Category Archives: விடுதலை வீரர்

இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

-பேரா. தி.இராசகோபாலன்

b6516-nivedita

சகோதரி நிவேதிதை

 

சகோதரி நிவேதிதை

(பிறப்பு:  1867, அக். 28- மறைவு: 1911, அக். 11)

நிவேதிதை-150வது ஆண்டு  துவக்கம்

.

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து, தானே முளைக்கின்ற விதை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமோக விளைச்சலைத் தரும். அப்படி அயர்லாந்திலே இருந்து வந்து இந்திய மண்ணில் விழுந்த விதைதான், சகோதரி நிவேதிதா.

1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாளில், சாமுவேல் ரிச்மென்ட் நோபில் எனும் தந்தைக்கும் – மேரி இசபெல் எனும் தாய்க்கும் மகவாக, அயர்லாந்து மண்ணில் மார்க்ரெட் எலிசபெத் நோபில் எனும் பெயரில் ஓர் அரும்பு முளைத்தது. தந்தை சாமுவேல் ஒரு மதபோதகர்.

என்றாலும், ஏழ்மையை ஆணிவேரிலிருந்து அகற்றுவதுதான் மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மகளுக்குப் பாலபாடமாகப் படிப்பித்தார். பெற்ற தந்தையால் விதைக்கப்பட்ட வித்து, ஹாலிபேக்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்த மார்க்ரெட் நெஞ்சில், ஞானத்தந்தையாகிய சுவாமிஜி விவேகானந்தரால் நீரூற்றி வளர்க்கப்பட்டது.

சிகாகோ நகரில் சுவாமிஜி வெளிப்படுத்திய ஆன்மிக ஆவேசம், இலண்டனிலிருந்த மார்க்ரெட் மனத்தில் எக்ஸ்ரே கதிர்களாகப் பரவியது.

1895-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த தமது சீடர் இசபெல்லா மார்க்கஸன் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்த இருந்த பிரசங்கத்திற்கு இசபெல்லா தம் தோழியாகிய மார்க்ரெட்டையும் அழைத்திருந்தார். சுவாமிஜியின் புதிய வெளிச்சத்தில் அனைவரும் வழி கண்டனர், மார்க்ரெட்டைத் தவிர.

சமூக ஏற்றத்தாழ்வு எனும் புண்ணிற்குப் போதிமரத்துப் புத்தன் தான் புதிய மருந்து தடவுவான் என எண்ணியிருந்த மார்க்ரெட், சுவாமிஜியிடம் எதிரும் புதிருமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

மலை கலங்கிலும், கடல் கலங்கிலும் நிலை கலங்காத சுவாமிஜி, “மகளே, என்னை ஏற்றுக்கொள்வது சிரமமே, புரிகிறது. அது தவறும் இல்லை. என்னுடைய குருவான பரமஹம்சரிடம் ஆறு ஆண்டுகள் போராடிய பிறகே அவரை நான் ஆசாரியனாக ஏற்றேன். அதனால் சந்தேகங்கள் கிளம்பிப் பதில் கிடைக்கும் போதுதான், ஒவ்வொரு விஷயமும் தெளிவாகப் புரியும்” என்றார்.

சுவாமிஜியின் அடுத்தநாள் சொற்பொழிவுக்கும் மார்க்ரெட் சென்றார். தீட்சா ரகசியங்களில் ஆழங்காற்பட்டிருந்த சுவாமிஜி,  “இந்தியா முன்னேற, உலகின் ஆன்மிக மகுடம் தரித்திருக்கும் பாரதத்தின் துயர் தீர்க்க, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் இவற்றிற்குத் தொண்டாற்ற, துணிவே துணை என கொள்கை தீபம் ஏற்றும் பல புத்தர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணியில் உங்களில் யார் அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்கள் தொண்டுக்கு நான் கடைசிவரை தோள் கொடுப்பேன்” என்றார்.

சுவாமிஜியின் ஞானஸ்நானத்தில் முழுமையாக நனைந்த மார்க்ரெட்,  “இந்தியாவுக்கு எப்போது புறப்பட வேண்டும் சுவாமிஜி?” என்றார். சுவாமிஜி,  “மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதை, தோல்களைப் பிளந்து கொண்டு வெளியே தலைகாட்டும்வரை காத்திரு” எனக் கூறிச் சென்றார்.

சுவாமிஜியின் இசைவு பெற்று, மார்க்ரெட் 28.01.1898 அன்று கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். மாம்பசா எனும் கப்பலின் மூலம் வந்த மார்க்ரெட்டை சுவாமிஜியே துறைமுகத்திற்குச் சென்று வரவேற்கின்றார். மார்க்ரெட் முதல் வேலையாகப் பரமஹம்சர் நிர்மாணித்த தட்சிணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.

சுவாமிஜி 1898 மார்ச் 11-ஆம் நாளன்று, கல்கத்தா ஸ்டார் தியேட்டரில் மார்க்ரெட்டை அறிமுகப்படுத்துகிறார். மார்க்ரெட் எனும் பெயரை மாற்றி, நிவேதிதா என நன்னீராட்டுகின்றார்.  “இந்தியாவுக்கு இங்கிலாந்து சில நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் தலையானது சகோதரி நிவேதிதா எனக் குறிப்பிடலாம்” என்றார் சுவாமிஜி.

மார்ச் 17-ஆம் நாள் சகோதரி நிவேதிதா, அன்னை சாரதா தேவியைச் சந்திக்கிறார். அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் கையிலிருந்த கைக்குட்டையால் பாதங்களில் படிந்திருந்த தூசியைத் துடைக்கிறார்.
அன்னையும் என் மகளே (வங்காளத்தில் கோக்கி) என்று வாரி அணைத்து, உச்சிமுகந்து ஆசீர்வதித்தார். அன்னையின் குடிலில் தங்கத் தொடங்கிய பிறகு, நிவேதிதா ஓர் இந்து பெண் சந்நியாசியாகவே மாறிவிடுகிறார்.

சகோதரி நிவேதிதாவின் தொண்டு வாழ்க்கையில் – அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் இடிதாங்கி மேலேயே இடி விழுந்தது போன்றதோர் துயரம் ஏற்பட்டது. சுவாமிஜி, 1902 ஜூலை 4-ஆம் நாள் இரவு அமரத்துவம் அடைந்த செய்தி, பேலூர் மடத்திலிருந்து சகோதரி நிவேதிதாவிற்கு தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சகோதரி, இராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலிலிருந்து இரண்டாவது முறையாக உயிர்பிரிந்து மேலே செல்லுவதுபோல் கனவு காணுகிறார். உடனடியாக அவர் பேலூர் மடத்திற்கு விரைகிறார்.

படுக்கையில் அமர்த்தப்பட்டிருந்த சுவாமிஜியின் தலைமாட்டில் அமர்கிறார். உட்கார்ந்த நேரத்திலிருந்து சுவாமிஜியின் புகழுடம்பு, நீராட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வரையில், பனையோலையால் செய்யப்பட்ட விசிறியால் விசிறிக்கொண்டேயிருந்தார்.
சுவாமிஜியின் புகழுடம்பு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, சுவாமிஜியின் உடம்பின்மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியிலிருந்து ஒரு துண்டு வெட்டித் தரும்படி, மடத்துத் தலைவர் சுவாமி சாரதானந்தாவிடம் வேண்டுகிறார். அவரும் சம்மதித்தாலும், அச்செயல் சுவாமிஜியின் புனிதயாத்திரை நேரத்தில் சரியாக இருக்குமா எனச் சிந்தித்து அவரே வேண்டாமென்று மறுதலிக்கிறார்.

ஆனால், தகனத்தின்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. தகனத்தின்போது, தீயின் கடைசி கங்கு அணைகின்ற வரையில் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நிவேதிதா. அப்போது தமது அங்கியின் பின்புறத்தை யாரோ பின்னாலிருந்து இழுப்பதுபோன்று ஓர் தொடுவுணர்ச்சி நிவேதிதாவிற்கு ஏற்படுகிறது.

திடீரென்று எரிந்து கொண்டிருந்த புகழுடம்பிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி புறப்பட்டு வந்து நிவேதிதாவின் மடியில் விழுகிறது. அதனை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்ட நிவேதிதா, அது தம்முடைய குருஜியின் கடைசி ஆசீர்வாதம் எனக் கருதி, அதனைத் தம்முடைய அமெரிக்கத் தோழி, ஜோசப் மேக்லியோடிக்கு அனுப்பிவிடுகிறார்.

1905-ஆம் ஆண்டு காசி காங்கிரசை முடித்துக்கொண்டு, மகாகவி பாரதி கல்கத்தா வழியாகச் சென்னைத் திரும்ப நினைத்தபோது, கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் சகோதரி நிவேதிதா தங்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றார். அத்தரிசனம் ஒரு தெய்வ தரிசனமாயிற்று. ஒரு குருஜிக்குச் சீடராக வந்த நிவேதிதா, ஒரு மகாகவிக்கு ஞானகுருவாகிறார்.

தம்முடைய படைப்புகளை எந்தத் தனிமனிதருக்கும் சமர்ப்பிக்காத மகாகவி பாரதி, ஞானரதம் போன்ற நான்கு படைப்புகளை ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் அன்னை நிவேதிதாவிற்குச் சமர்ப்பித்து, “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, சுதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில், இச்சிறு நூலில் ஸமர்ப்பிக்கின்றேன் சுதேசிய பாடல்களை சமர்ப்பிக்கின்றேன்” என்று எழுதுகிறார்.

அடுத்து ‘ஜென்மபூமி’ எனும் தலைப்பில் வெளியிட்ட சுதேசிய கீதங்களையும், “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீநிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றவாறு எழுதி, குருவணக்கம் செய்கிறார்.

மேலும், நிவேதிதாவின் குரு உபதேசத்தை, “சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் … பெற்றதை ஏதென்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினர் தோழி” என ‘ குரு உபதேசம்’ எனும் தலைப்பில் பரவசப்பட்டுப் பாடுகிறார்.

சுவாமிஜி அமரத்துவம் அடைந்த பின்னர், சகோதரி நிவேதிதா ஆன்மிகப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்.

அரவிந்தருடனும், அனுசீலன் சமிதி எனும் இரகசிய புரட்சியாளர்களுடனும் இணைந்து, இந்திய விடுதலையில் தீவிரவாதம் காட்டுகிறார். கவிஞர் இரவீந்திரநாத தாகூர், நிவேதிதாவின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சுகிறார். வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராடியதில் லார்ட் கர்சானுக்கே ஒரு நடுக்கம் ஏற்படுகின்றது.

1911-ஆம் ஆண்டில் நிவேதிதா நோய்வாய்ப்பட்டுள்ளார். 06.10.1911 அன்று தம்முடைய சொத்துகளையும், உடைமைகளையும் தாம் தோற்றுவித்த பள்ளிக்கே சேருமாறு உயில் எழுதி வைக்கிறார். அச்சொத்துகளைப் பராமரிக்கின்ற உரிமையை பேலூர் மடத்தின் ஆதீனகர்த்தாக்களுக்கே வழங்கினார்.

அந்திம காலத்தில் அறிவியலறிஞர் ஸர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தம்பதியருக்குச் சொந்தமான டார்ஜிலிங் மாளிகையில் சகோதரி நிவேதிதா தங்குகிறார். 13.10.1911 அன்று தமது 44-வது வயதில் அவருடைய ஆன்மா இறைவனடியில் பரிபூர்ணத்துவம் அடைகிறது.
அவருடைய கல்லறையில்  ‘இந்தியாவிற்கே எல்லாவற்றையும் அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே இளைப்பாறுகிறார்’  எனப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்திய மண்ணிலிருந்தே புறப்பட்ட பூவொன்று, அம்மண்ணிற்கே புயலானது. சகோதரி நிவேதிதா, சுவாமிஜிக்குச் சீடரானார். மகாகவி பாரதிக்குக் குருவானார்.

குறிப்பு:.

இந்த ஆண்டு சகோதரி நிவேதிதை பிறந்த 150-ஆவது ஆண்டு.  திரு. தி.இராசகோபாலன்,  ஓய்வு பெற்ற பேராசிரியர்.

.
நன்றி: தினமணி (28.10.2016)

Advertisements

புரட்சிக்கார எழுத்தாளர்

-ம.பூமாகுமாரி

 

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு. ஐயர்

(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.

1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.

குறிப்பு:

திருமதி பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:   சாவர்க்கரின் தமிழகத் தோழர்

.

முதல் சுதந்திரப் போரின் அக்கினிக்குஞ்சு…

-ம.பூமாகுமாரி

மங்கள் பாண்டே

மங்கள் பாண்டே

மங்கள் பாண்டே

(பிறப்பு: 1827, ஜூலை 19 – பலிதானம்: 1857, ஏப்ரல் 8)

 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து, 1857-இல் முதல் இந்திய சுதந்திரப் போர் (சிப்பாய்க் கலகம்) நடந்தது பற்றி நமது சரித்திரப் பாடப் புத்தகத்தில் படித்துள்ளோம். அதற்கு வித்திட்ட நிகழ்வுக்கு சொந்தக்காரர் மங்கள் பாண்டே.

வங்காள காலாட்படையில் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியில் வீரனாக வேலை பார்த்த மங்கள் பாண்டேவை அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே ஒரு கலகக்காரன் என அடையாளப்படுத்தியது.  அது எதனால் என்பது பற்றி நம் சரித்திரப் பாடப் புத்தகங்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.

மங்கள் பாண்டே – சிப்பாய்க் கலகத்துக்குக் காரணமான அக்கினிக் குஞ்சு. அந்தத் தனிமனிதன் காட்டிய வீரம், எதிர்ப்பு, நியாயமான கோபம் – இவை எளிதில் பற்றிக் கொண்டது எல்லோரையும். ஆங்கிலேயர்களை உரசிப் பார்க்கும் துணிவை நமக்குத் தந்தவன் தனி மனிதனான மங்கள் பாண்டே!

1827, ஜூலை 19 -இல் பூமிஹார் பிராமண வகுப்பில் உத்தரபிரதேசத்தில்,  பல்லியா மாவட்டம், நாக்வா என்ற கிராமத்தில் பிறந்தார் மங்கள் பாண்டே.  1849-இல் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்ந்தார். மிக ஒழுக்கமான இளைஞர்.

கொல்கத்தாவின் பாரக்பூர் எனும் இடத்தில் சிப்பாய்கள் கொந்தளிப்புடன் இருப்பதாக , லெஃப்டினென்ட் பாக்கிற்கு செய்தி வருகிறது.  உடனே குதிரையில் ஏறி புறப்பட்டான் பாக்.  மங்கள் பாண்டேவைப் பற்றி பாக்கிற்குச் சொல்லப்பட்டது.

மங்கள் பாண்டே குறி பார்த்துச் சுட, பாக் தப்பித்தான்.  குதிரையைப் பதம் பார்த்தது புல்லட். குதிரையும், மேலிருந்த அதிகாரியும் கீழே விழ, தன் வாளால் பதம் பார்த்தான் பாண்டே. மற்றொரு சிப்பாய் ஷேக் பல்டு தலையிட்டு, பாண்டேவை கட்டிப் பிடித்தான். இதனிடையே சார்ஜென்ட் மேஜர் ஹீயூசன் மங்கள் பாண்டேவால் தாக்கப்பட்டார்.

ஹூயூசன் மீது துப்பாக்கி சூடு நடத்திய பாண்டேவை, மற்றவர்கள் பிடித்துக் கொடுக்க வேண்டும் என கதறி வேண்டுகோள் விடுத்த பல்டுவை ஏனைய சிப்பாய்கள் மறுத்து, சுட்டு விடுவதாக மிரட்டினர். பல்டுவுக்கும் காயம்;  பாக், ஹியூசன் ஆகியோருக்கும் அடி பலம். காமாண்டிங் ஆபீஸர் ஜெனரல் ஹியர்சே வருகிறார். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ‘எல்லோரும் மங்கள் பாண்டேவைப் பிடிக்க உதவ வேண்டும். இல்லையேல்அவமதிக்கும் முதல் மனிதனைச் சுட்டு விடுவேன்’ என மிரட்டுகிறார்.

பாண்டே நிலமையைப் புரிந்து கொண்டு தன்னைத் தானே சுட்டுக் கொள்ள, ரத்த வெள்ளம். அடி பலம் என்றாலும் உயிருக்குப் பாதகம் இல்லை. நட்ந்தது  விசாரணை. விடுவானா வெள்ளைக்காரன்? தூக்கு தண்டனை கிடைத்தது.  அன்று ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டுக் கிடந்த பாரதத்தில் அது தான் கதி. அரசை எதிர்த்தால் தூக்குதான்.

ஆனால் மங்கள் பாண்டேவுக்கு   மக்களிடத்தில் இருக்கும் வரவேற்பை மோப்பம் பிடித்தது ஆங்கில அரசு. ஊர் அறிய தூக்கிவிட்டால் பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என யூகித்து, குறித்த நாளுக்கு ஒரு வாரம் முன்பே யாருக்கும் தெரியாமல் தூக்கில் தொங்க விட்டது பிரிட்டீஷ் அரசு.

ஒரு சிறு பொறி தான் மங்கள் பாண்டே. அக்னிக் குஞ்சினை பொந்திடை வைத்தாயிற்று. வெந்து தணிந்தது காடு. அது தான் முதல் இந்திய சுதந்திரப் போர் (1857).

துப்பாக்கி புல்லட்டில் பன்றிக் கொழுப்பும், மாட்டு இறைச்சியும் தடவித் தந்ததாக சிப்பாய்கள் மத்தியில் பரவியது செய்தி. ஏற்கனவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தவர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு வதந்தி பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிற்று. இந்தியர்களின் மனநிலையை பாதிக்க வேண்டும் என்ற துர் எண்ணத்துடன் ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டனர் என நம்மவர்கள் நம்பினர்.

மாட்டுக் கொழுப்பு என்பதால் ஹிந்துக்களும், பன்றிக் கொழுப்பு என்பதால் இஸ்லாமியரும் மனம் புண்பட்டனர், வெறுத்தனர்;  கிளர்ந்து எழுந்தனர்.  ‘சிப்பாய் மியூட்டினி’  (சிப்பாய் கலகம்) என வரலாறு பதிவு செய்து கொண்டது. அதுவே முதல் இந்திய சுதந்திரப் போர் ஆகும். அதற்கு வித்திட்டவர்  மாவீரர் மங்கள் பாண்டே.

1857, ஏப்ரல் 8-ம் நாள் பாரக்பூரில் தூக்கிலிடப்பட்ட போது மங்கள் பாண்டேவுக்கு 29 வயது! அவரை கௌரவிக்கும் விதமாக, இந்திய அரசு ஒரு நினைவு தபால் தலையை  1984 அக்டோபரில் வெளியிட்டது. கொல்கத்தாவில் பாண்டே நினைவாக ஒரு பூங்கா எழுப்பப்பட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்த துணிச்சலால் நம் எல்லோர் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார் மங்கள் பாண்டே!

குறிப்பு:

 திருமதி. ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:

முதல் சுதந்திரப் போரின் முதல்பொறி

ஸ்வதந்திர கர்ஜனை – 2

.

பத்திரிகை உலகின் முதுகெலும்பு

-ம.பூமாகுமாரி

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

(பிறப்பு: 1904, ஏப்ரல் 3- மறைவு: 1991, அக்டோபர் 5)

 

பிரெஞ்ச் தேசத்தில் பண்டைய காலத்தில் சமூகத்தை மூன்று  பெரும் பிரிவுகளாக (எஸ்டேட்) பிரித்திருந்தனர். முதல் எஸ்டேட் மதகுருமார்கள், இரண்டாவது எஸ்டேட் பிரபுக்கள் (அரசர்கள் இதில் வருகிறார்கள்). மூன்றாவது சாமான்யர்கள். நவீன யுகத்தில் 4, 5 எஸ்டேட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்தியாவில் நான்காம் எஸ்டேட் (பத்திரிகைத் துறை) என்று சொன்னால் பளிச்சென சில பெயர்கள் மின்னி மறையும். நமது மனத்திரையில் கட்டாயம் ராம்நாத் கோயங்கா பெயர் தோன்றும்.

RNG என்று பொதுவாக எல்லோராலும் அழைக்கப்பட்டவர். 1904, ஏப்ரல் 3-ல், பிகாரின் தர்பங்கா ஜில்லாவில் பிறந்தார். பின்னாளில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை வலுவாக,  வெற்றிகரமாக நடத்தி, பத்திரிகை உலகில் தனக்கென ஓர் இடத்தை அமைத்துக் கொண்டவர்.

வாரணாசியில் படிப்பு முடித்த பின், அவரது குடும்பம், நூல் மற்றும் சணல் வியாபாரம் செய்ய சென்னைக்கு அனுப்பியது. அவரோ வடகிழக்கு இந்தியாவில் பிறந்து, வட இந்தியாவில் பயின்று, தென்னிந்தியாவில் பத்திரிகைத் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டினார். ஒரு டீலராக சென்னை வந்தவர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’  பத்திரிகையின் பங்குகளை வாங்கினார். இரண்டே ஆண்டுகளில் கம்பெனியை தன்வசப்படுத்தினார். தேசிய அளவில் பத்திரிகை உலக நெட்வொர்க் ஒன்றை உருவாக்கினார். இறுதியில் 14 பதிப்புகள் வெளிவந்தது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. அதுவே இந்தியாவின் மிகப் பெரிய ஆங்கில நாளேடு. மேலும் பல்வேறு இந்திய மொழிகளில் ஆறு நாளேடுகள் (தமிழில் தினமணி) வெளிவந்தது இந்தக் குழுமத்திலிருந்து.

1930-களில், காந்திஜியுடன் கரம் கோர்த்து இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், ஜவஹர்லால் நேரு தலைமையில் இணைந்து செயலாற்றினார்.

1971-ல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, 1975-ல் ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டத்தை தீவிரமாக கோயங்கா ஆதரித்தார்.  அது காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலூட்டியது. இந்திரா காந்தி கொன்உவந்த நெருக்கடி நிலையை எதிர்த்து பத்திரிகை உலகம் வாயிலாகப் போராடினார்.

தேசத்தின் இருட்டுக் காலமான அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு மிக அதிகமான பிரச்னைக்கு உள்ளானது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. இந்திரா காந்தியின் கோபத்திற்கு ஆளான பின் எவரேனும் சுமுகமாக தொழில் செய்ய முடியுமோ? சென்ஸார் நீங்கியபோது சேர்த்து வைத்திருந்த குமுறலைக் கொட்டித் தீர்த்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

‘கட்டாய கருத்தடை, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்கள் – வெகுஜன கட்டாய மீள் குடியேற்றம், பரந்துபட்ட ஊழல், மற்றும் அரசியல் கைதுகள்’  என தினமும் தீபாவளிப் பட்டாசாய் கொளுத்திப்போட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். அரசியல் காழ்ப்புணர்ச்சி, அடக்குமுறை, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவது என்ற எதேச்சதிகாரப் போக்கு – வரலாற்றில் இவற்றுக்கான மிக அழுத்தமான உதாரணமாக இந்திரா காந்தியின் காங்கிரஸும், அவசரநிலைக் காலமும் இருக்கிறது. அதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதும், ஆவணப்படுத்தியதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தான். அந்த இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தைரியம் கொடுத்து ஊக்குவித்தது வேறு யார்? ராம்நாத் கோயங்கா தான். தைரியத்தின் மறுபெயர் கோயங்கா.

அந்தக் கட்டுரைகள் இந்திரா காந்தியின் 1977 தோல்விக்கு அடிகோலின. அதுமட்டுமல்ல, ஜனதா கட்சி உருவாகவும், ஆட்சி மலரவும் கோயங்கா பாடுபட்டார்.  பேனாமுனை, வாள்முனையை விட சக்தி வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் ராம்நாத் கோயங்கோ.

ஜனதா கட்சியின் குழப்பங்களால் மொரார்ஜி தேசாஇ அரசு கவிழ்ந்த பின், 1980-ல் இந்திரா காந்தி மறுபடி அரசியலில் உயிர்த்தெழுந்தார். அப்போது வரி, சொத்து வழக்கு என சாட்டையடி கிடைக்கிறது அரசிடமிருந்து. இந்தியன் எக்ஸ்பிரஸும், கோயங்காவும் அப்போதும் கலங்கவில்லை. 1984-ல் இந்திரா காந்தி அரசியல் படுகொலை செய்யப்படுவது வரை கோயங்காவுக்குப் போராட்டம் தான். ஆனால் அவர் என்றும் அதிகார அரசியலுக்கு முன் மண்டியிடவில்லை. 1991, அக். 5-இல் இந்தப் போர்வீரர் மறைந்தார்.

எழுத்தாளர் பி.ஜி.வர்கீஸ், 2005-ல்  ‘நான்காவது எஸ்டேட்டின் போர் வீரன்: எக்ஸ்பிரஸின் ராம்நாத் கோயங்கா’ என்ற புத்தகத்தில் அவரைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:

ராம்நாத் கோயங்கா, பல முகங்கள் கொண்ட ஒரு மனிதர். சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியவாதி, அரசியல்வாதி, தொழிலதிபர், செய்தித்தாள் முதலாளி.  இவை எல்லாவற்ளையும் விட, பத்திரிகை சுதந்திரத்திற்காகப் போரிட்ட வெல்லமுடியாத போர்வீரன். பத்திரிகை சுதந்திரத்தின் எல்லைக் கோடுகளை அச்சமின்றி காவல் காத்தவரும், விரிவடையச் செய்தவரும் அவரே. நிறைய சமயங்களில் அது அவருக்குப் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியது. ஒரு பத்திரிகை பதிப்பகத்தாராக அவர் செய்தது,  சாதாரண பிரஜையை அதிகாரம் உள்ளவராக ஆக்கியது, அவனுடைய தெரிந்துகொள்ளும் உரிமையைத் தூக்கிப் பிடித்தல், அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வைத்தல் ஆகிய விஷயங்களில் அவர் சலிக்காமல், மிகுதியான ஆர்வத்துடன் செயல்பட்டார்.

மேலும், வர்கீஸ் ‘ராம்நாத் கோயங்கா – ஊடக மன்னர்’ என்ற தலைப்பில் ‘இந்தியா டுடே’ இதழில் எழுதியது இது…

ஒரு மதிநுட்பமான மார்வாரி, சென்னையில் குடியேறி, பத்திரிகை உலகின் பிரபுவாக உயர்ந்தவர். அரசியல் ரீதியாகவோ, பணம் கொடுத்து உதவியோ, தனக்கு சாதகமாக ஆட்களைச் சேகரித்தவர். தேவைப்படுவோருக்கு தன் செல்வாக்கால் உதவி செய்தவர்; ஆனால் பதிலுக்கு எதையும் எதிர்பாராதவர்.

அவர் முழுமையான தேசியவாதி. 1942 இயக்கத்தின் போது தானே தன்னை  ‘காங்கிரஸ் குவார்ட்டர் மாஸ்டராக’ நியமித்துக் கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ தலைமறைவு புரட்சிக்காரர்களுக்கு வெடிமருந்துகள் சப்ளை செய்தவர். நிலைகுலைய வைக்கும் எழுத்துக்களைப் பரப்புரை செய்ய அச்சிட்டுத் தந்தவர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, கு.காமராஜ், ஜெயபிரகாஷ நாராயணன், இந்திரா காந்தி என எல்லோருடனும் நேரடித் தொடர்பில் இருந்தவர்.

அவரது சக்தி, எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதில் அவருக்கு இருந்த வேகம், கடின உழைப்பு ஆகியவற்றை வியப்பதோடு நிறுத்தி விடாமல், நாமும் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

 

குறிப்பு:

திருமதி. ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:

ஊடக உலகின் ஒளிவிளக்கு 

ஸ்வதந்திர கர்ஜனை – 32

.

இந்தியாவின்   ‘பீம ஸ்மிருதி’

-ம.வெங்கடேசன்

அரசியல் சாசன அமைப்புக் குழு.

அரசியல் சாசன அமைப்புக் குழு.

அரசியல் அமைப்பு வரைவுக் குழு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஒப்படைத்த நாள் 1950, நவம்பர் 26. அந்த நாளை டாக்டர் அம்பேத்கருக்கு தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அர்ப்பணித்து பல நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் விமர்சித்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே அல்ல. அதில் பெரும் பங்குகொண்ட ஜவஹர்லால் நேருவின் பங்கை பாஜக மூடிமறைக்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதில் துளியும் உண்மையில்லை. இந்த விமர்சனத்தை நேருவேகூட இப்போது இருந்திருந்தால் விரும்பியிருக்க மாட்டார்.

உண்மையில் அப்போது நடந்த்து என்ன? சில சரித்திரப் பக்கங்களைப் புரட்டினால், இந்திய அரசியல் சாஸனத்தின் சிற்பி யார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்கும். அதுவே இக்கட்டுரையின் நோக்கம்.

சுதந்திர இந்தியாவுக்கென தனித்த அரசியல் சாஸனம் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்தவுடன், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சாசன சபையின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 டிசம்பர் 13 அன்று அரசியல் சாசன சபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து இப்பணியை அவர் ஆரம்பித்து வைத்தார். இதில் டிசம்பர் 17-இல் டாக்டர் அம்பேத்கர் தனது முதல் கன்னிப்பேச்சை சாதாரண உறுப்பினராகவேத் தொடங்கினார்.

டிசம்பர் 1946-லிருந்து ஜூன் 1947 வரை அரசியல் சாஸன சபையில் அரசியல் சாஸனத்தை வரைவதிலும் பல குழுக் கூட்டங்களிலும் டாக்டர் அம்பேத்கரின் தலைசிறந்த பங்களிப்பை பல மூத்த தலைவர்கள் கண்கூடாக்க க்ண்டனர். டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாஸன சபையில் ஏறத்தாழ அனைத்து முக்கிய குழுக்களிலும், அவரது அறிவுத் திறனையும் பங்களிப்பையும் பிறர் உணர்ந்திருந்த காரணத்தால் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

பின்பு டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு உதவ ஒரு பரந்த ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவுக்கு சர்தார் வல்லபபாய் படேல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் உறுப்பினராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். பல்வேறு சூழ்நிலைகளில் குழுவின் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலும் மூத்த தலைவர் ராஜாஜியும் அம்பேத்கரின் கருத்துகளை வரவேற்றுப் பாராட்டினார்கள்.

அதேசமயம், இடைக்கால அரசின் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேரு தலைமையில் ஐக்கிய அரசியல் சாஸனக் குழு அமைக்கப்பட்டது. நேரு இக்கூட்டத்துக்கு வர இயலாதபோது தற்காலிகத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இதற்கிடையே அரசியல் சாஸன சபையின் உறுப்பினர் பதவியை டாக்டர் அம்பேத்கர் இழந்துவிட்டார். டாக்டர் அம்பேத்கர் இல்லாத நிலையில், சாஸன சபையின் பணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சபையின் வேலைகள் அனைத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டது. இதை உணர்ந்த ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபபாய் படேல் மும்பையில் முதல்வராக இருந்த திரு.பி.ஜி.கேர் என்பவருக்கு கடிதம் எழுதி ‘டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுக்க வழி செய்ய முயற்சி செய்யுங்கள்’ என்று எழுதினர். ஒரு காலத்தில் காங்கிரசையே எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கரின் சேவை சாஸன சபைக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருந்தது என்பதை மாபெரும் காங்கிரஸ் தலைவர்களே உணர்ந்திருந்தனர் என்பதை, இக்கடிதங்கள் நமக்கு உணர்த்தும். மீண்டும் டாக்டர் அம்பேத்கர் சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, இந்திய அரசியல் சாஸனம் வரைய சரியான ஒருவர் கிடைக்கவில்லையென காந்தியிடம் கூறி பல நாடுகளுக்கு சாஸனங்களை வரைந்த சர் ஐவர் ஜென்னிங்ஸை அழைக்க பிரதமர் நேரு அனுமதி கோரினார். காந்திஜி இதற்கு மறுப்புத் தெரிவித்து, டாக்டர் அம்பேத்கர் பெயரைப் பரிந்துரைத்தார்.

மேலும் டாக்டர் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளுமாறு காந்திஜி கூறியபோது, தயக்கம் காட்டிய நேரு, டாக்டர் அம்பேத்கர் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்று கூறினார். ஆனால் காந்திஜியோ ‘டாக்டர் அம்பேத்கரின் திறமைகள், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

நேருவின் தயக்கத்துடனேயே தான், டாக்டர் அம்பேத்கர் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். 1947, ஆகஸ்ட் 29-இல் அரசியல் சாஸன சபை ஒரு குழுவை அமைத்தது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், திரு.அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், திரு.என்.கோபால்சாமி ஐயங்கார், திரு.கே.எம். முன்ஷி, திரு.சையது முகமது சாதுல்லா, சர்.பி.எல்.மிட்டர், திரு.டி.பி.கைத்தான்- இவர்கள்தான் வரைவுக்குழுவினர். இக்குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுதான் அரசியல் சாஸன வரைவை முழுமையாகத் தயாரித்தது. டாக்டர் அம்பேத்கர் மிகக் கடுமையாகவே உழைத்தார்.

அரசியல் சாஸனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வாறு இருந்தது என்பதை டி.டி.கிருஷ்ணமாச்சாரி எவ்வாறு பாரட்டினார் என்று பாருங்கள்:

“அரசியல் சாசனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் ஆர்வத்தையும் கடுமையான உழைப்பையும் நான் அறிவேன். சபையால் வரைவுக் குழுவுக்கு அமர்த்தப்பட்ட எழுவரில், ஒருவர் பணியிலிருந்து நீங்கிவிட்டார். ஒருவர் காலமாகிவிட்டார். அந்த இடம் நிரப்பப்படவில்லை. இன்னொருவர் அமெரிக்கா சென்றுவிட்டார். மற்றொருவர் மாநில வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஓரிருவர் தில்லியிலிருந்து தொலைவில் இருந்த்தால், அவர்களுடைய உடல்நிலை காரணமாக வருகை தர இயவில்லை. ஆதலால் அரசியல் சாஸனம் வரையும் முழுப் பொறுப்பும் டாக்டர் அம்பேத்கரிடம் சென்றது. அவர் அக்கடமையைச் செவ்வனே செய்ததால் நாம் அவருக்கு நன்றியுடையவராகிறோம் எனக் கூறுவதில் எந்த ஐயமும் இல்லை”

-என்று கூறினார் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அந்த அளவுக்கு டாக்டர் அம்பேத்கரின் பணி நிகரற்றதாக இருந்தது.

1949 செப்டம்பர் 16 அன்று எல்லா ஷரத்துகளின் மீதும் நடைபெற்ற விவாதங்கள் முடிவடைந்தன. செப்டம்பர் 17 அன்று டாக்டர் அம்பேத்கர் ஒரு தீர்மானத்தை மொழிந்தார். அதன்மீதான விவாதம் 10 வாரங்களுக்கு நடைபெற்றது. இறுதியாக டாக்டர் அம்பேத்கரைப் பாராட்டி பேசிய உறுப்பினர்களின் பேச்சுகளை ஆராய்ந்தால் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வளவு முக்கியமானது என்பது விளங்கும்.

திரு.சேட் கோவிந்ததாஸ்: முதலில் இந்த அமைப்புச் சட்டத்துக்கு சரியான வடிவத்தைக் கொடுப்பதற்கு பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரைப் பாராட்ட விரும்புகிறேன். அவர் தனக்குத் தரப்பட்ட பணியை மிகத் திறமையாகச செய்து முடித்திருக்கிறார்.

திரு.குலாதர் சாலிஹா: இந்த அற்புதமான அமைப்புச் சட்டத்தை எவ்வளவோ இடப்ப்பாடுகளுக்கிடையில் தயாரித்த வரைவுக் குழுவினரையும், எல்லாவற்றிற்கும் மேலாக இக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் வாழ்த்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

திரு.டி.பிரகாசம்: டாக்டர் அம்பேத்கர் ஒரு சட்ட மேதை. இவர் இங்கு செய்த பணியால் இங்கிலாந்து நாட்டின் அரசு வழக்கறிஞராக ஆவதற்கும் தகுதி பெற்றவர் என மெய்ப்பித்துள்ளார்.

திரு.எச்.ஜே.காண்டேகர்: இந்த அமைப்புச் சட்டத்தை நான் ‘மகர் சட்டம்’ என்று அழைக்கிறேன். ஏனென்றால் டாக்டர் அம்பேத்கர் ஒரு மகர். மனுநீதியை நாம் அகற்றிவிட்டு மகர் நீதியைப் பெற்றுள்ளோம். மனுநீதியால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை. மகர் நீதியால் இந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக ஆக்குவோம்.

திரு.மக்பூப் அலி பேக்: இந்த அமைப்புச் சட்டத்தை மிகத் திறமையோடு வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை நான் பாராட்டுகிறேன். அமைப்புச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பற்றியும், குறிப்பாக நிதித்துறை சம்பந்தமாகவும் அவருக்கு இருக்கின்ற அறிவு, அவரது பேச்சுத்திறன் ஆகியவையெல்லாம் அற்புதமானவை. முழுமையானவையும் கூட.

திரு.எஸ்.நாகப்பா: இந்த அருஞ்செயலின் மூலம் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் திறமையற்றவர்கள் என்கிற மாசு துடைக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அல்லாமல் வாய்ப்புகள் கிடைக்குமேயானால் மற்றவர்களை மிஞ்சவும் முடியும் என்பதும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதற்காக நான் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பாராட்டுகிறேன்.

திரு.ஜஸ்பத்ராய் கபூர்: டாக்டர் அம்பேத்கர் இந்த சபையில் ஆற்றிய முதல் உரை, அதற்குப் பிறகு பல நேரங்களில் ஏற்பட்ட சிக்கல்களைத் திறமையுடன் இவர் நீக்கிய முறை, அமைப்புச் சட்டத்துக்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஆகியவற்றைப் பார்க்கின்றபோது, டாக்டர் அம்பேத்கர் மிகச்சிறந்த தேசபக்தர் என நான் கூறுவேன்.

திரு.சியாமாநந்தன் சகாயா: நம் நாட்டின் விடுதலையை மகாத்மா காந்தி பெற்றுத் தந்தார். அதனுடைய அமைப்புச் சட்டத்தை, மகாத்மாவைக் கடுமையாக விமர்சித்த சட்டமேதையான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கியுள்ளார். இவரை நம்முடைய சாஸன சபை மட்டுமல்லாமல் நம்முடைய நாடே பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

திரு.கோபால் நாராயண்: இவர் வடிவமைத்த இந்த மாபெரும் அமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு பொருளையும் இவர் விட்டுவிடவில்லை. டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இவர் அறிவுத் தன்மையின் மனித உருவம் மட்டுமல்ல, தனக்குப் பேரும் புகழும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

திரு.ஆர்.வி.துலேர்: நம் எதிரில் வைக்கப்பட்டதானது ஒரு மாபெரும் பணி. டாக்டர் அம்பேத்கர் இதனை மிகவும் திறமையாகச் செய்து முடித்திருக்கிறார். இந்தப் பணியானது பாண்டவர்களில் பீமனின் பெருஞ்செயல் போன்றது. அவரது பெயர் பீமராவ் அம்பேத்கர். தன்னுடைய பெயருக்கு ஏற்ப இருந்தது அவருடைய பணி. தெளிவான பேச்சு, தொலைநோக்கு இவற்றின் மூலம் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த எல்லா உறுப்பினர்களின் எண்ணங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கேற்ப தம்முடைய கருத்துகளைத் தெளிவான பாணியில் கூறினார்.

திரு.அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்: டாக்டர் அம்பேத்கர் இந்த வரைவு அமைப்புச் சட்டத்தின் தலைவராக, தன்னுடைய அயராத உழைப்பின் மூலமாக எவ்வளவு திறமையுடன் இதனை வடிவமைத்துள்ளார் என்பதனை நான் பாராட்டாவிட்டால், என்னுடைய பொறுப்பிலிருந்து தவறியவனாவேன்.

திரு.கே.எம்.ஜேதே: பட்டியலின மக்கள் டாக்டர் அம்பேத்கரை வெகுவாகப் பாராட்டிப் போற்றி வருகின்றனர். ஆகவே, இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ‘பீம் ஸ்மிருதி’ என்றுதான் அழைக்க வேண்டும். சட்டத்தின் மூலமாகத் தீண்டாமையை ஒழித்து விட்டார் டாக்டர் அம்பேத்கர்.

திரு.ஃபிரேங்க் அந்தோணி: இந்த கனமான, கடினமான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்க வேண்டுமென்று நம்மால் ஆழ்ந்து பார்க்கக்கூட இயலாது.

1949 நவம்பர் 25-இல் டாக்டர் அம்பேத்கர் நிறைவுரையாற்றினார். அதன்பின்னர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் கூறினார்:

“இந்த நாற்காலியில் நான் அமர்ந்து கொண்டு, அன்றாடம் இந்த மன்றத்தின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டு வந்த நேரங்களிலெல்லாம், வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய உடல்நலம் குன்றியிருந்தாலும் எவ்வளவு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தன்னுடைய கடமையை ஆற்றியுள்ளார் என்று உணர்ந்தேன். நாம் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரியான முடிவு என்பதையும் நான் உணர்ந்தேன். இந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை அவர் மெய்ப்பித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய பணிக்கு அவர் மெருகு ஏற்றியுள்ளார் என்றே கூற வேண்டும்”.

-இப்படி எல்லோரும் அரசியல் சாஸனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணியை (பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள் தான்) கூறினாலும், இப்போதைய காங்கிரஸ்காரர்களுக்கு அதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் ஏனோ தெரியவில்லை. அதனால் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களே, டாக்டர் அம்பேத்கரின் பணியைப் பாராட்டியிருக்கிறார்:

“டாக்டர் அம்பேத்கரைக் காட்டிலும் அரசியல் சாஸனம் உருவாவதற்கு வேறு யாரும் அதிக அக்கறையும் உழைப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் ஐயமில்லை.”

இதுதான் இந்திய அரசியல் சாஸனம் வடிவமைத்த சிற்பியின் கதை. இந்த நாடு உள்ள வரை, இந்த நாட்டுக்கென தனித்த சிறப்புடைய அரசியல் சாஸனத்தை வடிவமைத்த டாக்டர் பீமராவ் அம்பேத்கரின் புகழும் நிலைத்திருக்கும்.

மனு ஸ்மிருதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சமுதாயத்தின் பெரும்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி அடக்கியாண்ட ஆதிக்க சக்திகளுக்கு தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும் சரியான மருந்தைக் கொடுத்தார் அம்பேத்கர். ஒருமைப்பாட்டை வலுவாக்கும் ‘பீம ஸ்மிருதி’ என்று அழைக்கத் தக்க அற்புதமான அரசியல் சாஸனத்தை அவர் வழங்கிச் சென்றார்.

அம்பேத்கரின் 125-வது பிறந்த தின ஆண்டு கொண்டாடப்படும் இக்காலத்தைவிட, அவரது அரும்பணியை மெச்சுவதற்கு வேறெந்தக் காலம் பொருத்தமாக இருக்க முடியும்?

 

குறிப்பு:

 திரு. ம.வெங்கடேசன்,  எழுத்தாளர்; அம்பேத்கரியல் ஆய்வாளர்.

.

%d bloggers like this: