Category Archives: தமிழகத் தலைவர்

சாவர்க்கரின் தமிழகத் தோழர்

-தஞ்சை வெ.கோபாலன்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

(பிறப்பு: 1881, ஏப். 2- மறைவு: 1925, ஜூன் 4)

திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வேங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர் வ.வே.சுப்பிரமணியம் என்கிற வ.வே.சு.ஐயர்.

திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி.

இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வே.சு.ஐயர். அங்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை இவருக்கு வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார்.

இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த ‘இந்தியா ஹவுஸ்’ எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் விநாயக தாமோதர சாவர்க்கருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர்.

இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார்.

லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம்.

அப்போது 1910-இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாரிசிலிருந்து லண்டன் வந்த சாவர்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வே.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்தச் செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சாவர்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார்.

ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான ‘வி.வி.எஸ்’ பொறிக்கப்பட்டிருந்தது. இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களைச் சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வே.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்க முடியாது என்று நினைத்தனர்.

எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், “ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது” என்றார். போலீசார் விடவில்லை. “மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், “அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்” என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது.

ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச் சேர்ந்தார். ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது.

இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911-ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்ததனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள்.

புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கு இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முதல் உலக யுத்தம் 1918-இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918-இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலையானார்.

1920-இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார்.

ஊர் திரும்பிய பின் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கிலக் கட்டுரையை எழுதி முடித்தார். 1922-இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பரத்துவாஜ ஆசிரமம்’ என்று பெயர்.

மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதிக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமணக் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார். ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமணக் குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமணப் பிள்ளைகளின் பெற்றோர் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்னையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது.

தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ‘ஜாதி வெறியன்’ என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர்.

மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார்.

இந்த நிலையில் 1925-இல் ஜுன் மாதம் குருகுலக் குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்கத் தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது.

அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார் (1925, ஜுன் 4). இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது.

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன், தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர்.

காண்க: தமிழ்நாட்டுத் தியாகிகள்

 

Advertisements

தமிழக காங்கிரஸ் இயக்கத்தின் முன்னோடி

-என்.டி.என்.பிரபு

தீரர் சத்தியமூர்த்தி

தீரர் சத்தியமூர்த்தி

(பிறப்பு: 1887, ஆக. 18- மறைவு: 1943 மார்ச் 28)

இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்க எண்ணிய ஆங்கிலேய அரசு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. ஜேம்ஸ் என்ற ஆங்கிலேயர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைப் பார்த்து “இங்கிலாந்துப் பேரரசின் அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்பவில்லையென்றால், யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்க விரும்புகிறீர்கள்?” என்று ஏளனமாகக் கேட்டார்.

“யாருடைய அதிகாரத்தின் கீழும் நாங்கள் வாழ விரும்பவில்லை. நாங்கள் சுதந்திரமாகவே வாழ விரும்புகிறோம். அதுமட்டுமல்ல.  அந்நியர்களாகிய உங்களை உதைத்து வெளியே தள்ளவும் விரும்புகிறோம்” என்றார் அந்த சுதந்திரப் போராட்ட வீரர். இந்த பதிலைக் கேட்டு ஜேம்ஸ் அதிர்ந்து விட்டார். இவ்வாறு துணிச்சலாக கூறியவர்  சத்தியமூர்த்தி. இப்படி பல வகையிலும் துணிச்சலாக அவர் நடந்து கொண்டதால், அவர் ‘தீரர் சத்தியமூர்த்தி’ என்று புகழ்ந்து பாராட்டப்பட்டார்.

அந்த வீரர் பிறந்தது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருமயம் ஆகும். 1887, ஆக. 18-ம் நாள் பிறந்தார்.  தந்தை சுந்தரேச சாஸ்திரி. திருமயத்தில் பள்ளிப் படிப்பை முடித்த சத்தியமூர்த்தி சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.

படிக்கும்போதே, எந்தத்  தலைப்பாக இருந்தாலும், சிறப்பான முறையில் சொற்பொழிவாற்றும் பேராற்றலைப் பெற்றிருந்தார். இவரது சொற்பொழிவு கேட்போரை மெய்மறந்து கேட்கச் செய்திடும் வல்லமை உடையது. ஒருமுறை வடமொழி மாநாட்டில் பாரதத்தின் தலைசிறந்த இதிகாசமான ராமாயணம் பற்றி உரையாற்றச் சென்றிருந்தார். வழக்கமாக ஆங்கிலம் அல்து தமிழில் சொற்பொழிவாற்றும் இவர், அனைவரும் வியக்கும்படி வடமொழியில் ஆற்றினார். இந்நிகழ்வு வடமொழியிலும் இவருக்கு புலமை இருந்ததைத் தெளிவுபடுத்தியது.

நாடகத்தில் நடிப்பது,  இயக்குவது ஆகியவற்றில்  ஆர்வம் கொண்டிருந்தார்;  பம்மல் சம்மந்த முதலியார் அவர்களின் நாடகத்தில் நடித்துள்ளார்;  திரைப்படத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்;  தென்னிந்திய திரைப்பட வர்த்தகக் கழகத்தின் பொறுப்பில் இருந்துள்ளார்.

வழக்கறிஞரான இவர் நாட்டுப்பற்று கொண்டிருந்ததால்,  நாட்டு  விடுதலைக்காப் போராடி வந்தார். ‘ஹோம் ரூல்’ இயக்கத்தில் பங்கேற்றிருந்தபோது அவ்வியக்கத்துடன் உண்டான கருத்து வேறுபாட்டினால், அதிலிருந்து விலகினார். பின் காங்கிரஸ் பேரியக்கத்துடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

1919ல் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு நவீன  அரசியல் கோட்பாடுகளை கற்றார். அவற்றை நம் நாட்டிற்கு எடுத்துக் கூறி வழிநடத்தவும் செய்தார். காங்கிரஸ் பேரியக்கம் 1992ல் பிளவுபட்டு ‘சுயராஜ்யக் கட்சி’ உதயமான போது, காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணையாக இருந்தார்.

1923-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினரானார். சென்னை மாநகராட்சியிலும் உறுப்பினரானார். சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறைத் தண்டனை பெற்றார். 1936-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார்.

1942-ல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் சத்தியமூர்த்தி கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது அவரது உடல்நிலை பாதிக்கப்ட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அவரால் முன்பு போல் பொதுவாழ்வில் ஈடுபட முடியாமல் போனது. 1943, மார்ச் 28-ம் நாள் சத்தியமூர்த்தி  இயற்கை எய்தினார்.

இவரைப் போன்ற பலரின் தியாகமே நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது.  கர்மவீரர் காமராஜரின்  அரசியல் குருவாக தீரர் சத்தியமூர்த்தி   போற்றப்படுகிறார்.

தீரர் சத்தியமூர்த்தி,  இலக்கியம், நாடகம்,  திரைப்படம்,  அரசியல் என பல துறைகளில் ஈடுபட்டு முழுமை பெற்ற மனிதராக வாழ்ந்ததை நினைப்போம். அவரது  பல்துறை ஆர்வத்தையும் தேச நேசத்தையும் நாமும் நம்முள் காண்போம்.

.

கப்பலோட்டிய தமிழர்

-தஞ்சை வெ.கோபாலன்

வ.உ.சிதம்பரம் பிள்ளை

வ.உ.சிதம்பரம்  பிள்ளை

(பிறப்பு: 1872, செப். 5 – மறைவு: 1936, நவ. 18)
.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றிவைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர்.

காங்கிரஸ் வரலாற்றை மிதவாத அரசியல்வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. போராடினார்.

தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம் தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5-ஆம் நாள்.

கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர் தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர்.

தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895-இல் தமது 23-ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.

வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906-இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை ‘இந்தியா’ அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர்.

1905-இல் வங்காளத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்தனர் பிரிட்டிஷ்காரர்கள். நாடெங்கிலும் எதிர்ப்பலை எழுந்தது. விபின் சந்திர பால் சென்னை வந்து கடற்கரையில் ஒரு சொற்பொழிவாற்றினார். 1908-இல்  ‘சென்னை ஜனசங்கம்’ எனும் அமைப்பு ஒன்று தோன்றியது. இதில் வ.உ.சி. நிர்வாகக் குழுவின் இருந்தார்.

வ.உ.சி. தூத்துக்குடியில் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பார்த்து பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக் கூட அறிவித்தது.

1907-இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மகாநாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அங்குதான் திலகர் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டிக்கும், மிதவாதத் தலைவர்களுக்குமிடையே பூசல் எழுந்து மாநாடு நின்று போயிற்று. இதற்கு வ.உ.சி, மகாகவி பாரதி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சென்னையிலிருந்து ரயிலில் சென்றனர்.

அங்கிருந்து திருநெல்வேலி திரும்பிய வ.உ.சி. ‘தேசாபிமானச் சங்கம்’ என்றதொரு அமைப்பைத் தோற்றுவித்தார். சுதந்திர இயக்கத்தில் தீவிரப் பங்கு கொண்டார். தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். ஆங்கில நிர்வாகம் இவர் மீது ஆத்திரம் கொண்டது.

தனது வீரமான மேடைப் பேச்சினால் மக்களை மிகவும் கவர்ந்து வந்த வீரத்துறவி சுப்பிரமணிய சிவா இவரது ஆதரவில் இவரோடு தங்கியிருந்து பொதுக்கூட்டங்களில் பேசிவந்தார். எங்கும் சுதந்திர வேகத்தையும் ‘வந்தேமாதர’ கோஷத்தையும் இவர்கள் இருவரும் பரப்பி வந்தனர். அப்போது தூத்துக்குடியில் துணை மாஜிஸ்டிரேட்டாக இருந்த ஆஷ் எனும் ஆங்கிலேயன் வ.உ.சி மீது வன்மம் பாராட்டி இவருக்கு இடையூறு செய்து வந்தான். அதற்கு திருநெல்வேலி கலெக்டராக இருந்த விஞ்ச் துரையும் ஆதரவாக இருந்தான்.

1918-இல் ஏப்ரல் 13. பஞ்சாபில் ஜாலியன்வாலாபாக்கில் பயங்கரமாக பொதுமக்களை ஆயிரக் கணக்கில் சுட்டுத் தள்ளினான் ஜெனரல் டயர் என்பவன். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பெரிய கூட்டம் நடைபெற்றது. வ.உ.சி.யும் சிவாவும் பேசினர். விபின் சந்திர பால் அவர்களின் விடுதலை நாள் விழாவாக அது நடைபெற்றது.

போலீஸ் அடக்குமுறையாலும், ஆஷ், கலெக்டர் ஆகியோரின் வெறித்தனத்தாலும் அன்று திருநெல்வேலியில் பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனை ‘நெல்லைச் சதி வழக்கு’ என்ற பெயரில் விசாரித்தார்கள். இந்த வழக்கின் முடிவில் வ.உ.சி.க்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுத்தார்கள். இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சி.க்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்து தான்.

இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்தபோது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர்.

(இந்தச் செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972- இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.)

இதற்கிடையே ஆஷ் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி கலெக்டராக ஆனான். அவன் தன் மனைவியுடன் கொடைக்கானலில் படிக்கும் தன் மக்களைப் பார்ப்பதற்காக மணியாச்சி ரயில் நிலையத்தில் மாற்று ரயிலுக்காகத் தன் ரயில் பெட்டியில் காத்திருக்கும்போது, வாஞ்சிநாதன் எனும் செங்கோட்டை வாலிபன் உள்ளே நுழைந்து ஆஷைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, வெளியே வந்து தானும் சுட்டுக்கொண்டு இறந்து போனான்.

ஆளுவோரின் சந்தேகம் வ.உ.சி., பாரதி. வ.வே.சு. ஐயர் ஆகியோர் மீதும் விழுந்தது. சிறையிலிருந்த வ.உ.சிக்கு இதனால் மேலும் சில கஷ்டங்கள் நேர்ந்தன. பாரதியை பிரிட்டிஷ் வேவுகாரர்கள் வேவு பார்த்துத் தொல்லை கொடுத்தனர். 130 பவுண்டு எடையோடு சிறை சென்ற இவர் வெளிவரும்போது 110 பவுண்டு இருந்தார்.

இவர் சிறையில் இருந்த காலத்தில் இவரது சுதேசி கப்பல் கம்பெனி ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டு விட்டது. இவர் 24-12-1912இல் விடுதலை செய்யப்பட்டார். சுப்பிரமணிய சிவா 2-11-1912இல் சேலம் சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் இவர் சிறையில் இருந்த போது தொழுநோய் அவரைப் பற்றிக்கொண்டது. வியாதியஸ்தராகத்தான் இவர் வெளியே வந்தார். ‘இது சிறை தந்த சீதனம்’ என்று மனம் நொந்து கூறினார் சிவா.

ஆயிரக் கணக்கான மக்கள் வழியனுப்ப சிறை சென்ற வ.உ.சி. விடுதலையாகி வெளியே வரும்போது எவரும் இல்லை. தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா மட்டும் காத்திருந்தார். இதனை பி.ஆர்.பந்துலு எனும் சினிமா தயாரிப்பாளர் தான் தயாரித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ எனும் படத்தில் காட்டியிருந்தார். பார்த்தோர் அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

சிறைவாசம் முடிந்து வ.உ.சி. தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்லவில்லை. மாறாக சென்னை சென்றார். இவர் சிறைப்பட்டதால் இவரது வக்கீல் சன்னது பறிக்கப்பட்டது. சென்னையில் என்ன தொழில் செய்வது? மண்ணெண்ணை விற்றார். சரிப்பட்டு வரவில்லை. மண்டையம் ஸ்ரீநிவாசாச்சாரியார் எனும் தேசபக்தர் இவருக்கு உதவினார்.

சென்னையில் சில பிரபல தலைவர்களுடன் சேர்ந்து தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். திரு.வி.க., சிங்காரவேலர், சர்க்கரைச் செட்டியார், வரதராஜுலு நாயுடு ஆகியோர் அவர்கள். சென்னை பின்னி மில், சென்னை டிராம்வே தொழிலாளர்கள், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டார்.

இந்திய தொழிலாளர் இயக்கத்தில் அன்னிய நாட்டில் பிறந்த அன்னிபெசண்ட் ஈடுபடுவதை இவர் எதிர்த்து குரல் கொடுத்தார். சிலகாலம் இவர் கோயம்புத்தூரிலும் சென்று தொழிற்சங்கப் பணியாற்றினார். எனினும் முன்போல காங்கிரஸ் இயக்கத்தில் அவர் அதிக ஈடுபாடு காட்டவில்லை.

திலகர் காலமாகிவிட்ட பிறகு மகாத்மா காந்தி 1919-இல் இந்திய சுதந்திரப் போரை முன்னின்று நடத்தத் தொடங்கினாரல்லவா? அப்போது அவர் ஒரு சில நேரங்களில் தனது கருத்துக்களை வெளியிட்டு மகாத்மாவின் சாத்வீக இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். பிறகு அவரது நம்பிக்கை தளர்ந்தது போலும். 1920 ஆகஸ்டுக்குப் பிறகு இவர் ‘திலகர் ஒத்துழையாமை மூலம் சுயாட்சி பெற விரும்பவில்லை. சட்டப்படியான ஆயுதத்தைப் பயன்படுத்தியே சுதந்திரம் பெற வேண்டும்” என்றும் பேசியிருப்பதிலிருந்து இவருக்குச் சிறுகச் சிறுக மகாத்மாவின் சாத்வீக இயக்கத்தில் நம்பிக்கை இழப்பு நேர்ந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு காங்கிரசிலிருந்து இவர் விலகினார். கொள்கை காரணமாக காங்கிரசிலிருந்து விலகிய வ.உ.சி. பிறகு 1927-இல் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மகாநாட்டில் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார். அந்த மகாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். எனினும் பிறகு இவர் காங்கிரசில் தொடர்ந்து செயல்படமுடியவில்லை.

1916-இல் சென்னை ராஜதானியில் டாக்டர் நாயர் தலைமையில் தோன்றி வளர்ந்து வந்த பிராமணர் அல்லாதார் இயக்கத்தின்பால் இவருக்கு ஈடுபாடு வந்தது. 1927-இல் இவர் கோயம்புத்தூரில் நடந்த மாநாட்டில் தலைமை ஏற்றார். எனினும் இந்த இயக்கம் ஜஸ்டிஸ் கட்சியாக மாறியபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கமாக வளர்ந்த போதும் வ.உ.சி. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

பல துறைகளிலும் பிராமணரல்லாதார் பின்தங்கி இருப்பதற்காக அவர் வருந்தினார், அவர்கள் முன்னேற பாடுபடவும் விரும்பினார் என்றாலும் அதற்காக பிராமணர் – பிராமணரல்லாதார் எனும் சாதி வேற்றுமைகளின் அடிப்படையில் ஓர் அரசியல் இயக்கம் தோன்றுவதையோ, வளர்வதையோ அவர் விரும்பவில்லை.

பெறுதற்கரிய ஓர் சிறந்த தேசபக்தரான வ.உ.சிதம்பரம் பிள்ளை 1936 நவம்பர் 18-ஆம் தேதி இரவு 11-30 மணியளவில் தனது இல்லத்தில் காலமானார். அவர் இறக்கும் தறுவாயில் மகாகவியின் ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?’ எனும் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டுக் கொண்டே உயிர் பிரிந்தது.

வாழ்க கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் புகழ்!

 ***

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பற்றி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பாடிய பாடல் இது:

சிதம்பரம் பிள்ளையென்று பெயரைச் சொன்னால் – அங்கே

சுதந்திர தீரம் நிற்கும் கண்முன்னால்

விதம்பல கோடி துன்பம் அடைந்திடினும் – நாட்டின்

விடுதலைக்கே உழைக்கத் திடம் தருமே!

 

திலக மகரிஷியின் கதைபாடும் – போது சிதம்பரம்

பிள்ளை பெயர் வந்து சுதிபோடும்

வலது புயமெனவே அவர்க்குதவி – மிக்க

வாழ்த்துக் குரிமை பெற்றான் பெரும் பதவி.

 

சுதேசிக் கப்பல் விட்ட துணிகரத்தான் – அதில்

துன்பம் பல சகித்த அணிமனத்தான்

விதேச மோகமெல்லாம் விட்டவனாம் – இங்கே

வீர சுதந்திரத்தை நட்டவனாம்.

 நன்றி: ‘தமிழன் இதயம்’

 

குறிப்பு:

திரு. தஞ்சை வெ.கோபாலன்,  திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி, மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தி வருபவர்; 4 நூல்களை எழுதி இருக்கிறார்.  ஆன்மிக, கலாசார இயக்கங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில துணைத் தலைவர்.

நன்றி: சுதந்திரப் போராட்ட தியாகிகள்

காண்க:

செக்கிழுத்த செம்மல்

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

-முத்துவிஜயன்

மதுரை வைத்தியநாத ஐயர்

மதுரை வைத்தியநாத ஐயர்

(பிறப்பு: 1890, மே 16 –  மறைவு: 1955, பிப். 23)
.
தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே.
.
தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாதன். மேற்படிப்பிற்குப் பிறகு மதுரையில் வழக்கறிஞராகப் பணி புரிந்த வைத்தியநாதன்,   அந்நாளைய தேசபக்தர்கள் போலவே சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார்.
.
1922-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற  அவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினார்.
.
தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.
பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாளில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
.
1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.
.
உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார்.
.
1939 , ஜூலை, 8ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.
.
மேல் ஜாதியினரின் கடும் எதிர்ப்பை மீறி வைத்தியநாத ஐயர் நடத்திய இப்போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவு தெரிவித்தார்.
.
”எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம்” என்று  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
.
வைத்தியநாத ஐயருடன்  மதுரை கோயிலுக்குள் சென்ற ஹரிஜன சகோதரர்களில் பின்னாளில் அமைச்சரான கக்கனும் ஒருவர். மகாத்மா காந்தி, இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்து, 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:
.
“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்”.
.
1930-இல் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும், 1942-இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் வைத்தியநாத ஐயர் பங்கேற்றார்.  நாட்டின் களங்கத்தைத் துடைத்த பெரியோரான மதுரை வைத்தியநாத ஐயர் 1955, பிப். 23-இல் மறைந்தார்.
.

மேடைத் தமிழில் மேவிய தலைவர்

-முத்துவிஜயன்

அறிஞர் அண்ணாதுரை

அறிஞர் அண்ணாதுரை

(பிறப்பு: 1909,  செப். 15-  மறைவு: 1969, பிப். 3)

தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சராகவும், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியவருமான, அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாதுரை மேடைப் பேச்சிலும் சட்டசபை பேசுகளிலும் வல்லவர். அவரது மேடைப் பேச்சுத் திறனே திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழகத்தின் அரசியல் களத்தில் முன்னணியில் கொண்டுவந்து நிறுத்தியது. இன்று அவரது நினைவுதினம். அவரது பேச்சாற்றல் குறித்த சில நினைவுகளை பகிர்ந்து கொள்வோமே…

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சாக இருந்தாலும், சட்டமன்ற உரையானாலும், நாடாளுமன்ற உரையானாலும் எங்கும் நகைச்சுவையுடன் பேசி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்தார்.

சிலுவையும் சீடர்களும்:

ஒரு முறை சட்டமன்றத்தில் – அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார். இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா. அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?

மற்றொரு முறை திரு.வினாயகம் (காங்) எழுந்து, நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார். புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்:

1957-க்கு முன்பு காமராசரும், காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் – முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம் பெற்ற போதும், 1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்சிரசார் – அதன் அமைச்சர்கள் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும் கிண்டலும் செய்தனர்.

அப்போது அண்ணா, நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

யாருக்காக இந்தக் குறள்?

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா. திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார். பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது! டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல – மிகவும் நுணுக்கமானதுமாகும்.

நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

திரும்பும் சொல்லம்பு!

ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து, ”யுவர் டேஸ் ஆர் நம்பர்ட்” (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, ”மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட்” (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம் மிகுந்திருந்தது.

***

அரசியல்ரீதியாக அண்ணாதுரையின் கருத்துகளில் மாறுபாடு உள்ளவர்களும் கூட, அவரது இனிய பேச்சாற்றலால் வசீகரிக்கப்பட்டனர். சமயோசிதமான பதில் கூறும் முறையால் எத்தகைய சிரமத்திலிருந்தும் எளிதாகத் தப்புவதில் அண்ணாதுரை வல்லுனராக இருந்தார்.

அவரது திராவிட அரசியல், பிரிவினைவாதம், பகுத்தறிவு என்ற பெயரிலான இந்துமத விரோதம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு, மொழிப்பற்று, மக்கள்நலன் மீதான கவனம், தலைமை தாங்கும் பண்பு, சமூக சீர்திருத்த சிந்தனை போன்றவற்றின் அடிப்படையில் பார்த்தால், அண்ணாதுரை மகத்தான தலைவரே.

எந்த ஒரு மனிதரிடமும் உள்ள நல்ல அம்சங்களை மட்டும் கவனம் கொண்டால், அவற்றை மட்டும் கிரகித்துக்கொள்ள முடியுமானால், நாம் ஒவ்வொருவரும் அறிஞர் அண்ணா போல உயர்வடைய முடியும்.

.

%d bloggers like this: