Category Archives: சமதர்மவாதி

வரலாற்றாசிரியராக வீர சாவர்க்கர்

-அரவிந்தன் நீலகண்டன்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர்

வீர சாவர்க்கர் 

(பிறப்பு: 1883, மே 28-  மறைவு:1966, பிப். 26)

 

வீர சாவர்க்கர் இந்திய விடுதலை போராட்டத்தின் முக்கிய புரட்சியாளர். மிகப்பெரிய தியாகங்களை தேசத்துக்காக ஏற்றவர். சமூக புரட்சியாளர். அவரது வாழ்வனைத்தும் தேச நலனுக்கான போராட்டமாகவே திகழ்ந்தது. வரலாற்றை உருவாக்கிய அப்பெரும் ஆளுமை தேசத்தின் சரித்திரத்தை மீட்டெடுத்து எழுதுவதிலும் அதே அக்கறையைக் காட்டினார்.

அன்றைய காலகட்டத்தில் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் உருவாக்கியதே நம் தேசத்தின் வரலாறாக அறியப்பட்டது; பாரதத்தின் வரலாறு காலனிய ஆதிக்கத்தின் தேவைக்கேற்ப எழுதப்பட்டு வந்தது.

இந்நிலையில் விடுதலைக்காக போராடும் ஒரு தேசத்தின் கூர்நுட்பம் கொண்டதோர் வரலாற்றாசிரியனாக பாரத வரலாற்றை அணுகிய பெருமை வீர சாவர்க்கருக்கு உண்டு.

வரலாற்றை எழுதினார்: வரலாற்றை மாற்றினார்

பாரதத்தின் முதல் விடுதலை வேள்வியான 1857 எழுச்சியை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்களும் பாரதத்தின் அன்றைய வரலாற்றறிஞர்கள் பலரும் “சிப்பாய் கலக”மென்றே எழுதி வந்தனர். அதனை “விடுதலை எழுச்சி” என மிக விரிவான ஆதாரங்களுடன் ஒரு நூலாக முதன் முதலில் எழுதியவர் வீர சாவர்க்கரே. இந்நூல் 1907 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலை எழுதியதன் குறிக்கோள் குறித்து வீர சாவர்க்கர் எழுதுகிறார்:

“….இந்த நூலை எழுதியதன் நோக்கம் என்ன? வரலாற்றின் உண்மை குறித்த உந்துதலை மக்களுக்கு உருவாக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தேசமளாவிய பெரிய புரட்சி யுத்தத்தை அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகத் தொடங்க வேண்டும்…..”

தனது நூலை வெளியிட 1907 ஆம் ஆண்டை வீர சாவர்க்கர் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார். ஏனென்றால் அது முதல் விடுதலை வேள்வியின் ஐம்பதாம் ஆண்டு நினைவு விழா கொண்டாடப் பட்ட ஆண்டு ஆகும். இந்திய வரலாறு குறித்த மிகப்புதிய பார்வையை, ஒரு பெரும் பிரச்சாரத்துக்கு எதிராக, ஆராய்ச்சி நூலாக பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 1907 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்டார். இதற்காக அவர் எத்தனை ஆண்டுகள் முன்னதாக அந்த ஆராய்ச்சியையும் திட்டமிடுதலையும் தொடங்கியிருக்க வேண்டுமென எண்ணிப்பார்த்தால் வீர சாவர்க்கரின் மேதமையும், உழைப்பும் வியக்க வைக்கின்றன.

வீர சாவர்க்கர் வெறும் வரலாற்று ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல. தான் ஆராய்ந்தறிந்த தம் தேச வரலாற்றை தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கருவியாகவும் அவர் பயன்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது இந்திய இளைஞர்களை ராணுவத்தில் பெரிய அளவில் இணையுமாறு அவர் பிரச்சாரம் செய்தார். இப்பிரச்சாரத்தில் அவர் வெளிப்படையாகவே கூறினார்:

“….1857ல் நமது முதல் விடுதலைப் போர் நடைபெற்ற காலத்திலிருந்தே பிரிட்டிஷார் இராணுவத்தினை அரசியல் நிகழ்வுகளிலிருந்து விலக்கி வைத்துள்ளனர். இதனை மாற்ற இது நல்ல வாய்ப்பாகும். இதில் நாம் வெற்றி பெற்றால் விடுதலைக்கான போரில் நாம் வெற்றி அடைவோம்…..”

வீர சாவர்க்கரின் இந்த தீர்க்கமான பார்வை வரலாற்றையே மாற்றியமைத்தது என்பதை நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வார்த்தைகளின் மூலமாக அறிகிறோம்.

ஆஸாத் ஹிந்த் வானொலியில் ஆற்றிய உரையில் (ஜூன் 25, 1944) நேதாஜி கூறினார்:

“….சில தலைவர்கள் தவறான அரசியல் கற்பனைகளால் இந்திய ராணுவத்தில் இணைந்த வீரர்களை ‘கூலிப்படையினர்’ என அழைத்துக் கொண்டிருந்த போது வீர சாவர்க்கர் அச்சமின்றி இந்திய இளைஞர்களை ராணுவத்தில் இணைய அழைப்பு விடுத்து வருவது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இவ்வாறு இணைந்த வீரர்களே இந்திய தேசிய ராணுவத்துக்கு கிடைக்கும் பயிற்சி பெற்ற வீர இளைஞர்கள்……”

விடுதலைப் போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் இந்திய ராணுவத்தில் தேசபக்தியும் விடுதலை உணர்ச்சியும் அலையடித்தது பிரிட்டிஷார் இந்தியாவை விட்டகல ஒரு முக்கிய காரணமாகிற்று என்பது வரலாறு.

மீட்டெடுக்கப்பட்ட போராட்ட வரலாறு

cover1இந்தியாவின் வரலாறே அது மீண்டும் மீண்டும் அன்னிய படையெடுப்புகளுக்கு அடி பணிந்த வரலாறுதான் என்று அன்னிய ஆட்சியாளர்களும் அன்னிய மோகத்துக்கு ஆளான நம் வரலாற்றாசிரியர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். யூனியன் ஜாக் செங்கோட்டையில் இருந்து கீழிறங்கி விட்டது. இருந்தபோதும் நம் கல்வி நிறுவனங்களில் கண்ணுக்குத் தெரியாமல் அக்கொடியின் இருண்ட நிழல் தொடர்ந்து படர்ந்திருக்கிறது.

அந்த இருள் அகல பாரதத்தின் வரலாற்றை ஆழ்ந்து பயின்றவர் வீர சாவர்க்கர். அவர் எழுதிய “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் படிக்க வேண்டிய நூலாகும். தமிழர்களான நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும் அதில் உண்டு.தமிழக மன்னர்களின் வீரத்தை, அன்னியர் ஊடுருவிட இயலாத தென்னக பாரதத்தின் மறத்தை, முதன் முதலில் புகழ்ந்தெழுதி ஆவணப்படுத்திய வரலாற்றாசிரியர் வீர சாவர்க்கரே ஆவர்.சக்தி வாய்ந்த மொழியில் அவர் எழுதுகிறார்:

“….கிரேக்கர்களும் சகர்களும் ஹுணர்களும் வடக்கே அலை அலையாக படையெடுத்து வந்து தாக்கிய போதும் அவர்களால் நர்மதை நதிக்குத் தெற்கே காலடி வைக்க முடியவில்லை. அதுவும் தவிர கலிங்க சேர சோழ பாண்டிய அரசுகள் மிக வலுவான கடற்படையுடன் காத்திருந்தன. கடல் எல்லையில் அந்நிய படையெடுப்பு அபாயமே இல்லாமலிருந்தது…..”

நம் வீர வரலாறு குறித்துத் தமிழ் நெஞ்சம் பெருமிதத்தால் விம்முகிறது. இப்பெருமிதம் பொய்யான இனவாத கட்டுக்கதையால் உருவானதல்ல. ஆழமான வரலாற்று ஆராய்ச்சி அளிக்கும் சத்தியமான உன்னத உணர்ச்சி. சாணக்கியர் கூடல் என்னும் இடத்திலிருந்து வந்த காரணத்தால் கௌடில்யர் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும் என்கிற செய்தியையும் வீர சாவர்க்கர் தருகிறார். மட்டுமல்ல.

அலெக்ஸாண்டர் போன்ற ஒரு ஆதிக்க வெறி பிடித்த கொடியவனை ஐரோப்ப காலனிய வரலாற்றாசிரியர்கள் மகா அலெக்ஸாண்டர் என புகழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், வீர சாவர்க்கர் அக்கால வரலாற்றின் ஒவ்வோர் இழையாகத் தேடிச்சென்று சரித்திரத்தை நோக்குகிறார். காத்திரமான ஆதாரங்களின் அடிப்படையில் காலனிய மனநிலைக்கு எதிராக அவர் பின்னர் உணர்ச்சிகரமான பெருமுழுக்கம் செய்கிறார்.

எவ்வாறு அன்னிய ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக மாளவ-சூத்ரக குடியரசுகள் இணைந்தன; அவர்கள் எவ்வாறு சாதி-கலப்பு திருமணங்களை பெரிய அளவில் செய்து தம்மை ஒரு ஒன்றுபட்ட சமூகத்தினராக மாற்றி ஓரணியில் சேர்ந்தார்கள். எப்படி இந்த இணைந்த சமூகம் உருவாக்கிய ராணுவத்தைச் சேர்ந்த பாரதிய வீரனின் அம்பு அலெக்ஸாண்டரின் அந்திமக் காலத்தை விரைவாகக் கொண்டு வந்தது என்பதை ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார். இந்த வரலாற்று உண்மைகள் ஐரோப்பிய காலனிய வரலாற்று ஆசிரியர்களால் உணரப்பட்டவையே; எனினும், உரத்த குரலில் சொல்லப்படாதவை. வீர சாவர்க்கர் அவ்வுண்மைகளை உரக்கச் சொன்னார்.

வரலாற்றின் நேர்மையை அவரது உணர்ச்சிகர தேசபக்தி எவ்விதத்திலும் பாதித்துவிடக் கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் அதீத கவனம் இங்கு குறிப்பிடப்பட வேண்டியது. எடுத்துக்காட்டாக, சந்திரகுப்த மௌரியர் குறித்து வழங்கும் நாட்டுப்புறக் கதைகளை வீர சாவர்க்கர் ஒரு வரலாற்றாசிரியராகவும் சமூக ஆராய்ச்சியாளராகவும் எடை போடும் விதத்தைப் பார்க்கலாம்:

ஒருவனை அவனது பண்பை வைத்து எடை போடாமல், அவன் பிறந்த இனத்தின், குடும்பத்தின் பெருமை-சிறுமைகளை வைத்து மதிப்பிடுவது அனைத்து மானிட சமூகங்களிலும் காணப்படும் பொதுவான பலவீனம். குடும்ப மரபுகளைப் பற்றிய உயர்வு நவிற்சி கதைகள் காலப் போக்கில் நாடகங்களாகவும், கவிதைகளாகவும், புதினங்களாகவும், நாட்டுப்புற பாடல்களாகவும் விளம்பரப்_படுத்தப்பட்டு மக்களிடையே பரவின.  (விரிவஞ்சி இதை மேலும் விவரிக்காமல் விடுகிறோம்.)

ஆனால், மௌரிய குலத்தின் தோற்றத்தைக் குறித்த வரலாற்று உண்மையை வெளிப்படையாகக் கூறுகிறார் வீர சாவர்க்கர்:

“…..மூராவின் மகனே மௌரியன்! சந்திரகுப்தனை மௌரியன் என்று அழைக்க அதுவே சரியான காரணமாகும். தாய்வழிப்பிறப்பைப் பெருமையாக எண்ணிய சந்திரகுப்தன் தன் அரச குடும்பத்திற்கு மௌரியன் என பெயர் சூட்டிக் கொண்டான். அதன் மூலம் தன் தாய் மூராதேவியின் பெயரைப் பாரத நாட்டின் வரலாற்றில் சிரஞ்சீவியாக்கிவிட்டான். மயில் பறவைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மூரியா ஜாதியையே மௌரியப் பேரரசர்கள் ஏற்றுக்கொண்டனர்…..”

வரலாற்றாசிரியரும் ஒரு தேசத்தை வழிநடத்தி செல்ல வேண்டிய தேசியகுருவும் மாறி மாறி ஒருவருக்கொருவர் எதிர்ப்பற்ற நிலையில் வீர சாவர்க்கரில் வெளிப்படுகின்றனர்.

சந்திரகுப்த மௌரியர் மூலம் சாதியையும் குலத்தையும் கோத்திரத்தையும் பற்றிக்கொண்டு ரிஷி மூலம் நதிமூலம் ஆராயும் அற்ப மனங்களுக்கு அவர் சொல்கிறார்:

“…..சந்திரகுப்தர் ஒரு க்ஷத்திரியனா? எப்படியிருந்தால் என்ன?  “உயர் ஜாதியில் பிறந்த க்ஷத்திரியர்களே! மிலேச்சனான அன்னியப் பேரரசனுக்கும் அவனது படைத்தளபதிகளுக்கும் சிரங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு ஏற்றுக்கொண்ட உங்களைவிட அஞ்சா நெஞ்சனாகிய சந்திரகுப்தன் என்னும் பெயர் படைத்த நான் மாபெரும் க்ஷத்திரியன் என உரிமை கொண்டாடமுடியும். எப்படி என்று கேட்கிறீர்களா? அந்த மிலேச்சர்களை ஒவ்வொரு போர்க்களத்திலும் என் வாள் வலிமையால் முழுதும் தோல்வி அடையச் செய்திருக்கிறேன்.” என்று நியாயமான பெருமிதத்துடன் சந்திரகுப்தன் கூறக்கூடும்…….”

இவ்விதமாக பாரதம் அன்னிய ஆக்கிரமிப்பை எவ்விதம் தொடர்ந்து எதிர்த்து போராடியது என்பதை இத்தனை விரிவான ஆதாரங்களுடன் எந்த வரலாற்றாசிரியரும் ஆவணப்படுத்தியுள்ளார்களா என்பது ஐயமே. தட்சிணத்தில் முஸ்லீம் ஆக்கிரமிப்பினால் இஸ்லாமியராக மாற்றப்பட்டிருந்த ஹரிஹரரும் புக்கரும் எவ்வாறு தாய் தர்மம் திரும்ப வித்யாரண்ய சுவாமிகள் புரட்சிகரமாக உதவினார் என்பதையும் வீர சாவர்க்கர் தமக்கே உரிய பார்வையுடன் விவரிக்கிறார்:

“…..விஜயநகரம் என்னும் ஹிந்துப் பேரரசு நிலைநாட்டப் பெற்றது ஹிந்து வமிசத்தின் மாபெரும் சாதனை என்பதைப் போதுமான அளவுக்கு ஹிந்து வரலாறுகளில் பெருமைப் படுத்தி பேசப்படவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால் சங்கேஸ்வர சங்கராச்சாரியாரான மாதவாச்சாரிய வித்யாரண்ய ஸ்வாமியைக் குறிப்பிடலாம்.

இவருக்கு இருந்த புரட்சிகரமான அரசியல் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது. சமயத்துறைகளிலும் அவர் மாபெரும் புரட்சியாளர் என்பதை அவர் பழைய பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்ததன் மூலம் நிரூபிக்கலாம். …ஆனால் இன்று வடபாரதத்தில் வாழும் ஹிந்துக்கள் மேற்குறிப்பிட்ட தக்காணத்து ஹிந்து மாமன்னர்களைப் பற்றி கேள்விப்பட்டதைப் போல காட்டிக் கொள்வதேயில்லை. தென்னாட்டிலும் அவர்களின் பெயர்களை ஓரளவு அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான். இந்த மானங்கெட்ட நிலையிலிருந்து ஹிந்துகள் உடனடியாக மாற வேண்டியது அவசியம்…..”

நம் தேசிய வாழ்க்கையையும் பண்பாட்டையும் காப்பாற்ற பல நூற்றாண்டுகளாக நாம் நடத்திய இத்தொடர் போராட்டத்தின் நீட்சியாகவே பாரத விடுதலைப் போராட்டத்தையும் வீர சாவர்க்கர் காண்கிறார். இதில் குறுகிய கொள்கைப்பார்வைகளின் அடிப்படையில், அரசியல் எதிரிகளை தேச விரோதிகளாக சித்தரிக்கும் சின்னத்தனம் அவருக்கு என்றைக்கும் உரியதல்ல. பாரத விடுதலையின் இறுதிக்கட்டத்தை வீர சாவர்க்கர் வர்ணிக்கும் போது அப்போராட்டத்தின் அனைத்து தரப்புகளையும் அரவணைத்து ஒரு விசாலமான ஹிந்துத்துவ வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார்.

“….பிற்காலத்தில் சத்தியாகிரகம் ஒத்துழையாமை போன்ற தாரக மந்திரங்களை ஜெபித்தவரும் பொதுமக்களால் மகாத்மாஜி என அன்புடன் போற்றப் படுபவருமான அப்பெரியாருடன் சீரிய நண்பனாகப் பழகும் வாய்ப்பினை நான் பெற்றிருந்தேன். அப்போதுதான் அவர் இங்கிலாந்து வந்திருந்தார். அப்போது அவரை பாரிஸ்டர் காந்தி என்று மட்டும் அழைத்தார்கள். அதன் பின்னர் எங்கள் வாழ்நாள் முழுவதும் நாங்கள் ஒன்றாக இணைந்ததுண்டு. பல சமயங்களில் எங்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதும் உண்டு.

…பாரத நாட்டின் அரசியல் வாழ்வில் நான்கு காலகட்டங்கள் உண்டு.

1) ஆங்கில ஆட்சியை அடிவருடியவர்கள்

2) தீவிர தேசியவாதிகளான அகிம்சாவாதிகள்

3) புரட்சிவாதிகள்

4) ஹிந்துத்துவ வாதிகள்

இந்த நால்வகை அரசியல் தொடர்பு கொண்ட அனைவரும் 1857 ஆம் ஆண்டு சுதந்திரப்போரில் பெற்ற தோல்விக்குப் பின்னர் உருவானவர்கள்.

….தில்லி செங்கோட்டையில் கர்வத்துடன் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ்காரர்களின் யூனியன் ஜாக் கொடி, பேரரசு என்ற திமிருடன் பறந்து கொண்டிருந்த அந்த கொடி பிடுங்கி எறியப்பட்டு “பாரத சுதந்திரம் வாழ்க. நீங்கள் அனைவரும் வாழ்க” என்னும் இடிமுழக்கத்துடன் மூவர்ணக் கொடி சுதந்திர ஆளுமை கொண்ட பாரத நாட்டு அரசாங்கத்தின் கொடியாக ஏற்றி வைக்கப்பட்டது. அக்கொடியின் நடுவில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது….”

வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஹிந்துக்கள் விரட்டி சுவராஜ்ஜியம் நிறுவியதுடன் முடிவடைகிறது.

cover2இந்த நூலைப் போலவே மிகவும் பிரசித்தி பெற்ற அவரது மற்றொரு வரலாற்று ஆவணம் “ஹிந்து பத பாதுஷாகி” என்பதாகும். இது வீர சிவாஜி காலம் தொட்டு மராட்டிய பேரியக்கம் எப்படி அன்னிய மொகலாய ஆக்கிரமிப்பை எதிர்த்து அதனை பலமிழக்க செய்தது, அத்துடன் எவ்வாறு இந்த பெருமைக்குரிய ஹிந்து இயக்கம் ஐரோப்பிய ஆக்கிரமிப்பையும் எதிர்கொண்டது என்பதையும் ஆவணப்படுத்துகிறது.

முஸ்லீம் சித்திக்கள், ஆங்கிலேய-போர்ச்சுகீசிய கூட்டணி, டச்சு கப்பல் படை ஆகிய அனைத்தையும் கன்கோஜி ஆங்க்ரே எனும் மராட்டிய கப்பற்படை தளபதி எவ்வாறு மீண்டும் மீண்டும் தோற்கடித்தார் என்பது மிகவும் சுவாரசியமான வரலாற்றுத்தகவல். “வன்மம்” (Revenge), “வெற்றி” (Victory) போன்ற பெயர்களைத் தாங்கிய ஆங்கிலேய கப்பல்கள் மராட்டிய கப்பற்படை மீது போர் தொடுத்து அடைந்த படுதோல்விகள் பாரத வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள். இறுதியாக மராட்டிய ஹிந்து இயக்கம் செய்த வரலாற்றுத்தவறுகளையும் வீர சாவர்க்கர் காய்தல் உவத்தலின்றி விளக்குகிறார்.

இந்நூல் வீர சாவர்க்கர் ரத்னகிரியில் முழு விடுதலை அடைவதற்கு முன்னர் எழுதப்பட்டது. ஆங்கிலேய அதிகாரிகளுக்கு தெரியாமல் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க தாம் ஆராய்ச்சி செய்த வரலாற்று ஆவணங்களை தமது நினைவிலிருந்து மட்டுமே மீட்டு இதனை வீர சாவர்க்கர் எழுதினார். ஆனால் பின்னர் அது ஆராயப்பட்ட போது முழுக்க முழுக்க அந்த வரலாறு ஆதாரப்பூர்வமாக ஆவண சான்றாதாரம் கொண்டதாக அமைந்திருந்தது.

சிலர் கேட்கலாம், “சாவர்க்கர் ஏன் இந்த பழைய வரலாறுகளைத் தோண்டி எடுத்து எழுத வேண்டும்?”

இதற்கு வீரசாவர்க்கர் விளக்கமாக பதிலளிக்கிறார். ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் நினைவில் வைத்திருக்க வேண்டிய விளக்கம் அது.

“இறந்த காலத்தின் நினைவுகளைக் கொண்டு நிகழ்காலத்தில் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தற்கொலைப் போக்குடைய மடத்தனம் மட்டுமே. ஒரு ஹிந்துவும் முஸ்லீமும் இன்றைக்கும் ஒருவரை ஒருவர் தழுவுவது போல ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்க வேண்டும், ஏனென்றால் அந்த காலத்தில் அப்படித்தான் சிவாஜியும் அப்ஸல்கானும் செய்தார்கள் என்று சொன்னால் அதைப் போல மடத்தனம் வேறென்ன இருக்க முடியும்?

நாம் வரலாற்றை படிப்பது நம் இன்றைய விரோதங்களை இரத்தம் சிந்தும் மோதல்களை பரஸ்பர வெறுப்பை, கடவுளின் பெயராலோ அல்லது அன்னைபூமியின் பெயராலோ, வளர்த்துக்கொள்ள ஆகச்சிறந்த காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காக அல்ல. மானுட வெறுப்பையும் இனதுவேஷத்தையும் வளர்க்க அல்ல. மாறாக அதற்கு நேர் எதிரிடையான காரணங்களுக்காக மட்டுமே நாம் வரலாற்றை ஆராய்கிறோம். இவ்வெறுப்பையும் வன்முறையையும் அகற்றி மனிதனுக்கு மனிதன் அனைத்து மானிடத்தின் பொது இறைத்தன்மையையும் பூமியின் அனைத்து மானுடத்துக்குமான தாய் தன்மையையும் உணர்ந்து ஒரு மானுட குலமாக மாறுவதற்காக மட்டுமே.”

ஆனால். இந்த “மானுடமே ஓர் குடும்பம்” எனும் பொன்னுலகக்  கனவு ஒரு யதார்த்தமற்ற கனவாக இருக்காமல் யதார்த்த சூழலின் தரவுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பபட்ட ஒரு கருவியாக அவர் கைகளில் விளங்கியது. ஹிந்து பத பாதுஷாகிக்கு 1925ல் அவர் எழுதிய முன்னுரையில் வீர சாவர்க்கர் கூறுகிறார்:

“….ஆனால் இந்த பிரகாசிக்கும் பொன்னுலக கனவு நமது கண்களை யதார்த்தத்தின் உண்மைகளை அறியவிடாமல் குருடாக்கி விடலாகாது. மனிதர்கள் குழுக்களாக பிரிவுகளாக இயங்குகின்றனர். தம்மை உறுதிப்படுத்திக் கொண்டு விரிவாக்கம் செய்ய அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். கடும் போர்களும் தியாகங்களும் இந்த விரிவாக்கத்தை செயல்படுத்திய வண்ணமே உள்ளது.

…எனவே உலக ஒற்றுமையைக் குறித்து பேசுவதற்கு முன்னால் ஒரு தேசமாக ஒரு சமுதாயமாக உயிர்வாழும் தகைமையை நாம் அடைய வேண்டும். இந்த அக்னிப்பரீட்சைதான் ஹிந்துக்கள் முன் இஸ்லாமிய ஆதிக்க சக்திகளால் வைக்கப்பட்டது.

ஒரு அடிமைக்கும் அவன் எஜமானனுக்கும் சமத்துவமான அமைதி நிலவ முடியாது. ஹிந்துக்கள் வரலாற்றில் தம் வீரத்தை நிரூபிக்காமல் இருந்திருந்தால் இஸ்லாமியர்கள் நட்புக்கரத்தை நீட்டியிருந்தால் கூட அக்கரம் நட்பினைக் குறிப்பதாக அல்லாமல் அலட்சியத்துடனும் வேண்டா வெறுப்பாகவும்தான் நீட்டப்பட்டிருக்கும். ஹிந்துக்கள் அதனை நம்பிக்கையுடனும் நேசபாவத்துடனும் சுயமரியாதையுடனும் பற்ற முடியாது.

…ஹிந்துக்கள் தங்கள் தேவதேவியரின் பெயரால் நிகழ்த்திய நீண்ட மாபெரும் விடுதலைப் போராட்டமே அந்த சுயமரியாதையை,  நம்பிக்கையை முஸ்லீம்களுடன் நட்பு கோரும் தன்மையை ஹிந்துக்களுக்கு அளித்துள்ளது.”

பாரத விடுதலைப் போராட்டத்தின் போது பிரிட்டிஷ் தடியடியால் இறந்த தியாகியான லாலா லஜபதி ராய் இந்நூலை ஒவ்வொரு பாரத அரசியல்வாதியும் படிக்க வேண்டிய நூல் என கூறினார்.

வரலாற்றாசிரியர்கள் பற்றிய வரலாற்றிலே ஒரு தனித்துவம் கொண்ட வைரமாக வீர சாவர்க்கர் ஜொலிக்கிறார். தேசத்தின் மீது அன்பு, அக்கறை, வரலாற்று உண்மை மீது அடங்காத ஆர்வம் ஆகியவற்றை எவ்வித சமரசமும் இன்றி தருகிறார் அவர். அத்துடன் காலனிய ஆதிக்கத்துக்கு உள்ளாகி தளர்வுற்று நிற்கும் வளரும் நாடுகளுக்கான ஒரு ஆதர்ச வரலாற்றாசிரியராக அவர் விளங்குகிறார்.

வறட்டுத்தனமாக புள்ளிவிவரங்களை மட்டுமே அடுக்கும் வெறுமை கொண்ட வரலாற்றாசிரியராக அவர் இல்லை. மாறாக வரலாற்றை செயல்படும் தன்மையுள்ள ஒரு கருவியாக, நிகழ்காலத்தை அறிந்து கொள்ளவும் வருங்காலத்தை உருவாக்கவும் பயன்படுத்துகிறார். வீர சாவர்க்கரின் இந்த வரலாற்று ஆய்வு நோக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியது ஹிந்து அறிவியக்கத்தின் இன்றியமையாத கடமையாகும்.

பின்குறிப்பு:

திரு. அரவிந்தன் நீலகண்டன்,  தமிழகத்தின் நம்பிக்கையூட்டும் இளம் ஆய்வாளர்களுள் ஒருவர்; ’உடையும் இந்தியா’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்;  நாகர்கோவிலில் வசிக்கிறார்.

இக்கட்டுரை  தமிழ் ஹிந்து  இணையதளத்திலிருந்து  நன்றியுடன் மீல்பதிவு செய்யப்படுகிறது.

வரலாற்றுப் பேராசிரியர் இரா.அண்ணாமலை அவர்களால் வீர சாவர்க்கரின் “பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” தமிழ் படுத்தப்பட்டு நான்கு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்குமிடம்:  சக்தி, 1, எம்.வி.தெரு, பஞ்சவடி, சேத்துப்படு, சென்னை- 31.

Advertisements

காந்தியும் லோகியாவும்

-ஜெயமோகன்

ராம் மனோகர் லோகியா

ராம் மனோகர் லோகியா

(பிறப்பு: 1910, மார்ச் 23  – மறைவு:  1967, அக். 12)

எழுத்தாளர் ஜெயமோகன் அவரது தளத்தில் ராம் மனோகர் லோகியா குறித்து எழுதிய பதிவு இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது. காந்திக்கும் லோகியாவுக்கும் இருந்த  குரு-சீட உறவு அற்புதமானது.
 .
லோகியா அவரே சொன்ன ஒரு நிகழ்ச்சி இது. அவரும் காந்தியும் குரு சீட உறவு கொண்டவர்கள். கடைசிவரை லோகியா காந்தியுடன் இருந்தார். உடைமைகளற்றவரும் அலைந்து திரிபவருமான லோகியாவுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கமிருந்தது. அவர் ஜெர்மனியில் படித்தபோது கற்றுக்கொண்டது அது.
 .
காந்தி சொன்னார்: ‘நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிடவேண்டும்’. லோகியா ‘என்னுடைய தனிப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடுவதை நான் விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார். ‘எனக்கு அப்படி பேதங்கள் ஏதுமில்லை. நான் கண்டிப்பாகத் தலையிடுவேன். நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட வேண்டும். அது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது’. லோகியா காந்தியுடன் வாதாடவில்லை. ஆனால் ஏற்றுக்கொள்ளவுமில்லை. காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
 .
கடைசியாக காந்தி இன்னொரு காரணத்தைச் சொன்னார். ’நீங்கள் சிகரெட் பிடிப்பது எளிய மக்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். உங்களை அவர்கள் மேட்டிமைவாதியாக நினைக்க வழிவகுக்கும்’ அந்தக் கோணத்தில் லோகியா யோசித்திருக்கவில்லை. அது உண்மை என்று அவர் உணர்ந்தார். சிகரெட் ஒரு குறியீடென்ற நிலையில் அப்படித் தான் பொருள் கொள்ளப்படும். சிகரெட்டை விட்டுவிட்டார்.
 .
காந்தியையும் லோகியாவையும் புரிந்துகொள்வதற்கான அழகிய நிகழ்ச்சி இது. காந்தி அகமும் புறமும் வேறுவேறற்றவர். தான் வேறு சமூகம் வேறு என நினைக்காதவர். தன் உடல்பற்றியும் வெளியுலகம் பற்றியும் அவர் கொண்டிருந்த அக்கறை சமமானது. ஆனால் லோகியா தன் அகத்தைத் தன் சொந்த விஷயமாகக் கண்டவர், அதை ஒரு பொருட்டாக நினைக்காதவர். தன் உடலைப் புறக்கணித்தவர், தான் வாழும் உலகைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டவர். இருவேறு வாழ்க்கை நோக்குகள்.
 .
அதைவிட முக்கியமாக ஒன்றுண்டு. காந்திக்கு மக்களைப் பற்றி, அவர்களின் மனம் செயல்படும் நுண்ணிய வழிகளைப் பற்றித் தெரிந்திருந்தது. லோகியாவுக்குத் தெரியவே இல்லை. அவர் சிந்தனையாளர் மட்டுமே. ஒருபோதும் அவரால் மக்களுடன் உறவாட முடியவில்லை. அந்த எளிய மக்களுக்காகவே அவர் சிந்தித்தார், அவர்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆனால் அவர்களிடமிருந்து தொலைவில் இருந்தார். அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இல்லை.
 .
காந்தி இருக்கும்வரை லோகியா காங்கிரஸில் இருந்த சோஷலிஸ்டுக் குழுவின் மையக்குரலாக இருந்தார். காந்தியைத் தலைவராக ஏற்றுக்கொண்டு காந்தியுடன் ஓயாது விவாதித்துக்கொண்டு செயல்பட்டார். காந்தியின் மறைவுக்குப்பின் சோஷலிஸ்டுகள் காங்கிரஸில் இருந்து விலகிச்சென்று தனி இயக்கமாக ஆனார்கள். காங்கிரஸின் வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டார்கள். அதற்கான சூசகமாகவே காந்தியிடம் லோகியா முரண்படும் இடத்தைப் பார்க்கிறேன்.
 .
ஆனால் இந்தியாவில் சோஷலிச இயக்கம் எங்குமே உண்மையான அரசியல் வலிமையைப் பெறவில்லை. அதன் தலைவர்களை மக்கள் அறியக்கூட இல்லை. பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவின் அரசியல் விடுத்த சில வெற்றிடங்களை நிரப்புவதாக மட்டுமே அதன் அரசியல் பங்களிப்பு இருந்தது. அதற்கான காரணத்தையும் அந்த நிகழ்ச்சியில் உருவகமாகக் காண்கிறேன்.
 .
ராம் மனோகர் லோகியா இந்திய சோஷலிஸ்டு இயக்கத்தின் முன்னோடி. அதன் முதன்மை முகமும் அவரே. இந்திய சோஷலிச இயக்கத்தை ஐரோப்பியபாணி மார்க்ஸியத்துக்கும் காந்தியத்துக்கும் நடுவே நிகழ்ந்த உரையாடலின் விளைவு என்று சொல்லலாம். வன்முறை இல்லாமல் பாராளுமன்ற ஜனநாயகம் வழியாக சோஷலிச அமைப்பொன்றை நோக்கி நகர்வதற்கான அரசியலை அவர்கள் உருவாக்கினார்கள்.
 .
சுதந்திரம் பெற்ற தொடக்க காலகட்டத்தில் இந்திய அரசியலின் ஆளும்தரப்பும் எதிர்த் தரப்பும் இடதுசாரித்தன்மையைக்கொண்டதாக அமைந்தமைக்கு எதிர்க் கட்சியாகச் செயல்பட்ட சோஷலிஸ்டுகளே பெரும்பாலும் காரணம் என்று சொல்லலாம். வலதுசாரிக் குரல் கிட்டத்தட்ட இல்லாத நிலை இங்கே உருவானதும் அதனால்தான். பின்னர் சோஷலிஸ்டுகளின் இடம் இந்திய அரசியலில் இல்லாமலானபோதுதான் வலதுசாரி அரசியல் மேலெழுந்தது.
 .
இந்தியாவில் ஓங்கியிருந்த இடதுசாரி அணுகுமுறை தான் இந்தியச்சூழலில் ஆரம்பத்திலேயே அடிப்படை மக்கள்நலத் திட்டங்கள் சார்ந்த அணுகுமுறையை உருவாக்கியது. கல்வி, போக்குவரத்து, தொழிலாளர் நலம், சமூகநலம் சார்ந்த அக்கறைகள் கொண்ட அரசுகள் இங்கே உருவாயின. அவற்றின் முக்கியத்துவம் என்ன என்று நம்முடன் சுதந்திரம் பெற்று இடதுசாரி நோக்கு இல்லாத மதவாத, இனவாத வலதுசாரி அரசுகளை உருவாக்கிக்கொண்ட பாகிஸ்தான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நிலையைப் பார்க்கையில் உணரலாம்.
 .
இடதுசாரி அரசியலே இங்கே வலுவான தொழிற்சங்கங்களை உருவாக்கியது. இன்றும் இந்தியாவின் முக்கியமான மக்கள்சக்திகளாக அவை நீடிக்கின்றன. இன்றைய வலதுசாரிப் பொருளியல் அலையின் பெரும் ஆபத்துகள் பலவற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றியது இந்திய அரசியலில் வலுவான எதிர்த்தரப்பாக நீடிக்கும் இடதுசாரிக்குரலே என்பது ஓர் உண்மை. இன்று இந்தியாவின் சுதந்திரப் பொருளியலில் அடித்தள மக்களுக்கான உரிமைக்குரலாக அது நீடிக்கிறது.
 .
நேரு உருவாக்கிய ‘அரசாங்க சோஷலிசம்’ அதிகாரிகளிடம் கடிவாளங்களைக் கொடுத்து ‘கோட்டா -பர்மிட்- லைசன்ஸ்’ அரசை உருவாக்கி இந்தியத் தொழில் வளர்ச்சியைத் தேங்கவைத்தது என்பது இன்னொரு பக்க உண்மை என்றாலும், இடதுசாரி அரசியலின் பங்களிப்பு இந்தியாவின் முக்கியமான ஆக்கபூர்வ அம்சம் என்றே சொல்லலாம். அதில் சோஷலிஸ்டுகளின் இடம் முக்கியமானது.
 .
ராம் மனோகர் லோகியா பற்றித் தமிழில் வெளிவந்துள்ள முக்கியமான நூல், விடியல் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘வாழ்வும் போராட்டமும்- ராம் மனோகர் லோகியா’ . இந்நூல் முன்னர் கோவை சமுதாய பதிப்பக வெளியீடாக வந்த மூன்று நூல்களின் தொகுதி. மு. ரங்கநாதன் எழுதிய லோகியாவின் வாழ்க்கை வரலாறு, லோகியாவின் கட்டுரைகளின் தொகுதியாகிய ’சரித்திர சக்கரம்’ . காந்தியையும் மார்க்ஸையும் விரிவாக ஆராயும் ’மார்க்ஸுக்குப்பின் பொருளாதாரம்’.
 .
லோகியா உத்தரப்பிரதேசத்தில் அக்பர்பூரில் ஹீராலால் லோகியாவுக்கு மகனாக 1910-ஆம் வருடம் மார்ச் 23-ல் பிறந்தார். லோகியாவின் அப்பா ஹீராலால் லோகியாவைப் போலவே அதிதீவிரமான அரசியல் செயல்பாட்டாளர். காந்தியப் போரில் ஈடுபட்டு அப்போராட்டத்துக்குச் செல்லும் வழியில் மரணமடைந்தவர். அப்போது லோகியா காந்தியப்போரில் சிறையில் இருந்தார்
 .
மும்பையிலும் காசியிலும் கல்விபயின்ற லோகியா எப்போதுமே மிகச்சிறந்த மாணவராக இருந்தார். 1926 ல் தன் பதினாறாம் வயதில் கௌகாத்தி காங்கிரஸ் மாநாட்டைப் பார்க்கச்சென்ற லோகியாவைப் பஞ்சாபிலிருந்து வந்த காங்கிரஸார் தங்கள் குழுவில் சேர்த்துப் பிரதிநிதியாக ஆக்கினார்கள். அவரது அரசியல்வாழ்க்கை அங்கே ஆரம்பித்தது.
 .
1929-ல் லோகியா மேல்படிப்புக்காக ஜெர்மனி சென்றார். அந்த வாழ்க்கை அவருக்கு உலக அரசியல் பற்றிய தெளிவை உருவாக்கியது. அவர் அங்கேதான் சோஷலிசத்தின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டார். உலக சோஷலிச இயக்கத்துடன் தொடர்பு கொண்டார். முனைவர் பட்டம் முடித்துத் தன் 23-ஆவது வயதில் இந்தியா திரும்பினார்.
 .
1933-ல் லோகியா காந்தியைச் சந்தித்தார். ஜமுனாலால் பஜாஜ் காந்தியிடம் லோகியாவைக் கூட்டிச்சென்று அறிமுகம் செய்துவைத்தார். அந்த நட்பு காந்தியின் மறைவு வரை நீடித்தது. ஆனால் லோகியா காந்தியை வழிபடவில்லை, பின் தொடரவுமில்லை. அவர் காந்தியிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார், இடைவெளியில்லாமல் காந்தியிடம் பேசிக்கொண்டிருந்தார். காந்தியையும் மார்க்ஸையும் சந்திக்கச்செய்ய முயன்றார் லோகியா.
 .
இருபத்துமூன்று வயதான இளைஞராகிய லோகியாவுடன் காந்தி கொண்டிருந்த உறவைப் புரிந்துகொள்வது கடினம். அவர் லோகியாவைத்  தன் மகனைப்போல நினைத்தார். மாணவரைப் போல அவருக்குக் கற்பித்தார். அதேசமயம் தோழனைப்போல நடத்தினார். அவரிடமிருந்து ஒரு மாணவராகக் கற்றுக்கொண்டும் இருந்தார்.
 .
காந்தியைச் சந்தித்த அதே வருடம் மே 17 அன்று பாட்னாவில் ஆச்சாரிய நரேந்திரதேவா தலைமையில் அதிகாரபூர்வமாக ஒரு இந்திய சோஷலிச கட்சியை நிறுவ முடிவெடுத்தது. அதேவருடம் அக்டோபரில் மும்பையில் கட்சியின் அமைப்பு மாநாடு கூட்டப்பட்டது. சோஷலிஸ்டுகள் காங்கிரஸுக்குள்ளேயே ஒரு தனி கருத்துக்குழுவாகச் செயல்பட முடிவெடுத்தார்கள். லோகியாவின் வாழ்நாள் பணி அன்று ஆரம்பித்தது எனலாம்.
 .
கோவா விடுதலைப்போராட்டம் முதலிய நேரடிப்போராட்டங்கள். அவற்றில் லோகியா காட்டிய அஞ்சாமையும் உறுதியும் அவரை ஒரு பெரும் தலைவராக நமக்குக் காட்டுகின்றன. இன்னொரு முகம் அவர் காங்கிரஸுக்குள் சோஷலிஸ்டுகளின் குரலாக ஒலித்தது. லோகியா சலிக்காமல் ஏதாதிபத்தியத்துக்கும் இந்தியப் பெருமுதலாளித்துவத்துக்கும் எதிராகச் செயல்பட்டார்
 .
மூன்றாவது சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸின் எதிர்க்கட்சியாக நேருவை எதிர்த்துச் செயல்பட்டமை. லோகியா நேருவின் சோஷலிசம் வெறும் அரசாங்க சீர்திருத்தம் மட்டுமே என நினைத்தார். அது அதிகாரிகளை மட்டுமே வலுப்படுத்துகிறது என்றார். அவர் முன்வைத்த சோஷலிசம் கிராமியப்பொருளியலை முக்கியமாகக் கருத்தில் கொண்டதாக இருந்தது. நேருவின் பொருளியல் தொடர்ந்து விவசாயிகளையும் அடித்தள மக்களையும் சுரண்டி நகரங்களை உருவாக்கக்கூடியதாக இருப்பதைச் சுட்டிக்காட்டியபடியே இருந்தார் லோகியா
 .
ரங்கநாதன் எழுதிய வரலாற்றில் என்னைக் கவர்ந்த முக்கியமான விஷயம் காந்திமீது லோகியா செலுத்திய செல்வாக்கு. பல முக்கியமான சர்வதேச விஷயங்களில் காந்தியின் கோணத்தைத் தலைகீழாகத் திருப்பியிருக்கிறார் லோகியா. காந்தி அவர் எழுதிய பல அறிக்கைகளை லோகியா முற்றாகக் கிழித்தெறிய அனுமதித்திருக்கிறார். அவரது பல அறிக்கைகளின் முன்வடிவை லோகியாவே எழுதவிட்டிருக்கிறார். காந்தியை லோகியா  ‘கிராமிய சோஷலிசம்’ என்ற கருத்தியலை நோக்கித் தள்ளிக்கொண்டே செல்வதை காண்கிறோம். ஒருவேளை சுதந்திரத்துக்குப்பின் காந்தி பத்தாண்டுக்காலம் வாழ்ந்திருந்தாரென்றால் அவர் லோகியாவின் முகாமின் பெரும் சக்தியாக இருந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
 .
அதைப்போல லோகியா காந்தியால் தீவிரமாக மாற்றமடைந்துகொண்டே இருப்பதை இந்நூல் காட்டுகிறது. ஐரோப்பாவில் வன்முறைசார்ந்த அரசியலைக் கற்றுத்திரும்பிய லோகியா வன்முறை அரசியலை முழுமையாகக் கைவிடுகிறார். நூற்றுக்கணக்கான சமூக ஆற்றல்கள் அதிகாரத்துக்காக மோதிக்கொள்ளும் ஒரு பெருவெளியே அரசியல் என்றும் அங்கே வன்முறையற்ற திறந்த உரையாடலே ஆக்கபூர்வமான மாற்றத்தைக் கொண்டு வரும் என்றும் புரிந்துகொள்கிறார்.
 .
காந்தியின் கடைசிக்காலத்தில் லோகியாதான் அவருடன் இருக்கிறார். வன்முறை கட்டவிழ்ந்த கல்கத்தா தெருக்களில் லோகியா காந்தியுடன் உயிரைத் துச்சமாக நினைத்து இறங்கிச் சென்று அமைதியை உருவாக்க முயல்கிறார். காந்தியின் பணி இரண்டாகப் பிளந்த வானத்தை ஒட்டவைக்க நினைப்பது போல இருந்தது என நினைக்கும் லோகியா மெல்லமெல்ல அந்த மருந்து வேலைசெய்வதைக் காண்கிறார்
 .
கல்கத்தாவில் வன்முறையாளர்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப்பெற காந்தி காட்டிய வழியில் லோகியா செய்யும் துணிச்சலும் தியாகமும் நிறைந்த முயற்சி ஒரு காவியநிகழ்வு போலிருக்கிறது. வன்முறையாளர்கள் நடுவே தன்னந்தனியாகச் செல்கிறார், அவர்களிடம் மனச்சாட்சியின் குரலில் பேசுகிறார். அவர்களை வென்று ஆயுதங்களைப் பெற்று கொண்டுவந்து காந்தி தங்கியிருந்த இடிந்த மாளிகையில் குவித்துவிட்டுத் தூங்கச்செல்லும் அந்த இரவு லோகியாவை இன்னொரு காந்தியாக நமக்குக் காட்டுகிறது.
 .
1948-ல் காந்தி லோகியாவைக் கூப்பிட்டனுப்பினார். காங்கிரஸ் காந்தியின் கையில் இருந்து நழுவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்துகொண்டிருந்த நாட்கள் அவை. ‘நீங்கள் கட்டாயம் வாருங்கள், காங்கிரஸ் பற்றியும் சோஷலிஸ்டுக் கட்சி பற்றியும் நான் பேச வேண்டியிருக்கிறது’ என்று காந்தி சொன்னார். அதற்கு மறுநாள் ஜனவரி 30 அன்று லோகியா காந்தியைச் சந்திக்க மும்பையில் இருந்து கிளம்பினார். செல்லும்போதே காந்தி கொல்லப்பட்ட தகவல் அவருக்குக் கிடைக்கிறது.
 .
1967-இல் லோகியா மறைந்தார். நேரு யுகம் என அழைக்கப்பட்ட காலகட்டம் ஒருவகையில் லோகியா யுகமும் கூட என இந்நூல் வாதிடுகிறது. லோகியாவை இந்திய நவீன அரசியல் சிந்தனையின் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வு என சித்தரிக்கிறது.
 .
நூலின் இரண்டாம் பகுதியில் எஸ்.சங்கரன்,  பி.வி சுப்ரமணியம் இருவரும் மொழியாக்கம் செய்த  ‘சரித்திர சக்கரம்’ என்ற நூல் உள்ளது. இந்நூலில் லோகியா விவாதிப்பவை சோவியத் பாணி மார்க்ஸியம் தோல்வியடைந்து மார்க்ஸியத்துக்கு ஜனநாயக வடிவம் ஒன்று இருக்கமுடியுமா என்ற வினா எழுந்துள்ள இந்தக் காலகட்டத்தில் மிக மிக முக்கியமானவை. இங்கே மார்க்ஸிய செயல்திட்டத்தை நிராகரிக்கும் லோகியா,  மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை விரிவாக உலக அரசியலுக்கும் உலகப்பொருளியலுக்கும் பொருத்திப் பார்ப்பதைக் காணலாம்
 .
மூன்றாவது பகுதி பி.வி.சுப்ரமணியம் மொழியாக்கத்தில்  ‘மார்க்ஸுக்குப் பின் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் லோகியா எழுதிய கட்டுரைகள். காந்தியப் பொருளியலில் உள்ள பல அம்சங்களை லோகியா ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக காந்தியின் தர்மகர்த்தா கொள்கை, காந்தியின் பாரம்பரியவாதம் போன்றவற்றை. ஆனால் கிராமியப்பொருளியலை மேம்படுத்தும் ஒரு சோஷலிச அரசியலுக்காக அவர் வாதாடுகிறார். ஒருங்கிணைந்த உற்பத்தி பெருந்தொழில் ஆகியவற்றுக்கு மாற்றாக சிறிய அளவில் வட்டார ரீதியாக உருவாகி வரும் கிராமிய உற்பத்திப் பொருளியலை முன்வைக்கிறார்.
 .
லோகியாவையும் அவரது சிந்தனைகளையும் விரிவாக அறிந்துகொள்ள உதவியான அரிய நூல் இது.
 .
குறிப்பு:
 .
திரு.ஜெயமோகன், தமிழின் முதன்மை எழுத்தாளர். அவர் தனது தளத்தில் எழுதியுள்ள இக்கட்டுரை, விடியல் பதிப்பக வெளியீடான நூல்கள் குறித்த அறிமுகம் ஆகும்.
 .
 .
காண்க:

பொதுவுடைமை இயக்க முன்னோடி

-முனைவர் முத்து குணசேகரன்

சிங்காரவேலர்

சிங்காரவேலர்

 (பிறப்பு: 1860, பிப். 18மறைவு:  1946, பிப். 11)
 .
இந்திய சுதந்திரப் புரட்சியாளர்களிலே மூத்தவர் மட்டுமல்ல, முதிர்ந்தவர் ம.சிங்காரவேலர். சிலரே இவரினும் மூத்தவர்கள். அண்ணல் மகாத்மா காந்தி, ரஷ்யப் புரட்சி வீரர் லெனின், இவர்களினும் மூத்தவர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்.
1860, பிப். 18 –ல் பிறந்த இந்த மேதை 1946, பிப். 11-ல் மறைந்தார். இவர் மறைவை ராஜாஜி அவர்கள் “சுதந்திரப் பித்தரும், யோக்கியர்களில் ஒருவரும் மறைந்தார்” என்று குறிப்பிட்டார். இதனால் ம.சிங்காரவேலரின் ஒழுக்கமான அரசியல் செயல்பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில் சிங்காரவேலரை- புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சிங்காரவேலர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டிற்கு முன்னமேயே மறைந்தார்.
செய்திகளை வகைதொகைப்படுத்திச் சொல்வதில் ம.பொ.சி விற்பன்னர். “இந்தியாவில் உருவாகிய இயக்கங்கள் நான்கு. இந்திய தேசிய காங்கிரஸ், சம தர்ம இயக்கம், சுயமரியாதை இயக்கம், தொழிற்சங்க இயக்கமென நான்கு. இந்த நான்கு இயக்கங்களிலும் நீக்கமற, நெருக்கமாக இடம்பெற்றவர் சிங்காரவேலர் மட்டுமே” என்பார் ம.பொ.சி.
 .
இவருடைய தீவிரவாதத்தினாலேயே அந்நாளைய ரகசியக் காவலர்கள் இவரை “ஆபத்தானவர்” என்று பதிவு செய்து வைத்தனர்.  “அண்ணல் காந்தியின் காங்கிரசை விடவும் உண்மையில் அஞ்சத் தகுந்தது சிங்காரவேலரின் இந்துஸ்தான் லேபர் கிஸான் கட்சியே” என்று காவலர்கள் பதிவு செய்தனர்.

வரலாற்றில் 1925 டிசம்பரில் கான்பூரில் கம்யூனிஸ்ட்டு கட்சி மாநாடு தொடங்கப் பெற்றதெனப் படிக்கிறோம். இந்த மாநாட்டை இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் கம்யூனிஸ்ட் சக்லத்வாலா வராத நிலையில் அதனைத் தொடங்கி வைத்தவர் ம.சிங்காரவேலர்தான். அதனால் பேரறிஞர் அண்ணா,  “சிங்காரவேலருக்கு இணையாக லெனினைச் சொல்லலாம், டிராட்ஸ்கியைக் சொல்லலாம், சக் லத் வாலாவைச் சொல்லலாம்” எனக் குறிப்பிட்டார்.
 .
இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்தியாவில் தோன்றிய முதல் முளை ஒன்று உண்டு. அதற்குப் பெயர்  ‘இந்துஸ்தான் லேபர் கிஸான்’  கட்சி என்பது. அதனை முதன்முதலில் இந்தியாவில் தொடங்கி இரு இடங்களிலே மே நாளில் 1923-ல் காங்கிரஸ் கொடியுடன் கம்யூனிஸ்ட் கொடியான கதிர் அரிவாள் சின்னம் பொறித்த செங்கொடியை ஏற்றியவர்  சிங்காரவேலர்தான்.

எங்கெல்ஸ், காரல் மார்க்ஸ்  ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வெளியிட்டதைப் போலச் சிங்காரவேலரும்  ‘இந்துஸ்தான் லேபர் கிஸான் கெஜட்’ என்ற பத்திரிகையையும், தமிழில் ‘தொழிலாளி’  என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். அதற்கு முன்னர்  ‘நான் கோவாப்பரேட்டர்’ என்ற பத்திரிகை பிரிட்டிஷ் அரசால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதென அறிகிறோம். இதனாலேயே ஆத்திரமுற்ற பிரிட்டிஷ் அரசு சிங்காரவேலர் மீது ‘கான்பூர் சதி வழக்கு’ என்ற வழக்கையும் தொடர்ந்தது.

அண்ணல் காந்தியின் மக்கள் செல்வாக்கை உணர்ந்திருந்த சிங்காரவேலர் காந்தி தன்னினும் இளையவர் என்றாலும் காந்தியின் ஆணையை ஏற்று அவரின் தொண்டன் எனத் தன்னை கூறிக் கொண்டார். அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், நீதிமன்றங்களைப் புறக் கணித்தல் என்ற காந்தியின் ஆணைக் கிணங்கத் தன்னுடைய வழக்கறிஞர் அங்கியைத் திருவல்லிக்கேணி கடற்கரையில் மக்கள் முன்னால் தீ மூட்டி மக்களுக்கு போர் உணர்ச்சியை ஊட்டினார்.
 .
பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிமன்றங்களைப் புறக்கணித்த சிங்காரவேலரும், வீரமுரசு சுப்பிரமணிய சிவாவும்  ‘இந்துஸ்தான் பஞ்சாயத்து’ என்ற அமைப்பில் மக்களின் சிவில் கிரிமினல் வழக்குகளை இருவரும் தீர்த்து வைத்தனர்.

1922-ல் கயா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த சிங்காரவேலர் அதுவரை யாரும் பயன்படுத்தாத இளைஞர்களே உச்சரிக்க அஞ்சுகின்ற  ‘காம்ரேட்’ என்ற சொல்லால் 400-க்கு மேற்பட்ட இளைஞர்களை அழைத்தார். உலகக் கம்யூனிஸ்ட்டுகள் சார்பாக இந்த மாநாட்டில் அவர்களின் வாழ்த்தைச் சொல்வதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.
1922 லேயே அந்த கயா மாநாட்டில் சிங்கார வேலர்  “இந்தியர்களுக்கு வேண்டியது  பரிபூரண சுயராஜ்யமே” என்று குறிப்பிட்டது அதிசயமென்று எம்.என்.ராயின்  ‘வேன் கார்டு’ பதிவு செய்துள்ளது. 1917-ல் பாசிச, நாசிச அரசுகளுக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் குரல் கொடுக்க வேண் டுமென்று மாஸ்கோவில்  லெனின் அறிவித்த கோரிக்கையை ஏற்று 1917-லேயே சென்னைத் துறைமுகத் தொழிலாளிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர் சிங்காரவேலர் என்று, காலஞ்சென்ற செஞ்சட்டைப் பஞ்சாட்சரம் குறிப்பிடுவார்.

1920-க்கும் முன்னரே ரஷ்ய லெனினுடன் ரகசியத் தொடர்பு கொண்டிருந்தார் ம.சிங்காரவேலர், அந்தப் பாசத்தின் காரணமாகவே இந்தியாவிலிருந்து செல்கின்ற அனைவரிடமும் மாமேதை லெனின் “இந்தியாவின் கிழச்சிங்கம் சிங்காரவேலர் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பதுண்டாம்.
 .
பாடை ஏறினும் நூலது கைவிடேல் என்பது தமிழ் முது மொழி. அந்த மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சிங்காரவேலர். தென்னாட்டில் தனிப்பட்டவர்கள் நூலகங்களில் மிகப் பெரிய நூலகம் சிங்காரவேலர் நூல கம். 20,000-க்கு மேற்பட்ட நூல்கள் அவருடைய நூலகத்தில் இடம் பெற்றிருந்தன. சரியான முயற்சி இன்மையால் அவ்வளவு புத்தகங்களும் பகத்ஹவுசில் சேர்க்கப்பட்டு அழிந்து போயின. ஆனாலும் ரஷ்ய ஆய்வாளர் மித்ரோகின் முயற்சியினால், நாகை கே.முருகேசன் பேருழைப்பால் மாஸ்கோவிலுள்ள மிகப் பெரிய லெனின் நூலகத்தின் உட்பிரிவில்  ‘சிங்காரவேலர் நூலகம்’ என்று அவரின் மிஞ்சிய சில புத்தகங்களாவது சேர்த்து வைக் கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் நிறைவளிக்கும் செய்தியாகும்.

1927-ல் 42-வது காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. நேரு தலைமையில் நடைபெற்ற அந்தக் காங்கிரஸ் மாநாட்டிற்கு நகரசபை உறுப்பினர் என்ற முறையில் அனைத்து உதவிகளையும் செய்தவர் சிங்காரவேலர். சென்னைக்கு வந்த லண்டன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவை நகரசபை வரவேற்கத் தீர்மானம் தந்தவர் சிங்காரவேலர்.
 .
சுயமரியாதை இயக்கத்தோடு சுழன்று கொண்டிருந்த தந்தை பெரியாருக்கு பொதுவுடைமை என்னும் புத்தொளியைப் பாய்ச்சி ரஷ்யாவிற்கும் பரிந்துரைக் கடிதத்துடன் அனுப்பி வைத்தவர் சிங்காரவேலர். அதனால்தான்  “ஈ.வெ.ராமசாமி நாய்க்கன் கெட்டுவிட்டான், சிங்காரவேலுச் செட்டி அவனைக் கெடுத்து கம்யூனிஸ்ட்டாக்கி விட்டான்” என ரகசியக் காவலர்கள் குறிப்பெழுதினர்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், சிங்காரவேலரின் சமதர்ம இயக்கமும் 1932 முதல் 1934 வரை பேரியக்கமாகச் செயல்பட்டது. 400-க்கு மேற்பட்ட சமதர்ம இயக்கங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. பெரி யார், சிங்காரவேலர் செயல்பாடு கண்டு பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்ட் இயக்கத்தை 1934-ல் தடை செய்தது.

மிகச் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் இருந்த சிங்காரவேலர் வட இந்திய ரயில்வே போராட்டத்திற்கு முகுந்தலால் சர்க்காருடன் இணைந்து அரும்பாடுபட்டார்; பெரும்சாதனை படைத்தார். தென்னிந்திய சதிவழக்கில் தலைமை தாங்கி பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் சிங்காரவேலர் பெற்றார்.
 .
உலகிலுள்ள தமிழர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தமிழில் பதில் சொல்லி தெளிய வைத்தவர் சிங்காரவேலர். இவரது கட்டுரைகள் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, புதுவை முரசு, புதுவுலகம், சுதர்மா, தொழிலாளர், இந்து, சுதேசமித்திரன், நவசக்தி இவைகளிலெல்லாம் இடம்பெற்றன. இவர் பயன்படுத்திய புனைபெயர்கள் தோழர், சமதர்மி, அப்சர்வர். எமி னென்ட் லாயர், இமாலய தவசி, பூகை வாதி, சிந்தனைவாதி, சோசலிஸ்ட், சைன்டிஸ்ட், யுக்திவாதி, முகமூடி, சிங்கி ரண்டு என்பனவாகும்.

உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கப் பாடுபட்ட சிங்காரவேலர், அநியாயமாகக் கொல்லப்பட்ட சாக்கோ, வான்சிட்டி என்ற அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகவும் சென்னையில் கண்டனக் கூட்டங்கள் நடத்தினார். மிகக் கொடுமையாகக் கொல்லப்பட்ட 7  பி அண்டு சி மில் தொழிலாளர்கள் சவ அடக்கத்திற்குத் தலைமை தாங்கினார். வீட்டில் அடைக்கப்பட்ட நிலையிலும் வீட்டிலிருந்தே சைமனுக்குக் கருப்புக் கொடி காட்டினார்.
 .
அயோத்திய தாச பண்டிதர், லட்சுமணதாசு நாயுடு இவர்களுடன் இணைந்து அளப்பரிய புத்த மதப் பணிகளை 1900-லேயே ஆற்றினார். இவரிடமிருந்து மார்க்சியத்தையும், டார்வினிசத்தையும் கற்றதால் சிங்காரவேலருக்கு மாணவரானதாக திரு.வி.க. குறிப்பிடுகின்றார். 
 .
இவருடைய தீவிரவாதத்தைப் பொறுக்க முடியாத வெலிங்டன் பிரபு சிங்காரவேலரை அவர் வாழ்விடமான நடுக்குப்பத்திலிருந்து அப்புறப்படுத் தினான். இன்றைக்கும் வெலிங்டன் வளாகத்தில் சிங்காரவேலரின் முன்னோர்கள் கந்தப்பச்செட்டி, அருணாச்சலசெட்டி சமாதிகளைக் காணமுடியும். 1946, பிப். 11-ல் “உலகில் போர் ஒழியட்டும்; அமைதி தலைக்கட்டும்” என்றே சிங்காரவேலரின் இறுதிமூச்சு அடங்கியது.
குறிப்பு:
 .
முனைவர் திரு. முத்து குணசேகரன், பேராசிரியர்.
 .
நன்றி: சந்திப்பு வலைப்பூ.

 

தேசத்தின் சொத்து

-விக்கிரமன்

ப.ஜீவானந்தம்

ப.ஜீவானந்தம்

ப.ஜீவானந்தம்

(பிறப்பு: 1907, ஆக. 21 -மறைவு: 1963, ஜன. 18)

 

வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை தமிழகத்தில் வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.  ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.  அவர்கள் குல தெய்வம் அது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம். திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது. இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள்.  விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.

அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது  ‘சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்’  என்ற நாவலை எழுதினார். ‘ஞானபாஸ்கரன்’ என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார்.

காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார். அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.

சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய  ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.

ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை – கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.  அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து, வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா,  பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை  ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:

“உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?”

-என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.

‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.  இறுதிவரை ப. ஜீவானந்தம் – ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து,  “உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?” என்றார்.

“இந்த தேசம்தான் எனக்குச் சொத்து” என்று ஜீவா பதிலளித்தார்.  ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.  பிறகு  “இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து”  என்றார்.

கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948-ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

அவ்வப்போது போராட்டங்களில் கலந்துகொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.

கொள்கையைப் பரப்ப ‘ஜனசக்தி’  நாளிதழைத் தொடங்கிய ஜீவா,  ‘தாமரை’ என்ற இலக்கிய இதழை 1959-இல் தொடங்கினார். அதில்,  ‘தமிழ் மணம் பரப்ப’ என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். 1933-இல் ஜீவா எழுதிய  ‘பெண்ணுரிமை கீதாஞ்சலி’ என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில்  ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

1963-ஆம் ஆண்டு ஜனவரி 18-ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார். மரணமா? அவருக்கு மரணமேது?

நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது?

.

குறிப்பு:

திரு. விக்கிரமன் தமிழின் மூத்த எழுத்தாளர்.

இக்கட்டுரை தினமணி – தமிழ் மணியில் வெளியானது, இங்கு மீள்பிரசுரம் ஆகியுள்ளது.

நன்றி: தமிழ் மரபு அறக்கட்டளை

 

 

 

மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.

%d bloggers like this: