Category Archives: மகளிர் திலகம்

இந்திய மண்ணை மணக்கச் செய்த அயர்லாந்து முல்லை

-பேரா. தி.இராசகோபாலன்

b6516-nivedita

சகோதரி நிவேதிதை

 

சகோதரி நிவேதிதை

(பிறப்பு:  1867, அக். 28- மறைவு: 1911, அக். 11)

நிவேதிதை-150வது ஆண்டு  துவக்கம்

.

நிலத்தை நன்கு உழுது, எருவிட்டு, நீர்ப்பாய்ச்சி முறையாக வளர்க்கப்பட்ட பயிரைக் காட்டிலும் எங்கோ ஒரு திசையிலிருந்து வந்து விழுந்து, தானே முளைக்கின்ற விதை ஆச்சரியப்படத்தக்க வகையில் அமோக விளைச்சலைத் தரும். அப்படி அயர்லாந்திலே இருந்து வந்து இந்திய மண்ணில் விழுந்த விதைதான், சகோதரி நிவேதிதா.

1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாளில், சாமுவேல் ரிச்மென்ட் நோபில் எனும் தந்தைக்கும் – மேரி இசபெல் எனும் தாய்க்கும் மகவாக, அயர்லாந்து மண்ணில் மார்க்ரெட் எலிசபெத் நோபில் எனும் பெயரில் ஓர் அரும்பு முளைத்தது. தந்தை சாமுவேல் ஒரு மதபோதகர்.

என்றாலும், ஏழ்மையை ஆணிவேரிலிருந்து அகற்றுவதுதான் மார்க்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை மகளுக்குப் பாலபாடமாகப் படிப்பித்தார். பெற்ற தந்தையால் விதைக்கப்பட்ட வித்து, ஹாலிபேக்ஸ் கல்லூரியில் மாணவியாக இருந்த மார்க்ரெட் நெஞ்சில், ஞானத்தந்தையாகிய சுவாமிஜி விவேகானந்தரால் நீரூற்றி வளர்க்கப்பட்டது.

சிகாகோ நகரில் சுவாமிஜி வெளிப்படுத்திய ஆன்மிக ஆவேசம், இலண்டனிலிருந்த மார்க்ரெட் மனத்தில் எக்ஸ்ரே கதிர்களாகப் பரவியது.

1895-ஆம் ஆண்டு இலண்டனிலிருந்த தமது சீடர் இசபெல்லா மார்க்கஸன் இல்லத்திற்கு சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் நிகழ்த்த இருந்த பிரசங்கத்திற்கு இசபெல்லா தம் தோழியாகிய மார்க்ரெட்டையும் அழைத்திருந்தார். சுவாமிஜியின் புதிய வெளிச்சத்தில் அனைவரும் வழி கண்டனர், மார்க்ரெட்டைத் தவிர.

சமூக ஏற்றத்தாழ்வு எனும் புண்ணிற்குப் போதிமரத்துப் புத்தன் தான் புதிய மருந்து தடவுவான் என எண்ணியிருந்த மார்க்ரெட், சுவாமிஜியிடம் எதிரும் புதிருமாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.

மலை கலங்கிலும், கடல் கலங்கிலும் நிலை கலங்காத சுவாமிஜி, “மகளே, என்னை ஏற்றுக்கொள்வது சிரமமே, புரிகிறது. அது தவறும் இல்லை. என்னுடைய குருவான பரமஹம்சரிடம் ஆறு ஆண்டுகள் போராடிய பிறகே அவரை நான் ஆசாரியனாக ஏற்றேன். அதனால் சந்தேகங்கள் கிளம்பிப் பதில் கிடைக்கும் போதுதான், ஒவ்வொரு விஷயமும் தெளிவாகப் புரியும்” என்றார்.

சுவாமிஜியின் அடுத்தநாள் சொற்பொழிவுக்கும் மார்க்ரெட் சென்றார். தீட்சா ரகசியங்களில் ஆழங்காற்பட்டிருந்த சுவாமிஜி,  “இந்தியா முன்னேற, உலகின் ஆன்மிக மகுடம் தரித்திருக்கும் பாரதத்தின் துயர் தீர்க்க, பெண்கள் கல்வி, பெண்கள் முன்னேற்றம் இவற்றிற்குத் தொண்டாற்ற, துணிவே துணை என கொள்கை தீபம் ஏற்றும் பல புத்தர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தப் பணியில் உங்களில் யார் அர்ப்பணிக்கப் போகிறீர்கள்? உங்கள் தொண்டுக்கு நான் கடைசிவரை தோள் கொடுப்பேன்” என்றார்.

சுவாமிஜியின் ஞானஸ்நானத்தில் முழுமையாக நனைந்த மார்க்ரெட்,  “இந்தியாவுக்கு எப்போது புறப்பட வேண்டும் சுவாமிஜி?” என்றார். சுவாமிஜி,  “மண்ணுக்குள் விதைக்கப்பட்ட விதை, தோல்களைப் பிளந்து கொண்டு வெளியே தலைகாட்டும்வரை காத்திரு” எனக் கூறிச் சென்றார்.

சுவாமிஜியின் இசைவு பெற்று, மார்க்ரெட் 28.01.1898 அன்று கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார். மாம்பசா எனும் கப்பலின் மூலம் வந்த மார்க்ரெட்டை சுவாமிஜியே துறைமுகத்திற்குச் சென்று வரவேற்கின்றார். மார்க்ரெட் முதல் வேலையாகப் பரமஹம்சர் நிர்மாணித்த தட்சிணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.

சுவாமிஜி 1898 மார்ச் 11-ஆம் நாளன்று, கல்கத்தா ஸ்டார் தியேட்டரில் மார்க்ரெட்டை அறிமுகப்படுத்துகிறார். மார்க்ரெட் எனும் பெயரை மாற்றி, நிவேதிதா என நன்னீராட்டுகின்றார்.  “இந்தியாவுக்கு இங்கிலாந்து சில நன்கொடைகளை வழங்கியிருக்கிறது. அவற்றுள் தலையானது சகோதரி நிவேதிதா எனக் குறிப்பிடலாம்” என்றார் சுவாமிஜி.

மார்ச் 17-ஆம் நாள் சகோதரி நிவேதிதா, அன்னை சாரதா தேவியைச் சந்திக்கிறார். அன்னையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, அவர் கையிலிருந்த கைக்குட்டையால் பாதங்களில் படிந்திருந்த தூசியைத் துடைக்கிறார்.
அன்னையும் என் மகளே (வங்காளத்தில் கோக்கி) என்று வாரி அணைத்து, உச்சிமுகந்து ஆசீர்வதித்தார். அன்னையின் குடிலில் தங்கத் தொடங்கிய பிறகு, நிவேதிதா ஓர் இந்து பெண் சந்நியாசியாகவே மாறிவிடுகிறார்.

சகோதரி நிவேதிதாவின் தொண்டு வாழ்க்கையில் – அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையில் இடிதாங்கி மேலேயே இடி விழுந்தது போன்றதோர் துயரம் ஏற்பட்டது. சுவாமிஜி, 1902 ஜூலை 4-ஆம் நாள் இரவு அமரத்துவம் அடைந்த செய்தி, பேலூர் மடத்திலிருந்து சகோதரி நிவேதிதாவிற்கு தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் சகோதரி, இராமகிருஷ்ண பரமஹம்சரின் உடலிலிருந்து இரண்டாவது முறையாக உயிர்பிரிந்து மேலே செல்லுவதுபோல் கனவு காணுகிறார். உடனடியாக அவர் பேலூர் மடத்திற்கு விரைகிறார்.

படுக்கையில் அமர்த்தப்பட்டிருந்த சுவாமிஜியின் தலைமாட்டில் அமர்கிறார். உட்கார்ந்த நேரத்திலிருந்து சுவாமிஜியின் புகழுடம்பு, நீராட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வரையில், பனையோலையால் செய்யப்பட்ட விசிறியால் விசிறிக்கொண்டேயிருந்தார்.
சுவாமிஜியின் புகழுடம்பு தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, சுவாமிஜியின் உடம்பின்மீது போர்த்தப்பட்டிருந்த காவித்துணியிலிருந்து ஒரு துண்டு வெட்டித் தரும்படி, மடத்துத் தலைவர் சுவாமி சாரதானந்தாவிடம் வேண்டுகிறார். அவரும் சம்மதித்தாலும், அச்செயல் சுவாமிஜியின் புனிதயாத்திரை நேரத்தில் சரியாக இருக்குமா எனச் சிந்தித்து அவரே வேண்டாமென்று மறுதலிக்கிறார்.

ஆனால், தகனத்தின்போது ஓர் அதிசயம் நிகழ்கிறது. தகனத்தின்போது, தீயின் கடைசி கங்கு அணைகின்ற வரையில் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நிவேதிதா. அப்போது தமது அங்கியின் பின்புறத்தை யாரோ பின்னாலிருந்து இழுப்பதுபோன்று ஓர் தொடுவுணர்ச்சி நிவேதிதாவிற்கு ஏற்படுகிறது.

திடீரென்று எரிந்து கொண்டிருந்த புகழுடம்பிலிருந்து ஒரு துண்டுக் காவித்துணி புறப்பட்டு வந்து நிவேதிதாவின் மடியில் விழுகிறது. அதனை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்ட நிவேதிதா, அது தம்முடைய குருஜியின் கடைசி ஆசீர்வாதம் எனக் கருதி, அதனைத் தம்முடைய அமெரிக்கத் தோழி, ஜோசப் மேக்லியோடிக்கு அனுப்பிவிடுகிறார்.

1905-ஆம் ஆண்டு காசி காங்கிரசை முடித்துக்கொண்டு, மகாகவி பாரதி கல்கத்தா வழியாகச் சென்னைத் திரும்ப நினைத்தபோது, கல்கத்தா டம்டம் விமான நிலையத்தில் சகோதரி நிவேதிதா தங்கியிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றார். அத்தரிசனம் ஒரு தெய்வ தரிசனமாயிற்று. ஒரு குருஜிக்குச் சீடராக வந்த நிவேதிதா, ஒரு மகாகவிக்கு ஞானகுருவாகிறார்.

தம்முடைய படைப்புகளை எந்தத் தனிமனிதருக்கும் சமர்ப்பிக்காத மகாகவி பாரதி, ஞானரதம் போன்ற நான்கு படைப்புகளை ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் அன்னை நிவேதிதாவிற்குச் சமர்ப்பித்து, “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப எனக்குப் பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, சுதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரணமலர்களில், இச்சிறு நூலில் ஸமர்ப்பிக்கின்றேன் சுதேசிய பாடல்களை சமர்ப்பிக்கின்றேன்” என்று எழுதுகிறார்.

அடுத்து ‘ஜென்மபூமி’ எனும் தலைப்பில் வெளியிட்ட சுதேசிய கீதங்களையும், “எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீநிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றவாறு எழுதி, குருவணக்கம் செய்கிறார்.

மேலும், நிவேதிதாவின் குரு உபதேசத்தை, “சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் … பெற்றதை ஏதென்று சொல்வேன் சற்றும் பேசாத காரியம் பேசினர் தோழி” என ‘ குரு உபதேசம்’ எனும் தலைப்பில் பரவசப்பட்டுப் பாடுகிறார்.

சுவாமிஜி அமரத்துவம் அடைந்த பின்னர், சகோதரி நிவேதிதா ஆன்மிகப் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, விடுதலைப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்றார்.

அரவிந்தருடனும், அனுசீலன் சமிதி எனும் இரகசிய புரட்சியாளர்களுடனும் இணைந்து, இந்திய விடுதலையில் தீவிரவாதம் காட்டுகிறார். கவிஞர் இரவீந்திரநாத தாகூர், நிவேதிதாவின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சுகிறார். வங்காளப் பிரிவினையை எதிர்த்துப் போராடியதில் லார்ட் கர்சானுக்கே ஒரு நடுக்கம் ஏற்படுகின்றது.

1911-ஆம் ஆண்டில் நிவேதிதா நோய்வாய்ப்பட்டுள்ளார். 06.10.1911 அன்று தம்முடைய சொத்துகளையும், உடைமைகளையும் தாம் தோற்றுவித்த பள்ளிக்கே சேருமாறு உயில் எழுதி வைக்கிறார். அச்சொத்துகளைப் பராமரிக்கின்ற உரிமையை பேலூர் மடத்தின் ஆதீனகர்த்தாக்களுக்கே வழங்கினார்.

அந்திம காலத்தில் அறிவியலறிஞர் ஸர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தம்பதியருக்குச் சொந்தமான டார்ஜிலிங் மாளிகையில் சகோதரி நிவேதிதா தங்குகிறார். 13.10.1911 அன்று தமது 44-வது வயதில் அவருடைய ஆன்மா இறைவனடியில் பரிபூர்ணத்துவம் அடைகிறது.
அவருடைய கல்லறையில்  ‘இந்தியாவிற்கே எல்லாவற்றையும் அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே இளைப்பாறுகிறார்’  எனப் பொறித்து வைத்திருக்கிறார்கள்.

நம்மை அடிமைப்படுத்திய மண்ணிலிருந்தே புறப்பட்ட பூவொன்று, அம்மண்ணிற்கே புயலானது. சகோதரி நிவேதிதா, சுவாமிஜிக்குச் சீடரானார். மகாகவி பாரதிக்குக் குருவானார்.

குறிப்பு:.

இந்த ஆண்டு சகோதரி நிவேதிதை பிறந்த 150-ஆவது ஆண்டு.  திரு. தி.இராசகோபாலன்,  ஓய்வு பெற்ற பேராசிரியர்.

.
நன்றி: தினமணி (28.10.2016)

Advertisements

விண்ணில் மின்னும் வீராங்கனை

-ம.பூமாகுமாரி

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

(பிறப்பு: 1961 ஜூலை 1- மறைவு: 2003, பிப்ரவரி 1)

இந்திய வம்சாவளியில் வந்த ஒரு பெண், விண்ணை அளந்தவள் என்ற பெருமைக்கு உரியவராகிறார் என்றால் நம் சமூகத்திற்கு, குறிப்பாக இந்திய பெண்களுக்கு எத்தனை பெருமை, எத்தனை உத்வேகம்? அவர் தான் கல்பனா சாவ்லா.

அவர் ஓர் அமெரிக்க விண்வெளி வீரர்.  1961 , ஜூலை 1-இல் அவர் பிறந்தது இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில், கர்னல் எனும் ஊரில்.  படித்தது தாகூர் பள்ளி,  கர்னல்.  1976-இல்  அறிவியலில் இளங்கலை பட்டம் முடித்தார். பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ‘ஏரோனாடிகல் இஞ்சினீயரிங்’ துறையில் படித்தார். முதுகலை படிப்பிற்காக 1982-இல் அமெரிக்கா பறந்தார். டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் ‘ஏரோஸ்பேஸ் இஞ்சினீயரிங்’கில் முதுகலைப் பட்டம்  (1984) பெற்றார். பிறகு,  அதே பாடத்தில் கொலரேடோ பல்கலைக்கழகத்தில் 1988 வரை முனைவர் பட்டத்திற்காக உழைத்தார்.

 1983 -ஆம் ஆண்டு ஜீன் பியரி ஹாரிஸன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்து அமெரிக்க குடிமகளானார்.

நாசா அனுபவம்:

யாருக்கும் எளிதில் கிடைக்காத ஒன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் (NASA) பணி புரியும் வாய்ப்பு. அநத வாய்ப்பு கல்பனாவுக்குக் கிடைத்தது. முனைவர் பட்டம் வரை அதற்காகத் தன்னைத் தகுதி உடையவராக ஆக்கிக்கொள்ள கடுமையான உழைப்பும், சோர்வின்மையும், மிகக் கவனமாக செயல்படுதலும், உற்சாகமும், குன்றாத நம்பிக்கையும் அவரிடத்தில் ஏராளமமாக இருந்தன.

அந்நிய நாட்டில் சென்றால் முதலில்  தன்னை நிரூபிக்க, நிலைநிறுத்தவே வெகுவாக கஷ்டப்பட நேரிடும். கடுமையான போட்டி இருக்கும் சூழல் வேறு. அந்த நாட்டைச் சேர்ந்த அமெரிக்கர்கள் மட்டுமல்லாது, வேறு பல ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் பிற நாடுகள் என்று எங்கிருந்து எல்லாமோ இளம் மாணவ மாணவிகள் தங்களை நிரூபிக்க, தங்கள் பலத்தை சோதிக்க, முன்வரும் பூமி அது. அதில் வெற்றி என்பது அத்தனை எளிதானது அல்ல. அயராத உழைப்பு, தன் முனைப்பு, வேலையில் முழு சரணாகதி இவை கல்பனா சாவ்லாவிடம் அமைந்திருந்தது வியப்பாக உள்ளது.

1994 டிசம்பரில் நாசாவில் பணி புரிய கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏவுதள ஆராய்ச்சி மையத்தில், ‘கம்ப்யூடேஷனல் ஃபுளூயிட் டைனமிக்ஸ்’ல் தான் அவருக்கு முதல் பணி. ஏவுகணைகள் சந்திக்கும் சிக்கலான காற்றுவெளி, காற்றோட்டம் இதை உருவகப்படுத்தி சோதனை செய்யும் பெரிய பொறுப்பு இளம் வயதில் கல்பனாவுக்கு கிடைத்தது. அதை முடித்தவுடன்,  அடுத்த பணி,   இயக்கப்படும் லிஃப்ட் கணிப்புகள் சம்பந்தமானது.

1993-இல்  ‘ஓவர்செட் மெத்தட்ஸ்’ என்ற நிறுவனத்தில் கலிஃபோர்னியாவில் பணியைத் தொடங்கினார், ‘ஏரோ டைனமிக்ஸ் ஆப்டிமைசேஷன்’ என்பது தான் அவரின் அத்தனை சோதனைகளையும் இணைக்கும் அடிநாதம். இந்தச் சோதனைகள் எல்லாம் தொழில்நுட்ப மாநாட்டில் ஆவணங்களாக, சஞ்சிகைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன.

நாசா- ஓர் அறிமுகம்:

இவ்வளவு எல்லாம் கல்பனாவைப் பற்றித்தெரிந்து கொள்ளும்போது,  NASA வைப் பற்றியும் சில அரிய தகவல்கள் இதோ:

1. (அமெரிக்க) தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பே நாசா எனப்படுகிறது.

2. பொதுமக்களின் விண்வெளி திட்டம், விண் பயணம் பற்றிய அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான பொறுப்பு நாசாவினுடையதே.

3. அப்போலோ சந்திரனில் மனிதன் கால் பதித்தது, ஸ்கை லேப், விண்கலம் ஆகியவை நாசாவின்  உழைப்பே.

4. சர்வதேச விண்வெளி ஸ்டேஷனுக்கு நாசா தான் ஆதாரமாக உள்ளது.

5. விண்வெளியைப் புரிந்துகொள்ள, அதன் ரகசியங்களை மனிதன் உணர்ந்துகொள்ள, நாசா பெரும்பங்கு ஆற்றுகிறது.

6. பூமியைப் பற்றி மேலும் தகவல்கள் அறியவும் நாசாவின் விண்கலங்கள் அனுதினமும் விண்வெளியில் சுற்றி வருகின்றன.

7. அக்டோபர் 1, 1958-இல் நாசா தனது பணியைத் துவங்கியது.  8,000 பணியாளர்களையும், வருடத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் கொண்டு இயங்க ஆரம்பித்தது.

8. Langley Aeronautical Laboratory, Ames Aeronautical Laboratory மற்றும் Lewin Flight Propulsion Laboratory ஆகிய மூன்று மிகப் பெரிய சோதனைக் கழகங்கள் நாசாவுக்கு பெருமை சேர்க்கின்றன.

9. அப்போலோ தொடங்கி ஸ்பேஸ் ஷட்டில், ஸ்பேஸ் ஸ்டேஷன், என வியக்க வைக்கும் அனி வகுப்பு- நாசாவினுடையது.

10. ஜான் கு.கென்னடி ஸ்பேஸ் சென்டர், நாசாவின் வசதிகளில் ஒன்று.

கல்பனாவும் நாசாவும்:

1994  டிசம்பரில் கல்பனா ஜான்சன் விண்வெளி மையத்தில் ஒரு விண்வெளி வீரராகப் பதிவு செய்தார். ஒரு வருடம் பயிற்சி, தேர்வுக்குப்பின், ரோபாடிக்ஸ், கணினிப் பிரிவுகளில் பணி புரிய ஆரம்பித்தார். 1998 ஜனவரியில்  ‘க்ரூ ரெப்ரசென்டேடிவ்’ (விண்கலக் குழு) ஆக, விண்கலத்தில் பணி செய்ய பணிக்கப்பட்டார்.

1997-இல் STS -87,  2003-இல் STS -107 ஆகியவற்றில் 30 நாட்கள், 15 மணி நேரம் விண்ணில் பறந்தார்.

STS -87 (ஸ்பேஸ் ஷட்டில்)  4-வது அமெரிக்க மைக்ரோ கிராவிட்டி பே லோடு ஃபிளைட். ஆதில் தான் சோதனைகள் மேற்கொண்டார் கல்பனா. விண்வெளியில் பாரமற்ற சூழல் நிலவுகிறது. பல்வேறு உடல் செயல்பாடுகள் இச் சூழலில் எங்ஙனம் உள்ளது என்பது அவர் சோதனைக்கு எடுத்துக் கொண்டதில் நமக்குப் புரிகிற பாகம். சூரியனின் வளி மண்டல அடுக்குகள் இந்த பாரமற்ற சூழலில் என்ன பாதிப்புக்கு உள்ளாகின்றன என்றும் கவனித்தார்.

STS -87, 252 தடவை பூமியைச் சுற்றியது. 6.5 மில்லியன் மைல்கள் 376 மணி நேரம் 34 நிமிஷங்களில் கடந்து வந்துள்ளார். இதைக் கேட்டாலே நமக்கு தலை சுற்றுகிறதே? STS -107 கொலம்பியாவில் (ஜனவரி 16, 2003- பிப்ரவரி 1,2003) 16 நாட்கள் விண்வெளிப் பயணம் – அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் முழு கவனம் செலுத்தியது. ஒரு நாளில் 24 மணி நேரங்கள் அயராத உழைப்பு.  மாறி மாறி, விண்வெளி வீரர்கள் மிக கெட்டிக்காரத் தனமாக 80 சோதனைகளைச் செய்து முடித்திருந்தனர்.

விதி வலியது:

STS -107 என்ற இரண்டாவது ஃபிளைட்டுக்குத் தயாரான போது 2000-ஆம் ஆண்டில் முதல் தடைவ தட்டிப் போனது சில கோளாறுகளால் 2002 ஜூலைக்குத் தள்ளிப் போனது. அப்புறம் அதிலும் ஷட்டிலில் சில விரிசல்கள் கண்டுபிடிக்கப் பட்டு அவை களையப்பட்டன.

ஜனவரி 16, ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில், கல்பனா சாவ்லாவும் ஏனைய விண்வெளி வீரர்களும் சென்றனர். மரணத்தை நோக்கி விதி அவரை இட்டுச் சென்றதோ எனத் தோன்றுகிறது. அந்தப் பயணத்தில் கல்பனா மைக்ரோ கிராவிட்டி சோதனைகளுக்குப் பொறுப்பேற்று இருந்தார்.

பிப்ரவரி 1,2003-இல் டெக்சாஸ் மேல் விண்ணில் இருந்து பூமியின் வளி மண்டலத்திற்குள் மீண்டும் புகும் வேளையில் அது வெடித்துச் சிதறியது. 16 நிமிடங்களில் வெற்றிகரமாகத் தரையிறங்கிக வேண்டிய விண்கலம். எத்தனை துயரமான நிகழ்வு அது. விண்வெளி வீரர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே அது அதிர்ச்சி தினமாகத் தான் விடிந்ததது. விதி வலியது. நம்மிடம் இருந்து நம்பிக்கையின் நட்சத்திரத்தைப் பறித்து சென்றது.

கல்பனாவின் வாழ்கைப் பாடம்:

ஒரு வகையில் ஆணாதிக்க சமூகத்தில் தான் கல்பனா பிறந்து வளர்ந்தார். ஆண்களே இங்கு விண்ணில் பறக்க ஆசைப்படாத வேளையில், இந்தப் பெண், வானில் சிறகசைக்க, விர்ரெனப் பறக்க யத்தனித்து ஆச்சர்யம்.

விண்ணில் பறக்க வேண்டும் என்ற ஆசையைப் பொக்கிஷமாகக் காத்து, தேவையான நடவடிக்கைகளில் உறுதியாக இறங்கி, சாதித்தும் காட்டினார் கல்பனா. மற்றவரின் ஆதிக்கப் போக்கிற்கு தன்னை உட்படுத்த ஒரு போதும் சம்மதிக்காதவர் அவர். சம காலத்தில், ஏரோநாடிக்ஸ் இன்ஜினீயரிங் விருப்பப் பாடமாக எடுத்த முதல் பெண் அவர்.

இந்தியாவின் ராகேஷ்  சர்மா ஏற்கனவே விண்ணில் பறந்தவர். இந்திய வம்சாவளியில் முதல் பெண் கல்பனா தான் விண்னை அளந்தவர். முதல் பயணத்தின் போது அவர் உதிர்ந்த நல் முத்து: You are just your intelligence (உங்கள் கெட்டிக்காரத்தனமே நீங்கள்).

JRD டாட்டாவில் கவரப்பட்டவர்; சைவ உணவு மட்டுமே உட்கொண்டார். மாமிச உணவை   அவர் கண்டிப்புடன் தவித்தார்.கடைசிப் பயணத்தில் வெண்பட்டுப் பதாகை ஒன்றை, உலகளவில் ஆசிரியர்களுக்காக பிரசாரம் செய்யும் வண்ணம் எடுத்துச் சென்றிருந்தார். 2 டஜன் இந்திய இசை மேதைகளின் இசைதட்டுகளை எடுத்துச்  சென்றிருந்தார். ஹீஸ்டனில் உள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று வந்த பக்தை. தன் சொந்த ஊரில் கிராமத்து பெண் குழந்தைகளை உற்சாகப்படுத்தி தன் வழிநடக்க பிரயத்தனம் மேற்கொண்டவர் அவர்.

கல்பனாவுக்கு மரியாதை:

கர்நாடக அரசு கல்பனா  பெயரில் பரிசு தருகிறது. ஹரியானாவில் ஒரு பிளான்டோரியத்திற்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.  நாசாவும் அவரை கௌரவிக்கத் தவறவில்லை. இந்தியா தனது சீதோஷ்ண நிலையை உணரும் விண்கலத்திற்கு  ‘கல்பனா 1’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தது.

கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா சொல்கிறார்:  “என் சகோதரி சாகவில்லை. அவர் சாகாவரம் பெற்ற நட்சத்திரம், வானில் ஒளிர்கிறார். வானத்திற்குச் சொந்தக்காரி அவர்”.

கல்பனா தனது கடைசி பேட்டியில் சொன்னது:  “பால் வீதியை நாங்கள் பார்த்திருப்போம் ஒரு கனவு போல. ஒவ்வொரு சமயம் எரி நட்சத்திரங்களைப் பார்ப்போம். அது போன்ற சமயங்களில் வியப்பும், அடிப்படைக் கேள்விகளும் என்னுள் எழும்பின. சொர்க்கங்களின் மேல் பெரும் வியப்பு தோன்றியது”.

‘நான் ஒரு மூலையில் முடங்கப் பிறந்தவள் இல்லை, இந்த பிரபஞ்சம் முழுவதும் என் சொந்தமே’ என்று செனகா என்ற தத்துவஞானி சொன்னதை வைத்தே பூமிப் பந்து, விண்வெளி ஆகியவற்றோடு தன் பிணைப்பை விவரிக்கிறார் கல்பனா.

பூமியில் பிறந்த மகள் விண்ணின் மடியில் உயிர் நீத்தாள்;  அவள் என்றும் நம் நினைவில்…

 

குறிப்பு:

திருமதி ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

.

கலைக்கோயிலை நிறுவிய மாதரசி

-ம.பூமாதேவி

ருக்மணிதேவி அருண்டேல்

ருக்மணிதேவி அருண்டேல்

ருக்மணி தேவி அருண்டேல்

(பிறப்பு: 1904, பிப். 29 – மறைவு: 1986, பிப். 24)

ருக்மணி தேவி என்றவுடன் நினைவுக்கு வருவது பிரம்மஞான சபையும் பரத நாட்டியமும் தான்.  ‘சதிர்’ என்று இருந்த தேவதாசி நடனத்தில் விரசம் அதிகம் இருந்த படியால் பொதுவாக பெண்கள் யாரும் அதை கற்றுக் கொள்ளவோ ஆடவோ தயங்கிய நிலை இருந்தது.  இதை மாற்றியவர் ருக்மணிதேவி.

மதுரையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்த ருக்மணி இயல்பாகவே கலை நடனத்தின்பால் ஈர்ப்பு கொண்டவர். ரஷ்யாவின் பாலே நடன வீராங்கனை பாவ்லோவா வின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு பாலே கற்க ஆரம்பித்தார். அவர்தான் தென் இந்தியக் கலையான பரதத்தின் பெருமைகளை ருக்மணிக்கு எடுத்துக்  கூறினார். அதையடுத்து, பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையை குருவாக ஏற்று பாரதம் கற்க ஆரம்பித்தார் .

ருக்மணியின் தந்தை ஓய்வு பெற்றவுடன், அடையாறில் பிரம்மா ஞான சபை அருகிலேயே வீடு கட்டினார். ருக்மணிக்கும் சபையில் ஈடுபாடு வந்தது. அன்னி பெசன்ட் அம்மையாரின் ஆளுமையால் ஈர்க்கப்பட் டதே அதற்குக் காரணம். பிறகு பெசன்ட் அம்மையார் காலமானதும் அருண்டேல் தலைவராக ஆனார். இருவருக்கும் மனம் ஒப்பி திருமணம் நடந்தேறியது.

1953-இல் பிரம்மா ஞான சபையில் ருக்மணி அரங்கேற்றிய பரதம்,  ஏற்கனவே கோயில்களில் ஆடிக்  கொண்டிருந்த சதிருக்கு ஊக்கம் தந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.

1936-இல் ருக்மணி தேவியால் கலாக்ஷேத்ரா சென்னை அடையாறில் நிறுவப்பட்டது. அதன் பாடத்திட்டத்தில் பரதக் கலையின் பாரம்பரியம் சேர்க்கப்பட்டது. பரதக் கலையின் வீச்சினை அவர் கலாக்ஷேத்ர பாடத்திட்டத்தில் கொண்டுவர அதிகம் சிரமப்பட வேண்டியிருந்தது.

ஏற்கெனவே ஊறியிருந்த ஸ்ருங்கார ரசத்தினைக் குறைத்து, பக்தி மார்க்கத்தின் பரவச மூட்டும் ஒளியினைப் புகட்டி, பிரத்யேக ஆடை ஆபரணங்கள், அரங்க அமைப்பு என பல்வேறு விஷயங்களை பரதத்தில் ருக்மணிதேவி  புகுத்தினார். பல்வேறு பாடல்களை உள்வாங்கி நடனத்தை அமைத்து,  ஆடி,  ஆடவைத்து ஒரு தனி பாணியை  உருவாக்கினார். அவற்றில் ராமாயணத்தில் இருந்து எடுத்தாண்ட 6 பாடல்களுக்கான நடனகள் மிக பிரபலம் ஆனவை.

நடன அரங்கத்தின் வித்தைகள், ஒளிக்  காட்சி,  ஆடை அலங்காரம், சங்கீதம்,  நடன அமைப்பு எல்லாமும் சேர்ந்து பக்தி அனுபவத்தை ஒரு கலை அனுபவமாக,  அழகியலாக சர்வதேச அரங்கில் ஜாலம் நிகழ்த்தி காட்டியதை யார் மறுப்பார்? அதனால் தான் ருக்மணி அம்மையாருக்கு பத்மபூஷன்,  சங்கீத நாடக அகாடமி விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்தது அரசு.

1952,  1956 என இரு முறை அவர் ராஜ்ய சபைக்கு  எம்.பி. ஆனார். மிருகங்களின் நலனுக்காக தன் உயிர் இருந்தவரை தொண்டு செய்தார். சைவ உணவின் சிறப்பை உலகெங்கும் பரவ செய்தார். இந்திய மவிலங்கு நல வாரியத்தில் தலைவராக  கடைசி வரை இருந்தார்.

1977-இல் மொரார்ஜி தேசாய்,  ருக்மணியை தேசத்தின் ஜனாதிபதியாக்க விரும்பினார். கலையை வெகுவாக நேசித்த நடன அரசியின் மனதுக்கு ஜனாதிபதி என்ற அரசியல் கிரீடம் ஏற்புடையதாக இல்லை; மறுத்து விட்டார்.

1986, பிப்ரவரி  24-இல், ருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் நிறுவிய  ‘கலாக்ஷேத்ரா’ தேசிய சிறப்பு வாய்ந்த அரசு நிறுவனமாக நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது.

கலம்காரி மையம் என்ற பேனா வித்தை மையம் ஒன்றை கலாக்ஷேத்ரத்தில் நிறுவி, பண்டைய இந்தியக் கலையான ஜவுளி அச்சிடும் நயத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததும் அவர் சிறப்பு.

 

காந்திக்கு ஆயுதம் அளித்தவள்

-ம.பூமாகுமாரி

f43f9-thillaiaadivalliammai

தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல்தலை

தில்லையாடி வள்ளியம்மை

(பிறப்பு: 1898 பிப். 22, 1898 – மறைவு: 1914 , பிப். 22)

 

தென்னாப்பிரிக்காவில் முனுசாமி முதலியார்,  மங்களம் அம்மையார் தம்பதி வாழ்ந்து வந்தனர். பூர்விகம் நாகப்பட்டினம், தமிழ்நாடு. இவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் 1898 பிப். 22-இல் பிறந்தவள் வள்ளியம்மை.

ஜோகநேஸ்பார்க் யில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார் முதலியார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களையும்,கருப்பு இன மக்களையும் நிற வெறி பிடித்த பிரிட்டிஷ் அரசு அடிமைகளாக நடத்தியது. இந்த வித்யாசப்படுத்துதலுக்கு எதிராக இந்தியாவின் இளம் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு எதிர்ப்பு அணிவகுப்பு நடத்தினார். ட்றான்வால் தொட்டு நடால் வரை பேரணி. வள்ளியம்மை பேரணியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறைவாசத்தின் போது கொடூரமான நோய் தாக்குதலுக்கு ஆளானார். இருந்தும் அதைக் காரணம் காட்டி விடுதலை ஆகி வந்து சிகிச்சை பெற அவர்  ஒப்பவில்லை.

தென்னாப்ரிக்க சிறை அதிகாரிகள் ‘ஏன் நீங்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்கர்கள் என்றே பதிவு செய்யக் கூடாது? இந்தியாவாம்.. அதற்கு ஒரு கொடி கூட இல்லை. அது ஒரு நாடே இல்லை’ என   ஏளனமாகப் பேசினர்.

வள்ளியம்மை தான் உடுத்தியிருந்த சீலையைக் கிழித்து, ‘கொடி தானே வேண்டும்? இதோ இருக்கிறது எங்கள் நாட்டுக் கொடி’ என்று உரக்க சொன்னார். அப்பொழுது அவருக்கு வயது 16 இருக்கும்.

காந்திஜி, அவரிடமிருந்தே தியாகத்தையும் போராடுவதற்கான மன உறுதியையும் பெற்றதாக புகழாரம் சூட்டுகிறார். சத்யாக்கிரஹமும் அஹிம்சையும் ஆயுதம் ஆயின காந்திக்கு. அதற்கு ஒரு முன்னுதாரணம் போன்று தன் வாழ்விலும் சாவிலும் நிரூபித்தவர் வள்ளியம்மை.

‘நீ விடுதலைக்கு விண்ணப்பித்து சிகிச்சை பெற்று இருக்கலாமே?’ என காந்தி கேட்ட தற்கு நான் அப்படிச் செய்ய இஷ்டப்படவில்லை.  இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி ரத்தான பின்பே விடுதலை பெறுவேன்’ என்றார்.

கொடிய சிறைவாசத்தால் 1914 , பிப். 22 அன்று வள்ளியம்மை இறந்து போனாள். வள்ளியம்மையின் மரணம் காந்தியின் உள்ளத்தை உலுக்கிவிட்டது. அதனால் தான் ‘எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்கு உரியவர்’ என காந்திஜியால் வள்ளியம்மையை தான்.

1-5-1915- ல் தில்லையாடிக்கு விஜயம் செய்த காந்தி – கஸ்தூரிபா தம்பதி அமர்ந்த இடத்தில வள்ளியம்மைக்கு நினைவுத் தூணும் எதிரில் நினைவு மண்டபமும் கட்டப்பட்டூள்ளன.

உறுதியும், தேச பக்தியும், அற உணர்வும் கொண்ட 16 வயது சிறு பெண்ணின் இதயமும் படபடக்கிறது தெரிகிறதா?

 

 

காண்க:

காந்தியைக் காத்த தமிழ்ப்பெண்

 

 

தமிழகத்தின் புதின அரசி

– ம.பூமாகுமாரி

 

வை.மு.கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி

(பிறப்பு : 1901, டிச. 1 – நினைவு : 1960, பிப். 20)

 

ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக முதன்முதலில் பதவி வகித்தவர் என்ற பெருமை ஒன்றே போதும்  இவர் என்றென்றும் பத்திரிகை வானில் ஜொலிப்பதற்கு. நாவலாசிரியை, எழுத்தாளர், பதிப்பாளர், பாடகி,  இசையமைப்பாளர்,  சமூகப்போராளி, பேச்சாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என, பன்முக ஆற்றலால் மிளிர்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்த்தவர்  பெருமகளார் வை.மு.கோதைநாயகி. முதல் துப்பறியும் நாவலைத்  தமிழுக்கு  தந்தவர் என்பது இவருக்கு  கூடுதல் சிறப்பம்சம்.

படிப்பறிவு  பயிலாத  கதைச் சொல்லி:

 பள்ளிக்கூடம் செல்லாத, பாடங்கள்  படிக்காத  பால்ய சிறுமியாக  வளர்ந்தவள் கோதை.  5 வயதிலேயே 9 வயது சிறுவனுக்கு மனைவியான கோதை  பிறந்தது,  வைதீகக்  குடும்பத்தில். வீட்டினில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருந்த திருவாய்மொழிப்  பாசுரங்களைக்  கேட்டதால்  தாய்மொழி மீது  தீராதக் காதலை  மனதிலே வசியப்படுத்திக் கொண்டாள் . கதைசொல்வதும், சங்கீதம் இசைப்பதும்  மிகவும் பிடித்த விஷயங்களாக  தன்னுள் வரித்துக்கொண்டாள்.
விக்கிரமாதித்யன் மன்னன் முதல்  தெனாலிராமன்  வரை வழக்கிலிருந்த அத்தனைகதைகளையும் சொல்லி  ஆச்சரியப்பட  வைத்தாள் . கதைகள் சொல்வதில் தணியாத தாகமும், சொல்லும் விதத்தில் தனித்துவமான  பாணியும் இருந்ததால்,  கோதையின்  கதைகளுக்குள்  மயங்கியது  குழந்தைகள் மட்டுமல்ல , பெரியவர்களும் தான்.

 கணவன் என்னும் தோழன் :

 அந்தக் காலத்தில் (இந்தக் காலத்திலும்தான்) இப்படி ஒரு கணவனா  என  வியக்க வைத்த பார்த்தசாரதியை  துணைவராகப்  பெற்றது  கோதையின் பாக்கியமே.  புராணங்களையும், வேதங்களையும் கற்க  ஏற்பாடு செய்ததோடு,    கோதையை நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றார் கணவர்.
நாடகக்கொட்டகைக்குச் சென்று  நாடகங்கள்  காணப்  பெண்களை  அனுமதிக்காதகாலத்திலும்  தன்  மனைவியை அழைத்துச் சென்றதோடு, அவரது எல்லாவகையான முன்னேற்றத்துக்கும்  ஒரு தோழனாகவே துணை புரிந்துள்ளார்.

படிக்காத எழுத்தாளி,போராளி :

 எழுதப் படிக்கத் தெரியாத  கோதை  சொல்லச் சொல்ல  தோழி பட்டம்மாள் எழுதிய கதை ‘இந்திரமோகனா’  வடுவூர் துரைசாமி ஐயங்கார் அவர்களால் நடத்திவந்த ‘மனோரஞ்சனி’ இதழில்  வெளிவந்தது. பின்னர் ‘ஜகன்மோகினி’  என்னும் பத்திரிகைக்குப்  பொறுப்பேற்று சிறப்பாக  நடத்தினார்.  அதன் வாயிலாக  இந்து- முஸ்லிம் ஒற்றுமை,  பெண்விடுதலை, சுதந்திர வேட்கை, மதுவிலக்கு, விதவைத் திருமணம் என சமூக முன்னேற்றத்திகான  ஆயுதமாக எழுத்துக்களைக் கையாண்டவர் வை.மு.கோதைநாயகி.
மேலும் மேடைகளிலே  குட்டிக்குட்டிக் கதைகளைச் சொல்லி,  கேட்பவர்களின் மனதில் தனது கருத்துக்களை ஆழமாகப் பதியவைப்பதில் கைதேர்ந்தவராகவும் விளங்கினார். நாவாற்றல் மிக்க தீரர் சத்தியமூர்த்தியும், கர்மவீரர் காமராஜரும் வை.மு.கோதைநாயகியின்  பேச்சுக்கு ரசிகர்களானதில் வியப்பில்லையே.

இன்னொரு முகம்   இசை நாயகி:

கேட்போரை ஈர்க்கும் காந்தக்குரல், தெளிவான உச்சரிப்பு,  ஆழ்ந்த சங்கீத ஞானம்  ஆகியவை இணைந்த ஒரு பாடகியாகவும்  கோதைநாயகி அவர்கள் திகழ்ந்தது   நம்மையெல்லாம்  மேலும்  ஆச்சரியப்படச் செய்கிறது. கோதைநாயகியால்  ஊக்கம் பெற்றுப்  பின்னாளில் இசைமேதையாய்   புகழ்ப்பெற்றவர்  டி.கே.பட்டம்மாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாகவி பாரதியார்  வை.மு.கோதைநாயகியின்  பாட்டுக்கு ரசிகர். பின்னாளில்  டி.கே.பட்டம்மாள் அவர்களின் தேனிசைக்குரலில் பாடி இசையுலகமே மயங்கிய ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற  பாடல் வை.மு.கோதைநாயகி அவர்களுக்காகவே பாரதியார் எழுதியது என்ற செய்தி வை.மு.கோ. அவர்களின் உன்னத வாழ்வுக்கு ஓர் உதாரணம்.

தேசப்பிதாவுடன் சந்திப்பு :

காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் அன்னையுடனான சந்திப்பு  கோதைநாயகி அவர்களின்  வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தியது. காந்திஜியின் ஆதர்சமான ஆளுமையும்,  எளிமையான வாழ்வும் மற்றும் சத்தியத்தின் மேல் அவருக்கிருந்த அசைக்கமுடியாதப்  பற்றும் அவரை ஈர்த்தன.
அதன்பின், பட்டாடைகள் அணிவதையும், தங்க ஆபரணங்கள் பூணுவதையும் விடுத்து, காதியுடை  உடுத்தி சுதந்திரப் போராட்டத்தில்  தன்னை  ஈடுபடுத்திக் கொண்டார். மதுவிலக்குக்காகப்  போராடி  8 மாதங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார். அந்நியத் துணி  பகிஷ்கரிப்பு, லோதி கமிஷன் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக்கொண்டதால் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.

திரைப்படத் துறையிலும்  முத்திரை:

தணிக்கைக் குழு  உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றி திரைப்படங்களில் தேசபக்திக்கும், பெண்மைக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இடம்பெறுவதை ஊக்குவித்தார். கோதைநாயகியின் சில நாவல்கள் திரைப்படங்களாகவும்  வெளிவந்துள்ளன.

சேவைப்பணிகள் செய்த செம்மல் :

காந்திஜியின்  நினைவாக ‘மகாத்மாஜி சேவா  சங்கம்’ துவக்கி  பெண்களுக்கும், எளியோருக்கும்  பல சேவைகள் புரிந்தார். அதற்காக அரசாங்கம் தந்த 10 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ வினோபா பாவேயின் ‘பூதான இயக்கத்திற்கு’  நன்கொடையாய்  வழங்கினார்.
தன்  வாழ்நாள் முழுதும்  தேச விடுதலைக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட வை.மு.கோதைநாயகி  அவர்கள் படைத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்றால்  இவரை   ‘தமிழ்  இலக்கியத்தின் புதினஅரசி’என்றழைப்பதில்  நமக்கெல்லாம் பெருமிதம் தானே!
%d bloggers like this: