Category Archives: வைணவப் பெரியார்

அரிய ஆச்சார்யன் ராமானுஜர்

-காஞ்சி பரமாச்சாரியார்

Ramanuja 11

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர்

(திருநட்சத்திரம்: சித்திரை – திருவாதிரை)
(ஜென்மதின ஆயிரமாவது வருஷம் துவக்கம்:  10.05.2016)

குரு பரம்பரைக் கதைகள் என்று வைஷ்ணவர்கள் போற்றிப் பாராயணம் பண்ணும் விருத்தாந்தங்களில் நம் நெஞ்சைத் தொடுகிற ஏராளமான குருபக்தி சரித்திரங்களைப் பார்க்கிறோம். பெருமாள் கோயில்களிலும் பாருங்கள், ஆழ்வார்கள் சன்னிதி, முக்கியமாக ஆண்டாள் சன்னிதி; தென்கலைக் கோயிலானால் மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாசார்யார் முதலியவர்களின் சன்னிதி, வடகலைக் கோயிலானால் வேதாந்த தேசிகரின் சன்னிதி ஆகியவற்றில் எத்தனை பக்தியோடு, விமரிசையோடு ஆராதனை நடத்துகிறார்கள்?

குரு ராமானுஜருடைய ஜன்ம ஸ்தலமான பெரும்பூதூரில் பெருமாளே இரண்டாம் பக்ஷம்தான். ‘உடையவர், உடையவர்’ என்று தங்களுடைய ஆசார்ய புருஷருக்கு ஏற்றம் தந்து, அவருக்குத்தான் நித்யப்படி பூஜை, பத்து நாள் உத்சவமெல்லாம் ரொம்பவும் பெரிய ஸ்கேலில் செய்கிறார்கள். உடையவர் சந்நிதிக்கு மேலே தங்கத்திலேயே விமானம் வேய்ந்திருக்கிறார்கள்.

ராமானுஜருக்கு முன்னும் பின்னும் வந்த சம்பிரதாய முக்கியஸ்தர்களான நாதமுனிகள், ஆளவந்தார், மணக்கால் நம்பி, திருகச்சி நம்பி, கூரத்தாழ்வார், பட்டர், நஞ்சீயர் முதலான பலருக்கு விக்ரஹங்கள், பூஜையெல்லாம் அநேக ஆலயங்களில் பார்க்கிறோம்.

.
ராமானுஜருடைய நேர் சிஷ்யர்கள் அவரிடம் வைத்திருந்த பக்தி அசாத்தியமானது. உயிரையே கொடுப்பது என்பதற்கேற்க, கூரத்தாழ்வார் என்பவர் ராமானுஜருக்காகப் பிராணத் தியாகமும் பண்ணத் தயாராயிருந்திருக்கிறார்.

இவர் காஞ்சீபுரத்துக்குப் பக்கத்திலுள்ள கூரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரியாதை வாசகத்துக்குப் பெயரெடுத்த வைஷ்ணவர்களே பக்தி முதிர்ச்சியில், தாங்கள் ரொம்பவும் பெரியவராக நினைக்கிற வேதாந்த தேசிகரை “தேசிகன்” என்று ஒருமையில் அழைப்பதாகச் சொன்னேனல்லவா?அதுபோலவே கூரத்தாழ்வாரைக் “கூரத்தாழ்வான்” என்றுதான் சொல்வார்கள். வெறுமனே ‘ஆழ்வான்’ என்று வைஷ்ணவர்கள் சொன்னாலே அது கூரத்தாழ்வார்தான். (‘ஆழ்வார்’என்று ‘ர்’போட்டுச் சொன்னால் அது நம்மாழ்வார்தான்)
.
ராமானுஜர் காலத்தில் ராஜாவாக இருந்த சோழன் தீவிர சிவ பக்தன். ராமானுஜரோ, “விஷ்ணு ஒருத்தருக்குத் தான் “ஏகாந்தி”களாகப் பூஜை பண்ண வேண்டும். சிவனுக்குப் பண்ணக் கூடாது”என்கிற சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். அதனால் சோழராஜா, “எந்த ஆதாரத்தைக் கொண்டு விஷ்ணு தவிர சிவன் முதலான தேவதாந்தரங்களை வழிபடக் கூடாது என்று நிர்த்தாரணம் பண்ணுகிறீர்?” என்று ராமானுஜரைக் கேட்டு வாதம் நடத்துவதற்காக ஒரு வித்வத் சதசைக் கூட்டினான். அப்போது கங்கை கொண்ட சோழபுரம் ராஜ்யத் தலைநகராயிருந்தது. அங்கே அந்த சதஸைக் கூட்ட நிச்சயித்து, ராமாநுஜாசார்யாரை அழைத்துக்கொண்டு வருவதற்காக ஆள் அனுப்பினான். அப்போது அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்தார்.
 .
ராஜ சேவகரைப் பார்த்ததும் கூரத்தாழ்வாருக்கு விசாரம் உண்டாய்விட்டது. ‘ராஜாவோ சைவன். அவனே நிறைய சிவாலயங்கள் கட்டியிருக்கிறான். நம்முடைய குருவானால் சிவாராதனை கூடாது என்கிறார். அதனால் அவருக்கு இவரிடம் துவேஷம் இருக்கும். இப்போது வித்வத் சதஸ் என்று சொல்லி அழைத்துக்கொண்டு போய் இவரை என்ன பண்ணுவானோ? ராஜாவானதால் என்னவும் பண்ணிவிட முடியும். நம்முடைய அருமை ஆசார்யருக்கு அவன் ப்ராணஹானி விளைவித்துவிட்டால் என்ன செய்வது?’ என்று ரொம்பவும் பயமும் கவலையும்பட்டார்.
 .
அப்போதுதான் அவர் குருவுக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்ய முன்வந்தது. அதாவது குருவின் காஷாயத்தைத் தாம் உடுத்திக்கொண்டு, தம்மையே ராமானுஜாசார்யார் என்று சொல்லிக்கொண்டு ராஜசபைக்குப் போய்விடுவது என்று தீர்மானித்து விட்டார். “வருகிற ஆபத்து எனக்கே வரட்டும். தங்களுக்காக இந்த சேவை செய்கிற பாக்யத்தை எனக்கு மறுக்காமல் அருள வேண்டும்” என்று ராமானுஜரிடம் பிரார்த்தித்து, அவரை சம்மதிக்கப் பண்ணினார்.
.
ராமானுஜர் வெள்ளை வேஷ்டி கட்டிக்கொண்டு, சோழ ராஜ்யத்தையே விட்டு, கர்நாடகத்திலுள்ள மேல் கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குப் போய்விட்டார். அங்கே இப்போதும் ”வெள்ளை சாத்துப்படி” என்று அவருக்கு உத்சவம் நடத்துகிறார்கள்.கூரத்தாழ்வார் காஷாயம் தரித்துக்கொண்டு ராமானுஜராக கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போனார். அங்கே வித்வத் சதஸ் நடந்தது. இவர் சிவபரத்வத்தை ஒப்புக்கொள்ள மறுத்தார். அதனால் இவர் நினைத்தப்படியே ராஜ தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ராஜா கொலைத் தண்டனை தரவில்லை. இவருடைய கண்ணைப் பிடுங்கும்படியாக உத்தரவு போட்டுவிட்டான்.
.
குருவுக்கு ஏற்பட இருந்த இந்த கொடுமை நமக்கு வாய்த்ததே என்று கூரத்தாழ்வார் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். குருடராக ஆனார். அப்புறம் அந்த ராஜா காலமான பின் ராமானுஜாசாரியார் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார். தமக்காக சிஷ்யர் கண்ணை இழந்துவிட்டாரே என்று துக்கப்பட்டார்.
.
ராமானுஜர் பிற்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்தபோதிலும், ஆரம்பத்தில் காஞ்சீபுரத்தில் வசித்துக்கொண்டு வரதராஜ சுவாமிக்குத்தான் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டு, அவரையே இஷ்ட தெய்வமாக உபாசித்துவந்தார். ரங்கநாதர் ஆலயத்தின் ஆராதனை கிரமங்களை அமைத்துக்கொடுத்து அங்கே இவர் இருந்த காலத்திலும் கூட வரதராஜாவிடம் ஒரு தனியான பற்று வைத்திருந்தார்.அதனால் இப்போது கூரத்தாழ்வாரிடம், “எனக்காக உன் கண் போயிற்று. அதனால் உனக்காகப் பார்வை மீள வேண்டும் என்று இல்லாவிட்டாலும் என் மனசு ஆறுவதற்காக வரதராஜாவை வேண்டிக்கணும்” என்றார்.
.
கூரத்தாழ்வாரும் அப்படியே காஞ்சீபுரம் பெருமாளிடம் ஸ்தோத்ரம் பண்ணி வேண்டிக்கொண்டார். அவருக்கு த்ருஷ்டி திரும்பணும் என்று நிஜமாகவே ஆசை இல்லை. ‘எல்லா இந்த்ரியங்களையும் அடக்கினால்தான் ஈஸ்வர தரிசனம் கிடைக்கும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. நமக்கோ ராஜசிட்சை ரூபத்தில் கண் போனதில் இந்த ஒரு இந்திரியமாவது கண்டதைப் பார்த்துக் கெட்டுப் போகாமலிருக்கும் அநுக்ரஹம் கிடைத்திருக்கிறது. இதைப் மாற்றப் பண்ணி மறுபடியும் லோகக் காட்சி பார்த்து என்ன ஆக வேண்டும்?’ என்றே நினைத்தார்.

.

ஆனாலும், ‘ஆசார்யன் ஆக்ஞைக்குக் கீழ்படிந்தாகவும் வேண்டுமே! அவர் பச்சாத்தாபம் படும்படியாக விடக் கூடாதே!’என்று யோசித்தார். யோசித்து ஸ்வாமியிடம், “எனக்குப் பார்வையைத் தா. ஆனால் எல்லா விஷயங்களையும் நான் பார்க்க வேண்டியதில்லை. என் ஆசார்யனுடைய திவ்யரூபத்தை தர்சனம் பண்ணுவதற்கும், உன் மங்கள விக்ரஹத்தை தர்சிப்பதற்கும் மட்டுமே கண்ணுக்குச் சக்தி தா” என்று கேட்டார். வரதராஜாவும் அப்படியே வரம் கொடுத்தாராம்.

ஆதாரம்: தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
Advertisements

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11

-இரா.சத்தியப்பிரியன்

Ramanuja 11

காண்க: பகுதி- 10

பரமபதம்

ராமானுஜர் நமக்குக் காட்டிய வைனவநெறியானது உன்னதமானது. நமது சனாதான தர்மங்களின் அடிப்படையில் எழுப்பட்ட நெறியாகும்.

ஸ்ரீவைணவத்தில்ல் ஏழை -பணக்காரன், உயர்ந்த குடியில் பிறந்தவன்- தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை உரக்கக் கூறியது.

ஒருவிதத்தில் கிரிமிகண்டன் என்னும் மன்னன் நல்லது செய்தான் என்றுதான் கூறவேண்டும். அந்த மன்னனின் கொடியகரங்களிலிருந்து தப்பிக்கவே ராமானுஜர் சாளுக்கிய மட்டும் ஹொய்சாள மன்னர்களின் சமஸ்தானங்களுக்குச்சென்றார். இதன்மூலம் அங்குள்ள வைணவத் தலங்களில் நமது திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழங்கச் செய்தார்.

கிரிமிகண்டன் மறைந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு ராமானுஜர் தனது இருபத்திரண்டு வருட தலைமறைவு வாழ்க்கையை விட்டு தமிழகம் திரும்ப முடிவு செய்கிறார். திருவரங்கம் செல்ல நாள் குறிக்கிறார். மேல்கோட்டை வைணவப்பெருமக்கள் வருந்துகின்றனர். அவர்கள் வருத்தத்தைப் போக்க தன்னைப் போலவே ஒரு உலோகப்பிரதிமையை செய்து அதனுள் தனது சக்தி முழுவதைய்ம் பிரவேசிக்க செய்து அதனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார்.

ராமானுஜர் தனது சீடர்களுடன் கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் திருவரங்கத்தில் இருந்து வைணவ நெறியைத் தழைத்தோங்க செய்தார்.

இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.

அவருடைய பக்தர்கள் அவர்மேல்கொண்ட பக்தியை கணக்கிடவே முடியாது. அவரருளிச் செய்த நெறிகள் அவர்களது வாழ்வின் கோட்பாடுகளாகவே மாறியிருந்தன. அவரை தரிசித்தும். அவருடைய பொன்மொழிகளை கேட்டும் தங்கள் வாழ்க்கையை அவர்கள் மேம்படுத்திக் கொண்டனர். எனவே அவருடைய பிரிவைத் தாங்கும் சக்தியின்றி கதறி கண்ணீர் விட்டனர். ராமானுஜர் அவர்களைச் சமாதனம் செய்கிறார்.

“தேவரீர்! நீங்கள் சொல்வதெல்லாம் நிஜம். இருப்பினும் தங்கள் திருமேனியைப் பிரிந்திருக்கும் வேதனையை எங்களால் தாள முடியவில்லை. இன்னும் சில நாட்கள் எங்களுக்காக இந்தத் திருமேனியைக் காத்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டதற்கிணங்க மேலும் மூன்று நாட்கள் இந்தப் பூவுலகில் வாழ சம்மதிக்கிறார்.

பிறகு இந்த மூன்று நாட்களில் தமது சீடர்களுக்கு எழுபத்திநான்கு இரத்தினங்கள் என்று போற்றப்படும் உபதேசங்களை அருளிச் சென்றார்.

பின்னர் சீடர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க தனது திருமேனியை மூன்றே நாட்களுக்குள் சிலையாக வடிக்க அனுமதி அளிக்கிறார். மூன்றே நாட்களின் யதிராஜரின் சிலைவடிவம் சித்தமாகியது. பிறகு அந்தச் சிலைவடிவை காவேரி நீரில் நீராட்டி அதை பீடத்தில் ஏற்றினார்கள். ராமானுஜர் பிரம்ம மந்திரத்தின் மூலம், தனது சக்தியை அந்த சிலைவடிவினுள் பிரயோகித்தார்.

பிறகு தனது பக்தர்களை பார்த்து “குழந்தைகளே எனக்கும் இந்தச் சிலைக்கும் வேறுபாடு இல்லை. இதில்தான் இனிமேல் நான் வாசம் செய்யப்போகிறேன்” என்று கூறிவிட்டு அவருடைய சீடர்களில் ஒருவரான எம்பார் என்பவரின் மடியில் தலையையும், வடுகநம்பி என்பவரின் மடியில் திருவடியையும் வைத்துக் கொண்டே சக ஆண்டு 1059 ( கி.பி.1137) மாக மாதம், சுக்லபட்சம் தசமி திதியில் பரமபதம் அடைந்தார்.

ராமானுஜர் நமக்கு அருளிச் சென்றுள்ள 74 நன்னெறி ரத்தினங்களையும் பூரணமாகக் கற்று அவற்றின் வழி நடப்பதே நாம் இறைவனுக்கு செய்யும் தொண்டாகும்.

திருமால் திருவடிகளே சரணம்!

(நிறைவு)

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10

-இரா.சத்தியப்பிரியன்

Ramanuja 10

காண்க: பகுதி – 9

திருமலையும் ராமானுஜரும்

ராமானுஜ வைபவம் என்றாலே அதில் விசிஷ்டாத்வைதத்தின் ஸ்தாபிதம் இருக்கும். பாகவதப் பெருமக்களிடம் அவருக்கு உள்ள பக்தி இருக்கும். ஸ்ரீவைணவத்திற்காக அவருடைய புண்ணியத்தல யாத்திரை இருக்கும். அவர் இயற்றிய பாஷ்யங்களும் வியாக்கியானங்களும் இருக்கும். பிறப்பு, குலம் எதுவும் பாராத வைணவ பக்தி இருக்கும்.

இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்கு பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.

திருமலையில் ராமானுஜர் சற்றேறக் குறைய ஒருவருட காலம் தங்கியிருந்து பகவத் கைங்கரியம் செய்தார். திருமலையைக் கண்டதுமே அவர் கண்கள் பனித்தன. எம்பெருமானின் நினைப்பு எப்போதும் அவரிடம் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒருமுறை பெர்யநம்பியின் மகள் அத்துழாய்க்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ராமானுஜர் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் அரிசியையோ தானியங்களையோ கொண்டு உணவு சமைத்து சாப்பிடுபவர். இதில் சில நிபந்தனைகள் உள்ளன. ஒருவேளை உணவுக்கான தானியங்களைத்தான் பிக்ஷையாகப் பெற வேண்டும். பிக்ஷை பெற்ற தானியம் பூராவையும் சமைத்துவிட வேண்டும். மறுவேளைக்குக்கூட சேமித்து வைக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று வேளைக்குமேல் ஒருவீட்டில் பிக்ஷை கேட்கக் கூடாது. அப்படி ஒருநாள் பெரியநம்பியின் வீட்டு வாசலில் ராமானுஜர் நின்று பிக்ஷை கேட்கிறார். ராமானுஜரின் நாவு எப்போதும் ஆண்டாளின் திருப்பாவை முணுமுணுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆண்டாளிடம் ராமானுஜருக்கு அப்படி ஒரு ப்ரீத்தி.

நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

நூறு தடாவில் வெண்ணையும், நூறு தடாவில் அக்காரவடிசிலும் திருமாலிருஞ்சோலைப்பெருமாளுக்கு படிப்பதாக ஆண்டாள் அன்று வேண்டிக்கொண்டால் என்பதற்காக தன்காலத்தில் அதே அளவு வெண்ணெயையும் அதே அளவு அக்கார வடிசிலையும் ஆண்டாளுக்காக ஸ்ரீ ராமானுஜர் சாதித்தார் என்றால் அவருடைய பாகவத பிரியத்தை என்னென்று சொல்லுவது?

இப்படிப்பட்ட ராமானுஜர் உஞ்சவிருத்தி எடுத்து வரும்போது பெரியநம்பியின் வீட்டு வாசலில் நிற்கிறார். அத்துழாய் உஞ்சவிருத்திக்கு வந்த பிராமணரை வரவேற்கக் கதவை திறக்கிறாள். அத்துழாய் கதவைத் திறந்ததைப் பார்த்த மறுகணம் ராமானுஜர் மூர்ச்சையாகி விழுந்து விடுகிறார். அத்துழாய்க்கு என்ன செய்வதென்று புரியாமல் தந்தையிடம் ஓடிப்போய் ராமானுஜர் விழுந்ததைச் சொல்லுகிறாள்.

பெரியநம்பி மகளைப் பார்த்து சிரிக்கிறார். அத்துழாய்க்கு வியப்பு. வாசலில் ராமானுஜர் மூர்ச்சையாகிக் கிடப்பதை பதைபதைப்புடன் சொல்கிறோம் தந்தையார் இப்படி சிரிக்கிறாரே!

“அத்துழாய் ! நீ வருத்தப்படவேண்டாம். இராமானுசன் ஒரு பரம பக்தன். நாராயணனையும் அவன் பாகவதர்களையும் தவிர அவன் நினைப்பில் வேறு சிந்தையே கிடையாது. அவன் வாய் எப்பொழுதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்களை முணுமுணுத்தவாறே இருக்கும். நீ கதவைத் திறக்கும்போது  ‘உந்து மகா களிற்றன்’ பாசுரத்தை பாடியிருப்பான். அதில் ஈற்றில் நந்தா கோபன் மகளே நப்பின்னாய் என்ற வரிகள் பாடிக் கொண்டிருக்கும்போது நீ கதவைத் திறந்திருப்பாய். உன்னை அப்படியே நப்பின்னையாகவே நினைத்துக் கொண்டு மூர்ச்சையாகியிருப்பான். பயப்படாதே! சிறிது நேரத்தில் அவனே தெளிந்து விடுவான்” என்றார் சாதாரணமாக.

அவருடைய நாராயணின் மீதான பற்று அத்தனை உயர்த்தியானது. எனவேதான் அவர் முதல்முதலாக திருமலைக்கு செல்லும்போது ஒருவிஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்

ராமானுஜர் திருமலைக்கு வந்ததன் நோக்கம் அங்கு வசித்த பரம பக்தரும், பண்டிதருமான பெரியதிருமலை நம்பி என்பவரிடம் ராமாயணம் பாடம் சொல்லிக் கொள்ளத்தான். ராமானுஜரின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று பாகவத விஷயங்களைக் கற்க வேண்டுமென்றால் அந்த விஷயத்தில் யார் நிபுணத்துவம் பெற்றிருக்கிறாரோ அவர் எங்கிருந்தாலும் அந்த ஊருக்குச் சென்று அவரை ஆச்சாரியராக ஏற்றுக் கொண்டு கற்பது என்பதாகும்.

திருப்பதியில் இருக்கும் பெரிய திருமலை ராமாயணத்தில் மிகவும் கைதேர்ந்தவர் என்பதைப் புரிந்துகொண்ட ராமானுஜர் அவரைத் தேடி திருமலைக்கு வருகிறார்.

திருமலையில் அவரைச் சிறந்த முறையில் வரவேற்று மலைக்கு செல்ல அழைக்கின்றனர். கைலாயத்தைப் பார்த்ததும் காரைக்கால் அம்மையாருக்கு ஏற்பட்ட அதே சிந்தனை ராமானுஜருக்கு ஏற்பட்ட்டது. பரமேஸ்வரன் குடிகொண்ட திருக்கயிலையை என் கால்களால் மிதிக்கமாட்டேன் என்று அம்மையார் தலையால் நடந்து சென்றதாகக் கூறுவார்கள்.

இங்கே ராமானுஜருக்கு வேங்கடவன் குடிகொண்ட திருமலையை தன் கால்களால் தீண்டுவதா என்ற தயக்கம் ஏற்பட்டது.தயங்கினார். மூன்று நாட்கள் கீழ் திருப்பதியிலேயே வாசம் செய்தார்.

இவரது உள்ளக்கிடக்கையை அறிந்துகொண்ட பெருமக்கள் “அய்யனே ! நீங்களே திருமலையின் மேல் கால்படலாகாது என்று கூறிவிட்டால் பின்பு வேறு யார் திருமலைக்கு வருவார்கள்? பின்பு பெருமாளின் புகழ் உலகெங்கும் பரவுவது எங்கனம்?” என்று விண்ணப்பிக்கவே இளைய பெருமாளும் மனம் மாறி திருமலையின் மேல் ஏறிச்சென்று வேங்கடவனை தரிசித்தார்.

பாகவத சம்பந்தம் வைணவர்களிடையே எந்த அளவுக்குப் போற்றப்படுகிறது என்பதற்கு திருமலையில் நடந்த ஒரு விஷயம் உதாரணம்.

ராமானுஜர் வருகிறார் என்று தெரிந்ததும் வயதில் மூத்தவரும் நன்கு கற்றவருமான பெரிய திருமலை ராமனுஜருக்கு தன் கைகளில் தீர்த்தத்தையும் பிரசாதத்தையும் எடுத்துவந்து அளிக்கிறார். ராமானுஜர் பதறிப் போகிறார்.  “என்ன ஒரு அபச்சாரம். இதை தாங்கள் தங்கள் கைகளினால் செய்ய வேண்டுமா? உங்களை விடச் சிறிய ஒருவரிடம் இதை அனுப்பியிருக்கலாமே ? “ என்று கேட்டார்.

அதற்கு பெரிய திருமலை என்ற அந்த முதியவர் , பண்பாளர் “என்னைவிடச் சிறியவனை தேடிப் பார்த்தேன். அப்படி எவரும் கிடைக்கவில்லை . எனவேதான் நானே கொண்டு வந்தேன்” என்கிறார். இறைவனுக்கு ஆற்றும் தொண்டில் தன்னை மிக எளிமையாகக் காட்டிக் கொள்வதில் ஒரு வைணவனுக்கு எவ்வளவு ஆனந்தம் பாருங்கள்.

ராமானுஜரும் திருமலையில் ஒரு வருட காலம் தங்கி பெரிய திருமளையிடமிருந்து ராமாயணம் முழுவதையும் கற்றுக் கொண்டார்.

திருமலையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததா? என்று ஐயப்படும் அளவிற்கு ஒரு விஷயம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இதில் காலகுழப்படிகளும் உள்ளன.

ராமானுஜர் திருமலை சன்னதியிலுள்ள அர்ச்சாவதாரம் அதாவது சிலைத்திருமேனி நாராயண அம்சமே என்று நிறுவியதாக வழங்கப்படும் கதை. இதனைக் கட்டுக்கதை என்றும் விலக்கி விடவும் முடியாது. வைணவர்களின் குருபரம்பரையிலும் ஸ்ரீ ராமானுஜ வைபவத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன.

ராமானுஜர் முதன்முதலாக திருமலைக்கு வந்து பெரிய திருமலையிடம் ராமாயணம் கற்றுக் கொள்ளும்போது இந்த நிகழ்ச்சி நடக்கவில்லை. பின்னர் ராமானுஜர் சாரிசாரியாக அடியார்களை அழைத்துக் கொண்டு திக்விஜயம் செய்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

திருமலையில் உள்ள சிலைத்திருமேனி நாராயணனின் அம்சமென்றும், சிவனின் அமசமென்றும் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இரண்டு சமயத்தினரும் கச்சைகட்டிக் கொண்டு வீதியில் கோஷம் எழுப்புகிறார்கள். தொண்டைமன்னனுக்கு இது பெரிய தலைவலியாகப் போய் பொறுப்பை ராமானுசரிடம் விட்டு விடுகிறான்.

ராமானுஜர் கரியத்திருமேனி முன் நின்று சைவர்களின் அடையாளமான திருநீற்றை ஒரு இலை நிறைய வைக்கிறார். நாரண அம்சமான சங்கு சக்கரங்களையும் முன்வைக்கிறார். பிறகு சிலைத்திருமேனி முன்பு நின்று “எம்பெருமானே ! நீ நாரண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள். சிவனின் அம்சமென்றால் திருநீற்றைப் பூசிக் கொள்” என்று கூறி சன்னிதியின் கதவை அடைத்துவிட்டு வருகிறார்.

இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னதி கதவு திறக்கபப்டுகிறது. எம்பெருமான் தன சிலைத்திருமேனியில் இரண்டு தோள்களிலும் சங்கு சக்கரங்களை ஏந்திக் கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்தச் சிலைமேனி நாராயணின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.

ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது பல வைனவத்தலங்களை ஒரு ஒழுங்குமுறைக்குக் கொண்டுவருகிறார். திருவரங்கத்தை அவர் புனர்நிர்மாணம் செய்து வழிப்படுத்தினார். அதைப்போலத் தான் இந்த நிகழ்ச்சியும் நிகழ்ந்திருக்க வேண்டும்.

(தொடர்கிறது)

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9

-இரா.சத்தியப்பிரியன்

Ramanuja 9

காண்க: பகுதி- 8

9. வேற்று சாதியினரும் ராமானுஜரும்

ராமானுஜர் செய்த சில செயற்கரிய செயல்களே அவரை உன்னத மகானாக மாற்றியது எனலாம். வைதீகர்கள் இடையில் சாதிப்பித்து தலைக்கேறியிருந்த காலத்தில் அவர் பேரருளாளன் முன்பு அனைவரும் சமம் என்ற செய்தியை உரக்கக்கூவினார்.

தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி. பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயலகளை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.

திருக்கோட்டிநம்பி ரகசியமாக சொன்ன மந்திரத்தை மற்ற அனைத்து தரப்பு மக்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்று மதில்மேல் நின்றுகொண்டு கூவினார்.

ராமானுஜர் மட்டுமல்ல, அவருடைய ஆச்சாரியரான ஆளவந்தான் சுவாமிகளும், அவருடைய பிரதான சிஷ்யரான பெரியநம்பியும் சாதிபேதம் பார்க்காதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தானோ என்னவோ ராமானுஜரால் ஸ்ரீமன் நாராயணனை சகலருக்கும் கொண்டு செல்ல முடிந்தது.

இந்தப் பரமபத கூட்டத்தில் மாறனேர்நம்பி வந்து சேர்ந்தவிதம் ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். ஒருமுறை தாழ்குலத்தில் பிறந்த மாறனேர்நம்பி நீர்வயலில் அமர்ந்து சேற்றை எடுத்து உண்டுகொண்டிருப்பதை ஆளவந்தார் கண்ணுற்றார். மாறனேர்நம்பியிடம் சென்று அவர் சேற்றை உண்ணும் காரணத்தைக் கேட்டார். அதற்கு மாறனேர்நம்பி தன்னைப் பொருத்த வரையில் சேறும் சோறும் ஒன்றுதான் என்று கூறியதும் நம்மாழ்வாரைப போன்று இவரும் பிறவி ஞானி என்பதை உணர்ந்த ஆளவந்தார் பஞ்ச சம்ஸ்காரம் செய்து அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார்.

இந்த மாறனேர்நம்பி இறந்ததும் பெரியநம்பி தானே முன்னின்று ஈமக் கிரியைகள் செய்து வைத்தார். இதை மற்றவர்கள் எதிர்க்கும்போது ராமானுஜர் பெரியநம்பியின் மீது ஐயம் கொண்டு அவர் செய்கைக்கு விளக்கம் கேட்டார்.

“ஜடாயு வெறும் பறவை. அதற்கு ஸ்ரீராமன் இறுதிச் சடங்குகளை செய்தான். விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தருமன் அவருக்கு இறுதிக் கிரியை செய்தான். எம்பெருமானின் பக்திக்கு ஆளானவர்களுக்கு குலம், கோத்திரம் கிடையாது. மாறனேர்நம்பி என்னிடம் உபதேசம் பெற்றவன். பரமனின் பரமபக்தன். எனவே அவனுக்கு நான் இறுதிச் சடங்கு செய்வதில் தவறில்லை” என்றார்.

இதை கேட்ட மறுகணமே ராமானுஜர் பெரியநம்பியின் பாதங்களில் விழுந்து வணகினார். இத்தனைக்கும் அந்தச்சமயம் ஸ்ரீரங்கம் மடத்தின் ஆச்சாரியராக ராமானுஜர் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார். இந்தத் தூய்மைதான் அவரை மகானாக மாற்றியது.

இதேபோல சோழநாடுவிட்டு நெடுந்தூரம் வடக்கே பயணமான ராமனுஜரும் அவருடைய சீடர்களும் ஒரு புலையர்களின் குடியிருப்புப் பகுதியில்தான் அடைக்கலம் புகுந்தனர். அந்தப் புலையர்கள் கொடுத்த பழங்களையும் நீரையும் பருகிவிட்டு அந்த நாட்டு அரசனான விட்டலதேவன் அரசவைக்கு செல்கின்றனர்.

இங்கே மீண்டும் ஒரு அரசகுமாரி அவளுக்கும் மனோவியாதி பீடித்திருக்கிறது. அந்த அரசகுமாரியின் நோயை போக்கியதோடு சமண சமயம்பால் பற்று வைத்திருந்த அந்த விட்டலதேவனின் மனதை வைணவம் பக்கம் மாற்றுகிறார். அரசவையிலிருந்த சமணப் பண்டிதர்கள் இதற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடம் சமயவாதம் செய்து அவர்களில் பெரும்பாலோரை வைணவ மதத்திற்கு மாற்றுகிறார். மன்னனும் சமண சமயத்தை விடுத்து வைணவ மதத்திற்கு மாறினான். அந்த மன்னனின் விட்டலதேவன் என்ற பெயரை விஷ்ணுவர்த்தனன் என்று மாற்றி வைக்கிறார்.

அங்கிருந்துபுறப்பட்டு யதுகிரி என்ற இடத்தை அடைகிறார். அங்கே பூமிக்கடியில் மிகப்பெரிய நாராயண மூர்த்தியின் கற்சிலை கிடைக்கிறது.

இஸ்லாமியரின் படையெடுப்பின்போது கொடிய இஸ்லாமிய மன்னர்களுக்கு அஞ்சி நமது கடவுளின் திருவுருவச் சிலைகளை காப்பாற்றுவதற்காக மண்ணில் புதைத்து வைப்பது நமது முன்னோர்களின் வழக்கம் . அப்படி ஒரு சிலைதான் ராமானுஜருக்குக் கிடைக்கிறது. அந்தச் சிலையை பிரதிஷ்டை பண்ணி அந்த ஊர் மன்னன் மூலமாக ஒரு கோவிலும் எழுப்புகிறார். அந்தக் கோவில் காரணமாக அருகல் ஒரு கிராமமே உருவாகிறது. இந்த நகரம் இன்று மேலக்கோட்டை என்று வழங்கப்படுகிறது.

நமது தென்னிந்தியக் கோவில்களில் இறைவனுக்கு இரண்டு மூர்த்திகள் உண்டு. ஒன்று மூலமூர்த்தியான கற்சிலை. இரண்டாவது உற்சவமூர்த்தி. இந்த உற்சவமூத்தி ஐம்பொன்னால் செய்யபட்டிருக்கும். மூலவரைவிட அளவில் மிகச் சிறியதாக தூக்கிச் செல்வதற்கு எளிதாக இருக்கும். யதுடிரியில் ராமனுஜருக்கு மூலவிக்கிரகம் மட்டுமே கிடைத்தது. உற்சவமூர்த்தி கிடைக்கவில்லை. இந்தக் கவலையுடனே அவர் இருந்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீமன் நாராயணனே எழுந்தருளி “ராமானுஜா!என்னுடைய செல்லப்பிள்ளையை –அதாவது உற்சவ மூர்த்தியை- தில்லி பாதுஷா கொண்டு சென்றிருக்கிறான். அவன் அரண்மனையில் தேடு கிடைக்கும்” என்கிறார்.

உடனே ராமனுஜரும் அங்கிருந்து நெடுந்தொலைவில் உள்ள தில்லி நோக்கி பயணிக்கிறார். தில்லி பாதுஷா ராமானுஜரின் தோரணையைக் கண்டு அவருக்கு தக்க மரியாதை செலுத்தி (இவ்வாறு நடந்திருக்க சாத்தியமே இல்லையென்றாலும்,  நமக்குக் கிடைக்கும் செய்திகளைக் கொண்டுதான் சிலநேரங்களில் வரலாற்றை எழுத வேண்டியுள்ளது) தான் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை ஒரு மண்டபத்தில் போட்டுவைத்திருப்பதாகவும் அந்த அறைக்குள் சென்று அவர் தேடிவந்த விக்கிரகத்தை எடுத்தக் கொள்ளும்படியும் கூறுகிறான்.

பலவிக்கிரகங்களுக்கு மத்தியில் ராமானுஜரால் செல்லப்பிள்ளை என அழைக்கப்பட்ட அந்த உற்சவமூர்த்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது தில்லி பாதுஷா தனது மகள் பீபீ லகிமார் என்ற அரசகுமாரி ஒரு நாராயண விக்ரகத்தின் மேல் மாறாக் காதல் கொண்டுள்ளாள் என்று ஒரு விக்கிரகத்தைக் காட்டினார். அந்த விக்கிரகம்தான் மேல்கோட்டை நாராயணின் உற்சவமூர்த்தி என்பதைக் கண்டு கொண்ட ராமானுஜர் மன்னனின் அனுமதியோடு அதனை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி பயணிக்கிறார்.

ராமானுஜர் தனது அடியார்களுடன் தெற்குநோக்கி விரைந்து சென்றார். ஏனெனில் மன்னரின் மகள் அந்த விக்கிரகம் காணாமல் கண்டிப்பாகத் தேடுவாள் அரசனும் மீண்டும் விக்கிரகத்தை எடுத்துக் கொள்ள, தங்களை பின்தொடர்வார்கள் என்பதால் விரைந்து சென்றனர்.

அவர்கள் பயணத்தின்போதுசில புலைய சாதியை சேர்ந்த மக்கள் ராமனுஜருக்கு உதவினார்கள். அவர்கள் உதவியுடன் மேல்கோட்டையில் ஒரு ரகசியமான இடத்தில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். புலையர்கள் இந்தத் தொண்டிற்கு உதவியதால் அன்றுமுதல் வருடத்தில் மூன்று நாட்கள் அவர்கள் ஆலயத்தினுள் சென்று வழிபடும் உரிமையை ராமானுஜர் பெற்றுத் தந்தார்.

ஆலயப்பிரவேசம் என்று சென்ற இரு நூற்றாண்டுகளாகத் தான் நாம் கூறுகிறோம். ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே வைதீகர்களின் பார்வையில் கீழ்ஜாதி எனக்கருதப்பட்டவர்களும் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று புரட்சி செய்தவர் ராமானுஜர்.

அதன்பிறகு அந்த பீபீ லகிமாரும் அவள் காதலனும் அந்தச் செல்லப்பிள்ளையை தேடி மேல்கோட்டை வருகின்றனர். அரசகுமாரியும் இளவரசனும் நாராயணின்மேல் பக்தியாகி ராமனுஜரின் ஆசிக்கு ஆட்படுகிறார்கள். அந்த இறைவனுக்குத் தொண்டு செய்து ஸ்ரீரங்கத்திலேயே தங்கி விடுகின்றனர். ராமானுஜரைப் பொருத்தவரை இறைவனின் முன்னால் அனைவரும் சமம் என்பதாகும்.

(தொடர்கிறது)

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

-இரா.சத்தியப்பிரியன்

Ramanuja 8

காண்க: பகுதி- 7

8. மதமேறிய மன்னன்

நமது தேசத்தின் இருகண்களாகக் கருதப்படுபவை சைவமும், வைணவமும் ஆகும்.  இரண்டுமே அடிப்படை தத்துவத்தில் வேறுபட்டிருப்பதாலும், இரு சமயத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அத்தைகைய சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து காணப்பட்டது. என் சமயம்தான் உயர்ந்தது என்ற கொடியை இரு சமயத்தினரும் ஓங்கிப் பிடித்தனர்.

சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கிவாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையை கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான் மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

அப்படி ஒரு மன்னனாவே கிரிமிகண்டன் என்ற மன்னன் விளங்கினான்.காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஒரு சோழ மன்னன் ஆண்டுவந்தான். கிரிமிகண்டன் என்பது அவனுடைய பெயர். சைவ சமயத்தின் மீது மாறாப் பற்றுடையவன். இதன்காரணமாக வேறு எந்த மதமும் தனது தேச எல்லைக்குள் செழிப்பதை அவனால் அனுமதிக்க முடியவில்லை.

அணுக்கத்தொண்டர்கள் 74 பேருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபித்த விசிஷ்டாத்வைத தத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வைணவ மதம் தழைத்து வருவதைக் கண்டு பொறுக்காத அந்த கிரிமிகண்டன் ராமானுஜருக்கு ஏகப்பட்ட இன்னல்களை அளித்து வந்தான். இறுதியில் அவரது உயிரை மாய்த்திடவும் திட்டமிட்டான்.

ராமானுஜரிடமும் அவருடைய பிரதம சீடரான கூரத்தாழ்வாரிடமும் ‘ சிவனே உயர்ந்தவர். சிவனைவிட உயர்ந்த கடவுள் இல்லை ‘ என்ற வாக்கியத்தை எழுதி வாங்கிவிட்டால் அவர்கள் இருவரையும் மன்னித்துவிட்டுவிடலாம் அவ்வாறு அவர்கள் இருவரும் மறுக்கும்பட்சத்தில் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று நாலூரான் என்ற வைணவத்தைச் சேர்ந்த அமைச்சனின் தலைமையில் திட்டம் தீட்டினார்கள்.

ஒரு பெரிய படையே ராமானுஜரை பிடித்துவர அவருடையமடம் இருக்கும் ஸ்ரீரங்கம் நோக்கி புறப்பட்டது. இதற்கு நடுவில் இந்தச் செய்தி ராமானுஜரின் சீடர்களின் செவிகளை எட்டியது. அவர்கள் ராமானுஜரை காப்பாற்றத் தயாரானார்கள். வருகின்ற வீரகளுக்கு யார் ராமானுஜர் யார் கூரத்தாழ்வான் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இருவரும் தங்கள் அடையாளங்களை மாற்றிக் கொள்வது என தீர்மானமாயிற்று.

இதற்கு ராமானுஜர் இறுதிவரையில் ஒப்புகொள்ளவில்லை. ஆனால் அவருடைய சீடர்கள் ஸ்ரீ வைணவம் இந்த தமிழக மண்ணில் தழைக்க வேண்டுமென்றால் இதனைத் தவிர வேறுவழியில்லை என்று மன்றாடி கேட்டனர். முடிவாக ராமானுஜர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். கூரத்தாழ்வான் அணித வெள்ளை வேட்டியை ராமானுஜரும், ராமானுஜரின் காவியுடையை, திரிதண்டத்தை கூரத்தாழ்வானும் அணிந்து கொண்டனர்.

ராமானுஜர் தனது தலைமறைவு வாழ்க்கையைத் தொடங்கினார். இவருடன் 45 அணுக்கத் தொண்டர்கள் உடன் சென்றனர். ஐந்து நாட்கள் நெடிய பயணத்திற்கு பின்பு சோழ எல்லையைக் கடந்தனர்.

இதற்கு நடுவில் ராமானுஜரைப் பிடித்துவர ஏவப்பட்ட வீர்கள் கூரத்தாழ்வானை ராமானுஜர் என்று நினைத்துப் பிடித்து சென்றுவிட்டனர். அவருடன் பெரியநம்பியும் , கூரத்தாழ்வானின் மகளான அத்துழாயும் உடன்சென்றனர்.

அவையில் பண்டிதர்களுக்கு நடுவில் சிவனே உயர்ந்த தெய்வம் என்று எழுதிக் கொடுக்குமாறு கிரிமிகண்டன் ஆணையிட்டான். ராமானுஜரின் வைணவப்பாசறையில் வளர்ந்த புலியல்லவா கூரத்தாழ்வான்? அரசனின் ஆணையை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

“இந்தச் சபையில் உள்ள பண்டிதர்களை உனது வாதத்தின் மூலம் ஜெயித்துவிடு. நீ நாராயணனே பெரியகடவுள் என்பதை நிறுவவேண்டும். உன்னால் முடியவில்லை என்றால் உன் தலை துண்டிக்கப்படும்” என்றார் மன்னர்.

வாதம் தொடங்கியது. ஒருதலைப்பட்ச வாதத்தால் கூரத்தாழ்வாரால் எதிர்வாதம் செய்ய முடியாமல் போனது. கொக்கரித்து எக்காளமிட்ட சைவப்பண்டிதர்கள், கூரத்தாழ்வாரிடம் “சிவனைவிட வேறு சிறந்த பொருள் இல்லை.சிவாத் பாதாம் நாஸ்தி” –அதாவது சிவனே பெரியவர் என்ற வாசகத்தை எழுதிக் கொடுத்து கையொப்பமிட சொன்னார்கள்.

அதற்கு கூரத்தாழ்வார் “த்ரோனமச்தி தாதா: பரம் அதாவது மரக்கால் சிவத்தை விடப் பெரியது” என்றார். இங்கே துரோணம் என்பதும் சிவம் என்பதும் அந்தக் காலத்தில் நெல் அளக்க பயன்படும் பழங்காலக் கருவிகள். துரோணம் அளவில் பெரியது என்பதால் துரோணம் சிவத்தைவிடப் பெரியது என்ற சிலேடை மொழியில் பாடினார். அரசனும் அரசவையினரும் ஆத்திரமுற்றனர்.

ராமானுஜர் ஒருமுறை கிரிமிகண்டனின் சகோதரிமேல் ஏறியிருந்த பிரம்மராக்ஷசை விரட்டியிருப்பதால் ராமானுஜரைக் கொல்ல வேண்டாம் என்று கருதி.   (அதாவது ராமானுஜர் போல இருக்கும்) கூரத்தாழ்வாரை கண்களை மட்டும் கூரிய வாளால் குத்திவிட்டு அனுப்பிவிடச் சொல்லிவிடுகிறான். பெரியநம்பியும் அத்துழாயும் துடி துடிக்க, கூரத்தாழ்வாரின் கண்கள் பிடுங்கப்படுகின்றன. ஆச்சாரியாருக்காக தனது கண்களைக் கொடுப்பதற்கு கூரத்தாழ்வார் அச்சமில்லாமல் நின்றார்.

அதன்பிறகு மூவரும் காட்டுவழியில் திருவரங்கம் ஏகினர். வழியில் மூப்பின் காரணமாக பெரியநம்பி இறந்து விடுகிறார். காட்டிலேயே அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கிரிமிகண்டன் தீர்க்க முடியாத நோய் ஒன்றினால் இறந்தான். அவன் சிறந்த சிவபக்தனாக இருந்தும் வைணவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினான். சிவனும் விஷ்ணுவும் பரம்பொருளின் இரண்டு வடிவங்கள் என்பதை அறியாமலே இறந்துவிட்டான்.

(தொடர்கிறது)

%d bloggers like this: