Category Archives: கல்வியாளர்

குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவர்

-வ.மு.முரளி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

‘தமிழ்த் தாத்தா’ உ.வே. சாமிநாதையரை அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், அந்த மேதையை உருவாக்கிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையை தமிழகம் உரிய அளவில் இன்னமும் அறியவில்லை.

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இருநூறாவது ஆண்டு (6.4.1815) ஏப்ரல் 6-இல் நிறைவடைகிறது. இந்தத் தருணத்தில் அவரை நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

பிள்ளையின் சிறப்பு, அவர் இயற்றிய நூல்களால் அமையவில்லை. ஆனால், அவரது குருகுல மாணாக்கர்களாக இருந்த பலர் தமிழுக்கு ஆற்றிய தொண்டே குருநாதரை இன்றும் நினைக்கச் செய்கிறது. அவர்களுள் ஒருவர்தான் உ.வே.சா.

திருவாவடுதுறை ஆதீனத்தால் “மகாவித்துவான்’ என்ற பட்டம் பெற்று புகழ்பெற்ற மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தமிழில் கரை கண்டவர்; நினைத்தவுடன் யாப்புடன் கூடிய கவி புனையும் ஆற்றல் மிகுந்தவர். தனது வாழ்நாளில் அவர் எழுதிய செய்யுள்களின் எண்ணிக்கை லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார் உ.வே.சா.

ஆனால், அக்காலத்தில் அவற்றைத் தொகுத்து வைக்க போதிய சாதனங்கள் இல்லை. அதையும் மீறி, அவருடைய நூல்கள் பலவற்றை உ.வே.சா.வின் முயற்சியால் நாம் இன்று படிக்க முடிகிறது. அவர் எழுதிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும், குசேலோபாக்கியானம் என்ற காப்பியமும், அவரது மேதைமைக்குச் சான்றாக விளங்குகின்றன. தலபுராணத்திலும் தமிழின் சிறப்பு மிளிரச் செய்வதில் பிள்ளை முன்னோடியாகத் திகழ்ந்தார். அவர் எழுதிய தலபுராணங்கள் 22.

தனது அருமுயற்சியால் கற்ற தமிழை தன்னுடைய மாணாக்கர்களுக்கு அள்ளி வழங்கும் திறனால் இவரது புகழ் பரவியது. இவரது வீடே மாணாக்கர்களின் இல்லமானது. பிரதிபலன் பாராமல் மாணவர்களுக்கு உணவும் இருப்பிடமும் அளித்து, தமிழ் கற்பிப்பதை தனது வாழ்வின் நோக்கமாகவே கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய மாணாக்கர்களின் தரத்தை உயர்த்துவதே அவரது இலக்காக இருந்தது. நல்ல மாணாக்கர்களைத் தேடிக் கண்டறிந்து பாடம் கற்பிப்பது பிள்ளையின் இயல்பு.

 “பணத்துக்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமையாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சிகளில் இவரைச் செலுத்தாமல் இருந்தது” என்கிறார் உ.வே.சா.

தன் குருநாதரின் சிறப்புகள் குறித்து உவே.சா., 1934-இல் எழுதிய ‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் பிள்ளையின் தவ வாழ்வை விளக்குகிறது.

 “மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தார். அவர்களோ தந்தையாகவே எண்ணி இவரிடம் பயபக்தியுடன் ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்துவிடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குவதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லர் என்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது” என்று, தனது வாழ்வின் அரிய ஆறு ஆண்டுகளை பிள்ளையின் இறுதி நாள்களில் அவருடன் கழித்த உ.வே.சா. கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கவனித்துப் பின்பற்ற வேண்டிய அற்புதமான வாழ்க்கை திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடையது. குருகுல முறையின் கடைசி தமிழ் முனிவரான இவரின் இரு நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியது தமிழரின் – தமிழகத்தின் கடமையாகும்.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

இக்கட்டுரை,  தினமணி- தமிழ்மணியில் வெளியானது.

காண்க: ஆசான்களின் ஆசான்…

Advertisements

சாலப் பெரிய ஆசிரியர்பிரான்!

-ம.வே.பசுபதி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

அழகோ அழகு; அவ்வளவு பேரழகு, தான் பெற்றெடுத்த தகத்தகாயத் தங்கக் குழந்தைகள்! அந்தக் குழந்தைகளைச் சற்றும் தயக்கமின்றி முழு மனதுடன், பெற்றெடுத்த பெருமகனாரே தானமாகக் கொடுத்துவிட்டாரென்றால் அந்த அதிசய மனிதரைப் பற்றி நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.

கற்பனைகள், வர்ணனைகள், நீதிகள், நியதிகள் என அனைத்தும் கருக்கொண்டு, சொற்கட்கு இலக்கண அமைதிகளுடன் உருக்கொண்டு, ஓர் இலக்கியம் வெளிப்படுவது மகப்பேற்றுக்கு ஒப்பானது. சொல்லணி, பொருளணிகளை அணிவித்துத் தன் படைப்பைக் காணும் கவிஞனின் நிலை, நல்ல தாய் அடையும் மகிழ்ச்சியைக் காட்டிலும் நல்லதாய் அமையும்.

காரணம் தாய் பெறும் குழந்தை பிரம்மப் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை உண்டு. கவிஞனின் இலக்கியக் குழந்தை கலைமகள் படைப்பு; அதற்கு ஆயுள் வரையறை இல்லை; அழிவதில்லை. “மலரவன் செய் வெற்றுடம்பு மாய்வதுபோல் மாயா; புகழ் கொண்டு மற்றுஇவர் செய்யும் உடம்பு’ – என்பது குமரகுருபரரின் திருவாக்கு.

குசேலோபாக்கியானம், சூதசம்ஹிதை என்னும் மொழிபெயர்ப்பு இலக்கியப் படைப்புகளை உருவாக்கி,  “இவற்றை உங்கள் பெயரில் வெளியிட்டுக் கொள்ளுங்கள்” என்று வல்லூர் தேவராசப் பிள்ளைக்குக் கொடுத்தவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. வல்லூரார் “வேண்டாம்’’ என மறுத்தார். மகாவித்துவான் வற்புறுத்தித் திணித்தார்.

மகாவித்துவான் எப்பொழுது இந்த இலக்கியக் கொடை கொடுத்தார் என்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. வல்லூர் தேவராசப் பிள்ளையின் அழைப்பின்பேரில் மகாவித்துவான் பெங்களூருக்குச் சென்று சில காலம் தங்கியிருந்து அவருக்கும் பிறருக்கும் சில நூல்களைப் பாடம் சொன்னார்.

பின்னர் திருச்சிக்கு மீள் பயணம் மேற்கொண்ட நாளில், மகாவித்துவானைப் பிரிய மனமின்றித் தவித்த தேவராசர், மரியாதை நிமித்தமாக ஐயாயிரம் ரூபாய் காணிக்கை செய்தார். அன்றைய ஐயாயிரம் இன்றைய கோடிக்குச் சமமென்றே சொல்லலாம்.

நமக்கு இவ்வளவு அதிகமான செல்வமா என மகாவித்துவானின் மனம் மறுதலித்தது. “காணிக்கை’ என்று சொல்லிக் கொடுத்துவிட்டதால் மறுக்க முடியவில்லை! அதனினும் மேலான குருவின் வாழ்த்தளிப்பாக, இலக்கியங்களை வழங்கினார். மகாவித்துவானே வென்றார்.

தமிழில் 11,661 செய்யுள்கள் செய்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பரே. அவற்றில் 1,293 பாடல்களை “மிகைப்பாடல்கள்’ என்று தனிமைப்படுத்துவதும் உண்டு. அப்படி ஒதுக்கினாலும் 10,368 பாடல்கள் கம்பர் இயற்றியவையே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

தமிழில் நூறாயிரம் செய்யுள்கள் செய்தவர் மகாவித்துவான். இதனால் இவரைப் பத்துக் கம்பர் என்று குறிப்பிடலாம். இதுவரை அச்சில் வெளிவந்துள்ள மகாவித்துவானின் பிரபந்தங்கள், புராணங்கள், சரித்திரச் செய்யுள் நூல்கள் முதலியன மொத்தம் 75.

மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு நேரம் காலமே கிடையாது. எந்த நேரத்திலும் எந்தப் பணியின் ஊடேயும் பாட போதனை நடைபெறும். நள்ளிரவில் மாணவர்களை அழைத்து “திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’யைப் பாடம் சொன்ன வரலாறும் உண்டு.

வெளியூர்களில் இருக்கும்போது மாலை, இரவு நேரங்களில் அரங்கேற்றம் செய்வார். அன்றைய நாள் காலையில் இயற்றிய கவிதைகளை அவையினர் முன்னே சொல்லி நயங்களுடன் விளக்குவார். மகாவித்துவான் பத்துப் பதினைந்து நாள்கள் ஓர் ஊரில் தங்கினாரென்றால் ஆயிரம் பாடல்களுக்கு மேற்பட்டதான ஒரு தலபுராணம் உருவாகியிருக்கும். அல்லது சில சிற்றிலக்கியங்கள் உருவாகியிருக்கும்.

அவர், கவிதைகளை அதிவேகமாகவும் சொல்வதுண்டு. பல மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாடல்களைச் சொல்வதும் உண்டு. சொல்லச் சொல்ல எழுதுவதையே தொழிலாகக் கொண்ட சிலர் அக்காலத்தில் இருந்தனர். அவர்களை ஏடெழுதுவோர் அல்லது கையேட்டுப் பிள்ளை என்பர்.

ஓர் அவசரத் தேவைக்காக மகாவித்துவான் சொல்லும் பாடல்களை ஏட்டில் எழுத ஒருவர் நியமிக்கப்பட்டார். தன் தொழில் திறமையின் பேரில் அளவுக்கதிகமான நம்பிக்கை கொண்டவர் அவர். அதனால் அவரிடம் ஆணவப் பேச்சும் உண்டு.

 “என் கை வலிக்கும்படி விரைவாகவும் அதிகமாகவும் கவிதை சொன்னவர் எவரும் இலர்” என்று ஒருநாள் அதிகாலையில் மகாவித்துவானின் மாணவர்களிடம் அவர் கூறினார்.

அன்று காலை ஏழு மணிக்கு மகாவித்துவான், நாகைக் காரோணப் புராணம் சுந்தர விடங்கப் படலக் கவிதைகள் சொல்லத் தொடங்கினார். கற்பனைச் சூறாவளிகளுடன் கவிமழை கனமழையாகப் பொழிந்தது. பகல் பத்து மணிக்குள் நீராடிப் பூசைக்குப் போவதை வழக்கமாகக் கொண்ட அவர், அன்றைக்குக் கவிதையில் ஒன்றிக் காலத்தை மறந்தார்.

பதினொரு மணியளவில், ஏடெழுதுபவரின் வலக்கரத்தில் ரத்தம் கட்டிவிட்டது. வலியைத் தன் மனவலிமையால் தாங்கிக் கொண்டு தவித்தபடியே எழுதினார். பன்னிரண்டு மணி ஆயிற்று. மகாவித்துவான் கவி சொல்வதை நிறுத்தவில்லை. ஏடெழுதுவோரின் தாங்கும் சக்தி விடைபெற்றுக் கொண்டது. எழுத்தாணியைக் கீழே வைத்தார். ஓலைகளை அடுக்கிக் கட்டி வைத்தார். மகாவித்துவானின் திருவடிகளில் விழுந்து வணங்கி  “இனி என்னால் ஆகாது; என் ஆணவம் அடங்கிப் போயிற்று” என்று அலறினார்.

இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட கவிஞர்களும் தமிழறிஞர்களும்,  “கவி சொல்ல வல்ல நல்வித்தை” என்னும் சகலகலாவல்லிமாலையின் தொடருக்கு மகாவித்துவானே உரிய உதாரணம் என்று கைகூப்பித் தொழுதனர்.

பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும் பழக்கம் இவரிடமில்லை. தன்னிடம் தமிழ்ப் படிக்க வந்த ஏழைகளுக்கு உணவு, உறைவிடம் அளித்து நுண்ணறிவுத் தமிழ்ப் புலமை கொடுத்த தனிப்பெரும் புலமைக் கொடையாளி இவரே. கவிதைகள் பாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வங்களைச் சேகரித்து வைத்து மயிலாடுதுறையில் தொள்ளாயிரம் ரூபாயில் இரண்டுகட்டு வீடு வாங்கி, மாணவர்கள் தங்கிப் படிக்க வசதி செய்து கொடுத்த கருணையாளர் இவர்.

அக்காலப் புலவர்களுக்கே உரிய வறுமையை ருசிக்கவும் செய்தார்; தமக்குக் கிட்டிய வளங்களைத் தமிழார்வலர்களுக்குச் செலவழித்து ரசிக்கவும் செய்தார்.

ஊடக வெளிச்சங்கள் இல்லாத அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில்  ‘மகாவித்துவான், இந்தியா’ என்று மட்டும் முகவரி எழுதி லண்டனில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதம் மயிலாடுதுறையில் இருந்த இவரிடம் வந்து சேர்ந்ததென்றால், ‘இவரின் மிகுபெரும் புலமைத் தென்றல் உலகின் பல பாகங்களிலிருந்தோர்க்கும் இதமளித்தது’ என்பதுதானே பொருள்?

திருவாவடுதுறை ஆதீனம் இளைய பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நல்லாதரவு காரணமாகத் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகரால் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டவர் இவர். இவரின் அளப்பரும் கவியாற்றலுக்கும் தமிழ் கற்பிக்கும் தனிப்பெரும் திறனுக்குமாக இவருக்கு மேற்படி சன்னிதானம்  ‘மகாவித்துவான்’ என்னும் உச்சமான விருதை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

தக்கவருக்குத் தக்க காரணங்களால், தக்கதொரு பெரு நிறுவனம், தக்கதொரு பட்டத்தை வழங்கினால் மட்டுமே, அது அவரின் இயற்பெயரையும் தேவையற்றதாக்கி, என்றும் நிலைபெறும் என்பதற்கு மகாவித்துவானே சான்றானார். மகாவித்துவான் என்ற பட்டத்தைச் சொன்னால், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்ற அவரின் திருப்பெயர் சொல்ல வேண்டிய தேவை எழுவதில்லையல்லவா?

மகாவித்துவான் படைப்புகளில் தமிழ்த் தொண்டுக்காகவே உருவாக்கிய பெருங்காப்பியப் படைப்பொன்றுண்டு. அப்படைப்பின் பெயர்தான் உ.வே.சா. தமிழ் இலக்கண, புராண, இதிகாச, சாத்திர, தோத்திர, கவித்துவம் ஆகிய அனைத்தியல்களிலும் நுண்மாண் நுழைபுலம் எய்துமாறு உத்தமதான புரத்து உத்தமரை உருவாக்கியவர் இவரே.

 “மூலையிலே இருந்தாரை முன்றிற்கழைப்பவரே

சாலப் பெரியரென் றுந்தீபற”

-என்பதற்கேற்பச் சூரிய மூலையிலே உதித்த சுடர்க் கொழுந்தை, குன்றேறி ஒளிவிட வழிசெய்த  ‘போதனைப் புனிதர்’ மகாவித்துவானே ஆவார்.

தம் குருநாதரின் சரித்திரத்தை விரிவாக எழுதி வெளியிட்டும், அவரின் நாற்பத்திரண்டு கவிதைப் படைப்புகளை இரு தொகுதிகளாக வெளியிட்டும் அவருக்குப் புகழஞ்சலி செய்த நன்மாணாக்கரும் உ.வே.சா.வே.

உ.வே.சாமிநாதய்யருக்கு மிகப் பிடித்த பேச்சு என்றால் மகாவித்துவானைப் புகழ்வதே. உ.வே.சா. பெற்ற புகழில் பெரும் பங்கு இந்த ஆசிரியப் பிரானின் திருவடிகட்கே உரியன.

இன்று நாம் மகாவித்துவானைப் பற்றிப் பேசுகிறோம், தெரிந்து வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அதற்குக் காரணமும் அவரது மாணாக்கர் உ.வே.சா தான்.  ‘தமிழ்த் தாத்தா’ தனது குருநாதர் ‘மகாவித்துவான்’ மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எழுதிப் பதிவு செய்திருக்காவிட்டால், நாம் அந்த மாமேதையைப் பற்றித் தெரிந்திருப்போமா என்பதே சந்தேகம்தான்.

ஆசிரியர்களால் மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் உருவாக்கும் மாணவர்களால்தான் ஆசிரியர்கள் அறியப்படுகிறார்கள். இதற்கு மகாவித்துவானும் அவர் உருவாக்கிய மாணவரும்தான் எடுத்துக்காட்டு!

குறிப்பு:

திரு. ம.வே.பசுபதி, தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலத் தலைவர்.

இக்கட்டுரை, தினமணி நாளிதழில் (06.04.2015) வெளியானது.

காண்க: ஆசான்களின் ஆசான்…

மாணாக்கனைக் கவர்ந்த ஆசான்

-அசோகமித்திரன்

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

 

உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக்கொண்டார். தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.

சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள், அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன. இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன. ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது. தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல.

ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினைகளையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை, கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை.

ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது. அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந்திருக்க வழியில்லை.

அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார். செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.

தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப் பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.

சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக்கொண்டிருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக்காட்டு.

இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் ‘என் சரித்திரம்’ எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள். ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவியுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.

வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூட சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார்பற்றப் பார்வை, உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழிகளில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!

சாமிநாதய்யர் எழுதிய  ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்’ இரு பாகங்களில் 1933-34-இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்திலிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும், மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார்.

நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார். அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.

சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக்காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப்படுகிறது. வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம்.

சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியிருத்தது. தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது.

தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை. இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.

சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தைகளுக்கோ தெரிந்தவர்கள் அல்ல. உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது. கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம். ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை. சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல்கள் இடம் பெறவில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.

தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல. சாமிநாதய்யர் ‘சரம தசை’ என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியிருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட ‘சரம சுலோகம்’ என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.) பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார். அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது. வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார். இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.

இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.

சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். “என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்.”

(சாமிநாதய்யர் இதை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை ‘மாஸ்டர் ஆஃப் செமிகோலன்’ என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)…

 

குறிப்பு:

திரு. அசோகமித்திரன், தமிழின் மூத்த படைப்பாளி.

காலச்சுவடு மாத இதழில் அவர் எழுதிய மாணாக்கனும் ஆசானும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி, இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

காண்க:

ஆசான்களின் ஆசான், புலவர்களின் புலவர்…

தமிழ்த்தாய் வாழ்த்து தந்த கவி

-முனைவர் கி. முப்பால்மணி

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1855, ஏப். 5 – மறைவு: 1897 ஏப். 26)

கேரளத்தின் ஆலப்புழையில்  குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி மறைந்தார்.

சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22-வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை மணம் செய்து வைத்தனர்.
நடராசன் என்றொரு மகன் பிறந்தார்.

சுந்தரம் அன்றைய கல்வியை முழுமையாக, முறையாகப் பெற்றவர். ஆலப்புழையில் ஆங்கில – தமிழ்ப் பாடசாலையில் பிரவேசம் தேர்ச்சி பெற்று,  மெட்ரிக் (1871),  எஃப்.ஏ (1873),  பி.ஏ . (1876)  படிப்புகளைத் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தேறினார். மெட்ரிக் தேர்வில் – முதலாவதாகத் தேறி உதவித் தொகை பெற்று, அனைத்துப் படிப்புகளையும் முடித்தார். பின்பு 1880ல் எம்.ஏ. தேறினார்.

இலக்கியம்,  வரலாறு,  தத்துவம்  ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்று உயர்ந்தார்.  இளங்கலை முடித்ததும், இவரது புலமைத் தெளிவு, திறம் கண்டு திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி முதல்வர் இராஸ், தமது கல்லூரியிலேயே ஆசிரியராக நியமித்தார்.

1877-ல் திருநெல்வேலி ஆங்கில – தமிழ்ப் பள்ளியில் முதல்வரானார். இவர் தமது காலத்தில் எஃப்.ஏ. கல்வியை ஏற்படுத்தி, அந்த நிறுவனத்தைக் கல்லூரியாக ஆக்கினார் அது  ‘இந்துக் கல்லூரி’ எனப் பெயர் பெற்றது. 1879-ல் அதே மகாராசா கல்லூரியில் மீண்டும் தத்துவ ஆசிரியர் ஆனார். 1885-ல் மகாராசா கல்லூரியில் தத்துவ பேராசிரியராக நியமிக்கப்பட்டு இறுதி வரை அங்கு பணிபுரிந்தார்.

தமிழ்ப்பணி:

சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.  திருமுருகாற்றுப்படை,  நெடுநெல்வாடை  ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,
திருஞானசம்பந்தர் காலம்,  பத்துப்பாட்டு (1891),
முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),  ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),  திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)  ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.

நூற்றொகை விளக்கம் (1885,1889),  மனோன்மணீயம் (1891),  நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,  பொதுப்பள்ளியெழுச்சி,  நற்றாயின் புலம்பல்,  சிவகாமி சரிதம்  ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.

சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),  மரங்களின் வளர்ச்சி (1892),  புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)  ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு  ‘ராவ் பகதூர்’ விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார்.

திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்  இலக்கியம்,
வரலாறு,  தத்துவத் துறைப்  பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.

சுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார். சாமிநாதப் பிள்ளை,  வலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,  சுப்பிரமணிய பிள்ளை  ஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில்  ‘சைவப் பிரகாச சபை’யை ஏற்படுத்தி, 1885-ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது.  இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த பூண்டி அரங்கநாத முதலியார்,  வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி,  அரங்காச்சாரி,  உ.வே.சாமிநாதய்யர்  ஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.

சுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை ராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை  ‘Tamilnadu Antiquary’, சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.

சுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது  நிஜானந்த விலாசம்,  சுவானுபவ மஞ்சரி,  ஸ்வானுபூதி ரசாயனம்
ஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.

சுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் ரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.

1894-ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13-ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டுபிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.

1891-ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78-ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்  பிரம்ம கீதை,
சூதசம்ஹிதை,  பெருந்திரட்டு  காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால்  ‘பரமாத்துவித’” என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார்.

தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார்.  அதை உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,  தரத்தாலும்,  நுட்பத்தாலும்
கட்டுக்கோப்பாலும்  சிறந்து விளங்குகிறது.

இந்த நூல பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள “நீராடும் கடலுடுத்த நிலமடந்தை” என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது.

தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,  மொழி அபிமானம்,  தேச அபிமானங்களைக்
கொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.

சுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34-வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.

சுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.

குறிப்பு:

முனைவர் திரு. முப்பால் மணி எழுதிய இக்கட்டுரை, தினமணி – தமிழ் மணியில் வெளியானது, இங்கு நன்றியுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

ஆசான்களின் ஆசான், புலவர்களின் புலவர்…

-வ.மு.முரளி

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

மகாவித்துவான்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை

திரிசிரபுரம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை

(பிறப்பு: 1815 ஏப். 6 – மறைவு: , 1876 பிப். 1)

.

இன்று தமிழ் மொழிக்கு அணிகளாகக் கருதப்படும் பல காப்பியங்களை ஓலைச்சுவடிகளிலிருந்து நூல் வடிவுக்கு மாற்றியவர்  ‘தமிழ்த் தாத்தா’ எனப்படும் உ.வே.சாமிநாதையர். அவர் மட்டும் பாடுபட்டு, தேடிக் கண்டறிந்து அவற்றைப் பதிப்பித்திருக்காவிடில் நமக்கு மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கிடைக்காமலே கரையானுக்கு உணவாகி இருக்கும். எனவேதான்,

“பொதியமலைப் பிறந்த மொழி  

வாழ்வறியும்காலமெல்லாம் புலவர் வாயில்

  துதியறிவாய், அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், 

இறப்பின்றித் துலங்குவாயே.”

 -என்று மகாகவி பாரதி, உ.வே.சாமிநாதையரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித் தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா. எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

அதற்கு நன்றி பாராட்டும் முகமாக  உ.வே.சா, தனது குருநாதர் குறித்து இரு பாகங்களாக எழுதி தமிழுக்கு அளித்த  ‘ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ என்ற நூல் (1933-34-ல் பதிப்பிக்கப்பட்டது), அக்காலத்தைய தமிழகத்தையும், மிகுந்த வறுமையிலும் தமிழ் காத்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் சிறப்பினையும் எடுத்தியம்புகிறது.

‘கற்றல், கற்பித்தல், கவி புனைதல் எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று’ என்பார் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் சுபாஷினி டிரெம்மில்.

தகுதியுடைய பெரியோரிடம் தமிழ் கற்க இரந்து நிற்கவும் பிள்ளையவர்கள் தயங்கியதில்லை. தாளாத வறுமையிலும், தமிழ் கற்க தன்னை நாடி வந்த சீடர்களுக்கு உணவும் அறிவும் ஒருங்கே அளிக்கவும் அவர் தயங்கியதில்லை. தமிழின் எந்த யாப்பு வடிவிலும் தயக்கமின்றி நினைத்தவுடன் செய்யுள் (கவிதை) புனையும் அவரது ஆற்றலுக்கு நிகரானவர் எவரும் இதுவரை பிறக்கவும் இல்லை.

தனது வாழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பெரும்புலவராக விளங்கியமை தவிர (அதுவும் சொற்ப ஊதியமே) வேறெந்தப் பதவியிலும் அவர் இருந்ததில்லை. எந்தப் பதவி மோகமும் பணத்தின் மீதான பற்றும் அவரை ஆட்கொண்டதில்லை. இன்றும் இவர் பெயர் தெரியாத பலருண்டு. ஆனால், இவரது சீடர்களான, மகா வித்துவான் உ.வே.சாமிநாதையர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூவாளூர் வித்துவான் தியாகராஜ செட்டியார் ஆகியோரை தமிழகமே ஒருகாலத்தில் கொண்டாடியது.

இவரிடம் கல்வி கற்றவர்கள் பலர் அக்காலத்தில் உயர் பதவி அடைந்தனர்; தமிழுக்கு பலர் தொண்டாற்றினர். 200 ஆண்டுகளுக்கு முன்னம் தேக்கத்தில் கிடந்த தமிழ் மொழியை உயிர்ப்பித்த சஞ்சீவியாகவே பிள்ளையவர்கள் அவதரித்தார். இவரது அடியொற்றி ஒரு தலைமுறையே தமிழுக்காக அருந்தொண்டாற்றியது. அதில் ஒருவர் தான் உ.வே.சா.

‘பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான்’ என்று தம் ஆசானைப் பற்றி சாமிநாதையர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார், பிள்ளையவர்கள் எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில்,  “எத்தனையோ கோவைகள், எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது”  என்பார்.

பிறப்பும் கல்வியும்…:

மீனாட்சி அருள்மழை பொழியும் மதுரையில் வாழ்ந்தவர்கள் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி தம்பதியர். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பி, திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார்.

தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை, அவ்வூர் மக்களுக்கு எண் கணக்கு தமிழ் நூல்களும் கற்பித்து கணக்காயன் (திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்) ஆனார். சிறிது காலத்துக்குப் பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப் பணியை மேற்கொண்டார்.

குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது, ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (06.04.1815), வியாழக்கிழமை, அபர பட்சம் துவாதசி திதியும் பூரட்டாதி நட்சத்திரமும் கூடிய நன்னாளில், மகர லக்கினத்தில், அன்னத்தாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.

ஆலவாய் அண்ணலின் பெயரையே குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர். அதன் பின் குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது. இவருக்கு ஓர் இளையவரும் தங்கையும் பிறந்ததாகவும், அவர்களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை என்றும் கூறுவார் உ.வே.சா.

அவர் பிறந்த கணத்தை சோதித்த சோதிட வல்லுனர்கள்,  ‘இக்குழந்தையால் தமிழ்நாட்டுக்குப் பெரும் பயன் விளையும்’ என்று கணித்தனர். இது பிற்காலத்தில் நிதர்சனமாயிற்று.

தனயனுக்கு தந்தையே குருவும் ஆனார். அவரிடம் மீனாட்சிசுந்தரம், நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், சதகங்கள், நிகண்டுகள், கணிதம் ஆகியவை மட்டுமல்லாது, நன்னூல் போன்ற இலக்கண நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். இளமையிலேயே நன்னூல் முழுவதும் அவருக்கு மனனம் ஆகி இருந்தது.

யாப்பிலக்கணத்துக்கு தக்கபடி, செய்யுள் புனையும் ஆற்றல் அவரிடம் இருந்ததை தந்தை கண்டுகொண்டார். அதை தன்னால் இயன்றவரை மேலும் வளப்படுத்தினார். தந்தை அறிவுறுத்தியபடி பிறகு மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவரிடம் பாடம் கேட்டார்.

திருவாவடுதுறை ஆதீனம் 14-வது பட்டம் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் மடத்தின் தலைவராக பிற்காலத்தில் ஆனவரான அம்பலவாண முனிவர், கீழ்வேளூர் சுப்பிரமணிய பண்டாரம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்,  ‘தண்டியலங்கார’  பரதேசியார் ஆகியோரிடம் பல்வேறு காலகட்டங்களில் பாடம் கேட்டார்.

திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் போன்ற தமிழ்ப் புலவர்களை அணுகி தக்க மரியாதை செலுத்தி அவர்களிடம் அளவளாவி தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.

துறை மங்கலம் சிவப்பிரகாசர், காசிமடம் குமரகுருபரர், சிவஞான முனிவர், அதிவீரராம பாண்டியர் ஆகியோரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த அவர், கம்ப ராமாயணம், கல்லாடம், சேக்கிழாரின் பெரிய புராணம், சைவத் திருமுறைகள் ஆகியவற்றிலும் ஆழ்ந்து அனுபவித்தார். தனது இலக்கண, இலக்கியத் தேர்ச்சியை மாணவர்களுக்கு அள்ளி வழங்கினார்.

மண வாழ்க்கை:

இவரது 15-வது வயதில் தந்தை காலமானார். அதன் பின் உறவினர்கள், காவேரியாச்சி என்ற பெண்ணை இவரது வாழ்க்கைத் துணைவியாக அமைத்தனர். இவர்களது மகன் சிதம்பரம் பிள்ளை.

தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திரிசிரபுரம் (தற்போதைய திருச்சி) செல்லத் தீர்மானித்தார். திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். அங்கு, முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் ‘திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ எனக் குறிப்பிட்டனர்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்ட அவர், தமிழ் கற்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டார். பலருக்குக் கற்பித்த காலத்திலும் தன்னைவிட புலமையானோரிடம் பாடம் கேட்பதை அவர் தொடர்ந்தார்.

திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும் கீழ்வேளூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார். இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.

தனது 21-வது வயதில், திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்பாரிடம் சிவ தீட்சையும் க்ஷணிகலிங்க தாரணமும் பெற்றார். அன்று முதல் அவரை வெண்ணீறு வேந்தராகவே தமிழகம் வாழ்நாள் முழுவதும் கண்டது.

நூல்களைக் கற்றுணர்ந்தவர்களிடம் முழுமையாகப் பாடம் கேட்டல் என்ற நியதி இருந்த காலம் அது. அக்காலத்தில் வாழ்ந்த பிள்ளையவர்கள், மாணவர்களுக்கு உண்ணும் நேரமும், உறங்கும் வேளையும் தவிர, நாளின் எல்லா நேரங்களிலும் பாடம் சொல்வதையே வாழ்வின் பயனாகக் கருதினார். பண்டைய குருகுல முறையில், மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் பெறாமல் அவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கி தமிழ்க் கல்வியைத் தழைக்கச் செய்து, தமிழுணர்வைச் செழிக்கச் செய்தார்.

தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களை தனது புதல்வர்களாகவே கருதி பாடம் கற்பிப்பார் பிள்ளையவர்கள். இவரது அறிவுத்திறன் அறிந்து உதவிய நல்லோரின் உதவியால் தனது ஆசான் பணியைக் குறைவறச் செய்தாலும், இவரால் குடும்பம் வசதியாக வாழ முடிந்ததில்லை. அதைப் பற்றி அவரும் அக்கறை கொண்டதில்லை.

தல புராணங்கள் இயற்றல்:

அக்காலத்தில் புகழ் பெற்ற கோயில்களுக்கு தல புராணம் எழுதும் வழக்கம் இருந்தது. அதை அடியொற்றி, பிள்ளையவர்களும், நெருங்கியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி பல திருக்கோயில்களுக்கு தல புராணங்களை இயற்றினார்.

அதுவரை வழக்கத்தில் இருந்த தல புராணங்களுக்கு மாற்றாக, அற்புதமான தமிழ் நடையில், கற்பனைச் செழிப்பும், கருத்து வளமும், உவமை நயமும், திருத்தலப் பெருமையை தெளிவாக விளக்கும் நூல்நயமும் கொண்டதாக இவர் எழுதிய தல புராணங்கள் அமைந்தன. இதனால் பிள்ளையவர்களின் புகழ் பரவியது.

சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்தங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவரான பிள்ளையவர்கள், தனது காலத்தில் அருகிய இந்த இலக்கியங்களுக்கு புத்துயிருட்டினார். பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன்- இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார்.

பிள்ளையவர்கள் எழுதியவற்றில்,  ‘குசேலோபாக்கியானம்’ என்ற காப்பியமும்,  ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை.

1851-ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய  ‘செவ்வந்திப்புராணம்’ என்னும் நூலைப் பதிப்பித்தார். இதன்மூலம் பதிப்பாசிரியருக்கும் இலக்கணமானார்.

மயிலாடுதுறை வாசம்:

பிறகு தமிழார்வம், ஆசிரியத் தொழில் நிமித்தமாக, 1860 முதல் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று வந்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

இவரது அறிவுத் திறனை அறிந்த திருவாவடுதிறை ஆதீனத்தால் அங்கு வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாண தேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு  ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்றுமுதல்  ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார்.

1871-ல் உ.வே.சாமிநாதையர் மகாவித்துவானின் மாணாக்கரானார். அவர் இறுதிவரை தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். அதன் விளைவாகவே தமிழ்ப் பற்றும் நூல்கள் மீதான நேசமும் பெற்றவரானார் உ.வே.சா. தமிழின் முதல் புதினமான  ‘பிரதாப முதலியார் சரித்திரம்’  எழுதிய வேதநாயகம் பிள்ளையும் பிள்ளையவர்களின் அறிவமுதைப் பெற்றவரே.

மகாவித்துவான் பிள்ளையவர்கள், பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். இது அவரது பக்திக்கு உதாரணமாக இருந்தது. செல்லுமிடம் எல்லாம் தலபுராணம், பதிகம் பாடுதல் அன்னாரது இயல்பு. எனவே பல தலங்க்கள் இவரால் பாடல் பெற்றன.

பிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் புதுச்சேரி சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசத்தின் அடைக்கலப்பத்தை உ.வே.சா பாட,  தை மாதம் 20-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, 01.02.1876-ல் தம் 61-ஆம் வயதில் சிவன் சேவடி சேர்ந்தார்.

எழுத்தில் அடக்க இயலாச் சிறப்பு:

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், புலவர்களின் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர் பிள்ளையவர்கள்.

இவர் வாழ்ந்த காலத்தில் செல்வம் பெறவில்லையே தவிர, செல்வாக்கு குறைந்ததில்லை. தமிழுக்கு இவரால் மரியாதையும் அபிமானமும் பெருகியது. அவர் செல்வம் நாடாதவராக இருந்ததே, அவரது குடும்பத்தின் வறிய நிலைக்குக் காரணம் ஆனது. ஆனால், அதை பிள்ளையவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. தனது குடும்பம் வறுமையில் உழன்றபோதும் நாடி வந்த மாணாக்கர்களுக்கு உறைவிடத்துடன் உணவும் அளித்து தமிழ் போதித்த பெருந்தகை அவர்.

அவரை நாடி செல்வம் சேர்க்கும் பல வாய்ப்புகள் வந்தன. அவர் நினைத்திருந்தால், சம்மதித்திருந்தால், அவர் காலடியில் பொன்னைக் கொட்ட பலர் தயாராகவே இருந்தனர். ஆனால், பொன்னுக்கு அவர் மயங்கவில்லை. அவர் மனம் (மனம் என்றே கூற வேண்டும், மனது என்று கூறக் கூடாது எனபது பிள்ளையவர்களின் விளக்கம்) முழுவதும் தமிழ் வளர்ச்சியிலும், சைவ நாட்டத்திலும் தான் ஆழ்ந்திருந்தது.

தனது குறுகிய வாழ்நாளில், இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அதன் பட்டியல்:

 • தலபுராணங்கள்- 22
 • சரித்திரம்- 3
 • மான்மியம்- 1
 • காப்பியங்கள்- 2
 • பதிகம்- 4
 • பதிற்றுப்பத்தந்தாதி- 6
 • யமக அந்தாதி- 3
 • மாலை- 7
 • பிள்ளைத்தமிழ்- 10
 • கலம்பகம்- 2
 • கோவை- 3
 • உலா- 1
 • தூது- 2
 • குறவஞ்சி- 1
 • பிறநூல்கள்- 7

-என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80.

மேலும் இவர் இயற்றிய தனிச் செய்யுள்களின் எண்ணிக்கை அளவிடற்கரியது. எந்தப் பொருளைக் கொடுத்துப் பாடச் சொன்னாலும், சில நிமிடங்களில் யாப்பமைதி கெடாமல், தெளிவாகப் புரியும் வண்ணம் பாடுபவர் என்பதால், அவரது அன்பர்களும், நண்பர்களும் இவரால் பாடப்பெற்றுள்ளனர். அவற்றின் தொகுப்பு பல்லாயிரத்தைத் தாண்டக் கூடும்.

பிள்ளையவர்கள் பாடிய பல பாடல்கள் பதிப்பிக்காமல் மறைந்து போயின. ஆயினும் அவர்தம் முதன்மைச் சீடரான தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிள்ளையவர்களின் 5,021 பாடல்களைப் பாதுகாத்து வழங்கி உள்ளார்.

“பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை

எனப் போர்த்த பண்பின்மிக்க

ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்.”

-என்று சி.சாமிநாத தேசிகர் இவரைப் பாராட்டுவார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வாழ்ந்த தலைசிறந்த தமிழறிஞர் பிள்ளையவர்கள். ‘கருவிலே திருவுடையார்’ எனக் கூறுவது போல பிள்ளையவர்கள் கருவிலே தமிழுடையார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி கம்பருக்குப் பின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர், வாராது வந்துதித்த புலமைக் கதிரவன் பிள்ளையவர்கள்.

இவரால் வளமுற்ற தமிழ் பிற்காலத்தில் மகாகவி பாரதியால் மறுமலர்ச்சி கண்டது. அவ்வகையில், பக்தி இலக்கியத்துக்குப் பிந்தைய தமிழை தனது சீடன் உ.வே.சா. வாயிலாக பாரதிக்கு மடைப்படுத்திக் கொடுத்தவர் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களே.

தனது ஆசான் பிள்ளையவர்கள் மீது சீடர் உ.வே.சா. எழுதிய கீழ்க்காணும் பாடல் (ஆசிரிய விருத்தம்), குருவின் பெருமையை தரணி உள்ள வரை நிலைக்கவைக்கும்:

சுத்தமலி துறைசையிற்சுப் பிரமணிய

    தேசிகமெய்த் தூயோன் றன்பால்

வைத்தமலி தருமன்பின் வாழ்ந்தினிய

     செந்தமிழை வளர்த்தென் போல்வார்க்

கத்தமலி நூல்கணவின் மீனாட்சி

     சுந்தரப்பேர் அண்ண லேநின்

புத்தமுத வாக்கினையு மன்பினையு

     மறவேனெப் போது மன்னோ.

குறிப்பு:

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்.

காண்க:

வமுமுரளி இணையதளம்

%d bloggers like this: