Category Archives: தியாக தீபம்

புரட்சிக்கார எழுத்தாளர்

-ம.பூமாகுமாரி

 

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு. ஐயர்

(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.

1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.

குறிப்பு:

திருமதி பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:   சாவர்க்கரின் தமிழகத் தோழர்

.

Advertisements

காந்திக்கு ஆயுதம் அளித்தவள்

-ம.பூமாகுமாரி

f43f9-thillaiaadivalliammai

தில்லையாடி வள்ளியம்மை நினைவு அஞ்சல்தலை

தில்லையாடி வள்ளியம்மை

(பிறப்பு: 1898 பிப். 22, 1898 – மறைவு: 1914 , பிப். 22)

 

தென்னாப்பிரிக்காவில் முனுசாமி முதலியார்,  மங்களம் அம்மையார் தம்பதி வாழ்ந்து வந்தனர். பூர்விகம் நாகப்பட்டினம், தமிழ்நாடு. இவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் 1898 பிப். 22-இல் பிறந்தவள் வள்ளியம்மை.

ஜோகநேஸ்பார்க் யில் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார் முதலியார். தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களையும்,கருப்பு இன மக்களையும் நிற வெறி பிடித்த பிரிட்டிஷ் அரசு அடிமைகளாக நடத்தியது. இந்த வித்யாசப்படுத்துதலுக்கு எதிராக இந்தியாவின் இளம் பாரிஸ்டர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு எதிர்ப்பு அணிவகுப்பு நடத்தினார். ட்றான்வால் தொட்டு நடால் வரை பேரணி. வள்ளியம்மை பேரணியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சிறைவாசத்தின் போது கொடூரமான நோய் தாக்குதலுக்கு ஆளானார். இருந்தும் அதைக் காரணம் காட்டி விடுதலை ஆகி வந்து சிகிச்சை பெற அவர்  ஒப்பவில்லை.

தென்னாப்ரிக்க சிறை அதிகாரிகள் ‘ஏன் நீங்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்கர்கள் என்றே பதிவு செய்யக் கூடாது? இந்தியாவாம்.. அதற்கு ஒரு கொடி கூட இல்லை. அது ஒரு நாடே இல்லை’ என   ஏளனமாகப் பேசினர்.

வள்ளியம்மை தான் உடுத்தியிருந்த சீலையைக் கிழித்து, ‘கொடி தானே வேண்டும்? இதோ இருக்கிறது எங்கள் நாட்டுக் கொடி’ என்று உரக்க சொன்னார். அப்பொழுது அவருக்கு வயது 16 இருக்கும்.

காந்திஜி, அவரிடமிருந்தே தியாகத்தையும் போராடுவதற்கான மன உறுதியையும் பெற்றதாக புகழாரம் சூட்டுகிறார். சத்யாக்கிரஹமும் அஹிம்சையும் ஆயுதம் ஆயின காந்திக்கு. அதற்கு ஒரு முன்னுதாரணம் போன்று தன் வாழ்விலும் சாவிலும் நிரூபித்தவர் வள்ளியம்மை.

‘நீ விடுதலைக்கு விண்ணப்பித்து சிகிச்சை பெற்று இருக்கலாமே?’ என காந்தி கேட்ட தற்கு நான் அப்படிச் செய்ய இஷ்டப்படவில்லை.  இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி ரத்தான பின்பே விடுதலை பெறுவேன்’ என்றார்.

கொடிய சிறைவாசத்தால் 1914 , பிப். 22 அன்று வள்ளியம்மை இறந்து போனாள். வள்ளியம்மையின் மரணம் காந்தியின் உள்ளத்தை உலுக்கிவிட்டது. அதனால் தான் ‘எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்கு உரியவர்’ என காந்திஜியால் வள்ளியம்மையை தான்.

1-5-1915- ல் தில்லையாடிக்கு விஜயம் செய்த காந்தி – கஸ்தூரிபா தம்பதி அமர்ந்த இடத்தில வள்ளியம்மைக்கு நினைவுத் தூணும் எதிரில் நினைவு மண்டபமும் கட்டப்பட்டூள்ளன.

உறுதியும், தேச பக்தியும், அற உணர்வும் கொண்ட 16 வயது சிறு பெண்ணின் இதயமும் படபடக்கிறது தெரிகிறதா?

 

 

காண்க:

காந்தியைக் காத்த தமிழ்ப்பெண்

 

 

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

-என்.டி.என்.பிரபு

சாபேகர் சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள்

தாமோதர் சாபேகர்

(பலிதானம்: 1898, ஏப். 18)

பாலகிருஷ்ண சாபேகர்

(பலிதானம்: 1899, மே 12)

வாசுதேவ் சாபேகர்

(பலிதானம்: 1899, மே 8)

“வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் 23ஆம் புலிகேசி திரைப் படத்தில் நடிகர் வடிவேலு பேசுவார். இந்த வசனம் நமக்கு சிரிப்பு ஏற்படுத்துவதற்காக இருக்கலாம். சிந்திக்கவும் செய்யவேண்டிய வசனம் இது. ஏனென்றால் இன்று வரலாறு மாற்றியும் திரித்தும் எழுதப்பட்டுள்ளது.

‘சாபேகர் சகோதரர்கள்’ என்று மூன்று போராளிகள் இருந்துள்ளனர். வீர சாவர்க்கருக்கே உணர்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியவர்கள் அவர்கள்.

தாமோதர் ஹரி சாபேகர், பாலகிருஷ்ண சாபேகர், வாசுதேவ சாபேகர் ஆகியோரே அந்த மூன்று சகோதரர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடந்தது என்ன? அதற்கு இவர்கள் செய்தது என்ன? என்பதைப் பார்ப்போம்.

புனேயில் 1896-ஆம் ஆண்டு பிளேக் நோய் பரவியிருந்தது. 1897-இல் தீவிரமாக பரவி மக்கள் அதிவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் ராணி எலிசபெத்துக்கும் வைரவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆங்கில அரசாங்கம் அந்த வைரவிழாவுக்கு அதிக முக்கியம் கொடுத்த அதே வேளையில் பிளேக் நோயால் செத்துக்கொண்டிருந்தவர்களை பற்றியோ நோயைத் தடுப்பதைப் பற்றியோ கவலை இல்லாமல் இருந்தது.

பிளேக் நோய் பரவுவதையும் அதை கட்டுப்படுத்தாத ஆங்கில அரசாங்கத்தையும் எதிர்த்து பத்திரிகைகள் எழுதின. ‘கேசரி’ பத்திரிகையில் பாலகங்காதர திலகர் அவர்கள் சுதந்திர எழுச்சியூட்டும் பல கட்டுரைகளை எழுதிவந்தார். அதைத் தொடர்ந்து, ஆங்கில அரசாங்கம், சார்லஸ் ராண்ட் என்பவரை பிளேக் கமிஷனராக நியமித்தது.

பால கங்காதர திலகரின் எழுத்து பல இளைஞர்களை எழுச்சிக்கொள்ள செய்தது. அப்படி எழுச்சி கொண்டவர்ககள் சபேகர் சகோதரர்கள்.

பிளேக் நோயின் கொடுமை போதாதென்று, சார்லஸ் ராண்ட் செய்த கொடுமை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிளேக் நோயை கட்டுப்படுத்துவதாக கூறி, ஊரையே தீயிட்டு கொளுத்துவது, பெண்களைக் கொடுமைப்படுத்துவது என பல அராஜகங்களை செய்த ராண்டின் மீது மக்கள் கோபம் கொண்டனர். சாபேகர் எப்படியாவது ராண்ட்டை பழிவாங்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்கான திட்டங்களைத் தீட்டினர்.

இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் வைர விழாவை கொண்டாட்டம் 22-6-1897 அன்று ஆங்கிலேய அதிகாரிகளால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கேளிக்கைகளும், கொண்டாட்டங்களும் நள்ளிரவு வரை நீடித்தது.

விழா முடிந்த பின் அதிகாரிகள் அவரவர் மனைவிகளுடன் கோச் வண்டிகளில் ஏறி கிளம்பினர். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த சாபேகர் சகோதரர்கள், நண்பர்களும் ஆளுக்கொரு வண்டியில் ஏறிக் கொண்டனர்.

பாலகிருஷ்ண சாபேகர் லெப்டிணன்ட் அயர்ஸ்ட்டை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்.

தாமோதர் சாபேகர் சார்லஸ் ராண்ட் வந்த வண்டியில் ஏறி ராண்ட்டை துப்பாக்கியால் சுட்டார்.

இந்தத் தாக்குதலில் அயர்ஸ்ட் உடனடியாக பிணமானாலும், ராண்ட் சில நாட்கள் உயிருக்குப் போராடிய பின் ஜூலை 1897-இல் மரணமடைந்தார்.

இந்தத் தாக்குதலை முடித்த பின் சாபேகர் சகோதரர்களும் தாக்குதலுக்கு உதவி புரிந்த மற்ற நண்பர்களும் தப்பிவிட்டனர். அவர்கள் ஊருக்குள்ளேயே சுற்றித் திரிந்தனர் என்றாலும் அவர்களை போலீஸாரால் பிடிக்கமுடியவில்லை.

இவர்களை காட்டிக்கொடுப்போருக்கு ரூ. 20,000/ பரிசு என ஆங்கில அரசாங்கம் அறிவிப்பு செய்தது. இவர்கள் கூடவே இருந்த கணேஷ் திராவிட் என்பவன் பணத்துக்கு ஆசைப்பட்டு இவர்களை காட்டிக்கொடுத்துவிட்டான். 1897 ஆகஸ்டு 9-ஆம் தேதியன்று தாமோதர் சாபேகர் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் தலை மறைவாகி விட்டனர்.

நீதிமன்றத்தில் தாமோதர் சாபேகர், ராண்ட் மற்றும் அயர்ட்ஸ் ஆகியோரை தான் மட்டுமே சுட்டதாக சொன்னார். 1899 பிப்ரவரி 3-ஆம் தேதி தாமோதர் சாபேகருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் பார்த்து,  “நீங்கள் என்னைத் தூக்கிலிட்டு சாகடிக்கலாம்; ஆனால், என் ஆன்மாவிற்கு மரணமில்லை மீண்டும் இந்த பாரத நாட்டில் பிறப்பேன். மறுபடியும் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடுவேன்” என வீரத்துடன் சொன்னார்.

திலகரின் முயற்சியால் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் திறமையாக வாதாடியும் தூக்கு உறுதிசெய்யப்பட்டது. 1898 ஏப்ரல் 18-ஆம் தேதி எரவாடா சிறையில் தாமோதர சாபேக்கர் தூக்கிலடப்பட்டார்.

பாலகிருஷ்ண சாபேகர் காட்டுப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். பாலகிருஷ்ண சாபேகர் 1899-இல் தாமாகவே முன்வந்து சரணடைந்தார்.

இந்த நேரத்தில் சாபேக்கர் சகோதரர்களில் மூன்றாமவரான வாசுதேவ சாபேகர் புனாவில் கைது செய்யப்பட்டார்.

ஒரு ஆங்கில அதிகாரி, பாலகிருஷ்ண சாபேகருக்கு எதிராக சாட்சியம் அளித்தால் உன்னை ஜாமீனில் விடுதலை செய்கிறேன் என ஆசை காட்டினார். வாசுதேவ சாபேகர் மனதில் ஒரு திட்டம் உதித்தது. அதாவது, அண்ணன் தாமோதர் சாபேகரைக் காட்டிக் கொடுத்த கணேஷ் திராவிட் மற்றும் அவனது சகோதரன் ராமச்சந்திர திராவிட் ஆகியோரை எப்படியும் பழிவாங்கியே தீருவது என முடிவுதான் அது. உடனே, ஆங்கில அதிகாரியிடம், சரி நான் நான் ஒப்புக் கொள்கிறேன் என சொல்லி ஜாமீனில் வெளியே வந்தார் வாசுதேவ சாபேகர்.

வெளியே வந்த வாசுதேவ் சாபேகர், 1899 பிப்ரவரி 9 அன்று தன் நண்பர்களும், மாணவர்களுமான வினாயக் ரானடே, காண்டே ராவ் சாத்தே ஆகியோர் ஒன்று கூடினர். மாறுவேடம் அணிந்துகொண்டனர். கணேஷ் திராவிட் சகோதரர்கள் வீட்டிற்குச் சென்றனர்.

போலீஸ்காரர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, உங்கள் இருவரையும் உடனே காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்ல உத்தரவு என கூறினர். திராவிட் சகோதரர்கள் இருவரும் உடனே அவர்களுடன் புறப்பட்டனர்.

வீட்டைவிட்டு இறங்கி கொஞ்சதூரம் தான் நடந்திருப்பார்கள். காட்டிக் கொடுத்த திராவிட் சகோதரர்கள் இருவரையும் சுட்டுத் தள்ளினர்.

மறுநாள் காலையில் வீட்டில் இருந்த வாசுதேவ் சாபேகர் கைது செய்யபட்டார். மகாதேவ வினாயக் ரானடேவும் கைது செய்யப்பட்டார்.  அண்ணனைக் காட்டிக் கொடுப்பதாகச் சொல்லி ஜாமீனில் வந்த வாசுதேவ் செய்த செயலைக் கண்டு கோபத்தில் இருந்தனர் ஆங்கில அதிகாரிகள்.

காவல் நிலையத்திற்குக் அழைத்துவரப்பட்ட வாசுதேவ சாபேகர் எந்தவித சலனமோ, வருத்தமோ இன்றி புன்னகையுடன் வந்தார். வந்தவர் சும்மா வரவில்லை துப்பாக்கியோடு வந்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் போலீஸ் அதிகாரியை நோக்கிச் சுட்டார். அந்த அதிகாரி மயிரிழையில் உயிர் தப்பினார். காவல் நிலையத்தில் கைதியாக அழைத்து வரப்பட்டவரின் துணிச்சலான இந்த செயலைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே புரியாது திகைத்தனர். இருவரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.

இவர்களுக்காக புகழ் பெற்ற வழக்கறிஞர்களை கொண்டு வாதாடச் செய்தார் திலகர். நீதிமன்றம் வாசுதேவ் சாபேகருகும், மகாதேவிற்கும் தூக்கு தண்டனை வழங்கியது. .சாத்தேவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆங்கில அதிகாரி சார்லஸ் ராண்ட் கொலை வழக்கிலும் பாலகிருஷ்ண சாபேகருடன் வாசுதேவ் சாபேகர், விநாயக் ரானடே ஆகிய இருவரையும் சேர்த்துக் கொண்டனர். இந்த வழக்கிலும் இவர்களுக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றமும் 1899 மார்ச் 31-ஆம் தேதி தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

1899, மே 8 அன்று வாசுதேவ் சாபேகரும், மே 10 அன்று விநாயக் ரானடேவும், 1899, மே 12 அன்று பாலகிருஷ்ண சாபேகரும் தூக்கிலிடப்பட்டனர்.

இச்செய்திகள் அனைத்தும் நாளிதழ்களில் பரபரப்பாக வெளிவந்துக் கொண்டிருந்தது. சாபேகர் சகோதரர்களின் தியாகம், சாவர்க்கரின் தேசபக்கதியை மேலும் வலுப்பெற செய்தது.

‘சாபேகர் சகோதரர்கள் போன்று, மகாதேவ் போன்று, விஷ்ணு போன்று தானும் தன் வாழ்கையை தியாகம் செய்ய வேண்டும்’ என்று சாவர்க்கர் முடிவெடுத்தார்.

வரலாறு படைத்த இவர்களின் சாகசங்களை மறைக்கப்பட்டுள்ளது. சாபேகர் சகோதரர்களைப் போன்று சுதந்திரத்திற்காக போராடிய பலரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக வெளிகொண்டுவர வேண்டியது அவசியமாகும்.

 

வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா

– இளங்குமார் சம்பத்

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

பண்டிட் தீனதயாள் உபாத்யாய

(பிறப்பு: 1916, செப். 25 – பலிதானம்: 1968,  பிப். 11)

 

சிறந்த அறிவாளி, உயர்ந்த சிந்தனையாளர், தீவிர தேசபக்தர், அமைதியான இயல்பு, இனிமையான பேச்சு, ஆடம்பரம்- விளம்பரம் இல்லாதவர், சொல்லும் செயலும் ஒன்றானவர், நல்வினை மட்டுமே அறிந்தவர்; செய்தவர், எதிர்வினை அறியாதவர், எளிமையின் இலக்கணம் – இப்படிப்பட்ட ஒருவர் பேரும் புகழும் செல்வமும் செல்வாக்கும் மிகுந்து காணப்படும் அரசியல் துறையில் இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

ஆம். அவர்தான் பண்டிட் தீனதயாள் உபாத்யாய.

அரசியல் என்பது துர்நாற்றமடிக்கும் சாக்கடை என்று இகழப்பட்ட காலத்தில் அதை சுத்தம் செய்து சீர்படுத்துவேன் என்று வந்துதிந்த அரசியல் ஞானி.

1916-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் உத்தரப்பிரதேசம்,  மதுராவிற்கு அருகே ஒரு கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தார். ஆறு வயதிலேயே பெற்றோரை இழந்த தீனதயாள்,  ரயில்வே துறையில் பணிபுரிந்த தன் தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தார்.

வறுமையான குடும்ப சூழலில் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு படித்தார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மாமா ரயில்வே துறையில் பணியாற்றியதால் இவர் பிரயாணம் பெரும்பாலும் ரயிலிலேயே இருந்தது. இறுதிக்காலம் வரை ரயிலிலே பயணம் செய்தார்.

பட்ட மேற்படிப்பிற்காக ஆக்ரா சென்றபோது ஸ்ரீ நானாஜி தேஷ்முக் என்ற சங்க பிரசாரகர் (நானாஜி) மூலம் ஆர்.எஸ்.எஸ். அறிமுகமாகிறது. சங்கக் கருத்துக் கனலும் டாக்டர்ஜியாலும் (ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்), நானாஜியாலும் பெரிதும் கவரப்பட்ட தீனதயாள் 1942 முதல் சங்க பிரசாரகர் (முழு நேர ஊழியர்) ஆகி தேசப் பணியாற்றி வந்தார்.

சுதந்திரத்திற்குப் பின் நமது அரசியலானது நமது இயல்பான ராஷ்ட்ர வாழ்க்கையை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு அரசியல் இயக்கம் துவங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 1951-ல் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி அவர்களால் துவக்கப்பட்ட ‘ஜனசங்கம்’ என்ற அரசியல் இயக்கத்தில் பணியாற்றிட  குருஜி (ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவர்) அவர்களால் அனுப்பிவைக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களுள் தீனதயாள்ஜியும் ஒருவர்.

திட சிந்தனை, தெளிவான நோக்கு, அயராத உழைப்பு, பலனை எதிர்பாராத கடமை உணர்வு இவற்றை தீனதயாள்ஜியிடம் கண்ட டாக்டர் முகர்ஜி 1952-ல் இவரை ஜனசங்கத்தின் அகிலபாரத அமைப்பு பொதுச் செயலாளராக நியமித்தார்.

1953-ம் ஆண்டு மே மாதம் ஜம்மு காஷ்மீர் போராட்டத்தில் சிங்கம் போல் சிறை சென்ற டாக்டர் முகர்ஜி மர்மமான முறையில் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜனசங்கத்தை வழிநடத்தும் மாபெரும் பொறுப்பு தீனதயாள்ஜியின் தோளில் அமர்ந்தது.

தனது அப்பழுக்கறற தேசபக்தியாலும், கிருஷ்ண பரமாத்மா கூறியபடி ‘கருமமே கண்ணாக’ கட்சிப் பணியாற்றி வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஜனசங்கம் நாடு முழுக்க வியாபித்திருந்தது.

1967-ம் ஆண்டு கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த ஜனசங்கத்தின் ஆண்டு பொதுசபாவில் அவர் அகில பாரதத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘செங்கோட்டை’ என வர்ணிக்கப்படுமளவிற்கு கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கம் பெற்றிருந்த கள்ளிக்கோட்டையில் ‘காவி’ ஊர்வலம் லட்சம் பேருடன் நடைபெற்றது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

பிப்ரவரி 11, 1968 – லக்னோவிலிருந்து பாட்னா செல்லும் ரயில் பயண வழியில் மொகல்சராய் என்ற ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

நிச்சயமாக இது ஒரு அரசியல் படுகொலை. ஆம். இதுவரை விசாரிக்கப்படாத, துப்பு துலக்கப்படாத, குற்றவாளிகள் கைது செய்யப்படாத விசித்திரமான ஓர் அரசியல் படுகொலை.

சிறுவயதில் ரயிலில் ஆரம்பித்த அவர் வாழ்க்கைப் பயணம் ரயிலிலேயே முடிவடைந்தது நெஞ்சை விம்மவைக்கும்  சோகமாகும்.

***

பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவகர். தான் ஓர் அரசியல் கட்சியின் அகில பாரத பொறுப்பாளர் என்ற அகந்தை சிறிதும் இல்லாதவர்.

பண்டிட்ஜி நாகபுரி சங்க சிக்ஷ வர்கவிற்கு (ஆர்.எஸ்.எஸ். சின் வருடாந்திர  பயிற்சி முகாம்)  செல்லும் வழக்கமுடையவர். ஒருமுறை சங்க சிக்ஷவர்கவில் உணவருந்திவிட்டு,  தட்டைக் கழுவிட வரிசையில் சென்றபோது குறும்புக்கார இளைய ஸ்வயம்சேவகர் ஒருவரின் விளையாட்டுத்தனமான செயலினால், தீனதயாள்ஜி கையில் இருந்த தட்டு கீழே விழுந்து விடுகின்றது. சில ஸ்வயம்சேவகர்கள் ஏளனமாக சிரிக்கின்றனர். தீனதயாள்ஜி கீழே விழுந்த தட்டை கையில் எடுத்துக்கொண்டு ஏதும் நடக்காததுபோல், வரிசையின் கடைசியில் போய் நின்று தட்டை வந்து கழுவிச் சென்றார். மதிய உணவிற்குப் பின் நடைபெற்ற அமர்வில், பௌதிக் கொடுப்பவராக தீனதயாள்ஜியைக் கண்ட அந்த விளையாட்டு ஸ்வயம்சேவகர்களுக்கு அதிர்ச்சி. நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் தீனதயாள்ஜியிடம் மன்னிப்பு கோரினர். தீனதயாள்ஜி ஏதும் நடக்காததுபோல் அந்த ஸ்வயம்சேவகர்களிடம் அன்பு பாராட்டினார்.

அன்பானவர், சாந்தமானவர் என்றால் அமைப்பின் ஒழுங்கில் கடுமையானவர். 1966-ல் மத்திய அரசு கொண்டுவந்த மன்னர் மானிய ஒழிப்பு சட்டத்திற்கு ஜனசங்கம் ஆதரவு கொடுத்தது. அச்சமயம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜனசங்கத்திற்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இவர்களில் 6 பேர் இச்சட்டத்தை எதிர்த்தனர். கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்று தீனதயாள்ஜி கூறினார். ஆனால், அநத 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவிற்கு எதிர்த்து வாக்களித்ததால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலுக்காக அந்த 6 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தார் தீனதயாள்ஜி.

அந்தக் காலத்தில் முதன்முறையாக 8 உறுப்பினர்களை கொண்ட கட்சி 6 உறுப்பினர்களை நீக்குவது என்பது சாதாரண காரியமல்ல. ஆனால், கட்சியின் ஒழுங்கே முக்கியம் எனக் கருதிய தீனதயாள்ஜி இக்கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

தீனதயாள்ஜி சிறந்த பேச்சாளர் அல்ல. மேலும் அவர் பேசிக் கொண்டிருப்பவரும் அல்ல. செயல் – செயல் அது ஒன்றே அவர் தாரக மந்திரம். தன் உதாரணமே சிறந்த உதாரணம் என்பதற்கு தீனதயாள்ஜி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்.

1962 பொதுத் தேர்தலில் நாகபுரியில் ஜனசங்கத்தில் பணிபுரிந்த ஒரு கார்யகர்தர் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தார். இவர் நல்லவர்தான். ஆனால், வாய்ப்பு மற்றொருவருக்கு கிடைத்தது. ஆகவே வெறுப்படைந்த இந்த நபர், டெங்கடிஜி (இவர் பாரதீய மஸ்தூர் சங்கத்தை நிறுவியவர்)  அவர்களிடம் போய் புலம்பியிருக்கிறார். “நான் இவ்வளவு நாள் பணி செய்தது ஜனசங்கம் கண்ணுக்கு தெரியவில்லையா? எனது சேவை கட்சிக்கு தேவையில்லையா?” என்ற ரீதியில் மிகவும் வருத்தப்பட்டு கோபமாகப் பேசியுள்ளார்.

டெக்கடிஜியோ,  “நண்பா, நீ இங்கு புலம்புவதில் பிரயோசனமில்லை. வேண்டுமானால் தில்லி சென்று தீனதயாள்ஜியைப் பார்த்து முறையிடு” என்று கூறினார். அந்த நண்பரும் உடனே தில்லி சென்று ஜனசங்க கார்யாலயம் சென்று, தான் தீனதயாள்ஜியை சந்தித்து பேச வந்துள்ள விவரத்தைக் கூறினார்.

அவரைச் சந்தித்த தீனதயாள்ஜி, “சாப்பிட்டாயா?” என்று கேட்டு அவருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்தார். “இன்று பகலில் எனக்கு ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் உள்ளன. ஆகவே மாலை 6 மணிக்கு மேல் நிதானமாகப் பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் பணியைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

தேர்தலுக்கான நோட்டீஸ், போஸ்டர் இவைகளை பகுதிவாரியாக பிரித்தனுப்பும் வேலை, அச்சு இயந்திர வேலை, இடையே சந்திக்க வந்தவர்களுக்கு அவர்களது பணி குறித்து கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். தீனதயாள்ஜி எப்பொழுது சாப்பிட்டார், டீ அருந்தினார் என்று தெரியாது.

ஆனால், நாகபுரி நண்பர், கார்யாலயத்திலிருந்த ஒருவரிடம், “தீனதயாள்ஜி இவ்வாறு ஓய்வின்றி தேர்தல் பணி செய்கின்றாரே, அவர் எங்கு போட்டியிடுகிறார்?” என்று கேட்டார். அதற்கு அந்த நண்பரோ, தீனதயாள்ஜி போட்டியிடவில்லையே” என்றார். “அப்படியானால் தீனதயாள்ஜி ஏன் சாப்பிடாமல் கொள்ளாமல் இப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்?” என்று வினா எழுப்பினார்.

அதற்கு அந்த தில்லி பிரமுகர் “மற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கே தீனதயாள் இவ்வளவு பணியும் செய்கிறார்” என்றார். மாலையிலும் நாகபு ரிகாரருக்கு டீ கிடைத்தது.

சுமார் 6 மணியளவில் தீனதயாள்ஜி குளித்து முடித்து இவரிடம் வந்து, “என்ன நண்பரே, சாப்பிட்டீர்களா? நன்கு ஓய்வு எடுத்தீர்களா? இப்ப, நான் தயார். நாளை காலை வரை கூட பேசலாம்” என்றார்.

ஆனால் நாகபுரி நண்பரோ, பண்டிட் ஜியின் செயல்களைக் கண்டு அதிலே விளக்கமும் பெற்றுவிட்டபடியால், “பண்டிட்ஜி, ஒன்றுமில்லை, தங்களை பார்த்துவிட்டு செல்லவே வந்தேன்” என்று கூறிவிட்டு தனக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்காதது பற்றி மூச்சு கூட விடாமல் திரும்பிவிட்டார்.

***

1965-ம் ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான ஆண்டு. இந்த ஆண்டுதான் தீனதயாள்ஜி படைத்த ‘ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற சிரஞ்சீவி தத்துவத்தை ஜனசங்கத்தின் விஜயவாடா மாநாட்டிலே முன்வைத்தார்.

முதலாளித்துவம், சோஸலிசம் ஆகிய இரு கருத்துக்கள் தான் பொருளாதாரத்திற்கு ஆதரவாக இருக்கக் கூடியவை என உலகம் ஏற்று இருக்கக்கூடிய நிலையில், அவை இரண்டுமே மானிட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்திட முடியாத- குறைவான கருத்துக்களே என விளக்கினார்.

“மனிதன், வெறும் உடம்பல்ல. அவன் உடம்பு, மனம், புத்தி, ஆன்மா ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டவன்.  ஆகவே மனித இனம், தனிமனிதன் ஆகியோருடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்திடும் முழுக்கருத்து ஒன்றை பாரதம் உலகுக்கு அளிக்க வல்லது” (தான் அளித்ததாக அவர் கூறவில்லை) என்று ஏகாத்ம மானவ தரிசனம்’ என்ற பெயரிலே உயரிய தத்துவத்தை உலகிற்கு வழங்கினார். நமது பொருளாதார வளர்ச்சிக் கட்டமைப்பில் சுதேசி சிந்தனையே அடிக்கல்லாக இருக்க வேண்டும் என்றார்.

‘பாஞ்ஜசன்ய’ வார இதழ், ‘ஸ்வதேஷ என்ற தினசரி-க்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஆதிசங்கரரின் வாழ்க்கை குறித்தும், சந்திரகுப்த மௌரியன் குறித்தும் ஹிந்தியில் புத்தகம் படைத்துள்ளார். சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை மராட்டியிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

பாரதத்தாயின் பணியைத் தவிர வேறு  ஒன்றும் அறியாத பரமபக்தரின் புகைப்படங்கள் கூட கிடையாது. அவர் அதைக் கூட விரும்பவில்லை. ராம சேவையில் ஆஞ்சனேயன் போல, பாரதமாதா சேவையில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட பண்டிட் தீனதயாள்ஜி அவர்களின் இன்னுயிரை கயவர்கள் கயமைத்தனமான 1968 பிப்ரவரி 11-ல் கவர்ந்தார்கள். பாரத அன்னை தன் தவப்புதல்வர்களிலே ஒரு மாணிக்கத்தை இழந்தாள்.

தேசப்பணியில் புகழின் உச்சியிலிருந்த போதும் ஒரு புகைப்படம் கூட விட்டுச் செல்லாத பண்டிட் தீனதயாள்ஜி ஒரு மகாத்மா தானே!

 

குறிப்பு:

திரு. இளங்குமார் சம்பத், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக மாநில  அமைப்பாளர்.

நன்றி:  விஜயபாரதம்-  தீபாவளி மலர் 2014

வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்

-அரவிந்தன் நீலகண்டன்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர் 

(பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26)

 

வீர சாவர்க்கர் இந்திய விடுதலை போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர். மிகப்பெரிய தியாகங்களை தேசத்துக்காக ஏற்றவர். சமூக புரட்சியாளர். அவரது வாழ்வனைத்தும் தேச நலனுக்கான போராட்டமாகவே திகழ்ந்தது. வரலாற்றை உருவாக்கிய அப்பெரும் ஆளுமை தேசத்தின் சரித்திரத்தை மீட்டெடுத்து எழுதுவதிலும் அதே அக்கறையைக் காட்டினார்.

அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் உருவாக்கியதே நம் தேசத்தின் வரலாறாக அறியப்பட்டது; பாரதத்தின் வரலாறு காலனிய ஆதிக்கத்தின் தேவைக்கேற்ப எழுதப்பட்டு வந்தது.

இந்நிலையில் விடுதலைக்காக போராடும் ஒரு தேசத்தின் கூர்நுட்பம் கொண்டதோர் வரலாற்றாசிரியனாக பாரத வரலாற்றை அணுகிய பெருமை வீர சாவர்க்கருக்கு உண்டு.

வரலாற்றை எழுதினார்: வரலாற்றை மாற்றினார்

பாரதத்தின் முதல் விடுதலை வேள்வியான 1857 எழுச்சியை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் பாரதத்தின் அன்றைய வரலாற்றறிஞர்கள் பலரும் “சிப்பாய் கலக”மென்றே எழுதி வந்தனர். அதனை “விடுதலை எழுச்சி” என மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீர சாவர்க்கரே. இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை எழுதியதன் குறிக்கோள் குறித்து வீர சாவர்க்கர் எழுதுகிறார்:

“….இந்த நூலை எழுதியதன் நோக்கம் என்ன? வரலாற்றின் உண்மை குறித்த உந்துதலை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தேசமளாவிய பெரிய புரட்சி யுத்தத்தை அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடங்க வேண்டும்…..”

தனது நூலை வெளியிட 1907 ஆம் ஆண்டை வீர சாவர்க்கர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனென்றால் அது முதல் விடுதலை வேள்வியின் ஐம்பதாம் ஆண்டு நினைவு விழா கொண்டாடப் பட்ட ஆண்டு ஆகும். இந்திய வரலாறு குறித்த மிகப்புதிய பார்வையை, ஒரு பெரும் பிரச்சாரத்துக்கு எதிராக, ஆராய்ச்சி நூலாக பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 1907 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். இதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் முன்னதாக அந்த ஆராய்ச்சியையும் திட்டமிடுதலையும் தொடங்கியிருக்க வேண்டுமென எண்ணிப்பார்த்தால் வீர சாவர்க்கரின் மேதமையும், உழைப்பும் வியக்க வைக்கின்றன.

வீர சாவர்க்கர் வெறும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தான் ஆராய்ந்தறிந்த தம் தேச வரலாற்றை தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கருவியாகவும் அவர் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது இந்திய இளைஞர்களை ராணுவத்தில் பெரிய அளவில் இணையுமாறு அவர் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் அவர் வெளிப்படையாகவே கூறினார்:

“….1857ல் நமது முதல் விடுதலைப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே பிரிட்டிஷார் இராணுவத்தினை அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இதனை மாற்ற இது நல்ல வாய்ப்பாகும். இதில் நாம் வெற்றி பெற்றால் விடுதலைக்கான போரில் நாம் வெற்றி அடைவோம்…..”

வீர சாவர்க்கரின் இந்த தீர்க்கமான பார்வை வரலாற்றையே மாற்றியமைத்தது என்பதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வார்த்தைகளின் மூலமாக அறிகிறோம்.

ஆஸாத் ஹிந்த் வானொலியில் ஆற்றிய உரையில் (ஜூன் 25, 1944) நேதாஜி கூறினார்:

“….சில தலைவர்கள் தவறான அரசியல் கற்பனைகளால் இந்திய ராணுவத்தில் இணைந்த வீரர்களை ‘கூலிப்படையினர்’ என அழைத்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் அச்சமின்றி இந்திய இளைஞர்களை ராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு இணைந்த வீரர்களே இந்திய தேசிய ராணுவத்துக்கு கிடைக்கும் பயிற்சி பெற்ற வீர இளைஞர்கள்……”

விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் தேசபக்தியும் விடுதலை உணர்ச்சியும் அலையடித்தது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டகல ஒரு முக்கிய காரணமாகிற்று என்பது வரலாறு.

மீட்டெடுக்கப்பட்ட போராட்ட வரலாறு

cover1இந்தியாவின் வரலாறே அது மீண்டும் மீண்டும் அன்னிய படையெடுப்புகளுக்கு அடி பணிந்த வரலாறுதான் என்று அன்னிய ஆட்சியாளர்களும் அன்னிய மோகத்துக்கு ஆளான நம் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். யூனியன் ஜாக் செங்கோட்டையில் இருந்து கீழிறங்கி விட்டது. இருந்தபோதும் நம் கல்வி நிறுவனங்களில் கண்ணுக்குத் தெரியாமல் அக்கொடியின் இருண்ட நிழல் தொடர்ந்து படர்ந்திருக்கிறது.

அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.சக்தி வாய்ந்த மொழியில் அவர் எழுதுகிறார்:

“….கிரேக்கர்களும் சகர்களும் ஹுணர்களும் வடக்கே அலை அலையாக படையெடுத்து வந்து தாக்கிய போதும் அவர்களால் நர்மதை நதிக்குத் தெற்கே காலடி வைக்க முடியவில்லை. அதுவும் தவிர கலிங்க சேர சோழ பாண்டிய அரசுகள் மிக வலுவான கடற்படையுடன் காத்திருந்தன. கடல் எல்லையில் அந்நிய படையெடுப்பு அபாயமே இல்லாமலிருந்தது…..”

நம் வீர வரலாறு குறித்துத் தமிழ் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. இப்பெருமிதம் பொய்யான இனவாத கட்டுக்கதையால் உருவானதல்ல. ஆழமான வரலாற்று ஆராய்ச்சி அளிக்கும் சத்தியமான உன்னத உணர்ச்சி. சாணக்கியர் கூடல் என்னும் இடத்திலிருந்து வந்த காரணத்தால் கௌடில்யர் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும் என்கிற செய்தியையும் வீர சாவர்க்கர் தருகிறார். மட்டுமல்ல.

அலெக்ஸாண்டர் போன்ற ஒரு ஆதிக்க வெறி பிடித்த கொடியவனை ஐரோப்ப காலனிய வரலாற்றாசிரியர்கள் மகா அலெக்ஸாண்டர் என புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், வீர சாவர்க்கர் அக்கால வரலாற்றின் ஒவ்வோர் இழையாகத் தேடிச்சென்று சரித்திரத்தை நோக்குகிறார். காத்திரமான ஆதாரங்களின் அடிப்படையில் காலனிய மனநிலைக்கு எதிராக அவர் பின்னர் உணர்ச்சிகரமான பெருமுழுக்கம் செய்கிறார்.

எவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக மாளவ-சூத்ரக குடியரசுகள் இணைந்தன; அவர்கள் எவ்வாறு சாதி-கலப்பு திருமணங்களை பெரிய அளவில் செய்து தம்மை ஒரு ஒன்றுபட்ட சமூகத்தினராக மாற்றி ஓரணியில் சேர்ந்தார்கள். எப்படி இந்த இணைந்த சமூகம் உருவாக்கிய ராணுவத்தைச் சேர்ந்த பாரதிய வீரனின் அம்பு அலெக்ஸாண்டரின் அந்திமக் காலத்தை விரைவாகக் கொண்டு வந்தது என்பதை ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார். இந்த வரலாற்று உண்மைகள் ஐரோப்பிய காலனிய வரலாற்று ஆசிரியர்களால் உணரப்பட்டவையே; எனினும், உரத்த குரலில் சொல்லப்படாதவை. வீர சாவர்க்கர் அவ்வுண்மைகளை உரக்கச் சொன்னார்.

வரலாற்றின் நேர்மையை அவரது உணர்ச்சிகர தேசபக்தி எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அதீத கவனம் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. எடுத்துக்காட்டாக, சந்திரகுப்த மௌரியர் குறித்து வழங்கும் நாட்டுப்புறக் கதைகளை வீர சாவர்க்கர் ஒரு வரலாற்றாசிரியராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் எடை போடும் விதத்தைப் பார்க்கலாம்:

ஒருவனை அவனது பண்பை வைத்து எடை போடாமல், அவன் பிறந்த இனத்தின், குடும்பத்தின் பெருமை-சிறுமைகளை வைத்து மதிப்பிடுவது அனைத்து மானிட சமூகங்களிலும் காணப்படும் பொதுவான பலவீனம். குடும்ப மரபுகளைப் பற்றிய உயர்வு நவிற்சி கதைகள் காலப் போக்கில் நாடகங்களாகவும், கவிதைகளாகவும், புதினங்களாகவும், நாட்டுப்புற பாடல்களாகவும் விளம்பரப்_படுத்தப்பட்டு மக்களிடையே பரவின.  (விரிவஞ்சி இதை மேலும் விவரிக்காமல் விடுகிறோம்.)

ஆனால், மௌரிய குலத்தின் தோற்றத்தைக் குறித்த வரலாற்று உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறார் வீர சாவர்க்கர்:

“…..மூராவின் மகனே மௌரியன்! சந்திரகுப்தனை மௌரியன் என்று அழைக்க அதுவே சரியான காரணமாகும். தாய்வழிப்பிறப்பைப் பெருமையாக எண்ணிய சந்திரகுப்தன் தன் அரச குடும்பத்திற்கு மௌரியன் என பெயர் சூட்டிக் கொண்டான். அதன் மூலம் தன் தாய் மூராதேவியின் பெயரைப் பாரத நாட்டின் வரலாற்றில் சிரஞ்சீவியாக்கிவிட்டான். மயில் பறவைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மூரியா ஜாதியையே மௌரியப் பேரரசர்கள் ஏற்றுக்கொண்டனர்…..”

வரலாற்றாசிரியரும் ஒரு தேசத்தை வழிநடத்தி செல்ல வேண்டிய தேசியகுருவும் மாறி மாறி ஒருவருக்கொருவர் எதிர்ப்பற்ற நிலையில் வீர சாவர்க்கரில் வெளிப்படுகின்றனர்.

சந்திரகுப்த மௌரியர் மூலம் சாதியையும் குலத்தையும் கோத்திரத்தையும் பற்றிக்கொண்டு ரிஷி மூலம் நதிமூலம் ஆராயும் அற்ப மனங்களுக்கு அவர் சொல்கிறார்:

“…..சந்திரகுப்தர் ஒரு க்ஷத்திரியனா? எப்படியிருந்தால் என்ன?  “உயர் ஜாதியில் பிறந்த க்ஷத்திரியர்களே! மிலேச்சனான அன்னியப் பேரரசனுக்கும் அவனது படைத்தளபதிகளுக்கும் சிரங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு ஏற்றுக்கொண்ட உங்களைவிட அஞ்சா நெஞ்சனாகிய சந்திரகுப்தன் என்னும் பெயர் படைத்த நான் மாபெரும் க்ஷத்திரியன் என உரிமை கொண்டாடமுடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த மிலேச்சர்களை ஒவ்வொரு போர்க்களத்திலும் என் வாள் வலிமையால் முழுதும் தோல்வி அடையச் செய்திருக்கிறேன்.” என்று நியாயமான பெருமிதத்துடன் சந்திரகுப்தன் கூறக்கூடும்…….”

இவ்விதமாக பாரதம் அன்னிய ஆக்கிரமிப்பை எவ்விதம் தொடர்ந்து எதிர்த்து போராடியது என்பதை இத்தனை விரிவான ஆதாரங்களுடன் எந்த வரலாற்றாசிரியரும் ஆவணப்படுத்தியுள்ளார்களா என்பது ஐயமே. தட்சிணத்தில் முஸ்லீம் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமியராக மாற்றப்பட்டிருந்த ஹரிஹரரும் புக்கரும் எவ்வாறு தாய் தர்மம் திரும்ப வித்யாரண்ய சுவாமிகள் புரட்சிகரமாக உதவினார் என்பதையும் வீர சாவர்க்கர் தமக்கே உரிய பார்வையுடன் விவரிக்கிறார்:

“…..விஜயநகரம் என்னும் ஹிந்துப் பேரரசு நிலைநாட்டப் பெற்றது ஹிந்து வமிசத்தின் மாபெரும் சாதனை என்பதைப் போதுமான அளவுக்கு ஹிந்து வரலாறுகளில் பெருமைப் படுத்தி பேசப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால் சங்கேஸ்வர சங்கராச்சாரியாரான மாதவாச்சாரிய வித்யாரண்ய ஸ்வாமியைக் குறிப்பிடலாம்.

இவருக்கு இருந்த புரட்சிகரமான அரசியல் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சமயத்துறைகளிலும் அவர் மாபெரும் புரட்சியாளர் என்பதை அவர் பழைய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்ததன் மூலம் நிரூபிக்கலாம். …ஆனால் இன்று வடபாரதத்தில் வாழும் ஹிந்துக்கள் மேற்குறிப்பிட்ட தக்காணத்து ஹிந்து மாமன்னர்களைப் பற்றி கேள்விப்பட்டதைப் போல காட்டிக் கொள்வதேயில்லை. தென்னாட்டிலும் அவர்களின் பெயர்களை ஓரளவு அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து ஹிந்துகள் உடனடியாக மாற வேண்டியது அவசியம்…..”

நம் தேசிய வாழ்க்கையையும் பண்பாட்டையும் காப்பாற்ற பல நூற்றாண்டுகளாக நாம் நடத்திய இத்தொடர் போராட்டத்தின் நீட்சியாகவே பாரத விடுதலைப் போராட்டத்தையும் வீர சாவர்க்கர் காண்கிறார். இதில் குறுகிய கொள்கைப்பார்வைகளின் அடிப்படையில், அரசியல் எதிரிகளை தேச விரோதிகளாக சித்தரிக்கும் சின்னத்தனம் அவருக்கு என்றைக்கும் உரியதல்ல. பாரத விடுதலையின் இறுதிக்கட்டத்தை வீர சாவர்க்கர் வர்ணிக்கும் போது அப்போராட்டத்தின் அனைத்து தரப்புகளையும் அரவணைத்து ஒரு விசாலமான ஹிந்துத்துவ வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.

“….பிற்காலத்தில் சத்தியாகிரகம் ஒத்துழையாமை போன்ற தாரக மந்திரங்களை ஜெபித்தவரும் பொதுமக்களால் மகாத்மாஜி என அன்புடன் போற்றப் படுபவருமான அப்பெரியாருடன் சீரிய நண்பனாகப் பழகும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். அப்போதுதான் அவர் இங்கிலாந்து வந்திருந்தார். அப்போது அவரை பாரிஸ்டர் காந்தி என்று மட்டும் அழைத்தார்கள். அதன் பின்னர் எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாக இணைந்ததுண்டு. பல சமயங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதும் உண்டு.

…பாரத நாட்டின் அரசியல் வாழ்வில் நான்கு காலகட்டங்கள் உண்டு.

1) ஆங்கில ஆட்சியை அடிவருடியவர்கள்

2) தீவிர தேசியவாதிகளான அகிம்சாவாதிகள்

3) புரட்சிவாதிகள்

4) ஹிந்துத்துவ வாதிகள்

இந்த நால்வகை அரசியல் தொடர்பு கொண்ட அனைவரும் 1857 ஆம் ஆண்டு சுதந்திரப்போரில் பெற்ற தோல்விக்குப் பின்னர் உருவானவர்கள்.

….தில்லி செங்கோட்டையில் கர்வத்துடன் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் யூனியன் ஜாக் கொடி, பேரரசு என்ற திமிருடன் பறந்து கொண்டிருந்த அந்த கொடி பிடுங்கி எறியப்பட்டு “பாரத சுதந்திரம் வாழ்க. நீங்கள் அனைவரும் வாழ்க” என்னும் இடிமுழக்கத்துடன் மூவர்ணக் கொடி சுதந்திர ஆளுமை கொண்ட பாரத நாட்டு அரசாங்கத்தின் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டது. அக்கொடியின் நடுவில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது….”

வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஹிந்துக்கள் விரட்டி சுவராஜ்ஜியம் நிறுவியதுடன் முடிவடைகிறது.

cover2இந்த நூலைப் போலவே மிகவும் பிரசித்தி பெற்ற அவரது மற்றொரு வரலாற்று ஆவணம் “ஹிந்து பத பாதுஷாகி” என்பதாகும். இது வீர சிவாஜி காலம் தொட்டு மராட்டிய பேரியக்கம் எப்படி அன்னிய மொகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்து அதனை பலமிழக்க செய்தது, அத்துடன் எவ்வாறு இந்த பெருமைக்குரிய ஹிந்து இயக்கம் ஐரோப்பிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டது என்பதையும் ஆவணப்படுத்துகிறது.

முஸ்லீம் சித்திக்கள், ஆங்கிலேய-போர்ச்சுகீசிய கூட்டணி, டச்சு கப்பல் படை ஆகிய அனைத்தையும் கன்கோஜி ஆங்க்ரே எனும் மராட்டிய கப்பற்படை தளபதி எவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்கடித்தார் என்பது மிகவும் சுவாரசியமான வரலாற்றுத்தகவல். “வன்மம்” (Revenge), “வெற்றி” (Victory) போன்ற பெயர்களைத் தாங்கிய ஆங்கிலேய கப்பல்கள் மராட்டிய கப்பற்படை மீது போர் தொடுத்து அடைந்த படுதோல்விகள் பாரத வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள். இறுதியாக மராட்டிய ஹிந்து இயக்கம் செய்த வரலாற்றுத்தவறுகளையும் வீர சாவர்க்கர் காய்தல் உவத்தலின்றி விளக்குகிறார்.

இந்நூல் வீர சாவர்க்கர் ரத்னகிரியில் முழு விடுதலை அடைவதற்கு முன்னர் எழுதப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தெரியாமல் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க தாம் ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆவணங்களை தமது நினைவிலிருந்து மட்டுமே மீட்டு இதனை வீர சாவர்க்கர் எழுதினார். ஆனால் பின்னர் அது ஆராயப்பட்ட போது முழுக்க முழுக்க அந்த வரலாறு ஆதாரப்பூர்வமாக ஆவண சான்றாதாரம் கொண்டதாக அமைந்திருந்தது.

சிலர் கேட்கலாம், “சாவர்க்கர் ஏன் இந்த பழைய வரலாறுகளைத் தோண்டி எடுத்து எழுத வேண்டும்?”

இதற்கு வீரசாவர்க்கர் விளக்கமாக பதிலளிக்கிறார். ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விளக்கம் அது.

“இறந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டு நிகழ்காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தற்கொலைப் போக்குடைய மடத்தனம் மட்டுமே. ஒரு ஹிந்துவும் முஸ்லீமும் இன்றைக்கும் ஒருவரை ஒருவர் தழுவுவது போல ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அந்த காலத்தில் அப்படித்தான் சிவாஜியும் அப்ஸல்கானும் செய்தார்கள் என்று சொன்னால் அதைப் போல மடத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

நாம் வரலாற்றை படிப்பது நம் இன்றைய விரோதங்களை இரத்தம் சிந்தும் மோதல்களை பரஸ்பர வெறுப்பை, கடவுளின் பெயராலோ அல்லது அன்னைபூமியின் பெயராலோ, வளர்த்துக்கொள்ள ஆகச்சிறந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல. மானுட வெறுப்பையும் இனதுவேஷத்தையும் வளர்க்க அல்ல. மாறாக அதற்கு நேர் எதிரிடையான காரணங்களுக்காக மட்டுமே நாம் வரலாற்றை ஆராய்கிறோம். இவ்வெறுப்பையும் வன்முறையையும் அகற்றி மனிதனுக்கு மனிதன் அனைத்து மானிடத்தின் பொது இறைத்தன்மையையும் பூமியின் அனைத்து மானுடத்துக்குமான தாய் தன்மையையும் உணர்ந்து ஒரு மானுட குலமாக மாறுவதற்காக மட்டுமே.”

ஆனால். இந்த “மானுடமே ஓர் குடும்பம்” எனும் பொன்னுலகக்  கனவு ஒரு யதார்த்தமற்ற கனவாக இருக்காமல் யதார்த்த சூழலின் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பபட்ட ஒரு கருவியாக அவர் கைகளில் விளங்கியது. ஹிந்து பத பாதுஷாகிக்கு 1925ல் அவர் எழுதிய முன்னுரையில் வீர சாவர்க்கர் கூறுகிறார்:

“….ஆனால் இந்த பிரகாசிக்கும் பொன்னுலக கனவு நமது கண்களை யதார்த்தத்தின் உண்மைகளை அறியவிடாமல் குருடாக்கி விடலாகாது. மனிதர்கள் குழுக்களாக பிரிவுகளாக இயங்குகின்றனர். தம்மை உறுதிப்படுத்திக் கொண்டு விரிவாக்கம் செய்ய அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். கடும் போர்களும் தியாகங்களும் இந்த விரிவாக்கத்தை செயல்படுத்திய வண்ணமே உள்ளது.

…எனவே உலக ஒற்றுமையைக் குறித்து பேசுவதற்கு முன்னால் ஒரு தேசமாக ஒரு சமுதாயமாக உயிர்வாழும் தகைமையை நாம் அடைய வேண்டும். இந்த அக்னிப்பரீட்சைதான் ஹிந்துக்கள் முன் இஸ்லாமிய ஆதிக்க சக்திகளால் வைக்கப்பட்டது.

ஒரு அடிமைக்கும் அவன் எஜமானனுக்கும் சமத்துவமான அமைதி நிலவ முடியாது. ஹிந்துக்கள் வரலாற்றில் தம் வீரத்தை நிரூபிக்காமல் இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் நட்புக்கரத்தை நீட்டியிருந்தால் கூட அக்கரம் நட்பினைக் குறிப்பதாக அல்லாமல் அலட்சியத்துடனும் வேண்டா வெறுப்பாகவும்தான் நீட்டப்பட்டிருக்கும். ஹிந்துக்கள் அதனை நம்பிக்கையுடனும் நேசபாவத்துடனும் சுயமரியாதையுடனும் பற்ற முடியாது.

…ஹிந்துக்கள் தங்கள் தேவதேவியரின் பெயரால் நிகழ்த்திய நீண்ட மாபெரும் விடுதலைப் போராட்டமே அந்த சுயமரியாதையை,  நம்பிக்கையை முஸ்லீம்களுடன் நட்பு கோரும் தன்மையை ஹிந்துக்களுக்கு அளித்துள்ளது.”

பாரத விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் தடியடியால் இறந்த தியாகியான லாலா லஜபதி ராய் இந்நூலை ஒவ்வொரு பாரத அரசியல்வாதியும் படிக்க வேண்டிய நூல் என கூறினார்.

வரலாற்றாசிரியர்கள் பற்றிய வரலாற்றிலே ஒரு தனித்துவம் கொண்ட வைரமாக வீர சாவர்க்கர் ஜொலிக்கிறார். தேசத்தின் மீது அன்பு, அக்கறை, வரலாற்று உண்மை மீது அடங்காத ஆர்வம் ஆகியவற்றை எவ்வித சமரசமும் இன்றி தருகிறார் அவர். அத்துடன் காலனிய ஆதிக்கத்துக்கு உள்ளாகி தளர்வுற்று நிற்கும் வளரும் நாடுகளுக்கான ஒரு ஆதர்ச வரலாற்றாசிரியராக அவர் விளங்குகிறார்.

வறட்டுத்தனமாக புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்கும் வெறுமை கொண்ட வரலாற்றாசிரியராக அவர் இல்லை. மாறாக வரலாற்றை செயல்படும் தன்மையுள்ள ஒரு கருவியாக, நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும் வருங்காலத்தை உருவாக்கவும் பயன்படுத்துகிறார். வீர சாவர்க்கரின் இந்த வரலாற்று ஆய்வு நோக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியது ஹிந்து அறிவியக்கத்தின் இன்றியமையாத கடமையாகும்.

பின்குறிப்பு:

திரு. அரவிந்தன் நீலகண்டன்,  தமிழகத்தின் நம்பிக்கையூட்டும் இளம் ஆய்வாளர்களுள் ஒருவர்; ’உடையும் இந்தியா’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்;  நாகர்கோவிலில் வசிக்கிறார்.

இக்கட்டுரை  தமிழ் ஹிந்து  இணையதளத்திலிருந்து  நன்றியுடன் மீல்பதிவு செய்யப்படுகிறது.

வரலாற்றுப் பேராசிரியர் இரா.அண்ணாமலை அவர்களால் வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” தமிழ் படுத்தப்பட்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்குமிடம்:  சக்தி, 1, எம்.வி.தெரு, பஞ்சவடி, சேத்துப்படு, சென்னை- 31.

%d bloggers like this: