Category Archives: பொதுவானவை

‘காண்டீபம்’ பிறந்தது!

-ஆசிரியர் குழு

kandeepam-fun-1

‘காண்டீபம்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றோர் (இடமிருந்து): திருப்பூர் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், அறம் அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன், ஆர்.எஸ்.எஸ். தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி, தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி, ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் கோட்டத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி, ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சிவானந்தன் ஆகியோர்.

 

தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் திருப்பூரில் கடந்த 2016, அக்டோபர் 11-இல் நடைபெற்ற  விஜயதசமி விழாவில் தேசிய விழிப்புணர்வுக் காலாண்டிதழான ‘காண்டீபம்’  முதல் இதழ் வெளியிடப்பட்டது.

ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, விஜயதசமி விழா, காண்டீபம் காலாண்டிதழ் வெளியீட்டு விழா ஆகியவை அடங்கிய முப்பெரும் விழாவை, தேசிய சிந்தனைக் கழகம், அறம் அறக்கட்டளை, ஸ்ரீபுரம் அறக்கட்டளை இணைந்து 2016, அக். 11-ஆம் தேதி  நடத்தின.

விழாவுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சா.சிவானந்தன், தஞ்சை பாரதி இலக்கிய பயிலரங்கின் தலைவர் தஞ்சை வெ.கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் அறம் அறக்கட்டளையின் தலைவர் ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன், திருப்பூர் கோட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில் ‘ராமானுஜத்தின் இன்றைய அவசியம்’ என்ற தலைப்பில், தே.சி.க. மாநிலத் தலைவர் ம.வே.பசுபதி பேசினார்.

‘காண்டீபம்’ காலாண்டிதழை சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆ.கலாநிதி வெளியிட, ஆர்ம்ஸ்ட்ராங் பழனிசாமி பெற்றுக் கொண்டார். தஞ்சை வெ.கோபாலன் எழுதிய ‘சுதந்திர கர்ஜனை’ நூலும் விழாவில் வெளியிடப்பட்டது.

book-1-wrapper

ஐப்பசி-2016 இதழ்

நிறைவாக,  ‘வெற்றிக்கு வழி’ என்ற தலைப்பில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர் இரா.வன்னியராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்  “தேசிய சிந்தனை வளர்க்கும் பணியை பத்திரிகைகள் அடிப்படைப் பணியாக மேற்கொள்ள வேண்டும். நமது இளைஞர்கள் உலக அளவில் சாதனை புரிய தேசிய சிந்தனையே உரமாக இருக்கும்” என்றார்.

விழாவில் ஸ்ரீபுரம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்பாளர் ம.கொ.சி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் குழலேந்தி, செயலாளர் சத்தியப்பிரியன், கோட்டச் செயலாளர் சு.சத்தியநாராயணன், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பக்தவத்சலம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Advertisements

தலைவரின் வாழ்த்துரை

-பேராசிரியர்  ம.வே.பசுபதி 

1, மூன்றாம்  தளம் ,
91, திருமங்கலம்  சாலை ,
வில்லிவாக்கம் ,
சென்னை -600 049
 .

வாழ்த்துரை

 

தேசிய சிந்தனைக்  கழகத்தின்  அதிகாரபூர்வ  இணையதளம்,  வெற்றித் திருநாளாகிய  விஜயதசமித்  திருநாளில் தொடங்குவது  மிக்க மகிழ்ச்சி தருகிறது.
 .
கல்வியாளனின்  சிந்தனை  ஆதார வேர்களைத் தெளிவுபடுத்தும். தேசத் தொண்டனின்  சிந்தனை  சமுதாயப்  பிரச்னைகளுக்கான தீர்வுகளைத் துழாவும்.
 .
பாரம்பரியப்  பிடிப்பை விடாத சமுதாயப்  பிரக்ஞையுடன் கூடிய அறிவார்ந்த சிந்தனைகள் இன்றைய தேதியில் கனவுகள்போல மதிக்கப்பட்டாலும் ,  தளர்ச்சியடையாமல் அவற்றை மேலும் ஆழப்படுத்தும்போது பிரமிப்பில் ஆழ்த்தும் பென்னம் பெரிய முடிவுகளைக்  கண்டெடுக்க முடியும்.
 .
 ‘தேசமே தெய்வம்’ என்ற  இவ்  இணையதளத்தின்  தலைப்பு , ஓர் ஆழிய  சிந்தனையுடன் புறப்பட்டுள்ள அற்புதத் தலைப்பாகும் . இது  முற்காலச் சான்றுகளை இறுகப் பற்றிக்கொண்டு  எழுந்து நடக்கிறது; எதிர்காலத்தை ஆனந்தத்துடன்  வரவேற்கிறது .
 .
 நாடு  என்பது  தேசம்  என்னும்  பெருநிலப் பரப்பின்  சிற்றெல்லை. பண்பாடுகள், சடங்குகள் முதலியவற்றால்  ஒன்றுபட்ட  நாடுகளின் சேர்க்கையாகிய  பேரெல்லை உடையது  தேசம்.
.
  “ஈசன்  அடியார்  இதயம் கலங்கிடத்                                                                  தேசமும் நாடும்  சிறப்பும்  அழிந்திடும்” 
 .
-என்னும்  திருமந்திரத் தொடரில்,  தேசம் என்பதற்கும்  நாடு என்பதற்கும் வேறுபாடுள்ளதைத்  திருமூலர்  சுட்டிக்காட்டியுள்ளார். தேசம், நாடு என்பன ஒரே தொடரில் வருவதால் இரண்டிற்குமான பொருள்  வேறு வேறு  எனப் புலப்படுத்துகிறார்.
 .
பாரத  தேசத்தை நோக்கத்  தமிழகத்தை நாடு  என்று சொல்ல வேண்டும். உலகத்தை நோக்கப்  பாரதத்தை  நாடு  என்று சொல்ல வேண்டும்.  பல உலகங்கள் சேர்ந்த பிரபஞ்சத்தை  நோக்க  மண்ணுலகமே நாடு என்ற தலைப்பில் அடங்கிவிடும். மண்ணாடு  விண்ணாடு  என்ற பிரயோகங்களே இதற்குச்  சான்றாகும் .
 .
“செந்தமிழ் நாடு  எனும்  போதினிலே” என்றும் ,
“பாரத  தேசமென்று   பெயர்ச் சொல்லுவார்”  என்றும் தொடர்களை  அமைத்து  மகாகவி பாரதி மேற்காண்  உண்மையை நிலைநாட்டினார்.
 .
“பாரத நாடு  பழம்பெரும்  நாடு
நீரதன்  புதல்வர்;  இந்  நினைவகற்றாதீர்”
 .
-என்று  அவர் கர்ஜிக்கும்போது  பூதேசத்தின் ஒரு பிரதேசமாகப்  பாரதத்தைக்  குறிப்பிடும் நுணுக்கம் புரிகிறது.  பூதேசத்தில் எத்தனையோ நாடுகள்  இருந்தாலும் நம்  பாரத நாடு தான்  பழம்பெரும்  நாடு என்ற செம்மாப்பு  அத்தொடரின்  ஜீவநாதமாகும்.
 .
 தேசம் பற்றிய சிந்தனை  விசாலமானது. நாட்டு நடப்புகளும்  தேவையான நடவுகளும்  தேசச் சிந்தையுடன் இணைந்து பிணைந்து  வரும்தானே !
 .
 ‘பாரதத் தாய்’   என்னும்  நம்  மாதா , நாமே  கற்பிதம் செய்து கொண்ட  கருதுகோள்  என  ஒருபோதும்  நினைத்தலாகாது. காலக் கணிப்புகள்  ஏதொன்றிலும்  அடக்கமுடியாத  பராசக்தியாம்  உமையே, பாரதத் தாய்  என்பதில்  மகாகவிக்குச்  சர்க்கரை  முனையளவுக்கும்  சந்தேகம்  வந்ததில்லை.
 .
“கற்றைச்  சடை,   மதி  வைத்த  துறவியைக்
கை தொழுவாள்  எங்கள்  தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண்  டேழுலகாளும்
ஒருவனையும்  தொழுவாள்”
 .
-என்பதில்  உமாபரமேஸ்வரியாகிய  பாரத மாதா  கணவராகிய  சிவனை  வணங்குதலையும்,  சகோதராகிய  திருமாலை  வணங்குதலையும்  குறிப்பிட்டார்  மகாகவி.
 .
இந்த  நுட்பம்  புரிந்துகொள்ள முடியாதவர்களுக்காக,  கட்டக்கடைசியாக,
 .
 “வெண்மை  வளர் இமயாசலன்  ஈன்ற                                                            விறன்மகளாம்  எங்கள்  தாய்”
 .
-என்றார்.  இந்தத்  தொடர்  இமவான் மகளாக  அவதரித்த அம்பிகைக்கும்  இமயத்திலிருந்து  தொடங்கித்  தொடரும்  பாரதமாதாவுக்கும்  பொருந்தி  இருவரும் ஒருவரே  எனப் பொருத்துகிறது.
 .
 எனவே    ‘தேசமே  தெய்வம்’  என்பது  நன்னெறிப்  பயன்பாட்டுச்  சிந்தனை  என்பதுடன்,  உயர்நலம் அருளும் தெய்வீகச் சிந்தனையும்  ஆகிறது.
 .
தேச நலன்  காத்து  வளர்க்கும் தெய்வீக இணைப்புடன் பிணைந்த  இவ் இணையதளம்  சாதனைகள் படைக்க  வேண்டும்.  உலகம் வியக்கும் உன்னதச்செய்திகள்  இதில்  வெளிவர வேண்டும்.  பலநூறாயிரம் சிந்தனைச் செல்வர்கள்  இவ்வேள்வியில்  பங்கு பெற  வேண்டும்
 .
– என  எல்லாம்  வல்ல  திருவருட் சக்தியை ,  மனம் ,மொழி , மெய்களால்  வணங்கி  வேண்டி,  வாழ்த்துகிறேன்.
 .
சுபம்.
 .
  அன்புடன்,
ம. வே.பசுபதி
29.09.2014
.

இனிய துவக்கம்….

-ம.கொ.சி.ராஜேந்திரன்,

மாநில அமைப்பாளர்,

தேசிய சிந்தனை கழகம்,

சென்னை.

***

அனைவருக்கும் வணக்கம்!  

வெற்றித் திருநாளாம் விஜயதசமி அன்று நமது தேசிய சிந்தனை கழகம் சார்பில் தேசமே தெய்வம் என்கின்ற இணையதளம் துவக்கப்படுகிறது.

இன்றைய உலகம் விஞ்ஞான சாதனைகளால் பிரமாண்டத்தைக் காட்டும் வளத்தையும் வலிமையையும் பெற்றுள்ளது. மேலும் எந்த மனிதனையும் தொடர்பு கொள்வதும் எந்த ஒரு நிகழ்வைக் காணும் அற்புதக் காட்சியையும் விஞ்ஞானத்தால் பெற முடிகிறது. ஆனால் அதே சமயத்தில் உலகத்தை சுருக்கிய கண்டுபிடிப்புகள்,  பல்வேறு தேசங்களில் வாழும் மக்களின் உள்ளங்களைச் சுருக்கிய தன்மையையும் வருத்தத்தோடு காண முடிகிறது.

அறிவியல், பொருளாதாரம், கல்வி, அரசியல்,  இலக்கியம் போன்ற எல்லாத் துறைகளிலும் உயர்ந்த நிலையுடன் உதாரணங்களுடன் கூடிய, ஆளுமைத் திறனுள்ள, வழிகாட்டுகின்ற தலைவர்களோ, முன்னோடிகளோ இல்லாத ஒரு வெற்றிடத்தை நம் நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் உள்ள இளைய தலைமுறை சந்தித்து வருகிறது.

பரந்து விரிந்த உலகில் தோன்றிய நாகரிகங்கள்  எல்லாம் தங்கள் அடையாளங்களாக கட்டடங்களையும் சில நூல்களையுமே விட்டுச் சென்றிருகின்றன. ஆனால் அன்றுமுதல் இன்று வரை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அறுந்திடாத தொடர்ச்சியாக தனது பண்பாட்டையும் கலாசாரத்தையும் உயிரோட்டமுள்ளதாக ஜீவித்து வருவது பாரத கலாச்சாரம்  மட்டும் தான்.

மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கம் கிழகத்திய நாடுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அவை தங்களது பண்பாட்டின் சுவடுகளைக் காப்பாற்றி கொண்டுதான் இருக்கின்றன. அவ்வழியில் நமது பாரத தேசம் நமது  உயிர்நாடியாக விளங்குகின்ற- அதே சமயத்தில் உலகிற்கே வழிகாட்டக் கூடிய- தர்மத்தை மையமாகக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்வது கண்கூடு.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளானாலும் சரி, பொருளாதாரச் சீர்கேடுகள் ஆனாலும் சரி,  மனிதர்களின் பேராசையினால் ஏற்படும் வன்முறைகள் ஆனாலும் சரி,  வல்லரசு நாடுகளில் ஆதிக்கப் போக்கினால் விளையும் கெடுபிடிகளானாலும் சரி,  எல்லாவற்றுக்கும் தீர்வினைத் தரக்கூடிய நாடு உண்டென்றால் அது பாரத தேசம் தான்.

இத்தகை பெருமை வாய்ந்த பாரத தேசத்தின் மக்களாகிய நாம், நம்முடைய தேசத்தின் அடிநாதமாக விளங்கக் கூடிய தேசிய உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வண்ணமாக, நம்மை ஒருங்கிணைக்கும் தளமாக,  தேசிய சிந்தனைக் கழகம். “தேசமே தெய்வம்” என்ற இந்த இணையதளத்தைத் துவக்கிறது.

இச்சீரிய முயற்சியில் பங்குபெற அறிவியல் பெருமக்கள், கல்வியாளர்கள்,  தேசியச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள்  மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள்  அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அனைவருக்கும் விஜயதசமி திருநாள் வாழ்த்துக்கள்!
.
ஜய ஆண்டு, புரட்டாசி மாதம், 17ம் தேதி,
வெள்ளிக்கிழமை
(03.10.2014)
.
%d bloggers like this: