Category Archives: மகத்தான மன்னர்

மொகலாயர்களை தண்டித்தவன்

-ம.பூமாகுமாரி

 

Shivaji

சத்ரபதி சிவாஜி

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630,  பிப்  19  – மறைவு: 1680, ஏப். 3)

சத்ரபதி சிவாஜி ராஜே போஸ்லே – பாரதத்தாயின் வீரமகன் – 1674-இல் வடக்கு திசையில் ஒரு மஹா இந்து சாம்ராஜ்யத்தை, மாரத்திய பேரரசை நிறுவியவன்.

பலம்:  வல்லமை படைத்த காலாட்படையும், கப்பல் படையும் சிவாஜியின் வசம் இருந்தன. கோட்டைகள் நிர்மானிப்பதும், கொத்தளங்களை சீரமைப்பதும் அவனின் பொழுதுபோக்கு. கொரில்லா யுத்த முறையைக் கையாள தேர்ச்சி பெற்ற போர்வீரன். யுத்த தந்திரம் என்பது அவனது அடிப்படை வியூகம். மிகச் சிறந்த புலனாய்வுக் குழுமம் இருந்தது மராத்திய பேரரசிடம். எந்த ஜாதி, எந்த மதத்தவனானாலும் சரி, திறமை இருந்தால் முன்னுக்கு வர முடியும், சிவாஜியின் ஆட்சியில். ஒரு தேர்ந்த ராஜ தந்திரி மட்டுமல்ல, நிபுணத்துவமான ஆட்சியை செலுத்திய ஸ்டேட்ஸ்மேன் எனத் தெரிய வருகிறது. ஒரு மாபெரும் இராணுவப் படைத் தலைவனாகவும் தேர்ந்த ஆட்சியாளனாகவும் இருப்பது அரிதல்லவா?

சர்வ வல்லமை பொருந்திய மஹாராஜா, பொதுமக்களை துன்புறுத்த அந்தப் பதவியைப் பிரயோகிக்கவில்லை, பெரும் புகழ் சூட்டப்பட்ட போதும் தன் தலைக்கு அதை ஏற்றி ஆணவம் கொள்ளாத மாமனிதன். சம காலத்தில் அதிக படைபலம் கொண்ட அந்நியர்களை எதிர்த்து நின்று, சூழ்ச்சியாலும், மதி நுட்பத்தாலும், வீர தீரச் செயல்களாலும் படைகளை வழி நடத்திச் சென்று வெற்றி வாகை சூடிய மாமன்னன் அவன்.

சிறுவனாக: சிறுவன் சிவாஜியின் வாழ்வில் தாய் ஜீஜிபாயின் பங்களிப்பு ஏராளம் ஏராளம். மல்ஹர் ராம்ராவ் சிட்னியில் என்பவர் ‘சத்ரபதி சிவாஜி மஹாராஜன்சே சப்தப்ரகாரணத்மகீ’ என்ற புத்தகத்தில் இப்படி எழுதுகிறார்:

“தான் முகலாயர்களுடன் போர் புரியப் பிறந்தவன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை அவனுக்கு. அந்நியர்களால் படை எடுத்து வெற்றி கொள்ளப்பட்டு அவர்கள் ஆட்சி புரிய நமது மதம், அடையாளம் ஆகியவற்றை இழந்து நிற்கிறோம் நாம். நம் உயிரையும் ஈந்து இந்நிலையை மாற்றுவோம் எனச் சூளுரைத்தது மட்டுமல்லாமல், ராஜேஸ்வரியின் முன்பு வெற்றி கொள்வேன் என ஆணையிட்டு, ‘தோரணா’ கோட்டையைத் தனதாக்கிக் கொண்டான் சிவாஜி மஹராஜ்”.

கோட்டைகள்: ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். நமது சக்கரவர்த்தி சிவாஜியின் ஸ்டைல் இதுதான். புதிது புதிதாக கோட்டைகள் கட்டி, எதிரிகளை நடுங்க வைப்பது. வருகட், பூஷண்கட், மஹிமாகட், வர்தன்கட், சதாசிவகட், மச்சிந்திரகட் என எத்தனை எத்தனை கோட்டைகள்! ஆக்ரா சிறையில் இருந்து சிவாஜி மஹாராஜா தப்பிப்பாரா? அல்லது உயிர் துறப்பாரா எனத் தெரியாமல் தவித்த வேளையிலும், மாவலர்கள் அதற்காக பயந்து மொகலாயர்களைக் கண்டு நடுங்கி விடவில்லை. தங்கள் மஹாராஜா வரும் வரை நாட்டை பத்திரமாக ஆட்சி செய்து வந்தனர்.

ஆனால் எந்த சுப காரியங்களும் நடத்தவில்லை. தாங்களே உயிர் துறக்கவும் நாட்டு மக்கள் தயாராக இருந்தனர். நீதி, நேர்மை எந்தப் பக்கம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி உணர்ந்திருந்தனரே? எனவே தான் தங்கள் கணவனமார்கள் வீட்டோடு பத்திரமாகத் தங்கிவிட வேண்டும் என விரும்பவில்லை மஹாராஷ்டிரத்து வீர மகளிர். நீதியின் பெயராலே அந்தப் போர் நடத்தப்பட்டபடியால் தான், மராத்திய தாய் வீரப் பெண்மணியாய் தன் மகன்களை சந்தோஷமாக போர்க்களம் அனுப்பி வைத்தனர். நாம் மொகலாயரை எதிர்த்து ஏன் போர் புரிகிறோம் என்பதை முழுதும் உணர்ந்திருந்தனர் அந்த வீரப் பெண்டிர்.

ஒரு காலத்தில் நிலப் பிரபுத்துவ அமைப்பில், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு வருவாய் வசூலிக்கும் கூலிப்படையினர் போன்று செயல்பட்டு வந்த மராத்தியர்கள், தங்கள் அபிமானத்தை மொகலாய மன்னர்களிடையே மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு, துயரமான அடையாளமற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

ஷாஜி போஸ்லே (வீர சிவாஜியின் தகப்பனார்) இப்படி பீஜபூரின் அடில்ஷாக்களுக்கும், பேரார், அஹமத்நகர் நிஜாம்ஷாக்களுக்கும் மாறி மாறி பணி செய்து வந்தார். தங்களுக்கென, சுதந்திரமான மராத்தா – ஹிந்து ராஜ்யத்தை நிறுவும் நினைப்பு முளை விட்டாலும், அது அவர் காலத்தில் உருப்பெறவில்லை. மகன் வீர சிவாஜியின் வாழ்வில் கூடியது. அந்த நினைப்பை ஆளப் பதிய வைத்தவர் ஜீஜாபாய் தான். தேவகிரியின் ராஜவம்சத்துப் பெண் அல்லவா அவர்?

வெறும் 17 வயதுச் சிறுவனாய் சிவாஜியும் அவன் தோழர்களும் ஜீஜாபாய் மற்றும் குரு தாதாஜி கொண்டதேவின் தூண்டுதலால், மொகலாய கொடூர ஆட்சியின் தளைகளை உடைத்தெறிவோம் என சூளுரைத்தனர். வென்று காட்டினார் என்பது வரலாறு.

இளைஞர் சக்தியை சமானியமாக எடை போட்டுவிட முடியாது என்பதற்கு வீரன் சிவாஜி உதாரணம்.

 

காண்க:  ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

Advertisements

மகாமக குளத்துக்குப் படித்துறை அமைத்தவர்!

-பருத்தியூர் கே.சந்தானராமன்

மனைவியுடன் கோவிந்த தீட்சிதர்

மனைவியுடன் கோவிந்த தீட்சிதர்

கோவிந்த தீட்சிதர்

(1515 முதல் 1634 வரை)

நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து, சற்றேறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகித்தது, முறியடிக்க முடியாத மாபெருஞ் சாதனை! இந்தச் சாதனை புராணக்கதை அல்ல! பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனை! அந்தச் சாதனையாளர்தான் ஸ்ரீகோவிந்த தீட்சிதர்.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூவருக்கு இராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் திகழ்ந்தவர் பல்துறை அறிஞராகிய கோவிந்த தீட்சிதர்.

பதினாறாம் நூற்றாண்டில் அச்சுததேவராயர் விஜயநகரப் பேரரசின் மகாராயராக (பேரரசராக) இருந்தார். அவர் சேவப்ப நாயக்கரை, தஞ்சைப் பகுதியின் பிரதிநிதியாக 1532-இல் நியமித்தார்.

அதே காலகட்டத்தில், ஆரணிப் பகுதியை, சின்ன திம்மப்ப பூபதி அரசாண்டு வந்தார். கேசவ தீட்சிதர் என்பவர் திம்மப்ப பூபதியின் ராஜகுருவாக இருந்தார். கேசவ தீட்சிதரின் சகோதரியின் குமாரர்தான் கோவிந்த தீட்சிதர். அப்போது அவரை, பலராம கோவிந்தர் என அழைத்தனர். மகாராயர் அச்சுததேவர், ஆரணியில் பலராம கோவிந்தரையும், அவருடைய தந்தை தசரதராம தீட்சிதரையும் சந்திக்க நேர்ந்தது. பலராம கோவிந்தரின் அறிவும், முகப்பொலிவும் மகாராயரைப் பெரிதும் கவர்ந்தன. பதினேழு வயதிற்குள் பலராம கோவிந்தர் சகல சாஸ்திரங்களையும் கற்றுவிட்டார்!

நாராயணமகி, கேசவ தீட்சிதரின் இளமைக்கால நண்பர். அவருடைய மனைவி சின்ன பார்வதி. அவர்கள் இருவரும் தங்கள் மகள் நாகமாம்பாளுடன் ஆரணிக்கு வந்தனர். நாகமாம்பாள் பலராம கோவிந்தருக்கு ஏற்றவள் என்று தீர்மானித்தனர். அதன்படி, மகாராயர் அச்சுததேவர் முன்னிலையில் பலராம கோவிந்தருக்கும் நாகமாம்பாளுக்கும் ஆரணியில் திருமணம் நிறைவேறியது.

இல்லறம் மேற்கொண்ட பலராம கோவிந்தர், ‘கோவிந்த தீட்சிதர்’ என அழைக்கப்பட்டார். தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கர் மகாராயரின் ஆலோசனைப்படி, கோவிந்த தீட்சிதரைத் தமது ராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் நியமித்தார்.

கோவிந்த தீட்சிதர் பதவியேற்றவுடன், ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட, ‘சரஸ்வதி பண்டாரம்’ என்ற நூல் நிலையத்தை நிறுவச் செய்தார். தஞ்சை மக்களின் குடிதண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு ஓர் ஏரியை வெட்டச் செய்தார். சரஸ்வதி பண்டாரமே, ‘சரஸ்வதி மகால்’ என்ற பெயருடன் இன்றும் புகழுடன் செயல்பட்டு வருகிறது.

1542-இல் கும்பகோணத்தில் காவிரிக்கரையில் கோவிந்த தீட்சிதர் úஸாம யாகத்தை நடத்தினார். மகான் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர் அந்த வேள்விக்கு வருகை தந்து சிறப்பித்தார். அதே யாக பூமியில், மாணவர்கள் குருகுல முறையில் பயிலத்தக்க வகையில் வேதபாடசாலை ஒன்றை நிறுவச் செய்தார்.  ‘ஸ்ரீராஜா வேதகாவ்ய பாடசாலை’ என்ற பெயரில் அப்பாடசாலை இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

அங்கு நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்ஸ வேதாந்த சாஸ்திரங்கள், இசை, நடனம், ஆகமம் போன்ற கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. அந்தப் பாடசாலையை நிர்வகிக்க அரசர் எழுபது ஏக்கர் நிலத்தையும் அளித்தார்.

இந்து வைதீகக் கொள்கையில் பற்றுடையவராய் இருந்த கோவிந்த தீட்சிதர், மனிதநேயமும் மதநல்லிணக்கமும் பேணிய மாமனிதர் ஆவார். அவருடைய ஆலோசனைப்படி, நாயக்க மன்னர்கள் மூவரும் செய்த நற்பணிகளைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. தஞ்சையில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள, தீட்சிதர் ஏழு வேலி நிலத்தை அளிக்கச் செய்தார். புனித úஸவியர் என்ற பாதிரியார் நாகப்பட்டினத்தில் கட்டடங்கள் கட்டிக்கொள்ள தீட்சிதர் அரசரின் அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோயில்களின் திருப்பணிகளுக்கு உதவினார் கோவிந்த தீட்சிதர். கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு ராஜகோபுரமும், மதில்களும் கட்டி, 1580-ஆம் ஆண்டு குடமுழுக்கையும் நிறைவேற்றினார். திருவையாற்றில் தொடங்கி, மயிலாடுதுறை வரை, காவிரியின் இரண்டு பக்கங்களிலும் அழகிய படித்துறைகளைக் கட்டச் செய்தார். அவற்றுள் பல இன்றளவும் உள்ளன.

இலங்கை, யாழ்ப்பாணம் சென்று போர்ச்சுகீசியரை வென்று வந்த நாயக்க மன்னரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடந்தையில் இராமர் கோயில் கட்டச் செய்தார். இங்கு ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார். குடந்தையில் ராமசாமி கோயில் என்று இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

இசையிலும் மேதையாகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர், ‘ஸங்கீத ஸுதாநிதி’  என்ற நூலை இயற்றி, அதனை ரகுநாத நாயக்கருக்கு அர்ப்பணம் செய்துள்ளார். மேலும், ‘ரகுநாத மேள வீணா’ என்ற புதிய தஞ்சாவூர் வீணையையும் உருவாக்கினார் கோவிந்த தீட்சிதர்.

பட்டீசுவரத்திற்கு அருகில் இருந்த சிங்கரசன்பாளையம் என்ற இடத்தில், அச்சுதப்ப நாயக்கருக்கு, வில், வாள் சண்டைப் பயிற்சியும், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற போர்க்கலைப் பயிற்சிகளையும் அளித்தார் முதலமைச்சர் கோவிந்த தீட்சிதர். ஆசானைப் பாராட்டும்விதமாக, அச்சுதப்பன் சிங்கரசன்பாளையம் என்ற ஊரின் பெயரை மாற்றி,  ‘கோவிந்தகுடி’ என்று பெயரிட்டான். கோவிந்தகுடியில் ஒரு வேதபாடசாலை இயங்கி வருகிறது. சோழ நாட்டு வேதவிற்பன்னர்களில் பெரும்பாலோர், கோவிந்தகுடி பாடசாலை அல்லது குடந்தை ராஜா வேதபாடசாலையில் அத்யயனம் செய்தவர்களே.

மக்கள் நலம் பேணிய, தமது அரிய பணிகளால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் கோவிந்த தீட்சிதர். தஞ்சைத் தரணியில், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கோவிந்த தீட்சிதரை, ‘எங்கள் ஐயன்’ என்று போற்றினர்! வாழ்த்தினர்! அதன் வெளிப்பாடாக, ஐயன்பேட்டை, ஐயன் குளம், ஐயன் கடைவீதி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தின்பொழுது, பூமியிலுள்ள அத்துணை புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்குள் வந்துவிடுவதாக ஐதீகம். ஒருமுறை கோவிந்த தீட்சிதருடன் கும்பகோணத்திற்கு வந்திருந்த ரகுநாத நாயக்கர், ‘கங்கை முதலான புண்ணிய நதிகள் இப்போதும் மகாமகக் குளத்திற்கு வருகின்றனவா? அவர்களை (நதியரசிகளை) நாம் காண இயலுமா?’ என்று வினவினார்.

 ‘ஆம்! இன்றும் நதியரசிகள் இங்கு வருகிறார்கள்!’

-என்று பதிலளித்த கோவிந்த தீட்சிதர், சிறிது நீரைத் தெளித்து நதிதேவதைகளைப் பிரார்த்தித்தார். அப்போது மகாமகக் குளத்தில், ஒரே நேரத்தில் பதினெட்டு வளைக்கரங்கள் தோன்றின! 1624-ஆம் ஆண்டு ரகுநாத நாயக்கர் அந்த அதிசயத்தைக் கண்டார். பெரிதும் மகிழ்ந்த இரகுநாத நாயக்கர், கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கத்தைத் துலாபாரமாகக் கொடுத்துச் சிறப்பித்தார். சிறிதும் தன்னலமில்லாத கோவிந்த தீட்சிதர், அப்பொன்னைக் கொண்டு மகாமகக் குளத்திற்குப் புதிய படித்துறைகள் அமைத்தார். அத்துடன் குளத்தைச் சுற்றிலும் பதினாறு சிவாலயங்களைக் கட்டினார்.

ரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்ததன் நினைவாக, மகாமகக் குளத்தின் வடக்குக்கரையில் துலாபார மண்டபம் என்றே ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மூன்று மன்னர்களுக்கு முதலமைச்சராகவும், ராஜகுருவாகவும் விளங்கிய கோவிந்த தீட்சிதர் எவ்விதப் பகட்டும் படாடோபமும் இல்லாமல் வாழ்ந்தார். பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். மன்னனுக்கு வழிகாட்டவும், மக்களுக்குத் தொண்டு செய்யவுமே, இறைவன் படிப்பையும், பதவியையும் அருளியதாகக் கருதினார் கோவிந்த தீட்சிதர். இல்லற ஞானியாக வாழ்ந்து, சாதனைகள் படைத்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் கோவிந்த தீட்சிதர்.

ஸ்ரீராமாநுஜர் 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தார். அதுபோல், கோவிந்த தீட்சிதரும் 119 ஆண்டுகள் (கி.பி.1515 முதல் 1634 வரை) நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார் என்பதும் வரலாற்றுச் சான்றுடன் கூடிய உண்மையாகும்.

குறிப்பு:

திரு. பருத்தியூர் கே.சந்தானராமன் ஆன்மிக எழுத்தாளர், கல்வியாளர்.

இக்கட்டுரை, தினமணிக் கதிரில் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்

-என்.டி.என்.பிரபு

சத்ரபதி சிவாஜி

சத்ரபதி சிவாஜி

(பிறப்பு: 1630,  பிப்  19  – மறைவு: 1680, ஏப். 3)

.

தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் தேசிய எண்ணத்தை உண்டாக்கும் வாழ்க்கை சத்ரபதி சிவாஜியின்  வாழ்க்கையாகும்.

பல நூற்றாண்டுகள் நாம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களிடம் அடிமைபட்டியிருந்த போது அதை உடைத்தெறியும் உத்வேகம் ஏற்பட செய்தவர் சிவாஜி.

இவர் பொது யுகத்திற்குப் பிந்தைய 1630,  பிப்  19 -ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சாஜி போன்ஸ்லே பெரும் வீரராக விளங்கினார். இஸ்லாமிய அரசர்களுகளிடம் பணிபுரிந்தார். சிவாஜியின் தாயார், தனக்குப் பிறக்கும் குழந்தை சிறந்த வீரனாக, பகைவர்களை வெல்பவனாக, அரசாட்சி செய்பவனாக, ஹிந்து ராஜ்யம் அமைப்பவனாக விளங்கவேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்.

எனவே சிவாஜி பிறந்ததும் “தாயே, ஹிந்து தேசத்தை பெரியதாக்கி அதையும் சீக்கிரமாக எங்கள் கண்முன் காட்டுவாயாக” என வேண்டிக்கொண்டார். சிவாஜிக்கு, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து ராமர், கிருஷ்ணர் மற்றும் பலரின் வீர தீரங்களையும் கதைகளாக சொல்லிவந்தார்.

தாதாஜி கொண்டதேவ் என்பவரின் பொறுப்பில் சிவாஜியை வளர்க்க ஏற்பாடு செய்தனர். மேலும் புனே பாளையத்தின் நிர்வாகப்  பொறுப்பையும் தாதாஜியிடமே கொடுத்தனர். தாதாஜி பொறுப்பேற்ற பின்பு புனே பாளையம் செழிப்பான நிலைக்கு வந்தது.

விவசாயத்தை மக்களிடம் உற்சாகப்படுத்தவும், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தங்கத்தினால் செய்யப்பட்ட ஏர் ஒன்றை சிவாஜியைக் கொண்டு உழச் செய்தார் தாதாஜி. மக்களுக்கு தன்னம்பிக்கையும் புது தெம்பும் பிறந்தது.

சிவாஜி, வாள், வில் பயிற்சியும், குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்ற பயிற்சிகளைப்  பெற்றார். போர் செய்யும் கலைகளை அறிந்தார். மேலும் மராத்தி, சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளைக்  கற்றார். சிவாஜி தன் நண்பர்களுடன் மலை, அடர்ந்த காடுகளில் சுற்றினார். சில இளைஞர்களைக் கொண்டு படை ஏற்படுத்தினார். சுதந்திர தேசத்தை உருவாக்கும் எண்ணத்தில் உறுதிகொண்டிருந்தார்.

அதன் தொடக்கமாக ரோஹித் கோட்டைக்குள் இருக்கும் ஆலயத்தில் நண்பர்களுடன் இறைவனை பிரார்த்தனை செய்தார். அப்போது தன் உடைவாளையெடுத்து தன் விரலை கீறி ரத்த அபிஷேகம் செய்து சபதம் ஏற்றார். அதைத் தொடர்ந்து அவருடன் இருந்த மற்ற நண்பர்களும் அவ்வாறே சபதம் ஏற்றனர்.

1646 ம் ஆண்டு பிஜாபுரின் தோரன் கோட்டையை வென்றார். பின்பு சாகன் கோண்டனா, புந்தர் கோட்டைகளை கைப்பற்றினார். தொடர்ந்து பல கோட்டைகளை கைப்பற்றிக்கொண்டே இருந்தார். சிவாஜி வளர்ச்சியை தடுக்கும் பொருட்டு, பீஜப்பூர்  சுல்தான், சிவாஜியின் தந்தையைச் சிறை வைத்தார்.

இந்த சூழ்நிலையில் சிவாஜி, மொகலாயப் பேரரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். நாங்கள் தங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறோம் என்பதாகக் குறிப்பிட்டார். மொகலாய மன்னர் சாஜி, மற்றும் சிவாஜியின் வீரத்தை அறிந்திருந்ததால், இவர்கள் நம்முடன் இருப்பது நல்லது என நினைத்து சாஜியை விடுதலை செய்ய செய்தார்.

சிவாஜி எப்போதும் தன்முன் வரைபடத்தை விரித்து வைத்துக்கொண்டு, எந்தெந்தக் கோட்டைகளை பிடிக்கலாம் என ஆலோசனை செய்வார். இந்த இவருடைய திட்டமிடலால், அவருடைய ராஜ்யம் விரிவாகிக் கொண்டே போனது.

பீஜப்பூர் சுல்தான் இறந்த பிறகு அவருடைய மகன் சிறுவனாக இருந்ததால் பீஜப்பூர் சுல்தானின் மனைவி சாயிபா அரசை கவனித்துவந்தார். ஒரு ஹிந்து பீஜப்பூர் மொகலாய அரசை எதிர்ப்பதைக் கண்டு அவமானப்பட்டாள். எனவே சிவாஜியை கொலை செய்ய திட்டம் தீட்டினாள். இத்திட்டத்தை அப்சல்கான், தான் செய்வதாக ஏற்றுக்கொக்கொண்டான்.

அப்சல்கானும் சிவாஜியும் சந்திக்க ஏற்பாடாகியது. அப்சல்கான் உருவம் பெரியது;  மாமிச மலை. சிவாஜி உருவமோ சிறியது. அப்சல்கான், சிவாஜி வந்ததும் கட்டித் தழுவிக் கொண்டான். கட்டி இறுக்கினான். பிடியிலிருந்து விலக முயலும்போது தன் உடைவாளை எடுத்து விலாவில் பாய்ச்சினான். சிவாஜி தான் அணிந்திருந்த கவசத்தால் தப்பினார். அப்சல்கான் சற்றும் எதிர்பாரா விதமாக சிவாஜி புலி நகங்களை கொண்டு அவனது வயிற்றில் குத்தி கிழித்தார்.  பின் பீஜப்பூரை வென்றார்.

சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யம் அமைத்துவருவதை எப்படியும் தடுக்க வேண்டும் என்று முகலாய மன்னர் அவுரங்கசீப் நினைத்தார். ஷெயிஷ்டகான் என்பவன் தலைமையில் படையை அனுப்பிவைத்தார். திருமண ஊர்வலம் போன்று வேஷமிட்டு கோட்டைக்குள் சென்று அவர்கள் அயரும் நேரம் பார்த்து அவர்களை விரட்டியடித்தார் சிவாஜி. மேலும் எருதுகளின் கொம்புகளில் துணிப் பந்தங்கள் கட்டி அதில் தீ வைத்தனர். முகலாயர்கள் சிவாஜியின் படை என்று எண்ணி மிரண்டு ஓடினர்.

எனினும், முகலாயரின் படைத்தளபதி ஜயசிங்குடன் போர் புரியாமல், நாட்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என்ற காரணத்தால் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஹிந்து ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். மெதுவாக ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியை செம்மையாக செய்துவந்தார். 1674 -ஆம் ஆண்டு பட்டாபிஷேகம் செய்து கொண்டார். சத்ரபதி பட்டம் வழங்கப்பெற்று சத்ரபதி சிவாஜி ஆனார்.

நீதியின் வழியில் அவர் தன் வாழ்க்கையைச் செலுத்தினார். சிவாஜி சிறந்த ஆட்சியாளராய் திகழ்ந்தார். மிகச்சிறந்த ராஜதந்திரியாக விளங்கினார். சமர்த்த ராமதாசரின் ஆசியுடன் செயல்களை செய்து வந்தார்.

சிவாஜி தன்னுடைய நன்னடத்தை, திடமான சக்தி மற்றும் தேச பக்தியினால் உயர்ந்தவராகக் கருதப்பட்டார். பெண்களுக்கு உரிய மரியாதையை அளித்தார். அவரின் ஆட்சியில் அனைத்து மக்களும், அவரவர் சம்பிரதாயத்தில் நடக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஹிந்து சாம்ராஜ்யம் நிருவியபோதிலும் பிற மதங்களை அவர் வெறுக்கவோ, நசுக்கவோ இல்லை.

தனது குருநாதர் சமர்த்த ராமதாசரிடம் குருதட்சிணை­யாக ராஜ்யத்தை சமர்ப்பித்து, அவரின் பிரதிநிதியாக எண்ணியே ஆட்சி செய்து வந்தார். சிறுதுகாலம் நோய்வாய்பட்டிருந்த சிவாஜி 1680-ஆம் ஆண்டு ஏப். 3-ஆம் தேதி தேதி இயற்கை எய்தினார்.

பல நூற்றாண்டுகளில் செய்ய செய்யவேண்டிய சாதனைகளை வெறும் 53 ஆண்டுகளே உயிர் வாழ்ந்த சிவாஜி, செய்து முடித்தார். வெற்றியை மட்டுமே சிந்தையில் கொண்ட சத்ரபதி சிவாஜி, வெற்றிக்கு சிறந்த உதாரணம் ஆவார். எனவேதான் தேசபக்த நெஞ்சம் ஒவ்வொன்றிலும் சிவாஜி ஒரு லட்சிய புருஷராக விளங்கி வருகிறார்.

 

குறிப்பு:

திரு. என்.டி.என்.பிரபு, சென்னையில் விஜயபாரதம் பத்திரிகையில்  வடிவமைப்பாளராகப் பணிபுரிகிறார்.

 

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

-தஞ்சை வெ.கோபாலன் 

வீரபாண்டிய கட்டபொம்மன்

 வீரபாண்டிய கட்டபொம்மன்

(பிறப்பு: 1760, ஜன. 3 –  பலிதானம்:  1799, அக். 16)

.

பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள்.  அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள்

இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலைநாட்டப்பட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக் கழகம்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப் பரப்ப தமிழரசுக் கழகமும் அதன் தலைவர்  ம.பொ.சிவஞானம் அவர்களும் எடுத்துக் கொண்ட முயற்சிகளால் இன்று கட்டபொம்மன் இந்தியாவின் விடுதலைப் போருக்கு வித்திட்டவீரனே என்ற உண்மையை உலகமே ஒப்புக் கொண்டு விட்டது.

அந்த வீரன் புகழ் பரவிய வரலாறு கீழ்வருமாறு.:

முதல் நூல்:

1949 ஜூலைத் திங்களில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பெயரில் திரு.ம.பொ.சி ஒரு நூல் எழுதி வெளியிட்டார்.அதன் பின்னரும் ‘சுதந்திரவீரன் கட்டபொம்மன்’,  ‘கயத்தாற்றில் கட்டபொம்மன்’, ‘பொம்மன் புகழிலும் போட்டியா?’ என்னும் பெயருடைய நூல்களை எழுதி வெளியிட்டார்.

தமது ‘தமிழ்முரசு’, ‘தமிழன் குரல்’, ‘செங்கோல்’ ஆகிய ஏடுகளிலும்; இன்னும் புகழ் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகளிலும் கட்டபொம்மனைப் பற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் ம.பொ.சி எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் வெளிவந்தன.

முதன்முதலில் கட்டபொம்மன் விழா:

முதன் முதலாக, 1949, அக்டோபர் 16-ல் சென்னை ராஜாஜி மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள பூங்காவில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.

டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை, பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகியோரும் தமிழரசுக் கழகத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டு பேசினர். இதன் பின்னர் ஆண்டுதோறும் தமிழ்நாட்டிலுள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் அக்டோபர் 16-ல் தமிழரசுக் கழகத்தின் சார்பில் வீரபாண்டியன் நினைவு நாள் கொண்டாடப்பட்டு வந்தது.

திரைப்படங்கள்:

முதன்முதலில் திரு. எம்.ஏ. வேணு அவர்களின் எம்.ஏ.வி. பிக்சர்சாரால் தயாரிக்கப்பட்ட கலைஞர் ஏ.பி. நாகராசனால் கதை வசனம் எழுதி இயக்கப்பட்ட ‘நாவலர்’ என்னும் திரைப்படத்திலே கட்டபொம்மன் ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்படும் நிகழ்ச்சி ஒரு காட்சியாகப் பட்டது. திரு. ஏ.பி. நாகராசனே கட்டபொம்மனாகத் தோன்றி அற்புதமாக நடித்தார்.

பின்னர் திரு. பி.ஆர். பந்துலுவின் பத்மினி பிக்சர்சார் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்னும் பெயருடைய முழு நீள வண்ணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக தமிழ்நாட்டில் வெற்றியுலா வந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக அற்புதமாக நடித்தார். இந்தப் படம் தெலுங்கு மொழியில் ‘டப்’ செய்யபட்டு ஆந்திர நாட்டிலும் பவனி வந்தது.

நாடகங்கள்:

தமிழரசுக் கழகத்தின் பிரசார பலத்தால் நாடக உலகிலும், வீரபாண்டியன் செல்வாக்குப் பெற்றான். டி.கே.எஸ். சகோதரர்கள். நாடகக் குழுவினர் மதுரை ரா. வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பட்ட ‘முதல் முழக்கம்’ என்னும் பெயருடைய கட்டபொம்மன் நாடகத்தை வெற்றிகரமாக நடத்தினர். இதனை தில்லியில் பிரதமர் நேருஜி முன்பும், குடியாசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் முன்பும் நடித்துக் காட்டினர்.

நடிகர் திலகம் சிவாஜிக ணேசன் அவர்களும் தமது நாடகக் குழுவின் சார்பில் ‘கட்டபொம்மன்’ நாடகத்தை தமிழ்நாடெங்கிலும் வெற்றிகரமாக நடத்தினார்; பிரதமர் நேருஜியும் கண்டு களித்தார். ஏ.பி.நாகராசன் அவர்கள்,  ‘நாவலர்’ படத்தில் கட்டபொம்மன் வேடந்தாங்கி நடித்த பகுதியை தமிழரசுக் கழக மாநாடுகளிலும் 1954-ல் ஆவடியில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையிலும் நடித்து கட்டபொம்மன் புகழைப் பரப்புவதிலே பெரும் பங்கு கொண்டார்.

பிற மொழிகளிலே கட்டபொம்மன்:

ம.பொ.சி.

ம.பொ.சி.

வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வரலாற்றை ம.பொ.சி. தமிழில் எழுதி வெளியிட்ட பின்னர், அதனை முதல் நூலாகக் கொண்டு வேறு பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் வழி நூல்கள் வெளி வந்தன.

சென்னை இந்தி பிரசார சபையாரால் கட்டபொம்மன் நாடகம் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு, அந்த சபையின் மாணவர்களால் நடத்தப்பட்டது. தில்லி உள்ளிட்ட வடபுலத்திலும் நடத்தப்பட்டு வேற்று மொழிப் பிரதேசங்களிலும் வீரபாண்டியன் புகழ் பரப்பப்பட்டது.

‘டாக்டர் கமில் சுவலபில்’ என்னும் செக்கோஸ் லோவேகிய தமிழறிஞர் ம.பொ.சி. எழுதிய நூலை வழிகாட்டியாகக் கொண்டு ‘செக்’ மொழியிலே வீரபாண்டியன் வரலாற்றை எழுதி வெளியிட்டு செக்கோஸ்லோவேகிய நாட்டிலும் கட்டபொம்மன் புகழைப் பரப்பினார்.

சோவியத் ருஷ்ய நாட்டிலேயும் ருஷ்ய மொழியிலே பல்வேறு சந்தர்ப்பங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வரலாறு பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரை வடிவில் வெளிவந்தது.

திரு. தாமோதரன் என்னும் ஐ.சி. எஸ்.  அதிகாரி ‘இந்து’ தினசரி பத்திரிகையிலே வீரபாண்டியன் வரலாற்றைஆங்கிலத்தில் எழுதி வெளிவரச் செய்தார்.சென்னை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ ஆங்கில நாளிதழிலேயும் ‘முட்செடி‘ என்னும் தலைப்பில் ராஜாஜி கட்டுரை எழுதி பிரிட்டிஷாருக்கு கட்டபொம்மன் ஒரு முட்செடியாக விளங்கினார் என்றார்.

அரங்கநாதன் என்பவர் எழுதிய விரிவான கட்டுரை ‘எக்ஸ்பிரசில்’  வெளி வந்து,  வங்கத்திலிருந்து வெளிவரும் ‘யுகாந்தர்’ என்ற புகழ் மிக்க ஏட்டிலும் கட்டபொம்மன் புகழ்பாடும் கட்டுரை வெளியானது.

‘பிளிட்ஸ்’ என்னும் புகழ் மிக்க ஆங்கில வார எட்டிலும் வீரபாண்டியன் வரலாறு வெளியிடப்பட்டது. வடபுலத்தில் பாட்னாவிலிருந்து வெளிவரும் ‘டிரிப்யூன்’ என்னும் ஆங்கில நாளிதழிலேயும் வீரபாண்டியன் வரலாறு தொடர் கட்டுரையாக வெளிவந்தது.

அயல் நாடுகளிலே…

சென்னையில் பத்மினி பிக்சர்சார் தயாரித்த வீர பாண்டியகட்டபொம்மன் என்னும் தமிழ்த் திரைப்படமானது லண்டனிலே அங்குள்ள பத்திரிகைகளுக்காக சிறப்பு நிகழ்ச்சியாக வெளிப்பட்டது.

இந்திய அரசு தயாரித்த ‘இந்தியாவின் விடுதலைப் போர்’ என்னும் ஆங்கில டாக்குமெண்டரி திரைப்படத்திலே வீர பாண்டிய கட்டபொம்மன் நடத்திய பாஞ்சாலங்குறிச்சிப் போரும் இணைக்கப்பட்டு உலகமெங்கும் காட்டப்பட்டு வருகிறது.

கிராமியக் கலைஞர்கள்:

இன்னும் வில்லுப்பாட்டுக் கலைக் குழுவினர் பலர் தமிழ்நாட்டிலே கட்டபொம்மன் கதையே நடத்தி வருகின்றனர். கிராமப்புற நாடகக் கலைஞர்களும் கட்டபொம்மன் கதையை ‘தெருக்கூத்து’ பாணியிலே நடத்தி வருகின்றனர்.

நினைவுச் சின்னங்கள்:

நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையிலே நகரமன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச் சிலை பிரதான இடத்தில் நிறுத்தப்பட்டது. மதுரை நகரிலும் நகர மன்றத்தின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழுவுருவச் சிலை மக்கள் கூட்டம் அதிகமாக நடமாடும் முச்சந்தி ஒன்றிலே நிறுத்தப்பட்டுள்ளது.

‘கயத்தாறு’ என்னும் சிற்றூரையடுத்துள்ள கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலே மிகப் பெரிய நினைவுத்தூண் ஒன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டு, பெருந்தலைவர் காமராசரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்விக் கூடங்களிலே…

‘கட்டபொம்மன் வீர வரலாறு’ என்ற திரு. ம.பொ.சி. எழுதிய நூல் முதன்முதலில் பெங்களூர் பல்கலைக் கழகத்தாரால் இண்டர்மீடியட் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டிலும் உயர்நிலைப் பள்ளிகளிலே 10-ஆம் வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது.

சென்னை, இந்திப் பிரசார சபையிலும் இந்தியில் எழுதப்பட்ட கட்டபொம்மன் வரலாறு பாடமாக வைக்கப்பட்டது. எண்ணற்ற கல்லூரிகளில் மாணவர்களே டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்திய ‘முதல் முழக்கம்’ என்னும் நாடகத்தை தாங்களே முயற்சி எடுத்துக் கொண்டு பயின்று நடிப்பது வழக்கமாகி விட்டது.

வானொலிகளிலே…

கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு, ஆகிய அயல்நாட்டு வெளிநாட்டு வானொலி நிலையங்களிலே தலைவர் ம.பொ.சி. அவர்கள் கட்டபொம்மனைப் பற்றி நிகழ்த்திய சொற்பொழிவுகள். பதிவு செய்யப்பட்டு வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன.

அரசுகளின் ஆதரவு:

தி.மு.க. ஆட்சி காலத்திலே முதல்வர் கருணாநிதியின் ஆர்வத்தால் பாஞ்சாலங்குறிஞ்சியிலே பல லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவில் கட்டபொம்மன் நினைவாலயம் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலே முதல்வர் காமராசர் ஆதரவோடு பாஞ்சாலங்குறிஞ்சியில் பரங்கியரால் அழிக்கப்பட்டுப் போன – வீரபாண்டியன் வழிபட்டு வந்த வீர ஜக்கம்மாள் கோயில் புதுப்பிக்கப்பட்டது.

இன்னும் தமிழக அரசின் ஆதரவோடு தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் சிற்றூர்களிலும் சாலைகளுக்கும், பூங்காக்களுக்கும், குடியிருப்புகளுக்கும்,வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திர வீரனா?’ என்னும் வினா தமிழக சட்டமன்றத்தில் சிலரால் எழுப்பப்பட்டபோது ஐயத்திற்கிடமின்றி, அவன் தேச சுதந்திரத்திற்குப் போராடிய வீரனே என்று அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கப்பட்டது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் நுழைவாயிலிலே கட்டபொம்மன் உருவச் சிலை நிறுத்தப்படவேண்டுமென்று தமிழரசு கழகம் அரசுக்கு கோரிக்கை அனுப்பிய போது கட்டபொம்மன் வரலாறு சம்பந்தப்பட்ட இடங்களிலே ஏதேனும் ஒன்றில் நினைவுச் சின்னம் அமைக்க தனியார்களோ அமைப்புகளோ முன்வந்தால் அவர்களுக்கு அரசு முன்வந்து உதவியளிக்கும் என்று கடிதம் மூலம் உறுதியளிக்கப்பட்டது.

சட்டமன்றத்திலும் இந்த உறுதிமொழி ஒரு முறை கேள்விக்கு பதிலாகப் பதிவு செய்யப்பட்டது. பத்மினி பிக்சர்ஸ் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றைப் படமாக்கியபோது மத்திய அரசு பலவகையிலும் உதவி புரிந்தது.

தொல்பொருள் துறை:

வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி புரிந்த பாஞ்சாலக்குறிச்சி என்னும் ஊர் பரங்கியர் ஆட்சியால் அழிக்கப்பட்டு பூகோளப் படத்திலிருந்தே அப்பெயர் அகற்றப்பட்டது. அந்த இடமானது அழிக்கப்பட்ட மாளிகைகளின் அடித்தளங்களோடு கூடிய புதைபொருள் பிரதேசமாக இருந்து வந்தது.

மூதறிஞர் ராஜாஜி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது திரு. ம.பொ.சி.யின் வேண்டுகோளுக்கிணங்க அந்த இடத்தைப் பார்வையிட்டு மத்திய அரசின் தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள பரிந்துரைத்தார். இப்போது தமிழக அரசின் தொல்பொருள் துறைக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

கவிஞர் – அறிஞர் புகழ் மாலை:

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை ஆகிய கவிஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து செய்யுள் பலவற்றைக் கொண்ட கவிதைகளைப் பாடியுள்ளனர்.

ராஜாஜி, அண்ணா ஆகிய அறிஞர் பெருமக்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைப் புகழ்ந்து பேசியுள்ளனர்.

1957 சென்னை செயின்ட் மேரீஸ் மண்டபத்தில் தமிழரசு கழகத்தினர் நடத்திய கட்ட பொம்மன் விழாவிலே ராஜாஜி தாமதமாகவே திடீரெனத் தோன்றி பொம்மனுடைய புகழை விவரித்துப் பேசினார்.

.

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவர்.

காண்க:

இத்தளத்தில் அன்னாரது இடுகைகள்

வெள்ளையரை மிரட்டிய வீரச்சிங்கம்

நன்றி:

இக்கட்டுரை, வீ ரபாண்டிய கட்டபொம்மன்.COM என்ற தளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் வீரப் பெண்மணி

-ஆசிரியர் குழு

velu natchiyarவேலு நாச்சியார்

(பிறப்பு: 1730 –  மறைவு: 1796, டிச. 25)

வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
 .
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான்: வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
.
‘சக்கந்தி’,  ராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது (1730)  இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாத செல்லத்துரை சேதுபதி,  ராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார்.
.
அரச குல வழக்கப்படி, வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும்.
.
இப்படி வீறுகொண்டு வளர்ந்த இளம்பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746-ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்குக் குடிபுகுந்தார்.
 .
சிவகங்கை சீமை, சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று ராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது.  நவாபின் அடுத்த குறி சிவகங்கை தான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப்.  நேரம் பார்த்து நெருங்குவான்; நெருக்குவான்; கழுத்தை நெரித்துவிடுவான்.
 .
சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல.  போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார், வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள்- வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.
 .
நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.
 .
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர்  காளையார்   கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையார் கோயிலைச் சுற்றி வளைத்தன; கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார்; இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப் படைகளின் வசமாகியது.
 .
திடீர்த் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது; கதறிஅழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையார் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார்;  எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.
 .
இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பது தான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்க முடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள்.
 .
ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையார்  கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
 .
வேலு நாச்சியார் காளையார் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா? அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.
 .
பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
 .
வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.
 .
தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார்.  கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
 .
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன், அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
 .
தன் வேதனைகளையும் லட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார். வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும்,  வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர்.
 .
வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது,  நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியைப் பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.
 .
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப் படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையார் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால் தான் சிவகங்கையை மீட்க முடியும்.
 .
வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாக்கினார். இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார். சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
 .
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும்  ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
 .
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது.
 .
வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில்  (25.12.1796)  இறந்தார், வேலு நாச்சியார்.
 .
அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.
 .
காண்க:
%d bloggers like this: