சிங்கங்களை உருவாக்கிய சிங்கம்…

-ம.விவேகானந்தன்

Guru-Gobind-Singh

குரு கோவிந்த சிம்மன்

(பிறப்பு: 1666, டிசம்பர் 22 – மறைவு: அக்டோபர் 7)

1675-ஆம் ஆண்டு இறுதியில் ஒரு நாள் சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான குரு தேக்பகதூரைச் சந்திக்க காஷ்மீரிலிருந்து ஹிந்துக்கள் பஞ்சாபின் அனந்தபூருக்கு வந்திருந்தார்கள். இ.ஃப்திகார் கானின் முஸ்லிம் மதவெறிக் கொடுமைகளைத் தாங்க முடியால் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றிருந்தார்கள்.

அனைத்தையும் கேட்டறிந்த அவர்  “இந்தக் கொடுமைகளில் இருந்து மீள வேண்டும் என்றால் மகத்தான ஒருவர்,  தனது தலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்” என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த குரு தேக் பகதூரின் ஒன்பது வயது மகனான கோவிந்த சிம்மன் தந்தையைப் பார்த்து வெகுளியாக “அப்படிப்பட்டத் தியாகத்துக்குத் தங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை” என்றான்.

அதையே மனதில் ஏற்று குரு தேக் பகதூர் முகலாய ராஜ்யத்தின் தலைநகரை நோக்கிப் பயணமாகிக் கைதாகி நவ 11, 1675 அன்று பலிதானமானார்.

ஒன்பதாவது சீக்கிய குருவான குருதேக் பகதூர் இஸ்லாம் மதத்துக்கு மாற மறுத்ததால், துண்டு துண்டாக வெட்டப்பட்டு , இந்துக்களும் சீக்கியர்களும் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் தொங்கவிடப்பட்டார். “நான் எனது தலையைத் தருவேன்; மதத்தையல்ல”  என்று தமது கழுத்தில் எழுதி வைத்திருந்த வாசகம், அப்போது சீக்கியர்களிடையே பிரபலமடைந்தது. ஒரு சீக்கியர், குருவின் அறுபட்ட தலையுடன் அனந்தபூருக்குத் தப்பிச் சென்றார்.

குருதேக் பகதூரின் மகனான கோவிந்த சிம்மன் பிகாரில், பாட்னாவில் 1666 டிசம்பர் 22 அன்று பிறந்தார். இவரது தாய் மாதா குஜ்ரி ஆவார். குருதேக் பகதூர் ஆன்மிகப் பயணமாக அஸ்ஸாம் மாநிலத்திற்குச் செல்லும் வழியில் இவர் பிறந்தார். தனது தாயார் மற்றும் தாய்வழிப் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார்.

சிறுவயதிலேயே கோவிந்த் சிங் தைரியம், சுதந்திரம் போன்ற நற்குணங்களை வெளிப்படுத்தினார். ஒருமுறை தமது நண்பர் குழாமோடு விளையாடிக்கொண்டு இருந்த போது முஸ்லிம் நவாப், யானை மேல் அவ்வழியாகப் போனார். குழந்தைகள் அவரை வணங்குமாறு சொல்லப்பட்டார்கள். அதனால் எரிச்சலடைந்த கோவிந்த் சிங் தமது நண்பர்களிடம் நவாபைப் பார்த்து சிரிக்கச் சொன்னார். கோபமடைந்த நவாபைக் கண்டு துளியும் அச்சப்படாமல், தங்கள் கூட்டத்தை சுட்டிக் காட்டி, இவர்கள் உங்களிடமிருந்து அரசாங்கத்தை மீட்பார்கள் என்று கூறினார்.

1676 மார்ச் பைசாகி (புத்தாண்டு) தினத்தன்று சீக்கியர்களின் பத்தாவது குருவாக முறையாக நியமிக்கப் பட்டார். பஞ்சாபி, பிரஜ், சம்ஸ்க்ருதம், பாரசீகம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். கவிதை எழுதும் இயற்கையான திறமை அவரிடம் இருந்தது. 1684 ஆம் ஆண்டில் பஞ்சாபி மொழியில் “சாண்டி தி –வார்” எனும் நூலினை எழுதினார். 1685 ஆம் ஆண்டில் “பாண்டா சாஹிப்” எனும் மத வழிபாட்டு இடத்தை நிறுவினார். இங்கு மத போதனை, ஆயுதப் பயிற்சி மற்றும் இந்தி, பெர்சியன், பஞ்சாபி மொழிகளைக் கற்பித்தார். ஆனந்த்பூர் சாகிப் வட்டாரத்தில் கேஷ்கர், ஃபாதேகர், லாப்கர் மற்றும் ஆனந்த்கர் என்னும் நான்கு கோட்டைகளைக் கட்டினார். இங்கு ஆயுதத் தயாரிப்பு மற்றும் ஆயுதப் பாதுகாப்பு போன்றவற்றுக்கான இடங்களையும் நிறுவினார்.

1699-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 பைசாகி தினம். பாரத வரலாற்றிலே மகத்தான ஒரு நாள். அதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் ஆனந்தபூர் சாகிப்பில், சட்லஜ் நதிக் கரையில், குரு கோவிந்த சிங் நான்கு மாதங்களாக யாகம் ஒன்றை நடத்தியிருந்தார். அன்றைய தினத்தில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். சாதாரணமாக இருந்திருந்தால் பரிசுகளுடனும், வாழ்த்துக்களுடனும் நிகழ்ச்சிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் இந்த நாளுக்காக 200 ஆண்டுகள் தயாரிப்பும் பல குருமார்களின் பலிதானமும் நடந்தேகியிருந்தன.

குரு கோவிந்த சிம்மன் அன்று அதிகாலை எழுந்து நீராடி, தியானம் செய்துவிட்டு புத்தாடைகளையும் ஆயுதங்களையும் தரித்து, பக்தர் ௯ட்டத்தின் முன் தோன்றினார். அன்று கல்விக் கடவுள் சரஸ்வதியே அவர் வடிவில் நின்று பேசுவது போலிருந்தது. தீடீரென தனது வாளை உறையிலிருந்த உறுவி காற்றில் அசைத்து பின் வருமாறு கர்ஜனை செய்தார். “போரின் அதிதேவதை தாகத்தோடு இருக்கிறாள். தனது மதத்தைக் காக்கத் தலையைக் கொடுக்க யார் முன்வருகிறீர்கள்?” என்றார்.

ஆரம்பத்தில் சில கணங்கள் அமைதி நிலவியது. குரு மூன்றாம் முறை அழைத்தபோது லா௯ரைச் சேர்ந்த தயாராம் கத்ரி எழுந்து பணிவுடன் குருவிடம் சென்றார். அவரை ௯டாரத்துக்குள் அழைத்துச் சென்ற குரு, திரும்பி வரும்போது ரத்தம் சொட்டும் வாளுடன் வந்தார். மேலும் இன்னொரு தலை வேண்டும் என்று அறை௯வல் விடுத்தார். இம்முறை ஹஸ்தினாபுரத்திலிருந்து ஜாட் பிரிவைச் சேர்ந்த தரம்தாஸ் முன் வந்தார். அவரும் ௯டாரத்துக்குள் .அழைத்துச் செல்லப்பட்டார். மீண்டும் ரத்தம் தோய்ந்த வாளுடன் வந்த குரு மேலும் மூன்று முறை அறை௯வல் விடுத்தார். ஒருவர் பின் ஒருவராக, துவாரகையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முகம்சந்த், ஜகந்நாத்புரியைச் சேர்ந்த தண்ணீர் தூக்கும் தொழிலாளி ஹிம்மத் மற்றும் கர்நாடகாவில் உள்ள பிடாரைச் சேர்ந்த நாவிதர் சாஹிப் சந்த் ஆகியோர் பலிதானமாக முன் வந்தனர். பக்தர்கள் அனைவரும் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தபோது, குரு அந்த ஐவரையும் காவி உடையும் தலைப்பாகையும் இடுப்பில் வாளும் தரிக்கச் செய்து உயிருடன் அழைத்து வந்தார்.

அந்த ஐவரையும்  ‘பஞ்ச பியாரி’ (அன்புக்குரிய ஐவர்) என்று அழைத்தார். ஒரு பாத்திரத்தில் சட்லஜ் நதியின் நீரை நிரப்பி வாளால் கீறி அதில் சர்க்கரையைக் கலந்து அமிர்தமாக்கி அந்த ஐவருக்கும் பருகக் கொடுத்தார். அவர்களை ‘கால்ஸா’ (தூய்மையானவர்கள்) என அறிவித்தார். அதன் பின் குரு அந்த பஞ்ச பியாரிகளின் முன் பணிவுடன் அமர்ந்து, அவர்களுடைய கரங்களால் அமிர்தத்தைப் பெற்று அருந்தினார். தன்னை சிஷ்யர்களுக்கும் சிஷ்யராக ஆக்கிக் கொண்டார்.

அதுவரை குரு கோவிந்த ராய் என்று இருந்த தனது பெயரை குரு கோவிந்த சிங் என மாற்றிக் கொண்டார். சீக்கியர் அனைவரும் சிங்கத்தைப் போன்ற பலமும், அரசனை போன்ற சக்தியும், சுயமரியாதையும் உடையவர்கள் என்று குருகோவிந்த் சிங் முழங்கினார்.

ஆண்கள் தங்களுடைய பெயரின் பின் சிங் (சிங்கம்) என்றும் பெண்கள்  கெளர் (பெண்சிங்கம்) என்றும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கால்ஸாவில் சேரும் ஆண்களை க-என்ற எழுத்தில் துவங்கும் ஐந்து விஷயங்களை அணியச் செய்தார்.

  1. கேஸ – நீண்ட தலை முடி, தாடி
  2. கங்க – சீப்பு
  3. கிர்பான் – குத்துவாள்
  4. கச்- அரைக்கால் சட்டை
  5. கர – எஃகுக் காப்பு

-இந்த ஐந்தும் முறையே தியாகம், தூய்மை, ஆன்ம சுத்தி, புலனடக்கம், நேர்மை ஆகியவற்றின் சின்னங்கள் என்று கூறினார். அவர்களுடைய பூர்வீக ஜாதிப் பிரிவுகள் எதுவாக இருந்தாலும் அதை மறந்துவிட்டு தற்போது அவர்கள் தூய்மையானவர்களாக (கால்ஸா) ஆகிவிட்டார்கள் என்றார்.

“கால்ஸா பந்த் உலகில் எங்கும் எதிரொலிக்கட்டும், அதனால் ஹிந்து தர்மம் மூலை முடுக்கெல்லாம் விழித்தெழட்டும்” என்று முழங்கினார். தனது  ‘விசித்ர நாடக்’ என்ற நூலில் தர்மத்தைக் காப்பதற்கும், தீமையாளர்களை அழிப்பதற்குமே தான் இந்த உலகுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலகில் வேத தர்மத்தின் மேன்மையினைக் காப்பேன் என்றும் பசு வதையை ஒழிப்பேன் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஹிந்துக்கள் மத்தியில் நம்பிக்கையும் தைரியமும் வளர்ந்தன.

ஆனாலும் ஹிந்துக்களே ஆன சிவாலிக் மலைப்பகுதியில் வாழ்ந்த ராஜபுத்திர்கள் பொறாமை கொண்டனர். அனந்தபூரை உள்ளடக்கிய பிலாஸ்பூர் ராஜ்யத்தின் ராஜா தலைமையில் குரு கோவிந்த சிம்மனை வெளியேற்ற முயற்சித்தனர். அவர்களது தாக்குதல்கள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இறுதியில் அவர்கள் கொடுமையாளன் ஒளரங்கசீப்பை உதவிக்கு அழைத்தார்கள்.

1705-ஆம் ஆண்டு டில்லியின் கட்டளைக்கிணங்க, லா௯ர் மற்றும் ஸர்ஹிந்த் பகுதியின் முஸ்லிம் படைகள் அனந்தபூர் வந்து குருகோவிந்த சிம்மன் இருந்த கோட்டையை முற்றுகையிட்டன. சீக்கியர்களின் தீரமான போராட்டம் சில மாதங்கள் நீடித்தது. சீக்கியர்களின் உறுதி எதிரிகளுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கோட்டைக்குள் கடுமையான உணவுப் பற்றாக் குறை ஏற்பட்டாலும் போராட்டம் தொடர்ந்தது.

இந்த நிலையில் ஹிந்துக்களின் வரலாற்றில் தொடர்ந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கும் சம்பவம் நடந்தது. சீக்கியர்கள் அனந்தபூரை விட்டு வெளியேறுவதாக இருந்தால் பாதுகாப்பாக வெளியேற விட்டுவிடுவோம் என முஸ்லிம்கள் திருக்குரானைக் கொண்டு வந்து சத்தியம் செய்தார்கள். அதை நம்பி 1705, டிச. 5-6 இரவு சீக்கியர்கள் கோட்டையை விட்டு வெளியேறினார்கள்.  குருவும் சீக்கியர்களும் வெளியே வந்தவுடன் நம்பிக்கைக்குத் துரோகம் செய்து எதிரிகள் ஆவேசமாகத் தாக்கினர். குருவின் வசம் இருந்த விலை மதிப்பற்ற பல நூல்களும் அழிந்து போயின. ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். குரு தன்னுடைய நான்கு புதல்வர்களில் மூத்த இருவருடனும் மேலும் 40 வீரர்களுடன் தப்பித்து 40 கி.மீ. தூரம் தென்மேற்கில் இருந்த சம்கெளர் என்னும் ஊரைச் சென்றடைந்தார். ஆனால் பின்னாலேயே துரத்தி வந்த முஸ்லிம் படையுடன் போரிட்டு ஐந்து பேரைத் தவிர, குருவுடைய 2 குமாரர்களான அஜித் சிங் (18 வயது) மற்றும் ஜூஜார் சிங் (14 வயது) உள்பட அனைவரும் டிச. 7 அன்று வீர மரணத்தைத் தழுவினர்.

அந்த ஐவரும் மீண்டும் கால்ஸாவை வலுப் படுத்துவதற்காக, குருவைப் பாதுகாப்பாகத் தப்பிச் செல்ல வேண்டினர். மூன்று சீக்கியர்களுடன் கனிகான் மற்றும் நபிகான் என்ற இரு முஸ்லிம் பக்தர்களின் உதவியுடன் மால்வா பகுதிக்குச் சென்று அதன்பின் தினா என்ற ஊரை அடைந்தார். அங்கு சில நூறு பிரார் இனத்தைச் சேர்ந்த வீர்ர்களைத் தயார் செய்தார்.

குரு கோவிந்த சிம்மனுடைய தாயர் மாதா குஜ்ரியுடன் இளைய புதல்வர்களான ஜோராவர்சிங்கும் (9 வயது) மற்றும் ஃபத்தேசிங்கும் (6 வயது) கங்கு என்ற வேலையாளால் காண்பித்துக் கொடுக்கப் பட்டு, ஸர்ஹிந்த் பகுதியின் முஸ்லிம் ஆளுநரான வாசிர் கானால் கைது செய்யப் பட்டார்கள். பச்சிளம் பாலகர்களானாலும் அவர்கள் சிங்கத்தின் குட்டிகள். முஸ்லிம் மதத்துக்கு மாற மறுத்துவிட்டதால், உயிருடன் சுவரெழுப்பிக் கொல்லப் பட்டார்கள் (டிச. 13). அதைத் தாங்க முடியாத குருவின் தாயார் அன்றே உயிரை விட்டு விட்டார்.

தினா நகரில் இருந்து மேலும் மேற்கு நோக்கிச் செல்லும் போது டிச. 29 அன்று கித்ரானா ஏரிக்கரையில் முஸ்லிம் படைகள் சூழ்ந்து கொண்டன. கடுமையான யுத்தம் நடந்தது. எண்ணிக்கையில் அதிகம் இருந்தும் எதிரிகளால் குருவைப் பிடிக்க முடியவில்லை. அனந்தபூரின் நீண்ட முற்றுகையின்போது விலகிச் சென்ற 40 சீக்கியர்கள், மாயி பாகோ என்ற பெண்ணின் தலைமையில், தாங்கள் இழைத்த பாவத்துக்குப் பரிகாரமாகச் சண்டையிட்டு அனைவரும் பலிதானமாயினர். அவர்களை குரு ஆசீர்வதித்தார். புனிதமான அந்த இடம் ஒரு வழிபாட்டுத் தலம் மற்றும் குளத்துடன்  ‘முக்த்ஸர்’ என அழைக்கப் படுகிறது.

அதன் பின் லக்கி என்ற வனப் பிரதேசத்தில் தங்கி இருந்து விட்டு, குரு கோவிந்த சிம்மன், தற்போது தம்தமா ஸாஹிப் என அழைக்கப் படும் தால்வாண்டி ஸாபோ என்ற .இடத்தை 1706, ஜன 20 அன்று சென்றடைந்தார். அங்கு 9 மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது ஏராளமான சீக்கியர்கள் அவரை வந்தடைந்தனர். புனித நூலான ஆதி கிரந்தத்தை பாயி மணி சிங்கின் உதவியுடன் திருத்திப் பிரதியெடுத்தார். ஏராளமான அறிஞர்களுடன் பல இலக்கியப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு, காசியை ஒத்த ஒரு கல்வி மையம் போன்று அந்த இடம் தோற்றமளித்தது. அதனால் குருவின் காசி எனப் போற்றப் பட்டது.

1706,  அக் 30 அன்று குரு தெற்கு நோக்கிப் பயணமானார். அவர் ராஜஸ்தானின் பாகோர் அருகில் இருந்தபோது (1707. பிப் 20) ஒளரங்கசீப்பின் மரணச் செய்தி வந்தடைந்தது. அதன் பின் டில்லியில் ஒளரங்கசீப்பின் மகனான மெளஜம், பகதூர் ஷா என்ற பெயருடன் ஆட்சியில் ஏறினான். பதவிச் சண்டை நடந்த அந்த சமயத்தில் அவனுக்கு ஆதரவாக சீக்கியப் படை ஒன்றை குரு அனுப்பினார். பகதூர் ஷாவினுடைய அழைப்புக்கிணங்கி ஆக்ராவில் அவனைச் சந்தித்துவிட்டு (ஜீலை23) பஞ்சாபை நோக்கிப் பயணானார். போகும் வழியிலெல்லாம் குரு நானக்கின் போதனைகளப் பரப்பிக் கொண்டே சென்றார்.

ஆக. 14 அன்று தப்தி நதியைக் கடந்தார். நாந்தேட் என்ற இடத்தில் சென்று தங்கினார். அங்கு மாதோ தாஸ் என்ற பைராகியைச் சந்தித்தார். அவர் சீக்கியராகி குர்பக்ஷ் சிங் என்ற பெயருடன் கல்ஸாவில் இணைந்தார். பந்தா சிங் அல்லது பந்தா பைராகி என்று பொதுவாக அழைக்கப் பட்ட அவருக்கு ‘பந்தா பகதூர்’ என்ற பட்டத்தை குரு வழங்கினார். அவரை ஸர்ஹிந்த்தின் நவாப் வாசிர்கானைத் தண்டிக்கும் ராணுவத் தளபதியாக நியமித்தார். இந்த வாசிர்கான்தான் குரு கோவிந்த சிம்மனின் இரண்டு மூத்த குமாரர்களின் மரணத்துக்குக் காரணமானவன், இரண்டு இளைய குமாரர்களையும், குருவுடைய தாயையும் மற்றும் ஆயிரக் கணக்கான சீக்கியர்களையும் கொன்றவன். பந்தா சிங்குக்குக் கல்ஸாவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப் பட்ட ஐந்துபேரை ஆலோசகர்களாகவும், 25 வீரர்களை மெய்க் காப்பாளர்களாகவும் நியமித்தார். தனது வாளையும், ஒரு வில் மற்றும் ஐந்து அம்புகளையும் கொடுத்தார். முகலாய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேசியப் போரில் பந்தா பகதூருடன் இணைந்து போரிடுமாறு அறை௯வல் விடுக்கும் ஒரு பத்திரத்தைத் தன் கைப்பட எழுதி அவரிடம் கொடுத்தார். 300 குதிரை வீரர்கள் அணிவகுத்து 8 கி.மீ. தூரம் நடந்து வந்து ராணுவ மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர்.

அதே நேரத்தில் வாசிர்கான், குருவை நயவஞ்சகமாகக் கொல்வதற்காக ஜாம்ஷெட்கான், வாசில் என்ற இரு பட்டாணியர்களை நாந்தேடுக்கு அனுப்பி வைத்தான். குரு ஓய்வில் இருந்த சமயம் அவருடைய அறையில் நுழைந்த ஒருவன் அவரை இதயத்துக்கு சற்றுக் கீழே கத்தியால் குத்திவிட்டான். அவன் இன்னொரு முறை தாக்குவதற்குள் சுதாரித்துக் கொண்ட குரு கோவிந்த சிங் அவனை வாளால் வெட்டி வீழ்த்தினார். சத்தம் கேட்டு வந்த சீக்கியர்கள் மற்றவனைக் கொன்றார்கள். வைத்தியர்களின் சிகிச்சையால் விரைந்து குணமானாலும் வேறொரு சமயம் வில்லினை இழுக்கும் போது, ஏற்கனவே காயம் பட்ட இடம் மீண்டும் புண்ணாகியது. தனது முடிவு நெருங்குவதை அவர் உணர்ந்தார்.

1708, அக் 7-அம் நாள் புதன் கிழமை குருவினுடைய கட்டளைக்கிணங்க தயாசிங், புனித நூலான ஸ்ரீ கிரந்த ஸாகிப்பைக் கொண்டு வந்தார். குரு ஐந்து காசுகளையும், ஒரு தேங்காயையும் அத்துடன் வைத்து வணங்கினார். பின்னர் சபையினரைப் பார்த்து, இனி தன்னுடைய இடத்தில் அந்த புனித நூலே குருவாக இருந்து வழிகாட்டும் என்றார். இவ்வாறு குரு பரம்பரையின் வாரிசாக நிரந்தரமாக் குரு கிரந்த ஸாகிப்பை முறையாக அறிவித்தார். இனி குருவின் ஆன்மா கிரந்தத்திலும், கல்ஸாவிலும் நிலை பெற்றிருக்கும் என அறிவித்தார். அதே தினத்தில் தனது 41-வது வயதில் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டார்.

பஞ்சாபை நோக்கிச் சென்ற பந்தா சிங்குடன் பல்லாயிரம் சீக்கியர்கள் சேர்ந்து கொண்டார்கள். புயலெனப் பாய்ந்த பந்தா சிங்கினால் மிகக் குறுகிய காலத்தில் நவாப் வாசிர் கான் உள்பட பல கொடுங்கோல் ஆட்சியாளர்கள் அழித்தொழிக்கப்பட்டார்கள். வாசிர் கானுக்கு எதிராக சீக்கிய ராணுவத்தின் முப்பதாயிரம் வீர்ர்கள் போரிட்டார்கள். பஞ்சாபினுடைய பெரும் பகுதியைக் கைப்பற்றிய பந்தா சிங் சீக்கியர்களுடைய ஆட்சிக்கு வித்திட்டார். குரு நானக் தேவ் பெயரிலும், குரு கோவிந்த சிங் பெயரிலும் நாணயங்களை வெளியிட்டார்.

இதற்கிடையில் 1712-இல் டில்லியில் ஃபருக்ஸியார் ஆட்சிக்கு வந்தான். பெரும் படையை அனுப்பி பந்தா சிங்கைக் கைது செய்து 1716, ஜூன் 9 அன்று மனித குலம் வெட்கித் தலை குனியும் அளவில் சித்திரவதை செய்து கொன்றான். கண்கள் தோண்டப்பட்டும் கை,கால்கள் வெட்டப்பட்டும், தகிக்கும் ஊசிகளால் தசைகள் சுடப்பட்டும் பந்தா சிங்கின் சாந்தமான முகத்தில் துளியும் சலனமில்லை.

பந்தா சிங்கின் மறைவினால் சீக்கியர்கள் மறைந்துவிடவில்லை. பல சீக்கிய வீரர்களாலும், பின்னர் பஞ்சாப் சிங்கம் ராஜா ரஞ்சித் சிங்கினாலும்  பிரிட்டிஷார் வரும் வரை பஞ்சாப் காக்கப்பட்டது. குரு கோவிந்த சிம்மனால் சிங்கங்களாக்கப்பட்ட சீக்கியர்கள் ஹிந்து சமுதாயத்தின் வாளேந்திய கரமாக விளங்கினார்.

.

குறிப்பு:

திரு. ம.விவேகானந்தன், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வட தமிழக மாணவர் பிரிவு செயலாளர்.

Advertisements

About desamaedeivam

தேசிய சிந்தனைக் கழகத்தின் வலைப்பூ.

Posted on 15/12/2016, in சீக்கிய குருமார், போர்ப்படைவீரர். Bookmark the permalink. 1 Comment.

  1. சூப்பர் ஜி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: