Category Archives: சீக்கிய குருமார்

சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்…

-ம.விவேகானந்தன்

Guru-Gobind-Singh

குரு கோவிந்த சிம்மன்

(பிறப்பு: 1666, டிசம்பர் 22 – மறைவு: அக்டோபர் 7)

1675-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேக்பகதூரைச் சந்திக்க காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் பஞ்சாபின் அனந்தபூருக்கு வந்திருந்தார்கள். இ.ஃப்திகார் கானின் முஸ்லிம் மதவெறிக் கொடுமைகளைத் தாங்க முடியால் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றிருந்தார்கள்.

அனைத்தையும் கேட்டறிந்த அவர்  “இந்தக் கொடுமைகளில் இருந்து மீள வேண்டும் என்றால் மகத்தான ஒருவர்,  தனது தலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த குரு தேக் பகதூரின் ஒன்பது வயது மகனான கோவிந்த சிம்மன் தந்தையைப் பார்த்து வெகுளியாக “அப்படிப்பட்டத் தியாகத்துக்குத் தங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை” என்றான்.

அதையே மனதில் ஏற்று குரு தேக் பகதூர் முகலாய ராஜ்யத்தின் தலைநகரை நோக்கிப் பயணமாகிக் கைதாகி நவ 11, 1675 அன்று பலிதானமானார்.

ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால், துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம், அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், குருவின் அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்குத் தப்பிச் சென்றார். Read the rest of this entry

Advertisements

உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!

-மு.ஸ்ரீனிவாஸன்

குரு தேக் பகதூர்

 

குரு தேக் பகதூர்

(பிறப்பு: 1621, ஏப். 1 – பலிதானம்: 1675, நவ. 11)

சீக்கியர்களின் ஒன்பதாவது குரு

.

தீவிர சமயவாதியாக இருந்த மொகாலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக் கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர்.

இவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ஆன்ம பலத்தின் பெருமையை உலக்கு உணர்த்திய ஒப்பற்ற மகான் இவர்.

கி.பி.1621-ஆம் ஆண்டு, ஏப். 1-ல்  சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர்கோவிந்தின் கடைசிப் புதல்வராக அம்ருதசரசில் தேக் பகதூர் பிறந்தார்.  ‘தேக் பகதூர்’ என்றால் நலிந்தவரின் ஊன்றுகோல் அல்லது நண்பன் என்று பொருள்படும்.

ஹர் கோவிந்தின் மூத்த மகன் பாபா குர்திதா அவருக்கு முன்னாலேயே இறந்து விட்டபடியால், குர்திதாவின் மகனான ஹர்ராயை அடுத்த குருவாக நியமித்தார் குரு. ஆனால் அவரும் தனது முப்பதாவது வயதில் இறக்கவே, அவரது ஐந்து வயது மகன் ஹர்கிஷன் அடுத்த குரு ஆனார். ஆனால் குரு ஹர்கிஷன் எட்டு வயதில் இறக்கவே,  அவருக்கு அடுத்த ஒன்பதாவது குரு ஆனார் தேக் பகதூர். இவர் ஹர்கிஷனுடைய தாத்தாவின் இளைய சகோதரர் ஆவார்.

அப்போது நடந்த ஒரு சுவையான நிகழ்ச்சியில் தேக் பகதூர் கண்டுபிடிக்கப்பட்டு ஒன்பதாவது குருவானார். மகன்ஷா என்ற பஞ்சாபி வணிகர் ஒரு சீக்கியர். கடலில் அவரது சரக்குக் கப்பல் முழ்கும் அபாயத்தில் இருந்தது. அப்போது குருவை வேண்டி, புயலிலிருது தப்பிக் கப்பல் கரை வந்து சேர்ந்தால். குருவுக்கு ஐநூறு பொன் மோகராக்கனை காணிக்கையாகச் செலுத்துவதாக நேர்ந்து கொண்டார், அவர்.

கப்பலும் குருவருளால் கரை சேர்ந்தது. குருவைக்  காண பஞ்சாப் வந்து சேர்ந்தபோது ஹர் கிஷனது மரணச் செய்தியையும் அடுத்த குரு பக்கலா கிராமத்தில் இருக்கிறார் என்றும் கேள்விப்பட்டார். அந்த வணிகர். அங்கே பலர் தாங்களே குரு என்று ஏழை எளியவர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு, உண்மையான குருவைக்  கண்டு பிடிக்க ஒரு வழியைக்  கையாண்டார்.

குருவெனக் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு சாதுவுக்கும் ஒரு மோகரா (பொன் நாணயம்) கொடுத்தார். யாரும் மீதம் 449 மோகராக்களைக் கேட்கவில்லை. வேறு யாராவது பாபா உண்டா என்று தேடிய போது தியானத்திலேயே பொழுதைக் கழிக்கும் தேக் பகதூரிடம் வந்து சேர்ந்தார். அவருக்கும் ஒரு தங்க மோகராவைக் கொடுத்தார்.

டெக் பகதூர் புன்சிரிப்புடன் “நேர்ந்து கொண்ட காணிக்கை ஐநூறு மோகராக்களல்லவா?” என்று கேட்டார். மகன்ஷா மிகுந்த பக்தியோடும் மகிழ்ச்சியோடும் தேக் பகதூரின் பாதங்களைப் பற்றிக் கொண்டார். பிறகு பாக்கித்  தொகையைக் கொடுத்துவிட்டு மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டு “குரு லடோ ரே” (குருவை கண்டு பிடித்து விட்டேன்) என்று பலமுறை உரக்கக் கூவினார். உடனே ஊர் கூடிவிட்டது.

அனைவரும் குருவின் பாதங்களில் விழுந்து வணங்கி பின் அவரை குருபீடத்தில் அமர்த்தினார்கள். அவரது தந்தை குரு ஹர்கோவிந்த் இறந்தபோது, தேக் பகதூரின் வயது 23. தந்தை விருப்பப்படி குகாரி என்ற பெண்ணை மணந்தார்.

ஹர்கோவிந்தின் ஆணையை ஏற்று தன் தாய் நான்கியோடும் மனைவியோடும் பத்தொன்பதாண்டுகள் பக்காலாவில் அமைதியாக தியானம் ஜபம், தவத்தில் ஈடுபட்டு 1664-ல் தனது 42-வது வயதில் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக ஆனார். பதினொரு ஆண்டுகள் ஒப்பற்ற குருவாக விளங்கினார்.

1675-ஆம் ஆண்டு ஔரங்கசீபின் கொடுமையை எதிர்த்துத் தன் உயிரையே மக்களுக்காகத் தியாகம் செய்தார். அவரது வாழ்க்கை ஒரு வீரக் கதை. ஆனால் நம் நெஞ்சை நிறைக்கும் சோகக் கதையும் கூட.

சீக்கியர்களுக்கு குருநானக்கிலிருந்து குரு கோவிந்த சிம்மன் வரை பத்து குருக்கள், ஐந்து வயதில் குருவாகி, எட்டு வயதில் மறைந்த குரு ஹர்கிஷனைத் தவிர, பிற குருக்களின் சேவை மகத்தானது.

ஜாதி மத பேதமற்ற தெய்வத் தேடலை லட்சியமாகக் கொண்ட ஒரு மதத்தை ஸ்தாபித்தார் குரு நானக். குரு அங்கத் ‘குருமுகி’ லிபியை ஆக்கியவர். குரு அமர்தாஸ் பொது உணவுக் கூடத்தை அமைத்தார். குரு ராமதாஸ் அம்ருதசரஸ் குளத்தை வெட்டினார். குரு அர்ஜுன் தேவ் ‘ஆதி கிரந்தத்தை’த் தொகுத்தார். குரு ஹர்கோவிந்த் சாதுக்களைப் போர்வீரர்களாக்கினார். குரு தேக் பகதூர் தர்மத்தைக் காக்கக் தன் உயிரையே தியாகம் செய்தார். குரு கோவிந்த சிம்மன் ‘கால்சா’வைத் துவக்கி, மக்களைத் தெய்வ பக்தர்களாகவும், தேசத்திற்காக ஒரு நொடியில் தங்கள் உயிரைக் கொடுக்கச் சித்தமான வீரர்களாகவும் செய்தார்.

குருவான உடன் முதற்காரியமாக தேக் பகதூர்  ஆற்றிய பணி, கிரத்பூருக்கு வெளியில் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் கலூர் ராஜா அளித்த ஒரு பரந்த நிலத்தில் அனந்தப்பூர் என்ற புதிய நகரத்தை உருவாக்கியது. குரு ஆற்றிய மற்றொரு பெருந்தொண்டு பஞ்சாபிலுள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களிடையே மதஒற்றுமை, சமுதாய நம்பிக்கை முதலியவற்றைப் பரப்பியதாகும்.

இவர் சென்ற இடமெல்லாம் கிணறுகளும் குளங்களும் வெட்டச் செய்தார். வறியவர் பசி தீர்த்திடப் பொது இலவச அன்னதானக் கூடங்கள் (லங்கர்) திறந்து வைத்தார். பிறகு தில்லி, குருக்ஷேத்திரம், ஆக்ரா, பிரயாகை, காசி, கயா, பாட்னா சென்று தங்கினார்.

பாட்னாவில் தனக்கு மகன் பிறந்ததும் அங்கு சென்று சில காலம் தங்கினார். பிறகு அனந்தப்பூருக்குத் திரும்பினார். பாட்னாவிலிருந்து குடும்பத்தையும் அனந்தப்பூருக்கு அழைத்து வந்து மகன் கோவிந்தராயை நன்கு  வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.

பஞ்சாபிலும் பிற இடங்களிலும் மொகலாயர் கொடுமையும், பலவந்த மத மாற்றங்களும் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தன. குறிப்பாக  காஷ்மீரில் ஹிந்துக்களின் வாழ்க்கை நரகமாகியது, ஹிந்துக் கோவில்கள் தகர்க்கப்பட்டன; அங்கெல்லாம் மசூதிகள் எழுந்தன. அந்தணர்கள் மதம் மாற்றப்பட்டார்கள் காஷ்மீர ஆளுநர் ஷெர்கான் மதமாற்றம் செய்த இந்துக்களின் பூணூல் மட்டும் ஒன்றே கால் மாண்டு எடை அளவு இருந்ததாம்.

காஷ்மீரை முஸ்லிம் நாடாக மாற்றிவிட்டால், இந்தியாவின் பிற பாகங்களும் எளிதில் மாறிவிடும் என்று நினைத்தான் ஔரங்கசீப், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் சீற்றமுற்ற அவன் மதம் மாறுவதற்கு ஆறு மாதத் தவணையளித்தான். இல்லையெனில் தண்டனை.

இந்தச் செய்தியை எடுத்துக்கொண்டு காஷ்மீர் பிராமணப் பிரமுகர்கள் குரு தேக் பகதூரிடம் வந்து முறையிட்டனர். அவர்களது துன்பத்தைக் கேட்டு குருவின் உள்ளம் உருகியது.

அப்போது கோவிந்தராய் நுழைந்து தந்தையின் கவலைக்கு காரணத்தை வினவினான். காஷ்மீர் இந்துக்களுடைய துன்பத்தைக் குரு எடுத்துக் கூறி,  அவர்களுடைய துன்பம் நீங்க ஒரே வழி ஒரு மகாத்மா அவர்களுக்காக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்று முடித்தார்.

அப்போது வருங்கால கோவிந்த சிம்மன் “குருவே பிறர் துன்பம் துடைக்க உயிர்த் தியாகம் செய்யத் தங்களைவிடப் பூரண மனிதன் யாருளர்?” என்று கேட்டான். குருவும் தந்தையுமான தேக் பகதூர் முகம் மலர்ந்து கோவிந்த ராயின் சொல்லைத் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு உயிரை அர்பணிக்கச் சித்தமானார்.

மகனிடம் சொன்னார்: “என் உயிர்த் தியாகத்திற்கு பின் நீ ஆன்மிக நெறியைப் போதிப்பாய். அத்துடன் நாடு உயிர்த்தெழ வாள் பிடித்துப்  போரும் செய்வாய் என்பதில் எனக்கு ஐயமில்லை”.

பிறகு தாயிடமும் மனையிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு,  பாய் மட்டி தாஸ் பாய் குருதித்த, மற்றும் மூன்று சீடர்களோடு தில்லிக்குப்  புறப்பட்டார். குரு தேக்பகதூர் இஸலாமைத் தழுவினால், தாங்கள் அனைவரும் அவரை பின்பற்றுவோம். என்று காஷ்மீரப் பிராமணர்களை ஔரங்கசீபிடம்  தெரிவிக்குமாறு  சொன்னார்.

அதைக் கேட்டதும் ஔரங்கசீப் மகிழ்ந்தான். குரு தில்லிக்கு வந்ததும், அவரைக் கைது செய்து சிறையில் இட்டான். பிறகு குருவுக்கு பட்டமும் பதவியும் வேண்டியதெல்லாம் தருவதாகவும் சொல்லிப் பார்த்தான். குரு எதற்கும் மசியவில்லை, பிறகு அச்சமூட்டிப் பார்த்தான்.

பாய் மட்டி தாஸை ரம்பத்தால் இருபாதிகளாக அறுக்கச்  செய்தான்;  பாய் சதிதாஸை பஞ்சில் சுற்றி எரிக்கச் செய்தான்;  குரு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்- முகத்தில் சலனமில்லாமல். அவரையே இரும்புக் கூண்டில் அடைத்து சித்ரவதை செய்தான் பாதுஷா. குரு மனங்கலங்கவில்லை.

சிறையிலிருந்தே ஒரு தேங்காய், ஐந்து பைசாக்களை மந்திரம் ஓதி, கோவிந்த சிம்மனுக்கு அனுப்பினார். இச் சடங்கு அடுத்த குரு நியமனத்தை உறுதிப்படுத்தும் ஒன்று. இனி, குரு மனம் மாற மாட்டார் என்பதை உணர்ந்த ஔரங்கசீப், அவருக்கு மரண தண்டனை விதித்தான்.

அப்போது அனந்தப்பூரிரிலிருந்து வந்த தூதன் பாய் ஜேத்தாவிடம் குரு தேக் பகதூர் சொன்னார்: “என் இறுதி நேரம் வந்து விட்டது. என் தலை துண்டிக்கப்படும்போது அருகிலேயே இரு. என் தலை என் மடியிலே விழும் எதற்கும் அஞ்சாமல் அதை எடுத்துக் கொண்டு அனந்தப்பூருக்குப் போ அங்கே என் மகன் அதனை தகனம் செய்வான்”.

இரும்புக் கூண்டிலிருந்து வெளியே வந்த குரு குளித்து விட்டு அங்கிருந்த ஆலமரத்தடியில் ஜபம் செய்யத் தொடங்கினார். சமாதி நிலையில் அவர் தலையைத் தாழ்த்திய போது கொலையாளி ஆரம்ஷா அவரது தலையைத் துண்டித்தான். இக்கொடுமையைப்  பார்க்க வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. துண்டிக்கப்பட்ட தலை பாய் ஜேத்தாவின் மடியில் விழுந்தது.

அப்போது அதுவரை தில்லி கண்டிராத ஒரு புழுதிப் புயல் எழுந்து எங்கும் கவிந்தது. பாய் ஜேத்தா யார் கண்ணிலும் படாமல் அனந்தப்பூரை நோக்கி விரைந்தான்.

தலையற்ற குருவின் சடலத்தை ஓர் எளிய சீக்கிய வண்டிக்காரன் பஞ்சும் தானியங்களும் ஏற்றப்பட்டிருந்த வண்டியில் மறைத்துக் கொண்டு தில்லியிலிருந்து வெளியேறி, ரய்சினாமேட்டில் தங்கள் குடிசை ஒன்றில் வைத்து யாரும் சந்தேகப்படாமல் இருக்கும் பொருட்டுத் தங்கள் குடிசையோடு கொளுத்திவிட்டான்.

மறுநாள் காலை குருவின் அஸ்தியை ஒரு செப்புத் குடத்திலிட்டு, அங்கேயே புதைத்துவிட்டு, கோவிந்த சிம்மனிடம் சென்று தெரிவித்தான். அந்த இடத்தில் தான் இன்று குருத்வாரா ராக்கப்கஞ்ஜ் நிற்கிறது.

குரு தேக் பகதூர் கொலை செய்யப்பட்ட தினம்:  மாசி மாதம், சுக்லபட்ச பஞ்சமி திதி, வியாழக்கிழமை, பிற்பகல் (நவம்பர் 11, 1675).  அப்போது அவருக்கு வயது 53.

தெய்வ சிந்தனையைத் தவிர வேறெதற்கும் இதயத்தில் இடங்கொடாத உத்தம ஞானி தேக் பகதூர். இறைவனைப் பாடிய இன்னிசைக் கவிஞர். இறைவன் நம்முள்ளேயே இருக்கிறான் அவனை அங்கேயே காணலாம் என்று ஒரு பாடல்:

“உள்ளும் புறமும் உறையும் அவனை
எங்கே தேடிச் செல்லுகின்றாய்?
எள்ளுக்குள்ளே எண்ணெயைப் போல்
மலருக்குள்ளே மணத்தைப் போல்
இதயத்துள்ளே இருப்பவனை
எங்கே தேடிச் செல்லுகின்றாய்?
நானக் அருளிய நல்மொழியை
நன்றாய் அறிந்து நலம் பெறுவாய்!”

உலகைப் படைத்துக் காக்கும் இறைவனது வழிகளை நாம் முற்றிலுமாகப் புரிந்து கொள்ள முடியாது. நாம் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும் அவனது பதமலர் பற்றி அவனிடம் பூரண நம்பிக்கையுடன் வாழ்வதே.

“கடவுளின் வழிகளைக் கண்டவர் யார்?
தனித்து வாழும் தவசியும் ஞானியும்
தரணியில் எவரும் அறியார் அவன் செயல்
பிரபுவாய் ஆக்குவான் பிச்சைக்காரனை
அரசனை ஆண்டியாய் ஆக்குவான் கணத்துள்
அனைத்தும் அவனது வழிகள் அன்றோ,
உலகைப் படைத்த உயர்ந்தவன் அவனே!
என்றும் அதனைக் காப்பதும் அவனே
ஆயிரமாயிரம் அளவிட முடியா
வடிவமும் பற்பல வண்ணமும் உடையான்
ஆயினும் அனைத்துக்கும் அப்பால் நிற்பவன்
மாயமும் மயக்கமும் தந்ததும் அவனே
மயக்கம் தெளிந்தவன் மலரடி பற்றி
மாண்புற வாழென நானக் சொல்கிறான்”

இந்த உலகம் ஒரு கணவு ஒரு மணல் வீடு, நொடிப்பொழுதில் சரிந்து விழும். இறைவனின் திருப்பெயர் ஒன்றே சதம் என்கிறார். தேக் பகதூர்.

“உண்மையை உணர்வாய் உலகொரு கனவே
விழித்தெழு விடுபடு,
மணல் வீடு கட்டி வாழ்வது எப்படி?
நாலே நாட்களில் நசித்து வீழந்திடும்.
இன்பங்கள் உலகினில் இத்தகையனவே
இவற்றில் வீழும் இழிநிலை வேண்டாம்.
இறைவன் நாமத்தை இதயத்தில் இருத்தி
இடைறாது ஜபித்து ஏற்றம் பெறுவாய்.
முயன்று முன்னோர் கண்ட வழி இது.
நானக் காட்டும் நல்வழி இதுவே!”

(குறிப்பு: பாடல்கள் இயற்றிய சீக்கிய குருக்கள் யாராயினும் நானக்கின் பெயரிலேயே பாடினார்கள்).

மரணத்தைச் சந்திக்கும் முன் குரு தேக் பகதூர் பாடிய இறுதிப்பாடல்:

“இறைவன் நாமத்துக் கிணையாக
எதுவும் உண்டோ இப்புவியில்?
துயரமும் குறைகளும் எல்லாமே
தொலைந்து மறையும் அச்சொல்லால்!
இறைவன் தரிசனம் கிட்டிவிடும்
இதனினும் இன்பம் வேறுள்ளதோ?

பத்தாவது குருவும் அவரது மகனுமான குரு கோவிந்த சிம்மன் பாடிய பாடல்:

” உடலெனும் சட்டியை ஔரங்கசீப்
பாதுஷாவின் தலையில் உடைத்துவிட்டு,
அவர் பரலோகம் சென்றார்.
தேக் பகதூரின் தியாகத்திற்கு இணையாக
உலகில் வேறெவரும் இல்லை.
குருவின் மரணத்திற்காக-
மண்ணுலகில் ஓலக்குரல், அழுகை,
ஆனால் விண்ணுலகிலோ பேருவகை, பெருமகிழ்ச்சி”.

.

குறிப்பு:

திரு. மு.ஸ்ரீநிவாஸன், எழுத்தாளர்.

பாடல்களின் தமிழ் வடிவம் : மு.ஸ்ரீனிவாஸன்

நன்றி:

இக்கட்டுரை தினமலர் இணையதளத்திலிருந்து மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காண்க:

தர்மம் காக்க தலையைக் கொடுத்தவர்

சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்

-வ.மு.முரளி

குரு கோவிந்த சிம்மன்

குரு கோவிந்த சிம்மன் 

பிறப்பு: 1666, டிச. 22  – மறைவு: 1708, அக். 7)

அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஹிந்து தர்மத்தைக் காக்கும் உறைவாளாக உருவானதே சீக்கியம் என்னும் சம்பிரதாயம். பின்னாளில் இது சீக்கியம் என்னும் தனி மதமாக மாறியது. அந்த சீக்கியத்தை போர்க் குணமுள்ளதாக அமைத்தவர் குரு கோவிந்த சிம்மன் (சிங்).

குரு கோவிந்த சிம்மன், சீக்கிய மதத்தினரின் குருநாதர்களில் பத்தாவது குருவும் அவர்களது இறுதி மனித குருவுமாவார். இவரே வைராக்கியம் மிகுந்த சீக்கிய மதக் கோட்பாடுக்களுக்கு வித்திட்டவர்.

முகலாயம் மன்னர் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூரின் மகனான இவர்,  சீக்கியத்தின் பல அம்சங்களை உருவாக்கியவர்.

பிறப்பும் வளர்ப்பும்:

இந்தியாவின் பீகார் மாநிலம்,  பாட்னாவில் பிறந்தவர். இவரது அன்னை மாதா குஜ்ரி.  தந்தை குரு தேக் பகதூர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சீக்கிய மதத்தைப் பரப்பச் சென்றிருந்த காலத்தில் கோவிந்த சிங் பிறந்தார்.

தனது தாய்,  பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த கோவிந்த சிங், சிறுவயதிலேயே தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார்.

சிறுவயதிலேயே இவர் அரபி, பார்ஸி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். குதிரைச் சவாரி, பலவகைத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் முதலியவற்றைக் கையாள்வதிலும் சிறப்புப் பெற்று விளங்கினார்.

ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியின் நிர்வாகியான நவாப் யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்குமாறு சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, ‘இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள்’ என்று கூறினார்.

கோவிந்தனின் துணிச்சல் மிகுந்த செயல்களால் அச்சமடைந்த அவனது அன்னை,  “வெளியாட்களின் ஆட்சியில் நாம் இருப்பது தெரியாதா? இஸ்லாம்  மதத்தினர் பாதிக்கப்பட்டது மன்னருக்குத் தெரிந்தால் நமக்கு அழிவு காலம் வரும்” என்று வருந்தினார்.

இதைக் கேட்ட கோவிந்த சிங் கோபம் கொண்டார். தாய்,  பாட்டியின் சமாதான வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல், உறுதியோடு  ‘இந்த நாட்டில் இனியும் இருக்க மாட்டேன். எனது தந்தையின் நாட்டுக்கு செல்வேன்’ என்று கூறி, பஞ்சாப் சென்றார்.

தந்தையின் பரித்தியாகம்:

இவரது தந்தையான குரு தேக் பகதூர் முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். தில்லியில் சிறியிலிருந்த தனது தந்தை குருதேக் பகதூருக்கு உற்சாகமூட்டும்படி கடிதங்கள் எழுதினார் கோவிந்த் சிங்.

தமது மகன் மீது நம்பிக்கை கொண்ட தந்தை,  ஒரு இளநீரையும் சில நாணயங்களையும்- தனது குரு சக்தியை மகனுக்கு தருவதன் சங்கல்பமாக, அடையாளமாக – நம்பிக்கைக்குரிய சீடரிடம் கொடுத்து அனுப்பினார்.

அதன்பிறகு, பொ.யு.பி. 1675 முதல் இறப்பு வரை சீக்கிய அம் மக்களின் குருவாகவும் ஆட்சியாளராகவும் இருந்தார். மொகாலயப் பேரரசர் ஔரங்கசீப்புடன்  மோதியதால்,  தர்மம் காக்கும்  போரில் தனது தந்தை, தாய், நான்கு மகன்களை இழந்தார்.

இவரது தந்தையும், ஒன்பதாவது சீக்கிய குருவுமான குருதேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால்,  துண்டு துண்டாக வெட்டப்பட்டு,  குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று அவர் தனது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம் அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது.

ஒரு சீக்கியர், அவரது அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்கு தப்பிச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் குரு கோவிந்த சிங்,  சீக்கியர்களை வலிமையுடையவர்களாக மாற்ற பல அனுஷ்டானங்களி உருவாக்கினார்.

1685 , ஏப்ரல் மாதம் இவர் சிர்மௌர் மாவட்டத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். 1677- ஆம் ஆண்டில் ஜூடோஜியையும், 1684- ஆம் ஆண்டில் சுந்தரிஜியய் இரண்டாவதாகவும், அதன் பின்னர் சாஹிப் கௌர் என்பவரை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார்.

சீக்கியத்தின் வளர்ச்சி:

1684 -ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில்  ‘சாண்டி தீ வார்’ எனும் நூலினை எழுதிய கோவிந்த சிங் 1685-ஆம் ஆண்டில்  ‘பாண்டா சாஹிப்’ எனும் குருத்வாராவை சீக்கியர் வழிபட்டுத் தலம்)  நிறுவினார். அங்கு மத போதனை, ஆயுதப் பயிற்சியுடன்,  இந்தி, பார்ஸி, பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார்.

ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்புக்கான இடங்களையும் நிறுவினார்.

சீக்கியர்களை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ளும் வலிமையுடைய சமயத்தினராக மாற்றினார். தனது இயக்கத்திற்கு  ‘கால்ஸா’ (தூய்மை) என்று பெயர் சூட்டினார்.  இதில் சேருபவரை ‘அகாலி’ என்று அழைத்தார். அகாலி என்ற சொல்லுக்கு அமரத்தன்மை வாய்ந்தவன் என்று பொருள்.

கடவுளின் சார்புள்வானாகப் பிறந்து பூமியில் அறத்தினை நிலைநாட்டுவதே முதன்மையான நோக்கம் என்று கூறினார். பாரதத்தின் பாரம்பரியம் மிக்க ஹிந்து தர்மத்தைக் காக்கும் வாளாகவும் கேடயமாகவும் சீக்கியர்கள் திக்ழ வேண்டும் என்றார் குரு கோவிந்த சிங்.

புனித நூலே குரு:

சீக்கிய குரு பதவிக்காக அவ்வப்போது ஏற்பட்ட மதப் பூசல்களைத் தடுப்பதற்காக ஒற்றை குரு முறையை குருகோவிந்த சிங் மாற்றினார். தனக்குப் பின் சீக்கிய மதப் புனித நூலான குரு கிரந்த சாஹிபே குரு என்று அறிவித்தார்.

குரு கிரந்த சாஹிபின் கடைசிப்பகுதியான ‘தஸ’ எனும் பகுதியை கோவிந்தரே எழுதினார். ராமாயணம், மகாபாரதம், கீதை  ஆகியவற்றின் சில பகுதிகளையும், சண்டி சரிதர், பகவதி தீவார்,  ராம் அவதார், துர்க ஸப்தஸதி ஆகிய இந்து சமய நூல்களையும் பஞ்சாபி மொழிக்கு மொழிபெயர்த்தார்.

1698-ஆம் ஆண்டில், ‘பச்சிட்டார் நாடக்’ எனும் பெயரில் சுயசரிதத்தை எழுதிய இவர் 1699-ல் ‘கால்சா’ அமைப்பை நிறுவினார்.

சீக்கியத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குரு கோவிந்த சிங் சில முக்கிய கோட்பாடுகளை வகுத்தார். அதன்படி ஒவ்வொரு சீக்கிய ஆணும் கடவுளின் பிள்ளைகள் என்று உணர்வதற்காக தலைப்பாகையும் ஐந்து ‘க’ வை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்தி மொழியில்  ‘பஞ்ச்’ என்றால் ஐந்து. க- எனும் எழுத்து ஐந்து ககர எழுத்துக்களை முதன்மையாகக் கொண்ட செற்களைக் குறிக்கின்றது.

  • கேஸம் (நீண்ட தலை முடி, தாடி): கடவுள் தன்னை எப்படிப் படைத்தாரோ அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டு. அதில் மாறுதல் செய்யக் கூடாது.
  • கங்கம் (சீப்பு): ஒருவரது மனதையும் , ஆன்மாவையும் தூய்மையாக வைத்திருப்பதற்கு அடையாளம் சீப்பு.
  • கிர்பான் (குத்துவாள்): தன்னையும் மக்களையும் அன்னியர்களிட்மிருந்து பாதுகாக்கும் ஆயுதம்.
  • கச் (அரைக்கால் சட்டை): ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான ஆடை.
  • கர (எஃகு காப்பு): பார்க்கும் போதெல்லாம்  நல்ல செயல்களைத் தூண்ட, வலக்கரத்தில் அணிய வேண்டும்.

-இந்த ஐந்தும் முறையே,  தியாகம், தூய்மை, ஆன்ம சுத்தி, புலனடக்கம், நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்றும் கூறினார்.

கட்டுப்பாடுகளால் காத்தவர்:

சீகிய மத்தினர் இடைக்காலத்தில் ஒருவருக்கொருவர் ஜாதி ரீதியாகப் பிரிந்து பூசலிட்டு வந்ததை குரு கோவிந்தர் மாற்றினார். ‘கால்ஸா’ இயக்கத்தில் சேரும் அனைவரும்  மது அருந்துதல், புகை பிடித்தல் கூடாது;  நாள் தோறும் ஐந்து முறை வழிபடுதல் அவசியம்;  வருமானத்தின் பத்தில் ஒரு பங்கினை தானம் செய்ய வேண்டும்; வட்டி வாங்கக் கூடாது ஆகியவற்றை சீக்கிய மக்களிடையே கட்டாயமாக்கினார்.

சீக்கியர்கள் அனைவரும் சிங்கம் போன்ற பலமும், சத்திரிய  சக்தியும்,  சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார்.

சீகியர்களிடையே வழக்கத்திலிருந்த  ‘சரண்பாஹுல்’ எனும் ஞானஸ்நானச்  சடங்கினை மாற்றி  ‘அம்ருத்பாஹீல்’ எனும் புதிய முறையைக் கொண்டுவந்தார். இந்த சடங்கினைச் செய்த பின்னரே அவர்கள் சீக்கியர்களாக மாறுவர் என்று சட்டங்கள் இயற்றினார்.

இச்சடங்கு முடித்த ஆண்கள்,  தன் பெயரின் பின்னால்  ‘சிங்’ (சிங்கம்) என்றும், பெண்கள்  ‘கெளர்’ (பெண் சிங்கம்) என்றும்  இணைத்துக்கொள்ள வேண்டுமென்பதை கட்டாயமாக்கினார்.

குரு கோவிந்த சிங் தனது வாழ்வு முழுவதும் அன்னிய ஆட்சியின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார். தனது  குடும்பமே அழிந்தபோதும், அவர் நிலைகுலையவில்லை. தர்மம் காக்கும் போரில் அவர் தனியொரு வீரனாக களத்தில் இருந்தார். அதன் காரணமாக முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மதமாற்ற முயற்சிகளுக்கு பெரும் தடையாகவும் இருந்தார்.

தனது வாழ்நாள் முழுவதும் தர்மம் காக்கப் போரிட்ட இந்த மகத்தான மாவீரர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நான்டெட்-கில்  அக்டோபர் 7, 1708-இல் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

தனது வாழ்நாள் முற்றுப்பெறும் தறுவாயில், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப்பையே சீக்கிய மதத்தின் வாழும் குருவாக்கினார்.

இன்றும் உலகம் முழுவதும் சீக்கியர்கள்,  குரு கோவிந்த சிம்மனின் நினைவுகளுடன், குரு கிரந்த சாஹிப் மீதான பக்திப் பெருக்குடன், பாரதப் பாரம்பரியத்தின் அறுபடாத கண்ணிகளாக வாழ்கிறார்கள்.

நன்றி:

கட்டுரைக்கான ஆதாரம்: விக்கிபீடியா

காண்க:

1. தந்தையின் தியாகம், தனயனின் தீரம்

2. குரு கோவிந்தர்- மகாகவி பாரதியின் கவிதை

தர்மம் காக்க தலையைக் கொடுத்தவர்

-முத்துவிஜயன்

குரு தேக்பகதூர்

குரு தேக்பகதூர்

(பிறப்பு: 1621 , ஏப். 1 -பலிதானம்: 1675, நவ. 11 )

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேக்பகதூர். 1621 , ஏப்ரல் 1-ல் பிறந்தவர். குரு ஹர்கிஷனுக்கு அடுத்து சீக்கியர்களின் தலைவரானவர்.

இஸ்லாமிய  ஆட்சியாளர்களான முகலாயர்கள் இந்துக்களுக்கு அளித்த கொடுமைகளை எதிர்க்க உருவான சமயம் சீக்கியம். இதனை போர்ப்படையாக மாற்றிய குரு கோவிந்த சிம்மனின் தந்தை தேக் பகதூர்.  இவரது பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தம் எனப்படும் ஸ்ரீ குருகிரந்தத்தின் இறுதிப்பகுதியில் உள்ளன.

காஷ்மீரில் பண்டிட்களை  (பிராமணர்கள்) முஸ்லிம்களாக மாற்ற அட்டூழியம் புரிந்த ஔரங்கசீப்பின் படைகளை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட குரு தேக் பகதூர்,  கொடூரமான  சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார்.

அவரை முஸ்லிமாக மாற்றிவிட்டால், இதர மக்களை மதம் மாற்றுவது எளிது என்று கருதிய ஔரங்கசீப், பல சித்ரவதைகளைச் செய்தார். ஆயினும் “தலையைத் தான் இழப்பேன்; தர்மத்தை அல்ல” என்று முழங்கி, தில்லி, சாந்தினி சௌக்கில்,  வீரமரணத்தைத் (11.11.1675)  தழுவினார், சீக்கியர்களின் ஒன்பதாவது குரு.

அவரது தலைவீழ்த்தப்பட்டாலும்,ஹிந்து தர்மம் குரு கோவிந்த சிம்மனால் காக்கப்பட்டது. ஹிந்து தர்மம் காக்க, மத மாற்றத்தை எதிர்த்து உயிர்நீத்த குரு தேக்பகதூரின் நினைவுகள் என்றும் வாழும்.

 

 

%d bloggers like this: