ஸ்வதந்திர கர்ஜனை – 2

-தஞ்சை வெ.கோபாலன்

 

அறிமுகம்:

தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலக் குழுவில் இடம்பெற்றிருப்பவரும்,  நமது இணையதள ஆசிரியர் குழு உறுப்பினருமான திரு. தஞ்சை.வெ.கோபாலன், திருவையாறில்  ‘பாரதி இலக்கியப் பயிலரங்கம்’ என்ற அமைப்பைத் துவங்கி,  மகாகவி பாரதி குறித்து இளம் தலைமுறைக்கு அஞ்சல் வழி பாடம் நடத்தி வருபவர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர்,  நமது தளத்தில் எழுதும் தொடர் கட்டுரை இது. இத்தொடர் நமது நாட்டை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தங்கள் இன்னுயிரை ஆஹூதியாக்கிய மாவீரர்களின் சரித்திரத்தை சுருக்கமாக விவரிக்கிறது. இத்தொடர் ஒருநாள் விட்டு ஒருநாள் நமது தளத்தில் வெளியாகும்.

காண்க: பகுதி – 1

பகுதி – 2

தூரத்து இடிமுழக்கம்  (மங்கள் பாண்டே)

1857 முதல் இந்திய சுதந்திரப் போர் உருவான காரணங்களைப் பார்த்தோம். அது உருவானபின் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகள் சிலவற்றையும் அறிந்து கொண்டால் தான் இந்தப் புரட்சியின் நோக்கம், நடந்த விதம், எதிரிகளின் சூழ்ச்சி, முடிவில் சுதந்திரத் தீயை ஆங்கிலேயர்கள் அடக்கிய விதம் இவற்றை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

முதல் பகுதியில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் நாடு பிடிக்கும் ஆசை, அதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டுவந்த அடாவடியான நாடு பிடிக்கும் சட்டம், அதனால் பாதிக்கப்பட்ட சுதேச மன்னர்கள்- இவற்றை ஓரளவுக்குப் பார்த்தோம்.

கிழக்கிந்திய கம்பெனியாரின் படையில் ஆங்கில சிப்பாய்கள் சகல வசதிகளோடும் நடத்தப்பட்டு வரும் அதே நேரத்தில், இந்திய சிப்பாய்கள் அடிமைகளைப் போல நடத்தப்பட்ட விதமும், இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்ட தோட்டாக்களில் தடவப்பட்ட மாட்டின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் இந்து, இஸ்லாமிய சிப்பாய்கள் மத்தியில் குமுறலை உண்டுபண்ணிய விதத்தையும் பார்த்தோம்.

இந்தச் சூழ்நிலையில் 1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி ஒரு சிறு தீப்பொறி எப்படி மாபெரும் புரட்சியாக வெடித்தது என்பதை இப்போது பார்க்கலாம்.

பாரக்பூர், வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம். அங்கு பணியாற்றிய 19-ஆவது இந்திய படைப்பிரிவில் மங்கள் பாண்டே என்றொரு இந்திய வீரர் பணியில் இருந்தார். அங்கிருந்த 34-ஆவது படைப்பிரிவிலுள்ள வீரர்களும், 19-ஆவது பிரிவில் இருந்த வீரர்களும் முன்சொன்ன சூழ்நிலைகளால் ஆத்திரமடைந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பொங்கி எழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படிப்பட்ட வீரர்களை ரகசியமாகச் சந்தித்து நானா சாஹேப், மெளல்வி அகமத் ஷா, அலி நக்ஹிகான் போன்றவர்கள் கம்பெனி படைவீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தூண்டி வந்தனர். இவர்கள் எல்லாம் யார் என்பதைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம்.

இந்தப் புரட்சிக்காரர்களின் பேச்சுக்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த நாட்டின் பாரம்பரிய பெருமையைக் காக்கவும், நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக் காலில் போட்டு மிதித்திடும் இந்த மிலேச்சர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவும் மங்கள் பாண்டே சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெடிமருந்துகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய கட்டடத்தில் ஒரு சிறு தீச்சுடர் பட்டால் என்ன ஆகும்? அப்படிப்பட்ட தீச்சுடராக தான் இருக்க வேண்டுமென மங்கள் பாண்டேக்கு ஆர்வம். அதற்கு ஏற்றாற்போல ஆங்கில கம்பெனி படை அதிகாரிகள் இந்திய சிப்பாய்களிடம் பசுவின் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு ஆகியவை தடவிய தோட்டாக்களைக் கொடுத்து உபயோகிக்கப் பணித்தனர்.

துப்பாக்கியின் கொக்கியை வாயால் இழுத்து தோட்டாக்களை உள்ளே செலுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது தோட்டாக்களில் தடவிய மாட்டு, பன்றிக் கொழுப்புகள் இவர்கள் வாயில் படும். அதனை அவர்கள் விரும்பவில்லை. ஹிந்து, இஸ்லாமிய வீரர்கள் சமயம் பார்த்திருந்தனர்.

இங்கு இந்தியாவின் வடக்குப் பிரதேசங்களிலும் குறிப்பாக பாரக்பூரிலும் சிப்பாய்கள் மத்தியில் கொதிநிலை அதிகரித்து வருவதை ஆங்கிலேயர்கள் உணர்ந்து விட்டனர். அப்படி ஏதேனும் இவர்கள் அசம்பாவித சம்பவத்துக்குத் தயாராகிவிட்டால், அவர்களை அடக்குவதற்கென்று கல்கத்தாவிலிருந்தும், பர்மாவிலிருந்தும் ஏராளமான படைகளைக் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். தங்களைப் பாதுகாக்க வெளியிலிருந்து படைகள் வந்துவிட்ட பின் ஆங்கிலேயர்களுக்குத் துணிச்சல் வந்துவிட்டது. துணிந்து 19-ஆம் பிரிவு சிப்பாய்களிடமிருந்த துப்பாக்கிகளையும் மற்ற ஆயுதங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை நிராயுதபாணிகளாக ஆக்கிவைத்தனர்.

மங்கள் பாண்டே (பலிதான நாள்: 1857 ஏப்ரல் 8)

1857-ஆம் வருஷம் மார்ச் மாதம் 29-ஆம் தேதி. தன்னுடைய படைப்பிரிவில் நடந்து கொண்டிருந்தவற்றைப் பார்த்து கொதித்துப் போன மங்கள் பாண்டே, தன்னுடைய துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்வதற்கு முன்பாகத் தான் ஏதேனும் செய்துவிட வேண்டுமென்கிற வெறியோடு, தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக்கொண்டு, வேகமாக ராணுவ அணிவகுப்பு மைதானத்துக்குள் நுழைந்தார். அங்கு அணிவகுத்து நின்றிருந்த இந்திய சிப்பாய்களை நோக்கி அவர் “சகோதர வீரர்களே! நம்மையும், நம் மத உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! இந்துக் கடவுளர் மீதும், அல்லாவின் மீதும் ஆணையிட்டு அழைக்கிறேன், சகோதரர்களே நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களைப் போல நடத்தும் இந்த அந்நியர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னப் படுத்துங்கள். இவர்களைத் துரத்திவிட்டு நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்திடுவோம். செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவினார்.

அப்போது அந்த படைவீரர்களின் அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தவன் சார்ஜெண்ட் மேஜர் ஹ்யூசன் என்பான். மங்கள் பாண்டே திடுதிப்பென்று மைதானத்துக்குள் வந்து தூண்டிவிடுவதைக் கண்ட மேஜர் மங்கள் பாண்டேயை கைது செய்யும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் படைத் தளபதி ஹ்யூசனின் ஆணையை ஏற்று பாண்டேயைக் கைது செய்ய இந்திய வீரர்கள் எவரும் முன்வரவில்லை.

சிறிது அமைதி நிலவியது. தன் ஆணை ஏற்கப்படவில்லை என்பதை உணர்ந்த மேஜர் ஹ்யூசன் கோபத்தில் கொதித்துப் போனான். என்ன செய்வதென்று புரியாத நிலையில் மங்கள் பாண்டேயின் துப்பாக்கி வேட்டுச் சத்தம் எழுந்தது. அதிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் ஹ்யூசன் உடலில் பாய்ந்து அவனது உயிரைக் குடித்துவிட்டது.

இவற்றையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு ஆங்கில தளபதி லெஃப்டினென்ட் பாக் என்பான் தன்னுடைய குதிரையைத் தட்டிவிட்டு மிக வேகமாக பாண்டேயை நெருங்கி வந்தான். தன் அருகில் அவன் குதிரை மீது வரும்வரை பொறுத்திருந்த பாண்டே, தன் வாளால் அவனை ஓங்கி வெட்டித் தரையில் சாய்த்தார்.

மற்றொரு அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை தூக்கி தோளில் அடிக்கட்டையைத் தாங்கிக் கொண்டு மங்கள் பாண்டேயைக் குறிபார்த்தான். இதை கவனித்த அணிவகுப்பில் நின்றிருந்த ஒரு இந்திய சிப்பாய் தனது துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டு அடிக்கட்டையால் அவன் தலையில் ஓங்கி அடிக்க, அவனும் மண்டை உடைந்து கீழே விழுந்து உயிரை விட்டான்.

இவ்வளவையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மேலதிகாரியான கர்னல் வீலர் என்பான் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிப்பாய்களை விட்டு மங்கள் பாண்டேயைக் கைது செய்ய உத்தரவிட்டான். பாண்டேயைக் கைது செய்ய அந்த சிப்பாய்கள் மைதானத்தின் மத்திய பகுதிக்கு ஓடிவந்தனர். அப்போது அணிவகுப்பில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். “மங்கள் பாண்டேயைத் தொடாதே! இந்த உத்தம பிராமணன் மீது கைவைக்க அனுமதிக்க மாட்டோம். அவன் ரோமத்தைக் கூட உங்களால் தொடமுடியாது” என்று கலகம் செய்தனர்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள், இந்த மங்கள் பாண்டே ஒரு வங்காள பிராமணன். சரித்திராசிரியர்கள் இவரைப் பற்றி குறிப்பிடுகையில்  ‘Mangal Pandey, a Brahmin Soldier’ என்றே குறிப்பிடுகின்றனர். இவருக்கு மட்டும் ஜாதிய அடைமொழி ஏன் தெரியுமா?  இந்தப் புரட்சி அரசியல் காரணமாக ஆங்கிலேயர்களை எதிர்க்க எழுந்த புரட்சி இல்லையாம்; ஒரு வைதீக சநாதன பிராமண சிப்பாய், அவன் தோட்டாவில் பசுவின் கொழுப்பு தடவியிருந்தமையால், மதம் சார்ந்த உணர்வில் தன் எதிர்ப்பைக் காட்ட உயர் அதிகாரிகளைச் சுட்டான் என்பதை நிலைநிறுத்த விரும்பியதன் விளைவு இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அணிவகுப்பு மைதானம் கலகலத்துப் போயிற்று. ரத்த வெள்ளத்தில் மைதானத்தின் நடுவே சில ஆங்கில அதிகாரிகள். அவர்களைக் கொல்ல காரணமாயிருந்த மங்கள் பாண்டே வெறி பிடித்தவர் போல கையில் துப்பாக்கியையும், வாளையும் வைத்துக் கொண்டு கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தார். அணிவகுத்த சிப்பாய்கள் வேறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக தாக்குதலுக்குத் தயாராக நிற்கின்றனர். இந்த காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போனார்கள் ஆங்கில அதிகாரிகள்.

கர்னல் வீலர் பயந்து தன் பங்களாவை நோக்கி ஓட ஆரம்பித்தான். அப்போது கைகள் ரத்தத்தால் கழுவப்பட்டு நிற்கின்ற மங்கள் பாண்டே கரங்களை உயர்த்தி,  “சகோதரர்களே! செயல்படுங்கள்! நம்மை இழிவு செய்த பரங்கியருக்கு பாடம் கற்பிப்போம்” என்று உரக்கக் கத்தினார்.

மைதானத்தில் நடந்த செய்திகள் ஜெனரல் ஹியர்சே என்பாருக்குச் சென்றடைந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் தன் நம்பிக்கைக்குரிய ஆங்கில படை வீரர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அணிவகுப்பு மைதானத்தை நோக்கி ஓடிவந்தார். அப்படி வந்த ஆங்கில வீரர்களின் எண்ணிக்கையைக் கண்டும், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொண்ட மங்கள் பாண்டே, என்ன ஆனாலும் இந்த மிலேச்சர்கள் கையில் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் உயிர்த்தியாகம் செய்துகோள்வதே மேல் என்று நினைத்துத் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டார். காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த பாண்டேயை ஆங்கில வீரர்கள் தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

மீதமிருந்த ஆங்கில சிப்பாய்கள் மைதானத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டு அவரவர் கூடாரங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

உடல்நிலை குணமடைந்த மங்கள் பாண்டே ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளியாகக் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள். யாருடைய வழிகாட்டுதலில் அவர் இப்படிச் செய்தார் என்றெல்லாம் கேட்டும், அவர் யார் பெயரையும் சொல்லவில்லை. தன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆங்கில அதிகாரிகளிடம் தனக்குத் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது என்றார். தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார்.

தன் தேசத்துக்காகவும், தங்கள் மத உணர்வுகள் புண்படுவதை எதிர்த்தும் மங்கள் பாண்டே தனிப்பட்ட முறையில் இந்த எதிர்ப்பைக் காட்டினார். ஒரு புனிதப் போரில் ஈடுபட்டு சிறைப்பட்ட அந்த மாவீரன் மீது விசாரணை நடந்தது. ஒரு நாயைக் கொல்வதானாலும் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதுதான் ஆங்கிலேயர்களின் தர்மம் என்று அவர்கள் உரத்த குரலில் சொல்லி வந்தார்கள் அல்லவா? அதை நிரூபிப்பதைப் போல மங்கள் பாண்டேயை நீதிமன்றத்தில் தீர விசாரித்து முடித்து அவருக்கு தூக்கு தண்டனை வழங்கினர். பாண்டேயை 1857 ஏப்ரல் 8-ஆம் தேதி தூக்கிலிட முடிவு செய்தனர்.

ஒரு கைதியைத் தூக்கிலிட வேண்டுமானால் முன்கூட்டியே தூக்கிலிட ஒரு நபரை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படி பாண்டேயைத் தூக்கிலிட பாரக்பூரில் எவருமே முன்வரவில்லை. அதனால் கல்கத்தாவுக்குச் சொல்லியனுப்பி அங்கிருந்து கூலிக்கு ஒருவரை அழைத்து வந்தனர்.

1857 ஏப்ரல் 8-ஆம் தேதி விடியற்காலை. சிறையிலிருந்து மங்கள் பாண்டேயை ஏராளமான சிப்பாய்கள் காவலோடு அழைத்து வந்தனர். ஒரு மாவீரனைப் போல மங்கள் பாண்டே தலை நிமிர்ந்து தூக்கு மேடை மீது ஏறினார். கூலிக்கு மாரடிக்க வந்த தூக்கிலிடுவோன், தன் பணியைச் செய்து முடித்தான். தூக்குக் கயிறு பாண்டேயின் கழுத்தை இறுக்கியது. இந்த தேசத்துக்காக முதல் வேட்டு வெடித்த மங்கள் பாண்டேயின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது.

மகாபாரதப் போருக்கு பலியிட ஒரு அரவான் கிடைத்தான். பாரத புண்ணிய பூமியின் சுதந்திரப் போருக்கு ஒரு மங்கள் பாண்டே கிடைத்தார்.

இந்திய மண்ணில் கோடானு கோடி பேர் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் மங்கள் பாண்டே போன்ற மாவீரனின் பெயர் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பதற்கு அவனது தேசபக்தியும், மகத்தான தியாகமுமே காரணம்.

தேசபக்தியின் விளைவாக நடந்தவை இந்த நிகழ்ச்சிகள். ஆங்கில வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளபடி ஒரு சநாதனியின் பழிவாங்கும் செயல் அல்ல இது, அடிமைப்பட்டு இழிவுகளைச் சந்தித்து வந்த ஒரு தன்மானமுள்ள ஹிந்து சிப்பாய் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற வீரகாவியம் என்பதை இந்திய மக்கள் உணர்ந்தாக வேண்டும்.

வாழ்க மங்கள் பாண்டே புகழ்!

இனி தொடர்ந்து இந்த முதல் சுதந்திரப் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரத் திலகங்களின் பங்கினைப் பார்க்கலாம்.

(கர்ஜனை தொடர்கிறது…)

Advertisements

About desamaedeivam

தேசிய சிந்தனைக் கழகத்தின் வலைப்பூ.

Posted on 12/11/2014, in ஸ்வதந்திர கர்ஜனை and tagged , . Bookmark the permalink. 2 Comments.

  1. K.Muthuramakrishnan

    மங்க‌ள் பாண்டேயின் தியாகம் பற்றி வாசித்தோம். இப்படியெல்லாம் உயிரைக் கொடுத்து சுதந்திரம் பெற்று ஊழல் பெருச்சாளிகளுக்கு வாழ்வை அமைத்துக் கொடுத்துவிட்டார்களோ என்று தோன்றுகிற்து.’தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?’

    Like

  1. Pingback: முதல் சுதந்திரப் போரின் அக்கினிக்குஞ்சு… | தேசமே தெய்வம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: