Category Archives: தமிழ் காத்த நல்லோர்

புரட்சிக்கார எழுத்தாளர்

-ம.பூமாகுமாரி

 

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு. ஐயர்

(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.

1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.

குறிப்பு:

திருமதி பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:   சாவர்க்கரின் தமிழகத் தோழர்

.

Advertisements

வீரசைவத்தை தமிழில் வளர்த்தவர்

-ஆசிரியர் குழு

சாந்தலிங்க அடிகளார்

சாந்தலிங்க அடிகளார்

(குருபூஜை: மாசி – மகம்)
 .
அருள்மிகு சாந்தலிங்க அடிகளார், திருக்கயிலாய மரபு மெய்க்கண்டார் வழிவழி திருப்பேரூர் ஆதீனத்தின் ஆதிகுரு முதல்வராக விளங்கியவர்.  தொண்டை நாட்டில் தோன்றிய இவரது காலம் 17ம் நூற்றாண்டு என்பர்.
 .
திருக்கயிலாயப் பரம்பரையில் சீரும் சிறப்பும் பெற்ற திருவாவடுதுறை ஆதீன நிறுவனர் பஞ்சாக்கர தேசிகரின் மாணாக்கராகவும், அவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாகவும் விளங்கி, திருவண்ணாமலை ஆதீனத்தை நிறுவிய துறையூர் சிவபிரகாசரைக் குருவாகப் பெற்றவர் சாந்தலிங்க அடிகள்.
 .
தமிழகத்தில் அயலவர்தாக்கம் நுழைந்து பிறசமயங்களை வளர்க்கும் அமைப்புகள் தோன்றிய காலத்தில், சைவ சித்தாந்த உண்மைகளைத் திருமுறை வழியில் விளக்குவதற்குரிய வழியினை அருளாளர்கள் மேற்கொண்டனர். அவ்வாறு தொடங்கப்பெற்ற மரபே ‘திருக்கயிலாய மரபு’ எனத் தோற்றம் பெற்றது.
.
கயிலைநாதரே இம்மரபுக்கு முதல்வர் ஆவார். கயிலைநாதர் சைவசித்தாந்தச் செம்பொருளைத் தனது மாணாக்கராகிய நந்தியம் பெருமானுக்கு அருளிச் செய்கிறார். அவ்வுண்மையினை நந்தியம் பெருமான் தனது மாணாக்கர் சனற்குமார முனிவர்க்கு அருளிச் செய்தார். சனற்குமாரர் தமது முதல் மாணவராக விளங்கிய சத்திய ஞானதரிசினிகளுக்குச் செம்பொருளை அருளிச் செய்தார். அவர் அச்செம்பொருளின் நுட்பத்தை பரஞ்சோதி முனிவருக்கு அருளினார். இம்மரபு ‘திருக்கயிலாய அகச்சந்தான மரபு’  என்று போற்றப் பெறுகிறது.
 .
இதனைத் தொடர்ந்து உருவாகிய புறச்சந்தான மரபில் முதலில் தோன்றியவர் மெய்கண்டார். இவர் நடுநாட்டில் உள்ள பாடல்பெற்ற தலமாகிய திருப்பெண்ணாகடம் எனும் தலத்தில் அச்சுதக் களப்பாளர் எனும் பெரியாருக்கு தோன்றியவர். இவரது இளமைப்பெயர் திருவெண்காட்டு நம்பி. குழந்தைப் பருவத்தில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் வான்வழி வந்த பரஞ்சோதியார் உண்மைப்பொருளை அகத்தால் இனிதுநோக்கி நம்பிக்கு அருளினார். அன்றுமுதல் நம்பி மெய்க்கண்டார் ஆனார்.
.
இவரது தத்துவஞானத்தை உணர்ந்த அச்சுதக் களப்பாளரின் குலகுரு சகலாகம பண்டிதர் தமக்கு மெய்ப்பொருள் உணர்த்த வேண்டினார். மெய்கண்டாரும் அவரது விருப்பத்திற்கேற்ப மெய்ப்பொருளை உணர்த்தினார். இவரே அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மெய்கண்டார் ‘சிவஞானபோதம்’ என்ற நூலை அருளினார். அந்நூற்பொருளை எளிமைப்படுத்தி அருணந்தியார் ‘சிவஞான சித்தியார்’ என்ற நூலை அருளினார்.
 .
இவரின் மாணாக்கர் மறைஞான சம்பந்தர். இம் மறைஞான சம்பந்தரின் அருள்மாணாக்கர் கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட சாத்திரங்களுள் எட்டு நூல்களை ( சித்தாந்த அட்டகம் ) அருளிய பெருமைக்குரியவர். இவர் வழிவந்த அருள்நமச்சிவாயரின் வழி மாணாக்கரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவிய நமசிவாய மூர்த்திகள் எனப்படும் பஞ்சாக்கர தேசிகர்.
 .
இவ்வாதீனத்தின் இரண்டாம் பட்டமாக விளங்கியவர் ஆதிசிவபிரகாசர். இவரே தமிழகத்தில் வீரசைவ ஆதீனத்தைச் சைவசிந்தாந்த மரபில் தோற்றுவித்த பெருமைக்குரியவராவர். திருவண்ணாமலையிலும், துறையூரிலும் ஆதிசிவபபிரகாசர் ஆதீனத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சமயப் பணியாற்றி வந்தார்.
 .
அக்காலத்தில் சாந்தலிங்கர் சிவப்பிரகாசரது தவவலிமையும்,அருட்பொலிவும் சீலத்தவரால் போற்றுவதைக் கேள்வியுற்றுத் திருவண்ணாமலைத் திருமடத்தை அணுகி குருநாதரை வணங்கி அவரைச் சிவமாகவே கண்டு வியந்தார். சிவபிரகாசர் சாந்தலிங்கரது நிலையுணர்ந்து ‘வீரசைவ தீக்கை’ அளித்து தமக்கு அணுக்கராக ஏற்றுக்கொண்டார். அங்கு கற்பனைக்களஞ்சியம் துறைமங்கலம் சிவபிரகாசர் நட்பு சாந்தலிங்கருக்குக் கிட்டியது.
.
தனது குருநாதரின் அருட்கட்டளையின் வண்ணம், சாந்தலிங்கப் பெருமான் கொங்குவள நாட்டில் உள்ள பிறவாநெறித் தலமாகிய பேரூரை அடைந்து பட்டிப்பெருமான் திருவடிநிழலில் திருமடம் அமைத்து பல அருட்பணிகளை ஆற்றிவந்தார்.
 .
பொம்மபுரம் சிவஞான பாலய சுவாமிகளின் திருவருட் குறிப்பின்படி சிவபிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையம்மையை சாந்தலிங்கர் திருமணம் செய்துகொண்டார். பின்னர் சாந்தலிங்க சுவாமிகள் ஞானாம்பிகையாருடன் பேரூர்க்கு எழுந்தருளி திருமடத்திலிருந்து அடியவர்களுக்கு நல்வழி காட்டிவந்தார். ஞானாம்பிகையார் முதிர்ந்த அறிவோடு இல்லற நெறியில் நின்று அருட்பணிகளில் ஈடுபட்டார்.
 .
சாந்தலிங்கப் பெருமான், மக்கள் உய்யும் பொருட்டு, கொலைமறுத்தல், வைராக்கிய சாதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் ஆகிய நூலகளை அருளிச் செய்தார். இவை முறையே, சீவகாருணியத்தையும் ஈசுவர பக்தியையும், பாச வைராக்கியத்தையும் பிரம ஞானத்தையும் உணர்த்துவன.
 .
மாணாக்கர் பலர் நம் குருமுதல்வர் துறவுநெறியை வற்புறுத்தும் நூல்களை அருளியும், அவற்றை நமக்குப் போதித்தும் தாம் மட்டும் இல்லறநெறியில் இருக்கின்றாரே என்று மனத்தில் எண்ணினர். அதையுணர்ந்த அடிகள் ஒருநாள் தம் துணைவியாராகிய ஞானாம்பிகையாரை உடனிருத்திப் பாடம் சொன்னார். அப்போது சாந்தலிங்கரும் அம்மையாரும் மாணாக்கருக்கு கயிலைநாதரும் உமையம்மையுமாக காட்சியளித்தனர். இக்காட்சியைக் கண்ட மாணாக்கர் தாழ்ந்து பிழைபொறுக்க வேண்டினர்.
 .
இந்நிகழ்வினையடுத்துச் சாந்தலிங்கர் முழுத்துறவு பூண விரும்பினார். இதற்கு இறைவனது திருவுள்ளக் குறிப்பையும் அறிய எண்ணினார். “இன்று யாம் திருவமுது ஏற்கப் புறப்படுகிறோம், முதலில் பாலன்னம் கிடைக்குமானால் முழுத்துறவு நெறியில் நிற்ப்போம்” என்கிறார். திருவருளும் அவ்வாறே இருந்தது. அன்றுமுதல் இல்லறம் நீங்கிய துறவியாகிறார்.
 .
ஞானாம்பிகையார் திருவண்ணாமலை சென்று பெரியமடத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றி இறையருள் பெற்றார். அந்த இடம் ஞானாம்பிகை பீடமாக திருமடத்தின் முகப்பில் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.
.
குமாரதேவர் எனும் கன்னட அரசர் ஞானகுருவைத் தேடிப் பல தலங்களுக்கும் வந்தவர் திருப்பேரூரில் சாந்தலிங்கரைக் கண்டு உபதேசம் பெற விரும்பினார். அவருடைய பக்குவநிலையைச் சோதித்தறிந்து உபதேசம் அருளி தம்முடைய மாணாக்கராக்கிக் கொண்டார். பின் குமாரதேவர் குருவின் திருஉள்ளக்குறிப்பின்படிப் பல தலங்கட்கும் சென்றார். திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலத்தில் ) பெரியநாயகியம்மையின் திருவருளால் மகாராசா துறவு, சுத்தசாதகம் முதலிய பல சாத்திரங்களையும் அருளினார்.
 .
திருமுதுகுன்றத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த குமாரதேவரின் திருவருளுக்கு ஆளானார் சிதம்பர தேசிகர் என்பார். அவரை குமாரதேவர் தம் குருவாகிய சாந்தலிங்கப் பெருமானிடம் அழைத்துவந்தார். சிதம்பர சுவாமிகளின் மதிநுட்பத்தை உணர்ந்த சாந்தலிங்க அடிகள் தாமியற்றிய நூல்களுக்கு உரைசெய்யும்படி பணித்தார். சிதம்பர அடிகள் எழுதிய இவ்வுரை மெய்ப்பொருளை விளக்கும் வகையில் திட்பமும் நுட்பமும் செறிந்து விளங்குகிறது.
இச்சிதம்பர சுவாமிகள் சென்னைக்கு அருகிலுள்ள திருப்போரூர் என்னும் தலத்தினையடைந்து, அங்கு மறைந்துகிடந்த முருகப்பெருமான் கோவிலைப் புதுப்பித்து வழிபாடு செய்து அங்கேயே தங்கியிருந்தனர். அவர் அருளிய பாடல்கள் ‘திருப்போரூர் சந்நிதிமுறை’ என்று வழங்கப்படுகின்றன.
.
இறையருளோடு குருவருளும் பெற்று பல அடியார்களை உருவாக்கி வீரசைவ மரபைப் போற்றி வளர்த்த சாந்தலிங்கப் பெருமான் ஒரு மாசித் திங்கள் மகம் விண்மீன் கூடிய நிறைமதி நாளில், ஞானநிலை அடைந்து தாம் வழிபடும் கூத்தப்பெருமான் திருவடியில் கலந்தார். சாந்தலிங்கருடைய சமாதித் திருக்கோயிலும் திருமடமும் கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள  பேரூரில் பட்டிப்பெருமான் திருக்கோயிலுக்குக் கிழக்கே நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
 .
தகவல் உதவி:
 .
பேரூர் ஆதீனம்

 

மகாமக குளத்துக்குப் படித்துறை அமைத்தவர்!

-பருத்தியூர் கே.சந்தானராமன்

மனைவியுடன் கோவிந்த தீட்சிதர்

மனைவியுடன் கோவிந்த தீட்சிதர்

கோவிந்த தீட்சிதர்

(1515 முதல் 1634 வரை)

நூற்றுப் பத்தொன்பது ஆண்டுகள் வாழ்ந்து, சற்றேறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் முதலமைச்சர் பதவியை வகித்தது, முறியடிக்க முடியாத மாபெருஞ் சாதனை! இந்தச் சாதனை புராணக்கதை அல்ல! பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனை! அந்தச் சாதனையாளர்தான் ஸ்ரீகோவிந்த தீட்சிதர்.

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் மூவருக்கு இராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் திகழ்ந்தவர் பல்துறை அறிஞராகிய கோவிந்த தீட்சிதர்.

பதினாறாம் நூற்றாண்டில் அச்சுததேவராயர் விஜயநகரப் பேரரசின் மகாராயராக (பேரரசராக) இருந்தார். அவர் சேவப்ப நாயக்கரை, தஞ்சைப் பகுதியின் பிரதிநிதியாக 1532-இல் நியமித்தார்.

அதே காலகட்டத்தில், ஆரணிப் பகுதியை, சின்ன திம்மப்ப பூபதி அரசாண்டு வந்தார். கேசவ தீட்சிதர் என்பவர் திம்மப்ப பூபதியின் ராஜகுருவாக இருந்தார். கேசவ தீட்சிதரின் சகோதரியின் குமாரர்தான் கோவிந்த தீட்சிதர். அப்போது அவரை, பலராம கோவிந்தர் என அழைத்தனர். மகாராயர் அச்சுததேவர், ஆரணியில் பலராம கோவிந்தரையும், அவருடைய தந்தை தசரதராம தீட்சிதரையும் சந்திக்க நேர்ந்தது. பலராம கோவிந்தரின் அறிவும், முகப்பொலிவும் மகாராயரைப் பெரிதும் கவர்ந்தன. பதினேழு வயதிற்குள் பலராம கோவிந்தர் சகல சாஸ்திரங்களையும் கற்றுவிட்டார்!

நாராயணமகி, கேசவ தீட்சிதரின் இளமைக்கால நண்பர். அவருடைய மனைவி சின்ன பார்வதி. அவர்கள் இருவரும் தங்கள் மகள் நாகமாம்பாளுடன் ஆரணிக்கு வந்தனர். நாகமாம்பாள் பலராம கோவிந்தருக்கு ஏற்றவள் என்று தீர்மானித்தனர். அதன்படி, மகாராயர் அச்சுததேவர் முன்னிலையில் பலராம கோவிந்தருக்கும் நாகமாம்பாளுக்கும் ஆரணியில் திருமணம் நிறைவேறியது.

இல்லறம் மேற்கொண்ட பலராம கோவிந்தர், ‘கோவிந்த தீட்சிதர்’ என அழைக்கப்பட்டார். தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கர் மகாராயரின் ஆலோசனைப்படி, கோவிந்த தீட்சிதரைத் தமது ராஜகுருவாகவும், முதலமைச்சராகவும் நியமித்தார்.

கோவிந்த தீட்சிதர் பதவியேற்றவுடன், ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட, ‘சரஸ்வதி பண்டாரம்’ என்ற நூல் நிலையத்தை நிறுவச் செய்தார். தஞ்சை மக்களின் குடிதண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டு ஓர் ஏரியை வெட்டச் செய்தார். சரஸ்வதி பண்டாரமே, ‘சரஸ்வதி மகால்’ என்ற பெயருடன் இன்றும் புகழுடன் செயல்பட்டு வருகிறது.

1542-இல் கும்பகோணத்தில் காவிரிக்கரையில் கோவிந்த தீட்சிதர் úஸாம யாகத்தை நடத்தினார். மகான் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர் அந்த வேள்விக்கு வருகை தந்து சிறப்பித்தார். அதே யாக பூமியில், மாணவர்கள் குருகுல முறையில் பயிலத்தக்க வகையில் வேதபாடசாலை ஒன்றை நிறுவச் செய்தார்.  ‘ஸ்ரீராஜா வேதகாவ்ய பாடசாலை’ என்ற பெயரில் அப்பாடசாலை இன்றளவும் செயல்பட்டு வருகிறது.

அங்கு நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்ஸ வேதாந்த சாஸ்திரங்கள், இசை, நடனம், ஆகமம் போன்ற கலைகளும் கற்பிக்கப்படுகின்றன. அந்தப் பாடசாலையை நிர்வகிக்க அரசர் எழுபது ஏக்கர் நிலத்தையும் அளித்தார்.

இந்து வைதீகக் கொள்கையில் பற்றுடையவராய் இருந்த கோவிந்த தீட்சிதர், மனிதநேயமும் மதநல்லிணக்கமும் பேணிய மாமனிதர் ஆவார். அவருடைய ஆலோசனைப்படி, நாயக்க மன்னர்கள் மூவரும் செய்த நற்பணிகளைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன. தஞ்சையில் ஒரு மசூதி கட்டிக்கொள்ள, தீட்சிதர் ஏழு வேலி நிலத்தை அளிக்கச் செய்தார். புனித úஸவியர் என்ற பாதிரியார் நாகப்பட்டினத்தில் கட்டடங்கள் கட்டிக்கொள்ள தீட்சிதர் அரசரின் அனுமதியைப் பெற்றுத் தந்தார்.

திருவண்ணாமலை உள்ளிட்ட பல கோயில்களின் திருப்பணிகளுக்கு உதவினார் கோவிந்த தீட்சிதர். கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதிகும்பேசுவரர் கோயிலுக்கு ராஜகோபுரமும், மதில்களும் கட்டி, 1580-ஆம் ஆண்டு குடமுழுக்கையும் நிறைவேற்றினார். திருவையாற்றில் தொடங்கி, மயிலாடுதுறை வரை, காவிரியின் இரண்டு பக்கங்களிலும் அழகிய படித்துறைகளைக் கட்டச் செய்தார். அவற்றுள் பல இன்றளவும் உள்ளன.

இலங்கை, யாழ்ப்பாணம் சென்று போர்ச்சுகீசியரை வென்று வந்த நாயக்க மன்னரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடந்தையில் இராமர் கோயில் கட்டச் செய்தார். இங்கு ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார். குடந்தையில் ராமசாமி கோயில் என்று இக்கோயில் புகழ்பெற்று விளங்குகிறது. இங்கு ராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

இசையிலும் மேதையாகத் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர், ‘ஸங்கீத ஸுதாநிதி’  என்ற நூலை இயற்றி, அதனை ரகுநாத நாயக்கருக்கு அர்ப்பணம் செய்துள்ளார். மேலும், ‘ரகுநாத மேள வீணா’ என்ற புதிய தஞ்சாவூர் வீணையையும் உருவாக்கினார் கோவிந்த தீட்சிதர்.

பட்டீசுவரத்திற்கு அருகில் இருந்த சிங்கரசன்பாளையம் என்ற இடத்தில், அச்சுதப்ப நாயக்கருக்கு, வில், வாள் சண்டைப் பயிற்சியும், குதிரையேற்றம், யானையேற்றம் போன்ற போர்க்கலைப் பயிற்சிகளையும் அளித்தார் முதலமைச்சர் கோவிந்த தீட்சிதர். ஆசானைப் பாராட்டும்விதமாக, அச்சுதப்பன் சிங்கரசன்பாளையம் என்ற ஊரின் பெயரை மாற்றி,  ‘கோவிந்தகுடி’ என்று பெயரிட்டான். கோவிந்தகுடியில் ஒரு வேதபாடசாலை இயங்கி வருகிறது. சோழ நாட்டு வேதவிற்பன்னர்களில் பெரும்பாலோர், கோவிந்தகுடி பாடசாலை அல்லது குடந்தை ராஜா வேதபாடசாலையில் அத்யயனம் செய்தவர்களே.

மக்கள் நலம் பேணிய, தமது அரிய பணிகளால், மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் கோவிந்த தீட்சிதர். தஞ்சைத் தரணியில், ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் கோவிந்த தீட்சிதரை, ‘எங்கள் ஐயன்’ என்று போற்றினர்! வாழ்த்தினர்! அதன் வெளிப்பாடாக, ஐயன்பேட்டை, ஐயன் குளம், ஐயன் கடைவீதி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்பெயர்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்தின்பொழுது, பூமியிலுள்ள அத்துணை புண்ணிய தீர்த்தங்களும், கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகளும் மகாமகக் குளத்திற்குள் வந்துவிடுவதாக ஐதீகம். ஒருமுறை கோவிந்த தீட்சிதருடன் கும்பகோணத்திற்கு வந்திருந்த ரகுநாத நாயக்கர், ‘கங்கை முதலான புண்ணிய நதிகள் இப்போதும் மகாமகக் குளத்திற்கு வருகின்றனவா? அவர்களை (நதியரசிகளை) நாம் காண இயலுமா?’ என்று வினவினார்.

 ‘ஆம்! இன்றும் நதியரசிகள் இங்கு வருகிறார்கள்!’

-என்று பதிலளித்த கோவிந்த தீட்சிதர், சிறிது நீரைத் தெளித்து நதிதேவதைகளைப் பிரார்த்தித்தார். அப்போது மகாமகக் குளத்தில், ஒரே நேரத்தில் பதினெட்டு வளைக்கரங்கள் தோன்றின! 1624-ஆம் ஆண்டு ரகுநாத நாயக்கர் அந்த அதிசயத்தைக் கண்டார். பெரிதும் மகிழ்ந்த இரகுநாத நாயக்கர், கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கத்தைத் துலாபாரமாகக் கொடுத்துச் சிறப்பித்தார். சிறிதும் தன்னலமில்லாத கோவிந்த தீட்சிதர், அப்பொன்னைக் கொண்டு மகாமகக் குளத்திற்குப் புதிய படித்துறைகள் அமைத்தார். அத்துடன் குளத்தைச் சுற்றிலும் பதினாறு சிவாலயங்களைக் கட்டினார்.

ரகுநாத நாயக்கர் கோவிந்த தீட்சிதருக்கு எடைக்கு எடை தங்கம் அளித்ததன் நினைவாக, மகாமகக் குளத்தின் வடக்குக்கரையில் துலாபார மண்டபம் என்றே ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

மூன்று மன்னர்களுக்கு முதலமைச்சராகவும், ராஜகுருவாகவும் விளங்கிய கோவிந்த தீட்சிதர் எவ்விதப் பகட்டும் படாடோபமும் இல்லாமல் வாழ்ந்தார். பட்டீஸ்வரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். மன்னனுக்கு வழிகாட்டவும், மக்களுக்குத் தொண்டு செய்யவுமே, இறைவன் படிப்பையும், பதவியையும் அருளியதாகக் கருதினார் கோவிந்த தீட்சிதர். இல்லற ஞானியாக வாழ்ந்து, சாதனைகள் படைத்து, வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் கோவிந்த தீட்சிதர்.

ஸ்ரீராமாநுஜர் 120 ஆண்டுகள் இப்பூவுலகில் வாழ்ந்தார். அதுபோல், கோவிந்த தீட்சிதரும் 119 ஆண்டுகள் (கி.பி.1515 முதல் 1634 வரை) நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தார் என்பதும் வரலாற்றுச் சான்றுடன் கூடிய உண்மையாகும்.

குறிப்பு:

திரு. பருத்தியூர் கே.சந்தானராமன் ஆன்மிக எழுத்தாளர், கல்வியாளர்.

இக்கட்டுரை, தினமணிக் கதிரில் வெளியானது, நன்றியுடன் இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைவப்பயிர் வளர்த்த சீலர்

-சேக்கிழான்

தெய்வச் சேக்கிழார்

சேக்கிழார்

(திருநட்சத்திரம்: வைகாசி – பூசம்)
(மே 23)
 .
சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தின் தொண்டை நாட்டில், புலியூர்க் கோட்டம்,  குன்றத்தூரில், சைவம் தழைத்தோங்க அவதரித்தவர் சேக்கிழார் பெருமான்.
 .
சோழ மன்னன் கரிகாலனால் குன்றத்தூரில் குடியேற்றப்பட்ட  வேளாளர் குடும்பங்களில்  சேக்கிழார் குடுமபமும் ஒன்று.   அந்தக் குடும்பத்தில் வெள்ளியங்கிரி முதலியார்- அழகாம்பிகை தம்பதியருக்கு தலைமகனாக அவதரித்தவர் அருன்மொழிதேவர் இவரே பின்னாளில் குடும்பப்பெயரான ‘சேக்கிழார்’ என்ற பெயரால் பிரபலமானார்.
 .
இளமையிலேயே பலநூல் கற்று அறிவாளராக விளங்கிய சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலமைச்சராக விளங்கினார். இவரது திறமையை மெச்சி ‘உத்தம சோழ பல்லவராயர்’ என்ற பட்டம் சூட்டினார் மன்னர். தனது அதிகாரத்தைக் கொண்டு சிவத்தலங்கள் பல புதுப்பிக்கப்படவும் சேக்கிழார் பணிபுரிந்தார்.
 .
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தபோதும் சிவசேவையே பிரதானமாகக் கொண்டவர் சேக்கிழார். சைவ மதத்தின் பிரதான பரப்புனர்களான நாயன்மார்கள் சரிதம் அக்காலத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக வழங்கி வந்தது. அதனை முறைப்படி நூலாகத் தொகுக்க திருவுள்ளம் கொண்ட சேக்கிழார், அதற்காக சிதம்பரம் சென்று ஈசனை வேண்டினார். அப்போது, அம்பலத்தாடும் ஈசனே, ‘உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்ததாக ஐதீகம்.  அதையொட்டி சேக்கிழார் இயற்றிய ‘பெரிய புராணம்’ தமிழின் ஆகச் சிறந்த சமூக ஒற்றுமைக்கான சமய நூலாக விளங்கி வருகிறது.
 .
சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நூல்களை முதல்நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் தேசிய காப்பியம் என்று கூறுவார் அ.ச.ஞானசம்பந்தனார்.
.
அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் இறையன்பில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதையும், பக்தியின் முன்னால் எந்த ஏற்றத் தாழ்வுக்கும் இடமில்லை என்பதையும் உறுதிப்படுத்துவது பெரிய புராணத்தின் சிறப்பு. பெரிய புராணம் தில்லையில் அரங்கேறிய நாள் 20. 4. 1140என்று கூறுவார் ஆய்வறிஞர்  குடந்தை நா. சேதுராமன். 
 .
பெரிய புராணத்தின் மகிமை உணர்ந்த சோழ மன்னன் அநபாயன், யானை மீது சேக்கிழாரை இருத்தி, அவருக்கு தானே கவரி வீசி சிதமபரத்தில் திருவீதி உலாவரச் செய்தான். அவருக்கு ‘தொண்டர்சீர் பரவுவார்’ என்ற புகழ்ப்பெயரும் சூட்டப்பட்டது.
.
சேக்கிழாரின் இளைய சகோதரர் பாலறாவாயர் தானும் சிவத்தொண்டில் மகிழ்ந்தவர். அவரையும் தனது அமைச்சராக்கி மகிழ்ந்தான் மன்னன். பெரிய புராணம் முழுவதையும் செப்பேடுகளில் பொறித்து, அதனை ‘பன்னிரண்டாம் திருமுறை’ என்று அறிவித்தான் சோழ மன்னன்.
 .
63  நாயன்மார்களையும் குறித்து ஏற்கனவே தமிழகத்தில் நூல்கள் இருந்திருப்பினும், சேக்கிழாரின் காவியச் சிறப்பால் பெரிய புராணம் தமிழின் முதன்மையான சைவத் தமிழ்  நூலாக விளங்குகிறது. அன்னார், சிவனடியார் திருக்கூட்டத்துடன் தில்லையில் திருத்தொண்டர் பெருமைகளைப் புகன்ற வண்ணமே, வைகாசி பூசத்தில் சிவனடி சேர்ந்தார்.
 .
இறைவனை முன்னிறுத்தி அடியார்களை சமமாகக் கருதும் பக்திப் பண்பாட்டை தமிழகத்தில் உறுதிப்படுத்தியவர் சேக்கிழார். அதுவே அவர்தம் பெருமை. சிவனடியாரில்  அந்தணர்-  சண்டாளர்,  மேற்குலத்தோர்- தாழ்த்தப்பட்டோர் என்ற பேதமில்லை. சிவனுக்காக உயிர்த்தியாகமும் செய்யத் துணிந்த எளிய மக்களை நாயகராக்குவது பெரிய புராணம். தமிழ் உள்ளவரை பெரிய புராணமும் அதை இயற்றிய சேக்கிழார் தம் புகழும் வாழும்.
.

குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்

-வ.மு.முரளி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூறாவது ஆண்டு (6.4.1815) ஏப்ரல் 6-இல் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

பிள்ளையின் சிறப்பு, அவர் இயற்றிய நூல்களால் அமையவில்லை. ஆனால், அவரது குருகுல மாணாக்கர்களாக இருந்த பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டே குருநாதரை இன்றும் நினைக்கச் செய்கிறது. அவர்களுள் ஒருவர்தான் உ.வே.சா.

திருவாவடுதுறை ஆதீனத்தால் “மகாவித்துவான்’ என்ற பட்டம் பெற்று புகழ்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழில் கரை கண்டவர்; நினைத்தவுடன் யாப்புடன் கூடிய கவி புனையும் ஆற்றல் மிகுந்தவர். தனது வாழ்நாளில் அவர் எழுதிய செய்யுள்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார் உ.வே.சா.

ஆனால், அக்காலத்தில் அவற்றைத் தொகுத்து வைக்க போதிய சாதனங்கள் இல்லை. அதையும் மீறி, அவருடைய நூல்கள் பலவற்றை உ.வே.சா.வின் முயற்சியால் நாம் இன்று படிக்க முடிகிறது. அவர் எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும், குசேலோபாக்கியானம் என்ற காப்பியமும், அவரது மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தலபுராணத்திலும் தமிழின் சிறப்பு மிளிரச் செய்வதில் பிள்ளை முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய தலபுராணங்கள் 22.

தனது அருமுயற்சியால் கற்ற தமிழை தன்னுடைய மாணாக்கர்களுக்கு அள்ளி வழங்கும் திறனால் இவரது புகழ் பரவியது. இவரது வீடே மாணாக்கர்களின் இல்லமானது. பிரதிபலன் பாராமல் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்து, தமிழ் கற்பிப்பதை தனது வாழ்வின் நோக்கமாகவே கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய மாணாக்கர்களின் தரத்தை உயர்த்துவதே அவரது இலக்காக இருந்தது. நல்ல மாணாக்கர்களைத் தேடிக் கண்டறிந்து பாடம் கற்பிப்பது பிள்ளையின் இயல்பு.

 “பணத்துக்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமையாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சிகளில் இவரைச் செலுத்தாமல் இருந்தது” என்கிறார் உ.வே.சா.

தன் குருநாதரின் சிறப்புகள் குறித்து உவே.சா., 1934-இல் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் பிள்ளையின் தவ வாழ்வை விளக்குகிறது.

 “மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தார். அவர்களோ தந்தையாகவே எண்ணி இவரிடம் பயபக்தியுடன் ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்துவிடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குவதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லர் என்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது” என்று, தனது வாழ்வின் அரிய ஆறு ஆண்டுகளை பிள்ளையின் இறுதி நாள்களில் அவருடன் கழித்த உ.வே.சா. கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கவனித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதமான வாழ்க்கை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடையது. குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவரான இவரின் இரு நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழரின் – தமிழகத்தின் கடமையாகும்.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

இக்கட்டுரை,  தினமணி- தமிழ்மணியில் வெளியானது.

காண்க: ஆசான்களின் ஆசான்…

%d bloggers like this: