Category Archives: எழுத்தாளர்

புரட்சிக்கார எழுத்தாளர்

-ம.பூமாகுமாரி

 

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

வ.வே.சு. ஐயர்

(பிறப்பு: 1881, ஏப்ரல் 2- மறைவு: 1925, ஜூன் 3)

ஏப்ரல் 2, 1881-இல், தமிழகத்தில், திருச்சி வரகனேரியில் பிறந்த வரகனேரி வெங்கடேச சுப்ரமணியம் ஐயர், ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துக் போராடிய இந்திய வீர மகன்களில் குறிப்பிடத்தக்கவர்.

சுப்ரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் சம காலத்தவர். தமிழ் எழுத்தாளரும் ஆவார். கம்பரின் இராமாவதாரத்தையும், திருவள்ளுவரின் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். வாஞ்சிநாதனின் குரு.

இளம்பிராயம்:

வரகனேரியில் பிறந்த இவர், திருச்சி செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரியில் வரலாறு, அரசியல், லத்தீன் மொழி கல்வி பயின்றவர். வக்கீல் ஆக வேண்டும் என்ற ஆசையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் 1902-இல் தேர்ச்சி பெற்று, திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் பளீடராக சேர்ந்தார். 1906-இல் ரங்கூனுக்கு இடம் பெயர்ந்தார்.

1907-இல் லண்டன்,  ‘பாரிஸ்டர் அட்லா’ ஆக முயற்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், அங்கிருந்த புரட்சியாளர்களின் பாசறையான இந்தியா ஹுஸில் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, மேடம் காமா, சாவர்க்கர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் மகாகவி பாரதி இந்தியாவில் நடத்திவந்த ‘இந்தியா’ பத்திரிகைக்கு லண்டலிருந்து செய்திகளை நிருபராக எழுதி அனுப்பி வந்தார்.

குறிப்பாக, விநாயக தாமோதர் சாவர்க்கரின் சந்திப்பு அவரது வாழ்வில் திருப்பு முனையானது. சாவர்க்கரின் பாதிப்பால் ஐயர், போராட்டம் மூலமே இந்தியா சுதந்திரம் அடைய முடியும் என்று முழுமையாக நம்பினார்.

வெளிநாட்டில்:

லண்டனில் நடந்த கர்சான் வில்லி படுகொலையில் மதன்லால் திங்ரா என்ற இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.  இந்த ராஜவழக்கில்  ஐயர் மேல் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவ்வழக்கில் கைதான வீர சாவர்க்கர், இந்தியாவிற்கு கடல் மார்க்கமாக 1910-இல் அனுப்பி வைக்கப்பட்டபோது, பிரான்ஸ் நாட்டின் மார்சைல்ஸ் துறைமுகத்தில் துணிச்சலாகத் தப்பிக்க முயன்றார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் புகழ்பெற்ற விஷயம் அது. சாவர்க்கரை துரதிர்ஷ்டவசமாக பிரஞ்ச்காவலாளிகள் கைப்பற்றினர்.

சாவர்க்கரின் அறிவுறுத்தலால் மாறுவேடத்தில் லண்டலிருந்து தப்பிட வ.வே.சு ஐயர், பாண்டிசேரியில் 1916-இல் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்தப்டு அரவிந்தர், பாரதி ஆகியோருடன் இணைந்து 1920 வரை, தேச விடுதலைப்போரில் ஈடுபட்டார்.

இந்தியாவில்:

புதுச்சேரியில் அய்யர் இருந்தபோதுதான், வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். வன்முறையில் இறங்கித்தான் ஆங்கிலேயரின் அராஜகத்தில் இருந்து விடுபட முடியும் என இளைஞர்களுக்கு போதித்தார். ஆஷ்துரையைக் கொலை செய்யும் சதியில் வ.வே.சு.ஐயருக்கு பங்கு இருந்தது. திருநெல்வேலியில் கலெக்டராக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல, அரசியல் படுகொலையை நிகழ்த்த, ஐயருக்கும் பாரதியாருக்கும் நெருக்கடி ஏற்பட்டது.

எம்டன் …

22 செப். 1914-இல் எம்டன் கப்பல் மெட்ராஸ் துறை முகத்தில் புகுந்து குண்டு மழை பொழிந்தது. புதுச்சேரியில் உள்ள ஐயர் மற்றும் நண்பர்களே அதற்குக் காரணம் என கற்பித்தது ஆங்கிலேய அரசு. அவர்களை ஆப்பிரிக்காவிற்கு நாடு கடத்த வேண்டுகோள் வைத்தது பிரெஞ்சு அரசிடம். பிரெஞ்சுக்காரர்கள் குற்றங்களை ஏற்றுக் கொண்டாலும் தண்டனைகளை வழங்க மறுத்து விட்டனர். இந்தக் காலகட்டத்தில் தான் ஐயர் திருக்குறளை மொழிபெயர்த்தார். என்ன ஆளுமை பாருங்கள்!

முதல் உலக மகா யுத்தம் முடிந்த பின், ‘தேச பக்தன்’ இதழுக்கு ஆசிரியராக ஆனார் ஐயர். இருக்க விட்டால் தானே? 1921-இல் ராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கம்ப ராமாயணம் – ஒரு பார்வை’ புத்தகத்தை எழுதினார். ஐயர் அவர்கள் தான் தமிழ் சிறுகதை மரபைத் துவக்கி வைத்தவர். (குளத்தங்கரை அரசமரம் – தான் தமிழின் முதல் சிறுகதை என்பது ஆய்வாளர்களின் கருத்து). ‘பால பாரதி’ என்ற தமிழ் இலக்கிய இதழை ஆரம்பித்தார்.

பிற்காலத்தில் (1922) சேரன்மஹாதேவியில் (திருநெல்வேலி மாவட்டம்) ஒரு குருகுலத்தையும் பரத்வாஜ ஆசிரமத்தையும்  நிறுவினார்.

வீரச் செரிவான வாழ்க்கை – முடிவுக்கு வருதல்.

இத்தனையும் விறுவிறுவென நடந்து முடிந்து வீரம் செரிந்த சுவாரஸ்யக் கதையாக நகர்கையில், விதி குறுக்கே பாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாபநாசம் நீர் வீழ்ச்சியில் மகள் சுபத்ரா அடித்துச் செல்லப்பட, ஐயர் தண்ணீரில் பாய்ந்து காப்பாற்ற முயன்றார். இங்கிலீஷ் கால்வாயையே நீந்திக் கடந்த ஐயருக்கு பாபநாசம் நீர்வீழ்ச்சி யமனாய்ப் போயிற்று. ஜூன் 4, 1925-இம் வருடம் 44 வயதான ஐயர் இப்பூவுலகை நீத்தார்.

குறிப்பு:

திருமதி பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:   சாவர்க்கரின் தமிழகத் தோழர்

.

Advertisements

பத்திரிகை உலகின் முதுகெலும்பு

-ம.பூமாகுமாரி

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

ராம்நாத் கோயங்கா

(பிறப்பு: 1904, ஏப்ரல் 3- மறைவு: 1991, அக்டோபர் 5)

 

பிரெஞ்ச் தேசத்தில் பண்டைய காலத்தில் சமூகத்தை மூன்று  பெரும் பிரிவுகளாக (எஸ்டேட்) பிரித்திருந்தனர். முதல் எஸ்டேட் மதகுருமார்கள், இரண்டாவது எஸ்டேட் பிரபுக்கள் (அரசர்கள் இதில் வருகிறார்கள்). மூன்றாவது சாமான்யர்கள். நவீன யுகத்தில் 4, 5 எஸ்டேட்டுகள் சேர்க்கப்பட்டன. இந்தியாவில் நான்காம் எஸ்டேட் (பத்திரிகைத் துறை) என்று சொன்னால் பளிச்சென சில பெயர்கள் மின்னி மறையும். நமது மனத்திரையில் கட்டாயம் ராம்நாத் கோயங்கா பெயர் தோன்றும்.

RNG என்று பொதுவாக எல்லோராலும் அழைக்கப்பட்டவர். 1904, ஏப்ரல் 3-ல், பிகாரின் தர்பங்கா ஜில்லாவில் பிறந்தார். பின்னாளில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையை வலுவாக,  வெற்றிகரமாக நடத்தி, பத்திரிகை உலகில் தனக்கென ஓர் இடத்தை அமைத்துக் கொண்டவர்.

வாரணாசியில் படிப்பு முடித்த பின், அவரது குடும்பம், நூல் மற்றும் சணல் வியாபாரம் செய்ய சென்னைக்கு அனுப்பியது. அவரோ வடகிழக்கு இந்தியாவில் பிறந்து, வட இந்தியாவில் பயின்று, தென்னிந்தியாவில் பத்திரிகைத் தொழிலில் வெற்றிக்கொடி நாட்டினார். ஒரு டீலராக சென்னை வந்தவர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’  பத்திரிகையின் பங்குகளை வாங்கினார். இரண்டே ஆண்டுகளில் கம்பெனியை தன்வசப்படுத்தினார். தேசிய அளவில் பத்திரிகை உலக நெட்வொர்க் ஒன்றை உருவாக்கினார். இறுதியில் 14 பதிப்புகள் வெளிவந்தது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. அதுவே இந்தியாவின் மிகப் பெரிய ஆங்கில நாளேடு. மேலும் பல்வேறு இந்திய மொழிகளில் ஆறு நாளேடுகள் (தமிழில் தினமணி) வெளிவந்தது இந்தக் குழுமத்திலிருந்து.

1930-களில், காந்திஜியுடன் கரம் கோர்த்து இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், ஜவஹர்லால் நேரு தலைமையில் இணைந்து செயலாற்றினார்.

1971-ல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து, 1975-ல் ஜெயபிரகாஷ் நாராயணனின் போராட்டத்தை தீவிரமாக கோயங்கா ஆதரித்தார்.  அது காங்கிரஸ் கட்சிக்கு எரிச்சலூட்டியது. இந்திரா காந்தி கொன்உவந்த நெருக்கடி நிலையை எதிர்த்து பத்திரிகை உலகம் வாயிலாகப் போராடினார்.

தேசத்தின் இருட்டுக் காலமான அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு மிக அதிகமான பிரச்னைக்கு உள்ளானது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. இந்திரா காந்தியின் கோபத்திற்கு ஆளான பின் எவரேனும் சுமுகமாக தொழில் செய்ய முடியுமோ? சென்ஸார் நீங்கியபோது சேர்த்து வைத்திருந்த குமுறலைக் கொட்டித் தீர்த்தது இந்தியன் எக்ஸ்பிரஸ்.

‘கட்டாய கருத்தடை, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்கள் – வெகுஜன கட்டாய மீள் குடியேற்றம், பரந்துபட்ட ஊழல், மற்றும் அரசியல் கைதுகள்’  என தினமும் தீபாவளிப் பட்டாசாய் கொளுத்திப்போட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். அரசியல் காழ்ப்புணர்ச்சி, அடக்குமுறை, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவது என்ற எதேச்சதிகாரப் போக்கு – வரலாற்றில் இவற்றுக்கான மிக அழுத்தமான உதாரணமாக இந்திரா காந்தியின் காங்கிரஸும், அவசரநிலைக் காலமும் இருக்கிறது. அதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியதும், ஆவணப்படுத்தியதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தான். அந்த இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தைரியம் கொடுத்து ஊக்குவித்தது வேறு யார்? ராம்நாத் கோயங்கா தான். தைரியத்தின் மறுபெயர் கோயங்கா.

அந்தக் கட்டுரைகள் இந்திரா காந்தியின் 1977 தோல்விக்கு அடிகோலின. அதுமட்டுமல்ல, ஜனதா கட்சி உருவாகவும், ஆட்சி மலரவும் கோயங்கா பாடுபட்டார்.  பேனாமுனை, வாள்முனையை விட சக்தி வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் ராம்நாத் கோயங்கோ.

ஜனதா கட்சியின் குழப்பங்களால் மொரார்ஜி தேசாஇ அரசு கவிழ்ந்த பின், 1980-ல் இந்திரா காந்தி மறுபடி அரசியலில் உயிர்த்தெழுந்தார். அப்போது வரி, சொத்து வழக்கு என சாட்டையடி கிடைக்கிறது அரசிடமிருந்து. இந்தியன் எக்ஸ்பிரஸும், கோயங்காவும் அப்போதும் கலங்கவில்லை. 1984-ல் இந்திரா காந்தி அரசியல் படுகொலை செய்யப்படுவது வரை கோயங்காவுக்குப் போராட்டம் தான். ஆனால் அவர் என்றும் அதிகார அரசியலுக்கு முன் மண்டியிடவில்லை. 1991, அக். 5-இல் இந்தப் போர்வீரர் மறைந்தார்.

எழுத்தாளர் பி.ஜி.வர்கீஸ், 2005-ல்  ‘நான்காவது எஸ்டேட்டின் போர் வீரன்: எக்ஸ்பிரஸின் ராம்நாத் கோயங்கா’ என்ற புத்தகத்தில் அவரைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:

ராம்நாத் கோயங்கா, பல முகங்கள் கொண்ட ஒரு மனிதர். சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியவாதி, அரசியல்வாதி, தொழிலதிபர், செய்தித்தாள் முதலாளி.  இவை எல்லாவற்ளையும் விட, பத்திரிகை சுதந்திரத்திற்காகப் போரிட்ட வெல்லமுடியாத போர்வீரன். பத்திரிகை சுதந்திரத்தின் எல்லைக் கோடுகளை அச்சமின்றி காவல் காத்தவரும், விரிவடையச் செய்தவரும் அவரே. நிறைய சமயங்களில் அது அவருக்குப் பெரும் பாதிப்பை உண்டு பண்ணியது. ஒரு பத்திரிகை பதிப்பகத்தாராக அவர் செய்தது,  சாதாரண பிரஜையை அதிகாரம் உள்ளவராக ஆக்கியது, அவனுடைய தெரிந்துகொள்ளும் உரிமையைத் தூக்கிப் பிடித்தல், அதிகாரத்தில் உள்ளவர்களை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வைத்தல் ஆகிய விஷயங்களில் அவர் சலிக்காமல், மிகுதியான ஆர்வத்துடன் செயல்பட்டார்.

மேலும், வர்கீஸ் ‘ராம்நாத் கோயங்கா – ஊடக மன்னர்’ என்ற தலைப்பில் ‘இந்தியா டுடே’ இதழில் எழுதியது இது…

ஒரு மதிநுட்பமான மார்வாரி, சென்னையில் குடியேறி, பத்திரிகை உலகின் பிரபுவாக உயர்ந்தவர். அரசியல் ரீதியாகவோ, பணம் கொடுத்து உதவியோ, தனக்கு சாதகமாக ஆட்களைச் சேகரித்தவர். தேவைப்படுவோருக்கு தன் செல்வாக்கால் உதவி செய்தவர்; ஆனால் பதிலுக்கு எதையும் எதிர்பாராதவர்.

அவர் முழுமையான தேசியவாதி. 1942 இயக்கத்தின் போது தானே தன்னை  ‘காங்கிரஸ் குவார்ட்டர் மாஸ்டராக’ நியமித்துக் கொண்டு ‘வெள்ளையனே வெளியேறு’ தலைமறைவு புரட்சிக்காரர்களுக்கு வெடிமருந்துகள் சப்ளை செய்தவர். நிலைகுலைய வைக்கும் எழுத்துக்களைப் பரப்புரை செய்ய அச்சிட்டுத் தந்தவர். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரி, கு.காமராஜ், ஜெயபிரகாஷ நாராயணன், இந்திரா காந்தி என எல்லோருடனும் நேரடித் தொடர்பில் இருந்தவர்.

அவரது சக்தி, எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவதில் அவருக்கு இருந்த வேகம், கடின உழைப்பு ஆகியவற்றை வியப்பதோடு நிறுத்தி விடாமல், நாமும் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.

 

குறிப்பு:

திருமதி. ம.பூமாகுமாரி, பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.

காண்க:

ஊடக உலகின் ஒளிவிளக்கு 

ஸ்வதந்திர கர்ஜனை – 32

.

தமிழகத்தின் புதின அரசி

– ம.பூமாகுமாரி

 

வை.மு.கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி

வை.மு.கோதைநாயகி

(பிறப்பு : 1901, டிச. 1 – நினைவு : 1960, பிப். 20)

 

ஒரு தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக முதன்முதலில் பதவி வகித்தவர் என்ற பெருமை ஒன்றே போதும்  இவர் என்றென்றும் பத்திரிகை வானில் ஜொலிப்பதற்கு. நாவலாசிரியை, எழுத்தாளர், பதிப்பாளர், பாடகி,  இசையமைப்பாளர்,  சமூகப்போராளி, பேச்சாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை என, பன்முக ஆற்றலால் மிளிர்ந்து பெண்மைக்குப் பெருமை சேர்த்தவர்  பெருமகளார் வை.மு.கோதைநாயகி. முதல் துப்பறியும் நாவலைத்  தமிழுக்கு  தந்தவர் என்பது இவருக்கு  கூடுதல் சிறப்பம்சம்.

படிப்பறிவு  பயிலாத  கதைச் சொல்லி:

 பள்ளிக்கூடம் செல்லாத, பாடங்கள்  படிக்காத  பால்ய சிறுமியாக  வளர்ந்தவள் கோதை.  5 வயதிலேயே 9 வயது சிறுவனுக்கு மனைவியான கோதை  பிறந்தது,  வைதீகக்  குடும்பத்தில். வீட்டினில் எப்போதுமே ஒலித்துக் கொண்டிருந்த திருவாய்மொழிப்  பாசுரங்களைக்  கேட்டதால்  தாய்மொழி மீது  தீராதக் காதலை  மனதிலே வசியப்படுத்திக் கொண்டாள் . கதைசொல்வதும், சங்கீதம் இசைப்பதும்  மிகவும் பிடித்த விஷயங்களாக  தன்னுள் வரித்துக்கொண்டாள்.
விக்கிரமாதித்யன் மன்னன் முதல்  தெனாலிராமன்  வரை வழக்கிலிருந்த அத்தனைகதைகளையும் சொல்லி  ஆச்சரியப்பட  வைத்தாள் . கதைகள் சொல்வதில் தணியாத தாகமும், சொல்லும் விதத்தில் தனித்துவமான  பாணியும் இருந்ததால்,  கோதையின்  கதைகளுக்குள்  மயங்கியது  குழந்தைகள் மட்டுமல்ல , பெரியவர்களும் தான்.

 கணவன் என்னும் தோழன் :

 அந்தக் காலத்தில் (இந்தக் காலத்திலும்தான்) இப்படி ஒரு கணவனா  என  வியக்க வைத்த பார்த்தசாரதியை  துணைவராகப்  பெற்றது  கோதையின் பாக்கியமே.  புராணங்களையும், வேதங்களையும் கற்க  ஏற்பாடு செய்ததோடு,    கோதையை நாடகங்களுக்கும் அழைத்துச் சென்றார் கணவர்.
நாடகக்கொட்டகைக்குச் சென்று  நாடகங்கள்  காணப்  பெண்களை  அனுமதிக்காதகாலத்திலும்  தன்  மனைவியை அழைத்துச் சென்றதோடு, அவரது எல்லாவகையான முன்னேற்றத்துக்கும்  ஒரு தோழனாகவே துணை புரிந்துள்ளார்.

படிக்காத எழுத்தாளி,போராளி :

 எழுதப் படிக்கத் தெரியாத  கோதை  சொல்லச் சொல்ல  தோழி பட்டம்மாள் எழுதிய கதை ‘இந்திரமோகனா’  வடுவூர் துரைசாமி ஐயங்கார் அவர்களால் நடத்திவந்த ‘மனோரஞ்சனி’ இதழில்  வெளிவந்தது. பின்னர் ‘ஜகன்மோகினி’  என்னும் பத்திரிகைக்குப்  பொறுப்பேற்று சிறப்பாக  நடத்தினார்.  அதன் வாயிலாக  இந்து- முஸ்லிம் ஒற்றுமை,  பெண்விடுதலை, சுதந்திர வேட்கை, மதுவிலக்கு, விதவைத் திருமணம் என சமூக முன்னேற்றத்திகான  ஆயுதமாக எழுத்துக்களைக் கையாண்டவர் வை.மு.கோதைநாயகி.
மேலும் மேடைகளிலே  குட்டிக்குட்டிக் கதைகளைச் சொல்லி,  கேட்பவர்களின் மனதில் தனது கருத்துக்களை ஆழமாகப் பதியவைப்பதில் கைதேர்ந்தவராகவும் விளங்கினார். நாவாற்றல் மிக்க தீரர் சத்தியமூர்த்தியும், கர்மவீரர் காமராஜரும் வை.மு.கோதைநாயகியின்  பேச்சுக்கு ரசிகர்களானதில் வியப்பில்லையே.

இன்னொரு முகம்   இசை நாயகி:

கேட்போரை ஈர்க்கும் காந்தக்குரல், தெளிவான உச்சரிப்பு,  ஆழ்ந்த சங்கீத ஞானம்  ஆகியவை இணைந்த ஒரு பாடகியாகவும்  கோதைநாயகி அவர்கள் திகழ்ந்தது   நம்மையெல்லாம்  மேலும்  ஆச்சரியப்படச் செய்கிறது. கோதைநாயகியால்  ஊக்கம் பெற்றுப்  பின்னாளில் இசைமேதையாய்   புகழ்ப்பெற்றவர்  டி.கே.பட்டம்மாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாகவி பாரதியார்  வை.மு.கோதைநாயகியின்  பாட்டுக்கு ரசிகர். பின்னாளில்  டி.கே.பட்டம்மாள் அவர்களின் தேனிசைக்குரலில் பாடி இசையுலகமே மயங்கிய ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற  பாடல் வை.மு.கோதைநாயகி அவர்களுக்காகவே பாரதியார் எழுதியது என்ற செய்தி வை.மு.கோ. அவர்களின் உன்னத வாழ்வுக்கு ஓர் உதாரணம்.

தேசப்பிதாவுடன் சந்திப்பு :

காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் அன்னையுடனான சந்திப்பு  கோதைநாயகி அவர்களின்  வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தியது. காந்திஜியின் ஆதர்சமான ஆளுமையும்,  எளிமையான வாழ்வும் மற்றும் சத்தியத்தின் மேல் அவருக்கிருந்த அசைக்கமுடியாதப்  பற்றும் அவரை ஈர்த்தன.
அதன்பின், பட்டாடைகள் அணிவதையும், தங்க ஆபரணங்கள் பூணுவதையும் விடுத்து, காதியுடை  உடுத்தி சுதந்திரப் போராட்டத்தில்  தன்னை  ஈடுபடுத்திக் கொண்டார். மதுவிலக்குக்காகப்  போராடி  8 மாதங்கள் சிறைத் தண்டனைப் பெற்றார். அந்நியத் துணி  பகிஷ்கரிப்பு, லோதி கமிஷன் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துக்கொண்டதால் சிறை வாழ்க்கையை அனுபவித்தார்.

திரைப்படத் துறையிலும்  முத்திரை:

தணிக்கைக் குழு  உறுப்பினராக 10 ஆண்டுகள் பணியாற்றி திரைப்படங்களில் தேசபக்திக்கும், பெண்மைக்கும் முக்கியத்துவம் தரும் காட்சிகள் இடம்பெறுவதை ஊக்குவித்தார். கோதைநாயகியின் சில நாவல்கள் திரைப்படங்களாகவும்  வெளிவந்துள்ளன.

சேவைப்பணிகள் செய்த செம்மல் :

காந்திஜியின்  நினைவாக ‘மகாத்மாஜி சேவா  சங்கம்’ துவக்கி  பெண்களுக்கும், எளியோருக்கும்  பல சேவைகள் புரிந்தார். அதற்காக அரசாங்கம் தந்த 10 ஏக்கர் நிலத்தை ஸ்ரீ வினோபா பாவேயின் ‘பூதான இயக்கத்திற்கு’  நன்கொடையாய்  வழங்கினார்.
தன்  வாழ்நாள் முழுதும்  தேச விடுதலைக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட வை.மு.கோதைநாயகி  அவர்கள் படைத்த நாவல்களின் எண்ணிக்கை 115 என்றால்  இவரை   ‘தமிழ்  இலக்கியத்தின் புதினஅரசி’என்றழைப்பதில்  நமக்கெல்லாம் பெருமிதம் தானே!

போர்க்களத்தின் கவிக்குயில்

– ம.பூமாகுமாரி

SarojiniNayudu

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு

(பிறப்பு: 1879, பிப். 13- மறைவு: 1949, மார்ச் 2)

தேசத்திற்காக இசைத்த குயில் சரோஜினி. சரோஜினி நாயுடு ஒப்பில்லாப் பெண்மணியாகத் திகழ பல காரணங்கள் : அவர் ஒரு மழலை மேதை. கவிதாயினி. அழகை ஆராதித்தக் கவிதைகள். தொண்டுள்ளம் கொண்டவர். தேசப் பற்று மிக்கவர். சுதந்திர போராட்ட வீராங்கனை. அரசியல் வானில் ஜொலித்தவர்.

.   1905-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினை ஏற்படடது, இவர் மனதை பாதித்தது. அதுவே தேச விடுதலையில் ஈடுபாடு ஏற்படக் காரணம் ஆயிற்று. கோபால கிருஷ்ண கோகலேயின் சந்திப்பும் இவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தியது. அவர் மூலம் காந்தி, நேரு, சி. பி. ராமசாமி ஐயர், தாகூர், முகமது அலி ஜின்னா ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. தேசம் பற்றிய சிந்தனை, பேச்சு, கனவு என ஆகிப்போனது சரோஜினியின் வாழ்க்கை. ஒருசமயம், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும் ஆனார். இந்தக் குயில் தேச விடுதலை இயக்கத்தின் பதாகை தாங்கி அமெரிக்க, ஐரோப்பிய என உலக வெளியெங்கும் பறந்தது.

 .
  1915-இல் நாடு முழுக்க சரோஜினி நாயுடு பயணம் மேற்கொண்டார். இளைஞர் நலன் உழைப்பின் மகத்துவம், பெண்கள் முன்னேற்றம், தேசியம் ஆகியவற்றை எடுத்துக்கூறும் உரைகளும், பணிகளும் ஆற்றிய வண்ணம் இருந்தார். இக்காலத்தில் தான் மேற்கு பிகாரின் சம்பரான் மாவட்டத்தில் ‘இண்டிகோ தொழிலாளர்’களின் போராட்டத்தை முன்னெடுத்தார்.
 .
  ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கங்களில் சரோஜினியின் பங்கு குறிப்பிட தகுந்தது. இந்த அயராதப் பணியே அவரை ஆக்ரா – அவுத் ஐக்கிய மாகாணத்தின் முதல் ஆளுநராக உயர்த்தியது.
 .
  2015-இல் பிப்ரவரி 13 அவரது 135வது பிறந்த தினத்தன்று கூகுள் டூடுல் வரைந்து சிறப்புச் செய்தது.
 .
 12 வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர் ஒரு தேச விடுதலை விரும்பியாக பின்னர் மலர்ந்தவர். கவிதைகளில் காட்டிய முகம் வேறு. தொண்டாற்றிய  முகம் வேறு. தேசப் பணி செய்த முகம் வேறு. பெண் விடுதலைக்காக அரும்பணி ஆற்றிய முகம் வேறு. அயராத உழைப்பு இந்த அத்தனை முகங்களிலும் பளிச்சிடுவதைக் காண முடிகிறது.
.
குறிப்பு:
ஸ்ரீமதி ம.பூமாகுமாரி, எழுத்தாளர்.
.

வந்தேமாதரம் தந்த ரிஷி

-என்.டி.என்.பிரபு

பக்கிம் சந்திர சட்டர்ஜி

பக்கிம் சந்திர சட்டர்ஜி

பக்கிம் சந்திர சட்டர்ஜி

(பிறப்பு: 1838, ஜூன் 27 – மறைவு: 1894 ஏப்ரல் 8)

‘வந்தே மாதரம்’

-இந்த வார்த்தைகள் விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர எழுச்சியை, உத்வேகத்தை ஊட்டிய மந்திர வார்த்தைகள்.

அன்று மட்டும் அல்ல, இன்றும் ‘வந்தே மாதரம்’ என்றால் நாடி நரம்பெல்லாம் தேசபக்தி கணல் பாய்கிறது.

இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், இந்த நாட்டை நம் அனைவருக்கும் சொந்தமாக்க விதை தூவியவர், பக்கிம் சந்திர சட்டோபத்யாய என்னும் பக்கிம் சந்திர சட்டர்ஜி.

1838 ஜூன் மாதம் 27 -ஆம் தேதி, வங்க மாகாணத்தில்,  வடக்கு 24 பர்கானாவில் உள்ள கனந்தல்பரா என்ற ஊரில் பிறந்தார். 1894 ஏப்ரல் 8 -ஆம் தேதி மண்ணைவிட்டு விண் சென்றார்.

பக்கிம் சந்திர சட்டர்ஜி, எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிபதியாகவும், கலெக்ட்டராக பணியாற்றினார்.

இவர் 13 நாவல்கள் எழுதியுள்ளார். நகைச்சுவை, அறிவியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ என்ற பாடல் ஆகும். அதைப்போல நமது நாட்டின் தேசப் பாடலாக ‘வந்தே மாதரம்’ பாடலும் உள்ளது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்கள் மத்தியில் சுதந்திரக் கணலை எழுப்பிய பக்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ நாவலில் இடம்பெற்றிருந்த இந்தப் பாடல் ‘வந்தே மாதரம்’. ஜாதுனாத் பட்டாச்சார்யா என்பவரால் மெட்டு அமைக்கப்பட்டு புகழ் பெற்றது. இந்தப் பாடல் துர்க்கையை வாழ்த்திப் பாடுகிறது. இஸ்லாமியர் மனம் புண்படுகிறது என்று பாடலை தேசிய கீதமாக ஏற்க முடியாது என்ற எதிர்ப்புக் குரல் இப்போதும் ஆங்காங்கே உள்ளது.

பக்கிம் சந்தரர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவும், வந்தேமாதரம் பாடல் இடம் பெற்ற ஆனந்த மடம் நாவலை எழுதவும் விதை போட்டவர் ராமகிருஷ்ணர் பரமஹம்சர்.

ஆம். ஒருமுறை பக்கிம் சந்திர சாட்டர்ஜி வங்காளத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தட்சிணேஸ்வரம் சென்று ராமகிருஷ்ணரிடம் ஆசி பெற்றார்.

அப்போது ராமகிருஷ்ணர், இவரின் பெயரைக் கேட்டார். இவரும், ‘பக்கிம் சந்திரர்’ என்று பதிலளித்தார்.

வங்காள மொழியில் பக்கிம் என்றால் ‘வளைந்த’ என்று பொருள். அதாவது வளைந்த சந்திரன். ‘பிறைச் சந்திரன்’ என்று அர்த்தம்.

இவரின் பெயரைக் ராமகிருஷ்ண பரஹம்சர் சிரித்தார்.  “ஆங்கிலேய அரசில் பணிபுரிபவன் தானே! ஆங்கிலேயனின் பூட்ஸ் காலால் மிதிபட்டதில் வளைந்து போய் விட்டாயா?” என்று கேட்டார்.

இந்த வார்த்தையால் சட்டர்ஜி வருத்தமுற்றார். வீடு வந்து சேர்ந்த்தும் அவர் செய்த முதல்வேலை ராஜினாமா கடிதம் எழுதியதுதான். தனது துணை ஆட்சியர் பதவியை ராஜினாமா செய்தார்.

அத்ன்பிறகு தீவிரமாக தேச விடுதலை பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.  ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதினார். அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக சாதுக்கள் செய்யும் கலகத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் புதினம், ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடுமாறு மக்களைத் தூண்டுவதாக அமைந்ததாகும்.

சுதந்திரப் போராட்டப் புரட்சிக்குழுக்களுக்கு பக்கிம் சந்திர சட்டர்ஜியின் படைப்புகள் உத்வேகம் ஊட்டின. பக்கிம் சந்திர சட்டர்ஜியின் எழுத்தில் இடம்பெற்றிருந்த  ‘அனுசீலன் சமிதி’ என்ற என்ற இயக்கம் ஆகும்.

பிபின் சந்திர பால் ஆகஸ்ட் 1906-இல் தேசப்பற்றை வளர்க்க ஒரு பத்திரிகை தொடங்க முடிவு எடுத்தபோது ‘வந்தே மாதரம்’ என்றே பெயரிட்டார். லாலா லஜபதி ராயும் இதே பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார்.

பாரதியார் வந்தேமாதரத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பக்கிம் சந்திரரின் பல படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

வந்தேமாதரம் அன்று மட்டும் அல்ல, இன்றும் ஒவ்வொருவரின் நாடி நரம்புக்களை தட்டி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது. நமது நாட்டின் 50-ஆவது பொன்விழா சமயத்தில் வந்தே மாதரத்தை தமிழில்  ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்தபோது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

%d bloggers like this: