Category Archives: ஸ்வதந்திர கர்ஜனை

ஸ்வதந்திர கர்ஜனை – 40

-தஞ்சை வெ.கோபாலன்

காண்க: பகுதி- 39

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவை (1947)

  பாகம்-2 :பகுதி 30

பூத்தது புதிய யுகம்!

1947 ஆகஸ்ட் 15. இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய சுதந்திரமாக எழுந்து நின்ற நாள்.

நாமக்கல்லார் பாடியபடி  ‘கத்தியின்றி ரத்தமின்றி’ நடந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றி இது. இங்கு இந்த ‘கத்தியின்றி ரத்தமின்றி’ எனும் இந்தச் சொற்றொடரின் பொருள் வேறு.   நம்மை ஆண்ட பிரிட்டிஷாரின் மீது கத்தி வீசாமலும், அவர்களது ரத்தத்தைச் சிந்தாமலும், நம்மை வருத்தி இந்திய தேசபக்தர்களின் ரத்தத்தின் மீது கட்டப்பட்ட சுதந்திர மாளிகை இது.

ஆகஸ்ட் 14 நள்ளிரவில் பிறந்த சுதந்திரத்தையொட்டி இந்தியாவுக்கு ஒரு புதிய அரசு பதவி ஏற்றுக் கொண்டது. இந்திய பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் இருந்த போதே இந்தியாவுக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக ஒரு அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. பிரிட்டனின் அமைச்சரவை தூதுக்குழு 1946இல் இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின் உருவான அமைப்பு இது. இந்த அவைக்கு மாகாண அரசாங்கங்களிலிருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்த அவையில் மொத்தம் 9 பெண்கள் உட்பட 299 பேர் உறுப்பினராக இருந்தனர்.

சுதந்திரம் வரும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் 1946 செப்டம்பர் 2-ஆம் தேதி தற்காலிக மத்திய அரசு நிறுவப்பட்டது. இந்த அவையில் காங்கிரசுக்கு 69 சதவீத எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் முஸ்லிம்களும், சின்னஞ்சிறு கட்சிகளான பட்டியல் ஜாதியார் கூட்டமைப்பு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, யூனியனிஸ்ட் கட்சி ஆகியோரின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்தனர்.

1947 ஜூன் மாதத்தில் சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம், பலுசிஸ்தான், மேற்கு பஞ்சாப் நேஃபா எனும் வடகிழக்கு எல்லை மாகாணம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரிந்து போய் கராச்சியில் கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினரானார்கள். ஆகஸ்ட் 15-இல் நாடு இந்தியா- பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தபோது இந்திய அரசியல் நிர்ணய சபையிலிருந்து பிரிந்து போனவர்கள் தவிர மற்றவர்கள் இந்திய சபையில் அங்கம் வகித்தார்கள். முஸ்லிம் லீகில் இருந்த 28 பேர் இந்திய சபையில் தொடர்ந்து நீடித்தனர். பின்னர் சமஸ்தானங்கள் சார்பில் 93 பேர் உறுப்பினர்கள் ஆனார்கள். இப்படி மாறி அமைந்த அவையில் காங்கிரஸ் 82 சதவீதம் பேரைக் கொண்டிருந்தது.

ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவி ஏற்றார். அவர் தன்னுடைய அமைச்சரவையில் 15 பேரைச் சேர்த்துக் கொண்டார். வல்லபபாய் படேல் துணைப் பிரதமராகப் பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் 1947 ஆகஸ்ட் 15-இல் பொறுப்பேற்றுக் கொண்ட அவர் 1950 டிசம்பர் 15-இல் அவர் இறந்து போகும்வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

தொடக்கத்தில் லார்ட் மவுண்ட் பேட்டனும், பின்னர் ராஜாஜியும் கவர்னர் ஜெனரலாகப் பதவி ஏற்றனர். இவை 1950 ஜனவர் 26 வரை நீடித்தது. அதன் பின் இந்திய அரசியல் சட்டம் நிறைவேறி ‘இந்தியா என்கிற பாரதம்’ உருவான பின் முதல் குடியரசுத் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் பதவி ஏற்றார்.

நேருஜியின் அமைச்சரவையில் மதரீதியாகப் பார்த்தால் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ, சீக்கிய இனத்தார் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெண் உறுப்பினர் ஒருவர் மட்டுமே, அவர்தான் ராஜ்குமாரி அம்ரித் கவுர். இனி நேருவின் அமைச்சரவை சகாக்களின் பெயர்களையும் அவர்கள் நிர்வகித்த துறைகளையும் பார்க்கலாம்.

பிரதமர்– ஜவஹர்லால் நேரு    (வெளியுறவுத் துறை)
துணைப் பிரதமர்– சர்தார் வல்லபபாய் படேல் (உள்துறை, சமஸ்தானங்கள்)
நிதி– ஆர்.கே.சண்முகம் செட்டி/ ஜான் மத்தாய்/ சி.டி.தேஷ்முக்
சட்டம்– பி.ஆர்.அம்பேத்கர்
பாதுகாப்பு– பல்தேவ் சிங்
ரயில்வே– ஜான் மத்தாய்/ என்.கோபாலசாமி ஐயங்கார்
கல்வி– மெளலானா அபுல்கலாம் ஆசாத்
உணவு/ விவசாயம்– ஜெய்ராம் தவுலத்ராம்
தொழில்துறை– ஷியாம பிரசாத் முகர்ஜி
தொழிலாளர்– பாபு ஜெகஜீவன்ராம்
வர்த்தகம் – கூவர்ஜி ஹோர்முஸ்ஜி பாபா
தொலைதொடர்பு– ரஃபி அகமது கித்வாய்
நல்வாழ்வு– ராஜ்குமாரி அம்ரித் கவுர்
சுரங்கம், மின்சாரம்– என்.வி.காட்கில்
அகதிகள் நல்வாழ்வு, மறுவாழ்வு குடியமர்த்தல்-கே.சி.நியோகி

இவர்களில் சிலர் மாற்றப்பட்டனர், படேல் காலமானார்.

-இத்துடன் இந்த வரலாறு இந்திய சுதந்திரம் அடைந்த வரை நிறைவு பெறுகிறது.

மீண்டும் வேறொரு வரலாற்றுத் தொடரில் உங்களைச் சந்திக்கிறேன். நன்றி.

(நிறைவு)

குறிப்பு:

திரு. தஞ்சை.வெ.கோபாலன்:

Thanjai Ve.Gopalan

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவரும்,  நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினருமான திரு. தஞ்சை. வெ.கோபாலன்,  திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி,  மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தி வருபவர்.

 

காண்க:

இத்தளத்தில் அன்னாரது இடுகைகள்

Advertisements

ஸ்வதந்திர கர்ஜனை – 39

-தஞ்சை வெ.கோபாலன்

காண்க: பகுதி- 38

முதல் பிரதமர் நேருவின் சுதந்திர தின நள்ளிரவு உரை (15.08.1947)

  பாகம்-2 :பகுதி 29

ஜவஹர்லால் நேருவின் சுதந்திர உரை

 

 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது.

அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்.

(தில்லியில், இந்திய அரசியல்சட்டத்தை வகுப்பதற்கான அரசியல் நிர்ணய சபையில் 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரை).

அநேக ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு லட்சியத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், இப்போது அந்த லட்சியம் கைகூடுவதற்கான நேரம் வந்துள்ளது; நாம் அன்று ஏற்றுக்கொண்ட சபதத்தை முழுமையாக மட்டுமல்ல செறிவாகவும் நிறைவேற்ற வேண்டும்.

இரவு மணி 12 அடிக்கும்போது உலகம் தூங்கிக்கொண்டிருக்கும், இந்தியா உறக்கத்திலிருந்து விழிக்கும், சுதந்திரம் பெறும். அற்புதமான ஒரு தருணம் வாய்த்துள்ளது. வரலாற்றில் அப்படி எப்போதாவது ஒருமுறைதான் அபூர்வமான தருணம் வாய்க்கிறது; நாம் பழையனவற்றிலிருந்து புதியனவற்றுக்குள் அடியெடுத்துவைக்கிறோம்; ஒரு காலகட்டம் முடிந்து தேசத்தின் ஆன்மா விடுதலை பெறுகிறது. நீ்ண்ட காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டு தனது உள்ளத்திலிருக்கும் விருப்பத்தை அது தெரிவிக்கிறது.

இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மனித குலத்தின் எண்ணற்ற பிறருக்கும் சேவையாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள பொருத்தமான, புனிதமான தருணம் இதுவே.

வரலாற்றின் உதயத்தின்போது இந்தியத் தாய் தன்னுடைய முடிவில்லாத தேடலைத் தொடங்கி யிருக்கிறாள்; பல நூற்றாண்டுகள் நெடுகிலும் அவளுடைய போராட்டங்களும், அவளுடைய மகோன்னதங்களும், அவளுடைய வெற்றிகளும் அவளுடைய தோல்விகளும் விரவிக் கிடக்கின்றன. நன்மைகள் ஏற்பட்டபோதும் தீமைகள் அண்டியபோதும் அவள் தன்னுடைய இலக்கிலிருந்து பார்வையை அகற்றவில்லை, லட்சியங்களையும் மறந்தாளில்லை; அவை தான் அவளுக்கு வலிமையைத் தந்த அருமருந்து. துரதிர்ஷ்டமான அடிமை காலகட்டத்தை நாம் இன்று முடிவுக்குக் கொண்டுவருகிறோம்; இந்தியத் தாய், தான் உண்மையில் யாரென்பதை இனி உணரத் தலைப்படுவாள்.

இன்று நாம் கொண்டாடும் வெற்றிகள் ஒரு படிக்கல் தான், வாய்ப்புகளுக்கான ஒரு திறவுகோல் தான், மிகப் பெரிய வெற்றிகளும் சாதனைகளும் நமக்காகக் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்ளவும், எதிர்காலம் நமக்கு அளிக்கவிருக்கும் சவால்களைச் சந்திக்கவும் நாம் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறோமா, புத்திசாலிகளாக இருக்கிறோமா?

சுதந்திரமும் அதிகாரமும் நமக்குப் பொறுப்பைக் கொண்டு வருகின்றன. இறையாண்மையுள்ள இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இறையாண்மை மிக்க இந்தச் சபைக்கு அந்தப் பொறுப்பு வந்து சேர்கிறது.

இந்த சுதந்திரத்தை அடைவதற்கு முன்னால் நாம் எல்லாவிதத் துயரங்களையும் அனுபவித்தோம், அந்த சோகமான நினைவுகளால் நம்முடைய இதயங்கள் கனத்து நிற்கின்றன. அந்தத் துயரங்களில் சில இப்போதும் தொடர்கின்றன. எது எப்படியிருந்தாலும் கடந்த காலம் முடிந்துவிட்டது, இப்போது எதிர்காலம் நம்மை இருகரம் நீட்டி அழைக்கின்றது.

எதிர்காலம் என்பது சுகமாக இருப்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ அல்ல; இதுவரை நாம் எடுத்த உறுதிமொழிகளையும் இன்று எடுக்கப்போகும் உறுதிமொழிகளையும் இடையறாது பாடுபட்டு நிறைவேற்றுவதற்குத் தான் எதிர்காலம் என்பது. இந்தியாவுக்கு சேவை செய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக் கணக்கான மக்களுக்கு சேவை செய்வதுதான். அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது, அறியாமை இருளை அகற்றுவது, நோயற்ற வாழ்வை அளிப்பது, ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாட்டின் வளங்களில் அனைவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது.

நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரிய மகானின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதே. அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் – கண்ணீர் இருக்கும் வரை, துயரங்கள் தொடரும் வரை நம்முடைய பணிகள் முற்றுப் பெறாது.

எனவே கடினமாக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், நம்முடைய கனவுகள் நனவுகளாக வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்காக மட்டுமல்ல, அவை உலகத்துக்காகவும் கூட; எல்லா நாடுகளும் எல்லா மக்களும் நெருக்கமாகப் பின்னி பிணைக்கப் பட்டுள்ளனர்; யாராவது ஒரு தேசத்தவரை விட்டுவிட்டு உலகை நினைத்துப் பார்க்க முடியாது. சமாதானம் என்பதை உடைக்க முடியாது என்பார்கள்; அதைப் போலத் தான் சுதந்திரமும், அதைப் போலத் தான் வளமும், அதைப் போலத் தான் பேரிடர்களும்! இந்த ஒரே உலகைப் பல துண்டுகளாக இனி உடைக்க முடியாது.

இந்தப் பெரிய சாகசத்தில் நம்பிக்கையும் உறுதியும் கொண்டு எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள் என்று, இந்திய மக்களுக்கு, அவர்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் இந்த அவை மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

அற்பமான விமர்சனங்களுக்கோ அழித்துவிடுவது போன்ற சாடல்களுக்கோ இது நேரமல்ல; பகைமை பாராட்டுவதற்கும் அடுத்தவரைப் பழிப்பதற்கும் இது சமயமல்ல. இந்தியத் தாயின் எல்லா குழந்தைகளும் வளமாகவும் வலிமையாகவும் வாழ, புதிய இந்தியா என்ற மேன்மைமிகு மாளிகையைக் கட்டி எழுப்புவதற்கான நேரம் இது.

எதிர்பார்த்த அந்த நாள் வந்துவி்ட்டது காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள் இது நீண்ட கால உறக்கத்துக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகு, விழிப்புற்று, வலுவேறி, சுதந்திரமாக, தளைகளை அறுத்துக்கொண்டு இந்தியா நிமிர்ந்து நிற்கிறது.

கடந்த காலம் நம்மை ஏதோ ஒரு வகையில் இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாம், கடந்த காலத்தில் அடிக்கடி எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தாக வேண்டும். வரலாறு நமக்குப் புதிதாகத் தொடங்குகிறது; இனி நாம் வாழ்ந்து செயல்படப்போவது தான் வரலாறு, அதை வருங்காலத்தில் மற்றவர்கள் எழுதப் போகிறார்கள்.

இது காலம் நிர்ணயித்த தருணம் – இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ஏன், உலகத்துக்கே கூட. புதிய நட்சத்திரம் வானில் உதயமாகிறது, கீழை நாட்டின் சுதந்திரம் என்ற நட்சத்திரம் அது. ஒரு புதிய நம்பிக்கை நிறைவேறத் தொடங்குகிறது, நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த காட்சி கண் எதிரே விரிகிறது. இந்த நட்சத்திரம் என்றைக்கும் ஒளிவீசி வாழட்டும்! இது ஏற்படுத்தும் நம்பிக்கை என்றைக்கும் பொய்க்காமல் வலிமையோடு விளங்கட்டும்.

கவலை மேகங்கள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், நம்மில் பலர் துயரில் ஆழ்ந்திருந்தாலும், கடினமான பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், இந்தச் சுதந்திரத்தில் நாம் மகிழ்ச்சி கொள்கிறோம், கொண்டாடுகிறோம். ஆனால், இந்த சுதந்திரமானது பொறுப்புகளையும் சுமைகளையும் உடன் கொண்டுவருகிறது; சுதந்திர நாட்டின் கட்டுப்பாடான குடிமக்களாக இந்தச் சவால்களை எதிர்கொள்வோம்.

இந்த நன்னாளில் நம்முடைய சிந்தனையெல்லாம், இந்தச் சுதந்திரத்தை நமக்கு வாங்கித்தந்த தேசப்பிதாவை நோக்கித் தான் முதலில் செல்கிறது. இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு இலக்கணமாகத் திகழும் அவர் சுதந்திர தீபத்தையேற்றி, நம்மைச் சுற்றியிருந்த அடிமை இருளைப் போக்கினார்.

அவருடைய போதனைகளுக்கு ஏற்ப நடக்கும் அருகதையற்ற சீடர்களாக, அவர் போதித்த உண்மைகளிலிருந்து நாம் விலகிச் சென்றோம். ஆனால், நாம் மட்டும் அல்ல. இனி வரும் தலைமுறைகளும் இந்தியாவின் அரும்புதல்வரான அவருடைய போதனைகளைத் தங்களுடைய இதயங்களிலே பொறித்துவைத்துக்கொள்ளும்.

தன்னுடைய நம்பிக்கைகளில் ஆழ்ந்த பற்றும் நெஞ்சுரமும், எதையும் எதிர்கொள்ளும் வலிமையும் எளிமையும் கொண்டவர் அவர். எப்படிப்பட்ட காற்று வீசினாலும் எப்படிப்பட்ட சூறாவளி தாக்கினாலும் அவர் ஏற்றிவைத்த சுதந்திரம் என்ற சுடரை அணையாமல் காப்போம்.

அடுத்து நம்முடைய எண்ணமெல்லாம் பெயர் தெரியாத, லட்சக் கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்கள், வீரர்கள் பக்கம் திரும்புகிறது; ஒரு பாராட்டோ, ஒரு பரிசோ எதிர்பாராமல், இந்த நாட்டின் விடுதலைக்காகத் தங்களுடைய இன்னுயிரைக்கூடப் பலியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

அரசியல் எல்லைக்கோடுகளால் நம்மிடமிருந்து இன்று பிரிந்து விட்ட, நம்மோடு சுதந்திரத்தைக் கொண்டாட முடியாமல் துயரில் வாடுகின்ற, நம்முடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறோம். அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள்; எது நடந்தாலும் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாகவே இனியும் இருப்பார்கள். அவர்களுடைய மகிழ்ச்சியிலும் துக்கங்களிலும் நாம் பங்கேற்போம்.

எதிர்காலம் நம்மை அழைக்கிறது, நாம் எங்கே போவோம், எது நம்முடைய லட்சியமாக இருக்கும்? சுதந்திரத்தையும் வாய்ப்பையும் சாமானிய மனிதர்களுக்கு, இந்திய விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்குக் கொண்டு செல்வோம். வறுமையையும் அறியாமையையும் நோய்களையும் ஒழிக்கப் போராடுவோம். ஜனநாயக உணர்வுமிக்க, வளமான, முற்போக்கான நாட்டை உருவாக்குவோம். அனைவருக்கும் நீதியையும்,  ஆண் -பெண் என்று இருபாலருக்கும் முழுமையான வாழ்க்கையையும் அளிக்கவல்ல சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்துவோம்.

கடுமையான வேலை நமக்குக் காத்திருக்கிறது. நம்முடைய உறுதிமொழிகளை முழுமையாக நிறை வேற்றும்வரை, எதிர்காலம் அவர்களை என்னவாகப் பார்க்க விரும்புகிறதோ அதுவாக அவர்களை மாற்றும்வரை, நமக்கு ஓய்வே கிடையாது.

மிகப் பெரிய நாட்டின் குடிமக்கள் நாம். மிகப் பெரிய முன்னேற்றத்துக்குத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை எட்ட வேண்டும். நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உரிமை, சலுகை, கடமை ஆகியவற்றில் சமமான பங்குள்ளவர்கள். மதவாதத்தையோ குறுகிய எண்ணங்களையோ நாம் ஊக்குவிக்க முடியாது. எண்ணங்களிலும் செயல்களிலும் குறுகிய புத்தி உள்ள மக்களைக் கொண்ட எந்த நாடும் வலிமையான நாடாக வளர முடியாது.

உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும், எல்லா நாடுகளின் மக்களுக்கும் நாம் வாழ்த்து தெரிவிப்போம். உலகில் சமாதானம், சுதந்திரம், ஜனநாயகம் வலுப்பட நாம் ஒத்துழைப்போம் என்று அவர்களுக்கு உறுதியளிப்போம்.

இந்தியாவுக்கு, நம்முடைய பாசம்மிக்க தாய்நாட்டுக்கு, மிகவும் புராதனமான, காலம்காலமாக இளமையோடு திகழும் நாட்டுக்கு நாம் நமது சிரம் தாழ்ந்த வணக்கத்தை இந்த நேரத்தில் செலுத்துவோம். இந்த தேசத்தின் சேவைக்காக நாம் நம்மை மீண்டும் பிணைத்துக்கொள்வோம்.

ஜெய் ஹிந்த்!”

சுதந்திர விடியல் தோன்றியது. புதிய அத்தியாயம் தொடங்கியது. அடிமைப்பட்டு, முதுகு வளைந்து, எல்லா வளங்களையும் இழந்து, புது வாழ்வைத் தொடங்கப் போகும் பாரத தேசம் என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்புகளுடன்  மக்கள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.

ஆனால் இந்த சுதந்திரத்துக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டு சிறைப்பட்டு உண்ணாவிரதங்கள் இருந்து இப்போதும் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நவகாளியில் ஆறுதல் கூறி சுற்றுப் பயணத்தில் இருதார் காந்திஜி.

தில்லியின் வண்ணமிகு சுதந்திர தினக் கொண்டாட்டங்களில்  அவர் கலந்து கொள்ளவில்லை.

(கர்ஜனை தொடர்கிறது)

ஸ்வதந்திர கர்ஜனை – 38

-தஞ்சை வெ.கோபாலன்

காண்க: பகுதி- 37

உலக சரித்திரத்தில் மாபெரும் இடப்பெயர்வு (1947)

  பாகம்-2 :பகுதி 28

ரத்தச் சேற்றில் பூத்த சுதந்திரத் தாமரை

பிரிட்டிஷ் பிரதமர் ஆட்லி இங்கிலாந்து காமன்ஸ் சபையில் இந்தியாவுக்கு 1948 ஜூன் மாதத்தில் சுயாட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தாரல்லவா? அந்த அறிவிப்பை ஓரளவு துணிச்சலான அறிக்கைதான் என்றார் ஜவஹர்லால் நேரு. அகில இந்திய காங்கிரஸ் காரிய  கமிட்டி கூடி பிரிட்டிஷ் பிரதமரின் அறிவிப்பை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றியது.

மதக் கலவரங்கள் நடந்த இடங்களுக்கெல்லாம் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு காந்திஜி 1947 மார்ச் மாதம் பிகாரிலுள்ள பாட்னாவுக்கு வந்தார். அங்கு பிகார் மாநிலத்தில் முந்தைய மாதத்தில் நடந்த கலவரங்களில் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட இடங்களைச் சென்று பார்த்துவிட்டு,  ‘இவற்றோடு ஒப்பிடுகையில் நவகாளியில் நடைபெற்ற அக்கிரமங்கள் குறைவுதான் என்று எண்ணத் தோன்றுகிறது’ என்றார். பாதிக்கப்பட்ட பிகார் மக்களுக்கு உதவும் நிவாரணப் பணிகளுக்காக மக்கள் தாரளமாக நிதியுதவி தர வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

1947 ஏப்ரல் முதல் தேதி தில்லி, புராணாகிலா மைதானத்தில் ஆசிய நாடுகளின் மகாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காந்திஜி பிகாரிலிருந்து தில்லி திரும்பினார். இந்த மாநாட்டில் சுமார் இருபதாயிரம் பேர் கலந்து கொண்டனர். இங்கு பேசுகையில் காந்திஜி,  “உண்மையான இந்தியாவை நகரங்களில் காணமுடியாது; அதை கிராமங்களுக்குச் சென்று பார்க்கவேண்டும்” என்றார். மாநாடு முடிந்து மீண்டும் காந்திஜி பிகார் திரும்பினார்.

லண்டன் காமன்ஸ் சபையில் பிரதமர் ஆட்லி அறிக்கை சமர்ப்பித்த பின்னரும் இந்தியாவில் முஸ்லிம் லீக் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்து வந்தது. தொடர்ந்து எந்தெந்த மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்தந்தப் பகுதிகளையெல்லாம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டனர்.

அசாம் பிரதேசத்தை வங்காளத்துடன் இணைக்க வற்புறுத்தி முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கையில் இறங்கியது. அப்போது அசாம் பிரதேசத்தை ஆண்டுவந்த லீக் அல்லாத கட்சியின் கடுமையான நடவடிக்கைகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.

மேற்கே பஞ்சாப் இந்த இனவாத கொள்கையினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியது. கல்கத்தா, நவகாளி,  பிகார் ஆகிய இடங்களில் நடந்த மதக் கலவரத்தினால் பஞ்சாப் மக்கள் பெரிதும் ஆத்திரமடைந்தனர். அப்போது பஞ்சாபில் ஆட்சி புரிந்து வந்த மாலிக் ஹயத்கான் மந்திரிசபை மார்ச் மாதம் ராஜிநாமா செய்துவிட்டது. அப்போதைய பஞ்சாப் கவர்னர் முஸ்லிம் லீக் கட்சியை அழைத்து அமைச்சரவை அமைக்கச் சொன்னார். உடனே பஞ்சாபில் அகாலி தலைவர் மாஸ்டர் தாராசிங் அங்குள்ள இந்துக்களும் சீக்கியர்களும் எதற்கும் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் சொன்னார்:

“நாம் பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமானால், முஸ்லிம்களிடமிருந்தும் ஆட்சியைக் கைப்பற்றுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இனியும் பஞ்சாபில் முஸ்லிம் லீக் கட்சியை நம்ப முடியாது, அவர்கள் ஆட்சி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது”.

பஞ்சாப் மாநிலம் முழுவதும் கலவரம் உச்ச கட்டத்தை அடைந்தது. நிலைமையை சமாளிக்க கவர்னரே நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வீடுகளுக்குத் தீயிடல். குலைநடுங்கும் பயங்கரங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. உலகில் எந்த நாட்டிலும் எந்த சமயத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு மக்கள் கொத்து கொத்தாகக் கொலை செய்யப்பட்டார்கள். குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் தப்பவில்லை.

ஊரைக் காலிசெய்து கொண்டு மக்கள் எறும்பு வரிசை போல வேறிடம் நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினர். ராவல்பிண்டியில் தான் கண்ட காட்சிகள் பற்றி நேரு சொன்னார்: “என் வாழ்நாளில் நான் பார்த்திராத பயங்கரக் காட்சிகளை அங்கு கண்டேன். மக்கள் மக்களாகக் காட்சியளிக்கவில்லை, மிருகங்களாக மாறியிருந்தனர்”.

புதிய வைஸ்ராய் லார்டு மவுண்ட்பேட்டன் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்பி ராவல்பிண்டியில் நடப்பனவற்றைப்  பார்த்து வரப் பணித்தார். அவர் சொன்னார்: “இந்தப் பிரதேசம் அக்னி குண்டுகள் வீசப்பட்ட இடம் போல அனைத்தும் அழிந்து எங்கும் சூன்யமாகக் காட்சியளிக்கிறது. இதனைக் கண்டு ஒரு பகுதியினர் (லீகினர்) மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்”.

ராவல்பிண்டி கலவரத்தில் 15 நாட்களில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 2,049. கடுமையான காயம் அடைந்தவர்கள் நூற்றுக்கும் அதிகம் என்று பஞ்சாப் அரசு அறிக்கை வெளியிட்டது. அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கலகத்தை அடக்கும் அதிகாரமும், பலமும் இருந்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்தியாவின் தற்காலிக அரசுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. அரசு இரண்டுபட்டுக் கிடக்கும்போது அதிகாரிகள் மட்டத்திலும் இங்கும் அங்குமாகத் தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமை இப்படியே போய்க்கொண்டிருக்குமானால் சுடுகாடாகிவிடும் என்பதால், பஞ்சாபை ‘முஸ்லிம் பஞ்சாப்’ என்றும், ‘இந்துக்கள் சீக்கியர்கள் பஞ்சாப்’ என்றும் இரு பகுதிகளாகப் பிரிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது.

இந்த செய்திகள் எல்லாவற்றையும் கேட்டு காந்தியடிகள் துயரமடைந்தார். உடனே ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபபாய் படேலுக்கும், அதாவது தற்காலிக அரசின் பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தன்னுடைய கவலையைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு வல்லபபாய் படேல் எழுதிய பதிலில் கூறுகிறார்:

“உங்களிடம் பஞ்சாபை இரண்டாகப் பிரிப்பது பற்றிய தீர்மானம் பற்றி விளக்குவது அத்தனை சுலபமல்ல என்பதை நான் அறிவேன். இருந்தாலும், அவசர கதியில் அல்லாமல், நன்றாகப் பல நாட்கள் சிந்தித்து அங்கு நிலவுகின்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ற முடிவினை எடுக்க வேண்டியிருந்தது என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்”

-என்றார் படேல்.

இதுமாதிரியான நேரத்தில் இந்தியாவின் நல்ல காலம் இந்தியர்களின் உணர்வுகளை நன்கு புரிந்து கொண்ட மவுண்ட் பேட்டன் பிரபு வைஸ்ராயாக வேவல் பிரபுவுக்குப் பதிலாக வந்திருந்தார். இந்தியாவுக்கு வந்த வைஸ்ராய்கள் வரிசையில் 24ஆவதும் கடைசி வைசிராயுமாவார் இவர்.

22 மார்ச் 1947-இல் இவர் இந்தியாவில் வைஸ்ராயாக ஆனார். இவரும் பஞ்சாப் பிரச்னையை நன்கு ஆராய்ந்து சிந்தித்து அங்கு நடக்கும் விவகாரங்களுக்கு பஞ்சாபை இரண்டாகப் பிரிப்பதே சரியான தீர்வு என்பதை  ஒப்புக் கொண்டார்.

ஜனாப் முகம்மதலி ஜின்னா, பஞ்சாபை இரண்டாகப் பிரித்து அதில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியையும், அதேபோல வங்காளத்தை இரண்டாகப் பிரித்து அதில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிழக்குப் பகுதியையும் துண்டாடி உருவாகும் பாகிஸ்தானை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கும் காலகெடுவை நீட்டித்துக் கொண்டு போவது சரியாக இருக்காது என்பதால், காமன்ஸ் சபையில் பிரதமர் ஆட்லி அறிவித்ததைப் போல 1948 ஜூன் மாதத்தில் இல்லாமல் முன்கூட்டியே 1947 ஆகஸ்ட் 15-இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கிவிடுவது எனும் தீர்மானத்தை லார்ட் மவுண்ட் பேட்டன் பிரிட்டிஷ் அரசுக்குச் சிபாரிசு செய்தார். அதன்படி இந்தியா அன்றைய தினம் பிரிந்து இருவேறு குடியரசுகளாக அறிவிக்கப்படும் என்றார்.

‘நடந்த நிகழ்ச்சிகள் நாட்டின் பிரிவினையை ஒப்புக்கொள்ளும்படி செய்துவிட்டன’ என்றார் ஜவஹர்லால். ‘உடலில் அழுகிப் போன பகுதியை வெட்டி எடுத்துவிட்டோம்’ என்றார் வல்லபபாய் படேல்.

‘மத்தியில் ஆளுகின்ற அரசு ஒரு வலுவான உறுதியான அரசாக இருந்தால் மட்டுமே குழப்பம், கலவரம், அராஜகம் இவற்றைத் தடுத்து மக்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க முடியும் எனும் நிலை ஏற்பட்டுவிட்டதால், காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மதம் இன்றியே பிரிவினையை ஏற்றுக் கொள்ளும்படி ஆயிற்று’ – இப்படிக் கருத்துச் சொன்னவர் காங்கிரஸ் தலைவர் ஜே.பி.கிருபளானி.

1947 ஜூன் 14 அன்று அகில இந்திய காங்கிரஸ் கூடி நாட்டுப் பிரிவினையை ஏற்றுக் கொண்டது. இதில் 153 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 29 பேர் எதிர்த்தும், 36 பேர் நடுநிலைமை வகித்தும் பிரிவினை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காந்திஜிக்கு பிரிவினையில் சம்மதமில்லை எனினும், ‘சந்தர்ப்ப சூழ்நிலை கருதி அதனை ஏற்றுக் கொள்ளும் கடமை காங்கிரசுக்கு ஏற்பட்டுவிட்டது’ என்றார்.

இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவிப்பது என முடிவு செய்தது. இங்கு மக்கள் எந்தவித பேதமின்றி ஜாதி, மத, இன, வகுப்பு வேற்றுமைகள் எதுவுமின்றி அனைவரும் சமம் எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டது. நாட்டில் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எல்லா உரிமைகளும் கிடைக்கும் என்கிற உத்தரவாதமும், அரசியல் சாசனப்படியான கடமைகளை மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவித்தது.

நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவுக்கு இருந்தது போன்ற நிலைமை பாகிஸ்தானுக்கு இல்லை. மதப் பற்று, வகுப்பு வெறி, வன்முறை இவற்றால் பிறந்த தேசமென்பதால் அங்கு மக்கள் மனத்தில் வெறுப்பும், ஆத்திரமும் உருவாக்கப்பட்டு ஒரு வித்தியாசமான நாடாக அது உருவெடுத்தது. அப்படி போராடி, எதிரிகளை அழித்து ரத்த வெள்ளத்தில் புதிய நாடொன்றை உருவாக்க வேண்டியிருந்ததால், அமைதியும் மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்ற சூழ்நிலையை அந்த நாட்டில் உருவாக்க முடியாமல் போய்விட்டது.

பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காகப் பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது அல்லவா>  அந்த பிரிவினையில் எல்லைப் பிரச்னை தோன்றி வேறு ஒரு புதிய வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. பஞ்சாப் பிரிந்த பின்பு மேற்கு பஞ்சாபில் இருந்த சீக்கியர்களும் இந்துக்களும் உயிருக்கு பயந்து இந்தியாவை நோக்கி ஓடத் துவங்கினர். அது போலவே கிழக்கு பஞ்சாபில் மாட்டிக் கொண்ட முஸ்லிம்கள் பாகிஸ்தானை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.

அகதிகளாக இப்படி ரயிலும், வண்டிகளிலும், நடந்தும் மூட்டை முடிச்சுகள், குழந்தைகள், பெண்கள் என்று வரும் அகதிகள் வழிமறித்துத் தாக்கப்பட்டனர். அவர்களது பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இப்படி அப்போதைய மேற்குப் பகுதியில் வாழ்ந்த பெரும் பணக்காரர்களும் குடும்ப உறுப்பினர்களை இழந்து, பொருளை இழந்து அநாதைகளாக, அகதிகளாக இந்தியா வந்து சேர்ந்தனர். ரயிலை மறித்துத் தாக்கியதில் ஒரே ரயிலில் மாண்ட இந்து, சீக்கியர்கள் எண்ணிக்கை  இரண்டாயிரத்தைத் தாண்டியது. கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கிணறுகளில் குதித்து உயிர்விட்ட பெண்கள் ஏராளம். ஒரு கிணற்றிலிருந்து மட்டும் 160 பிணங்கள் மீட்கப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி அவர்கள் வைத்த தீ அவர்களையும் திருப்பித் தாக்கத் தொடங்கியது. அதன் வெப்பத்தையும் வேதனையையும் உணரத் தொடங்கிய நிலையில், முஸ்லிம் லீக் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பும் அகதிகளுக்குப் போலீஸ் காவல் கொடுக்க ஒப்புக் கொண்டது. இந்தியாவும் இங்கிருந்து பாகிஸ்தான் செல்வோருக்கு அதுபோன்ற போலீஸ் காவல் கொடுக்க ஒப்புக் கொண்டது. ஒரு அகதிகளின் வரிசை ஒன்றாக சுமார் பத்து, பதினைந்து மைல் நீளம் கூட இருந்தனவாம். ஒரு அணிவகுப்பு மட்டும் 53 மைல் நீளம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு பயந்து உடைமைகளை இழந்து எதிர்கால இருட்டில் வாழ்வின் வெளிச்சத்தை நாடி ஓடிவந்த அந்த அகதிகளின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லையே!

இப்படி இடம் பெயர்ந்து அகதிகளாக ஓடி வந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே இருபது லட்சம் பேர் என்கின்றன அரசு ஆவணங்கள். இதில் கொல்லப்பட்டவர்கள் ஐந்து லட்சம், தூக்கிச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றத்துக்கு ஆளாக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர். பல கோடி ரூபாய் பெருமானமுள்ள சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

பல லட்சம் பேர் தில்லியை நோக்கி ஓடிவந்தனர். அப்பொது தில்லி மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு அகதிகள். அப்படி வந்தவர்கள், மனைவியைப் பிரிந்தவர்கள், கணவனைப் பறிகொடுத்த பெண்கள், குழந்தைகளை உறவினர்களை இழந்தவர்கள், சொத்துக்கள் அனைத்தையும் இழந்து பரதேசிகளாக வந்து புகுந்தவர்கள் ஏராளமானோர். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல வெறி பிடித்தவர்களைப் போல தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி நம்பிக்கையோடு தில்லிக்குள் அகதிகளாகப் புகுந்தனர்.

அப்படி வந்தவர்கள் சொன்ன செய்திகள், தங்களுக்கு இழைக்கப்பட்ட மிருகத்தனமான கொடுமைகள், கொலை கொள்ளை பற்றிய செய்திகள், தங்கள் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஈனச் செயல்கள், பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் ஈட்டியாலும், வாளாலும் குத்திக் கிழித்த நெஞ்சைப் பிளக்கும் செய்திகள் இவை தான். இவர்கள் வரவால் தில்லி சூடாகிப் போயிற்று. அங்கு வகுப்புக் கலவரம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. அப்போது வன்முறையைக் கைவிட வேண்டி வல்லபபாய் படேல் அகதிகள் நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.

அவர் பேசியதன் சுருக்கம் இதோ:

“ஒரு பாவமும் அறியாத பாதுகாப்பற்ற ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கசாப்புக் கடைக்காரனைப் போல் வெட்டிச் சாய்ப்பது என்பது வீரர்களுக்கான தகுதி அல்ல. கானகத்தில் மிருகங்கள் போடும் சண்டையைப் போன்றது இது. இவை அனைத்துமே மனிதத் தன்மையற்ற அநாகரிகச் செயல்கள்.

முக்கியமான ஒரு வேண்டுகோளை நான் இப்போது உங்கள் முன்பாக வைக்கிறேன். அதாவது முஸ்லிம் அகதிகள் எந்தவித அச்சமும் இல்லாமல், பாதுகாப்பாக நம் நாட்டின் எல்லையைக் கடந்து அவர்கள் போகவேண்டிய இடங்களுக்குச் செல்ல உதவுவது என்று நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட செயல் உங்களுக்கு நல்ல பெயரையும் புகழையும் கொடுக்கும்.

மேற்கு பஞ்சாபிலிருந்து வரும் அனைத்து இந்து, சீக்கிய அகதிகளுக்கும், வங்காளத்தில் கிழக்கு வங்காளத்துக்குப் போகும் எல்லா முஸ்லிம் அகதிகளுக்கும் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்க இந்தியா முழு பொறுப்பையும், உறுதியையும் கொண்டுள்ளது. நம் ஒவ்வொருவருடைய நன்மையைக் கருதியும் இந்த மாபெரும் இடப் பெயர்ச்சி அமைதியாகவும், சிரமங்கள் இன்றியும் நடைபெற்றாக வேண்டும். இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளுங்கள்”

-என்றார் படேல்.

1947 ஆகஸ்ட் 7-ஆம் தேதி மீண்டும் காந்திஜி கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய நாள் காந்திஜியும் தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்து அன்று முழுவதும் நூல் நூற்றனர். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா சுதந்திரம் அடைகிறது. தில்லியில் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். அன்று நள்ளிரவுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக லார்டு மவுண்ட் பேட்டன் இருப்பார் என்ற அறிவிப்பு வெளியானது.

பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக வல்லபபாய் படேலும் பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரம் பற்றியும், அப்போது ஜவஹர்லால் நேருவின் உரையையும் அடுத்த பகுதியில் காணலாம்.

(கர்ஜனை தொடர்கிறது)

ஸ்வதந்திர கர்ஜனை – 37

-தஞ்சை வெ.கோபாலன்

காண்க: பகுதி- 36

 

முஸ்லிம் லீகின் ‘நேரடி நடவடிக்கை’யால் லட்சக் கணக்கில் மாண்டனர் அப்பாவி ஹிந்துக்கள்

  பாகம்-2 :பகுதி 27

சுதந்திரம் வந்தது! தேசம் உடைந்தது!

இரண்டாம் உலக யுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது. 1945 மே மாதம் 7-ஆம் தேதி நேச நாடுகளிடம் ஜெர்மனி நிபந்தனையின்றி சரணடைந்து விட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சில சலுகைகளை அறிவித்தது. சிறையிலிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்தது. அதே ஆண்டில் ஜூலை 26-இல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி தோற்று, தொழிற்கட்சி ஆட்சியைப் பிடித்தது. கிளெமண்ட் ஆட்லி இங்கிலாந்தின் பிரதமரானார். இந்தியாவிடம் அனுதாபம் காட்டும் பிரிட்டிஷ் தலைவர்களுள் இவரும் ஒருவர்.

ஆகஸ்ட்டில் ஜப்பான் அமெரிக்கர்களிடம் சரணடைந்தது. இந்திய தேசிய ராணுவமும் பிரிட்டிஷ் இந்திய சர்க்காரிடம் சரணடைந்தது. அப்போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு பார்ப்போம்.

ஐ.என்.ஏ. என்பது சுயேச்சையான படை, ஜப்பானுக்கு அடங்கியது அல்ல என்பதை அறிவித்துவிட்டார்கள். அந்த சமயம் இந்திய ராணுவத்திலிருந்து கர்னல் திம்மையா (பின்னாளில் இந்திய தலைமை படைத் தளபதியாக இருந்தவர்) ரங்கூன் சென்று ஐ.என்.ஏ.யின் தலைமையகத்துக்குப் போனார். அப்போது அங்கு பணியில் இருந்த ஐ.என்.ஏ. கர்னல் ஒருவர் அவருக்கு  ‘ஜெய் ஹிந்த்’  என்று சல்யூட் அடித்து வரவேற்று உட்கார வைத்தார். திம்மையா வந்த காரணத்தைக் கேட்டதற்கு அவர் ஐ.என்.ஏ.யின் சரணாகதி பற்றி மேஜர் ஜெனரல் லோகநாதனிடம் விவாதிக்க வந்ததாகச் சொன்னார்.

உடனே ஐ.என்.ஏ.வின் கர்னல், திம்மையாவிடம் “எங்கள் மேஜர் ஜெனரலிடம் பேச இந்திய படையிலிருந்து ஒரு மேஜர் ஜெனரல்தான் வரcவேண்டும், கர்னலிடம் எங்கள் மேஜர் ஜெனரல் லோகநாதன் பேச மாட்டார்” என்றார். திம்மையா சிரித்துக் கொண்டே, “ஆமாம் அதுதான் ராணுவத்தின் நடைமுறை” என்று சொல்லிவிட்டு வேறொரு மேஜர் ஜெனரல் வந்து பேசுவார் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அதோடு ஐ.என்.ஏ. ராணுவம் விதிகளை எத்தனை உண்மையாகப் பின்பற்றுகிறது என்பதறிந்து மகிழ்ச்சியடைந்து பாராட்டினார். இப்படி பிரிட்டிஷ் இந்தியாவின் கர்னலைத் திருப்பி அனுப்பிய ஐ.என்.ஏ.வின் கர்னல் யார் தெரியுமா?

பிரிட்டிஷ் தளபதி திம்மையாவின் சொந்தத் தம்பி தான் அவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் அண்ணன்- தம்பிக்குள் நடந்த உரையாடல் பெருமையளிக்கிறது.

1946 ஜனவரியில் காந்திஜி சென்னைக்கு விஜயம் செய்தார். அங்கிருந்து மதுரைக்கும் பழனிக்கும் போனார். அந்த ஆண்டு பம்பாயில் கடற்படையினருக்குள் கலகம் ஏற்பட்டு ஆட்சியாளர்களைக் கவலையுற வைத்தது. ராணுவத்தில் இதுபோன்ற கலகங்கள் நடப்பது பிரிட்டிஷாருக்கு நல்லதல்ல என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.

புதிய சீர்திருத்தங்களின் அடிப்படையில் மாகாண சட்டசபைகளுக்கு 1946-இல் தேர்தல் நடந்தது. சென்னை, பம்பாய், மத்திய பிரதேசம், வடமேற்கு எல்லை மாகாணம், உத்தர பிரதேசம், பிகார், ஒரிசா, அசாம் ஆகிய எட்டு மாகாணங்களுக்கு தேர்தல் நடந்தது. இவற்றில் வங்காளம், சிந்து ஆகிய இரு மாகாணங்களில் முஸ்லிம் லீகும் மற்ற இடங்களில் காங்கிரசும் வென்று ஆட்சி அமைத்தன. சென்னையில் காங்கிரஸ் அமைச்சரவை உருவானது;  ஆந்திரகேசரி டி.பிரகாசம் முதன்மை அமைச்சராக ஆனார். அவர் ஆட்சிக்கு வந்ததும் அத்தனை அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

1946 ஆகஸ்ட் 16 அன்று முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளாக அனுசரித்தது. அப்போது முகம்மது அலி ஜின்னா சொன்னார்,  “இன்று முதல் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு விடைகொடுத்து விட்டோம்”.

இதனால், நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை பெரிதாக உருவெடுத்ததோடு, இரு சாராரும் வன்முறைக்கு ஆளாக நேர்ந்தது. இந்தக் கலவரங்களைத் தூண்டிய தலைவர்கள் பாதிக்கப்படவில்லை. மிக ஏழை சாதாரண உழைப்பாளிகள் தான் பாதிக்கப்பட்டார்கள். கல்கத்தா நகரம் மதக் கலவரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. அங்கு முஸ்லிம் லீக் ஆட்சியில் இருந்ததால் அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த முஸ்லிம்கள் இரக்கமற்ற முறையில் இந்துக்களைத் தாக்கி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கினர்.

முஸ்லிம் லீக் ‘நேரடி நடவடிக்கை நாள்’ என அனுசரித்த ஆகஸ்ட் 16-ஐ கல்கத்தா அரசு விடுமுறை அறிவித்ததால் கலவரம் உச்ச கட்டத்தை எட்டியது. கலவரத்தை போலீஸ் வேடிக்கை பார்த்தது. முதன்மை அமைச்சர் ஷுஹ்ரவர்த்தி வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததோடு பாரபட்சமாகவும் நடந்து கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களும் எதிர்த் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டனர். கல்கத்தா தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. வங்காளத்தின் தலைநகர் கல்கத்தாவில் நடைபெற்று வந்த வன்முறை கலவரம் பீகாருக்கும் பரவியது. வங்காளத்தின் நவகாளி முதலான பகுதிகளுக்கும் பரவியது. அங்கெல்லாம் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அங்கிருந்த முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்து அகதிகளாக ஓடும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இப்படி நிலைமை கட்டுக்கடங்காமல் போன பின்புதான் முதல்வராக இருந்த ஷுஹ்ரவர்த்திக்கு நடப்பது என்ன என்பதே புரிந்தது. போலீசுக்கு அதற்குப் பிறகுதான் கலவரத்தை அடக்க அதிகாரம் கொடுத்தனர். பின்னர் இரு நாட்களில் கலவரம் அடக்கப்பட்டது. கல்கத்தாவில் ஆகஸ்டில் நடந்த வெறிச் செயல்கள் அக்டோபரில் நவகாளியில் தொடங்கியது.

அங்கு நடந்த அக்கிரமங்களைப் பட்டியலிட்டால் அதுவே பல நூறு பக்கங்கள் எழுதலாம். கொடுமை, கொடுமை,  அத்தனை கொடுமை அங்கு அரங்கேறியது.

நாலாபுறமும் கலவரம் கட்டுக்கடங்காமல் போனதும், அதனைத் தொடங்கியவர்களாலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் தலைவர்கள் திணறினார்கள். மத்தியில் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முதலில் மறுத்த முகம்மது அலி ஜின்னா பின்னர் ஒப்புக் கொண்டார்.

அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சர்கள் ஆட்சியில் சேர்ந்தார்கள். அப்படிச் சேர்ந்ததும் அமைச்சரவையில் மிக முக்கியமான துறைகள் தங்கள் வசம் இருக்க வேண்டுமென வற்புறுத்தினார்கள். ஜவஹர்லால் நேரு பிரதமராகவும், வல்லபாய் படேல் உள்துறை அமைச்சராகவும் இருந்தார்கள். இந்த நிலையில் முஸ்லிம் லீக் உள்துறை அமைச்சகம் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்றனர்.

ஆனால் சர்தார் வல்லபாய் படேல் உள்துறையை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். பதவி ஆசையினால் அன்று; உள்துறை இந்திய நாட்டின் மக்களின் பாதுகாப்பு நல்வாழ்வு இவற்றுக்கு உறுதி அளிக்கவேண்டிய துறை. அதுவரை மதக் கலவரங்கள் நடந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீள்குடியமர்த்தும் பணிகளைத் துரிதமாக நடத்த வேண்டிய முக்கியமான பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வல்லபாய் படேல், அந்த பணிகள் மக்கள் நலன்காக்க முழுமையாக நிறைவேறும்வரை எந்தவித மாற்றமும் செய்யக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

ஜவஹர்லால் நேருவும் அப்படி இடையில் துறைகளைப் பிரித்துப் புதிதாக சேர்ந்துகொண்ட முஸ்லிம் லீக் அமைச்சர்களிடம் அளிக்க மறுத்துவிட்டார். விஷயம் வைஸ்ராயிடம் சென்றது, அவரும் லீக்கின் கோரிக்கையை ஆதரித்து சர்தார் வல்லபாய் படேலிடம் இருந்த உள்துறையை கைவிடும்படி கோரினார்.

தன் இலாகாவை இழப்பதினும் பதவியையே இழப்பேன் என்று உறுதியாக இருந்தார் படேல். இவருடைய உறுதியைப் பார்த்து வைஸ்ராய் தன் கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். லீக் அமைச்சர் நிதிஅமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

படேலின் இந்த செயல் உயர் மட்டத்தில் விவாதத்திற்கு வந்தது. உள்துறையை விட மிக முக்கியமான துறையான நிதித்துறையை படேல் ஏற்றுக் கொண்டு உள்துறையை விட்டுக் கொடுத்திருக்கலாம் என்று சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள்கூட அபிப்பிராயம் தெரிவித்தனர். மிகவும் நெருக்கடியான நேரத்தில் சட்டம் அமைதியைப் பாதுகாத்து மக்கள் அமைதியாக வாழ வழிவகை செய்துகொடுக்க வேண்டிய உள்துறையே தனக்கு முக்கியம் என்றார் படேல்.

படேல் இப்படிப்பட்ட உறுதியான நிலையை எடுத்தது மிகவும் சரியென்பது, நாட்டில் பின்னர் நடந்த செயல்கள் உறுதிப்படுத்திவிட்டன. அதுநாள் வரை பாரத தேசத்தை இந்தியா- பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கவேண்டுமென்கிற ‘இருதேசக் கொள்கையில்’ உறுதியாக இருந்த முஸ்லிம் லீக், அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இந்திய மத்திய அரசாங்க நிர்வாகத்தினுள் புகுந்துகொண்டு, அதை செயல்படாமல் செய்யவும், இரு சமூகத்தாரும் சுமுகமாக அமைதியோடு வாழ முடியாது என்பதை உலகுக்கு மெய்ப்பித்துக் காட்டமுமே அவர்கள் அரசாங்கத்தில் பங்குபெற வருகிறார்கள் என படேல் கருதினார்.

படேல் அவர்களின் கருத்து மெய்ப்படும்படியாக காரியங்கள் நடந்தேறின. போக்குவரத்து துறையையும், வர்த்தகத் துறையையும், நிதி இலகாவையும் தங்கள் கைகளில் வைத்துக் கொண்டு, லீக் அமைச்சர்கள் அந்தத் துறையில் பாகுபாடு காட்டி மக்களைப் பிரிவினைக்குத் தூண்டி துன்பம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். இடைக்கால சர்க்கார் பூசலுக்கிடையில் தான் நடந்து வந்தது.

கிழக்கு வங்காளத்தில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. 1946 அக்டோபரில் காந்திஜி கல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து நவம்பர் 6-ஆம் தேதி நவகாளிக்குப் புறப்பட்டார். நவகாளி பகுதியில் இருந்த கிராமங்களுக்கெல்லாம் காந்திஜி சென்று அங்கு ஏற்பட்டிருந்த கலவரத்தின் பின்விளைவுகளைப் பார்த்துக் கண்ணீர் சிந்தினார். குடிசைகள் எரிந்து கிடந்தன; பள்ளிச் சிறுவர்கள் உட்பட ஏராளமான குழந்தைகளும் பெண்களும் வீடிழந்து, வாசலிழந்து, கற்பை இழந்து, வாழ்வாதாரமில்லாமல் தெருவில் நின்ற காட்சிகள் அவர் நெஞ்சைப் பிழிந்தன.

இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்ட காந்திஜி தன்னுடன் வந்துகொண்டிருந்த தொண்டர்களை பாதிக்கப்பட்ட கிராமங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒருவர் வீதம் சென்று அங்கெல்லாம் நிவாரணப் பணிகளைச் செய்யப் பணித்தார். அங்கு அவர்கள் உயிரை இழக்க நேர்ந்தாலும் இறக்கத் தயாராக இருக்க வேண்டும், அப்படி இல்லாதவர்கள் ஊர் திரும்பலாம், தன்னுடன் வரத் தேவையில்லை என அறிவித்தார்.

ஒரு கூட்டத்தில் அவர் சொன்னார் “நமக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தவனுக்கு இரண்டு கிளாஸ் தண்ணீர் கொடுப்பதில் ஒன்றும் பெருமையில்லை; தீமை செய்தவனுக்கும் நன்மை செய்வதே அவனுக்குப் பெருமை. அதைத் தான் நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

காந்திஜியின் 77-ஆம் வயதில் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைத்தார். ஒவ்வொரு நாளும் காலை நடந்தோ, அல்லது ஆறுகளைப் படகுகள் மூலம் கடந்தோ பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, அந்த மக்களுக்கு ஆறுதல் கூறி மறுவாழ்வளிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆங்காங்கே நிறுவப் பட்டிருந்த அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆறுதல் கூறுவார். மக்கள் சிந்தும் கண்ணீரைத் துடைப்பதையே தன் பணியாக மேற்கொண்டார்.”

1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று காந்திஜி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தற்காலிக அரசின் பிரதமர் ஜவஹர்லால் நேரு தம்மை சந்திக்க நவகாளிக்கு வருவதாக அவர் சொன்னார். அவர் அறிவித்தபடி நேருவும், ஆச்சார்ய ஜே.பி.கிருபளானியும் நவகாளிக்குச் சென்று காந்திஜியிடம் கலந்தாலோசித்தனர். அப்போது ஜே.பி.கிருபளானிதான் காங்கிரசின் தலைவராக இருந்தவர்.

காந்திஜியின் நவகாளி யாத்திரையைக் குறிப்பிடும்போதெல்லாம் அவர் ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு நடப்பது போன்ற பின்புறமிருந்து வரையப்பட்ட ஒரு படம் வெளியாகும். அந்த சித்திரத்தை அங்கு நேரில் கண்டு வரைந்தவர் தஞ்சையைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் திரு. அனந்தராமன் என்பார்.

அவரும் எழுத்தாளர் சாவியும் கல்கி பத்திரிகை சார்பில் நவகாளிக்குச் சென்று அங்கு காந்திஜியை சந்தித்து, அங்கு இருந்த நிலைமையை கல்கிக்கு எழுதி வந்தனர். கார்ட்டூனிஸ்ட் அனந்தராமன் அந்தப் படத்தை காந்திஜியிடம் காட்டி அவர் அதில் கையெழுத்திட்டுத் தரவேண்டுமென்று கேட்டபோது காந்திஜி, என்னை ஏன் பின்புறத்திலிருந்து பார்ப்பதுபோல வரைந்திருக்கிறாய் என்றாராம். அதற்கு கார்ட்டூனிஸ்ட் ‘காந்திஜி இந்தியாவின் விடியலை நோக்கி  நடக்கிறார்’ என்று தலைப்பு கொடுப்பேன் என்றாராம்.

காந்திஜி கையெழுத்திட்ட அந்த ஒரிஜினல் படம் இன்றும் கார்ட்டூனிஸ்ட் அனந்தராமனிடம் இருக்கிறது. வயது முதிர்ந்த நிலையில் கார்ட்டூனிஸ்ட் திரு. அனந்தராமன் இப்போதும் மிக எளிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார். அவரிடம் கொட்டிக்கிடக்கும் செல்வம் எல்லாம் அவர் வரைந்த உலகத் தலைவர்கள் பற்றிய கார்ட்டூன்கள் தான். அதை உரியவர்களிடம் அளிக்க விரும்பினாலும் இன்னும் அதை கொடுத்து, தனது இறுதி காலத்திலாவது சற்று வசதியாக இருக்கமுடியாமல் இருக்கிறார்.

அவருடைய பெருமையை அறிந்து தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குனர் திரு இரா.குணசேகரன் திருச்சியில் அவருடைய கார்ட்டூன்களை ஒரு காட்சியில் பொது மக்கள் பார்வைக்கு வைத்தார். பூண்டி கல்விக்காவலர் திரு துணசி அய்யா வாண்டையார்  திரு. அனந்தராமனை  தன் கல்லூரிக்கு அழைத்து மரியாதை செய்தார். தஞ்சை ரோட்டரி சங்கங்களில் ஒன்று அவருக்குப் பாராட்டு விழா நடத்தியது. ஆனால் இன்றும் அவர் குடத்திலிட்ட விளக்காய் தன் முதுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்.

1947 ஜனவர் 2-ஆம் நாள் காந்திஜி, பீகாம்பூர் எனுமிடத்திலிருந்து புறப்பட்டுத் தடியை ஊன்றிக் கொண்டு தன்னுடைய புகழ்பெற்ற ‘நவகாளி யாத்திரையை’த் தொடங்கினார். இது ஒரு புனித யாத்திரை என்பதால் காலில் செருப்பு அணியவில்லை என்றார் அவர்.

அவர் பயணம் செய்த வழிநெடுக போரின் அழிவுபோன்ற மதக் கலவரத்தின் பேரழிவுகளைப் பார்த்துக் கொண்டு கிராமம் கிராமமாக நடந்தார். அப்படி நடந்துபோன போது பல்லா எனும் ஊரில் ஒரு பெண் கேட்டார், “தான் கற்பழிக்கப்படும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்றிருக்கும் நிலையில் ஒரு பெண் என்ன செய்யவேண்டும்? சரணாகதி அடைய வேண்டுமா?” என்றாள்.

அதற்கு காந்திஜி சொன்னார்: “சரணடைவது என்பதே என் அகராதியில் இல்லை. பலாத்காரத்துக்கு இணங்காத மன உறுதியுடன் தன் உயிரைக்கூட விட்டுவிட அவள் தயாராக இருக்க வேண்டும். அந்த சூழ்நிலையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய மனோ தைரியம் இருக்கிறது என்பதை அறிந்த மாத்திரத்தில் அவளை அந்த சூழ்நிலைக்கு ஆளாக்கிய ஆண் பலஹீனனாகிவிடுவான்” என்றார் காந்திஜி.

பின்னர் பிரிட்டிஷ் பிரதமர் கிளெமண்ட் ஆட்லி, நேரு, ஜின்னா ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்துப் பேசியபின் 1947-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி காமன்ஸ் சபையில் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் 1948 ஜூன் மாதம் இந்தியாவின் ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்புவித்துவிட்டு பிரிட்டிஷார் அங்கிருந்து வெளியேறி விடுவர் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பினை அடுத்து, அப்போதைய வைஸ்ராய் வேவலுக்குப் பதிலாக விக்டோரியா மகாராணியின் கொள்ளுப் பேரனும், கடற்படை தளபதியுமான லார்ட் மவுண்ட் பேட்டன் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(கர்ஜனை தொடர்கிறது)

ஸ்வதந்திர கர்ஜனை – 36

-தஞ்சை வெ.கோபாலன்

காண்க: பகுதி- 35

இந்திய தேசிய ராணுவத்தின் போர்முனையில் நேதாஜி

 பாகம்-2 :பகுதி 26

தற்காலிக இந்திய சுதந்திர சர்க்கார் பிரகடனம்

முந்தைய சில பகுதிகளில் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது  தமிழகத்தில் நடந்த ஒருசில நிகழ்ச்சிகள் பற்றி பார்த்தோம். இவை இந்த நாடு முழுதும் நடந்த புரட்சி எப்படி நடந்தது என்பதை விளக்குவதற்காக நமக்குப் பழக்கமான ஊர்களில் நடந்தவற்றை மட்டும் எடுத்துக் காட்டினோம். இனி நாட்டின் நிலை என்ன, காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன, பிரிட்டிஷ் பேரரசின் திட்டங்கள் என்ன என்பதைப் பற்றியும் சிறிது பார்க்கலாம்.

1942 ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் நாடு பற்றி எரிந்து கொண்டிருந்தது. முன்பு எப்போதும் இதுமாதிரியான கலவரங்கள் நடந்ததில்லை என்பதால் பிரிட்டிஷ் அரசு திணறிக் கொண்டிருந்தது.

1943-ஆம் வருஷம் பிறந்தது. ஆகாகான் மாளிகையில் சிறைவைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி அங்கு 21 நாள் உண்ணாவிரதத்தை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கினார். நாட்டில் நிலவுகின்ற அசாதாரண நிலைமைகள் அனைத்துக்கும் பிரிட்டிஷ் அரசாங்கமே காரணம் என்று காந்திஜி தில்லி சர்க்கார் மீது குற்றம் சாட்டினார்.

காந்திஜியின் உண்ணாவிரதம் தொடர்ந்தது. வங்கத்தைச் சேர்ந்த தேசபக்தர் டாக்டர் பி.சி.ராய் காந்திஜியை ஒரு டாக்டர்கள் குழுவுடன் தினமும் கவனித்துக் கொண்டு வந்தார்.  நாளாக ஆக காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்து வந்தது என்பதை டாக்டர்கள் அறிவித்தார்கள்.

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபடும் தேசபக்தர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு கையாண்ட முறைகளைக் கண்டித்து வைசிராயின் நிர்வாக சபை உறுப்பினர்கள் சர் ஹெச்.பி.மோடி, என்.ஆர்.சர்க்கார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டார்கள்.

பிப்ரவரி 18, உண்ணாவிரதத்தின் ஒன்பதாம் நாள் காந்திஜியின் உடல்நிலை மோசமடைந்தது. இன்னும் 12 நாட்கள் அவர் உண்ணாவிரதத்தைத் தொடரவேண்டும் எனும் நிலையில், அவரால் தாக்கு பிடிக்கமுடியுமா என்று டாக்டர்கள் கவலை அடைந்தனர்.

அப்படியேதும் காந்திஜியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்குப் பின் ஒரு நிமிஷம்கூட பிரிட்டிஷார் இந்த நாட்டில் இருக்க முடியாது. பிப்ரவரி 21-இல் அவர் நிலைமை மோசமடைந்து விட்டது. உண்ணாவிரதத்தைக் கைவிடாவிட்டால் அவர் உயிர் பிழைக்கமுடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.

அரசாங்கமும் எதற்கும் இருக்கட்டும் என்று ராணுவத்தையும், போலீசையும் தயார் நிலையில் வைத்திருந்தது. ஒரு கேலிக்கூத்து, ஒருக்கால் காந்திஜி இறந்துவிட்டால் அவரை எரிக்க சந்தனக் கட்டைகளைக் கூட வாங்கி தயார்நிலையில் வைத்திருந்தார்களாம்.

74 வயதைக் கடந்த காந்திஜி தன்னுடைய மன உறுதியால் அந்த 21 நாள் உண்ணா நோன்பை முடித்து விட்டார். உலகமே ஆச்சரியத்துடன் பார்த்தது காந்திஜியின் உண்ணாவிரதத்தை. மிகுந்த எதிர்பார்ப்புடன் சந்தனக் கட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருந்த பிரிட்டிஷ் அரசுக்கு பெருத்த ஏமாற்றம்.

1944-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி அன்னை கஸ்தூரிபாய் ஆகாகான் அரண்மனையில் காந்திஜியின் மடியில் தலைவைத்து தன் கடைசி மூச்சை விட்டுவிட்டார். மறுநாள் காந்திஜியின் குமாரர் தேவதாஸ் காந்தி அன்னையின் சிதைக்கு தீமூட்டினார்.

1944 மே மாதம் 6-ஆம் தேதி காந்திஜி விடுதலையானார். அவர் ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்படும்போது அவருடன் மகாதேவ தேசாயும், கஸ்தூரிபாயும் இருந்தனர். விடுதலையாகி வெளியே வரும்போது அவ்விருவருடைய சமாதிகள் அந்த மாளிகையின் தோட்டத்தில் இருக்க, இவர் மட்டும் வெளியே வந்தார்.

பின் ஜூலை மாதத்தில் தேசபக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார்.  ‘தலைமறைவாக ஒளிந்து வாழும் தேசபக்தர்கள் வெளியில் வரவேண்டும், கைது செய்ய நேர்ந்தால் தைரியத்துடன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்’ என்று அறிவுரை கூறியிருந்தார்.

அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்திஜி முகமது அலி ஜின்னாவை பம்பாயில் மலபார் ஹில்ஸ் பகுதியில் இருந்த அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். அந்த சந்திப்பில் ஜின்னா சொன்னார்:

 “முஸ்லீம்களும் இந்துக்களும் வெவ்வேறு இனத்தவர்கள். தேசத்தை இரு கூறாகப் பிளப்பதே சமரசத்துக்கான வழியாகும். அதுவும் பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்பாகவே பாகிஸ்தான் உருவாகிவிட வேண்டும்.”

அதற்கு காந்திஜி சொன்ன மறுமொழி:  “இந்த நாட்டில் மதம் மாறிய ஒரு கூட்டத்தாரும், அவர்களுடைய சந்ததியாரும் தாங்கள் வேறு வேறு தேசிய இனத்தவர்கள் என்று கூறிக்கொள்வது சரித்திரத்தில் தான் கண்டறியாத புதுமை” என்றார்.

இப்படியொரு பிரிவினை வாதம் இங்கு தோன்றி வேரோடி, நாட்டின் பிரிவினை வரை கொண்டு செல்லக் காரணமாய் இருந்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் என்பதை அனைவரும் அறிவர்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், அப்படி ஒருக்கால் இந்த நாட்டைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டால் இங்கு வாழும் இவ்விரு பிரிவினரும் ஒற்றுமையின்றி அடித்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியே நல்ல ஆட்சி என்று நினைக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட சூழ்ச்சி வலையைப் பின்னி வைத்தனர்.

***

இந்த இடத்தில் காந்திஜியையும் முகமது அலி ஜின்னாவையும் இப்படியே விட்டுவிட்டு,  இந்திய தேசிய ராணுவம் அமைத்து ஜப்பானின் உதவியுடன் இந்தியா நோக்கி  ‘தில்லி சலோ’ என்று வந்து கொண்டிருந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களைச் சிறிது பார்க்கலாம்.

உலக அரங்கில் யுத்த களத்தில் ஜப்பான் கிழக்காசிய பிரதேசத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்று முன்னேறிக் கொண்டிருந்தது. பிரிட்டிஷாரின் படைகளில் சேர்ந்து யுத்த களத்தில் பிரிட்டிஷாருக்காகப் போராடிய இந்திய போர் வீரர்கள் ஆங்காங்கே தனித்து விடப்பட்டு விட்டனர். இப்படி இந்திய வீரர்களை தவிக்க விட்டுவிட்டு பிரிட்டிஷ் படைகள் பின்வாங்கிப் போனதைக் கண்டு நேதாஜி வருந்தினார். அப்படி பிரிட்டிஷ் படையிலிருந்து அநாதைகளாகிப் போன இந்திய வீரர்களை ஒன்று திரட்டி அவர்களை இந்திய தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கச் செய்தார்.

நேதாஜியின் ஐ.என்.ஏ.வுக்கு ஜெர்மனியும், ஜப்பானும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலை அளித்தனர். ஜெர்மனி சென்றிருந்த நேதாஜி அங்கிருந்து ஜப்பானில் டோக்கியோ வந்தார். அங்கு அவருக்கு கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. அங்கிருந்து மலேயா, பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

சென்ற இடங்களில் எல்லாம் இவருக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்தது. ஜப்பானியர்கள், சீனர்கள், மலேயாக்காரர்கள், பர்மியர்கள், இந்தியர்கள் என்று இவருக்குக் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போனது.

இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜப்பானில் வசித்து வந்த ராஷ் பிஹாரி கோஷ் என்பவரை இவர் சந்தித்து அவரிடமிருந்து  ‘இந்தியா லீக்’ எனும் அமைப்பைத் தனதாக்கிக் கொண்டார். இப்படி பலதரப்பட்டவர்களையும் சேர்த்து  ‘இந்திய தேசிய ராணுவம்’ ஒன்றை அமைத்து, அதில் காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், ஆசாத் பிரிகேட், ஜான்சிராணி பிரிவு என்று ராணுவ அமைப்புகளை உருவாக்கினார்.

ஜான்சிராணி பிரிகேட் பெண்களுக்கான படை, அதற்குச் சென்னையைச் சேர்ந்த கேப்டன் லக்ஷ்மி என்பார் தலைவராக இருந்தார். இவர் ஒரு மருத்துவர். பின்னாளில் ஷேகல் என்பவரை மணந்து லட்சுமி ஷேகல் என்று கான்பூரில் வாழ்ந்து, நமது அப்துல் கலாமை எதிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்று தோற்றுப் போனார். இவரது மகள் சுபாஷினி அலி என்பார் மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1943-இல் அக்டோபர் மாதம் இந்தியாவை சுதந்திர நாடாக அன்னிய மண்ணில் பிரகடனப் படுத்தினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அந்த அரசுக்கு நேதாஜி தான் பிரதம மந்திரி.

அப்படி அந்நிய மண்ணில் உருவான இந்திய சர்க்கார் பிரிட்டன் மீதும் அமெரிக்கா மீதும் யுத்தப் பிரகடனம் செய்தனர். அந்த சுதந்திர இந்திய சர்க்காரை ஜப்பான், பர்மா, பிலிப்பைன்ஸ், மங்கோலியா, சயாம், குரோஷியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. இந்த சர்க்காரின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரிலிருந்து பர்மாவுக்கு மாற்றப்பட்டது.

யுத்தத்தில் ஜப்பான் அந்தமான் நிக்கோபார் தீவுகளை வென்றது அவற்றை ஜப்பான் இந்திய சுதந்திர சர்க்காரிடம் ஒப்படைத்தது. 1943-ஆம் வருஷம் டிசம்பர் 30-ஆம் தேதி அந்தமான் தீவுக்கு விஜயம் செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அங்கு சுதந்திர இந்திய தேசிய கொடியை ஏற்றி, ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டு, இந்தியா இருக்கும் திசை நோக்கி நின்றுகொண்டு ஒரு சுதந்திர தின உரையாற்றினார். வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படும் உரை அது.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிப்பாய்களும் அதிகாரிகளுமாக இருந்தனர். ஆங்காங்கே ராணுவ முகாம்கள் ஜப்பானியர் வெற்றி கண்ட ஊர்களில் எல்லாம் அமைக்கப்பட்டன. செலவுக்கு நிதி தேவைப்பட்டது என்றதும் நேதாஜி ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகளாவிய இந்திய மக்கள் அனைவரும் வாரிவாரி வழங்கினர்.

சொந்தமாக சுதந்திர இந்திய சர்க்கார் ஒரு வங்கியைத் தொடங்குவதற்காக ஒரு இஸ்லாமியர் ஐம்பது லட்சம் ரூபாயை நன்கொடை கொடுத்தார். இந்தியப் பெண்கள் மலேயா, சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களில் தங்க நகைகளை ஏராளமாக வாரி வழங்கினர்.

நேதாஜி செல்லுமிடங்களில் எல்லாம் உற்சாக வரவேற்பு கிடைத்தது. அவருக்குப் போடப்பட்ட மாலையொன்று பன்னிரெண்டு லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1945-இல் இவர் ஆரம்பித்த வங்கியில் அப்போது முப்பத்தியாறு கோடிக்கும் மேல் இருந்தது. நேதாஜி சிங்கப்பூர், பர்மா ஆகிய இடங்களிலிருந்து ரேடியோ மூலம் இந்திய மக்களுக்கு உரையாற்றினார். ஐ.என்.ஏ.வுக்கு ஆயுதங்களை ஜப்பானிலிருந்து விலைக்கு வாங்கினார்.  ‘ஜெய் ஹிந்த்’ என்பது ஐ.என்.ஏ.வின் கோஷமாக இருந்தது.

ஐ.என்.ஏ, இந்தியாவின் இம்பால், மணிப்பூர், கொஹிமா ஆகிய இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு முன்னேறியது.

இதற்கிடையில் ஜப்பான் போரில் தொய்வு ஏற்பட நேதாஜி 1945-ஆம் வருஷம் ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஜப்பான் செல்வதற்காக விமானத்தில் பயணம் செய்தார். அந்த விமானம் 1945 ஆகஸ்ட் 18-இல் பார்மோசா தீவின் தலைநகருக்கு அருகில் நொருங்கி விழுந்து அவரை பலிவாங்கிவிட்டது. அவருடன் பயணம் செய்த ஐ.என்.ஏ.வின் தளபதி கர்னல் ஹபிபுர் ரஹ்மான் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறார். என்றாலும் இந்தியாவில் ஒரு பகுதியினர் நேதாஜி உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்திய தேசிய ராணுவத்தின் ஜெனரலாக பொறுப்பேற்றுக் கொண்டு தேசமக்களுக்கு ஆற்றிய உரை இது:

“தோழர்களே, ராணுவ அதிகாரிகளே, வீரர்களே! உங்களுடைய அயராத உழைப்பினாலும், ஆதரவினாலும், அசைக்கமுடியாத நம்பிக்கையினாலும், இந்திய தேசிய ராணுவம் இந்தியாவை சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்துவதற்கான ஒரு ஆயுதமாக இன்று உருவெடுத்திருக்கிறது.

‘தில்லி சலோ’  (தில்லியை நோக்கி நட) எனும் மந்திரத்தை நம் உதடுகள் முணுமுணுக்க நாம் போராடி முன்னேறிச் சென்று டெல்லியிலுள்ள வைஸ்ராய் மாளிகையில் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு, பழமை வாய்ந்த தலைநகராம் தில்லி செங்கோட்டையில் நமது இந்த இந்திய தேசிய ராணுவத்தின் அணிவகுப்பை நடத்துவோம்.”

தற்காலிக இந்திய சர்க்கார் ஆசாத் ஹிந்த் 1943 அக்டோபர் 21-இல் துவக்கப்பட்டது. இப்படி இந்த இந்திய தற்காலிக சுதந்திர சர்க்கார் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை சிங்கப்பூரிலுள்ள சாத்தே சினிமா கட்டடத்தில் கிழக்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் பிரகடனம் செய்யப்பட்டது. இதற்கான பிரகடனத்தில் இந்திய சுதந்திர சர்க்காரின் பிரதம மந்திரியாகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நேதாஜி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டார்.

அந்தப் பிரகடனத்தின் ஆங்கில வரிகளை அப்படியே இங்கே தருகிறோம்:

 “In the name of God, I take this sacred oath that to liberate India and the thirty eight crores of my countrymen, I, Subash Chandra Bose, will continue this sacred War of Freedom until the last breath of my life.

I shall always remain a servant of India and look after the welfare of the 38 crores of Indian brothers and sisters. This shall be for me my highest duty.

Even afer winning freedom, I will always be prepared to shed the last drop of my blood for the preservation of India’s freedom.”

-மேற்கண்ட நேதாஜியின் உறுதிமொழியுடன் இந்தப் பகுதியை நிறைவு செய்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

(கர்ஜனை தொடர்கிறது)

%d bloggers like this: