்டை’ என வர்ணிக்கப்படுமளவிற்கு கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் பெற்றிருந்த கள்ளிக்கோட்டையில் ‘காவி’ ஊர்வலம் லட்சம் பேருடன் நடைபெற்றது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

பிப்ரவரி 11, 1968 – லக்னோவிலிருந்து பாட்னா செல்லும் ரயில் பயண வழியில் மொகல்சராய் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

நிச்சயமாக இது ஒரு அரசியல் படுகொலை. ஆம். இதுவரை விசாரிக்கப்படாத, துப்பு துலக்கப்படாத, குற்றவாளிகள் கைது செய்யப்படாத விசித்திரமான ஓர் அரசியல் படுகொலை.

சிறுவயதில் ரயிலில் ஆரம்பித்த அவர் வாழ்க்கைப் பயணம் ரயிலிலேயே முடிவடைந்தது நெஞ்சை விம்மவைக்கும்  சோகமாகும்.

***

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர். தான் ஓர் அரசியல் கட்சியின் அகில பாரத பொறுப்பாளர் என்ற அகந்தை சிறிதும் இல்லாதவர்.

பண்டிட்ஜி நாகபுரி சங்க சிக்ஷ வர்கவிற்கு (ஆர்.எஸ்.எஸ். சின் வருடாந்திர  பயிற்சி முகாம்)  செல்லும் வழக்கமுடையவர். ஒருமுறை சங்க சிக்ஷவர்கவில் உணவருந்திவிட்டு,  தட்டைக் கழுவிட வரிசையில் சென்றபோது குறும்புக்கார இளைய ஸ்வயம்சேவகர் ஒருவரின் விளையாட்டுத்தனமான செயலினால், தீனதயாள்ஜி கையில் இருந்த தட்டு கீழே விழுந்து விடுகின்றது. சில ஸ்வயம்சேவகர்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். தீனதயாள்ஜி கீழே விழுந்த தட்டை கையில் எடுத்துக்கொண்டு ஏதும் நடக்காததுபோல், வரிசையின் கடைசியில் போய் நின்று தட்டை வந்து கழுவிச் சென்றார். மதிய உணவிற்குப் பின் நடைபெற்ற அமர்வில், பௌதிக் கொடுப்பவராக தீனதயாள்ஜியைக் கண்ட அந்த விளையாட்டு ஸ்வயம்சேவகர்களுக்கு அதிர்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தீனதயாள்ஜியிடம் மன்னிப்பு கோரினர். தீனதயாள்ஜி ஏதும் நடக்காததுபோல் அந்த ஸ்வயம்சேவகர்களிடம் அன்பு பாராட்டினார்.

அன்பானவர், சாந்தமானவர் என்றால் அமைப்பின் ஒழுங்கில் கடுமையானவர். 1966-ல் மத்திய அரசு கொண்டுவந்த மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்திற்கு ஜனசங்கம் ஆதரவு கொடுத்தது. அச்சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனசங்கத்திற்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 6 பேர் இச்சட்டத்தை எதிர்த்தனர். கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தீனதயாள்ஜி கூறினார். ஆனால், அநத 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களித்ததால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலுக்காக அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார் தீனதயாள்ஜி.

அந்தக் காலத்தில் முதன்முறையாக 8 உறுப்பினர்களை கொண்ட கட்சி 6 உறுப்பினர்களை நீக்குவது என்பது சாதாரண காரியமல்ல. ஆனால், கட்சியின் ஒழுங்கே முக்கியம் எனக் கருதிய தீனதயாள்ஜி இக்கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

தீனதயாள்ஜி சிறந்த பேச்சாளர் அல்ல. மேலும் அவர் பேசிக் கொண்டிருப்பவரும் அல்ல. செயல் – செயல் அது ஒன்றே அவர் தாரக மந்திரம். தன் உதாரணமே சிறந்த உதாரணம் என்பதற்கு தீனதயாள்ஜி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.

1962 பொதுத் தேர்தலில் நாகபுரியில் ஜனசங்கத்தில் பணிபுரிந்த ஒரு கார்யகர்தர் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தார். இவர் நல்லவர்தான். ஆனால், வாய்ப்பு மற்றொருவருக்கு கிடைத்தது. ஆகவே வெறுப்படைந்த இந்த நபர், டெங்கடிஜி (இவர் பாரதீய மஸ்தூர் சங்கத்தை நிறுவியவர்)  அவர்களிடம் போய் புலம்பியிருக்கிறார். “நான் இவ்வளவு நாள் பணி செய்தது ஜனசங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா? எனது சேவை கட்சிக்கு தேவையில்லையா?” என்ற ரீதியில் மிகவும் வருத்தப்பட்டு கோபமாகப் பேசியுள்ளார்.

டெக்கடிஜியோ,  “நண்பா, நீ இங்கு புலம்புவதில் பிரயோசனமில்லை. வேண்டுமானால் தில்லி சென்று தீனதயாள்ஜியைப் பார்த்து முறையிடு” என்று கூறினார். அந்த நண்பரும் உடனே தில்லி சென்று ஜனசங்க கார்யாலயம் சென்று, தான் தீனதயாள்ஜியை சந்தித்து பேச வந்துள்ள விவரத்தைக் கூறினார்.

அவரைச் சந்தித்த தீனதயாள்ஜி, “சாப்பிட்டாயா?” என்று கேட்டு அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தார். “இன்று பகலில் எனக்கு ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் உள்ளன. ஆகவே மாலை 6 மணிக்கு மேல் நிதானமாகப் பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் பணியைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

தேர்தலுக்கான நோட்டீஸ், போஸ்டர் இவைகளை பகுதிவாரியாக பிரித்தனுப்பும் வேலை, அச்சு இயந்திர வேலை, இடையே சந்திக்க வந்தவர்களுக்கு அவர்களது பணி குறித்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். தீனதயாள்ஜி எப்பொழுது சாப்பிட்டார், டீ அருந்தினார் என்று தெரியாது.

ஆனால், நாகபுரி நண்பர், கார்யாலயத்திலிருந்த ஒருவரிடம், “தீனதயாள்ஜி இவ்வாறு ஓய்வின்றி தேர்தல் பணி செய்கின்றாரே, அவர் எங்கு போட்டியிடுகிறார்?” என்று கேட்டார். அதற்கு அந்த நண்பரோ, தீனதயாள்ஜி போட்டியிடவில்லையே” என்றார். “அப்படியானால் தீனதயாள்ஜி ஏன் சாப்பிடாமல் கொள்ளாமல் இப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்?” என்று வினா எழுப்பினார்.

அதற்கு அந்த தில்லி பிரமுகர் “மற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே தீனதயாள் இவ்வளவு பணியும் செய்கிறார்” என்றார். மாலையிலும் நாகபு ரிகாரருக்கு டீ கிடைத்தது.

சுமார் 6 மணியளவில் தீனதயாள்ஜி குளித்து முடித்து இவரிடம் வந்து, “என்ன நண்பரே, சாப்பிட்டீர்களா? நன்கு ஓய்வு எடுத்தீர்களா? இப்ப, நான் தயார். நாளை காலை வரை கூட பேசலாம்” என்றார்.

ஆனால் நாகபுரி நண்பரோ, பண்டிட் ஜியின் செயல்களைக் கண்டு அதிலே விளக்கமும் பெற்றுவிட்டபடியால், “பண்டிட்ஜி, ஒன்றுமில்லை, தங்களை பார்த்துவிட்டு செல்லவே வந்தேன்” என்று கூறிவிட்டு தனக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காதது பற்றி மூச்சு கூட விடாமல் திரும்பிவிட்டார்.

***

1965-ம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான ஆண்டு. இந்த ஆண்டுதான் தீனதயாள்ஜி படைத்த ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற சிரஞ்சீவி தத்துவத்தை ஜனசங்கத்தின் விஜயவாடா மாநாட்டிலே முன்வைத்தார்.

முதலாளித்துவம், சோஸலிசம் ஆகிய இரு கருத்துக்கள் தான் பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடியவை என உலகம் ஏற்று இருக்கக்கூடிய நிலையில், அவை இரண்டுமே மானிட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்திட முடியாத- குறைவான கருத்துக்களே என விளக்கினார்.

“மனிதன், வெறும் உடம்பல்ல. அவன் உடம்பு, மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டவன்.  ஆகவே மனித இனம், தனிமனிதன் ஆகியோருடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திடும் முழுக்கருத்து ஒன்றை பாரதம் உலகுக்கு அளிக்க வல்லது” (தான் அளித்ததாக அவர் கூறவில்லை) என்று ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற பெயரிலே உயரிய தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். நமது பொருளாதார வளர்ச்சிக் கட்டமைப்பில் சுதேசி சிந்தனையே அடிக்கல்லாக இருக்க வேண்டும் என்றார்.

‘பாஞ்ஜசன்ய’ வார இதழ், ‘ஸ்வதேஷ என்ற தினசரி-க்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆதிசங்கரரின் வாழ்க்கை குறித்தும், சந்திரகுப்த மௌரியன் குறித்தும் ஹிந்தியில் புத்தகம் படைத்துள்ளார். சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மராட்டியிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

பாரதத்தாயின் பணியைத் தவிர வேறு  ஒன்றும் அறியாத பரமபக்தரின் புகைப்படங்கள் கூட கிடையாது. அவர் அதைக் கூட விரும்பவில்லை. ராம சேவையில் ஆஞ்சனேயன் போல, பாரதமாதா சேவையில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட பண்டிட் தீனதயாள்ஜி அவர்களின் இன்னுயிரை கயவர்கள் கயமைத்தனமான 1968 பிப்ரவரி 11-ல் கவர்ந்தார்கள். பாரத அன்னை தன் தவப்புதல்வர்களிலே ஒரு மாணிக்கத்தை இழந்தாள்.

தேசப்பணியில் புகழின் உச்சியிலிருந்த போதும் ஒரு புகைப்படம் கூட விட்டுச் செல்லாத பண்டிட் தீனதயாள்ஜி ஒரு மகாத்மா தானே!

 

குறிப்பு:

திரு. இளங்குமார் சம்பத், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக மாநில  அமைப்பாளர்.

நன்றி:  விஜயபாரதம்-  தீபாவளி மலர் 2014

கோல்வல்கர் பரம்பரை

-மலர்மன்னன்

குருஜி கோல்வல்கர்

குருஜி கோல்வல்கர்

குருஜி 

மாதவ சதாசிவ கோல்வல்கர் 

(பிறப்பு:  1906, பிப். 19- மறைவு: 1973, ஜூன் 5)

 

 “ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காது தான்- என்கிறார்களே, அப்படியென்றால் என்ன?” என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை என்று மெய்யாகவே, மெய்யாகவே அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ‘கோல்வல்கர் பரம்பரை’ என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத பாராட்டு என்பது கோல்வல்கர் யார் எனத் தெரிந்தால் புரிந்துவிடும்!

இன்றைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரதத்தின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றதென்றால் அதற்கு முழு முதற் காரணம் கோல்வல்கர்தான். ஆனால் நமது வரலாற்றுப் புத்தகத்தைப் பார்த்தால் இந்த உண்மை அதில் பதிவு செய்யப்பட்டிருக்காது. ஏதோ ஷேக் அப்துல்லாதான் அதற்கு ஒத்துழைத்தார் என்பது போல் ஒரு மாயத் தோற்றமே அதில் புலப்படும். கோல்வல்கர் எடுத்த முயற்சியினால்தான் 1947-ல் காஷ்மீர மன்னர் ஹரி சிங் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்புக்கொண்டார் என்ற உண்மை ஆவணங்களில் புதைந்து கிடக்கிறது. நல்லவேளையாக அந்த ஆவணம்அழிக்கப்பட்டுவிடவில்லை. இணயத்திலேயே கூட அகப்பட்டுவிடும், கூகிளில் தேடினால்! காஷ்மீர் என்று எழுத்துகளைத் தட்டினாலேயே போதும், கொண்டு வந்து கொட்டிவிடும், மறைக்கப்பட்ட உண்மைகளை!

காஷ்மீர் நம் பாரதத்தின் ஒரு பகுதியே என உறைக்கச் செய்தவர் கோல்வல்கர். ஏனெனில் புராதனமான சைவ சித்தாந்தத்தின் உறைவிடம் புனிதம் வாய்ந்த காஷ்மிர் என்பது அவருக்கு உறைத்திருந்தது. மேலும், 1947-இல் பாகிஸ்தான் தோன்றிய சூட்டோடு சூடாகவே காஷ்மீர் மாநிலத்தை வஞ்கமாகக் கவர முகமது அலி ஜின்னா முற்பட்டபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதில் பாரத ராணுவத்துடன் இணைந்து நின்று ரத்தச் சாட்சிகளாய் உயிர்த் தியாகம் செய்த திருக் கூட்டம், அந்த கோல்வல்கரின் ஆணைக்கு இணங்கவே அவ்வாறு தன்னை பலி கொடுத்தது. ஆகவே  ‘கோல்வல்கர் பரம்பரை’ என்று குறிப்பிடப்படுவோமானால் எமக்கு அதனைக் காட்டிலும் வேறு பெருமை என்ன இருக்க முடியும் ?…

…1969- ஆம் ஆண்டு, யூனிவர்சல் பிரஸ் சர்வீஸ் என்ற பாரத- மேற்கு ஜெர்மனி தனியார் கூட்டு செய்தி ஸ்தாபனம் ஒன்றில் கர்நாடக மாநிலம் முழுமைக்குமான செய்தியாளனாகப் பணியிலிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பின் சென்னையில் இருக்க விரும்பாமல் பெங்களூருக்கு மாற்றல் கேட்டுப் போய்விட்டிருந்த சமயம். மேற்கு குமாரப் பார்க்கில் ஒரே கட்டடத்தில் விசாலமான அலுவலகம், வசிக்குமிடம் என அளித்திருந்தாலும், எனக்குக் கீழே ஒரேயொரு டெலிபிரின்டர் ஆபரேட்டர், ஒரு ஆஃபீஸ் பாய் என மிகச் சிறிய நிர்வாகம். செய்தியைப் பொருத்தவரை மாநிலம் முழுவதுமே நான்தான் சென்று வந்தாக வேண்டும். கணக்கு வழக்குகளைப் பார்த் துகொள்வதும் அலுவலக நிர்வாகமும் ஆபரேட்டர் பொறுப்பு. நான் பீரோ சீஃப் என்று அழைக்கப்பட்டேன். மூன்றே பேர் இயங்கும் அலுவலகம்; எனவே பிரச்சினைகள் இல்லாமல் வேலை நடந்தது.

தினமும் கர்நாடக மாநில அரசின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்குப் போவேன். வீரேந்திர பாட்டீல் முதலமைச்சராகவும், ராமகிருஷ்ண ஹெக்டே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்று நிர்வாகத்தை அருமையாக நடத்தி வந்த காலகட்டம். முதல்வரும் நிதியமைச்சரும் பிற அமைச்சர்களும் செய்தியாளர்களுடன் எவ்வித வித்தியாசமும் இன்றி நெருங்கிப் பழகுவார்கள். மாநிலத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளுக்கு நேரில் செல்வதும் மற்ற சாதாரண நிகழ்வுகளை செய்தித்தாள்களிலிருந்தே எடுத்து அனுப்புவதுமான நடைமுறையனைக் கடைப்பிடிப்பதுதான் சாத்தியமாக இருந்தது. பிற மாநிலத்தில் பணிசெய்தாலும் சொந்த மாநிலத்தின் மீதும் நாட்டம்மில்லாமல் போகாது அல்லவா ? தினமும் தமிழ் நாட்டு நிலவரம் பற்றி டெலிப்ரிண்டர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

தமிழ் நாட்டில் எம்ஜிஆரும் மதியழகனும் கருணாநிதிக்கு ஆதரவாக நின்றதில் இடைக்கால முதல்வர் நெடுஞ்செழியன் முதல்வராகும் வாய்ப்பினை இழந்துவிட்டிருந்தார். கருணாநிதி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நான் பெங்களூருக்குச் சென்றுவிட்டிருந்தேன்.

நெடுஞ்செழியன் ஏற்றமும் இறக்கமுமாகப் பேசித் தாமே ஒரு கேலிப் பொருளாக ரசிக்கப்படுகிறோம் என்கிற பிரக்ஞையின்றி,  தமது பேச்சைத்தான் ரசிக்கிறார்கள் என்ற நினைப்பில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பாரேயன்றி, நிர்வாகத் திறமை ஏதும் இல்லாதவர். மேலும் அரசியல் சாதுரியமும் அற்றவர். முதல்வர் பதவிக்கு அவர் வராமல் போனது நல்லதுதான். அந்தச் சமயத்தில் கருணாநிதிதான் முதல்வர் நாற்காலியில் அமர முற்றிலும் தகுதி பெற்றவராக இருந்தார். அவர் மட்டும் சுய நலமில்லாதவராகவும், முதல்வர் பதவியை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தவேண்டும் என்று கருதுபவராகவும், உண்மையிலேயே அண்ணாவின் இருதயத்தை இரவலாகப் பெற்றவராகவும், முகஸ்துதியை விரும்பாதவராகவும், தற்புகழ்ச்சியில் திளைக்காதவராகவும் இருந்திருப்பின் அவரால் தமிழகம் எவ்வளவோ பயனடைந்திருக்கும். 1998-இல் நான்காம் தடவையாக முதல்வரானபோது அவருக்கு இருந்த பொது நல அக்கறை 1969-இல் முதல் தடவை முதல்வரானபோதே இருந்திருக்கலாகாதா ?

… வீரேந்திர பாட்டீலும், ராமகிருஷ்ண ஹெக்டேவும் ராம லக்ஷ்மணராக நிர்வாகம் செய்ததில் நான் பணியாற்றிய கர்நாடகம் சிறப்பாகவே வளர்ச்சிபெற்று வந்தது. முதல்வர், நிதியமைச்சர் இருவருமே அடக்கமானவர்கள், பதவி வகிப்பது மக்களுக்குத் தொண்டு செய்வதற்கே என்று உணர்ந்து செயல்பட்டவர்கள். அந்தச் சமயத்தில் உடுப்பியில் விசுவ ஹிந்து பரிஷத் மிக விரிவாக ஏற்பாடு செய்த மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் அதுபற்றிச் செய்தி திரட்டி அனுப்ப உடுப்பிக்குச் சென்றேன்.

மாநாட்டின் மேடையில் ஓர் அரிமாபோல் அமர்ந்திருந்த புருஷோத்தமனைப் பார்த்தேன். விசாரித்தபோது, அவர்தான் குருஜி என்றார்கள். ஒரு மந்திரச் சொல் மாதிரி அது மிக விசையுடன் என்னுள் இறங்கியது. துறவின் தூய்மையும், தொண்டின் தீவிரமும் ஜொலிக்கும் அந்த மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் அசாதாரணமானவர் எனப் புரிந்துகொண்டேன். மாநாட்டின் இடைவேளையில், உணவுக்குப் பிறகு அவரைச் சந்தித்துப் பேச அவகாசம் கேட்டேன். மிகுந்த கனிவுடன் சம்மதித்தார்.

ஒரு செய்தியாளானாக அவரை நெருங்கியபோதிலும், அவரது கம்பீரமும், அதே சமயம் அவரது எளிமையான பழகும் தன்மையும், ஆசானிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்கும் ஒரு சீடனைப் போல என்னை மாற்றிவிட்டன. காந்திஜி கொலை தொடங்கிப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் விளக்கம் பெற்றேன் என்றாலும், அதிகம் வெளிவராத காஷ்மீர் விவகாரத்தில் அவரது பங்கையும், அவருடைய இயக்கத்தினர் அவரது கட்டளைக்கு இணங்க உயிரைத் துச்சமாகக் கருதி ஆற்றிய துணிகரச் செயல்களையும் பற்றி அவர் வாயிலாகவே கேட்டறிந்த தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்தால் போதுமானது.

1947-இல் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டுவந்தவர் ஹரி சிங். இன்று தம் சொந்த மாநிலத்திற்கு வெளியே வாழ்ந்துவரும் கரண் சிங்கின் தந்தையார். முஸ்லிம் காஃன்பரன்ஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கிய ஷேக் அப்துல்லா, அதனை நேஷனல் கான்ஃபரன்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து அரசியல் செய்துகொண்டிருந்தார். ஹரி சிங்கின் பிரதான அமைச்சராக இருந்தவர் மெஹர் சந்த் மஹாஜன் என்பவர். அந்தக்காலத்தில் ஜம்மு- காஷ்மீருக்கு பாரதத்தின் வழியாகப் போக்கு வரத்து வசதி எதுவும் இல்லை. லாஹூர்தான் அவர்களுக்கு ஆசார வாசல்போலிருந்தது. அந்த லாஹூர், பிரிவினையின் விளைவாகப் பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. அது பாகிஸ்தானுக்கு மிகவும் வசதியாகவும் ஹரி சிங்கிற்குச் சங்கடமாகவும் ஆயிற்று.

சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மீரை பாரதத்துடன் இணைக்க முற்பட்டபோது இதைக் காரணம் காட்டினார், ஹரி சிங். ‘எனது சமஸ்தானம் சுதந்திரமாக இயங்குவதையே விரும்புகிறேன். அவ்வாறு இல்லாமல் பாரதமா, பாகிஸ்தானா என்ற கேள்வி எழுமானால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள பாரதத்துடன் எப்படி இணைவது ? மேலும் இங்கு அரசியல் என்ற பெயரில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிற ஷேக் அப்துல்லாவுடன் சகோதர பாசத்துடன் பழகும் நேரு பிரதமராக உள்ள பாரதத்துடன் இணைவது அப்துல்லாவின் கொட்டத்தை வேறு அதிகரிக்கச் செய்துவிடுமே ? ‘ என்று தயங்கினார், அரசர் ஹரி சிங். படேல் எவ்வளவு சொல்லியும் மன்னர் இணங்கவில்லை. சமஸ்தானத்தின் பிரதமர் மஹாஜனை அழைத்தார், பட்டேல்.

“நீங்கள் ஒருவரிடம் தூது செல்ல வேண்டும்; அவர் உங்கள் மன்னரிடம் பேசினால் மன்னர் தமது சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்கச் சம்மதித்துவிடுவார்” என்று மஹாஜனிடம் கூறினார். அப்படி வல்லபாய் படேல் அடையாளங் காட்டிய பெருமகன்தான் குருஜி எனஅனைவராலும் மரியாதையுடனும் பாசத்தோடும் அழைக்கப்பட்ட கோல்வல்கர்.

குருஜி ஸ்ரீநகர் சென்று மன்னர் ஹரி சிங்கைச் சந்தித்தார்.மன்னருக்குப் பலவாறு அறிவுரைகள் கூறி காஷ்மீர் சமஸ்தானத்தை பாரதத்துடன் இணைக்க இணங்க வைத்தார்.

இந்த மாபெரும் சரித்திர சாதனையைச் செய்த குருஜி, நான் பலவாறு கேள்விகளால் துளைத்தெடுத்த பிறகுதான் காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையத் தாமே ஒரு கருவியாக இருந்ததை வெளிப்படுத்தினார். எனது கேள்விகளைப் புன்னகைத்தே தவிர்த்து வந்த குருஜி, இறுதியில் ‘நீ விடமாட்டாய் போலிருக்கிறதே’ என்று நகைத்துத் தமது முயற்சியை ஒப்புக்கொண்டார்.

”குருஜி, நீங்கள் இதனை ஏன் மறைத்து வைக்கவேண்டும் ? பல விஷயங்கள் இப்படி வெளியே தெரியாமல் போய்விடுவதால்தானே நமது சரித்திரம் சரியாகப் பதிவு செய்யப் படாமல் போகிறது ?” என்று மிகவும் ஆவேசப்பட்டு வினவினேன்.

“நிகழ்ச்சி நடந்ததாகப் பதிவு ஆகிவிட்டதல்லவா. அது போதாதா ? யாரால் என்றும் பதிவாவது அவ்வளவு முக்கியமா ? சரித்திரத்தில் முக்கியமாக ஏதேனும் பாதகமான நிகழ்வுகள் இருந்தால்தான் முழு விவரங்களையும் தவறாமல் பதிவு செய்வது அவசியம். நாம் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக. மேலும் பொதுவாக எமது இயக்கத்தில் நாங்கள் அவ்வளவாக விளம்பரம் செய்துகொள்ள விரும்புவதில்லை” என்று சொன்னார் குருஜி.

ஹரி சிங் இணைப்பிற்குச் சம்மதித்த சந்தர்ப்பத்தில்தான் ஜின்னாவும் காஷ்மீரத்தைக் கபளீகரம் செய்ய அடியெடுத்து வைத்தார். அவர் தனது ராணுவ சிப்பாய்களை வனவாசிகள் போல வேடமணியச் செய்து காஷ்மிருக்குள் நுழைக்கப் போவதை உளவறிந்து வந்து முன்கூட்டியே எச்சரித்தவர்கள் குருஜியின் தொண்டர்கள்தாம். அதேபோல் ஸ்ரீ நகரை கபடவேடதாரிகளான பாகிஸ்தான் சிப்பாய்கள் அணுகிவிட்டபோது, அதற்கு முன்னர் இருபத்து நான்கு மணி நேரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று, பாரத ராணுவ வீரர்கள் போதிய எண்ணிக்கையில் வந்து சேரும்வரை நகரைப் பாதுகாத்த இருநூறு இளஞர்கள் குருஜியின் ஆணைக்குக் கட்டுப்பட்ட தொண்டர்களாவார்கள். ஸ்ரீநகர், பூஞ்ச், ஜம்மு ஆகிய இடங்களில் மின்னல் வேகத்தில் விமான தளங்களைச் சீரமைத்து பாரத ராணுவம் வந்திறங்கவும், பாகிஸ்தானின் தயவு இன்றி, மக்களுக்குத் தேவையான

பொருள்கள் சீராகக் கிடைக்கவும் வழி செய்த கண்மணிகளும் குருஜியால் வளர்க்கப்பட்டவர்களே. அதுமட்டுமா, பாரத விமானப்படையினர் தவறுதலாகப் பாகிஸ்தானிய சிப்பாய்களின் துப்பாக்கி குண்டுகள் பாயக் கூடிய பகுதியில் வெடிமருந்துப் பெட்டிகளைப் போட்டுவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது, எட்டு இளைஞர்கள் துணிவுடன் பெட்டிகள் இருந்த பகுதிக்குப் பாய்ந்து சென்று அவற்றை மீட்டுவந்தனர். இந்தசாகசச் செயலில் நால்வர் துப்பாக்கி குண்டுபட்டு இறந்தனர். அந்த தீரர்களும் குருஜியின் சீடர்கள்தாம்.

காஷ்மீர் மீட்புப் போரில் குருஜியின் சீடர்கள் ஆற்றிய கடமையைக் கண்டு வியந்த ராணுவ அதிகாரி ஒருவர் பிற்பாடு குருஜியிடம் கேட்டார்:  “உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதைப்பற்றறியும் கவலைப் படாமல் இவ்வளவு சாகசம் புரிகிறார்களே, நீங்கள் அவர்களுக்கு அப்படி என்னதான் கற்றுக் கொடுக்கிரீர்கள் ?”

குருஜி சிரித்துக் கொண்டே பதில் சொன்னாராம்: “கபடி!”

இவ்வாறு குருஜியின் தொண்டர்கள் குருதி சிந்திக் கொண்டிருந்தபோது நேருவால் காஷ்மீரச் சிங்கம் எனப் பாராட்டப்பட்ட ஷேக் அப்துல்லா என்ன செய்துகொண்டிருந்தார் எனத் தெரிந்துகொள்ள ஆவல் எழுவது இயற்கைதான். அந்தச் சிங்கம் கர்ஜனை செய்தவாறு பாகிஸ்தான் சிப்பாய்கள் மீது பாய்வதற்குப் பதிலாகத் தன் மனைவி, பிள்ளை குட்டிகளுடன் இப்போது மும்பை என அறியப்படுகிற பம்பாயில் போய் பதுங்கிவிட்டது! வெடி குண்டுச் சத்தம் கூட எட்டாத தொலைவு! ஆனால் அதே சிங்கம் துப்பாக்கி ஓசையெல்லம் அடங்கியான பிறகு ஓடோடி வந்து ஆட்சிபீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டது, நேருவின் பேராதரவுடன்!

குருஜியின் வாய்மூலமாகவே அவரது சீடர்களின் வீரஞ்செறிந்த காஷ்மீர் சாகசச் செயல்களைக் கேட்டறிந்தவன் நான். இதுதான் கருவிலே திருவென்பது! ஆனால் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்கத் தோன்றலாம். குருஜியிடம் விவரம் கேட்டு நான் பதிவு செய்த செய்தி வெளிவந்த கன்னட, ஆங்கில செய்தித்தாள்கள் என்னிடம் உள்ளன. ஆனால் 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சாதாரண நியூஸ் பிரின்ட் காகிதத்தில் அச்சான அவை எந்த நிலையில் இருக்குமோ தெரியாது. மேலும் எனது ஆவணங்களும் புத்தகங்களும், சென்னையிலும் பெங்களூரிலுமாகச் சிதறிக் கிடக்கின்றன. எனது ஆவணங்கள் உடனடியாகக் கிடைக்கவிடினும் ‘காஷ்மீர்’ என கூகிளில் தேடினால் நான் பதிவு செய்திருப்பது அவ்வளவும் உண்மை என்று தெரியவரும். என்ன, சிறிது பொறுமை தேவைப்படும், அவ்வளவுதான். ஏதேனும் ஒரு இடத்தில் விவரங்கள் சிக்கிவிடுவது உறுதி.

சரி, இதில் ஹிட்லர் எங்கிருந்து வந்தார், கோல்வல்கர் விதந்தேத்தும் விதமாக ?

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று பெருமை பேசிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மிரளச் செய்த ஹிட்லரின் ஜெர்மனியை அனைவருமே வியந்து பாராட்டிய காலம் ஒன்று இருந்தது. அது ஹிட்லரின் இன வெறியாட்டம் வெளிவராத காலம். சுபாஷ் பாபு கூட பிரிட்டிஷ் ஆட்சியை விரட்ட ஹிட்லருடன் கை கோத்தவர்தாம். ஹிட்லரின் இனவெறி அப்போது வெளிப்பட்டிருக்கவில்லை. முதலாம் உலகப் போரின் போதே சாகசம் செய்த தேசம் ஜெர்மனி. ஆகையால் தொடக்க காலத்தில் ஹிட்லரைப் பலரும் விதந்தேத்தியதுபோலவே கோல்வல்கரும் விதந்தேத்தியிருந்தாலும் அதில் குறையேதும் காணத் தேவையில்லை. இந்த சமாசாரம் எனக்கு அன்று தெரிந்திருந்தால் இது பற்றியும் அவரிடமே நேரில் கேட்டிருப்பேன்.

குருஜி, குருஜி என்று சீடர்கள் கொண்டாடுவது அவர் விலங்கியல் பேராசிரியராக காசி ஹிந்து பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோதே தொடங்கிவிட்டது. எனவே அவர் பொது வாழ்விற்கு வந்த பிறகு வெறும் மரியாதைக்காக இடப்பட்ட பெயர் அது என எண்ணவேண்டாம்.

விவரம் தெரிந்த பெரியவர்கள் அனைவரும் குருஜியைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறர்கள். அவற்றையெல்லாம் அடுக்கிகொண்டு போவது சூரியனை அகல் விளக்கால் அடையாளம் காட்டுவதுபோலாகும். எனக்கு எதற்கு அந்த வீண் வேலை ?

இவ்வளவும் சொன்ன பிறகு கோல்வல்கரின் பரம்பரை என எம்மை அடையாளப்படுத்துவது எமக்குப் பெருமை சேர்க்கும் மரியாதையே என்பதில் ஐயமிருக்காது. ஆனால் சிலருக்கு குருஜி, குருஜியின் சீடர்கள் என்றெல்லாம் சொல்கிறேனே யார் அவர், எது அவரது அமைப்பு என்ற ஐயம் எழலாம். அதையும் மறைப்பானேன் ?

குருஜி என லட்சக் கணக்கானோர் இன்றளவும் போற்றும் மாதவ சதாசிவ கோல்வல்கர், அகில பாரதத் தலைவர் என்ற நிலைக்கு ஈடான சர் சங்க சாலக்காக அவர் சார்ந்த அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாருக்குப் பிறகு பொறுப்பேற்றவர். அவர் சார்ந்திருந்த அமைப்புதான், ஆர்.எஸ்.எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் என்கிற பேரியக்கம். குருஜியின் வழிகட்டுதலில்தான் அது மாபெரும் சக்தியாக உருவெடுத்தது…

குறிப்பு:

மறைந்த மூத்த பத்திரிகையாளர் திரு. மலர்மன்னன் அவர்கள், திண்ணை இணைய இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட பகுதி இங்கு நன்றியுடன் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க:

பாரதத் தாயின் தவப்புதல்வர்

வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்

-அரவிந்தன் நீலகண்டன்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர் 

(பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26)

 

வீர சாவர்க்கர் இந்திய விடுதலை போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர். மிகப்பெரிய தியாகங்களை தேசத்துக்காக ஏற்றவர். சமூக புரட்சியாளர். அவரது வாழ்வனைத்தும் தேச நலனுக்கான போராட்டமாகவே திகழ்ந்தது. வரலாற்றை உருவாக்கிய அப்பெரும் ஆளுமை தேசத்தின் சரித்திரத்தை மீட்டெடுத்து எழுதுவதிலும் அதே அக்கறையைக் காட்டினார்.

அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் உருவாக்கியதே நம் தேசத்தின் வரலாறாக அறியப்பட்டது; பாரதத்தின் வரலாறு காலனிய ஆதிக்கத்தின் தேவைக்கேற்ப எழுதப்பட்டு வந்தது.

இந்நிலையில் விடுதலைக்காக போராடும் ஒரு தேசத்தின் கூர்நுட்பம் கொண்டதோர் வரலாற்றாசிரியனாக பாரத வரலாற்றை அணுகிய பெருமை வீர சாவர்க்கருக்கு உண்டு.

வரலாற்றை எழுதினார்: வரலாற்றை மாற்றினார்

பாரதத்தின் முதல் விடுதலை வேள்வியான 1857 எழுச்சியை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் பாரதத்தின் அன்றைய வரலாற்றறிஞர்கள் பலரும் “சிப்பாய் கலக”மென்றே எழுதி வந்தனர். அதனை “விடுதலை எழுச்சி” என மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீர சாவர்க்கரே. இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை எழுதியதன் குறிக்கோள் குறித்து வீர சாவர்க்கர் எழுதுகிறார்:

“….இந்த நூலை எழுதியதன் நோக்கம் என்ன? வரலாற்றின் உண்மை குறித்த உந்துதலை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தேசமளாவிய பெரிய புரட்சி யுத்தத்தை அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடங்க வேண்டும்…..”

தனது நூலை வெளியிட 1907 ஆம் ஆண்டை வீர சாவர்க்கர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனென்றால் அது முதல் விடுதலை வேள்வியின் ஐம்பதாம் ஆண்டு நினைவு விழா கொண்டாடப் பட்ட ஆண்டு ஆகும். இந்திய வரலாறு குறித்த மிகப்புதிய பார்வையை, ஒரு பெரும் பிரச்சாரத்துக்கு எதிராக, ஆராய்ச்சி நூலாக பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 1907 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். இதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் முன்னதாக அந்த ஆராய்ச்சியையும் திட்டமிடுதலையும் தொடங்கியிருக்க வேண்டுமென எண்ணிப்பார்த்தால் வீர சாவர்க்கரின் மேதமையும், உழைப்பும் வியக்க வைக்கின்றன.

வீர சாவர்க்கர் வெறும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தான் ஆராய்ந்தறிந்த தம் தேச வரலாற்றை தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கருவியாகவும் அவர் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது இந்திய இளைஞர்களை ராணுவத்தில் பெரிய அளவில் இணையுமாறு அவர் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் அவர் வெளிப்படையாகவே கூறினார்:

“….1857ல் நமது முதல் விடுதலைப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே பிரிட்டிஷார் இராணுவத்தினை அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இதனை மாற்ற இது நல்ல வாய்ப்பாகும். இதில் நாம் வெற்றி பெற்றால் விடுதலைக்கான போரில் நாம் வெற்றி அடைவோம்…..”

வீர சாவர்க்கரின் இந்த தீர்க்கமான பார்வை வரலாற்றையே மாற்றியமைத்தது என்பதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வார்த்தைகளின் மூலமாக அறிகிறோம்.

ஆஸாத் ஹிந்த் வானொலியில் ஆற்றிய உரையில் (ஜூன் 25, 1944) நேதாஜி கூறினார்:

“….சில தலைவர்கள் தவறான அரசியல் கற்பனைகளால் இந்திய ராணுவத்தில் இணைந்த வீரர்களை ‘கூலிப்படையினர்’ என அழைத்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் அச்சமின்றி இந்திய இளைஞர்களை ராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு இணைந்த வீரர்களே இந்திய தேசிய ராணுவத்துக்கு கிடைக்கும் பயிற்சி பெற்ற வீர இளைஞர்கள்……”

விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் தேசபக்தியும் விடுதலை உணர்ச்சியும் அலையடித்தது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டகல ஒரு முக்கிய காரணமாகிற்று என்பது வரலாறு.

மீட்டெடுக்கப்பட்ட போராட்ட வரலாறு

cover1இந்தியாவின் வரலாறே அது மீண்டும் மீண்டும் அன்னிய படையெடுப்புகளுக்கு அடி பணிந்த வரலாறுதான் என்று அன்னிய ஆட்சியாளர்களும் அன்னிய மோகத்துக்கு ஆளான நம் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். யூனியன் ஜாக் செங்கோட்டையில் இருந்து கீழிறங்கி விட்டது. இருந்தபோதும் நம் கல்வி நிறுவனங்களில் கண்ணுக்குத் தெரியாமல் அக்கொடியின் இருண்ட நிழல் தொடர்ந்து படர்ந்திருக்கிறது.

அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.சக்தி வாய்ந்த மொழியில் அவர் எழுதுகிறார்:

“….கிரேக்கர்களும் சகர்களும் ஹுணர்களும் வடக்கே அலை அலையாக படையெடுத்து வந்து தாக்கிய போதும் அவர்களால் நர்மதை நதிக்குத் தெற்கே காலடி வைக்க முடியவில்லை. அதுவும் தவிர கலிங்க சேர சோழ பாண்டிய அரசுகள் மிக வலுவான கடற்படையுடன் காத்திருந்தன. கடல் எல்லையில் அந்நிய படையெடுப்பு அபாயமே இல்லாமலிருந்தது…..”

நம் வீர வரலாறு குறித்துத் தமிழ் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. இப்பெருமிதம் பொய்யான இனவாத கட்டுக்கதையால் உருவானதல்ல. ஆழமான வரலாற்று ஆராய்ச்சி அளிக்கும் சத்தியமான உன்னத உணர்ச்சி. சாணக்கியர் கூடல் என்னும் இடத்திலிருந்து வந்த காரணத்தால் கௌடில்யர் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும் என்கிற செய்தியையும் வீர சாவர்க்கர் தருகிறார். மட்டுமல்ல.

அலெக்ஸாண்டர் போன்ற ஒரு ஆதிக்க வெறி பிடித்த கொடியவனை ஐரோப்ப காலனிய வரலாற்றாசிரியர்கள் மகா அலெக்ஸாண்டர் என புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், வீர சாவர்க்கர் அக்கால வரலாற்றின் ஒவ்வோர் இழையாகத் தேடிச்சென்று சரித்திரத்தை நோக்குகிறார். காத்திரமான ஆதாரங்களின் அடிப்படையில் காலனிய மனநிலைக்கு எதிராக அவர் பின்னர் உணர்ச்சிகரமான பெருமுழுக்கம் செய்கிறார்.

எவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக மாளவ-சூத்ரக குடியரசுகள் இணைந்தன; அவர்கள் எவ்வாறு சாதி-கலப்பு திருமணங்களை பெரிய அளவில் செய்து தம்மை ஒரு ஒன்றுபட்ட சமூகத்தினராக மாற்றி ஓரணியில் சேர்ந்தார்கள். எப்படி இந்த இணைந்த சமூகம் உருவாக்கிய ராணுவத்தைச் சேர்ந்த பாரதிய வீரனின் அம்பு அலெக்ஸாண்டரின் அந்திமக் காலத்தை விரைவாகக் கொண்டு வந்தது என்பதை ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார். இந்த வரலாற்று உண்மைகள் ஐரோப்பிய காலனிய வரலாற்று ஆசிரியர்களால் உணரப்பட்டவையே; எனினும், உரத்த குரலில் சொல்லப்படாதவை. வீர சாவர்க்கர் அவ்வுண்மைகளை உரக்கச் சொன்னார்.

வரலாற்றின் நேர்மையை அவரது உணர்ச்சிகர தேசபக்தி எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அதீத கவனம் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. எடுத்துக்காட்டாக, சந்திரகுப்த மௌரியர் குறித்து வழங்கும் நாட்டுப்புறக் கதைகளை வீர சாவர்க்கர் ஒரு வரலாற்றாசிரியராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் எடை போடும் விதத்தைப் பார்க்கலாம்:

ஒருவனை அவனது பண்பை வைத்து எடை போடாமல், அவன் பிறந்த இனத்தின், குடும்பத்தின் பெருமை-சிறுமைகளை வைத்து மதிப்பிடுவது அனைத்து மானிட சமூகங்களிலும் காணப்படும் பொதுவான பலவீனம். குடும்ப மரபுகளைப் பற்றிய உயர்வு நவிற்சி கதைகள் காலப் போக்கில் நாடகங்களாகவும், கவிதைகளாகவும், புதினங்களாகவும், நாட்டுப்புற பாடல்களாகவும் விளம்பரப்_படுத்தப்பட்டு மக்களிடையே பரவின.  (விரிவஞ்சி இதை மேலும் விவரிக்காமல் விடுகிறோம்.)

ஆனால், மௌரிய குலத்தின் தோற்றத்தைக் குறித்த வரலாற்று உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறார் வீர சாவர்க்கர்:

“…..மூராவின் மகனே மௌரியன்! சந்திரகுப்தனை மௌரியன் என்று அழைக்க அதுவே சரியான காரணமாகும். தாய்வழிப்பிறப்பைப் பெருமையாக எண்ணிய சந்திரகுப்தன் தன் அரச குடும்பத்திற்கு மௌரியன் என பெயர் சூட்டிக் கொண்டான். அதன் மூலம் தன் தாய் மூராதேவியின் பெயரைப் பாரத நாட்டின் வரலாற்றில் சிரஞ்சீவியாக்கிவிட்டான். மயில் பறவைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மூரியா ஜாதியையே மௌரியப் பேரரசர்கள் ஏற்றுக்கொண்டனர்…..”

வரலாற்றாசிரியரும் ஒரு தேசத்தை வழிநடத்தி செல்ல வேண்டிய தேசியகுருவும் மாறி மாறி ஒருவருக்கொருவர் எதிர்ப்பற்ற நிலையில் வீர சாவர்க்கரில் வெளிப்படுகின்றனர்.

சந்திரகுப்த மௌரியர் மூலம் சாதியையும் குலத்தையும் கோத்திரத்தையும் பற்றிக்கொண்டு ரிஷி மூலம் நதிமூலம் ஆராயும் அற்ப மனங்களுக்கு அவர் சொல்கிறார்:

“…..சந்திரகுப்தர் ஒரு க்ஷத்திரியனா? எப்படியிருந்தால் என்ன?  “உயர் ஜாதியில் பிறந்த க்ஷத்திரியர்களே! மிலேச்சனான அன்னியப் பேரரசனுக்கும் அவனது படைத்தளபதிகளுக்கும் சிரங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு ஏற்றுக்கொண்ட உங்களைவிட அஞ்சா நெஞ்சனாகிய சந்திரகுப்தன் என்னும் பெயர் படைத்த நான் மாபெரும் க்ஷத்திரியன் என உரிமை கொண்டாடமுடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த மிலேச்சர்களை ஒவ்வொரு போர்க்களத்திலும் என் வாள் வலிமையால் முழுதும் தோல்வி அடையச் செய்திருக்கிறேன்.” என்று நியாயமான பெருமிதத்துடன் சந்திரகுப்தன் கூறக்கூடும்…….”

இவ்விதமாக பாரதம் அன்னிய ஆக்கிரமிப்பை எவ்விதம் தொடர்ந்து எதிர்த்து போராடியது என்பதை இத்தனை விரிவான ஆதாரங்களுடன் எந்த வரலாற்றாசிரியரும் ஆவணப்படுத்தியுள்ளார்களா என்பது ஐயமே. தட்சிணத்தில் முஸ்லீம் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமியராக மாற்றப்பட்டிருந்த ஹரிஹரரும் புக்கரும் எவ்வாறு தாய் தர்மம் திரும்ப வித்யாரண்ய சுவாமிகள் புரட்சிகரமாக உதவினார் என்பதையும் வீர சாவர்க்கர் தமக்கே உரிய பார்வையுடன் விவரிக்கிறார்:

“…..விஜயநகரம் என்னும் ஹிந்துப் பேரரசு நிலைநாட்டப் பெற்றது ஹிந்து வமிசத்தின் மாபெரும் சாதனை என்பதைப் போதுமான அளவுக்கு ஹிந்து வரலாறுகளில் பெருமைப் படுத்தி பேசப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால் சங்கேஸ்வர சங்கராச்சாரியாரான மாதவாச்சாரிய வித்யாரண்ய ஸ்வாமியைக் குறிப்பிடலாம்.

இவருக்கு இருந்த புரட்சிகரமான அரசியல் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சமயத்துறைகளிலும் அவர் மாபெரும் புரட்சியாளர் என்பதை அவர் பழைய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்ததன் மூலம் நிரூபிக்கலாம். …ஆனால் இன்று வடபாரதத்தில் வாழும் ஹிந்துக்கள் மேற்குறிப்பிட்ட தக்காணத்து ஹிந்து மாமன்னர்களைப் பற்றி கேள்விப்பட்டதைப் போல காட்டிக் கொள்வதேயில்லை. தென்னாட்டிலும் அவர்களின் பெயர்களை ஓரளவு அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து ஹிந்துகள் உடனடியாக மாற வேண்டியது அவசியம்…..”

நம் தேசிய வாழ்க்கையையும் பண்பாட்டையும் காப்பாற்ற பல நூற்றாண்டுகளாக நாம் நடத்திய இத்தொடர் போராட்டத்தின் நீட்சியாகவே பாரத விடுதலைப் போராட்டத்தையும் வீர சாவர்க்கர் காண்கிறார். இதில் குறுகிய கொள்கைப்பார்வைகளின் அடிப்படையில், அரசியல் எதிரிகளை தேச விரோதிகளாக சித்தரிக்கும் சின்னத்தனம் அவருக்கு என்றைக்கும் உரியதல்ல. பாரத விடுதலையின் இறுதிக்கட்டத்தை வீர சாவர்க்கர் வர்ணிக்கும் போது அப்போராட்டத்தின் அனைத்து தரப்புகளையும் அரவணைத்து ஒரு விசாலமான ஹிந்துத்துவ வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.

“….பிற்காலத்தில் சத்தியாகிரகம் ஒத்துழையாமை போன்ற தாரக மந்திரங்களை ஜெபித்தவரும் பொதுமக்களால் மகாத்மாஜி என அன்புடன் போற்றப் படுபவருமான அப்பெரியாருடன் சீரிய நண்பனாகப் பழகும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். அப்போதுதான் அவர் இங்கிலாந்து வந்திருந்தார். அப்போது அவரை பாரிஸ்டர் காந்தி என்று மட்டும் அழைத்தார்கள். அதன் பின்னர் எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாக இணைந்ததுண்டு. பல சமயங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதும் உண்டு.

…பாரத நாட்டின் அரசியல் வாழ்வில் நான்கு காலகட்டங்கள் உண்டு.

1) ஆங்கில ஆட்சியை அடிவருடியவர்கள்

2) தீவிர தேசியவாதிகளான அகிம்சாவாதிகள்

3) புரட்சிவாதிகள்

4) ஹிந்துத்துவ வாதிகள்

இந்த நால்வகை அரசியல் தொடர்பு கொண்ட அனைவரும் 1857 ஆம் ஆண்டு சுதந்திரப்போரில் பெற்ற தோல்விக்குப் பின்னர் உருவானவர்கள்.

….தில்லி செங்கோட்டையில் கர்வத்துடன் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் யூனியன் ஜாக் கொடி, பேரரசு என்ற திமிருடன் பறந்து கொண்டிருந்த அந்த கொடி பிடுங்கி எறியப்பட்டு “பாரத சுதந்திரம் வாழ்க. நீங்கள் அனைவரும் வாழ்க” என்னும் இடிமுழக்கத்துடன் மூவர்ணக் கொடி சுதந்திர ஆளுமை கொண்ட பாரத நாட்டு அரசாங்கத்தின் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டது. அக்கொடியின் நடுவில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது….”

வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஹிந்துக்கள் விரட்டி சுவராஜ்ஜியம் நிறுவியதுடன் முடிவடைகிறது.

cover2இந்த நூலைப் போலவே மிகவும் பிரசித்தி பெற்ற அவரது மற்றொரு வரலாற்று ஆவணம் “ஹிந்து பத பாதுஷாகி” என்பதாகும். இது வீர சிவாஜி காலம் தொட்டு மராட்டிய பேரியக்கம் எப்படி அன்னிய மொகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்து அதனை பலமிழக்க செய்தது, அத்துடன் எவ்வாறு இந்த பெருமைக்குரிய ஹிந்து இயக்கம் ஐரோப்பிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டது என்பதையும் ஆவணப்படுத்துகிறது.

முஸ்லீம் சித்திக்கள், ஆங்கிலேய-போர்ச்சுகீசிய கூட்டணி, டச்சு கப்பல் படை ஆகிய அனைத்தையும் கன்கோஜி ஆங்க்ரே எனும் மராட்டிய கப்பற்படை தளபதி எவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்கடித்தார் என்பது மிகவும் சுவாரசியமான வரலாற்றுத்தகவல். “வன்மம்” (Revenge), “வெற்றி” (Victory) போன்ற பெயர்களைத் தாங்கிய ஆங்கிலேய கப்பல்கள் மராட்டிய கப்பற்படை மீது போர் தொடுத்து அடைந்த படுதோல்விகள் பாரத வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள். இறுதியாக மராட்டிய ஹிந்து இயக்கம் செய்த வரலாற்றுத்தவறுகளையும் வீர சாவர்க்கர் காய்தல் உவத்தலின்றி விளக்குகிறார்.

இந்நூல் வீர சாவர்க்கர் ரத்னகிரியில் முழு விடுதலை அடைவதற்கு முன்னர் எழுதப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தெரியாமல் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க தாம் ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆவணங்களை தமது நினைவிலிருந்து மட்டுமே மீட்டு இதனை வீர சாவர்க்கர் எழுதினார். ஆனால் பின்னர் அது ஆராயப்பட்ட போது முழுக்க முழுக்க அந்த வரலாறு ஆதாரப்பூர்வமாக ஆவண சான்றாதாரம் கொண்டதாக அமைந்திருந்தது.

சிலர் கேட்கலாம், “சாவர்க்கர் ஏன் இந்த பழைய வரலாறுகளைத் தோண்டி எடுத்து எழுத வேண்டும்?”

இதற்கு வீரசாவர்க்கர் விளக்கமாக பதிலளிக்கிறார். ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விளக்கம் அது.

“இறந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டு நிகழ்காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தற்கொலைப் போக்குடைய மடத்தனம் மட்டுமே. ஒரு ஹிந்துவும் முஸ்லீமும் இன்றைக்கும் ஒருவரை ஒருவர் தழுவுவது போல ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அந்த காலத்தில் அப்படித்தான் சிவாஜியும் அப்ஸல்கானும் செய்தார்கள் என்று சொன்னால் அதைப் போல மடத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

நாம் வரலாற்றை படிப்பது நம் இன்றைய விரோதங்களை இரத்தம் சிந்தும் மோதல்களை பரஸ்பர வெறுப்பை, கடவுளின் பெயராலோ அல்லது அன்னைபூமியின் பெயராலோ, வளர்த்துக்கொள்ள ஆகச்சிறந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல. மானுட வெறுப்பையும் இனதுவேஷத்தையும் வளர்க்க அல்ல. மாறாக அதற்கு நேர் எதிரிடையான காரணங்களுக்காக மட்டுமே நாம் வரலாற்றை ஆராய்கிறோம். இவ்வெறுப்பையும் வன்முறையையும் அகற்றி மனிதனுக்கு மனிதன் அனைத்து மானிடத்தின் பொது இறைத்தன்மையையும் பூமியின் அனைத்து மானுடத்துக்குமான தாய் தன்மையையும் உணர்ந்து ஒரு மானுட குலமாக மாறுவதற்காக மட்டுமே.”

ஆனால். இந்த “மானுடமே ஓர் குடும்பம்” எனும் பொன்னுலகக்  கனவு ஒரு யதார்த்தமற்ற கனவாக இருக்காமல் யதார்த்த சூழலின் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பபட்ட ஒரு கருவியாக அவர் கைகளில் விளங்கியது. ஹிந்து பத பாதுஷாகிக்கு 1925ல் அவர் எழுதிய முன்னுரையில் வீர சாவர்க்கர் கூறுகிறார்:

“….ஆனால் இந்த பிரகாசிக்கும் பொன்னுலக கனவு நமது கண்களை யதார்த்தத்தின் உண்மைகளை அறியவிடாமல் குருடாக்கி விடலாகாது. மனிதர்கள் குழுக்களாக பிரிவுகளாக இயங்குகின்றனர். தம்மை உறுதிப்படுத்திக் கொண்டு விரிவாக்கம் செய்ய அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். கடும் போர்களும் தியாகங்களும் இந்த விரிவாக்கத்தை செயல்படுத்திய வண்ணமே உள்ளது.

…எனவே உலக ஒற்றுமையைக் குறித்து பேசுவதற்கு முன்னால் ஒரு தேசமாக ஒரு சமுதாயமாக உயிர்வாழும் தகைமையை நாம் அடைய வேண்டும். இந்த அக்னிப்பரீட்சைதான் ஹிந்துக்கள் முன் இஸ்லாமிய ஆதிக்க சக்திகளால் வைக்கப்பட்டது.

ஒரு அடிமைக்கும் அவன் எஜமானனுக்கும் சமத்துவமான அமைதி நிலவ முடியாது. ஹிந்துக்கள் வரலாற்றில் தம் வீரத்தை நிரூபிக்காமல் இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் நட்புக்கரத்தை நீட்டியிருந்தால் கூட அக்கரம் நட்பினைக் குறிப்பதாக அல்லாமல் அலட்சியத்துடனும் வேண்டா வெறுப்பாகவும்தான் நீட்டப்பட்டிருக்கும். ஹிந்துக்கள் அதனை நம்பிக்கையுடனும் நேசபாவத்துடனும் சுயமரியாதையுடனும் பற்ற முடியாது.

…ஹிந்துக்கள் தங்கள் தேவதேவியரின் பெயரால் நிகழ்த்திய நீண்ட மாபெரும் விடுதலைப் போராட்டமே அந்த சுயமரியாதையை,  நம்பிக்கையை முஸ்லீம்களுடன் நட்பு கோரும் தன்மையை ஹிந்துக்களுக்கு அளித்துள்ளது.”

பாரத விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் தடியடியால் இறந்த தியாகியான லாலா லஜபதி ராய் இந்நூலை ஒவ்வொரு பாரத அரசியல்வாதியும் படிக்க வேண்டிய நூல் என கூறினார்.

வரலாற்றாசிரியர்கள் பற்றிய வரலாற்றிலே ஒரு தனித்துவம் கொண்ட வைரமாக வீர சாவர்க்கர் ஜொலிக்கிறார். தேசத்தின் மீது அன்பு, அக்கறை, வரலாற்று உண்மை மீது அடங்காத ஆர்வம் ஆகியவற்றை எவ்வித சமரசமும் இன்றி தருகிறார் அவர். அத்துடன் காலனிய ஆதிக்கத்துக்கு உள்ளாகி தளர்வுற்று நிற்கும் வளரும் நாடுகளுக்கான ஒரு ஆதர்ச வரலாற்றாசிரியராக அவர் விளங்குகிறார்.

வறட்டுத்தனமாக புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்கும் வெறுமை கொண்ட வரலாற்றாசிரியராக அவர் இல்லை. மாறாக வரலாற்றை செயல்படும் தன்மையுள்ள ஒரு கருவியாக, நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும் வருங்காலத்தை உருவாக்கவும் பயன்படுத்துகிறார். வீர சாவர்க்கரின் இந்த வரலாற்று ஆய்வு நோக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியது ஹிந்து அறிவியக்கத்தின் இன்றியமையாத கடமையாகும்.

பின்குறிப்பு:

திரு. அரவிந்தன் நீலகண்டன்,  தமிழகத்தின் நம்பிக்கையூட்டும் இளம் ஆய்வாளர்களுள் ஒருவர்; ’உடையும் இந்தியா’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்;  நாகர்கோவிலில் வசிக்கிறார்.

இக்கட்டுரை  தமிழ் ஹிந்து  இணையதளத்திலிருந்து  நன்றியுடன் மீல்பதிவு செய்யப்படுகிறது.

வரலாற்றுப் பேராசிரியர் இரா.அண்ணாமலை அவர்களால் வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” தமிழ் படுத்தப்பட்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்குமிடம்:  சக்தி, 1, எம்.வி.தெரு, பஞ்சவடி, சேத்துப்படு, சென்னை- 31.

தேசமே தெய்வம் என்றவர்

 – ம.கொ.சி.ராஜேந்திரன்

டாக்டர் ஹெட்கேவார்

டாக்டர் ஹெட்கேவார்

(1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21)

 

கோயிலைப் போலே  உடல்கள் புனிதம்
மாந்தர் அனைவரும் உபகாரி !
சிங்கத்துடனே விளையாடிடுவோம்
ஆவினம் எங்கள் அன்புத்தாய்….”
.
– என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள்.
 .
பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்;  ஒருவர் பாட, மற்றவர்கள் திருப்பிப்  பாடும் இந்த கூட்டுப் பாடலில் தான் எத்தனை ஆழமான பொருள்! தொடர்ந்தது பாடல்….
 .
“சிறுமியரெல்லாம் தேவியின் வடிவம்
சிறுவர் அனைவரும் ராமனே
சிறுவர் அனைவரும் ராமனே!….
சந்தனம் எங்கள் நாட்டின் புழுதி;
கிராமம் அனைத்தும் தவ பூமி!…”
 .
எனும் பாடல் வரிகளில் இழைந்தோடிய, தேசபக்தியும் தெளிந்த நீரோடையாய் விளங்கிய நம் மண்ணின் ஞானசக்தியும் என்னுள் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்தியது.
.
யார் இந்த இளைஞர்கள்?  எதற்காக இங்கு அமர்ந்து, இப்படியொரு அருமையான பொருள் பொதிந்த பாடலைப் படுகிறார்கள் ? பொறுத்திருந்தேன் விடை காண.
 .
பாடல் முடிந்தது . சான்றோர் ஒருவரின் பொன்மொழியும், திருக்குறளிலிருந்து “அருமை உடைத்தென்று …” என்ற குரலும் வாசிக்கப்பட்டது.  பின் வரலாற்றிலிருந்து சாணக்கியரின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்று சுவையான கதை போல்    சொல்லப்பட்டது.  பின் அனைவரும் எழுந்தனர்; மூன்று வருஷங்களில் அணிவகுத்து நின்றனர்;  பிரார்த்தனைப் பாடல் பாடப்பட்டது.
 .
“கட்டுப்பாட்டுடன் கூடிய செயல்திறன், கட்டளைக்கு கீழ்ப்படியும் கடமையுணர்வு, ஏற்றுக் கொண்ட லட்சியத்துக்காக எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மை.. இத்தகைய வீரம் செறிந்த இளைஞர்களை உருவாக்குகின்ற பணிவினை செய்யும் ‘ஆர்.எஸ்.எஸ்’ என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஒருகிளையினை தான் நீங்கள் இப்பொழுது பார்த்தீர்கள்!”  என்றார்,  அந்தக் கிளையின் பொறுப்பாளர் ஒருவர்.
 .
தொலைக்காட்சிகளிலும், பாலியல் விவகாரங்களிலும், போதை,  கிரிக்கெட்,  திரைப்பட கனவுகளில் தங்கள் சக்தியை கரைத்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்திய தேசத்தின் இளைஞர்களிடையே இப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின்  தலைவர்  யார் ?  தெரிந்துகொள்ள ஆவல் தோன்றியது.
 .
பிரகாசமாய் எரிந்து வெளிச்சத்தை தரும் அகல்விளக்குக்கு கீழே நிழல் இருப்பது போல ஆர்.எஸ்.எஸ்.ஸைத் துவக்கிய டாக்டர்  கேசவ பலிராம் ஹெட்கேவார் தன்னை முன்னிறுத்தவில்லை; தனது புகழைப் பாடவும் விரும்பவில்லை.
 .
1925, விஜயதசமியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். – உலகமெங்கும் தேசபக்திக்காகவும் தன்னலமற்ற தொண்டுகளுக்காகவும் அறியப்பட்ட இயக்கம்; ” உலகமெங்கும் உள்ள தன்னார்வுத் தொண்டு அமைப்புகளில் மிகப் பெரிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்-ஐ லண்டனில் உள்ள பிபிசி  அங்கீகாரம் செய்தது அதிசயம் ஒன்றுமில்லை ஆனால் அதைத் துவைக்கிய டாக்டர்  ஹெட்கேவரைப் பற்றி சிலர் மட்டுமே அறிந்திருப்பது அதிசயம் தானே!
 .
லட்சியத்துக்காக லட்சியமாகவே வாழ்ந்த பெருமகனார்; நோய் தீர்க்கும் மருத்துவப் படிப்பு முடித்த  ஹெட்கேவார், தேசத்தின் நோய்களைப் போக்கவும், ஒற்றுமை உணர்வினை மக்களிடையே வளர்க்கும் மருத்துவராகவே வாழும் வாழ்வென்னும் வேள்வியில் தன்னை ஆகுதி ஆக்கினார்.
 .
தன்னை முன்னிலைப்படுத்தாது தேசநலனையே முன்னிலைப்படுத்தி அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களை உருவாக்குவதில் வெற்றி கண்டவர் ‘டாக்டர்ஜி’ என்று பல கோடி மக்களால் அன்புடன் அழைக்கப்படும் ஹெட்கேவார். இவர் விடுதலைப் போராட்ட வீரர்; சமுதாய சீர்திருத்தச் செம்மல்; இயக்க நிறுவனர் என பல பரிமாணங்களை உடையவர்.
 .
புது வருடப்  பிறப்பாம் யுகாதியில் (ஆங்கிலத் தேதி: 01.04.1889) பிறந்து,  இந்த தேசத்து மக்களுக்கு தேசியத்தையும்  தெய்வீகத்தையும்  வலுப்படுத்திட  அருமருந்தாய் ஆர்.எஸ்.எஸ்-ஐ உருவாக்கினார்..
 .
தனது மறைவுக்குள் (21.06.1940) ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நாடு முழுவதும் பரவலாக்கி,  அதற்கென  அர்ப்பணமயமான    நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  உருவாக்கிச் சென்ற, தேசபக்தி கொண்டோருக்கு   ‘வையத்துள் வாழ்வாங்கு வாழும் வீர புருஷனாய்’ வழிகாட்டும் டாக்டர் ஹெட்கேவாரை யுகாதி நாளில் நினைவில் கொண்டு அவர்தம் பணியைத்  தொடர்வோமாக!
 .
வந்தே மாதரம்!
 .
குறிப்பு:
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர்.

 

%d bloggers like this: