Category Archives: நாயன்மார்

சைவம் போற்றும் அன்னை

-அம்பை சிவன்

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் 

 (திருநட்சத்திரம்: பங்குனி – சுவாதி)

(ஏப்ரல் 6) 

 சைவம் வளர்த்த 63  நாயன்மார்களுள் பெண்களுக்கும் இடமுண்டு. அவர்களுள் தலையாயவர் காரைக்கால் அம்மையார்.  பொது யுகத்திற்குப்  பின்  300- 500 காலப்பகுதியில் வாழ்ந்தவர் இவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் இவரது இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.  நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர். இறைவனால் ”அம்மையே” என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர் என்பர்.

இவர் இயற்றிய பாடல்கள் – அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (20 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றி, பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் அமைந்தன. இவரது சரிதம் இதோ…

காரைக்காலில் தனதத்தன் எனும் வணிகர் குலத்தலைவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு புனிதவதி என்று பெயர் சூட்டினார்கள். இவர் இளவயதிலேயே சிவபெருமானிடம் பக்தி கொண்டிருந்தார். சிவனடியார்களை வணங்கி உபசரிப்பார். இவருக்கு திருமண வயது எட்டியது.

நாகப்பட்டினத்தில் நிதிபதி எனும் வணிகத்தலைவன், தன் மகன் பரமதத்தனுக்கு புனிதவதியைத் திருமணம் செய்ய விரும்பினான். அதன்படி தனதத்தனுடன் பேச, புனிதவதியார்-பரமதத்தன் திருமணம் நடந்தேறியது. தனதத்தன் தன் மகளைப் பிரியாமல் இருப்பதற்காக, காரைக்காலிலே அவர்களை குடியமர்த்தினான். பரமதத்தன், வாணிபத் துறையை பெருக்கி புனிதவதியாருடன் இல்லறத்தை இனிது நடத்தினான்.

ஒருநாள் பரமதத்தனைக் காண வந்த வணிகர்கள், அவனுக்கு இரண்டு மாங்கனிகளைக் கொடுத்தனர். பரமதத்தன் அவற்றை வீட்டிற்குக் கொடுத்தனுப்பினான். அப்பழங்களை புனிதவதியார் வாங்கி வைக்கும்போது ஒரு சிவனடியார் பசியுடன் வந்தார். அவருக்கு புனிதவதியார், அமுது படைத்தார். அப்போது தன் கணவர் கொடுத்த இரு மாங்கனிகளுள் ஒன்றை சிவனடியாருக்கு படைத்தார். சிவனடியார், புனிதவதியாரை வாழ்த்திவிட்டுச் சென்றார்.

பரமதத்தன் மதியம் உணவருந்த விட்டிற்கு வந்தான். புனிதவதியார் அவருக்கு அமுது பரிமாறி, மீதமுள்ள ஒரு மாங்கனியையும் வைத்தார். பரமதத்தன் மாங்கனியை ரசித்து சாப்பிட்டான். கனியின் சுவையால் கவரப்பட்டு ‘மற்றுமொரு கனியையும் கொண்டு வா’ என்றான். உடனே சமையலறை சென்ற புனிதவதியார், உற்றவிடத்து உதவும் பெருமானே என சிவபெருமானை வேண்ட, உடனே புனிதவதியாரின் கையில் ஒரு மாங்கனி வந்தது. அந்தக் கனியை பரமதத்தனுக்கு படைத்தார்.

முன்சாப்பிட்ட கனியைவிட மிகச் சுவையாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தான் பரமதத்தன். உடனே தன் மனைவியிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். புனிதவதியாரோ, கணவனிடம் உண்மையை மறைத்தல் தவறென்று நடந்தது அனைத்தையும் கூறினார்.

பரமதத்தனுக்கோ ஆச்சரியம். ‘சிவனருளா! அப்படியாயின் இன்னொரு கனி கொண்டுவா பார்ப்போம்!’ என்றான். உடனே புனிதவதியார் மீண்டும் இறைவனை வேண்ட, இறைவன் மேலும் ஒரு மாங்கனியை அருளினார். இதனைக் கண்ட பரமதத்தன், ‘இவள் தெய்வம். இவளை விட்டு நீங்குதல் வேண்டும்’ என அஞ்சி, புனிதவதியாரோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தான்.

சில நாட்கள் கழித்து வாணிபத்திற்காக பாண்டிய நாடு சென்றான். அங்கு வாணிப குலப்பெண்ணை மணந்து, ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தான். அந்தப் பெண் குழந்தைக்கு, புனிதவதி எனப் பெயரிட்டு வளர்த்தான்.

பரமதத்தன் பாண்டிய நாட்டிலிருப்பதை அறிந்த உறவினர்கள் பரமதத்தனுடன் புனிதவதியாரை சேர்த்து வைக்க ஒரு பல்லக்கில் ஏற்றி பாண்டிய நாட்டுக்கு அனுப்பினார்கள். புனிதவதியாரின் வரவை அறிந்த பரமதத்தன் தன் மனைவி, மகளுடன் வந்து வணங்கி, உம் திருவருளால் இனிது வாழ்கிறேன். இக்குழந்தைக்கு உமது திருநாமத்தையே சூட்டியுள்ளேன் என்று கூறி அம்மையார் காலில் விழுந்து எழுந்தான்.

இதனைக் கண்ட அவர் சுற்றத்தினர், ‘என்ன இது? உன் மனைவியை ஏன் வணங்கினாய்?’ என கேட்க, ‘இவள் தெய்வம். இவர் மானிடரே அல்ல’ என நடந்தது அனைத்தையும் க்ப்ப்ரினான் பரமதத்தன்.

புனிதவதியார் உடனே இறைவனிடம், ”ஈசனே, இவருக்காக தாங்கிய மனித உடலை எடுத்துக் கொண்டு, பேய் வடிவை அருள்வாயாக!” என வேண்டி, பேய் உருவம் பெற்றார்.

இவருக்கு திருக்கயிலாயத்தைக் காண வேண்டும் எனும் ஆவல் உண்டானது. அதனால் கயிலையை நோக்கி, காலால் நடப்பதைத் தவிர்த்து, தலையால் கயிலை மலை மீது ஏறினார். இதைக் கண்ட உமாதேவியார் சிவனிடம் கேட்க, இவள் நம்மைத் துதிக்கும் பொருட்டு இப்பேய் உருவை வேண்டி பெற்றார்  என்று கூறினார்.

பின்னர் புனிதவதியாரைப் பார்த்து. ”அம்மையே வா” என்றழைத்தார். இறைவனின் திருவடியின் கீழ் எப்போதும் இருக்க வேண்டும் என வேண்டினார் புனிதவதியார்.  ”அம்மையே, தென்திசையில் திருவாலங்காடு எனும் ஊரில் நாம் நடனம் புரிவோம். அதைக் கண்டு இன்புற்று நம்மைப் பாடிக்கொண்டு இருப்பாயாக!” என்று அருளினார்.

உடனே திருக்கயிலையை விட்டு, தலையினால் நடந்து சென்று திருவாலங்காட்டை அடைந்தார். அங்கு ஆண்டவனின் திருநடனத்தைக் கண்டு வணங்கி, ‘கொங்கை திரங்கி’, ‘எட்டி இல்லம்’ எனும் இரண்டு மூத்த திருப்பதிகங்களைப் பாடினார். பின்னர் இறைவன் திருவடியின் கீழ் என்றும் சிவ ஆனந்தத்தை நுகரும் பேறு பெற்றார். அன்றுமுதல் இவர் ‘காரைக்காலம்மையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வெறும் கதையல்ல. அவர் இயற்றிய தமிழ் நூல்கள் சாகா வரம் பெற்றவை. இறைவன் மீதான பக்தியில் தன்னை உருக்கிக் கொண்டு வாழ்ந்தவர் அவர் என்பதும், அதற்காகவே இல்லற வாழ்வைத் துறந்தவர் என்பதும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய சேதிகள். தமிழின் தெய்வீக ஆற்றலுக்கு சான்று பகர்கின்றன இவரது பாடல்கள்.

.

Advertisements

போரும் தொண்டிற்கே என வாழ்ந்தவர்

-அம்பை சிவன்

முனையடுவார் நாயனார்

 முனையடுவார் நாயனார்

(திருநட்சத்திரம்: பங்குனி -பூசம்)

(மார்ச் 30)

சோழநாட்டில் உள்ள திருநீடுர் என்னும் ஊரில் சிவனடியார் ஒருவர் இருந்தார். இவர் வேளாள குலத்தைச் சார்ந்தவர். முனை என்றால் போர்முனை என்று பொருள். இவர், போர்க்களத்தில் நின்று எதிரிகளை வெல்வதில் வல்லவர். எனவே இவரை, ‘முனையடுவார்’ என்றே அழைத்தனர்.

சிவபெருமானிடத்தில் மாறாத காதல் கொண்டு உள்ளம் உருக, கண்ணீர் மல்க வழிபடுவார். சிவனடியார்களுக்கு திருத்தொண்டுகள் புரிந்து வந்தார்.

போரிலே எதிரிகளிடம் தோற்றவர்கள் முனையடுவாரிடம் வருவர். அவருடைய உதவியை கேட்பர். முனையடுவார், தோல்வியடைந்தவர்கள் சார்பாக போரிட்டு வெற்றி பெறுவார். அந்த வெற்றியில் கிடைக்கும் பொருளைக் கொண்டு சிவனடியார்களுக்கு உணவு ஏற்பாடு செய்து படைப்பார்.

அடியார்களுக்குத்  தேவையான எல்லா உதவிகளையும் செய்வார். இவ்வாறு பல காலம் வாழ்ந்து சிவனடியார்களுக்கு தொண்டு செய்து மகிழ்ந்தார். இறுதியில் சிவபெருமான் திருவடிகளை அடைந்தார்.

அன்றுமுதல் இவர் முனையடுவார் நாயனார் என அழைக்கப்படுகிறார்.

 

சிவத்தொண்டர் குறை தீர்த்தவர்

-அம்பை சிவன்

கணநாத நாயனார்

கணநாத நாயனார்

(திருநட்சத்திரம்: பங்குனி  – திருவாதிரை)

(மார்ச் 27)

சோழநாட்டில் உள்ள சீர்காழியில் தோன்றியவர் கணநாதர். இவர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர். இல்லற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர். திருத்தோணி சிவபெருமானுக்கு திருத்தொண்டு செய்து வருபவர்.

திருநந்தவனப் பணி செய்வோர், மலர் கொய்வோர், திருமாலை கட்டுவோர்., திருமஞ்சனம் எடுப்போர், திரு அலகிடுவோர், திருமெழுகிடுவோர், திருவிளக்கேற்றுவோர், திருமறை எழுதுவோர், ஓதுவோர் முதலிய திருத்தொண்டர்களுக்கு குறைகள் ஏற்பட்டால் அவற்றை நீக்குவார்.

இத்தகைய திருத்தொண்டுகளில் மக்களை ஈடுபடுத்தி அவர்களையும் திருத்தொண்டர்களாக்குவார். மேலும், இவர் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார். அதனால் இவர் திருக்கயிலையை அடைந்து சிவகணங்களுக்குத் தலைவரானார். அன்று முதல் இவர், கணநாத நாயனார் என்றே அழைக்கப்படுகிறார்.

குறிப்பு:

திரு. அம்பை சிவன், சென்னையில் வசிக்கும் பத்திரிகையாளர்.

அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்

-ஆசிரியர் குழு

நேச நாயனார்

நேச நாயனார்

(திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி)
(மார்ச் 25)

 

“மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”
-திருத்தொண்டத்தொகை.

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர்.

அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார்.

தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்.

சிவனடியார்க்கு ஆடைகள் தருவதையே ஒரு தவமாக இயற்றியதால் சிவனடி அடையும் பேறு பெற்ற அவரது வாழ்வு பக்தியின் உயர்வுக்கு சான்று.

 

 

சமணர் கண் திறந்தவர்

-அம்பை சிவன்

தண்டியடிகள் நாயனார்

தண்டியடிகள் நாயனார்

(திருநட்சத்திரம்: பங்குனி – சதயம்)

(மார்ச் 19)

 

சோழநாட்டிலுள்ள  திருவாரூரில் பிறந்தவர் தண்டியடிகள். இவர் பிறவிக் குருடர். அகக்கண்ணிலே ஆண்டவனை தொழுதுவந்தார். தினமும் திருவாரூர் கோயிலை வலம் வருவார். ஐந்தெழுத்து மந்திரத்தை மறவாது ஓதுவார்.

திருக்கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று இருந்தது. அதன் நான்கு பக்கங்களிலும் சமண மடங்கள் நிறைய காணப்பட்டன. எனவே, திருக்குளம் ஆக்கிரமிப்பால் சுருங்கியும் பராமரிப்பு இன்றியும் காணப்பட்டது.

தண்டியடிகள் திருக்குளத்தை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்த விரும்பினார். திருக்குளத்தின் நடுவிலே ஒரு கம்பை நட்டார். மற்றொரு கம்பை குளத்தின் கரையிலே நாட்டினார். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கயிறு கட்டினார். கயிற்றைத் தடவிக் கொண்டே குளத்திற்குள் இறங்கி மண்ணைத் தோண்டுவார், அதைக் கூடையிலே சுமந்து வந்து கரையில் கொட்டுவார்.

தண்டியடிகளின் செயலைக் கண்ட சமணர்கள் பொறாமை கொண்டனர். எனவே அவர்கள் தண்டியடிகளிடம் சென்று,  “நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் அவற்றிலுள்ள சிறு பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் இறக்கும். எனவே, அவற்றை துன்புறுத்த வேண்டாம்” என்று கூறினார்கள். அதற்கு அடிகள் “அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியாது” என்று கூறி உழவாரப் பணியைத் தொடர்ந்தார்.

இதைக் கண்ட சமணர்கள் கோபமடைந்து  “நாங்கள் சொன்னதும் அறிவுரையே. அதைக் கேட்கமாட்டாய் போலிருக்கிறதே! உனக்கு செவியும் இல்லையோ?” என்றனர். உடனே அடிகளோ,  “சிவனடியை அன்றி பிறிதொன்றை என் கண் பாராது. அந்த விஷயம் உங்களுக்குப் புரியாது. புற உலகம் காண, நான் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என பதிலுக்கு கேட்டார்.

“நீ உன் தெய்வ வலிமையால் கண்பெற்றால். நாங்கள் இந்த ஊரை விட்டே போய்விடுகிறோம்” என்ற சமணர்கள் தண்டியடிகள் வைத்திருந்த மண்வெட்டிகள், நட்டுவைத்த கம்புகள், கயிறு ஆகியவற்றையும் பிடுங்கி கொண்டு சென்றனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த தண்டியடிகள். திருக்கோயிலை அடைந்து இறைவனிடம் முறையிட்டார். அன்று இரவு, தண்டியடிகள் கனவில் சிவபெருமான் தோன்றி,  “அன்பனே, கவலைப்படாதே. உன்னுடைய கண்கள் காணவும், சமணர்களுடைய கண்கள் குருடாகவும் அருள் செய்வோம்” என்றார்.

அதே சமயம், அந்த நாட்டு மன்னனின் கனவிலே தோன்றி,  “தண்டி என்பவன் என்னுடைய குளத்தை சீரமைக்கிறான். சமணர்கள் அதற்கு இடையூறு செய்கிறார்கள். எனவே நீ அவனிடம் சென்று அவனது விருப்பத்தை பூர்த்தி செய்வாயாக” என்றார்.

பொழுது விடிந்தது. மன்னன் தண்டியடிகள் இருக்கும் இடத்தை அடைந்தான். தான் கண்ட கனவை அவரிடம் கூறினான். தண்டியடிகளும், தான் மேற்கொண்ட வேலையையும் அதற்கு சமணர்கள் செய்த தொந்தரவுகளையும் மன்னனிடம் விவரித்தார்.

மன்னன் சமணர்களை விசாரணைக்கு அழைத்தான். அவர்களோ, தண்டி கண்பார்வை பெற்றால் தாங்கள் இந்த ஊரைவிட்டு போவதாக உறுதி கூறினார்கள். உடனே, தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் சென்றான். மன்னன் கரையிலே நின்று கொண்டு, தண்டியடிகளை நோக்கி,  “சிவநேயரே, சிவனருளால் கண்பார்வை பெறுதலைக் காட்டுக!” என்றான்.

தண்டியடிகளும் சிவபெருமானை மனமுருகப் பிரார்த்தித்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிக்கொண்டே குளத்தினுள் மூழ்கினார். கண்பார்வை பெற்று எழுந்தார். சமணர்களோ, கண்பார்வை இழந்து தடுமாறினர். அந்த காட்சியைக் கண்ட மன்னன், சமணர்களை ஊரைவிட்டு வெளியேற்றினான். தண்டியடிகள் விருப்பப்படி திருக்குளத்தை சீரமைத்தான்.

தண்டியடிகள் வழக்கம்போல சிவத்தொண்டு செய்து இறுதியில் சிவபெருமான் திருவடிநிழலை அடைந்தார். அன்று முதல், தண்டியடிகள் நாயனார் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

தனது ஊனக்கண்கள் இருண்டிருந்தபோதும், சிவபக்தியால் பார்வை பெற்ற தண்டியார், சமணரின் ஞானக் கண்களைத் திறந்தவராக வணங்கப்படுகிறார்.

அந்தக் காலத்திலேயே மதப் பிரசாரத்திற்கு எதிரான குரலாக தண்டியரின் குரல் ஒலிப்பதைக் காண்கிறோம். தவிர கோயில் குளத்தை செப்பனிடும் பணி சிவப் பணியென்று அவர் கூறியது நம் ஒவ்வொருவரும் உய்த்துணர வேண்டியது.

ஒவ்வொருவரும் தமது பாரம்பரியத்தைக் காப்பதில் தண்டியார் வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதே பெரிய புராணம் கூறும் நீதி.

%d bloggers like this: